தாத்தா தான்., “ஏண்டா இப்படி எல்லாம் பிரிச்சு பேசுற”, என்று கோபப்பட்டார்.

    பின்பு “எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசலாம்., பேசாம  கிளம்புங்க போங்க”, என்று சொல்லி அவர்களுக்குள் பேசி முடிவு செய்து வீட்டிற்கு கிளம்பினர்.

  ஊருக்கு சென்ற  நான்கு நாட்களில் வினித்திருக்கும் முகேஷ் க்கும் மெஸேஜ் செய்ய.,

    அவர்கள் தங்கள் ஃப்ரீயான நேரத்தை பார்த்து  அவளை அழைத்தனர்.

    இவளோ “முக்கிய விஷயம் மாம்ஸ்., உங்க அப்பா கிட்ட பேசணும்., உங்க தாத்தா கிட்ட பேசணும்., நேர்ல பேசலாமா, இல்ல கான்பரன்ஸ் காலா”, என்று கேட்டாள்.

   “கேட்டு சொல்றேன்”, என்று மட்டுமே அவர்கள் பதில் அளித்தனர்.

பின்பு வீட்டில் கேட்டுவிட்டு சொல்ல., “தாத்தாவும் முகேஷ் ன் அப்பாவும் சென்னை வர வேண்டிய வேலை இருப்பதால்., வரும் போது பேசிக் கொள்ளலாம்”, என்று சொன்னார்கள்.

    சொன்னது போலவே இருவரும் ஒரே நாளில் அவளை சந்திக்க வீட்டிற்கு முகேஷ் மற்றும் வினித்தோடு வந்தனர்.

     அவர்கள் இருவரும் இருக்கும் போதே., வினித் முகேஷ் ரெண்டு பேரையும்., “நான் இவங்க கூட தனியா பேசணும்., நீங்க போங்க”, என்று சொன்னவள்.,

     அவர்களிடம் “உங்களுக்கு இங்கிலீஷ் ல் பேச ஓகே தானே”, என்று கேட்டு விட்டு தான் சொல்ல நினைத்ததை ஆங்கிலத்தில் சொல்லி முடித்து இருந்தாள்.

    அதைக் கேட்ட இருவரும் தான் அவளை அதிர்வோடு பார்த்து நின்றனர்.,

    “இதுக்கு எல்லாரும் சம்மதிக்கணுமே”, என்று கேட்டனர்.

“சம்மதிக்க வையுங்க, அது உங்க பாடு”, என்று சொன்னவள்.

     “இப்படி எழுதினீங்கன்னா, நான் கையெழுத்து போடுவேன்”, என்று மட்டும் சொன்னாள்.

அவர்கள் சரி என்று சொல்லிவிட்டு சென்றிருந்தனர்.

     அது போலவே 10 நாளில் ரெஜிஸ்ட்ரேஷன் இருக்க, முகேஷ் இவளை வந்து அழைத்துக் கொண்டு கொச்சின் சென்றான்.

   அங்கு இவர்களை அழைக்க வினித் ஏர்போர்ட் வந்திருந்தான்.

     அவன் தான், “குட்டி நீ வளர்ந்துட்டியா குட்டி”, என்று கேட்டான்.

  அவளோ சிரித்துக்கொண்டே, “இப்படித்தான் மாம்ஸ் சொல்லுவ, அப்புறம் நீ வளரலைன்னு சொல்லுவ”, என்று சொல்லி விட்டாள்.

    இருவரும் சற்று அமைதியாக இருப்பது போல தோன்றியது.,

நிச்சயமாக இவள் சொன்ன விஷயம் தெரிந்திருக்கும்., அனைவருக்குமே தெரியும், அவர்கள் சம்மதித்த பிறகு தான் ரெஜிஸ்ட்ரேஷன் தேதி குறிக்கப்பட்டது.,

   இவள் வேறு ஒன்றும் சொல்லவில்லை ,  ‘அப்பா வழி சொத்தை வினித் பேரிலும்., அம்மா வழி மருத்துவத்துறையில் உள்ள பங்கு அனைத்தும் முகேஷ் பெயரிலும் மாற்ற பத்திரங்கள் தயார் செய்ய வேண்டும் என்றும்., அப்படி செய்தால் மட்டுமே கையெழுத்து போடுவேன்’, என்றும் சொல்லியிருந்தாள்.

    அதற்கு தான் மற்றவர்கள் சம்மதிக்க வேண்டுமே என்று கேட்டிருந்தனர்.

