4

     அமைதியாக உணவு முடிக்க, பின்பு மதர்க்கு போன் செய்தவர்கள், அவளை லேக் வரை அழைத்து சென்று பின் கொண்டு வந்து விடுவதாக சொன்னார்கள்.

     அதுபோலவே, லேக் அருகில் மூவரும் சேர்ந்து நடக்கும் போது, தர்ஷனா தான் அவ்வப்போது நின்று சுற்றி சுற்றி பார்த்தாள்.

     “என்ன பார்க்கிற” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டனர்.

     “இல்லை யாரோ நம்மள பாத்துக்கிட்டே இருக்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு”, என்று சொன்னாள்.

    “அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீ வித்தியாசமா யோசிக்காத வா”, என்று அழைத்துக் கொண்டு நடந்தனர்.

    “அவளுக்கு ஏதும் வேண்டுமா, வேண்டுமா”, என்று கேட்டனர்.

     “எதுவும் வேண்டாம் வேண்டாம்” என்று சொன்னாள்.

    பிறகு அவர்கள் இருவரும் “டிரஸ் கடைக்கு போலாமா”, என்று கேட்டனர்.

     “எனக்கு நிறைய டிரஸ் இருக்கு, இப்போதைக்கு எதுவும் வேண்டாம்”, என்று சொன்னாள்.

   அவன் இருவரும் “சரி காலேஜ் ஜாயின் பண்றதுக்கு  டூ வீக்ஸ் பிபோர், நீ சென்னை வந்திடனும்., உனக்கு தேவையான ஷாப்பிங் எல்லாம் முடிக்கணும்., சோ கண்டிப்பா வந்துடனும், நாங்க மதர் கிட்ட பேசிட்டு போறோம்”, என்று சொன்னார்கள்.

   இவளோ, “நான் தனியா எப்படி இருக்கிறது?, அது ஒரு மாதிரி இருக்கும், இங்க எனக்கு ஹாஸ்டல்ல ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க, அப்புறம்  மதர் வந்து பார்த்துப்பாங்க, சிஸ்டர் கிட்ட எதுவும் வேணும்னா கேட்பேன், பட் அங்கே வந்து தனியா இருக்கிறது கஷ்டம்”, என்று சொன்னாள்.

    “பயப்பட ஒன்னும் இல்ல, நாங்க உனக்கு பக்கத்து வீட்டை வேணா பார்த்து தரட்டுமா , உனக்கு அப்படி தனியா இருக்கிறது கஷ்டமா இருந்தா, பேசாம எங்க கூடவே தங்கிக்கோ”, என்று சொன்னார்கள்.

அவர்களை திரும்பிப் பார்த்தவள், “அய்யோ நான் தனியாவே இருந்துக்கிறேன், மதர்ட்ட சொல்றேன்”, என்று சொன்னாள்.

அவனும் ,”லூசு குட்டி, அப்படி சொல்லல பார்ப்போம்., உனக்கு நாங்க ஏற்பாடு பண்றோம், அப்படி இல்லாட்டி உனக்கு வீட்டோட ஒரு மெய்ட் ரெடி பண்ணி தாரேன்., துணைக்கு இருக்கிற மாதிரி சரியா., உடனே பயந்துக்காத, ஏன் இப்படி திருட்டு முழி முழிக்கிற, நார்மலா வா”, என்று வினித் சொன்னான்.

அதையே முகேஷும் அமோதிப்பது போல தலையாட்டியவன், அமைதியாக “ஏன் பயப்படுற” என்று கேட்டான்.

அவர்கள் இருவரும் தமிழ் கொஞ்சம் திணறி தான் பேசினார்கள்.

அப்போது தான் இவள் “ஏன் உங்களுக்கு தமிழ் தெரியாதா” என்று கேட்டாள்.

அவர்களோ “இல்ல நாங்க காலேஜ் வந்த இந்த அஞ்சு வருஷமா மட்டும் தான் எங்களுக்கு தமிழ் தெரியும்., இப்போ தான் தமிழ் பேச கத்துக்கிட்டு இருக்கோம்., அதுக்கு முன்னாடி தமிழ் புரியும், ஆனா பேச வராது”, என்று சொன்னார்கள்.

“ஓஹோ” என்றாள்.

இவர்களோ, “உனக்கு என்ன லாங்குவேஜ் தெரியும்”, என்று கேட்டனர்.

“ஸ்கூல்ல இங்கிலீஷ், ஹிந்தி, மட்டும் தான் அப்புறம் தமிழ் பேச தெரியும், வாசிக்க தெரியும், எழுத தெரியும், அது ஸ்கூல்ல படிக்கும் போதே பேசிக்கா தமிழ் கத்துக்கிட்டதால”, என்று சொன்னாள்.

