23

‘சிவபிரகாசம் வழக்குரைஞர்’ என பெயரிட்ட அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்தனர் அண்ணாமலையும் நிம்மதியும்.

அவள் கொடுத்த காகிதங்களை கையில் வைத்து புரட்டிக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தையே இருவரும் எதிர்ப்பார்ப்போடு நோக்க, தன் மூக்கு கண்ணாடியை சரிசெய்தவர், “இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்றீங்க?” என்றார்.

‘எதாவது செய்ய வேண்டும்’ என்று தான் இவரிடம் வந்தது. ஆனால் இவரோ ‘என்ன செய்யணும்?’ என்று கேட்க அண்ணாமலைக்கு அதிருப்தி ஆனது. அதை அவன் முகம் காட்டிக்கொடுக்க, அருகே இருந்த மதி, “சார், ஏற்கனவே fssaiல புகார் குடுத்து ரெய்ட் நடந்துச்சு, ஆனா அங்க எந்த தப்பும் இல்லன்னு ரிப்போர்ட் குடுத்துட்டாங்க” என்று சொல்ல, “அப்புறம் என்ன? அதான் அங்க ஒன்னும் இல்லையே” என்றார் வக்கீல்.

“சார்… அங்க பிரச்சனை இருக்கு சார். அங்க குடுக்குற கறி நாள்பட்டது தான். இவங்க ரெயிட் வந்தவங்களை லஞ்சம் குடுத்து ரிப்போர்ட் எழுத வச்சுருக்கலாம். வாய்ப்பிருக்கு” என்று நிம்மதி சொல்ல, “இதெல்லாம் எல்லா பக்கமும் நடக்குறது தானே ம்மா” என்றார் அவர் அசட்டையாய்.

அண்ணாமலைக்கு பொறுமை இல்லை. இவர் சரிபட்டு வர மாட்டார் என்று தோன்றிவிட்டது. ‘போலாமா?’ என்பது போல நிம்மதியை பார்த்தான். அவளுக்குமே ‘இது தேறாது’ என்ற எண்ணம் வந்திருக்க, இருந்தாலும் பேசிப்பார்க்கலாம் என்று, “சார், அவங்க மேல கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போடணும் சார். அவங்கக்கிட்ட வாங்கின உணவு பொருள் தரமா இல்லாததால பன்னிரண்டு பேருக்கு உடல்நிலை கெட்டுருச்சு. அதுக்கு அவங்க பதில் சொல்லணும்” என்றாள்.

அவள் சொன்னபின்பும் வக்கீலுக்கு இந்த கேசில் எந்தவித ஆர்வமும் இல்லை.

“பெரிய இடத்து பிரச்சனை எல்லாம் எதுக்கும்மா?” என்றார்.

“சரி கிளம்புவோம் மதி, வேற வக்கீல் பாத்துக்கலாம்” என்ற அண்ணாமலை எழுந்துவிட, “அட இருங்க சார், ஏதோ உங்க நல்லதுக்கு தான் வேண்டான்னு சொன்னேன். இப்ப என்ன? கேஸ் போடணுமா? போட்டுடலாம்!” என்றவர் அதற்க்கான வழிமுறைகளை செய்தார்.

***

‘டேஸ்ட் பட்ஸ்’ ஆபிஸ் அறையில் கையில் காகிதம் ஒன்றை வைத்துக்கொண்டு கோவமாக அமர்ந்திருந்தார் மேனேஜர் சைலேஷ். நிம்மதியும் அண்ணாமலையும் தொடுத்த வழக்கின் விசாரணைக்கு வர சொல்லி நோட்டிஸ் வந்திருந்தது.

fssai ரெயிட் வந்ததிலேயே சைலேஷ் தன் சமநிலையை இழந்திருந்தார். ‘என்ன தைரியம் அவர்களுக்கு?’ என்ற ஆத்திரம் இருந்தது. எப்படியோ காசை கொடுத்து சரிகட்டிவிட்டார். இது இதோடு போகட்டும், மேற்கொண்டு தான் எதுவும் செய்யப்போய் விஷயம் பெரிதாகிவிட்டால்!? என்ற ஐயத்தில் சற்று அமைதி காத்தார்.

ஆனால் இப்போது நுகர்வோர் ஆணையத்தில் விசாரணைக்கு வர சொல்லி கடிதம் வர அவர் ஆத்திரம் மேலெழும்பியது.  சரியாக அந்நேரம் அவர் எண்ணுக்கு அவர் எதிர்ப்பார்த்திருந்த அழைப்பும் வர, சிறு படபடப்புடன் ‘ஹலோ மேடம்’ என்றார்.

