3 மாதங்கள் வேலையில் கழிய, தன் வேலைகளை முடித்து விட்டு சென்னை வந்து இறங்கினாள்.
ஜெர்மனியில் இருக்கும் சமயம் முகேஷ் ,வினித் இருவரிடம் எப்போதும் போல பேசிக் கொண்டு இருந்தாள்.
தினமும் இருவரிடமும் புலம்ப தவறவில்லை., முதலில் அவளுக்கு ஜெட் லாக் எப்படி இருந்தது என்பதை கிட்டத்தட்ட ஒரு வாரமாக புலம்பியவள்., பின்பு அடுத்த ஒரு வாரமும், உணவு எந்த அளவு மோசமாக அங்கு உள்ளது, எப்படி எல்லாம் இருந்தது என்பதை புலம்பியபடி தனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை கூட அவர்களிடம் அவள் பகிர்ந்து கொள்ள தவறவில்லை.
ஆனாலும் வைக்கும் போது இருவரும் “அண்ணன் பார்த்தியா” என்று கேட்க தவறவில்லை.
“வந்தேன் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்”, என்று இவள் இருவரையும் திட்டுவதும் தினமும் தவறவில்லை.
மூன்று மாதம் கழித்து வந்து இறங்கியவளை வீட்டிற்கு வந்து தான் இருவரும் சந்தித்தனர்.
ஏனென்றால் இருவரும் ஏர்போர்ட்டுக்கு வர முடியாத சூழ்நிலை, எனவே திவ்யாவுக்கு அழைத்து சொல்லி இருக்க., அவள்தான் வந்து அழைத்துக் கொண்டாள்.
வினித் முகேஷ் இருவரும் வந்திருக்கும் போது., அவளுக்கு வந்திருந்த கண்மணி கார்டை எடுத்துக் காட்டினாள்.
சரியாக அவள் வந்த அன்று அவள் கையில் கிடைக்கும் படி அனுப்பி இருந்தார்கள்.
எப்போதும் போல கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்டு., அதில் ‘டியர் கண்மணி, வெல்கம் பேக் இந்தியா., உன்னை பாக்காம மூணு மாசமா அத்தனை கஷ்டமா இருந்துச்சு அப்படின்னு நினைச்சியா., இல்லவே இல்ல நீ ஜெர்மன் போய் இருக்கும் போது நானும் அங்க வந்திருந்தேன்., உன்னை அங்க வச்சு பார்த்தேன்., ஜெர்மன்ல இருக்கும் போது உன் முகத்துல ஏதோ ஒரு பாவம் மிஸ் ஆவது போல தோன்றியது., என் கண்மணி, ஏன் உன் மாமன்களை பார்க்கலைன்னு வருத்தமா இல்லை, என் கண்மணிக்காக நான் அனுப்பும் கார்டை பார்க்கவில்லை என்று வருத்தமா’, என்று கேட்டிருந்தவன்,
“நிச்சயமா என்னோட கார்டு வரலை என்கிற வருத்தம் தான், அது எனக்கே தெரியும், ஏன்னா உன் மாமன்க தான் தினம் உன்கிட்ட பேசுறாங்களே’, என்று சொல்லி விட்டு ‘எப்போதும் என் பார்வையில் இருக்கும் என் கண்மணிக்கு’ என்று முடித்திருந்தவன்., ‘வித் லவ் யுவர் மாம்ஸ்’ என்று மட்டும் போட்டிருந்தான்.
இருவரும் அவளுக்கு அட்வைஸ் செய்தனர்.
“பத்திரமா இருந்துக்கோ” என்று சொல்லிவிட்டு எது என்றாலும் உடனே போன் பண்ணு என்று சொல்லிவிட்டு சென்றிருந்தனர்.
அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை எப்போதும் போல தான் சாதாரணமாக நாட்கள் நகர்ந்தது.
ஒரு நாள் முழுவதும் ரெஸ்ட் எடுத்தவள் மறுநாளில் இருந்து அவளது வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்.
