Advertisement

ஆசை – 9

மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே அங்கே பாசையாய் இருந்தது.. நால்வர் அமர்ந்திருந்தாலும், யார் முதலில் பேச என்றும் என்ன பேச என்றும் தெரியாமல் அனைவரும் அமைதியாயிருக்க, நவீனோ “இனி உங்க பாடு, உங்க பொண்ணு பாடு..” என்பதுபோல இருந்தான்.

‘கூட்டிட்டு வந்தீங்களே.. இப்படியா சும்மா இருக்கிறது..’ என்று நந்தினி நவீனைப் பார்க்க, அவனோ ‘எனக்கெதுவும் தெரியாதுப்பா..’ என்று தோளைக் குளுக்கிவிட்டான்..

‘சரி இனி இவனை நம்பி ஒன்றும் முடியாது..’ என்று நந்தினிக்குத் தோன்ற, தனக்கு நேராய் அமர்ந்திருந்தா அப்பாவையும், அவருக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த அம்மாவையும் காண, அவர்களை நேராய் நிமிர்ந்துப் பார்க்கவே கொஞ்சம் சங்கடமாய் இருந்தது.. அவள் வீட்டை விட்டு வந்தது அவளளவில் நியாயம் என்றாலும், அவளைப் பெற்றவர்கள் என்ற முறையில் அவர்களை எதிர்த்து செய்த செயல்தானே..

உடம்பெல்லாம் வியர்ப்பது போல் இருந்தாலும், நாவெல்லாம் வறண்டு போனாலும், வந்தது வந்தாகிவிட்டது இனியென்ன பேசித்தான் ஆகவேண்டும் என்று தோன்றுகையில்,

“சரி நீங்க எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. நான் கிளம்புறேன்.. நந்தினி போன் பண்ணு வந்து கூட்டிட்டு போறேன்..” என்று நவீன் எழுந்து நிற்க, அவளுக்கோ பக்கென்று ஆனது..

“என்னது…” என்று அவளும் எழ,

“என்ன தம்பி…” என்று சிந்தாமணியும், சுப்புராஜும் சேர்ந்தே எழ,

“பின்ன.. நானும் அப்போயிருந்து பாக்குறேன்.. யாருமே பேசலைன்னா எப்படி.. நந்தினி வரல.. பேசலைன்னு சொன்னீங்க.. இதோ அவளை கூட்டிட்டு வந்துட்டேன்.. இனிமே உங்க பாடு.. அவ பாடு.. நான் கிளம்புறேன்..” என்று நடக்கப் போக,

“நந்தினி.. தம்பிய இருக்க சொல்லு.. அப்படியே நிக்கிற..” என்று சட்டென்று சிந்தாமணி மகளிடம் பேசிட, அந்த நேரத்தில் அவர்களுக்கிடையே இருந்த திரை பட்டென்று அறுந்து விழுந்தது.

நவீனுக்கு உள்ளூர சிரிப்புத்தான். அவனுக்குத் தெரியும் இப்படி ஏதாவது செய்தால்  தான் யாராவது ஒருவராவது வாய்த் திறப்பர் என்று.

“என்னங்க இருங்க..” என்று நந்தினி அவன் பின்னே போக,

“இவ்வளோ நேரம் இருந்தேனே.. போ.. போய் அவங்கக்கிட்ட பேசு..” என்று அவள் முதுகைப் பிடித்து பின்னே திருப்பியவன், மீண்டும் நடக்க,

“ம்ம்ச்.. இப்படி வந்ததுமே கிளம்பிட்டா அதுக்கும் நான் தான் பேச்சு வாங்கணும்..” என்றபடி வாசல் வரைக்கும் அவனோடே சென்றாள்.

“லூசு.. என் முன்னால பேச ஒருவேள சங்கடமா இருக்கும்.. ஒரு மணி நேரத்துல திரும்ப வருவேன்….” என,

“ஓ…” என்று உதடு குவித்தவள், “அதென்ன லூசுன்னு சொல்றீங்க..??” என்று முகத்தை தூக்கினாள்.

“ஷ்.. யப்பா.. நந்தினி நம்ம பஞ்சாயத்து எல்லாம் அப்புறம் வைக்கலாம்.. முதல்ல இந்த பஞ்சாயத்துக்கு முடிவுக்கு வாங்க..” என்றவன் கிளம்பிவிட்டான் “போன் பண்ணு வர்றேன்..” என்று சொல்லியபடி..

என்னவோ நந்தினிக்கு அவன் இருக்கும் வரைக்கும் இருந்த தைரியம் இப்போது இல்லாமல் போனது போல் தோன்ற, அப்படியே வாசலிலேயே நின்றிருந்தாள். ஆனால் எத்தனை நேரம் அப்படி நிற்க முடியும்..

