Advertisement

UD:14

  “கதவ தெர டி கழுத…” என்று சிறிது நேரமாக பூங்குழலியின் அறைக் கதவை தட்டி கொண்டிருந்தார் வசுந்தரா…

 

“ம்ப்ச்ச்… என்ன ஆத்தா…?” என்று கண்ணை கசக்கியபடி, மெல்லிய குரலில் கேட்டபடி கதவை திறந்து நின்றவளை பார்த்து வசுந்தராவிற்கு, கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது…

 

‘அய்யோ புள்ளைக்கு என்னச்சு… ஏன் சொங்கி போய் இருக்கா…?’ என்று உள்ளுக்குள் பதறியவர்,

 

“என்னாச்சு குழலி… உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா தாயி…?” என்று நெற்றி கழுத்து என்று தொட்டு பார்த்து கேட்டவரின் குரலில் பதற்றம் அப்பட்டமாக தெரிந்தது…

 

காலை கவியழகனுடன் இருந்த நெருக்கம் பூங்குழலியின் மனதில் பூகம்பத்தை விதைத்திருந்தது… அவனை பழிதீர்க்க நினைத்திருக்க உள்ளமோ அவனது வருடலில் மயங்கி நின்றதை பேதையாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை…

 

அதை பற்றி யோசித்து தலைவலி வந்துவிட படுக்கையில் தன்னையும் அறியாது மனசோர்வில் உறங்கி இருந்தாள்… கனிமொழியின் தங்கைக்கு விஷேசம் என்பதால் வசுந்தராவும் செல்லதாயும் அங்கு சென்று விட்டு மாலையே வீடு திரும்பி இருந்தனர்…

 

அடுக்களையில் செய்து வைத்திருந்த உணவுகள் எல்லாம் உண்ணாமல் இருக்கவும், பூங்குழலி எங்கோ ஊர் சுற்ற சென்றுவிட்டாள் என்று கோபம் கொள்ளவும், செல்லதாயி தான்

 

“அந்த சிறுக்கி வூட்டுலதேன் இருக்கும் வசு… அங்குட்டு கனி வூட்டுலதேன் இருந்துச்சு… ஊர் சுத்த போனா இதுங்க ரெண்டும்தேன் சோடி போட்டு சுத்தும் இந்த ஒண்ணு மட்டும் எங்க போயிற போகுது…? அது அறையில இருக்கான்னு பாரு…” என்று சொல்லவும் தான் கதவை தட்ட தொடங்கினார்…

 

அது உள்பக்கம் பூட்டி இருக்கவும் அன்னை சொன்னது போல் வீட்டில் தான் இருக்கிறாள் என்றதும் கதவை பலமுறை தட்ட தொடங்க, அவள் திறப்பேனா என்னும் வகையில்  தூக்கத்தில் இருக்க, கடைசியாக துயில் கலைந்து கதவை திறந்தாள் ஒருவகை வெறுமையுடன்…

 

தன்னை கண்டு பதறிய அன்னையின் முகம் பூங்குழலியை குற்றவுணர்வில் ஆழ்த்தியது, அதனால் அமைதியாக நின்றாள் தலை கவிழ்ந்து…

 

“என்ன தாயி உடம்புக்கு முடியலையா… சுக்கு கஷாயம் போட்டு வரவா…?” என்று கேட்க, தன் தவறுக்கு அன்னையை கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணி, சடுதியில் தன்னை நிலைப்படுத்தி கொண்டவள்,

 

“அய்யய … போ ஆத்தா… அந்த வெஷத்த நீ குடுக்குறதுக்கு நான் மயங்கியே கிடப்பேன் போ…” என்று பழைய குழலியாய் பேச, அதுவரை மகளுக்கு என்னவானதோ என்று பதறியவர் அவள் பழையபடி வாயடிக்கவும்,

 

“அடிங்கு… திமிரு பிடிச்ச கழுத… அது உடம்புக்கு எம்புட்டு நல்லதுன்னுட்டு தெரியாம பேசுத…” என்று அடிக்க கை ஓங்க, அவரிடம் இருந்து தப்பித்தவள் முற்றத்தில் ஓடி சென்று நின்றாள்…

 

“அதுக்கு வெறுமனே தலவலிக்குன்னு படுக்குறதுக்குகெல்லாம் என்னால அதைய குடிக்க முடியாது…” என்று முகத்தை சுருக்கினாள் ஏதோ கசப்பானதை உண்டதாக நினைத்து…

 

“உருப்படியா நல்லத திண்ணு உடம்ப பாத்துக்காம சீக்கு வந்த கோழியாட்டம் தலவலின்னுட்டு படுக்குறத பாரு…” என்று செல்லதாயி சந்தடியில் சிந்து பாட அவரை பார்த்து முறைத்த குழலி,