   அதற்கு இவள் சொன்ன காரணம், “என் அப்பாவிடம் கிடைக்காத அன்பு, அக்கறை, செல்லம் எல்லாம் இந்த ஐந்து வருடங்களில் எனக்கு வினித்திடம் தான் கிடைத்தது.,

அதுபோல அம்மா என்று ஒருவர் இருந்திருந்தால்., எப்படி ஒரு பெண்ணை வளர்த்திருப்பாளோ., அது போல ஒவ்வொரு விஷயத்தையும் கண்காணிப்போடு என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டு., என்மேல் அன்பு அக்கறை செலுத்தியது முகேஷ் தான்., அதனால் என்னுடைய அம்மாவின் பேரில் இருக்கும் பங்குகள் முகேஷ்க்கு தான் செல்ல வேண்டும்”, என்றும் சொல்லியிருந்தாள்.

அதனால் தான் பெரியவர்கள் வேறு பேச்சு பேச முடியாமல் சென்றிருந்தனர். வீட்டில் அதையே சொல்ல வீட்டினர் முதலில் சம்மதிக்க தயங்கினாலும்., பின்பு ஏதோ சரி என்று சம்மதித்தனர்.

கொச்சினில் வந்து பத்திரம் பதிவு செய்த 5 நாட்களில் வினித் துணையுடன் பெங்களூர் சென்றவள்., அங்கு முகேஷ் பெயருக்கு பங்குகளை மாற்றி விட்டு ஏர்போர்ட்டுக்கு வந்தாள்.

    ஒரு பெருமூச்சு விட்டபடி, “இப்ப ஃப்ரீயா இருக்கேன் மாம்ஸ்., ஹாப்பியா இருக்கேன்., யாருக்குள்ளதும் என்கிட்ட கிடையாது., இனி நான் உண்டு, என் வீடு உண்டு., என் வேல உண்டு அவ்வளவுதான்”, என்று சொன்னாள்.

“சீக்கிரம் கல்யாணம் பேசுவோம் ன்னு சொல்லி இருக்காங்க”, என்று சொன்னார்கள்.

    “ஓகே ஓகே அப்படின்னா சீக்கிரம் முடிச்சிடுங்க”, என்று சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க தன் இருப்பிடம் வந்து சேர்ந்தாள்.

    மாதங்கள் நகர்வது போல தெரிந்தாலும்., இப்போதும் அவளை யாரோ கண்காணிப்பது போல அவ்வப்போது தோன்றினாலும்., கண்டுகொள்ளாமல் நகர பழகி இருந்தாள்.

    ‘இனி தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரியும்., இனி யார்  நம்மை கண்காணிக்க போகிறார்கள்’, என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

    இதெல்லாம் நடந்து இரு மாதத்திற்கு பின் அடுத்தடுத்து முகேஷ், வினித் இருவருக்கும் திருமணம் பேசி இருப்பது தெரிந்து வாழ்த்துக்களை தெரிவித்தவள்,  “என்கேஜ்மென்ட் எல்லாம் வர முடியாது, ப்ராஜெக்ட் வொர்க் போயிட்டு இருக்கு, அதனால எதிர்பாக்காதீங்க”, என்று சொல்லிவிட்டாள்.

     ஏற்கனவே அலைச்சல்., டிக்கெட் செலவு என்று எல்லாத்தையும் இனி கணக்கு பார்க்க வேண்டும்.,  கணக்கு பார்த்து தான் செலவு செய்ய வேண்டும்., என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அதையெல்லாம் காரணம் சொல்லாமல் வேலை அதிகம் இருப்பதால் இதற்கெல்லாம் முடியாது என்பது போல சொல்லி வைத்தாள்.

   “நிச்சயமாக கல்யாணத்துக்கு வந்து சேர்ந்து விடுவேன்”, என்று சொல்லி இருந்தாள்.

   அதுபோல முதலில் முகேஷ் திருமணம் முடிவு செய்யப்பட்டிருக்க வினித்தோடு முகேஷ் திருமணத்திற்கு சென்று விட்டு மண்டபத்தில் இருந்து அப்படியே திரும்பி விட்டாள்.

    அவனுக்கு ஒரு வைர மோதிரம் வாங்கி பரிசளித்திருந்தாள்.

    அது போலவே வினித் திருமணத்திற்கும் சென்றவள் அவனுக்கும் ஒரு வைர மோதிரம்  வாங்கி பரிசளித்து இருந்தாள்,  நல்ல படியாக எல்லாம் முடிந்து இரண்டு மாதங்கள் சென்ற நிலையில் தான் அவளுக்கு அலுவலகத்தில் இருந்து ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக பேச அழைக்கப்பட்டிருந்தாள்.

     அவள் சென்று அமர்ந்த உடனே, அவளுடைய கம்பெனி சிஇஓ பேச வந்தார்.