‘வீட்ல போய் வச்சுக்கிறேன்..’ என்று முணுமுணுத்தபடி மீண்டும் உள்ளே போனாள்..

“நந்தினி தம்பி எங்க??” என்று சிந்தாமணி கேட்க,

“கிளம்பிட்டாங்கம்மா. வேலையிருக்காம்…” என்று சொன்னவள் அடுத்து சுப்புராஜைத் தான் பார்த்தாள்.

வந்ததில் இருந்து அவர் இன்னும் ஒருவார்த்தை கூட அவளோடு பேசவில்லை.. இதேது நவீனோடு பேசினார்.

‘அவர்ட்ட மட்டும் பேசுவாரமா’ என்று தோன்றினாலும், அன்று அத்தனை பேரின் முன்னிலும் அவளை எதிர்த்து அல்லவா பேசினாள் அதெல்லாம் மனதில் வந்து போக, இப்போது அவரிடத்தில் இருந்து நினைத்துப் பார்த்தால் அது அவருக்கு எத்தனை பெரிய இழுக்காய் இருந்திருக்கும் என்றும் தோன்றியது..

எச்சில் கூட்டி விழுங்கி, “அப்பா…” என்றழைக்க, அவரோ பார்வையை மட்டும் அவள் மேல் பதித்தார்..

சிந்தாமணிக்கு இப்போது மகள் வாழ்வு நன்றாய் இருக்கும் நிம்மதி. சுப்புராஜிற்கும் அதே நிம்மதி இருந்தாலும், என்னவோ அவரால் இன்னும் இலகு நிலைக்கு வர முடியவில்லை..

“ப்பா.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிடுங்கப்பா..” என்று அவர் கரங்களைப் பற்றிக்கொண்டாள்..

“என்னங்க..” என்று சிந்தாமணியும் வந்து அவர் தோளைத் தொட, “ப்பா..” என்று நந்தினியும் அழைக்க,

“ஹ்ம்ம்… நான் தான் சரியா உன்னை புரிஞ்சுக்கல நந்தினி.. உனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சுக்கிட்டு என்னவோ பெரிய தப்பு பண்ண இருந்தேன்..” என்றவரின் குரலில் அப்பட்டமாய் வருத்தம் தெரிந்தது..

“அப்பா.. அதெல்லாம் இல்ல.. இதெல்லாம் நடக்கனும்னு இருக்கு அதான்.. நீங்க எதுவும் நினைக்காதீங்கப்பா… ப்ளீஸ்..”

“ம்ம்.. எப்படிம்மா நினைக்காம இருக்க முடியும்.. வெளிய போய் நாலு பேர பார்த்து வர்றேனே.. கேட்கிறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணுமே..” என்றவர்,

“ஆனா ஒண்ணு.. நல்ல மனுசன செலக்ட் பண்ணிருக்க.. அந்தளவுக்கு நல்லது.” என்றார் நிறைவாக..

“இப்பவும் சொல்றேன் ப்பா அவரை கல்யாணம் செய்யணும்னு நான் போகலை..” எனும் போதே,

“தெரியும் நந்தினி… தம்பி சொன்னார்.. உன்னை எந்த இடத்துலயும் விட்டுக்கொடுத்து பேசுறதே இல்ல..” என்று சிந்தாமணி சொல்ல, நந்தினி மனதிற்குள் பெருமிதமாய் இருந்தது.

“ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்கம்மா..” என்று அவளும் சொல்ல,

“பார்த்தாலே தெரியுதே…” என்றவர் மீண்டும் சுப்புராஜைப் பார்க்க,

அவரோ “ஒண்ணுமில்ல… நம்ம நினைச்சதையே பிடிவாதமா பண்ணிருந்தா இந்நேரம் நந்தினி நிலைமை என்னன்னு யோசிச்சேன் அதான்..” என்றார்..

“ப்பா.. விடுங்கப்பா.. இனி பழசு எதுவும் பேசவேணாம்..” என்றவள் பின் நினைவு வந்தவளாய், “அத்.. அத்தை எதுவும் சண்டை போட்டாங்களா??” என்றாள்..

“சண்டை போட்டாளாவா.. ஹா ஹா.. போடாம இருப்பாளா?? ஆனா அதெல்லாம் விடு நந்தினி.. ஒருவழியா நாகுவ துபாய்க்கு அனுப்பியாச்சு.. அவனுக்கும் அது ஒரு மாறுதலா இருக்கும்ல..” என்று சிந்தாமணி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

“அதானே பார்த்தேன்.. என்னடா இன்னும் கொஞ்சி கூத்தடிக்கலையேன்னு.. அங்க என் மகனுக்கு தண்ணிக் காட்டிட்டு இங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டீங்க போல..” என்றபடி வந்தார் ராஜி.

