10

        கொச்சின் பிளைட்டில் ஏறி  அமர்ந்தவள், ஏதோ யோசனையில் கண் மூடி அமர்ந்திருந்தாள்.

     அருகே ஆள் அமரும் அறவம் உணர்ந்தாள்,  ஆனாலும் கண்ணை திறந்து பார்க்கவில்லை.,

     ஏனென்றால் அங்கிருந்து கிளம்பும் போது தன்னருகில்  வந்து, “அந்த காரில் ஏறு” என்று சொல்லும் போது அவனிடமிருந்து வந்த அதே பர்ப்புயும் மணம்., ஏனோ அவன் தான் அருகில் இருப்பது போல ஒரு உள்ளுணர்வு சொல்ல கண்ணை திறக்காமலேயே அமர்ந்திருந்தாள்.

      திரும்பி ஏதோ பேச முயற்சி செய்தவன்., அவள் அமைதியும் கண் மூடி அமர்ந்திருந்த விதத்தையும் கண்டு விட்டு அமைதியாகி விட்டான்.

       சற்று நேரத்தில் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அறிவிப்பு  வரும் போது கண்ணை திறந்தவள், சீட் பெல்ட் அணிந்து கொண்டு ஜன்னல் வழி வெளியே வேடிக்கை பார்க்க துவங்கினாள்.

   மெது மெதுவாக மேல் ஏறிய விமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புள்ளியாக மாறிக் கொண்டிருந்த கட்டிடங்களை பார்த்திருந்தவள், சற்று நேரத்தில் நீலக் கடலும் நீலவானும் ஒன்று போல தெரிகிறதை பார்த்திருந்தாள்.

     ஏனோ வேறு எதுவும் தோன்றவில்லை., சிறு கற்பனையோ, வேறு எண்ணங்களோ எதுவும் தோன்றாமல் மனம் முழுவதும் நிர்மலமான அமைதி நிறைந்திருந்தது.

       சற்று நேரத்தில் மேக கூட்டத்திற்கு நடுவே விமானம் பறந்து செல்ல., பஞ்சு பொதி போல ஆங்காங்கே கொட்டிக் கிடந்த மேகங்களை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இது போன்ற யாரும் மற்ற இடத்தில் தனிமையில் தனியே இருக்க வேண்டும் போல தோன்றியது.

    பிளைட்டில் கொடுக்கப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளையோ மற்ற எதுவும் தொட மறுத்தவள்., “வேண்டாம்” என்று சொல்லி விட்டு அமர்ந்து கொண்டாள்.

   நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருந்தவளுக்கு, இன்னும் சற்று நேரத்தில் கொச்சினில் தரையிறங்க போகும் அறிவிப்பு வந்தவுடன் மீண்டும் கண்ணை திறந்து  இறங்கும் போதும் தெரியும்  மேகத்தையும், புள்ளியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகும் கட்டிடங்களும், நீல வானத்தை முட்டி நின்ற கடலையுமே பார்த்திருந்தாள்.

    அவளிடம் திரும்பியவன் “என்னோட வர்றீயா”, என்று கேட்டான்.

    அவனை ஏறிட்டு பார்த்தவள், “இடம்  சொல்லுங்க, கண்டுபிடிக்கிறது கஷ்டம் இல்லை தானே, நானே வந்துக்குறேன், ஒன்னும் பிரச்சனை இல்ல.,இடத்தை மட்டும் சொல்லுங்க”, என்று சொன்னாள்.

     அவளை  பார்த்தவன், “உன்னை திருப்பி பிளைட் ஏத்தி விடுற வரைக்கும்., என்னோட பொறுப்பு”, என்று சொன்னான்.

     “நோ தேங்க்ஸ், என்னோட விஷயத்தை எனக்கு பாத்துக்க தெரியும்”, என்று சொல்லி விட்டு இறங்கி நடந்து வர தொடங்கினாள்.

   அவளுக்கு பின்னே நடந்து வந்தவன், ஏர்போர்ட்டுக்கு வெளியே வர, கையை காட்டி அழைக்கவும் வேகமாக இரண்டு ஓட்டுனர்கள் அருகில் வர ஒரு ஓட்டுனரிடம் மலையாளத்தில் அவளை அழைத்துக் கொண்டு வரும்படி சொல்லிவிட்டு.,

  ” இந்த டிரைவர் உன்னை கூட்டிட்டு வருவாரு, வந்துரு”, என்று அவளிடம் தமிழில் சொல்லிவிட்டே சென்றான்.

