14

    நான்கு நாட்கள் கடந்த நிலையில் அன்று மதிய உணவுக்கு பின் கிளம்பி வெளியே சென்றாள்.

   வெளியே சென்று வந்தவளுக்கு, வீட்டில் தனியாக இருப்பது ஏதோ போல் இருந்ததால்., எப்போதும் போல மாமன்கள் இருவருக்கும் பேசிவிட்டு மதரிடமும் பேசினாள்.

     மதர் தான் “ஏதாவது யோசிச்சு முடிவு பண்ணி இருக்கியா”, என்று கேட்டார்.

     “இல்ல மதர் முடிவு பண்ணல”, என்று சொல்லி விட்டு, “யோசிக்கிறேன், மதர் சொல்றேன்”, என்று மட்டுமே சொன்னாள்.

     சற்று நேரம் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு வைத்துவிட்டார், பின்பு சமையல் பார்க்கும் யூ ட்யூப் சேனல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென தோன்றியது.,

   அவன் ‘ஒரு முறை அவளிடம் கேரளா டிஸ் செய்து தருவியா’, என்று கேட்டது நினைவு வர போய் கேரளா உணவுகளை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ‘மனமோ அன்று முடிவு செய்தது போல இரு., கண்டதையும் யோசிக்காதே’, என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தது.

     சற்று நேரம் கழித்து, தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், ‘தேவையில்லாத வேலை பார்க்காத’, என்று திட்டிக்கொண்டாள்.

     ‘ஏன் அவங்க உனக்காக எல்லாம் செஞ்சாங்கன்னு ஒரு சாஃப்ட் கார்னர் வருதா’, என்று கேட்டுக் கொண்டாள்.

    ‘இல்ல அப்படி இல்ல’, என்று மனசாட்சியிடம் சொன்னவள்,

    ‘இது என்ன வித்தியாசமான எண்ணம், நான் என்ன ஆண்களிடமே பேசாதவளா, இவனோடு பேசும் போது மட்டும் வரும் உணர்விற்கு பெயர் என்ன’, என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவள்.,

     மீண்டும் ‘தேவையில்லை’, என்று சொல்லிக் கொண்டு நாட்களை நெட்டித் தள்ளினாள்.

     அலுவலக வேலைகளையும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு நாள் தெரியாத எண்ணில் இருந்து போன் வர., ‘யார் நம்பரா இருக்கும்’, என்று யோசித்துக் கொண்டே தான் போனை எடுத்தாள்.

       எடுக்கவும் அங்கே “கண்மணி எப்படி இருக்க”, என்று கேட்டான்.

    சற்று நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு “யார் வேணும்”, என்றாள்.

    வேண்டுமென்றே, மறுபுறமிருந்து “கண்மணி தான் வேணும்”, என்று கேட்டான்.

     இங்கு இவளோ, “இங்க கண்மணி ன்னு யாரும் கிடையாது”, என்று சொன்னாள்.

     “அப்படியா, அப்ப பேசிட்டு இருக்கிறது யாரு”, என்று மறுபுறம் இருந்து கேட்டான்.

   இவளுக்கு ஓரளவு குரலை அடையாளம் தெரிந்தாலும்.,  ‘வேண்டாம் பேசக்கூடாது, இங்க இருக்கும் போது ஒரு நாள் கூட கண்மணி சொன்னது கிடையாது., அது என்ன அங்க போயிட்டு முகத்தை மறைச்சிட்டு கண்மணி ன்னு சொல்வது., வேண்டாம் பேச வேண்டாம்’, என்று நினைத்து விட்டு, “சாரி ராங் நம்பர்”, என்று சொல்லி போனை கட் செய்தாள்.

      மீண்டும் அழைப்பு வரவும் எரிச்சல் தான் தோன்றியது.

        ஆனாலும் எதுவும் நினைக்காமல் போனை எடுத்தவள், “யாருங்க சார் வேணும், உங்களுக்கு”, என்றாள்.

     “கண்மணி தான் வேணும்”, என்று கேட்டான்.

        “அப்படி யாரும் இங்க இல்லைன்னு சொல்லிட்டேன்., போனை கட் பண்ணா திருப்பி கூப்பிடுறீங்க., என்ன வேணும்”, என்றாள்.

அவனும் “அடையாளம் தெரியலையா”, என்று கேட்டான்.,

     “யார் நீங்க”, என்றாள்.

