“ஏய் அங்க என்ன முனுமுனுப்பு? சத்தமா சொல்லு” அவள் அதட்ட, அவனோ அண்ணாவை பார்த்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும், அடி முதல் நுனி வரை எல்லாம் சொல்லி முடித்தான் பரத்.
கேட்டவளுக்கு, ‘இவ்ளோதானா?’ என்று தோன்ற, “விளக்கு வைக்க முன்ன வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போ” என்றாள்.
“என்னத்த?” பரத் கேட்டதும், “பணம் தான் பக்கி” என்றாள்.
“என்னந்த? நக்கலா? மூணு லட்சத்தை வூட்டுல வச்சுருக்கியா நீயி?” அவன் நம்பாமல் கேட்க, அவள் அவனை பார்த்த பார்வையில் தன்னால் அவன் மனம் நம்பிக்கை கொண்டது.
“இதுக்கெல்லாம் அலைவீங்களா நீங்க?” என்று வேறு கேட்க, அண்ணாவுக்கு விருப்பும் மறுப்பும் ஒருங்கே எழுந்தது. உதவியை பெறலாமா? வேண்டாமா? என்று குழம்பிய மனநிலையில் அவன் உள்ளுக்குள் தவிக்க, அதை நிலை நிறுத்தவே, “ஆனா, ஒரு கண்டிஷன்” என்றாள் மதி.
இருவரும் கேள்வியாய் கேட்க, “என்னை கட்டிக்கிட்டா சீதனமா ஐஞ்சு லட்சம் கொண்டு வரேன்! ஆசைப்பட்ட குளமும் ஆச்சு, கடன் இல்லாத காசுமாச்சு! எப்படி வசதி?” என்றாள் புருவம் உயர்த்தி.
இப்போது அண்ணாமலை ‘வேண்டாம்’ என்ற முடிவுக்கு நொடியில் வந்துவிட்டான். அதன் வெளிப்பாடாய் அவன் முகம் தெளிந்திருக்க, “போய் அவளை பகல்கனா காண சொல்லுடா” என்றவன், சைக்கிளை ஸ்டான்ட் எடுத்தான்.
“இங்க பாரு பரதா… உன் கூட்டாளிக்கு கொஞ்சமாச்சும் பொழைக்குற வழியை சொல்லிக்குடு” என்றவள், “லட்டு மாறி பொண்ணு, கை நிறைய காசோட வருது! கசக்குதோ அவருக்கு?” என்றாள் அவனை பார்த்துக்கொண்டே.
அவனோ, “ஊசிப்போன லட்டு” என்று முணுமுணுக்க, அது மற்ற இருவருக்குமே கேட்டுவிட, ஒருவன் சிரிப்பை அடக்க, ஒருத்தி சினத்தை விழுங்கினாள்.
“இங்கப்பாரு, உன்னை ஒன்னும் நான் கட்டாயப்படுத்தல! காசு வேணுன்னா கல்யாணம் பண்ணிக்கோ! வேண்டாம்ன்னா விடு” என்றவள், “இங்க எவனும் காச சும்மா குடுக்க மாட்டான், எல்லாரும் பொருளை கேட்டா நான் உன்னை கேட்குறேன்! இதுல என்ன தப்பு?” என்று நியாய பாடம் நடத்த, பரத்தை பார்த்தவன், “சைக்கிள்’ல காத்து இல்ல… நீ போய் அங்க இருக்க ஆளுக்கிட்ட அடிச்சுட்டு நில்லு” என்றான்.
அவன் காட்டியை மரத்தடி கடையை பார்த்த பரத்தோ, “தேவ இல்ல அண்ணா… காத்து இருக்கு” என்றான். அண்ணா அவனை பார்த்துக்கொண்டே நிற்க, அதைக்கண்டவன் புரிந்துக்கொன்டதன் அடையாளமாய், “ஓ… காத்து இல்லையா? நான் போய் அடிக்குறேன், நீ பொறுமையா வா” என்றுவிட்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு நகர்ந்தான்.
அவன் போனதும் அவளை ஓரடி நெருங்கியவன், “அன்னைக்கு தானே அவ்ளோ சொன்னேன்?” என்று கேட்க, “நானும் அன்னைக்கு அவ்ளோ சொன்னேனே” என்றாள் பதிலுக்கு.
“ஏன்டி இப்படி இருக்க?”
“நீ ஏன்டா இப்படி இருக்க?”
“என்கிட்ட அப்படி என்னடி இருக்கு?”
“என்கிட்ட அப்படி என்னடா இல்ல” என்றவள், இடுப்பில் சொருகியிருந்த தாவணி முந்தியை வெடுக்கென உருவி உதறினாள். அதில் தன்னால் ஓரடி பின்னே நகர்ந்தவன், “கல்யாணம் எல்லாம் விளையாட்டு இல்ல புள்ள” என்றான் தீவிரமாய்.