மறுமுனையில் ‘டேஸ்ட் பட்ஸ்’ஸின் உரிமையாளர் கௌசல்யா பாலகிருஷ்ணன் கோவமாக ஆரம்பித்தாள்.

“என்ன நடக்குது மிஸ்டர் சைலேஷ்? புது பிரான்ச். உங்க மேல இருந்த நம்பிக்கைல நிர்வாகத்தை கொடுத்தேன். ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லையே ரெயிட், இப்போ கோர்ட்ல இருந்து சம்மன். என்ன பண்றீங்க நீங்க?” என்றாள் அவள்.

சைலேஷுக்கு வந்தது போலவே உரிமையாளர் என்ற முறையில் கௌசல்யாவுக்கும் கடிதம் போயிருந்தது.

“மேடம்… அது…!” தயங்கினார் அவர்.

“என்ன மேடம்!? எங்கயோ ஏசி’ல உட்காந்து இருக்கவளுக்கு இங்க நடக்கிறது என்ன தெரியப்போகுதுன்னு நினைக்குறீங்களோ? ‘டேஸ்ட் பட்ஸ்’ங்குறது வெறும் கடை தான் உங்களுக்கு, ஆனா எனக்கு… அது ‘இமோஷன்’, என்னோட ‘அடையாளம்’. அதை காலி பண்ற மாறி ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் என்னோட இன்னொரு ஃபேஸ் நீங்க பாக்க வேண்டி வரும் மிஸ்டர் சைலேஷ்”

கௌசல்யாவின் பேச்சில் பதிலே வரவில்லை சைலேஷிற்கு.

“என்ன செய்வீங்களோ தெரியாது.  இந்த இஸ்ஸு வெளில கடுகளவு கூட வரக்கூடாது. அதையும் மீறி வந்துச்சு…” என்று நிறுத்தியவள், “எல்லா பழியையும் உங்கமேல திருப்பிட்டு வேற ஒரு மேனேஜர் வச்சு என் கடையை நான் நடத்திக்குவேன்!” என்றாள் உறுதியாய்.

“ஐயோ மேம்?!” அவர் பதற, “தமிழ்நாடு முழுக்க நம்ம பிரான்சஸ் இருக்கு, கூடிய சீக்கிரம் இந்தியா முழுக்க கொண்டு வரணும். அதுக்கு ‘பேர்’ கெடாம இருக்கிறது ரொம்ப முக்கியம். இன்னொரு முறை என்னை உங்ககிட்ட இப்படி பேச வைக்காதீங்க! அப்படி ஒன்னு நடந்தா, யூ ஆர் ஹெல்ப்லெஸ்” என்றவள்,

“என்ன சைலேஷ் சார், நான் மிரட்டுறேன்னு தோணுதா?” என்று கேட்டதும், “இல்ல… இல்ல மேம்” என்று அவர் சொல்ல, “மிரட்டுறேன் தான். இட்ஸ் அன் ஓபன் த்ரெட்!” என்றாள் திமிராக.

“பை த என்ட் ஆப் திஸ் மந்த், அங்க வருவேன்! அதுக்குள்ள இப்படி ஒரு விஷயம் ஆரம்பிச்ச சுவடு கூட தெரிய கூடாது! மைன்ட் இட்” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

சைலேஷ் ஆரம்ப காலம் முதல் ‘டேஸ்ட் பட்ஸ்’ஸில் வேலையில் இருப்பவர். இதுவரை, ‘சார்’ என்பதை தாண்டி குரல் கூட அவரிடம் உயர பேசியதில்லை கௌசல்யா. இப்போது மரியாதையாக இந்த அளவு அவள் திட்ட காரணமான ஆட்கள் மீது கொலைவெறி கூட உண்டானது.

என்ன செய்து இதை மூடலாம்!? என அவர் சிந்தனையில் இருக்க, அவர் அறையின் கதவு தட்டப்பட்டது.  வெளியே வீரப்பன் உள்ளே வர அனுமதி கேட்டு நின்றிருந்தான்.

டெலிவரி பாய் நிற்பதை பார்த்து ‘வா’ என்றவர், “என்ன?” என்றார் தன் கோவத்தை மறைத்து. அவரிடம் ‘அட்வான்ஸ் கேட்டு எழுதிய’ லெட்டரை நீட்ட, “இப்போதான் சம்பளம் வாங்குன, அதுக்குள்ள அட்வான்ஸா?” என முறைக்க, “இல்ல சார், தாத்தாக்கு உடம்பு முடியல, அதான்” என்றான் தயக்கமாய்.