    வேகமாக முன்னே செல்லும் அவன் முதுகையே வெறித்திருந்தவள், ‘எல்லாம் இவங்க இஷ்டம் தானா’, என்று  நினைத்தவள்.,

     ‘சரி அவங்க பிராப்பர்ட்டி, எழுதி கொடுக்க வந்திருக்கோம், அவங்க இஷ்டம்’ என்று நினைத்துக் கொண்டே அவள் திரும்பிப் போகும் போது,

    அவன் ஒரு நிமிடம்  அமைதியாக செல்லும் அவளை நின்று பார்த்து விட்டே சென்றான்., ‘அவள் முகத்தில் இருந்து எதுவும் படிக்க முடியல,ஏன் ன்னு தெரியல’, என்று நினைத்தான்.

       வினித் நிமலனிடம் பேசியிருந்தான். “இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா எழுதி வாங்கணும்”, என்று கேட்டான்.

   “ஏன் உங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் அவசரப்படலையா”, என்று கேட்டான்.

    “அதற்குத்தான், நான் தாத்தா கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன், ஏன்னா அது அவளுக்கு சேர வேண்டியது., அவங்க அப்பா பேர்ல இருக்குது., அவளுக்கு தான் போகணும், அதை எதுக்கு புடுங்க நினைக்கிறீங்க ன்னு தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்., உங்களுக்குள்ள சொத்து உங்களுக்கு சேர வேண்டியது தான்., அவளுக்கு உள்ளது கிடையாது”, என்றான்.

     “நியாயம் புரிந்தால் சரி., அவளுக்கு சேர வேண்டிய சொத்தையே, அவளோட அப்பா குடும்பமும் அம்மா குடும்பமும் எழுதி வாங்கும் போது., எங்க குடும்பத்துக்கு உரியதை நான் எழுதி வாங்குவதில் தப்பு இல்லையே”, என்று கேட்டான்.

      “தப்பில்ல தான்”, என்று சொன்னவன் மறு பேச்சின்றி போனை வைத்தான்.

     இவளது அமைதிக்கு காரணமே., ‘எத்தனை பேர் என்னென்ன சாபமிட்டார்களோ’, என்ற மன உளைச்சலும்,

     ‘அந்த சாபம் தனக்கு ஏதும் பலிக்குமா’, என்று யோசித்தவள்.

      ‘ஐயோ கல்யாணம் மட்டும் பண்ணிரவே கூடாது, இப்படி ஒரு  லைஃப் வந்து., எனக்கு இந்த பாவம் இதெல்லாம் சேர்த்துட்டு, நான் என்னோட வாழ்க்கையில இதே மாதிரி இன்னொரு ஜீவனை அனாதையாகிட கூடாது வேண்டாம்’, என்று நினைத்தவள்.

    ‘இவர்களின் சாபம்,  அவர்கள் செய்த பாவம்., எல்லாம் சேர்ந்து தான் இப்படி தனியாக நிற்பதற்கு காரணம்’, என்று எண்ணமும் வந்து அவளை கலிவிரக்கம் கொள்ள செய்தது.

    தன்னை நினைத்து தானே வருந்தி கொண்டவளுக்கு., ‘சரி அட்லீஸ்ட் இவங்களோட பிராப்பர்ட்டி எல்லாம் எழுதி கொடுத்ததுக்கு அப்புறமாவது., எல்லாம் சரி ஆகுதான்னு பார்ப்போம்’, என்று நினைத்துக் கொண்டவள்.

    அவசரமாக தன் பையில் வைத்திருக்கும் வடபழனி முருகனின் படத்தை எடுத்து பார்த்தாள்.