 

“இங்குட்டு பாரு ஆச்சி… எனக்கு சொகயில்லாம போறதுக்கு காரணமே நீரும், உம்பொண்ணுந்தேன்…. ஒருகுழந்த புள்ளைய போட்டு அம்புட்டு வேல வாங்குன்னா உடம்புக்கு முடியாமத்தேன் போகும்…” என்று வியாக்கியானம் பேச, வசுந்தரா

 

“அடி கழுத, வூட்டுக்கு பொரோஜனமா ஒன்னும் செய்யாம சும்மா திண்ணுபுட்டு ஊர் சுத்துற கழுத, ஒருநாளு ஒருபொழுது வேலைய செஞ்சுபுட்டு என்னசிலுப்பு சிலுத்துக்குற… ஒழுங்கா வாயா மூடிட்டு போய் தெய்க்க குடுத்த இருந்த ரவிக்கைய கனகா வூட்டுல போய் வாங்கியா…” என்று திட்டிவிட்டு அவளுக்கு வேலையை பணிந்தார்…

 

“ம்ம்ம்… அதுக்குதேன் கதவ தட்டுறாப்புல ஒடைச்சீகளோ….” என்று அங்கலாய்க்க,

 

“சும்மா எதுத்து எதுத்து பேசாம சொன்ன வேலைய செய்யுல…” என்று சத்தமிடவும், மோவாயை தோளில் இடித்துவிட்டு,

 

“சும்மா கத்தாதீக… நாபோத்தேன்…” என்றவள் அவர் அடுத்து திட்டும் முன், குடுகுடுவென தன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டு அதில் சாய்ந்து நின்றாள் ஒரு பெருமூச்சுடன்…

 

‘ச்சே… கூறுக்கெட்டவளே… நீ எம்புட்டு வம்புதனம் செஞ்சாலும் எந்த தப்பும் பண்ண மட்டேனுட்டு ஆத்தா நம்பிட்டு இருக்கும்… அதைய எப்பவும் நான் மறக்கவே கூடாது கடவுளே… எங்மனசு அவிகளால எந்த சஞ்சலமும் ஆகாம பார்த்துக்க சாமி…’ என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்தவள்,

 

“இனி அவிக பக்கம் நின்னு பேசவே கூடாது புள்ள… முக்கியமா தொட்டு பேச விடவே கூடாது… இனி அவிக ஏதாச்சும் வம்பு பண்ணா அந்த பெரியவர ஒருவழி பண்ணிறனும்… அதுல அந்த கோட்டிபய எங்பக்கமே வரகூடாது…” என்று முனுமுனுப்புடன் தயாராகி வெளியே வரவும், வசுந்தரா அவளை உண்ண வைத்தார்…

 

அதை பார்த்து குழலி,”ஆத்தான்னா ஆத்தாதேன்…” என்று அவள் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சியவள், அவர் சுதாரித்து இவளை தள்ளி விடும் முன் குழலி அவர் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து சட்டென விலகினாள் அவர் அடியில் இருந்து தப்பிக்க…

 

“கூறுக்கெட்ட சிறுக்கி… ச்சீ…” என்று தன் கன்னத்தை துடைத்துக் கொண்டே அவளை திட்டியவர் அவள் எதையும் கண்டுக்கொள்ளாது உணவுண்ண அமரவும், பாவம் தலைவலி என்று கூறினாளே உண்ணவும் இல்லையே என்று மேற்க்கொண்டு திட்டாது அமைதியாக நகர்ந்து விட்டார் வசுந்தரா…

 

செல்லதாயோ முற்றத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து தன் வெற்றிலையை மென்றபடி திருட்டுத்தனமாக தன் பேத்தியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்…

 

சிறுவயதில் இருந்தே பூங்குழலி மேல் பாசம் அதிகம் அவருக்கு, குட்டி பாவடை சட்டை அணிந்து, இரு காதோரமும் முயல்குட்டி ஜடை போட்டு ஓரிடத்தில் நிற்காமல் ஓடுபவளை இழுத்து பிடித்து மடியில் அமர்த்தி கதை பேசுவார்…

 

ஐந்து நிமிடம் தாக்குப் பிடித்து அமர்பவள் அதற்கு மேல் முடியாமல் சைசாக நழுவி ஓடிவிடுவாள் அவருக்கு போக்கு காட்டி விட்டு… அதையெல்லாம் எண்ணி பார்த்தவர் முகத்தில் அத்தனை புன்னை… பேத்தி எத்தனை வம்பு செய்தாலும் சண்டையிட்டாலும் அவள் மேல் கோபம் கொண்டதில்லை செல்லதாயி… அதே போல் தான் வசுந்தராவும், அடுக்களையில் இருந்து மகளை ரசித்துக் கொண்டு இருந்தார்…