‘காரணம் மட்டும் கிடைச்சுடும்’ சத்தமாக முனகியவர், அந்த லெட்டரில் கையெழுத்து வைக்க, அதில் ‘வீரப்பன், கீழ்வேளூர்’ என இருந்ததை கண்டு புருவம் சுருக்கினார்.

“நீ கீவளூரா?” அவர் கேட்க, “ஆமா சார்” என்றான் வீரப்பன்.

“அங்க அண்ணாமலையை தெரியுமா உனக்கு?” அவர் கேட்டதும், “தெரியுமே சார், இனி நம்ம கடை பக்கம் வரக்கூடாதுன்னு மிரட்டி விட்ருக்கேன்” என்றான் அவன்.

தெரியும் என்றதோடு மிரட்டியும் விட்டதாக அவன் சொல்ல, நிமிர்ந்து அமர்ந்தார் சைலேஷ்.

“எப்போ மிரட்டுன?”

“நம்ம கடைக்கு ரெயிட் வந்தானுங்கள்ள? அப்போவே!” வீரப்பன் சொல்ல, “ஓ” என்றவர் சில நிமிடங்கள் யோசித்து, பின் அவன் கொடுத்த லெட்டரை கசக்கி வீசினார்.

அவன் “சார்” என பதற, அதை கண்டுக்கொள்ளாமல் தன் மேசை டிராயரில் இருந்து ஒரு கட்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினார் சைலேஷ்.

முன்னை விட பதறியவன், “சார், எதுக்கு?” என தயங்க, “புடி, தாத்தாக்கு ட்ரீட்மென்ட் பாரு” என வலுக்கட்டாயமாக திணித்தார். அவன் சம்பளத்தில் முக்கால்வாசி இருக்கும் என தோன்றியது வீரப்பனுக்கு.

“இத கடனா எல்லாம் குடுக்கல. திருப்பி கொடுக்கணும்ன்னு அவசியம் இல்ல” என்று வேறு அவர் சொல்ல, வீரப்பனுக்கு ஏதோ சரியில்லாமல் பட்டது.

“இல்ல சார், எனக்கு இவ்ளோ தேவப்படல. ரெண்டாயிரம் போதும்” என்று அவன் மறுக்க, “அட உள்ளே வை மொதோ!” என்றவர், “எனக்கு ஒரு உதவி பண்ணனும் நீ” என்றார்.

“என்ன சார் பண்ணனும்?!” அவன் கேட்டதும், சம்மன்’னை எடுத்து அவனிடம் கொடுத்தார். தமிழில் இருந்ததை கொஞ்சம் மெதுவாகவே அவன் படித்து முடிக்க இவர் பொறுமை காத்தார்.

“எதுக்கு சார் கேஸ் போட்ருக்கான் அவன்!?” வீரப்பன் கோவமாக கேட்க, “அவன் வியாபாரத்தை நம்ம கெடுக்குறோம்ன்னு நினைக்குறான் போல” என்றார் அவர்.

அவன் கடுகடுத்த முகத்தோடு அந்த காகிதத்தை பார்த்துக்கொண்டு நிற்க, “அவன்கிட்ட பேசிப்பார்க்க முடியுமா? இதை ‘வித்ட்ரா’ பண்ணசொல்லி?” என்று கேட்க, “திருப்பி வாங்குறதா? வாய்ப்பு கம்மி தான் சார்” உடனே சொன்னான் வீரப்பன்.

“எப்படி சொல்ற?” அவர் கேட்க, “அவனுக்கு இப்படி கேஸ் போடுற அளவு எல்லாம் மூளை வேலை செய்யாது சார், இங்க வந்து ரகளை பண்ண தான் மூளை வேலை சொல்லும்” என்றவன், “இது அவன் பொண்டாட்டி வேலையா இருக்கும்!” என்றான் உறுதியாய்.

“அவ சொல்றதை இவன் செய்றான். இவனை கூட பேசி சரி கட்ட முயற்சி பண்ணலாம். ஆனா, அவ இருக்காளே! ம்ஹும்! அகம் புடிச்சவ” என்றவன் வார்த்தைகளில் மட்டும் தான் வெறுப்பும் துளிர் கோவமும், முகம் கனிந்திருந்தது.

துல்லியமாய் கவனித்தவர், “யார் அவன் பொண்டாட்டி?” என்றார்.

சொல்ல வந்தவன், ஒரு நொடி நிறுத்தி, “அதோ!” என்றான். தன் மேஜை மீது அவன் காட்டிய இடத்தில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை கையில் எடுத்து பார்த்தவர், அதில் ஒட்டியிருந்த லேபிலை படித்தார்.

