Advertisement

அப்பொழுது அவர்களது தோழி ஒருத்தி வருவதை கண்டு பூங்குழலியின் மூளை வேகமாக வேலை செய்ய தொடங்கினாள்…

 

“ஏய் கனி… வெரசா வா…” என்று அவளது கையை பிடித்து இழுத்து கொண்டு ஓடினாள் குட்டி குழலி…

 

“எங்குட்டு புள்ள… அப்ப ஐஸ்…?” என்று பாவமாக இழுக்கவும், பூங்குழலி பதிலேதும் சொல்லாமல் அவர்களது வகுப்பு தோழியின் முன்பு நிற்க வைத்தாள்…

 

அந்த வாண்டோ சோக பதுமையாக தலையை குனிந்துக் கொண்டு வந்திருக்க சட்டென தன் முன் வந்து நின்ற இருவரையும் பார்த்து திருதிருவென விழித்தவள்….

 

“ஆமா உன் புஸ்தகத்த நீ தொலைச்சுட்டியா….?” என்று கனியின் தோளில் கை போட்டு கொண்டு கேட்க, அப்பெண்ணுகோ கண்கள் கலங்கி விட்டது சடுதியில்…

 

வகுப்பில் தன் பையில் இருந்த அவளது புத்தகத்தை விளையாட்டு நேரம் முடிந்து வந்து பார்த்தவளுக்கு அது காணாமல் போயிருப்பது தெரிய வந்தது… ஆசிரியரிடம் கூறினாள் அடிப்பார்களோ என்று பயந்து அமைதியாக அழுதுகொண்டே தன் தோழியிடம் கூறியதை கேட்டு விட்டாள் பூங்குழலி…

 

அதை இப்பொழுது பயன்படுதிக்கொள்ள எண்ணி அவளிடம், “என்ன பதில் சொல்லு புள்ள… இல்ல மிஸ் கிட்ட சொல்லிப்புடுவேன்…”என்று மிரட்டவும் பயந்து போனவள், சிறு தேம்பலுடன் ஆம் என்று சொல்ல, பூங்குழலி

 

“செரி செரி… அழுவாத… நா மிஸ் கிட்ட சொல்ல மாட்டேன்…” என்று தலையை ஆட்டி சொல்லவும் அவளது முகம் சற்று தெளிவாகியாது… பூங்குழலி ஒரு பெரியமனித தோரணையில்,” உனக்கு நான் உதவுதேன்… ஆனா அதுக்கு பதில் நீ எனக்கு  ஒன்னு பண்ணனும்…” என்று கொக்கி போட, கனி ஒன்றும் புரியாமல் பார்க்க, வகுப்பு தோழியோ திருதிருவென விழித்தாள்…

 

“என்ன பாக்குத… உனக்கு உதவட்டுமா இல்ல மிஸ் கிட்ட அடிவாங்குதியா…?” என்று பயம் காட்டவும் அவளது வகுப்பு தோழி, அடிக்கு பயந்து வேகமாக மண்டையை ஆட்டி வைத்தாள்…

 

“ஆங்ங்… செரி செரி… இந்தா…” பைக்குள் இருந்த தன்னுடைய புஸ்தகத்தை எடுத்து அவளிடம் நீட்டினாள்…

 

கனி, “ஏய்ய்ய்… ஆத்தாக்கு தெரிஞ்சா அடிப்பாக புள்ள…” என்று தடுக்க,

 

“நீ செத்தநேரம் அமைதியா இரு புள்ள…”என்று கனியை அடக்கியவள், திரும்பி “இங்கபாரு புள்ள… ரெண்டு நாளைக்கு என் புஸ்தகத்த நீ வச்சுக்கோ… ரெண்டு நாளுக்குள்ள நீ புதுசு வாங்கிட்டு என்னோடத எனக்கு திருப்பி கொடுத்துரு… இது யாருக்கும் தெரியாது அதுனால எந்த பிரச்சனையும் இல்ல…” என்று சொல்லவும் ஒப்புக்கொள்ள மனம் துடித்தாலும் சிறியவளுக்கு பயம் முன்னுரிமை பெற்றது…