“நீ எப்போ மலையாளம் கன்னடம் கத்துக்க போற”, இருவரும் அவரவர் தாய்மொழியை கத்துக்க சொல்லிக் கேட்டனர்.

இவளோ “நான் எதுக்கு அதெல்லாம் கத்துக்கணும்”, என்றாள்.

வினித்தோ “ஹலோ அதுதான் உன்னோட லாங்குவேஜ்”, என்று சொன்னான்.

“என்னோட லாங்குவேஜா நோ, நோ, என்னோட லாங்குவேஜ் தமிழ்., நான் தமிழ்நாட்டுல தான் வளர்ந்தேன்”, என்று சொன்னாள்.

“மேடம் உங்க அப்பா ஊரு கேரளா, நீ பொறந்தது மட்டும் தான் தமிழ்நாடு, உங்க அப்பா இருந்திருந்தால் நீ மலையாளம் தான் கத்துக்கிட்டு இருந்து இருப்ப”, என்றான்.

“இல்லையே, கண்டிப்பா இல்லையே”, என்று சாதாரணமாக சொன்னாள்.

இருவரும் அப்பாவை ஞாபகப்படுத்தி விட்டோமோ என்று அதிர்வோடு அவளை பார்த்தனர்.

அவளோ “கண்டுக்காதீங்க, கண்டுக்காதீங்க, எட்டு வருஷமா இன்னும் நிறைய பார்த்திருக்கேன்., நிறைய பேர் அப்பா பத்தி கேப்பாங்க, அம்மா பத்தி கேப்பாங்க, ஃபர்ஸ்ட் ஒரு மாதிரி இருந்துச்சு., அப்புறம் போகப்போக பழகிருச்சு, இதுதானே உண்மை., உண்மையை ஏத்துக்கணும் தானே”, என்று சொன்னாள்.

வினித் தான், “குட்டி உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா”, என்றான்.

“ஹலோ, என் பேரு ஒன்னும் குட்டி இல்ல, தர்ஷனா”, என்று சொன்னாள்.

“நான் உன்னை குட்டி ன்னு தான் கூப்பிட போறேன்”, என்று சொன்னவன்,

“உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா, எப்பவாவது தனியா இருக்கோம் அப்படின்னு ஃபீல் பண்ணி இருக்கியா”, என்று கேட்டான்.

“தோணும், சின்னதா இருக்கும் போது நிறைய அழுது இருக்கேன்னு, மதர் சொல்லுவாங்க., அப்புறம் அப்படி பழகிருச்சு., அம்மா போகும் போது எனக்கு விவரம் தெரியாது., ஆனால் அப்பா இருந்தாங்க., அப்பா கூடயே இருந்தேன் அப்புறம் அப்பா போனதுக்கப்புறம் எனக்கு நிஜமாகவே கொஞ்சம் தேடுச்சு., யாராவது ஒருத்தர் இருந்திருக்கலாம்ல அப்படின்னு எல்லாம் தனியே சொல்லி புலம்பி இருக்கேன்., அப்புறம் இங்க ஹாஸ்டல் வந்ததுக்கு அப்புறம் பிரேயர் எல்லாம் பண்ண சொல்லுவாங்க., கடவுள் நீங்க கேட்கிறதெல்லாம் கொடுப்பாங்கன்னு பிரேயரில் சொல்லுவாங்களா.,

அப்ப நான் சின்ன வயசா., விவரம் தெரியாம கடவுள் கிட்ட கேட்டு இருக்கேன்., எனக்கு அப்பாவ மட்டும் திருப்பி கொடுத்துடுறயா? அப்படின்னு எல்லாம் கேட்டு இருக்கேன்., ஆனா ஏன் கடவுள் எனக்கு கொடுக்கல அப்படின்னா யோசிச்சு இருக்கேன்., ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் கிடைக்காது அப்படின்னு தெரியும் போது கடவுள்ட்ட எதுவுமே கேட்குறது இல்லை”, என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே., அவர் அவள் குரல் மாறுபடுவதை உணர்ந்த வினித் அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.

“குட்டி ப்ளீஸ்டா, இதுக்கு மேல இதை பத்தி பேசாத”, என்று சொல்லும் போது அவனுக்கு கண் எல்லாம் கலங்குவது போலவே தோன்றியது.

மற்றொருபுறம் முகேஷ் அவளை கையை கோர்த்துக்கொள்ள., அவனுக்கும் கண் கலங்குவது போல இருந்தது.

அவர்கள் இருவரும் கண்கலங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் முடிவெடுத்தது போல தலையை மட்டும் ஆட்டிக்கொண்டனர்.

