அன்றைய நாள் ஏதோ விஷேசம் என்று குடும்பத்தோடு கோயில் சென்று இருந்தனர்.
பகவதி அம்மனை வேண்டி விட்டு வெளியே வரும் போது பேசிய படியே அனைவரும் செல்ல., இவளோ மெதுவாக நடந்து வந்தாள்.
அருகில் வந்த நிமலன்., “என்ன ஆச்சு கண்மணி, ஏன் ஒரு மாதிரி இருக்க, என்ன செய்து டா”, என்றான்.
“அத்து எனக்கு என்னமோ மாதிரி இருக்கு, தலையெல்லாம் சுத்துற மாதிரியே ஒரு பீல் இருக்கு, கண்ணெல்லாம் கூட சரியா திறக்க முடியலை”, என்று சொன்னாள்.
“கூட்டத்துக்கு நடுவில் போயிட்டு வந்தது பிடிக்கலையா டா”, என்றான்.
“காலைல வந்த அப்ப அப்படி இருந்துச்சா ன்னு தெரியல., ஆனா இப்போ ரொம்ப என்னமோ பண்ணுது”, என்று சொன்னாள்.
“ஏன் உள்ள அந்த தண்ணி குடிச்சது எதுவும் ஒத்துக்கில்லையா”, என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல”, என்று சொன்னவள்., “வீட்டுக்கு போலாம்” என்று சொல்லிவிட்டு அவன் அருகில் வந்தாள்.
பாட்டி தான் இருவரும் இன்னும் அங்கே நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு.,
அங்கிருந்தே “என்ன ஆச்சு” என்று கேட்டார்.
“இதோ வரோம்” என்று சொல்லிவிட்டு அவளை காருக்கு அழைத்து வந்தவன்., கதவை திறந்து அவளை அமர வைத்துவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
அவள் இரண்டு வாய் குடிக்கும் முன்பே வாந்தி வருவது போல தோன்ற போதும் என்று சொல்லிவிட்டு அப்படியே சீட்டில் சாய்ந்து விட்டாள்.
அவன் கார் டோர் அருகிலேயே நிற்பதை பார்த்து விட்டு, பாட்டியும் அவன் அம்மாவும் இவர்கள் காரை நோக்கி வந்தார்கள்.
“என்னடா” என்று கேட்டனர்.
“அவளுக்கு என்னமோ மாதிரி இருக்குன்னு சொல்றா., தண்ணி கூட குடிக்க மாட்டிக்கிறா., வேண்டாம் அப்படின்னு சொல்றா”, என்று சொல்லும் போதே.,
அவர்கள் இருவரும் கார் கதவை நன்றாக திறந்து கொண்டு உள்ளே பார்க்க.,
அவளோ சீட்டில் சாய்ந்து கண்ணை மூடி இருந்தாள்.
பாட்டி தான், “இங்க பாரு தனா, என்ன செய்துன்னு சொல்லு”, என்று கேட்டார்.
“தெரியல பாட்டி, என்னமோ மாதிரி இருக்கு”, என்று சொன்னாள்.
பாட்டி தான், “கொஞ்சம் பொறு, வீட்டுக்கு போயிரலாம்., ஏதாவது சாப்பிடறியா”, என்று கேட்டார்.
அதே நேரம் நிமலன் அம்மா தான், ரொம்ப நேரம் கூட்டத்தில் நின்னது, பசிச்சிருக்கும், சாப்பிடாம இருக்குறது கூட ஒரு மாதிரி இருக்கும் பசிக்குதா”, என்று கேட்டார்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாக கேட்க.,
இவளோ, “இல்ல என்னமோ பண்ணுது, என்ன பண்ணுதுன்னு சொல்ல தெரியல”, என்று சொன்னாள்.
பாட்டியோ நிமலனிடம் திரும்பியவர், “சரிடா வினீத்துக்கு போன போடு”, என்று சொல்லி விட்டு.,
தர்ஷனா வை பார்க்க, அவள் கண் மூடி சாய்ந்திருந்தாள்.,
நிமலனிடம், “உங்க அப்பாவையும், உங்க தாத்தாவையும் வீட்டுக்கு போக சொல்லு., இல்ல னா, நம்ம கூட வர சொல்லு, நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்”, என்று சொன்னார்.
