Advertisement

அத்தியாயம்-25
தமிழ் யவ்வனாவின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒருவாரம் ஓடியிருக்க அன்று தமிழ் யவ்வனாவை தன்னோடு வெளியே அழைத்து வந்திருந்தான்.
ஆனால் அன்றைய நாள் போல் இன்று யவ்வனா அப்பயணத்தை இரசிக்கவில்லை.கடுகடுவென்ற முகத்தோடு வாய்க்குள் ஏதோ முனங்கி கொண்டே வந்தாள்.
“ஏன் தான் இவருக்கு புத்தி இப்படி போதோ..நான் கேட்டேனா…ஏன் இந்த தேவை இல்லாத வேலை..இந்த மனுஷன வச்சிக்கிட்டு..”
என்று திட்டிக்கொண்டே வர,
“என்னாத்துக்கு முனங்கிகிட்டே வர..என்ன பிரச்சனை இப்போ…”
என்றான் அவள் தொடர் வசைவை தாங்காது.
“நீங்க செய்யுறது உங்களுக்கே நல்லா இருக்கா..”
“ஏன்…”
“நான் உங்களை காலேஜ் சேர்த்துவிட சொல்லி கேட்டேனா..இல்ல படிக்க ஆசை படுறேன்னு சொன்னேனா… இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணம் வச்சிக்கிட்டு ‘திருமண மலர்கள் தருவாயா..’னு கனவுல சுத்திட்டு இருந்த என்னை இப்படி படிக்க சொன்னா நான் பாவம் இல்லையா..”
என்று ஊசி பட்டாசாய் பொரிந்தவளை காணும்போது ஸ்கூல் போக அடம்பண்ணும் குழந்தையாய் தெரிய வந்த சிரிப்பை மறைத்து,
“படிப்பு முக்கியம் யவ்வா..”என்றான்.
“படிக்கிற வயசுல படிக்கணும்..இப்போ போய் காலேஜ் படிக்க ஒரு மாதிரி இருக்கும் தமிழ்..”
“கிழவி வயசா ஆச்சு உனக்கு..வெறும் 23 தானே..அத்தோட கல்வி கற்க வயசுலாம் தேவையே இல்ல..”
“யோசிக்காமல் பேசாதீங்க தமிழ்..மேரெஜ் அப்புறம் வீட்டை பார்பேனா இல்ல படிப்பை பார்ப்பேனா..இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி பண்ண முடியும்.. அப்புறம் அத்தை என்ன பத்தி என்ன நினைப்பாங்க..”
எதாவது சாக்கு கிடைக்காதா என்று அவள் தேடி தேடி சொன்னாள்.அவளுக்கு உண்மையில் படிப்பில் தற்போது ஆர்வம் அரவே இல்லை.தற்போது தான் படித்து என்ன செய்ய போகிறோம் என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது.அவன் முதலில் சொன்னபோது வீட்டில் மறுப்பார்கள் அதையே தானும் ஒத்து ஊதிக்கலாம் என்று இருந்தாள் ஆனால் அவன் சொன்ன விதத்தில் அனைவரும் தலையாட்டிவிட கடைசியில் அவள் தான் புலம்ப வேண்டியது ஆகிற்று.
“அதை பற்றி உனக்கென்ன கவலை..உன் படிப்பை நீ பாரு..உன்னை நான் பார்த்துக்கிறேன்..சிம்பிள்.. அம்மாலாம் ஒன்னுமே நினைக்க மாட்டாங்க..அவங்களுக்கும் சந்தோஷம் தான்…”
அவன் என்ன சொன்னாலும் ஒரு பதில் வைத்திருப்பதில் கடுப்பான யவ்வனா,
“ஏன் உங்க பொண்டாட்டி படிக்கலை +2 தான்னு சொல்ல உங்களுக்கு கௌரவ குறைச்சலா..”
என்று வெடுக்கென கேட்டுவிட சட்டென்று வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தவன்,
“நீ இப்படி பேசினால் நாங்க அப்படியே விட்ருவோமா..”
என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவள் முழித்தாள்.பைக்கை நிறுத்தி அவள் இறங்கியதும் தானும் இறங்கியவன் அவள் கையை பற்றிக்கொண்டு,
“இங்க பாரு யவ்வா..இந்த கால கட்டத்துல படிப்பு ரொம்ப அவசியம்டி..அலட்சிய படுத்தகூடிய விசயமில்ல…அக்ரில உனக்கு இருக்குற ஆர்வத்தை மாமா சொன்னாங்க..அப்போ தான் எனக்கு தோணுச்சு…உனக்கு விருப்பம் இருக்குற விசயத்தை இன்னும் ஆழமா தெரிஞ்சுக்கலாம்ல..நான் சொல்றது இப்போ உனக்கு பிடிக்கலேனாலும் பின்னாடி புரிஞ்சிப்ப..எனக்கு நம்பிக்கை இருக்கு..”