பின்பு அவளும் அவர்களிலிருந்து நகன்று வந்தவள், “இன்னைக்கு உங்க கூட வந்தது தப்புன்னு தோணுது, இன்னைக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் எனக்கு கண்ணு கலங்குது”, என்று சொன்னாள்.

முகேஷோ “அழனும் ன்னா மனசு விட்டு அழுதிடனும் பாப்பா., இப்படி எல்லாம் மனசுக்குள்ள எதையும் அடக்கி வைக்க கூடாது., அழனுமா சொல்லு., நாங்க ரெண்டு பேரும் இருக்கிறோம்ல., அழுதுரு”, என்று சொல்லும் போது அவனுக்கு மீண்டும் கண் கலங்குவது போல தான் இருந்தது.

அதன் பிறகு தான் வினித் அவளைக் குட்டி என்று அழைப்பதை வழக்கமாக்கி இருந்தான்.

முகேஷோ அவளை பாப்பா என்று அழைக்க தொடங்கியிருந்தான்.

அன்றே இருவரும் அவளிடம் தங்கள் அழைப்பை உறுதி செய்தனர்.

இவளோ “என் பேரை சொல்லி கூப்பிடனும், இந்த மாதிரி நிக் நேம் வைக்க கூடாது”, என்று சொன்னாள்.

அவர்கள் இருவரும் “இல்லவே இல்லை, இப்படித்தான் கூப்பிடுவோம்”, என்று சொல்லி அவளை சிரிக்க வைத்து கட்டாயப்படுத்தி கடைக்கு கூட்டி சென்றார்கள்.

அவளுக்கு ஒரு மொபைல் வாங்கினர், அவளுக்கென்றே பேன்சி நம்பர் என்று சொல்லக்கூடிய வகையில் எளிதாக இருக்கக்கூடிய எண்ணையும் வாங்கினர்.

அவர்கள் ஐடி கார்டை கொடுத்து போன் நம்பரை வாங்கியவர்கள்., இவளது ஐடி கார்டு எல்லாம் மதரிடம் இருக்க இவர்களுடையதை கொண்டு இவளுக்கு போன் செட் செய்து கொடுத்தனர்.

காரில் வந்தவர்கள் மதரிடம் இவளை ஒப்படைத்து விட்டு, பின்பு மதரிடம் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு அவளை அழைத்து., அருகமர்த்தி எப்படி போன் யூஸ் செய்வது என்று சொல்லிக் கொடுத்து அவளை அங்கேயே விட்டு கிளம்பினார்கள்.

கல்லூரிக்கு இரண்டு வாரம் முன்பே நாங்கள் அழைத்து சென்று விடுவோம் என்பதில் தெளிவாக இருந்தனர்.

அவரோ “சரி நானும் பேசிட்டு சொல்றேன்” என்று சொன்னார்.

“என்ன, எங்க வீட்ல பேச போறீங்களா, பேசுங்க”, என்று சொல்லிவிட்டு சென்றனர்.

மதர் எப்போதும் போல அவருக்கு வரும் அழைப்பில் விஷயத்தை சொல்லி இருந்தார்.

அந்தபுறம் இருந்து வந்த பதிலோ, “விசாரித்துவிட்டு சொல்கிறேன், அதன் பிறகு அனுப்புவதை பற்றி யோசிக்கலாம்”, என்று மட்டுமே பதில் வந்தது.

போன் வாங்கி கொடுத்து சென்ற பிறகு இருவரும் இவளை காலையில் ஒரு தரம் தவறாமல் அழைப்பதுண்டு., பிறகு கல்லூரி முடிந்து அவர்களுக்கு இடைவெளி இருக்கும் நேரத்தில் மீண்டும் அழைத்து என்ன செய்கிறாள் என்ன சாப்பிட்டாள் என்பது போல கேட்பது உண்டு., இடையில் ஒருமுறை வந்தவர்கள் சூட்கேஸ் எல்லாம் வாங்கி வந்து அவளிடம் கொடுத்து.,

“உனக்கு தேவைப்படுற ட்ரெஸ்ஸை மட்டும் சூஸ் பண்ணு, மதர் ஹெல்ப்ப வச்சுட்டு சூஸ் பண்ணி எடுத்து பேக் பண்ணு., மீதி நம்ம வாங்கிக்கலாம்., கொஞ்சம் பழசா இருக்கிறதெல்லாம் இங்கே யாருக்காவது பக்கத்துல இருக்குற இடத்துல கொடுத்துட்டு போயிடலாம்”, என்று சொன்னார்கள்.

மதரிடமும் அதையே சொல்ல, மதரும் சரி என்றார்.

அவர்கள் சொன்னது போலவே அவளை கல்லூரி சேர்ப்பதற்கு எல்லாம் தயார் செய்து விட்டே சென்னை அழைத்து வந்தனர்.