அதையே அவள் தலை கோதி சொன்னார், இவளோ “வேணாம் பாட்டி இன்னைக்கு ஏதோ பூஜை, நல்ல நாள் ன்னு தானே கோவிலுக்கு கிளம்பி வந்தீங்க, வீட்டுக்கு போவோம் அப்புறமா போய்க்கலாம்”, என்று சொன்னாள்.
பாட்டி தான், “அதெல்லாம் ஒன்னும் இல்ல வா, ஒரு நாள் போய்ட்டு வரலாம், ஒன்னும் தப்பு இல்ல, நீ கெளம்பு”, என்று சொல்லி விட்டு, “நீ வினித்துக்கு போன் பண்ணி ஹாஸ்பிடல்ல அப்பாய்ன்மெண்ட் கேட்க சொல்லு”, என்று சொன்னார்.
“ஏன் பாட்டி” என்றான்.
“வா வா கிளம்பு போலாம்”, என்று சொல்லி அங்கு சென்றவுடன்., பெண்களுக்கான மருத்துவரை சந்திக்க பெர்மிஷன் வாங்கி காத்திருந்தனர்.
அப்போது அமைதியாக இருந்தவள், நிமலனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளும் போதே, வினித் வந்திருந்தான்.
பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தவன், “ஏன் பாட்டி நீங்க தான் டாக்டர் பார்த்தே ஆகனும் ன்னு சொன்னீங்களாம்”, என்று கேட்டான்.
“ஒரு வேளை ப்ரெக்னன்ட் ஆ ன்னு டவுட்டா இருக்குடா, ஆனா அவளுக்கு இன்னும் புரியல”, என்று மலையாளத்தில் சொன்னார்.
“நிஜமா சொல்றீங்களா பாட்டி”, என்று சிரித்தவன், நிமலனை பார்த்தான்.
நிமலன் “என்ன” என்றான்.
“இங்க வாங்க” என்றான்.
அவனிடம் சொல்லி கேட்டனர்.
அவனும் கணக்கு பார்க்கத் தொடங்கினான். அவனுக்கு தான் தேதியை தெரியுமே.,
இவளோ தலையில் கை சாய்த்து அப்படியே அமர்ந்திருந்தாள்.
அருகில் இருந்த பாட்டி தான், நிமலனை பார்க்க., ஓரளவுக்கு தெரியும் என்பதால்., “அப்படி இருக்கும் ன்னு நினைக்கிறீங்களா பாட்டி”, என்று கேட்டான்.
இங்கு அனைவரும் மலையாளத்தில் பேசிக்கொண்டிருக்க.,
அங்கு ஒருத்தியோ, பாதி தூக்கத்தில் இருந்தாள்.
“அவளுக்கு புரிஞ்சிருக்கும் தானே”, என்றான்.
திரும்பி பார்க்கும் போது வினித் தான், “தூங்குறாளா”, என்றான்.
“ஒரு மாதிரி இருக்குன்னு சொன்னா, இவ்ளோ நேரம் கைய புடிச்சிட்டு தான் உட்கார்ந்து இருந்தேன்”., என்றான்.
அப்படியே அமர்ந்திருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், கண்கள் மூடி இருக்க., அருகில் வந்த வினித் தான்., “குட்டி குட்டிமா”, என்று கன்னத்தில் தட்ட மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள்.
“மாம்ஸ் எப்ப வந்த” என்றவள் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டாள்.
அருகில் அமர்ந்து கொண்டவன், அவள் கை பிடிக்க, அவளோ அவன் தோளில் சாய்ந்து கொண்டு., “மாம்ஸ் என்ன காலையிலேயே நீ ஹாஸ்பிடலுக்கு வந்திருக்க”, என்று தூக்க கலக்கத்திலே பேசினாள்.
அவனும் “டேட் கடந்து பத்து நாள் ஆயிடுச்சு கண்மணி”, என்றான்.