    ‘எனக்கு கடவுள் மேல பெருசா நம்பிக்கை இருந்ததில்லை., திவ்யா கூப்பிட்டா என்னை, அதுக்கு தான் உன் கோயிலுக்கு வந்தேன், உன்னை பார்த்து இருக்கேன்., ஆனா அதுல உண்மையான பக்தி இருந்துச்சா ன்னு கேட்டா., எனக்கு தெரியாது,

    ஆனால் திவ்யாவோட நம்பிக்கை, கடவுள் எல்லாம் செய்வார் என்கிற நம்பிக்கை., எனக்கு ஏன் அந்த நம்பிக்கை இல்லாம போச்சுன்னு  தெரியல., ஒருவேளை சின்ன வயசுல இருந்தே  மதர் கிட்ட வளர்ந்ததோட பலனா என்னன்னு தெரியல.,  அப்படியே நான் கிறிஸ்தவ மதத்தையும் நம்பல., ஜீசஸ் ட்ட கூட நான் பிரேயர் பண்ணது கிடையாது., எதுவும் கேட்டது கிடையாது., கேட்டது கிடைக்காதுன்னு எப்ப தெரிஞ்சுதோ அப்பவே கேட்கிறத விட்டுட்டேன்., இப்பவும் எனக்கு  நம்பிக்கை இருக்கா இல்லையான்னு தெரியல.,  ஆனா ஒன்னே ஒன்னு.,  இன்னிக்கு தான் முதல் முதலில் நான் கூப்பிடுறேன்  ன்னு நினைக்கிறேன்., ப்ளீஸ் முருகா எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்., இந்த மனசுல இருக்க வலி இதெல்லாம் இல்லாம நிம்மதியா இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு எனக்கு தா, யாரோட சாபமும் வேண்டாம்.,  யாரோட பலி பாவமும் வேண்டாம்., இப்படியே தனியா இருந்தா கூட பரவால்ல., நிம்மதியா இருக்க விடுவியா அது போதும்., நான் உன்ன நம்புறேன்’., என்று

   திவ்யா கட்டாயப்படுத்தி அவள் கையில் கொடுத்து வைத்திருந்த வடபழனி முருகனின் சிறிய படத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

   வீட்டில் ஒரு விளக்கு மட்டும் தான் ஏற்றுவாள்,

    எந்த கடவுளின் படமும்  கிடையாது.,  அந்த விளக்கேற்றும் பழக்கமும்., வீட்டு வேலைக்கு வரும் மெய்ட் சொல்லிக் கொடுத்தது.

   ‘கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும் என்று ஏனென்றால் விளக்கிலிருந்து வரும் ஒளியில் வீட்டிற்குள் வரும்  நேர்மறை சக்தி வீட்டிற்கு நல்லது’ என்று சொல்லியே இவள் புதிதாக வீடு வாங்கிய பொழுது ஆடிட்டர் வீட்டிலும், வக்கீல் வீட்டிலும் சேர்ந்து இவளுக்கென வாங்கி கொடுத்திருந்த அந்த வெள்ளி விளக்கில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள்.

அதை நினைத்தவளுக்கு ‘நேத்து ஒரு நாள் தானே நான் விளக்கு ஏத்தலை, அதுக்குள்ள ஏன் எனக்கு இவ்வளவு பெரிய கஷ்டம், ஒஒ ஜெர்மன் போகும் போது விளக்கேத்தலையோ’ என்று நினைத்துக் கொண்டவள்., அந்த கடவுளின் படத்தை கையில் வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

     வந்து சேர வேண்டிய இடத்தை கண்ட உடனே பைக்குள் வைத்துக் கொண்டவள் அமைதியாக அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கினாள்.

    ஏர்போர்ட்டில் காரில் ஏறிய உடனே வினித்துக்கு மெசேஜ் செய்திருந்தவள்.,  ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி அவனுக்கு பேசினாள்.,

    “நான் ஜீபே செய்து இருக்கும் அமௌண்டை மட்டும் எனக்கு கேஷ் ஆக கொண்டு வா” என்று சொல்லி இருந்தாள்.

     அவன் “ஏன்” என்று கேட்டான்.

    “நீ கொண்டு வந்து தா” என்று மட்டும் மெஸேஜ் ல் சொல்லிவிட்டு வைத்திருந்தாள்.

    ‘உடை, போக்குவரத்து செலவு, உணவு’ என அனைத்திற்கும் சேர்த்து ஒரு தொகையை கொண்டுவர சொல்லி இருந்தாள்.

     கிட்டத்தட்ட அவள் சம்பளத்தில் அது பாதி பணம், இருந்தாலும் பரவாயில்லை, அடுத்தவர்கள் பணம் தனக்கு தேவையில்லை, என்ற உறுதி மட்டும் அவளிடம் இருந்தது.

    வந்து இறங்கி சற்று நேரத்தில் வினீத் வந்து அவள் அருகில் நின்று கொண்டான்.