‘ஐயோ இந்த நேரத்துலயா வரணும்..’ என்று மற்ற மூவருமே நினைக்க,

“என்னண்ணே.. மகக்கூட ஒண்ணு சேர்ந்தாச்சு.. இனி நானெல்லாம் கண்ணுக்கேத் தெரியமாட்டேன்.. ஆனா ஒண்ணு இப்போ சொல்றேன்.. என் மகன் திரும்பி வர்றபோ ராஜாவாட்டம் வருவான். அவனுக்கு ராணி மாதிரி பொண்ணுப் பார்த்து நான் ஜாம் ஜாம்னு கல்யாணம் செஞ்சு வைப்பேன்.. அப்போத் தெரியும் அவன் அருமை பெருமை எல்லாம்..” என்று நொடித்தார்.

“ஏன் அண்ணி இப்படி சொல்றீங்க.. இப்பவும் நாகு மேல எங்களுக்கு பாசமிருக்குத் தான்.. அவன் நல்லா இருந்தா அதுவே எங்களுக்கு போதும்..” என்று சிந்தாமணி சமாதானமாய் பேச,

“நீங்க சொன்னாலும் சொல்லலைன்னாலும் அவன் நல்லாத்தான் இருப்பான்..” என்றவர் அடுத்து நந்தினியிடம் திரும்பினார்.

“என்னம்மா.. வீட்ட விட்டு போனவளே.. போன வீடு எப்படியிருக்கு..” என்று அவளை நோகடிக்கவென்றே பேச, நந்தினிக்கோ மனம் சுருக்கென்றிருந்தது.

அவள் பெற்றோரிடம் வேண்டுமானால் நந்தினி தழைந்து போகலாம். ஆனால் இவரிடம் அப்படியிருக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை. ஆகையால் தைரியமாகவே பேசினாள்.

“எனக்கென்ன அத்தை.. நல்லா இருக்கேன்.. போன இடத்துல என்னைய ராணி மாதிரிப் பார்த்துக்கிறாங்க..” என்று அவளும் சொல்ல,

எங்கேடா பேச்சுக்கு பேச்சுக்கு என்று மீண்டும் கலகம் பிறக்குமோ என்று நினைத்த சுப்புராஜு, “நந்தினி.. நீ போய் உன் ட்ரெஸ் எல்லாம் எது வேணும்னு பார்த்து எடுத்து வை..” என்றவர்,

“அப்புறம் ராஜி நீ சொல்லு.. நாகு போன் பண்ணான.. எப்படி இருக்காம் அங்க..” என்று ராஜியை பேச்சில் இழுக்க,

மகன் துபாய்க்கு சென்று ஒருவாரமே ஆனது கூட மறந்து, அவன் என்னவோ அங்கே காலம்காலமாய் இருப்பதுபோல் பெருமை பேச ஆரம்பித்தார் ராஜி..

ராஜியும் சரி, நாகராஜும் சரி என்ன நடந்தாலும் அவர்களின் பிறப்பு குணம் மாறாது.. ஆனால் காலம் கண்டிப்பாய் அவர்களுக்கு ஒரு பாடத்தையும், ஒரு பதிலையும் கண்டிப்பாய் கொடுக்கும்.. அது நல்லதாக இருந்தால் அனைவர்க்கும் சந்தோசமே..

நந்தினிக்கு ராஜியின் பேச்சில் ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.. இனி எக்காரணம் கொண்டும் நாகராஜ் அவள் வாழ்வில் பிரச்சனை செய்யமாட்டான் என்று. அதுவே இன்னுமொரு பெரிய நிம்மதியைக் கொடுத்தது.. நாளடைவில் அவனுக்கும் ஒரு வாழ்வு நல்லபடியாய் அமைந்தால் சரி என்று கூட அவளுக்குத் தோன்றியது.

அவளது உடைகள் என்னென்ன வேண்டுமோ அதெல்லாம் பார்த்து எடுத்துவைக்க, சிந்தாமணி வந்தவர் “இதுல புது துணி எல்லாம் இருக்கு நந்தினி..” என்று பெரிய பையை கொடுத்தார்..

“ம்மா இத்தனை எதுக்கு.. ஏற்கனவே அங்க நிறைய எடுத்துக் குடுத்திருக்காங்க..”

“அதுசரி.. அப்போ நாங்க கொடுக்க வேணாமா.. எல்லாம் உனக்குன்னு எடுத்தது தான் டி.. என்னதான அவங்க பார்த்து பார்த்து செஞ்சாலும் நாங்க செஞ்சாதான் உனக்கு ஒரு மரியாதை இருக்கும்..”