 

தன்னை இரு ஜீவன்கள் கவனிப்பதை கூட கருத்தில் கொள்ளாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தாள் பூங்குழலி… அப்பொழுது வீட்டினில் நுழைந்தாள் கனிமொழி, எப்பொழுதும் போல் ஆர்ப்பாட்டமாக…

 

“வாடி எங்சீம சிங்காரி… என்ன ரொம்ப நேரமா ஒட்டுபுல்லைய காணமேட்டு பார்த்தேன்… வந்துட்ட…” என்ற ஆச்சியை முறைத்தவள்,

 

‘நான் சீம சிங்காரியாம்ல… கிழவிக்கு லொல்லு கூடி போச்சு… நான் சிங்காரிச்சு இவுக பார்த்தாக பாரு… ம்க்கும்…’ என்று மனதில் நொடிந்துக் கொண்டவள் வாயை திறக்கவில்லை…

 

“என்ன டி பார்வ அம்புட்டும் ஒரு தினுசா இருக்கு…?” என்று கண்களை சுருக்கி சந்தேகமாக பார்த்தவரை கண்டு சட்டென இளித்த கனி,

 

“ஒன்னுமில்ல ஆச்சி… சும்மா பாத்தேன்…” என்று சமாளித்தவளுக்கு தெரியும் வாயை திறந்தாள் வசைபாடி காதை ஒருவழி ஆக்கி விடுவாரென்று….

 

செல்லத்தாயி,  “ம்ம்ம்… என்னல இந்த பக்கம்…?”

 

“ஐத்தத்தேன் கூப்பிட்டாக… ரவிக்கைய வாங்கிட்டு வர போகனுமாம்… என்னையும் குழலி போயிவார சொன்னாக…” என்னும் போதே கைகழுவி வந்த குழலி,

 

“என்ன ஆச்சி… சும்மா இம்புட்டு கேள்வி கேட்குத… வேல சொன்னது உம்மவத்தேன்… கேள்விய அங்குட்டு கேளு… “என்றவளின் தோளில் பட்டென்று ஒரு அடி விழுந்தது வசுந்தராவிடமிருந்து…

 

“சும்மா வாயாடதடி கழுத… கெளம்புங்க ரெண்டு பேரும்… வெரசா போய்ட்டு பொழுது சாயறதுக்குள்ள வந்து சேருற வழிய பாருங்க…” என்று அதட்டி மிரட்டி அனுப்பி வைத்தார்…

 

அவர்கள் சென்றதும், செல்லதாயி “சும்மா சும்மா எம்பேத்திய அடிக்காத வசு… அவ இல்லைன்னா வூடு வூடுமாதிரியே இல்ல… இன்னும் கொஞ்ச நாளுதேன் பொறவு அதுக்கு கண்ணாலம்னு ஒன்னு ஆன பின்னாடி நாம என்னத்த பண்ணுவோமோ… ” என்று பெருமூச்சு விட, வசுந்தராவும் அவரது வார்த்தைகளை கேட்டு மகளின் நினைவில் அமர்ந்தார் தாயின் அருகில்… பின் இருவரும் குழலி, கனி இருவரது சேட்டைகளை பற்றி பேசி அவர்களின் நினைவில் மகிழ்ந்திருந்தனர்…

பெண்பிள்ளைகள் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்கு சென்றுவிட்டால் பிறந்த வீட்டில் இருப்பது அவர்களது அழகிய நினைவுகள் மட்டுமே இதுதான் விதியென்பது… இதை உணர்ந்தவர்கள் ஒருவொரு நொடியையும் அனுபவித்து வாழ்வார்கள்… பிறந்த வீட்டை வீட்டு செல்கையில் பெரும் நினைவுகளை சுமக்கும் பெண்களின் வலி பார்ப்பவர் கண்களுக்கு புலப்படுவதில்லை…

 

இருவரும் கைகளை கோர்த்து, ஆட்டியபடி வந்துக் கொண்டிருக்க, கனி “புள்ள… அது வள்ளியக்கா தானே…?” என்று அவர்களுக்கு எதிரில் ஒரு கடையின் வாசலில் நின்றிருந்த பெண்மணியை பார்த்து கேட்க, குழலியும் பார்த்துவிட்டு

 

“ஆமா புள்ள… அவிகத்தேன்…” என்றவள் உதட்டை கடித்து யோசிக்க ஆரம்பித்தாள்…

 