என்று கனிவாக கூற அதற்கும்மேல் அன்புக்கொண்டவனின் வார்த்தையை மறுக்க தோன்றவில்லை.
“தமிழ் ஒன்னு நினைச்சு செய்யாமல் விட்டுடுவாராக்கும்..”
என்று செல்லமாய் சலித்துக் கொண்டாலும், “கிளம்புங்க சர்… “
என்று அவனோடு வண்டியில் ஏற சிரிப்போடு அவனும் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
அதன்பின் கல்லூரியில் அவள் சேரவிற்கும் கோர்ஸை பற்றி விசாரித்து அட்மிஷன் போட்டு கல்லூரியையும் சுற்றி பார்த்துவிட்டே அங்கிருந்து கிளம்ப அரைமனதாக இருந்த யவ்வனாவிற்கே அவள் கோர்ஸை பற்றி தெரிந்துக் கொண்டதும் ஒரு ஆர்வம் வந்தது.கல்லூரி திருமணம் முடிந்து ஒருமாதம் கழித்து தான் தொடங்க உள்ளதால் அவளுக்கு அதுவும் நிம்மதியாக இருந்தது.
இருபுறமும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற அழகான சாலையில் தென்றாலாய் வீசிய காற்றோடு அவனோடான பயணம் அவளுக்கு மகழ்ச்சியின் எல்லையில் கொண்டு செல்ல யாருமற்ற சாலை என்பதால் தைரியமாக அவனை பின்னால் இருந்து இறுக்க கட்டிக் கொண்ட யவ்வனா,
“தேங்க்ஸ்டா புருஷா..”
என்று அவன் காதில் கத்த அவளது திடீர் அணைப்பில் தடுமாறி சட்டென்று நிலைப்படுத்திக்கொண்ட தமிழ் அவள் செய்கையில் வாய்விட்டு சிரித்தான்.
“என்ன மேடம்..புருஷன் மேல திடீர் பாசம்….”
“ஆசை,பாசமெல்லாம் திடீர்னு வரலை..மனசு நிறைய கொட்டிக்கிடக்கு..நான் எட்டாகனினு நினைச்ச தமிழ் இப்போ எனக்கே எனக்காக…!!!நமக்குள்ள தூரம் ரொம்பன்னு நான் கவலைப்பட்டது போயி இப்போ காற்றுக்கூட நுழைய முடியாத அளவு இவ்வளோ இறுக்கத்துல!!!இந்த நிமிஷம் என்னைவிட யாரும் சந்தோஷமா இருக்க முடியாது…”
அவள் சந்தோஷம் குரலிலே வழிந்தோட அவன் முகத்திலும் புன்னகை விரிந்தது.
மின்னலும் மின்னலும் நேற்றுவரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திட தானோ..!!!
“நீ கிடைக்க நான் தான்டி கொடுத்து வச்சிருக்கணும்…என் கோவக்கார கிளியே.. “
என்று அவனும் கொஞ்ச சிரித்தவள்,
“நம்பமுடில தமிழ்..கனவு மாதிரி இருக்கு..உங்களுக்கு எப்படி தமிழ் என்னை பிடித்தது..அதுவும் நான் தப்பு செஞ்சும் ஏன் என்னை தேடி வந்தீங்க…என் மேல் வெறுப்பே வரலையா..”
என்று தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டாள்.
“இப்படி கேட்டால் நான் என்னடி சொல்வேன்..பிடிக்கிறதுக்கு காரணமெல்லாம் வேண்டுமா என்ன..!!  ஏன் தேடிவந்தேன்னா உன் மேல கோபம் வந்துச்சே தவிர வெறுப்பு வரலையே..நீ தான் வேணுமுன்னு மனசு அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்..”
என்று யோசிக்காமல் பட்டென்று பதில் சொன்னவன்,
“எப்போ உன்மேல லவ் வந்துச்சு தெரியலை..ஆனால் அன்னைக்கு என் மோதிரத்தை சுட்ட பார்..அப்போவே என் மனசையும் திருடிட்ட..”
என்று அவன் சிரித்தான்.
“ஸ்ஸ்ஸ்..உங்களுக்கு தெரியுமா..”
