காலையில் எப்போதும் போல வீட்டின் வேலை செய்ய தொடங்கியவளுக்கு பல நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
சமையல் வேலை முடித்துக் கொள்ள போகும் தருணத்தில் அவன் எழுந்து வருவது தெரிந்தது.
“சாரி சாரி, லேட் ஆயிடுச்சு நேத்து சீக்கிரம் தூங்கிட்டியா”, என்று கேட்ட படி வந்து “ஏதாவது செய்ய வேண்டியது இருக்கா”, என்று கேட்டான்.
திரும்பிப் பார்த்தவள், ஒன்றுமில்லை என்னும் விதமாக தலையை அசைத்து விட்டு., அவனுக்கு டீயை தயார் செய்யும் போது., அவன் அடிக்கடி அவளிடம் கேட்கும் தமிழ்நாட்டு ஸ்வீட்டான கேசரி ஞாபகம் வந்தது.,
அதை அவன் அடிக்கடி கேட்பான், ‘செய்து தர முடியுமா’, என்று கேட்பான், இவளோ எப்போதும் ‘என்னை பார்த்தால் எப்படி தெரியுது., என்னமோ ப்ராஜெக்ட் க்கு கூட்டிட்டு வந்த மாதிரி தெரியல., உங்களுக்கு சமைச்சு போட கூட கூட்டிட்டு வந்த மாதிரியே தெரியுது’, என்று சொல்வாள்.
இன்று அதை நினைத்துக் கொண்டவள் கிச்சனில் அதற்கான பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு இருக்கும் பொருட்களை மட்டும் எடுத்து வைத்தாள்,
காலை உணவை தனியாக எடுத்து வைத்தவள், மதிய உணவுக்கு ஹாட் பாக்ஸில் அடைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் கையில் டீயை கொடுத்தாள்.
“கொடு நான் எடுத்து வைக்கிறேன்., நீ போய் கிளம்பு”, என்று சொன்னான்.
“டைம் இருக்கு”, என்று சொல்லி விட்டு எடுத்து வைத்தவள், பாத்திரத்தை ஒதுக்கிப்போட்டாள். அவனும் டீ குடித்து விட்டு, “நான் க்ளீன் செய்யுறேன்”, என்று சொல்லி க்ளீன் செய்யும் போதே.,
இவர் கேசரிக்கு தேவையானவற்றை தயார் செய்து வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் சுத்தம் செய்து விட்டு கிளம்புவதற்காக சென்றுவிட்டாள்.
அவனும் வேலை முடிந்தது என்று நினைத்து விட்டு கிளம்ப சென்றான்.
கிளம்பி வந்தவள்,அவன் குளித்து விட்டு வரும் போது சூடாக கேசரி செய்து அவனுக்கு சாப்பிடும் தட்டு பக்கத்தில் கிண்ணத்தில் எடுத்து வைத்தவள்.,
தனக்கு தேவையான உணவு எடுத்துக்கொண்டு ஹாலில் சென்று அமர்ந்து விட்டாள்.
வந்தவனோ, ‘என்ன இன்னைக்கு ஹால்ல உட்கார்ந்து சாப்பிடுறா’, என்று யோசித்துக் கொண்டே “என்ன ஆச்சு”, என்று கேட்டான்.
இவளோ ஒன்றும் இல்லை எனும் விதமாக தலையை அசைத்து விட்டு, சாப்பிட தொடங்கினாள்.
நேத்து மதரிடம் பேசியதிலிருந்து மனம் எல்லாம் பாரமாக உணர்ந்தது, அதைப்பற்றி இப்போது யோசிக்க கூடாது என்று நினைத்து., அவசரமாக சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி வைத்தவள்.,
மீண்டும் அறைக்குள் செல்லும் போது அவன் சாப்பிட துவங்கியிருந்தான்., கிண்ணத்தை திறந்து பார்த்தவன் அதை பார்த்தவுடன் சிரித்துக் கொண்டே, அவளைத் தேட அவள் அங்கு இல்லை.
‘பரவாயில்லையே மேடம் மனசு இறங்கி செஞ்சு வச்சுட்டு போயிருக்காங்க’, என்று நினைத்தவன்.