    “ஹலோ மேடம், உங்க பாஸ் தான் மேடம்”, என்று சொன்னான்.

       “அது என்ன, புதுசா பெயர் எல்லாம் வித்தியாசமா வச்சுட்டு”, என்று கேட்டாள்.

      “அப்படியா இந்த பெயர் இதுக்கு முன்னாடி நீ கேள்விப்பட்டதே இல்லையா”, என்றான்.

       இவளோ, “அது உங்களுக்கு தேவையில்லை, வேணும்னே தானே கூப்பிடுறீங்க., அப்படித்தானே”, என்றாள்.

    “அப்படியா வேணும்னே கூப்பிடுறேனா”,என்றவன். “என்னை தேடலையா உனக்கு., இத்தனை நாள் நான் அங்க இல்ல இல்ல.,  தனியா இருக்கிற இல்ல., தனியா இருக்கிறோமே., ஒருத்தன்  ஊருக்கு போனானே,  அவனுக்கு ஒரு போன் பண்ணுவோம்., எப்ப வருவான்னு கேட்போம், என்ன மாதிரி இருக்கான்னு, ஏதாவது யோசிச்சியா”, என்று கேட்டான்.

       “பாஸ்.,உங்கள  அப்படியெல்லாம் மரியாதை இல்லாம நினைக்க கூடாது பாஸ்.,  ஏன்னா நீங்க என்ன இருந்தாலும் என்னோட பாஸ் இல்லையா”, என்று சொல்லிவிட்டு., “நான் எதுக்கு அப்படி நினைக்க போறேன்., உங்க ஊரு, உங்க வேலை., உங்க இஷ்டம்.,  நீங்க வருவீங்க, போவீங்க அது உங்க பாடு., என்னோட வேலை உங்களோட ப்ராஜெக்ட் முடிச்சு கொடுக்கிறது மட்டும் தான், சோ ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு., நான் அந்த வேலையை தான் பாத்துட்டு இருக்கேன்., அதுக்காக நீங்க எப்ப வருவீங்க, ஏன் போனீங்க அப்படி எல்லாம் நான் நினைக்க முடியாது இல்லையா”, என்றாள்.

        சத்தமாக சிரித்தவன்., “சோ நீ என்னைப் பற்றி யோசிக்கலை ன்னு சொல்லி என்னை தான்  நினைச்சிருந்த, சரியா”, என்றான்.

   “ஓவர் நினைப்பு தான், நான் அப்படிலாம் நினைக்கல, அதுதான் உண்மை”, என்று சொன்னாள்.

    “நிஜமாவே நீ நினைக்கல”, என்று மறுபடியும் அழுத்தி கேட்டான்.

   “நிஜமா நினைக்கல, நான் போனை வைக்கிறேன்”, என்று சொன்னாள்.

     “ஏய் போன வச்சிறாத”, என்று சொல்லி விட்டு,  “ஆமா நெஜமாவே என்ன தேடலை அப்படித்தானே”, என்றான்.

          “அது தான் அப்பவே சொன்னேனே”, என்றாள்.,

       மறுபுறம் சற்று அமைதி. காக்க,  இவளுக்கு மனம் படபடப்பாக இருந்தது.

     “போனை வைக்கவான்னு கேட்டேன்”, என்று இவள் அழுத்தி கேட்கவும்.,

      “முடியாது போனை வச்சுருவியா., இப்போ கூட நான் எப்ப வருவேன்னு கேட்கணும்னு தோணலையா”, என்றான்.

     “அதுதான் ஃபர்ஸ்ட் டே சொல்லிட்டேன்ல, உங்க ப்ராஜெக்ட், உங்க இஷ்டம், உங்க கம்பெனி, நீங்க வர்ற டைம் வாங்க”, என்று சொன்னாள்

       “ஓஹோ வந்துக்கிறேன் இரு”, என்று சொல்லிவிட்டு

“நாளைக்கு கிளம்பிருவேன்”, என்று சொன்னான்.

   “இதுக்கு எதுக்கு போனீங்க”, என்றாள்.

   “அது ஒரு முக்கியமான வேலையா வந்தேன்”, என்று சொன்னவன் “தேடிச்சி தானே”, என்றான்.