“ஊருக்கு போய்ட்டு வந்துட்டு இருக்காக போல… ஏதாச்சும் பண்ணனும் புள்ள… சும்மா விட கூடாது அவனைய…” என்று கனி நகத்தை கடித்துக் கொண்டு கூற, அதை ‘ஆம்…’ என்று தலையை ஆட்டி ஆமோதித்த குழலி,

 

“வா புள்ள… இன்னும் ரெண்டு நாளைக்கு அவனுக்கு வூட்டுல சோறு போட கூடாது அவன் பொண்டாட்டி…”என்ற தீவிர முகத்துடன் பேசியவள், திரும்பி கனியை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டிவிட்டு, எதிர்புறம் நின்றிருந்த வள்ளியிடம் சென்றாள் வாயெல்லாம் பல்லாக…

 

“என்ன மதினி ஊருக்கு  போயிருந்தீக போல… அதுக்குள்ள வந்துட்டீக… ?”

 

வள்ளி, “ஆமா டி… ஆத்தாவ பாக்க போயிருதேன்… ஆமா நான் திரும்ப எங்வூட்டுக்கு வந்ததுல உனக்கு என்னடி கஷ்டம் வந்துச்சு… அதுக்குள்ள வந்துட்டீகளான்னுட்டு கேக்குத… ?” என்று சந்தேகமாக கேட்க, கனி

 

“என்ன மதினி எங்களுக்கு என்ன வந்துச்சு… நீரு எப்ப வந்து எப்ப போனா எங்களுக்கு என்ன… நாங்க கேட்டதுக்கு காரண உங்வூட்டுகாரருந்தேன்…” என்று கொளுத்தி போட தொடங்கினாள்…

 

“என்னல சொல்லுத…? எம்புருஷன் என்னவே பண்ணுறாரு…?” என்று சந்தேகமும் லேசாக துளிர்ந்த கோபத்தோடும் கேட்க…

 

“அடபாவத்த… அப்ப உங்களுக்கு தெரியாதா…?” என்று அதிர்ச்சி ஆனது போல் முகத்தை காட்டிய குழலி, கனியின் புறம் திரும்பி

 

“பாரு புள்ள… இந்த அக்கா எம்புட்டு நல்லவீக… இந்த அண்ணே இப்படி பொய் சொல்லிட்டு சுத்துதாகனுட்டு…” என்று சோகம் போல் கூற, பொறுமை மெல்ல குறைய தொடங்கியது வள்ளிக்கு…

 

“டி… என்ன பண்ணாகன்னுட்டு சொல்லு புள்ள மொத… “என்று லேசாக கத்தவும், அவர் புறம் திரும்பிய இருவரும் ஒருவரையொருவர் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

 

குழலி, “என்னத்தனுட்டு சொல்லுவேன் மதினி… நேத்து முந்நேத்து பொழுது சாஞ்சு எழு மணி வாக்குல, உங்வூட்ட தாண்டி போனாம் ஒரு ஜோலியா… “என்று நிறுத்த, அதை கனி பிடித்துக் கொண்டாள்

 

“அப்ப உம்ம வீட்டுக்காரரு நல்லா சிக்கு(சாராயம்)  அடிச்சுட்டு மல்லாக்க விழுந்து கிடந்தாரு…”என்று நிறுத்தி வள்ளியின் முகம் காண அது ருத்துர காளியாக மாற்றிக் கொண்டிருந்தது…

 

குழலி, “அதைய பார்த்து எங்களுக்கு சங்கடமா போச்சுக்கா…”என்று முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள, கனி மேலும் தொடர்ந்தாள்…

 

“செரி போய் எழுப்பி வூட்டுக்குள்ளாற போக சொல்லாம்ன்னுட்டு பார்த்தா… அந்த அண்ணே, போதைல “நான் இப்படிதேன் குடிப்பேன்… யாரு என்னய ஒன்னும் பண்ண முடியாது, கேட்கவும் முடியாது…”னுட்டு உளறுராரு… “ஏன்ணே இப்படி  பண்ணுத மதினிக்கு தெரிஞ்சா எம்புட்டு வெசனபடும் தெரியுமா”ன்னுட்டு கேட்டதுக்கு அவகெடக்கா கூறுக்கெட்டவ, என்னய நிம்மதியாவே இருக்க விடமாட்டிகறா… அவளைய கட்டுனபொறவுதேன் எங்நிம்மதியே போச்சுன்”னுட்டு உளறுதாக…” என்று ஏற்ற இறக்கத்தோடு முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கூறவும், வள்ளி

 