‘பாவம் பார்த்து செஞ்சு இருப்பாடா, நீயா எதுவும் வாயை விட்டு மாட்டிக்காத., நேத்து கேரளா டிஷ் கேட்ட மாதிரி வேற எதையும் கேட்டு தொலையாத’, என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.
இவளோ தன் அறையில் இருந்து திறந்திருந்த கதவின் வழியாக, ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் சிரிப்பையும், அவன் முகத்தில் வந்து போன பாவத்தையும் பார்த்தவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு வந்து போனது., கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டவள்,
‘தேவையில்லாத வேலை பார்க்காத தர்ஷனா, என்ன வேலையோ அதை மட்டும் பாரு., இன்னும் மேக்ஸிமம் போனா ஒரு அஞ்சு ஆறு மாசத்துல ப்ராஜெக்ட் முடிஞ்சிடும்., ப்ராஜெக்ட் முடிச்சுட்டு உன் கம்பெனில போய் வேலையை பாரு., நடக்கக்கூடிய விஷயத்தை மட்டும் யோசி, தேவையில்லாம மனசுல ஆசையை உருவாக்காதே’, என்று சொல்லிக் கொண்டவள்.,
ஒரு பெருமூச்சோடு கிளம்பி வெளியே வரவும், அவனும் சாப்பிட்டு முடித்து அவளைப் பார்த்துக் கொண்டே வந்து நின்றான்.
“தேங்க்ஸ் மேடம்”, என்றான்.
இதுவரை அவளை ஒரு முறை கூட பெயர் சொல்லி அழைக்கவில்லை., அலுவலகத்தில் அலுவலக ரீதியாக பேசும் போது, ‘மிஸ் தர்ஷனா’ என்று மட்டுமே சொல்வான்.
மற்றபடி அடுத்தவர்களிடம், அருகில் இருப்பவர்களிடம், சொல்லும் போதும் ‘மேடம்’ என்பான்.
கிண்டலுக்கு சொல்கிறான் என்று நினைத்தாள்., ‘தன்னுடைய பெயரை சொல்ல விருப்பம் இல்லையோ’, என்று கூட தோன்றியது.
‘தேவையில்லாத ஆராய்ச்சி எதற்கு? என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவள்., அவரவர் அறையை பூட்டிக்கொண்டு., ஹாலின் மெயின் கதவையும் கூட்டிக்கொண்டு இருவரும் ஒன்று போல லிப்ட் ஏறினர்.
அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்., “அடுத்த மாசம் இன்னும் குளிர் ஜாஸ்தியா இருக்குமாம்,
டிசம்பர் 15 வரை தான் நமக்கு இங்க ஒர்க் இருக்கும்., அதுக்கப்புறம் இவங்க கிறிஸ்மஸ் செலிப்ரேஷன்., நியூ இயர் செலிப்ரேஷன்., அப்படி ன்னு சொல்லிட்டு இங்கே வொர்க் ல பிரேக் எடுத்துப்பாங்க., 15 டேஸ் லீவ் தான், சோ அந்த சமயத்துல இந்தியா வரியா., போயிட்டு வந்துரலாமா”, என்று கேட்டான்.
“ஹலோ என் கம்பெனில எனக்கு அலாட் பண்ணது போக வர மட்டும் தான்., சரியா இஷ்டத்துக்கு எல்லாம் டிக்கெட் எடுத்து போக முடியாது., நீங்க போயிட்டு வாங்க”, என்றாள்.
“அப்ப இந்த 15 டேஸ், நீ என்ன பண்ணுவ”, என்று கேட்டான்.
“ஏன், எனக்கு என்ன பயம், தனியா இருப்பேன்., சமைச்சு சாப்பிட்டு ப்ராஜெக்ட் வொர்க் இருக்குல்ல உட்காந்து நிதானமா பார்க்கிறேன்”., என்று சொன்னாள்.
“மேடம் அப்படி சொல்றீங்க”, என்று சொன்னவன்., “பார்க்கலாம்”, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டான்.
அதன் பிறகு அவன் யோசனை எல்லாம், என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் இருந்தான்.
அவளோ எதுவும் சொல்லாமல் திரும்பி நின்றவள், ‘காலைல நம்ம நினைச்சது தான் சரி., கரெக்டா இருக்கணும், கரெக்டா இருக்கணும்’, என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.
பின்பு அலுவலகம் சென்றவர்களுக்கு வேலை அதன் போக்கில் ஓடியது, தினம் தினம் நாளும் கிழமையும் அவர்களுக்கு ஏற்றாற் போலவே ஓடியது.