“தெரியும்”
“கல்யாணம் மட்டும் போதுமா? வேற ஒன்னும் வேணாமா?” அவன் விஷமமாய் கேட்க, “ஏன் உனக்கொன்னும் வேணாமா?” என்றாள் இவள் அசராது.
“வேண்டாம்” அவன் பட்டென சொல்ல, “நான் அன்னைக்கே கேட்டேன்ல? எதுவும் பிரச்சனையான்னு!?” என்றவளோ, “எனக்கு தெரிஞ்ச நாட்டு வைத்தியர் ஒருத்தர் இருக்காரு, அமுக்குரா வேர அரைச்சு அரை டம்ளர் குடிச்சா போதும், வாடி வதங்கி கடக்குற செடி கூட வானத்தை பார்த்து விருட்டுன்னு எழுந்துக்கும்ன்னு சொன்னாரு” என்று சொல்ல,
“ச்சீ வாயை மூடுடி” என்றான் அவன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே.
“ம்கும்! நான் ஒன்னும் உன்னை கட்டாயப்படுத்தல… கல்யாணம் பண்ணிக்கோ, காசை சீதனமாய் வாங்கிக்கோ!” என்று சொல்ல, “உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையாடி?” என்றவன், “எனக்கு உன்னை பார்த்தா ஒண்ணுமே தோணாது” என்றான் கடுப்பாக.
“ஆஹான்!” அவள் ‘நம்பிட்டேன்’ என்ற பாவனையில் தலையாட்ட, “உண்மையை தான் சொல்றேன்” என்றான்.
“சரி, நான் ஒரு பாட்டு சொல்றேன்… என்னை நினைச்சுக்கிட்டே கேளு! அதைக்கேட்டும் உனக்கு ஒன்னும் தோனலன்னா அதுக்குமேல நான் உன்னை இம்சிக்க மாட்டேன்!” என்றவள், “ஒருவேளை தோணுச்சுன்னா… என்கிட்ட வா! இந்த கைல காசை புடி, அந்த கைல என்னை புடி!” என்றாள் கண்ணடித்து.
சொன்னவள் அதற்குமேல் நிற்காமல் தன் கைபையை தூக்கிக்கொண்டு அவனை பார்த்த வாக்கில் பின்னோக்கி எட்டு வைத்து வங்கியை நோக்கி போக, “ஏன்டி உன்னை பார்த்தே ஒன்னும் வராதுங்குறேன்… நீ பாட்டை கேட்டா வருங்குற?” என்று அவளை சீண்ட,
அவள் ஒன்றுமே சொல்லாமல், ஒரு மையல் சிரிப்புடன் அவனை பார்த்துக்கொண்டே பின்னே நடந்தாள்.
இவன் தான் இறங்கி வந்து, “என்ன பாட்டு டி?” என்றான் தன்னை விட்டு விலகி செல்பவளிடம்.
அவன் அடக்கிய சிரிப்பை கூட கண்டுக்கொண்டவள், “அண்ணாமலை… அண்ணாமலை…. ஆசைவச்சேன்…” என்றவளுக்கு அதற்குமேல் காற்று தான் வந்தது. சிரித்துக்கொண்டே உல்லாசமாய் வங்கிக்குள் நுழைந்தாள்.
அவள் கண்ணை விட்டு மறைய, அண்ணாமலையின் விரல்கள் தன்னால் மீசையை முறுக்கி விட்டன. அடக்கமுடியாத முறுவல் வேறு அவன் இதழ்களில் உறைந்து நின்றது.
எப்போதும் இரவு படுத்ததும் தூங்கும் அவனுக்கு, அன்று ஒரே குறுகுறுப்பாய் இருக்க, மெல்ல எழுந்து வெளியே திண்ணைக்கு வந்து படுத்தான். இயற்கை காற்று ஏகாந்தத்தில் வருடியபோதும், கொசுக்கள் ரீங்காரமாய் தாலாட்டியபோதும் கூட அவனுக்கு தூக்கம் கண்ணை தொடவில்லை.
‘பெரிய இவ! பாட்டை கேட்டதும் கட்டிக்க தோணுமாம்!’ என்ற நினைத்தவனுக்கு, தன் பட்டன் ஃபோனை எடுப்பதும் வைப்பதுமே வெகு நேரம் வேலையாக இருந்தது. இறுதியில் முடிவெடுத்தவனாய் அதில் என்றோ ஒருநாள் பதிந்து வைத்திருந்த ‘அந்த’ பாட்டை தேடினான்.