“அப்படியா சொன்னாக…” என்று பெரும்மூச்செடுத்து கோபத்தை அடக்கி பல்லை கடித்து கேட்ட சமயம் அங்கு வந்து சேர்ந்தார் வள்ளியின் கணவர்…

 

‘ஆத்தி… இதுங்க ரெண்டும் எங்பொஞ்சாதி கிட்ட என்னத்துக்கு பேசிட்டு இருக்காக… வாழ்க்கைல கும்மி விட்டுறுவாகளே…’என்று மனதில் உதித்த பயத்தில் லேசாக வியர்க்க மனைவியின் அருகில் வந்து சேர்ந்தார்…

 

அவரை பார்த்து கனியும், குழலியும் மனதில் நக்கலாக சிரித்துக் கொள்ள வெளியே முகத்தை பாவமாக வைத்திருந்தனர்… அதை அவதானித்த வள்ளியின் கணவர்,

 

‘இதுங்க மூஞ்சே செரியில்ல… என்னமோ பண்ணியிருக்கு… போச்சு…’ என்று உறுதியாக நம்பியவர், அப்பொழுது தான் மனைவியை பார்த்தவர் உள்ளுக்குள் ஆடி போனார்…

 

இருந்தும் அதை முகத்தில் காட்டாது, “வள்ளி நீ சொன்னதெல்லாம் வாங்கிட்டேன் புள்ள… வூட்டுக்கு போலாம் வா…” என்று அவ்விடம் விட்டு அழைத்து செல்ல முற்படுகையில்,

 

‘ சொட்ட, நேத்து அந்த கனியழகன் கிட்ட எங்களையவே  தப்பா சொல்லுதியா… இன்னைக்கு உனக்கு சங்குதாம்ல…’ என்று எண்ணிக் கொண்டாள் குழலி… பின் வள்ளியின் புறம் திரும்பிய இருவரும்,

 

“செரி மதனி நாங்க கிளம்புதோம்… நாளைக்கு விஷேசத்துக்கு அண்ணணோடு முன்னமே வந்துருக…” என்று விடை பெற்றனர் அவரின் பதிலை கூட எதிர்பார்க்காது…

 

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் வள்ளி அவளது கணவரை ரோட்டில் போட்டு புரட்டிக் கொண்டிருந்தாள் ஆத்திரத்தில்… அதை பார்த்து சிரித்த இருவரும் ஒருமன நிறைவோடு தங்கள் வேலையை பார்க்க சென்றனர்…

 

தங்களை பற்றி கவியழகனிடம் சொல்லியவனை பழி தீர்க்கவே அவர்கள் இது போல் செய்ததற்கு காரணம்… வள்ளியின் கணவர் மது அருந்தியதும் உண்மை அவரின் வீட்டின் முன் விழுந்து கிடந்ததும் உண்மை… ஆனால் அவரை கண்டுக் கொள்ளாது சென்றிருந்தனர் இருவரும்… இன்று அதை பயன்படுத்தி தங்கள் கதையை திரித்து மனைவியிடம் மாத்து(அடி…) வாங்க வைத்தனர் கனியும் குழலியும்…

 

பெண்கள் இருவரும் கைகளை கோர்த்து கதை பேசியபடி சென்றுக்கொண்டிருக்கும் போது, கனி திடீரென

 

“புள்ள… வா நாம இந்த தெரு வழியா போவோம்… ” என்று அவசர படுத்த, குழலிக்கு அவளது திடீர் மாற்றம் என்னென்று புரியவில்லை…

 

“ஏம்ல… என்னாச்சு… இப்படி நேரா போனா என்னவாம்…”

 

“இல்ல நாம இந்த தெரு வழியா போவோம், இங்குட்டு கஸ்தூரி அக்கா பாப்பாவ கொஞ்ச நேரம் கொஞ்சிட்டு போவோம்… ” என்க,

 

“ம்ம்ம்… போலாம்ல ஆனா வூட்டுல தீட்டு வச்சுகிட்டு கொழந்தைய பார்க்க போலாமான்னுட்டு தெரி….” என்று இழுத்து யோசித்தவளின் மூளையும் பார்வையும் நின்றது ஓரிடத்தில்…

 

இவளை எப்படி வேறுவழியில் இழுத்து செல்வது என்று கையை பிசைந்து யோசிக்கையில் தோழியின் மௌனம் அவளை அவள் புறம் திரும்பி பார்க்க செய்ய, குழலியின் சுருங்கிய உக்கிர பார்வை தொலைவில் கோவிலின் முன் குடும்பமாக நின்றிருந்த முருகவேலின் மீது படிந்திருந்ததை கண்டு, ‘கிழிஞ்சுது… இன்னைக்கு பொழுது என்ன வம்ப இழுக்க போவுதாளோ… ‘ என்ற பெருமூச்சு விட,