டிசம்பர் மாதம் அவர்களைப் பொறுத்தவரை 15ஆம் தேதிக்கு பிறகு, எல்லா அலுவலக ஊழியர்களும் தங்களது கொண்டாட்டங்களை துவங்கி விடுவார்கள். அது போல கொண்டாட துவங்க.,
சில நேரங்களில் அத்தனை குளிரிலும், குளிர்க்கேற்றாற் போல உடை அணிந்து இருவரும் வெளியே சுற்றி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.,
அப்பொழுது அவன் தான் “நான் ரெண்டு நாள்ல இந்தியா கிளம்புறேன்”, என்று சொன்னான்.
இவளோ திரும்பிப் பார்த்து “பய் போயிட்டு வாங்க”, என்றாள்.
அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “உங்க மாமன்கிட்ட எதுவும் சொல்லனுமா”, என்று கேட்டான்.
“வேண்டாம் நான் தினமும் பேசுகிறேனே”, என்றாள்.
“மதர் கிட்ட எதுவும் சொல்லனுமா”, என்று கேட்டான்.
“அவங்க கிட்ட கூட நான் பேசிட்டு தான் இருக்கேன்”,என்றாள்.
“வேற எதுவும் சொல்ல வேண்டியது இருக்கா”, என்று கேட்டான்.
“இல்ல”, என்றாள்.
அவனும் “ஜஸ்ட் 10 டேஸ், லாஸ்ட் பைவ் டேஸ் இங்க தான் இருப்பேன், வந்துருவேன்”, என்று சொன்னான்.
தோளைக்குலுக்கி கொண்டு வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள்., அவள் பின்னே நடந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே ‘மனதில் இருப்பதை இவள் எப்பொழுது தான் சொல்வாள்’, என்று நினைத்துக் கொண்டான்.
அவளோ மெதுவாக வேடிக்கை பார்த்த படி நடந்தவள், ‘இரண்டு நாளைக்கு அப்புறம் தனியா இருக்கணுமா’, என்று நினைத்துக் கொண்டவள்.
‘இப்போது மட்டும் என்ன, அவர்கிட்ட கலகலன்னு பேசிட்டா இருக்க., உன் மாமன்கள் கிட்ட பேசுறதுல 20 ல ஒரு பங்கு கூட பேச மாட்டீக்க இல்ல’, என்று மனசாட்சி கேட்டது,
‘தெரியாதவங்க கிட்ட என்னத்த பேசுறது’, என்று மனசாட்சியிடம் பதில் சொல்லிக்கொண்டவள், ‘பார்க்கலாம்’ என்று யோசித்தபடி நிதானமாக நடந்தவளுக்கு மதர் அவளோடு பேசியது அநியாயத்திற்கு இப்போது ஞாபகம் வந்தது.
‘நோ நோ, இப்ப எதுவும் நினைக்க கூடாது’, என்று யோசித்துக் கொண்டே நடக்க துவங்கினாள்.
அதுபோலவே அவன் சொன்ன நாளில் கிளம்பும் போது சிறிய பேக் மட்டுமே எடுத்துக் கொண்டு கிளம்பியவன்.,
“சீக்கிரம் வந்துருவேன், நான் கம்பெனியில ஏற்கனவே சொல்லி இருக்கேன்., இந்த ரூம்ல நான் இல்லாதபோ வேற யாரையும் தங்க அலோ பண்ண கூடாதுன்னு”, என்று சொல்லிவிட்டு, அவள் அருகில் வந்தவன் அவளை தோளோடு சேர்த்து பிடித்து., “டேக் கேர்”, என்று சொல்லும் போது அவன் முகம் குரல் இரண்டும் மாறியது போல அவளுக்கு தோன்றியது.
அவளோ அவன் கையை மெதுவாக விலக்கி விட்டு., “நான் பாத்துக்குவேன், நீங்க பத்திரமா போயிட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு “பய்” என்றாள்.
அவனோடு கீழே வரை வந்தவள்., அவன் காரில் ஏறவும் கையை ஆட்டி விடை கொடுத்து விட்டு மீண்டும் மேலே வந்தவளுக்கு அந்த வீடு நிசப்தமாக இருப்பது போல தோன்றியது.