இந்த பாடலை முன்பு கேட்டிருக்கிறானோ என்னவோ, ஆனால், எப்போது அவள் இந்த பாட்டை வைத்து அவனை சீண்ட ஆரம்பித்தாளோ அப்போதிருந்து எதேச்சையாய் கூட இந்த பாடலுக்கு செவிமடுப்பதில்லை அவன். கடைசியாய் எப்போது இதை முழுதாய் கேட்டான் என்றுக்கூட நினைவில்லை அவனுக்கு.
பாடலை தேடி எடுத்தவன், இயக்கினான். கே.எஸ். சித்ரா இதமாய் பாட ஆரம்பித்தார். ஆனால், அவனுக்கு என்னவோ நிம்மதியே பாடுவதை போல பிரம்மை உண்டானது.
‘மனசை அடக்குடா மன்னாரு’ என திட்டிக்கொண்டே அவன் கேட்க, பாடல் நடுப்பகுதியை அடைந்திருந்தது.
“நேசம் உள்ள
மாமன் கொஞ்சம்
நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியிலே
விழுந்த முடி என்
மேல் விழட்டுமே”
இதை கேட்டபோது, செந்தில் ‘இதெப்படி ண்ணே எரியும்?’ என்று கேட்பது போல, “அதெப்படி விழுகும்?” என்று தான் அவனுக்கு ஐயம் உண்டானது.
“அழகான
வீரனே… அசகாய
சூரனே… கருப்பான
வண்ணனே… கலிகால
கண்ணனே” என்னவோ அவனை கொஞ்சிக்கொண்டு நிம்மதி பாடுவதை போல இருக்க, மல்லாந்து படுத்த வாக்கில் கால் கால் போட்டு உல்லாசமாய் ஆடிக்கொண்டிருந்தான் அண்ணாமலை.
“பிரம்மனுக்கு
மூடு வந்து உன்னை
படைச்சிட்டான்.
அடி! காமனுக்கு மூடு வந்து
என்னை அனுப்பிட்டான்” படக்கென எழுந்துக்கொண்டான் அண்ணாமலை. விரல்கள் தன்னால் ‘பாஸ்’ பட்டனை வேகமாய் அழுத்தியிருந்தது.
மெல்ல எக்கி உள்ளே படுத்திருந்தவர்களை பார்த்தான். சரியாக ஐயப்பன் அப்போது உருண்டுப்படுக்க, ‘பாட்டை கேட்டுருப்பானோ?’ என்று தோன்றியது. மீண்டும் எட்டிப்பார்த்தான். நால்வரிடமும் அசைவில்லை. ‘உப்ப்ப்’ என மூச்சுவிட்டு அமர்ந்தவன், ஜன்னல் திட்டில் சொருகி வைத்திருந்த ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு, பாட்டை ‘ப்ளே’ செய்தான்.
“சாமிக்குந்தான்
கருணை வந்து அள்ளிக்
கொடுத்துட்டான்
நான் தாவணிக்கு வந்த நேரம்
உன்னை அனுப்பிட்டான்”
‘அள்ளிக்குடுத்தானா?’ தன்னை மீறி வெட்கம், கன்னசதையை இறுக வைத்தது. சட்டென அவள் உருவம் அவன் கண் முன்னே அச்சு அசலாய் வந்து நிற்க, அள்ளி குடுத்ததை தன்னை போல ஆராய தோன்றியது அவனுக்கு.
கண்ணை விட்டு மறையாத அவள் உருவத்தை அவன் அக்குவேறு ஆணிவேறாய் அடக்கமாட்டாமல் அலச,
அத்தனை வரிகளுக்கும் சந்தேகம் வந்தவனுக்கு இந்த வரியில் சந்தேகத்தில் ‘ச’ கூட வரவில்லை. குப்பென வியர்த்தது. என்னவோ எங்கெங்கோ எண்ணம் அலைபாய, சிலிர்த்துக்கொண்டு நிற்கும் உடலை அவளை நினைத்தபடியே அவன் ஆச்சர்யமாய் வருடிக்கொள்ள,
“உலுக்கித்தான்
பறிக்கணும் உதிராது
மாங்கனி” என்று வந்ததும் வெடுக்கென காதில் இருந்ததை உருவிப்போட்டான். சுறுசுறுவென என்னவோ அவன் உடலுக்குள் ஏறியது. உச்சி முடி முதல் உள்ளங்கால் வரை குறுகுறுக்க, காதில் கேட்ட வார்த்தைகளுக்கெல்லாம் வேறு வேறாக மூளை அர்த்தம் சொல்ல, அது கொடுக்கும் அனர்த்தம் தாங்காது, விடியும் வரை குப்புற படுத்து கிடந்தவனுக்கு கல்யாண ஆசை வந்ததோ இல்லையோ? அவளிடம் வரவே வராது என்று அவன் வீராப்பாய் சொன்ன ஆசைகள் எல்லாம் அணிவகுத்து வந்தது.