“ஓ அதுக்கு தான் டாக்டரா, ஏன் வராம இருந்தா இப்படி ஆகுமா”, என்றவள்.,
“மாம்ஸ் நீ டாக்டர் தானே, ஏன் இதுவரைக்கும் ஒரு தடவை கூட சொல்லல”, என்று தூக்க கலக்கத்தில் கேட்டாள்.
இவனோ “இதெல்லாம் சொல்லக்கூடாது குட்டி, தானா தெரியும்”, என்று சொன்னான்.
“ஓ அப்படியா சரி”, என்றவள், அவன் மனைவியை பற்றி விசாரித்தாள்., இவர்கள் திருமண சமயம் தான் அவளுக்கும் மூன்று மாதம் ., தனாவிற்க்கு இவர்கள் பேசுவது எதையும் மனதிற்குள் வாங்கும் நிலையில் இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருந்தாள்.
அதை பார்த்த பாட்டி தான்., “தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க, தூங்கட்டும்”, என்று சொன்னார்.
வினித் தான், “நான் போய் டாக்டரை பார்த்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
அவர்களோ சிறு சிறு பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, ஒரேடியாக ரிசல்ட் வாங்கிக் கொண்டு வரும்படி சொன்னார்கள்.
தூக்கத்தில் இருந்தவளிடம் ஒவ்வொரு டெஸ்டாக செய்வதற்கு போராடி டெஸ்ட் எல்லாம் முடித்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த முடிவுதான் இருந்தது. பிரக்னன்சி பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வர வாங்கி கொண்டு டாக்டரை பார்க்க போகும் முன்பே.,
அவனிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அதே நேரத்தில் வினீத்தை கலாய்த்து கொண்டிருந்தான் நிமலன்.,
“ஆமா உன்னையும், அவனையும்., இப்போ என் பிள்ளை எப்படி டா கூப்பிடும்., சித்தப்பான்னு கூப்பிடுமா, தாத்தா பாட்டினு கூப்பிடுமா”, என்று கலாய்த்தான்.
அவனும் “ஆனாலும் அண்ணா உங்களுக்கு இருக்குற சேட்டை பாருங்க., சித்தப்பா ன்னு தான் கூப்பிடும்”, என்று சொல்லிவிட்டு முகேஷ்க்கு போன் செய்ய போயிருந்தான்.
அப்போது தான் இவள் அருகில் வந்தான்.
அவள் கையைப் பிடித்துக் கொண்டு “கண்மணி” என்று அழைத்தான்.
‘ஓரளவு புரிந்து விட்டது’ என்றாலும், அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு தலை மட்டும் அசைத்தாள்.
அவனும் அத்தனை பேர் இருந்தாலும், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு “தேங்க்ஸ் டா கண்மணி, நாம பேரண்ட்ஸ் ஆயிட்டோம்”, என்று சொல்லி மகிழ்வை பகிர்ந்து கொண்டவன்., பாட்டி தாத்தா அம்மா அப்பா என அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.
இவர்களுக்கான முறை வரும்போது அனைவரும் சேர்ந்து மருத்துவரை பார்க்க சென்றனர்.
பின்பு மருத்துவர் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை சொன்னார்.
இவளோ கிறங்கி போய் இருப்பதை பார்த்தவர்., “சாப்பிட மட்டும் டைமுக்கு கொடுத்துட்டே இருங்க”.,என்றார்.
“இரண்டு நாள் முன்னாடி அப்படித்தான் இருந்துச்சு., தண்ணி புடிக்கலை அதனால நான் கொஞ்சம் லைட்டா சுகரும் சால்ட்டும் போட்டு குடிச்சேன்., அந்த டேஸ்ட் புடிச்சிருந்துச்சு., மறுநாள் தண்ணி குடிக்கும் போது சுத்தமா பிடிக்கல, அதனால மறுநாளும் கொஞ்சம் சால்ட் சுகர்ம் மிக்ஸ் பண்ணி தான் குடிச்சேன்”, என்று சொன்னாள். அனைத்து உரையாடலும் ஆங்கிலத்தில் தான் இருந்தது.