அப்போது தான், அவர்கள் வந்து சென்ற இரண்டு நாளிலேயே, இருவரும் “நாங்க இன்னைக்கு ஈவினிங் வருகிறோம்” என்றனர்.
“சரி பேசலாமே” என்றவள், “ரிஜிஸ்ட்ரேஷன் விஷயம்னா மெனக்கெட்டு அலைய வேண்டாம் ன்னு சொல்லு., ஒரு வாரத்துக்குள்ள ரெடி பண்ண சொல்லு, நான் வந்து கையெழுத்து போடுறேன்”, என்று சொன்னாள்.
“ஏய் எப்படி அதுக்கு தான் வராங்கன்னு கண்டுபிடிச்ச”, என்று கேட்டான்.
“தெரியும் தெரியும், இது என்ன பெரிய கம்ப சூத்திரமா, தெரியும்டா., போகும் போதே சொன்னது தானே., ஜெர்மன் போயிட்டு வந்து சைன் போடுறேன்னு சொன்னது தானே., இப்பவும் போடுறேன்., எல்லாத்தையும் ரெடி பண்ண சொல்லு., ஜஸ்ட் ஒன் வீக் எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் டைட் ஒர்க் இருக்கு, முடிச்சுட்டு வரேன், மேக்சிமம் நாலு நாளுக்குள் முடிச்சிடுவேன்., முடிச்சுட்டு ஒரு நாள் திவ்யா கூட அவுட்டிங் போயிட்டு., அதுக்கு அப்புறமா வந்து ரெஜிஸ்ட்ரேஷன் சைன் பண்றேண்டா”, என்று சொன்னாள்.
“ஹே நெஜமாவே கல்யாணம் வேண்டாம் என்கிறாயா குட்டி”, என்று வினீத் கேட்டான்.
“ஆமா பாப்பா உனக்காக வெயிட் பண்றோம்”, என்று கிண்டலாக சொன்னார்கள்.
“கொன்னுடுவேன், நீங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் வராதீங்க, ஓடிப்போங்கடா நம்ம ஒரேடியா ரிஜிஸ்ட்ரேஷன் சமயத்துல பார்க்கலாம், அதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் இங்க வராத”, என்று சொல்லி சத்தம் போட்டு வைத்திருந்தாள்.
அவள் சொன்னது போல நாலு நாள் அலுவலகத்தில் வேலைகள் சரியாக இருந்தது.
அவள் ஜெர்மனியில் முடித்த வேலைகளை பற்றிய தகவல்களை ஒப்படைத்துவிட்டு., அலுவலக வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டாள்.
நாலாவது நாள் மாலை திவ்யாவிடம், “ஓகேடா இதுக்காகவே நாலு நாளா காரை எடுக்கல, நாளைக்கு ஒரு நாள் வீட்ல ரெஸ்ட் சரியா., அதுக்கு மறுநாள் நாம ரெண்டு பேரும் அவுட்டிங் போலாம்., நாளைக்கு நைட்டு தான் நான் உனக்கு போன் பண்ணுவேன்”, என்று சொன்னவள்,
அதே நேரம் மாமன்கள் இருவருக்கும் மெசேஜ் செய்தாள்.
அவர்களும் அந்த நேரத்தில் அழைத்தனர்.
“என்ன குட்டி இந்த நேரத்தில் போன் பண்ண சொல்லி மெஸேஜ் செய்து இருக்க”, என்று கேட்டனர்.
அதேசமயம் முகேஷ், “என்ன பாப்பா உடம்பு ஏதும் முடியலையா”, என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாம்ஸ்., நான் கொஞ்சம் பிசி, செம டயர்டு அதனால இன்னைக்கு என்ன பண்ண போறேன்னா, போய் சாப்பிட்டு தூங்க போறேன்.,
அதனால டிஸ்டர்ப் பண்ணாத., நாளைக்கு ஈவினிங்க்கு அப்புறம் நானே உனக்கு கால் பண்ணுவேன் சரியா”, என்று சொன்னாள்.