‘நிம்மதி பிஸ்கட்ஸ்’

***

“கடை திறக்கலாம்ன்னு முடிவு பண்ணதே பெருசு, இதுல நீங்க வேற ஏன் மாமா குறுக்க பூந்து ஆட்டைய கலைக்குறீங்க?” கை கால் முகம் கழுவிக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்ததும் தாஸிடம் பேச்சை ஆரம்பித்தான் நந்தா.

இரவு கடை முடித்து அப்போது தான் ஐவரும் வந்திருந்தனர். அண்ணாமலையின் வீட்டில் தான் அன்று அனைவருக்கும் இரவு உணவு.  மணி பத்தை தாண்டி விட்டாலும், எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம் என்று சொல்லி நிம்மதியும் தேன்மொழியும் காத்திருக்க, இப்போது உணவு பாத்திரங்களை கூடத்தில் கொண்டு வந்து அடுக்கிக்கொண்டிருந்தாள் தேன்மொழி.

கடையில் மீதமான சிக்கன் பக்கோடாவுடன் சேர்த்து சாதம், குழம்பு, பொரியல் என பரிமாறியவள் தனக்கும் போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

“டேய் தம்பி…! நல்லா போய்க்கிட்டு இருந்த கடையை இப்படி மாசகணக்கா மூடி போட்டீங்க… மறுபடி அதை திறக்கும்போது நல்லநேரம், காலம், போக்கு…வரத்து… எல்லாம் பார்த்து சின்னதா ஒரு பூசையை போட்டு தான் தொடங்கணும். அப்போதான் எப்பையிமே கடை மூடுற நிலையே வராம இருக்கும்” என்றவர், “அப்பளம் இருக்காமா?” என்றார் தேன்மொழியிடம்.

“ஓ, பூசை எல்லாம் போட்டு திறந்தா கடையை மூட முடியாதா?” என்றான் சேகர் இடக்காக.

“பின்ன… ஒரு பவர் வரும்ல!?” என்ற தாஸ், “கண்ணு, ஒரு அப்பளம் குடும்மா” என்று சொல்ல, “அப்ப பகலு முடிஞ்சு நைட்டுக்கு கடையடைக்கனுமே! மூட முடியாம போய்ட்டா என்ன செய்ய!?” என்று பரதன் நக்கலாய் கேட்டிட, தாஸ் முறைக்க, “டேய்…ஈஈ” என்றாள் நிம்மதி.

உடனே, “ஐயோ… அண்ணிங்… நீங்க இருக்கீங்கன்னு பாக்கலிங்… மன்னிச்சுக்கங்” என்று சம்மனமிட்ட வாக்கில் பாதி குனிந்து கைகட்டி பரதன் சொல்ல, அண்ணாமலை சத்தமின்றி குலுங்கினான். மற்றவர்கள் பல் தெரிய சிரிக்க, “ஓய் என்னடா?” என்றாள் நிம்மதி முறைப்பாக.

பரதன் சிரித்துக்கொண்டே ஒன்றும் பேசவில்லை.

“எல்லாருக்கும் பயம் விட்டு போச்சு போல” என்ற நிம்மதி, அண்ணாமலையை தான் முறைத்தாள். அவன் இவள் பக்கம் பார்த்தால் தானே!!!

“ஒரு அப்பளம் கொடும்மா!” தாஸ் தான் மீண்டும் கேட்டார். அப்போதும் அவருக்கு கிடைக்காமல் போக, “அம்மாடி” என்று சத்தமாக அவர் அழைக்க, தேன்மொழியின் மீது எல்லோர் பார்வையும் விழுந்தது. ஆனால், அவளோ இமைக்காமல் பரதனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். கையில் அள்ளிய சோறு வாயை சேராமல் கையிலேயே இருந்தது. சிலை போல தான் இருந்தாள் அவள்.

இப்போது எல்லோரும் நமட்டு சிரிப்புடன் பரதனை பார்க்க, நெளிந்தான் அவன்.  புதிதான உணர்வில் அவஸ்தையாக இருந்தது.

‘இவ எதுக்கு இப்படி பாக்குறா?’ என்று கோவம் போல உள்ளுக்குள் திட்டினான் அவளை.

அவள் முழங்கையில் இடித்த நிம்மதி, “போதுமா?” என்றாள் சத்தமாய். சட்டேன தெளிந்தவள், “என்ன அக்கா?” என்று கேட்க, “பார்த்தது போதுமான்னு கேட்டேன்” என்று சிரிக்க, “அது…அக்…அக்கா” வெகுவாய் அவள் தடுமாற, இங்கே பரதனுக்கு தலையை நிமிர்த்த முடியவில்லை. கூச்சமாய் போனது.