 

“ம்ஹும்… வேண்ணாம்… மிஸ்க்கு தெரிஞ்சா என்னைய தோள் உரிச்சுடுவாங்க….” என்று மறுக்க…

 

“அதெல்லாம் தெரியாது… நாளை புஸ்தகத்த கேட்டு நீ இல்லைன்னு சொன்னாதேன் அடிப்பாக…” என்று அவளது மூளையை சலவை செய்து அதில் வெற்றியும் கண்டாள்…

 

“செரி நீ சொல்லுத போலவே செய்யுதேன்… ஆனா உன்னையும் தானே கேட்பாக… ?” என்ற கேள்வியை வைக்க,

 

“அதெல்லாம் நா பார்த்துக்குதேன்… என் அப்பா இங்க தானே சாரா இருக்காக அதுனால என்னைய யாரும் எதுவும் சொல்ல மாட்டாக… ஆனா உனக்கு இந்த புஸ்தகம் வேண்ணும்னா நீ எனக்கு ஒருபா தரும்… காசு தந்தாதேன் நான் உனக்கு தருவேன்….” என்று பேரம் பேசினாள்…

 

இப்பொழுது தான் கனிக்கு பூங்குழலியின் திட்டம் விளங்கியது… விளங்கியதும் ஐஸ் சாப்பிட போகிறோம் என்று முகம் பிரகாசமாக மாற, தோழி கூறிய அனைத்துக்கும் சிங்சாங் தட்ட ஆரம்பித்தாள்…

 

சில நொடிகள் யோசித்த அச்சிறுமி அடிவாங்குவதற்கு இது சாலசிறந்தது என்ற முடிவுடன், அதிகம் யோசிக்காது தன்னிடம் இருந்த ஒருபாய் காசை பூங்குழலியிடம் குடுக்க, அதை ஆசையாய் வாங்கிக் கொண்டவள் தன் புத்தகத்தை அவளிடம் தந்துவிட்டு ஐஸ் வண்டியை நோக்கி ஓடியவளை தொடர்ந்து கனியும் ஓடினாள்…

 

ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு கொண்டு, ஐஸ்’ஸை ஒருவாய் பூங்குழலியும் ஒருவாய் கனியும் பகிர்ந்து உண்டபடி ஆடிக்கொண்டே ரோட்டில் பவணி வந்தனர்…

 

“ஏன் குழலி ஒத்த ருபா கேட்ட…? கூட கேட்டு இருந்தா ஆளுக்ககொன்னு வாங்கி இருக்கலாமே…” என்று ஐஸ்’ஸை நக்கியபடி கேள்வி கேட்க,

 

“அவளும் நம்மளை மாதிரி குழந்த தானே… நெறைய காசு இருக்காதில்ல… பாவம்… நாம வூட்டுல அடி வாங்குறாப்புல அவளும் தானே வாங்குவா… அதேன் ஒன்னு வாங்கி சாப்புட்டுக்கலாம்னு ஒருபா கேட்டேன்…” என்று தீவிரமாக விளக்கம் தர, கனியும்

 

“ஆமா புள்ள… நீ சொன்னதும் செரிதேன்… பாவம் புஸ்தகத்த வேற தொலைச்சுபுட்டுட்டா…” என்க,

 

“ம்ம்ம்… ஐய்யனார் கிட்ட வேண்டிப்போம் அவ புஸ்தகம் கிடைச்சறனும்னு…” என்று சொல்லவும் இருவரும் சாலை என்றும் யோசிக்காமல் நின்ற இடத்திலேயே நின்று கைக்கூப்பி, கடவுளிடம் தங்கள் வேண்டுதலை வைத்தனர்…

 

அப்பொழுது பூங்குழலியின் கையில் இருந்த ஐஸ் உருகவும் கடவுளிடம் வேண்டுதலை கூறிக்கொண்டே உருகிய ஐஸ்ஸை நக்கிக் கொண்டாள் வீணாக கூடாது என்று…