“ஏண்டா குட்டி அண்ணன் ஏதும் ரெடி பண்ணிட்டியா ஜெர்மன்ல”, என்று கேட்டான்.
“அய்ய லூசு மாம்ஸ் அப்படி எல்லாம் ஒரு அண்ணனும் கிடைக்கல, கிடைச்சா சொல்றேன் சரியா”, என்று சொல்லி விட்டு “ஓகே மாம்ஸ் பய் நீங்களும் உங்க வேலைய பாருங்க., நைட் அட்டனன்ஸ் போடறேன் ன்னு சொல்லி போன் பண்ணி தொலைச்சுராதீங்க., நான் தூங்க போயிடுவேன், இப்ப தான் ஆபீஸ்ல இருந்து கிளம்புறேன்”, என்று சொன்னாள்.
அன்று கேப் புக் செய்துவிட்டு கேப் காக அலுவலக வாசலுக்கு வந்தவளை முகத்தில் ஏதோ வைத்து அழுத்தியது மட்டும் தான் தெரியும்.,
ஆம் தர்ஷனா கடத்தப்பட்டாள்., அவள் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான கண்களுக்கு அவள் தனியே நிற்பது பட அன்றே கடத்தி தன்னிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
தர்ஷனா கண் முழிக்கும் போதே ஏதோ தூக்கத்தில் இருப்பது போல உணர்வு வந்தது.
‘ஆமா இல்ல செம டயட், தூங்கணும் ன்னு தானே நினைச்சோம்’, என்று நினைவுகளில் உழன்றாள்.
‘ஆமா வீட்டுக்கு எப்ப போனோம், எப்ப தூங்கினோம்’ என்று நினைவு வர மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள்.
அப்போது தான் அவளை ஒரு சொகுசான சோபாவில் அமர்த்தி துணியால் கட்டி வைத்திருப்பது தெரிந்தது.
அதன் பிறகு தான் அவள் அலுவலக வாசலில் நின்றது, அவள் மூக்கில் ஏதோ வைத்து அழுத்தியது போல உணர்ந்ததும், அதன் பிறகு என்ன நடந்தது என்பது அவளுக்கு ஞாபகம் இல்லை.,
முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றுப்புறத்தை ஆராய்ந்தவளுக்கு, எதுவும் தெரியவில்லை.,
ஒரே ஒரு இரவு விளக்கின் வெளிச்சம் மட்டுமே இருக்க, அந்த இடமே அமைதியாக இருந்தது.
ஆனால் சத்தம் தான் வெளியே வருவேனா என்றது., ஏற்கனவே பசி மயக்கம், அதோடு அந்த மனுஷன் என்ன மருந்தை வைத்து தொலைத்தான்னு தெரியலையே., இன்னும் தூக்கம் வருதே”, என்று யோசித்தாள்.
“ஹலோ” என்று மறுபடியும் கத்தினாள்.
கதவைத் திறந்து ஒருவன் எட்டிப் பார்த்தான்.,
இவளோ பயந்து போய் பார்த்தாள். அவனும் லைட்டை போட்டு விட்டு “மேடம் எந்திரிச்சிட்டீங்களா., ஓகே மேடம் நான் சார் ட்ட சொல்லிட்டு வந்துடறேன்”, என்றான்.
“கடத்திட்டு வந்துட்டு லூசு பையன் மேடம் ன்றான் பாரு”, என்று சொன்னாள்.
“யாருக்கு பயந்து போய் இருக்கிறான்”, என்று சொல்லி வாசலை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
யோசனையோடு சுற்றி சுற்றி பார்த்தப்படி இருந்தாள். அப்போது தான் தெரிந்தது யாரோ தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது., சுற்றி பார்த்து இருந்தவள் நேராக நிமிர்ந்து பார்க்க எதிரில் இருந்தவன் பார்க்கும் போது உயரமாக தெரிந்தான்.