     இவர் எதுக்கு நமக்கு நம்மோடு பேச வருகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.,

    “உங்களுடைய ஜெர்மன் ப்ராஜெக்ட் ரொம்ப பிடிச்சிருக்குன்னு  சொல்லி தான், இந்த ப்ராஜெக்ட் நீங்க பண்ண முடியுமான்னு கேட்டாங்க.,  ஆக்சுவலா இந்த ப்ராஜெக்ட் என்னோட ஃப்ரெண்டோட கம்பெனிக்கு ஆனது., என் பிரண்ட் அங்க இருந்து   வருவான், நீங்க மட்டும் தான் இப்போ கூட போக போறீங்க.,  மத்தபடி அவங்களோட ப்ராஜெக்ட் எல்லாம் பார்க்கிறது யு எஸ் கம்பெனி.,  அவங்க தான் பண்ணி கொடுக்க போறாங்க.,

அவங்க உங்ககிட்ட ப்ராஜெக்ட் ஓட மொத்த எதிர்பார்ப்பு என்னன்னு சொல்லிடுவாங்க., அதுக்கு தகுந்தப்புல ப்ராஜெக்ட் முழுசா முடிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு”, என்று சொன்னார்.

இவளோ, “சார் நான் அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் கிடையாது., நீங்க ஏதோ தப்பா நினைச்சுட்டீங்க, ஜெர்மன் பிராஜெக்ட் ஓகே சார், ஆனா யூஎஸ் ல உள்ளவங்க பண்ணி கொடுக்க போற ப்ராஜெக்ட் கம்பேர் பண்ணும் போது., நான் எப்படி கேன்டில் பண்ணுவேன்னு தெரியல” என்று சொன்னாள்.

    “நீங்களே இப்படி சொன்னா எப்படி”, என்றவன்.

    அதன் பிறகு ப்ராஜெக்ட் பற்றி போன் காலில் அந்த கம்பெனியின் முக்கியஸ்தர் ஒருவர் விளக்க., இவளுக்கு ஓரளவு ப்ராஜெக்ட் எதற்காக என்பது புரிந்தது., பின்பு இவளும் தன்னுடைய ஐடியாக்களை சொல்லவும்.,

    அவர் “இதற்கு தான் மேடம் உங்களை நாங்கள் எதிர்பார்த்தது”, என்று சொன்னார்.

    சிஇஓவும், “இதற்கு தான் உங்களை நான் அனுப்ப முடிவு செய்தது”, என்று சொன்ன பின்பு “சரி” என்று சம்மதித்ததோடு யுஎஸ் கிளம்பும் நடைமுறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

     இதோ இன்று ஃபிளைட்டில் ஏறி சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் தன்னை தானே யோசித்துக் கொண்டாள்.

சிங்கப்பூரில் இருந்து விமானம் மாற வேண்டும்., அதற்கு தகுந்தார் போல் உடை எல்லாம் மாற்றிக் கொண்டு.,

அடுத்த விமானதிற்காக காத்திருந்த போது இவளுக்கு தான்., ‘விதி தன்னை எங்கே இழுத்து செல்கிறது’ என்று யோசித்துக் கொண்டே பையில் இருந்த வடபழனி முருகனை எடுத்துப் பார்த்துக் கொண்டாள்.

    அந்த பிரச்சனைக்கு பிறகு இப்போதெல்லாம் அடிக்கடி முருகனை சென்று பார்த்துவிட்டு, தன் பிரச்சனையெல்லாம் அவரிடம் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அதுவும் இன்று தனியாக பயணம் செய்யும் போது, “என்னோடு கூடவா” என்று அழைத்துக் கொண்டிருந்தாள்.

முருகனும் ‘கூட நான் வர்றேனோ,  இல்லையோ, உனக்கு இனி எல்லாம் நலமே’, என்று எண்ணினாரோ என்னவோ அந்த படத்தில் அவர் சிரித்த வண்ணம் அவளை பார்ப்பது போல் இருந்தது.

மாம்ஸ்  இருவருக்கும் பிளைட் மாறப்போவதை மெசேஜ் செய்திருந்தாள்.

     அங்கு சென்ற பிறகு பேசுவதாக ஒரு மெசேஜ் அவ்வளவு தான்.

    பின்பு ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவள், கண்முடி தன்னிருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.

   இந்த அமெரிக்க பயணம் அவளுக்கு ‘என்ன வைத்திருக்க போகிறது’ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்போடு தன்னுடைய ஃப்ளைட் க்காக காத்திருந்தாள்.

மனதுடன் நடத்தும் போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை.. விழிப்பு நிலையில் மட்டும் அல்ல.. உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதே இல்லை.