 

அதன்பின் சில நிமிட நடையில் தங்கள் வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்த பாலத்தை அடைந்தவர்கவள், அங்கு நின்றிருந்தவர்களை கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் தங்கள் உலகில் சஞ்சரித்திருக்க, இருசிறுமிகளின் நடையை தடை செய்தது அந்த அழைப்பு…

 

“ஏய்… முட்டக்கண்ணி…” என்ற அழைப்பிற்கு கோபமாக திரும்பி பார்த்தாள் பூங்குழலி…

 

பாலத்தின் தடுப்பு சுவர் மேல் அமர்ந்திருந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்து குதித்திறங்கிய பதினாங்கு வயது கவியழகன், பூங்குழலியை அருகில் வரும்படி கையசைத்து அழைக்க, ஒன்பது வயது குழலிக்கு சுறுசுறுவென கோபம் எகிறியது…

 

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நடக்க தொடங்க,”ஏய் முட்டக்கண்ணி…. உன்ன தான் கேட்குதா இல்லையா…?” என்று கவி கத்த அதை அவள் சிறிதும் காதில் வாங்காதை போல் போகவும்,

 

கவி ஓடி சென்று அவள் வழியை மறித்து நிற்க, பூங்குழலி “ஒழுங்கா வழிய விடு…”

 

“முடியாது டி என் முட்டக்கண்ணி…”

 

“ஏய்… அப்படி கூப்பிட்ட உன் மண்டைய உடைப்பேன்…” என்று விரல் நீட்டி எச்சரிக்க, அவளது குட்டி விரலோடு தன் விரலால் கிடுக்குபிடி போட்டவன்,

 

“நான் கட்டிக்க போற பொண்ண எப்படி வேண்ணா கூப்பிடுவேன்… ” என்று அவளிடம் வம்பு பண்ணியவனை பார்த்து தன்னுடைய துறுதுறு விழியால் முறைத்து பார்த்தவள்,

 

“கூப்பிடுவ… கூப்பிடுவ… என்கிட்ட வம்பு பண்ண பொறவு எங்அப்பாருட்ட சொல்லிபுடுவேன்… விடு என் கைய…” என்று மிரட்டிய படி போராடியவளை,

 

“சொல்லு எனக்கென்ன பயமா….? இங்க பாரு புள்ள… என்ன ஆனாலும் நாதேன் உன்னைய கட்டிக்க போறேன்… நல்லா நினைப்புல வச்சுக்கோ…” என்றவன் அவள் கையை விடுவித்து விட்டு மண்டையில் லேசாக தட்டி,

 

“திருட்டு தனமா ஐஸ் வாங்கி திங்கிறியளோ…? நேத்து தானே அடி வாங்குன்ன திரும்புவும் திங்குறவ…?” என்று கேட்டவனை பார்த்து முறைத்தவள், அவன் கையை விடுவித்ததும் தட்டிய தலையை தேய்த்தபடி,

 

“எங்காசு நான் திங்குதேன்… உனக்கு என்ன வந்துச்சு…ஒங்சோலிய  பார்த்துட்டு போ…” என்றவள் கனியின் புறம் திரும்பியவள், “வா புள்ள…” என்று அழைத்தவள் அவனை தாண்டி செல்ல முற்படுகையில், அவளது ரெட்டை ஜடையில் ஒன்றை பிடித்து இழுத்தான் கவி…

 

அதில் வலியெடுக்க, “ஆஆஆ… ” என்று அலறலோடு திரும்பி பார்த்து முறைத்தவளை,

 

“ஒழுங்கா மரியாத குடுத்து பேசு… இல்ல நீ பண்ணுற திருகு தனம் எல்லாத்தையும் உங் ஆத்தாட்ட போட்டு குடுத்துடுவேன்…” என்று மிரட்டவும் கனி,

 