‘இவன் நம்ம மாம்ஸ விட கொஞ்சம் ஹைட்டு, ஆனால் ரொம்ப ஒன்னும் ஹைட் இல்ல’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவனும் இவளையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்பு நிதானமாக “எழுந்தாச்சா, ஓகே இப்ப நம்ம பேசலாமா”, என்றான்.
அவன் பேசும் தமிழ் கிட்டத்தட்ட வினித் பேசுவதைப் போல இருந்தது.
‘மலையாளியா இருக்கணும்’, என்று யோசித்து அவனை மீண்டும் நிமிர்ந்து பார்க்கும் போது தான் நிச்சயமாக இவன் மலையாளி ஆக தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
ஏனென்றால் அழகுக்காக தாடி வளர்த்திருப்பான் போல., என்று நினைத்துக் கொண்டாள்.
அவனை எடை போடும் விதமாக சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அப்படி ஒரு பார்வை” என்றான்.
இவளோ இல்லை எனும் விதமாக தலையாட்டிவிட்டு.,
“எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க”, என்றாள்.
“கூட்டிட்டு வரல மேடம் தூக்கிட்டு வந்தோம்”, என்று சொன்னான்.
பின்பு வெளியே இருந்தவன் ஒருவனை பேர் சொல்லி அழைத்து., “ஃபுட் ஆர்டர் போட்டு இருக்கேன்., இப்ப வந்துரும், வந்த உடனே எடுத்துட்டு வா., உங்களுக்கு தேவையான ஃபுட் போய் வாங்கிக்கோங்க”, என்று தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை அள்ளிக் கொடுத்தான்.
‘திமிரு புடிச்சவன் கடத்திட்டு வந்து வச்சிருக்கான்., எத்தனை பேர் வெளிய இருக்காங்கன்னு தெரியலையே., தப்பிச்சு போக முடியுமான்னு தெரியலையே’, என்று யோசித்தவளுக்கு இயற்கை அழைப்பை ஏற்கும் பொருட்டு,
அவனிடம் “ஹலோ” என்றாள்.
“என்ன”, என்றான் அதிகாரமாக.,
“கொஞ்சம் கட்டு எல்லாம் அவுத்து விடுகிறீர்களா”, என்று கேட்டான்.
“ஏன் எஸ்கேப் ஆகலாம் ன்னு பாக்குறியா”, என்றான்.
அவளோ அவன் பின்னால் நின்றவன் போகும் வரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தவள்.,
அவன் போனவுடன், “ப்ளீஸ் கொஞ்சம் அவுத்து விடுங்களேன்”, என்றாள்.
“அதான் ஏன்னு கேட்டேன்”, என்றான்.
“ரெஸ்ட் ரூம்” என்றாள்.
பின்பு மெதுவாக வந்தவன்., அவள் கட்டை அவிழ்ப்பதற்காக அருகில் வரவும் தான்., ‘இந்த பாடி ஸ்ப்ரே’, என்று யோசித்தாள்.
“ஆமா இல்ல, மூக்குல அந்த கர்ச்சிப் அழுத்துறதுக்கு முன்னாடி, நம்ம பக்கத்துல இந்த ஸ்மெல் அடித்தது இல்ல, அப்பவே திரும்பி பார்த்து இருக்கணுமோ’, என்று யோசித்தவள்.,
‘இப்ப யோசிச்சு பிரயோஜனமே இல்ல’, என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் அவளை கட்டி வைத்திருந்த துணியை அவிழ்த்து விட்டான்.
இவளோ எழுந்து நிற்க, அவனும் “அந்த பக்கம் இருக்கு”, என்று கையை காட்டினான்.
இவள் யோசனை யோடு அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்து கொண்டே சென்றாள்.
“என்ன” என்றான்.
“இல்ல இங்க எதுவும் கேமரா ஒளிச்சு வச்சிருக்கீங்களா”, என்று கேட்டாள்.