அவனும் ‘பரவால்ல வேலையில கில்லாடி தான் போல’ என்று நினைத்துக் கொண்டே.,

   இதுவரை நடந்த பிராஜெக்டை மொத்தமாக சரிபார்த்துக் கொண்டிருந்தவன்.,

    பின்பு அந்த பிராஜெக்ட் என ஒதுக்கப்பட்டிருந்த டீம் மெம்பர்களை அழைத்து மீட்டிங் போல வைத்தான்.

அப்போதும் இவளிடம் சந்தேகமான பகுதிகளில் குறிப்பு கேட்க., அவள் எடுத்துக் கொடுத்தாள்.

     அவள் மேலே அவனுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.

     கண்டிப்பாக இதில் இந்த இடத்தில் எல்லாம் அவன் கேள்வி கேட்பான் என்பது போல தெரிந்தே அனைத்தும் எடுத்து வைத்திருந்தாள்.

மீட்டிங் முடியும் வரை அலுவலகத்தில் இருவருக்குமே வேலை சரியாக இருந்தது., வேலை சார்ந்த விஷயங்களை தவிர மற்ற விஷயங்கள் அவளிடம் வேறு எதுவும் பேசவில்லை.,

    இது அவனுடைய கம்பெனி ப்ராஜெக்ட் அதனாலேயே அதற்கு மெனக்கட்டு தூரத்தில் இருந்து இவளையும் வரவைத்து., அவனும் வந்து சேர்ந்திருந்தான்.

      அதனால மற்ற விளையாட்டுகளை விட்டுவிட்டு வேலையில் மும்மரமாக இருக்க., இவளும் அவனுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் வேலையில் இருந்தாள்.

   அவன் நண்பன் ஆகிய தர்ஷனா வேலை செய்யும் கம்பெனி ஓனர்., நிமலனுக்கு அழைத்துப் பேசினார்.

    அவனும்  “நீ சொன்ன ன்னு தான்டா வேலைக்கு எடுத்தேன்., நீ சொன்ன ன்னு இப்ப அனுப்பி வச்சிருக்கேன்., உன்ன பாஸ்ன்னு சொன்னதுக்கு, என்கிட்ட போன் பண்ணி யார் இந்த பாஸ் ன்னு கேட்குறாங்க,  அம்மாடி நீ அங்க தான் ப்ராஜெக்ட் க்கு போய் இருக்க., இப்போதைக்கு அவன் தான் உன்னோட பாஸ் அப்படின்னு சொல்லி இருக்கேன்., இப்போ உன்னை பார்த்த உடனே கண்டிப்பா அவளுக்கு டவுட் வந்து இருக்கும்ல” என்று கேட்டான்.,

     “வந்திருக்கும் ஆனா மேடம் வேலையை தவிர வேற எதுவும் பேச மாட்டேங்கிறாங்க., பேசினா கூட, பேச்சு கொடுத்தா கூட பேச மாட்டேங்கிறாங்க”, என்று சொன்னான்.

   “டேய் உனக்காக தான் வேலை எல்லாம் போட்டு கொடுத்தேன், என்னை மாட்டி விட்றாதடா”, என்றான்.

   “உன்னை மாட்டி விட்டாலும் கண்டுக்க மாட்டா, கவலைப்படாத”, என்று சொல்லி விட்டு “ஆனால் வேலை ல செம பிரில்லியன்ட், நான் எதிர்பார்க்கவே இல்லை.,  ஜெர்மன் ப்ராஜெக்ட் பக்காவா இருந்துச்சுன்னு தெரியும்., நானும் அந்த சமயம் போயிருந்தேன், பட் நான் தான் அப்படிங்கறது வெளியே காட்டிக்கல, இப்ப அதைவிட ஸ்பீடு, எங்க கொஸ்டின் கேப்போம் எங்க டவுட் கேட்போம் ன்ற வரைக்கும் யோசிக்கிறா ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னான்.

      “அதைப்பற்றி நீயே கேட்டுப்பார்”, என்று சொன்னவன்., “ஆமா எப்ப சொல்ல போற”, என்று கேட்டான்.