 

குழலி, “இதுக்குத்தேன் தெரு வழியா போவோம்னுட்டு சொன்னியா புள்ள…?” என்று கேட்கவும் உதட்டை பிதுக்கி ‘ஆம்…’ என்று மண்டையை ஆட்டி வைத்தாள்…

 

“ம்ம்ம் … இவிக எங்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கனும்னுட்டு விதிபுள்ள… பண்ண அநியாயம் அப்படி…” என்றவள் அவள் காதில் ஏதோ சொல்ல, முதலில் கேட்டுக் கொண்டு வந்தவள், இறுதியில் அவள் புறம் திரும்பி

 

“ஏன்புள்ள இந்த வேண்டாத ஜோலி நமக்கு… பேசாம போயிருமோம் டி…” என்று கெஞ்ச,

 

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “உமக்கு நாங்முக்கியமா இல்ல அவிக முக்கியமா…?” என்ற ஒற்றை கேள்வியோடு நிறுத்தியவள் கோவிலை நோக்கி நடக்க தொடங்க ஒரு பெருமூச்சுடன் அவளை பின்தொடரந்தாள் கனி…

 

குழலியும், அவளது அத்தை வசுந்தராவும் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததால், குழலி அவ்வப்போது முருகவேலை வம்பிலுக்கும் போது உடன் துணையாக நிற்பாள்… ஏதேனும் வாக்கு வாதம் பெரிதாக கூடம் என்னும் பொழுது இழுத்து செல்வது தான் அவளது தலையாய கடமை… அதுபோலவே தான் இப்பொழுதும் பலியாடு போல் அவள் பின் சென்றாள் கனிமொழி…

 

கவியழகன் புதிதாக ஒரு புல்லட் வண்டியை வாங்கியிருந்தான்… அதற்கு பூஜை போடவும் இங்கு வந்ததில் இருந்து குடும்பப்போத்தோடு கோவில் கூட சென்றதில்லையே என்று இன்று அனைவருடனும் அங்கு வந்திருந்தான்… பூஜை போட அய்யருக்காக காத்திருப்பதை தான் குழலி பார்த்திருந்தாள்…

 

இவர்களை கண்ட விக்கி, மெல்ல கவியின் காதை கடித்தான், “மாப்ள… உன் சிஸ்டரும் என் சிஸ்டரும் வராங்க…?” என்றதும் வேகமாக பார்வையை சுழல விட்டவனின் விழி வட்டத்தில் இருவரும் விழவும் முகம் புன்னகையை தத்தெடுத்தது…

 

ஆண்கள் இருவரும் அவரவர் துணைகளை களீபரம் செய்துக் கொண்டிருக்க, அவர்களோ அவர்கள் புறம் சிறிது கூட திரும்பாது நேர்பார்வையுடன் வந்து கொண்டிருந்தனர்… அப்பொழுது அவ்வழியாக ஒரு வெள்ளை வேட்டி வர, சரியாக கோவில் முன் அவர்கள் அருகில் அந்த வெள்ளை வேட்டியை மடக்கி பிடித்தாள் குழலி…

 

“என்ன சித்தப்பா… சொகமா இருக்கியளா…?” என்று கேட்கவும் சற்று புருவம் சுருக்கி யோசித்தவர்,

 

“ம்ம்ம்… சுகத்தேன் தாயி… நீர் ரெண்டும் பேரும் இந்நேரத்துல எங்குட்டு இந்த பக்கம்…?”

 

“ஆத்தா ஒருவேல சொல்லுச்சு அதேன் போயிட்டு இருக்கோம்… நீர் என்ன தொலைவா போயிட்டு இருக்கீக போல…?” என்று ஓரகண்ணில் முருகவேலை பார்த்துக்கொண்டே கேட்க, அவரோ குழலியை கண்டதும் கழுத்தையும் பார்வையையும் கோவில் கோபுரத்தின் புறம் திருப்பியிருந்தார்…

 

அதையும் கவனித்தவள் எள்ளலாக ஒரு சிரிப்பை உதிர்த்து, மனதில் ‘இன்னைக்கு உங்களுக்கு கண்டிப்பா பூச உண்டு பெரியவரே கழுத்த திருப்புனா உட்டுருவோமா…?’ என்று எண்ணியவள் வெள்ளை வேட்டியின் புறம் பார்வையை திருப்பினாள்…

 

வெள்ளை வேட்டி, “அது ஒரு ஜோலியா டவுன் வரை போயிட்டு இருக்கேன் தாயி…”

 