     “ம்ச்”, என்றவள்,  “நான் எதுக்கு தேட போறேன், நீங்க போயிட்டு அலையறது வேஸ்ட் தானே ன்னு சொன்னேன்., வேற ஒன்னும் இல்ல., நீங்க வந்தா வாங்க வராட்டி இருங்க., நோ ப்ராப்ளம்”, என்று சொன்னவள்.,

     போனை வைக்க போகவே, “கட் பண்ணிடாத, நீ இப்ப கட் பண்ண தான் போன, தெரியும் நான் உனக்கு ஒரு முக்கியமான விஷயத்துக்காக போன் பண்ணேன்”, என்று சொல்லிவிட்டு “எப்படி கேட்குறது தெரியலையே, ஒரே ஒரு நிமிஷம் இரு”, என்று சொன்னவன்,

     “இப்ப திருப்பி ஒரு ஐந்து நிமிஷத்துல கூப்பிடுவேன் போன் எடு” என்று சொன்னான்.

    இவளும் “எதற்கு” என்று கேட்டாள்.

      “அம்மாடி, ஒரு கடைக்கு போறேன் கடைக்கு போயிட்டு அங்க உள்ளவங்க கிட்ட போன கொடுக்கிறேன்., அவர்கள் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லு”, என்று சொன்னான்.

    “உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை”, என்றாள்.

“தேவையா, தேவையில்லையா ன்னு நான் தான் முடிவு பண்ணனும்., கடைக்கு போயிட்டு போன் பண்றேன் எடு”, என்று சொல்லிவிட்டே போனை கட் செய்தான்.

      இவளோ ‘ஐயோ பாம்புன்னு நினைச்சு ஒதுங்கவும் முடியல, பழுதுன்னு நெனச்சு நெருங்கவும் முடியல, தேவையா எனக்கு இதெல்லாம்’, என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

       அதுபோலவே சற்று நேரத்தில் போன் செய்தவன், “இந்த கடையில் உள்ளவங்க கிட்ட கொடுக்கிறேன் பேசு” என்று சொல்லிவிட்டு கொடுத்தான்.

     அங்குள்ள பெண்மணியும் “உங்க ரெடிமேட் பிளவுஸ் அளவு சொல்லுங்க” என்று கேட்டார்.

     “எதுக்கு” என்றாள்.

     “மேடம், உங்க ஹஸ்பண்ட் தானே ப்ளவுஸ் எடுக்க வந்து இருக்காங்க., ரெடிமேட் பிளவுஸ்க்கு இன்னர் அளவு கேட்டோம், அவங்க தான் போன் பண்ணி  கொடுத்து என் வைஃப் கிட்ட கேட்டுக்கோங்க ன்னு சொன்னாங்க”, என்று சொன்னார்.

      தலையில் கையை வைத்துக் கொண்டவள்., “இல்லைங்க அவர்ட்ட கொடுங்க”, என்று சொன்னாள்.

     “மேடம் நீங்க நம்பர் சொன்னீங்கன்னா, அவங்க சொன்ன கலரில் நான் தேடுவேன், நீங்க அதுக்கப்புறம் அவர்கிட்ட பேசுங்க”, என்று சொன்னார்.

        அளவை சொல்லிவிட்டு, “அவங்க கிட்ட போன் குடுங்க”, என்று சொன்னாள்.

      அவனிடம் ஃபோனை கொடுக்க, “யாரை கேட்டு இப்படியெல்லாம் சொன்னீங்க”, என்று கேட்டாள்.

    “யாரை கேட்கணும், யாரையும் கேட்கணும்னு அவசியம் இல்ல., அப்படி தான் சொல்லுவேன்”, என்று சொன்னான்.

    “ஹலோ நான் சொல்லனுங்க, சம்பந்தப்பட்டவ நான் தான்”, என்று சொன்னாள்.

    “அப்படியா அதான் நேரில் வரேன்னு சொன்னேன்ல, நேர்ல வந்து பேசலாம், பின்ன  கடைக்காரன் கிட்ட போய் எப்படி கேட்கிறது., நான் பாஸ், என் ப்ராஜெக்ட்ல இருக்குறவங்களுக்கு நான் வாங்கிட்டு போறேன்னா சொல்ல முடியும்”, என்று சொன்னான்.

      “உங்களை யாரு வாங்க சொன்னா”, என்றாள்.

         “அம்மாடி, இத பற்றி இனி பேசாம இரு”, என்று சொன்னான்.

      “எதுக்கு”, என்றாள்.

         “நான் சேலரில புடிச்சுக்குறேன்., கவலைப்படாதீங்க மேடம்”, என்று சொல்லிய பிறகு போனை வைத்தான்.