     “பேசணும்டா, இப்போ பேச முடியாது, முதல்ல ப்ராஜெக்ட் பாதியாவது தள்ளி கொண்டு போகனும்,  இப்ப ஏதாவது சொன்னேனா, மேடம்  இந்தியாவை பார்த்து கிளம்பி வந்து சேர்ந்திடுவா., அதனால முதல்ல வொர்க் முடியட்டும்”, என்று சொல்லி நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தவன்.

     பின்பு “அவ இப்போதைக்கு கண்டிப்பா உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டா., சோ எப்ப கேட்டாலும் உண்மையை சொல்லு., ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னாள்.

    ஆம் இவள் முதல் முதலாக வேலைக்கு சென்றது அவன் நண்பனின் கம்பெனி தான்., அது மட்டுமல்லாமல் அந்த கம்பெனியில் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆட்களை மட்டுமே வேலைக்கு எடுப்பார்கள்., முதல் முதலாக எக்ஸ்பீரியன்சே இல்லாமல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவியை செலக்ட் செய்து கூட்டி வந்தது நிமலனுக்காக மட்டுமே.,

    ஆனால் முதல் ஆறு மாதம் இவள் திணறினாலும், பின்பு அவளது வேலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் வந்து ஒரு வருடம் முடிவதற்குள் வேலையை கற்றுக் கொண்டாள்.

    அது மட்டுமல்லாமல் இந்த வேலைக்காக நிறைய சின்ன சின்ன கோர்ஸ் படித்துக் கொண்டே அவளது வேலையும் பார்த்தாள். அதையும் அவன் கண்காணித்து தான் வந்திருந்தான்.

    அவள் வேலையில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டது, வினித்தும் முகேஷும் அவரவர் ஊருக்கு சென்ற பிறகு தான்.,

     ஏனென்றால் அதன் பிறகு தான், ‘தனக்கு யாரும் கிடையாது, தான் மட்டும் தான், தன் வேலை மட்டும் தான் என்ற எண்ணம் வந்தது’, பிறகு தான் அதையே பிடித்துக் கொண்டு ஒவ்வொரு வேலையிலும்  முழுதாக அர்ப்பணிப்போடு செய்வதை தன் நண்பன் மூலமாக அறிந்திருந்தான்.

எனவே தான் இந்த ப்ராஜெக்ட் காக அவளை யுஎஸ் வர வைத்தது.

    அன்று மாலை வேலை முடிந்து கிளம்பும் போது அவன் தான் அவளிடம்.,

    “நான் வரதுக்கு நேரமாகும், நீ அஸ்யூஸ்சுவல் எப்பவும் போல கிளம்பிக்கோ”, என்று சொன்னான்.

     இவளோ அவனை ஒரு வித்தியாசமாக பார்க்க, “என்ன”, என்றான்.

       அவளோ ஒன்றுமில்லை என்னும் விதமாக தலையாட்ட.,  அவனும் “இனிமேல் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே கேப்ல தான் போகனும், இன்னைக்கு எனக்கு இங்க கொஞ்சம் பர்சனலா ஆட்கள் பார்க்க வேண்டியது இருக்கு., அதனால பாத்துட்டு வருவேன் மத்தபடி ரெண்டு பேருக்கும் ஒரே கேப் தான் வரும்” என்று சொன்னான்.

             அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு போக ., “ஒய் உனக்கு பயம் போயிருச்சா”, என்று தமிழில் கேட்டான்.

இவளோ “எதுக்கு பயப்படனும்” என்றாள்.

    “அப்போ உனக்கு என் மேல பயம் இல்லை”, என்றான்.

   நிதானமாக நின்று அவனை திரும்பி பார்த்தாள்., அவள் பார்ப்பதை பார்த்தவுடன் இரண்டு எட்டு முன் வைத்து  அவளுக்கு சற்று அருகில் வர.,

   அவளோ, “நீங்க கடத்திட்டு போன அப்பவே நான் பயப்படல,  இப்ப எதுக்கு பயப்படனும்”, என்றாள்.