என்று நாக்கை கடிக்க சிரிப்புடன் இடுப்பில்  கோர்த்திருந்த அவள் 
கைக்கட்டை விரலில் இருந்த மோதிரத்தோடு விரலையும் அழுத்திய தமிழ்,
“நீ இதை உருவும்போதே தெரியும்…எனக்கு தெரியாமல் எடுத்துட்டோம்னு உன் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்.. சரி ஏன் அதை கேடுப்பானேன்னு தெரியாத மாதிரியே விட்டுட்டேன்..”
என்று கேலியாய் சொன்னவனிடம்
“போங்க தமிழ்..”என்று சாய்ந்துக்கொண்டவள்
பின் ஏதோ தோன்ற,
“வண்டிய நிறுத்துங்க..நிறுத்துங்க..”
என்று அவன் தோளில் தாளம்போட சட்டென் ப்ரேக் போட்டு நிறுத்திய தமிழ்,
“என்னடி ஆச்சு..”
என்றான் என்னானதோ என்ற குழப்பத்தோடு..
“எனக்கு உங்க பைக்கை ஓட்டணும்னு ஆசையா இருக்கு..நான் ஓட்றேன்..நீங்க பின்னாடி உட்காறீங்களா..”
என்று ஆர்வமே உருவாய் அவள் கேட்க,
“பைக் ஓட்ட தெரியுமா..சொல்லவே இல்ல..”
என்றான் ஆச்சரியமாக..
“யாருக்கு தெரியும் நீங்க சொல்லி கொடுங்க நான் ஓட்றேன்..”
என்று அசால்ட்டாக சொல்ல,
“அடியேய்..”என்று அதிர்ந்தே விட்டான்.
“ஏங்க..”
“நீ கத்துக்க இது தான் நேரமா.. இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்டி..அத்தோடு என் மாமா ரொம்ப யோசித்து கடைசியா என்னை நம்பி என்னோட உன்னை அனுப்பி வைத்திருக்கார்…இப்போ இந்த விஷப்பரீச்சை தேவையா தானா…”
“ஹலோ.. நானெல்லாம் சைக்கிளையே ஜெட் மாதிரி ஓட்டுவேன்..உங்க பைக் எம்மாத்திரம்..அடிச்சி தூக்கிடலாம் நகருங்க…”
என்றதோடு நில்லாமல் அவனை நகர்த்தி பைக்கின் கைப்பிடியை பற்ற அவனின் ஸபோர்டில் நின்ற பைக்கோ அவன் நகர்ந்ததும் விழப்பார்க்க தம்கட்டி பிடித்து நிறுத்தி ஏறி அமர்ந்தாள்.
“இந்த வாய் தான்…”
என்று தலையில் கொட்டினாலும் எப்படி ஸ்டார்ட் செய்வது ஓட்டுவது என்று விளக்கியவன் அவள் பின்னால் தானும் ஏறிக் கொண்டான்.
பின்னால் இருந்து ஹன்டில் பாரை பிடித்தவன் மெல்ல பைக்கை நகர்த்த அவளும் உற்சாகமாக அவன் சொல்லும்படி கேட்டு செய்தாள்.
சற்று நேரத்தில் அவன் மெல்ல கையை விலக்க சிறிது தூரம் தடையின்றி சீராய் ஓட்டியவள்
ஆர்வமிகுதியில் அவள் ஆக்ஸிலேட்டரை வேகமாய் திருகிவிட வண்டி வேகமெடுக்கவும் பயத்தில் முன்பக்க சக்கரத்தின் ப்ரேக்கை பிடித்ததால் தன்னை நிலைப்படுத்த முடியாமல் சட்டென்று பைக் சாயவும்,
“அம்மா…”
என்ற அலறலோடு அவள் கையை எடுத்துவிட கீழே விழுந்து வாரும் முன் ஹன்டில் பாரை பிடித்து நிறுத்திய தமிழ்,
“யவ்வா..ரிலாக்ஸ்..ஒன்னும் ஆகவில்லை..பாரு..”
என்று அவள் காதோடு ஒட்டியிருந்த அவன் உதடுகள் முணுமுணுக்க அத்தனை நேரம் தெரியாத அவனது நெருக்கம் தற்போது பூதாகரமாய் தெரிய புதிரான உணர்வில் சிலிர்த்து போனாள்.
அவனோ அவள் தடுமாற்றத்தை உணராமல் முன்பக்கம் ப்ரேக்கை பிடிக்க வேண்டாம் என்றும் எப்படி ஆக்ஸிலேட்டரை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்க எதுவும் அவள் புத்திக்கு ஏறவில்லை.