“ஓஓஓ… செரி சித்தப்பா பார்த்து பத்தரமா போயிட்டுவாக… இப்ப எல்லாம் களவாணி பயக கூட டாப்பா உடுப்பு போட்டு வெள்ளையும் ஜொல்லையுமா சுத்துராக….” என்றதும்,

 

வெள்ளை வேட்டி, “செரி தாயி…” என்று முடிக்கும் முன், முருகவேல்

 

“ஏய்ய்ய்…. என்ன லந்து பண்ணுறியோ…?” என்று இவளை நோக்கி குரலை உயர்த்தவும், வெள்ளை வேட்டி மனதில் ‘ஓஓஓ இதுக்குதேன் இந்த புள்ள வழிய வந்து விசாரிச்சுதோ… ம்ம்ம்… இனி நமக்கு இங்க என்ன ஜோலி… நடைய கட்டுவோம்… பெரியவருக்கு இது தேவத்தேன்… மனுஷன் நல்லா அனுபவிக்கட்டும்…’ என்று எண்ணியபடி தன் வழியை பார்த்து நடக்க தொடங்கினார்…

 

குழலியோ முருகவேல் தானாக வந்து சிக்கவும், தன் வேலையை காட்ட ஆரம்பித்தாள்… “அடடா… நம்ம பெரியவரு…” என்று இன்ப அதிர்ச்சி ஆவது போல் முக பாவனையில் அவரை நோக்கி சென்றாள்…

 

“ஏய்ய்ய்… என்ன திமிரா…? ஒரு மட்டு மரியாத இல்ல…” என்று எகுற…

 

குழலி மிகவும் இலகுவாக, “என்ன பெரியவரே இப்படி சொல்லிபுட்டீக…? உங்க மரியாதைக்கு என்ன குறைய வச்சு புட்டேன்…?” என்றவள் அங்கிருந்த வண்டியை கண்டு,

 

“துரைக்கு வண்டியெல்லாம் வாங்கி குடுத்து இருக்கீக போல… சந்தோஷம் போங்க…”என்றவள் அவர் பேசும் வாய்ப்பை அளிக்காமல் தானே தொடர்ந்தாள்…

 

“ஆமா பெரியவரே, இதுயாரைய ஏமாத்தி சம்பாதிச்ச காசுல வாங்குனது …?”என்றதில் முருகவேலுக்கும், கவியழகனுக்கும் கோபம் வந்துவிட அவர்கள் வாய் திறக்கும் முன் காயத்ரி

 

“இங்கேரு டி… இது என்ற மவன் சம்பாதியத்துல அவனே வாங்கியது… நானும் போன போகுதுன்னு பொறுத்து போன வாய் கூடிட்டே போகுது… வாய அடக்கு டி…. இல்ல உன் நாக்க ஆஞ்சுபுடுவேன் ஆஞ்சு…” என்று சத்தமிட ஆண்கள் இருவரும் சற்று அமைதி காத்தனர்…

பெண்கள் சண்டையிடும் போது ஆண்கள் குறுக்கே சென்றால் மண்டை உடைவது ஆண்களுக்கு என்பதை அங்க நன்கு தெரிய வைத்திருந்ததால் அமைதியாக வேண்டிய நிலை அங்கு…

 

குழலியோ அது கவியின் தந்தை வாங்கிய வண்டி என்று எண்ணியதால் விலகி நின்று பார்த்தவள் அது அவரது பணம் இல்லை என்றதும் அவள் அறியாமலே அதை வருடிக் கொண்டே காயத்ரி பேசுவதை திமிராக பார்த்தபடி, பூஜைக்காக ஸ்டிரைட் ஸ்டான்டு (straight stand ) போட்டிருந்த வண்டியின் மீது ஏறி அமர்ந்தவள்,

 

“வாய அடக்காட்டி என்ன பண்ணுவீகளாம்…?” என்று திமிராக புருவம் உயர்த்தி கேட்க, காயத்ரி

 

“அடிங்கு கொழுப்பெடுத்தவளே… எறங்குடி எம்மவன் வண்டில இருந்து… கத்திரிக்காய்க்கு கை கால நட்டு வச்ச மாதிரி இருந்துட்டு இம்புட்டு திமிரு பாரு…” என்று சண்டைக்கு நிக்க, விக்கி

 

“டேய் என்னடா இப்படி சண்ட போடுறா… உங்கப்பாவ கலாய்க்குறா… மாப்ள யோசி டா இது ஒர்கவுட் ஆகுமா…? “என்று கிசுகிசுக்க, நண்பனிடம் பதில்லில்லை…

 