    “அடிப்பாவி”, என்று சொன்னவன், “அது தெரிஞ்சது., இல்லாட்டி நல்லா சாப்பிட்டு பேசாம படுத்து தூங்குவியா., கொஞ்சம் கூட பயம் இல்லாம”, என்று சொன்னான்.

    அவளோ அவனைப் பார்க்க., அவனும் ஒரு நமட்டு சிரிப்பை சிரிக்க,

   இவளோ, “நீங்க சிரிக்கிறதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா என்ன”, என்றாள்.

    “நிறைய இருக்கு”, என்று சொல்லி அவளைப் பார்த்து சிரித்தவன், “அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன்., இப்ப சொல்ல முடியாது”, என்று சொன்னான்.

    இவளுக்கு இப்போது யோசனையாகி, அவனை வேகமாக நிமிர்ந்து பார்த்தவள்.,

      “இல்லல்ல, இருக்காது”, என்று மீண்டும் யோசனையாக  சொன்னாள்.

     அவனோ “தப்பு தப்பா யோசிக்காத, ஒன்னும் இல்ல போ., நான் உனக்கு இன்னொரு நாள் எல்லா கதையும் சொல்றேன்”, என்று சொன்னான்.

      “கத கதையா வச்சிருப்பீங்களா., அன்னைக்கு ஒரு கதை சொன்னீங்க., இப்போ ஒரு கதை சொல்லணும் நீங்க”, என்றாள்.

       “நிறைய கதை இருக்கு, போயிட்டு வா”, என்று சொன்னான்.

    அவனை பார்த்துக்கொண்டே அவளுக்கென வந்த கேபில் ஏறினாள்.

    பின்பு வரும் வழியில் கேப் டிரைவரிடம் சொல்லி இந்தியன் ஷாப் பார்த்து நிறுத்திக் கொண்டவள்.,

     “வெயிட் பண்ண முடியுமா, இல்லாட்டி நீங்க போகனும்  னா போங்க”, என்று சொன்னாள்.

    அவரோ காத்திருப்பதாக சொல்லவும்., அவசரமாக சென்று தேவைக்கு என கொஞ்சம் பொருட்கள் மட்டும் வாங்கிக்கொண்டு காரில் ஏறினாள்.

     இவள் வீட்டிற்கு வரவும்., அவனும் வந்து சேரவும் சரியாக இருந்தது.

   “எங்க போயிட்டு வர்ற., இப்பதான் வர்ற”, என்று கேட்டான்.

    தன் கையில் இருந்த ஷாப்பிங் பையை தூக்கி காட்ட.,

      அவனும் “ஏன் என்ன ஆச்சு, இங்க  பொருட்கள் இல்லையா”, என்று கேட்டான்.

       எதுவும் சொல்லாமல் வேகமாக கிச்சனுக்கு சென்றவள்., பொருட்களை எல்லாம் அப்படியே வைத்து விட்டு தன்னறைக்கு சென்று தன்னை ரெப்ஃரஷ் செய்து கொண்டு வந்தவள்.,

வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள்,

பின்பு அன்று இரவுக்கு என கொஞ்சமாக சாதம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

வந்து இந்த ஒரு வாரத்திற்குள் ஒரு நேரம் கூட சோறு உண்ணாதது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

    அவசரத்துக்கு சாதம், ரசம் கூட்டு செய்யலாம் என்று நினைத்து, சமைக்க தயாராகும் போதே அவனும் ரெஃபரஷ் ஆகி வந்தவன்.,

       “ஹலோ மேடம் ஒருநாள் உங்க சாப்பாடு கொடுங்க., நாளைல இருந்து நானும் திங்ஸ் வாங்கி தரேன்., ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்”, என்று சொன்னான்.

   “ஹலோ நான் எல்லாத்துக்கும் சமைச்சு கொடுக்க வரலை”, என்று சொன்னாள்.

   “உங்களை தனியா சமைக்க சொல்லல மேடம்., நானும் சேர்ந்து செய்றேன் ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சிக்கலாம்”, என்று சொன்னான்.

   அவனைப் பார்த்து முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.