புதிதாய் கிளர்ந்த உணர்வுகளின் மயக்கத்தில் இருந்தவள் அப்படியே சிலையாய் அமர்ந்திருக்க அவளிடம் எந்த எதிரொலியும் இல்லை எனவும் தான் முகத்தை பார்த்த தமிழ் இன்ச் இடைவேளையில் இருந்த அவள் கண்களில் தெரிந்த மயக்கம் அவனையும் எங்கோ கூட்டி செல்ல இன்னும் நெருங்கினான்.
எத்தனை நிமிடங்கள் கரைந்ததோ அவர்கள் மோன நிலையை கலைக்கவே அவன் அலைப்பேசி சிணுங்கியது.
சட்டென்று கனவுலகில் இருந்து பூலோகம் திரும்ப அழைப்பது பிரகாஷ் தான்.
“சொல்லுங்க ண்ணா..”
“தமிழ்..ஃபோன் ஏன்டா நாட் ரீச்சபுளில் இருக்கு.. எவ்வளவு நேரமா கால் பண்றேன்..”
“வெளியே வந்திருக்கேன்..இங்க சிக்னல் இல்லை போல…ஏன்ண்ணா எதாச்சும் பிரச்சனையா..”
“பிரச்சனை இல்லடா..சந்தோஷமான விஷயம் தான்..மனோக்கு பையன் பிறந்திருக்கான்…”
என்று அவன் சொல்ல தமிழின் முகம் மலர்ந்தது.
“அப்படியா…!!!எப்போண்ணா…”
என்று அவள் உற்சாகமாய் பேச அவன் ஆர்வத்தை பார்த்து ‘என்ன..’ என்று யவ்வனாவும் சுரண்டினாள்.
“இன்னைக்கு காலையில் தான் அனு விற்கும் வலி வந்துடுச்சு..ரொம்ப சிரமம் கொடுக்காமல் கொஞ்ச நேரத்திலையே குட்டி பையன் பொறந்துட்டான்..”
என்றவன் எந்த மருத்துவமனை என்று கூறி அழைப்பை வைக்க இந்த சந்தோஷமான செய்தியை யவ்வனாவோடு பகீர்ந்துக் கொள்ள மகிழ்ச்சி இரட்டிப்பானது.
“ஹை..தமிழ்..ப்ளீஸ்..ப்ளீஸ்..நானும் வரேனே..”
“நாம வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சே யவ்வா..உங்க வீட்டில் தேடுவாங்க..”
“பரவாயில்ல நான் சொல்லிக்கிறேன்..எனக்கு பாப்பாவை பார்க்க ஆசையாக இருக்கு..”
என்று கண்கள் மின்ன அவள் கெஞ்ச சரியென்று அவளையும் அழைத்துச்சென்றான்.
மருத்துவமனையில் நடராஜனின் மொத்த குடும்பமும் இருக்க மனோவை அணைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்த தமிழ் தன் ஐயா மடியில் இருந்த குழந்தையை ஆசையாய் கொஞ்ச அவன் கையில் கொடுக்கவும் பத்திரமாய் வாங்கிக் கொண்டான்.
அவன் பின்னோட நின்ற யவ்வனா அச்சு அசலாய் அனுவின் ஜாடையில் மென்மையான ரோஜாப்பூவாய் இருந்த பிள்ளையை ஆசையாய் பார்த்தவள் ரோஜா இதழை ஒத்த கன்னத்தை மட்டும் ஒற்றை விரலால் வருடினாள் தூக்க பயந்துக்கொண்டு..
பின் வித்யாவிடம் அனுவை பார்க்கலாமா என்று தயக்கமாய் கேட்க ‘வா யவ்வா..’ என்று உள்ளே அழைத்து சென்றாள்.
சோர்வாய் கட்டிலில் துவண்டு படுத்திருந்தவள் யவ்வனாவை கண்டதும் புன்னகைத்தாள்.
“வாழ்த்துக்கள் அக்கா..”
என்று மனதார வாழ்த்தியவள்,
“ஆப்ரேஷன் ஆகிடுமோன்னு பயந்தீங்கல்லே..நான் சொன்னேன்ல..உங்களுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் தான் ஆகும்னு…குழந்தை அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் க்கா..அத்தனை அழகு..”
என்று உற்சாகமாய் இவள் பேசினாள்.தற்போது ‘அக்கா’ என்ற அழைப்பு இயல்பாய்வர அனு முகத்திலும் புன்னகை மேலும் விரிந்தது.
சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு கிளம்பிச் சென்றனர்.

Advertisement