அவனது பார்வை மொத்தமும் அவளிடமே… “ஆமா உங்க குடும்பத்துல யாருக்கும் கண்ணே தெரியாத… எம்புட்டு பெரிய உருவமா இருக்குத்தேன் என்னைய போய் கத்திரிக்கான்னு சொல்லுதீக…?” என்று நக்கலடித்தவள் முருகவேல் புறம் திரும்பி, “என்ன பெரியவரே நீர் கட்டிக்கிட்டதும் செரியில்ல பெத்துகிட்டதும் செரியில்ல போல… பாவம்த்தேன் உங்க நிலம…”என்று உச்சுக்கொட்ட, பிபி எகிறி விட்டது முருகவேலுக்கு

 

“ஏய்ய்ய்…”என்று திட்ட வரும் முன் குழலி அவசரமாக,

 

“முருகனுக்கு….” என்று வண்டியை விட்டு குதித்திறங்கி கோவில் கோபுரத்தின் புறம் திரும்பி தலைக்கு மேல் கையை குப்பி உறக்க கத்த, கனி அங்கு நடந்த கூத்தை பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டு இருக்க குழலி கத்தவும் உசாராகி, அவளும்

 

“அரோகரா….”என்று கத்த குடும்பமே இருவரையும் பார்த்து முறைத்தது…

 

முருகவேல் மீண்டும் ஏதோ வாய் திறக்க வர, குழலி “வேலனுக்கு….” என்று கத்த,

 

கனி, “அரோகரா…”என்று எசப்பாட்டாக பாடினாள்…

 

அப்பொழுது அய்யர் வரும், அவரிடம் குழலி “அய்யரே இது பெரியவர் வூட்டு வாரிசோட வண்டி… அதுனால பார்த்து பதமா பெருசா பூஜைய பண்ணிடுங்கோ…” என்றுவிட்டு ராகத்தோடு சொல்லியவள்,  மீண்டும் உரக்க குரலில்,

 

 

குழலியும் கனியும், “முருகனுக்கு… அரோகரா… வேலனுக்கு அரோகரா…” என்று முருகவேலின் பெயரை கொண்டு  கத்த, அவரால் பொது இடத்தில் வைத்து அவளுடன் மல்லுக்கு நின்று தன் மதிப்பை குறைத்துக் கொள்ள முடியவில்லை ஆனால் உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது….

 

அதை அறிந்தே குழலி சில சமையங்களில் பொது இடத்தில் வேண்டும் என்றே அவரை வம்பிலுப்பாள் சற்று அதிகப்படியாக…

 

இப்பொழுதும், அவரது அமைதி அவளுக்கு சாதகமாக, தோழியுடன் இணைந்து, “கந்தனுக்கு வேல் வேல்… முருகனுக்கு வேல் வேல்…” என்று பஜனை போல் பாடினாள் வேண்டுமென்றே…

 

அதற்கு அந்த அய்யரோ, “இது மாரியம்மன் கோவில் மா…” என்க,

 

குழலிக்கு உதவியாக கனி, “அதுனால என்ன அய்யரே… அம்மனோட புள்ள தானே நம்ம முருகரு.. அதுனால எல்லாம் செரியா போச்சு போங்கோ…” என்று தாங்கள் மண்ணை கவ்வாமல் இருக்க பதிலளித்தவள், தோழியின் கையை லேசாக இடித்து சமிக்ஞை தர, அதை புரிந்து கொண்ட குழலியும் பாட்டை பாடியபடியே அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள் கனியுடன்…

 

விக்கி, “டேய்… ரெண்டும் லேசு பட்ட ஆளுங்க இல்ல டா… இந்த விள்ளேஜ் பியூட்டி பயந்த புள்ள ன்னு நினைச்சா டைமிங் ஹெல்ப் பண்ணுது… உன் ஆளு என்னடான்னா உங்கப்பாவ என்னம்மா கலாய்க்குது… சைக்கிள் கேப்புல உனக்கு கண்ணு தெரியலன்னு சொல்லிட்டு போகுது… மாப்ள… நல்லா யோசிச்சுக்கோ…”என்றதும் அவனை ஒரு அர்த்தபார்வை பார்த்தவன் யாரும் கவனியாத வண்ணம் தன்னவள் அமர்ந்த இருக்கையை தடவி பார்த்து ஒரு இதழோர புன்னகையை சிந்தினான் அவளது சேட்டையை எண்ணி…

 

இவன் இங்கு தன்னவள் தன் வண்டியில் முதலில் அமர்ந்த சந்தோஷத்தில் இருக்க, முருகவேலுக்கு குழலியை நினைத்து அத்தனை கோபம் எழுந்தது அவருள், இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதை போலொரு உணர்வு மனதில்…

 

தொடரும்…..

 

 

 

 

 

 

 

Advertisement