“குழலி…” என்று சன்னமான குரலில் அவளது கையை பற்றிக் கொண்டாள்… காரணம் அவளது ஆத்தாவிடம் இருந்து விழும் அடி அப்படி பட்டது…

 

“சொல்லு எனக்கென்ன பயமா… நானும் எங்கப்பாட்ட சொல்லுதேன் நீ எப்ப பாரு எங்கிட்ட வம்பு பண்ணுதேன்னு…”என்று இடுப்பளவு உயரத்தில் இருந்தவள் கவியை அன்னாந்து பார்த்து மிரட்டி விட்டு போக… அதை புன்சிரிப்புடன் பார்த்திருந்தான் கவியழகன்…

 

ஏனோ கவியழகனுக்கு பூங்குழலி என்றால் கொள்ளை இஷ்டம்… பால் வண்ண நிறத்தில், கொளு கொளு கன்னங்களோடு, எப்பொழுதும் ரெட்டை ஜடை பாவாடை சட்டையில் துறுதுறு விழியோடு, ஓயாது கதையடிக்கும் அவளை அருகில் வைத்து நாள் முழுவதும் பார்க்க அத்தனை ஆசை அவனுக்கு…

 

அவனது தங்கையை விட ஒருவயது பெரியவளான பூங்குழலியின் மீது தனி பாசம், அக்கரை… அது அவளது செயல்கள் மூலம் விளைந்த ஒருவகை ஈர்ப்பு… ஓரிடத்தில் நின்று பழக்கம் இல்லாதவள் பூங்குழலி அதனால் அவனது பார்வை எப்பொழுதும் அவள் பின்னேயே சுற்றிக்கொண்டு இருக்கும்…

 

தூங்கும் சமயம் மட்டுமே அவளது வாய்க்கும் காலுக்கும் ஓய்வு என்பதே உண்டு… அதில் கவர பட்டவன், விளையாட்டுக்காக எப்பொழுதும் அவளை வம்பிலுப்பதை வாடிக்கையாக்கி வச்சு இருந்தான்…

 

அவளும் அந்த அறியாத வயதில் அவன் வம்பு செய்யும் பொழுது எல்லாம் தந்தையிடம் கூறி விடுவேன் என்று கூறினாலும் இதுவரை அவன் மீது புகார் வைத்ததில்லை… அதை அவனும் உணர்ந்தே இருந்தான்…

 

அன்றைய நிகழ்வை கூறியவனின் முகம் தான் அத்தனை சந்தோஷத்தில் இருந்தது அவளது நினைவுகளில்… வெகு வருடங்கள் கழித்து பூங்குழலியை பார்த்ததும் அவளது விழிகளே அவனுக்கு காட்டி கொடுத்தது அவள் யாரென்று… இத்தனை வருடங்கள் ஆனாலும் தன் மனதின் ஓரத்தில் ஆழ பதிந்திருந்த தன் நெசத்தை நொடியில் உணர்ந்தவன் அவளை தன்னவளாக்க முடிவெடுத்தான் மறுசிந்தனையின்றி…

 

தங்களை சுற்றி நிகழும் அத்தனை பிரச்சனைகளும் பின்னுக்கு செல்ல, அவள் மட்டுமே பிரதானமாக தெரிய நொடியும் தாமதிக்காது சிறுவயதில் விளையாட்டாய் சொன்ன வார்த்தைகளை இப்பொழுது உணர்ந்து காதலோடு கூறினான் “என் பொண்டாட்டி…”என்று…

 

அவளது மனதில் இருப்பதை அறியாமல் தன்னுள் காதலை வளர்க்க தொடங்கியவனுக்கு தெரியவில்லை அவளது திட்டத்தை பற்றி … அது அறிய வரும் நேரம் அவனது வாய் மொழி பாஷை ஊமையாகி சூழ்நிலை கைதியாக தலை குனிந்து நிற்க போகும் தருணம் அவனது காதலும் மடிந்து போகுமோ…

 

தொடரும்….

 

Advertisement