“ஹ்ம்ம் இதையே தான் வேறமாதிரி அத்தையும் சொன்னாங்கம்மா..” என்றாள் நந்தினி..

“என்ன சொன்னாங்க..??”

“மூத்தவனுக்கு கல்யாணமாகி அவங்க வீட்டாளுங்க வந்து போக இருக்கிறதுக்குள்ள, நீ உங்க அப்பா அம்மாவோட சேரப் பாருன்னு..” என்று மணியாள் சொன்னதை சொல்ல,

“பரவாயில்ல நல்ல மனுஷங்களா இருக்காங்க..” என்று சிந்தாமணிக்கு இன்னும் நிம்மதியாய் இருந்தது..

பேச்சும் பொழுதும் அப்படியே நீள, ராஜி அடுத்து அவர் வந்த வேலை பலிக்கவில்லை என்று கிளம்பிவிட்டார்.. ஆக, அப்பா அம்மா மகள் மூவரும் மாத்துக்கட்டில் பேசிக்கொண்டிருக்க, நந்தினியின் அலைபேசி அலறியது..

“சொல்லுங்க..”

“என்ன சொல்லுங்க.. நீயும் கால் பண்ணுவ பண்ணுவன்னு பார்த்தா.. அப்படியே என்னைய மறந்துட்ட..” என்று நவீன் குறை சொல்ல, கண்களை சுருக்கி நாக்கைக் கடித்தவள், கடிகாரத்தைப் பார்த்தாள். கிட்டத்தட்ட அவன் கிளம்பி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகிருந்தது..

‘அச்சோ இவ்வளோ நேரமா..??’ என்று நொந்தவள், “சாரி.. பேசிட்டே இருந்தோமா..” என்று இழுக்க,

“இருக்கும் இருக்கும்.. நான் வேற மாமியார் வீட்ல சாப்பிட போறேன்னு பந்தாவா வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன்.. எப்படி வந்தா சாப்பாடு கிடைக்குமா…” என்று நவீன் கிண்டலாய் கூற,

“ஓய்.. என்ன.. கிளம்பி வாங்க.. எல்லாம் ரெடியாத்தான் இருக்கு..” என்று அலைபேசியை ஆப் செய்தவள்,

“ம்மா.. அவர் சாப்பிட வர்றார்.. நானும் ரெடியா இருக்குன்னு சொல்லிட்டேன்..” என்றாள் பதற்றமாய்..

“அச்சோ பாரு நானும் பேசிட்டு இருந்ததுல மறந்தே போனேன்.. தம்பிக்கு என்ன பிடிக்கும்.. சட்டுன்னு செஞ்சிடலாம்.. என்னங்க நீங்க கடைல போய் ஸ்வீட்  கொஞ்சம் வாங்கிட்டு வாங்க…” என்று சுப்புராஜை கடைக்கு அனுப்பியவர், அடுத்து பம்பரமாய் தான் சுழன்றார்..

“ம்மா அவருக்கு தக்காளி சாதம் பிடிக்கும்..” என்று நந்தினி சொல்ல, முதலில் அதை செய்தவர், அடுத்தடுத்து பார்த்து பார்த்து வேறு உணவு வகைகளும் செய்ய, நந்தினிக்கு ஆச்சர்யமாய் இருந்தது..

எத்தனை பெரிது என்று நினைத்திருந்த விஷயம் இதோ இப்போது ஒன்றுமேயில்லை என்பதுபோல் ஆகிவிட்டது.. சொல்லப்போனால் எல்லாமே சரியாகிவிட்டது.. இதற்கெல்லாம் காரணம் நவீன் தான் என்று தோன்ற, நவீன் வந்தால் ஓடிப்போய் அவனை இறுக கட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது.

எப்போதடா வருவான் என்று காத்திருக்க, அவனோ சொன்ன நேரத்தை விட முக்கால்மணி நேரம் தாமதமாய் தான் வந்தான்.. அதற்குள் சுப்புராஜும் வந்திருந்தார்..

“நீங்க சாப்பிடுறீங்கன்னு சொன்னதும் அம்மா உங்களுக்கு பிடிச்சதா செஞ்சாங்க..” என்று நந்தினி சொல்ல,

“பாத்தியா அதான் மருமகனோட கெத்து..” என்று சட்டை காலரைத் தூக்கிவிட,

“ஷப்பா…” என்று வெறும் கையை விசிறிக்கொண்டாள்..

“நந்தினி தம்பிக்கு பார்த்து பரிமாறு.. இப்பவும் விளையாட்டுத் தான்..” என்று சிந்தாமணி கடிய, நவீனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சுப்புராஜும் அங்கே இருக்க,

“மாமா நீங்களும் வாங்க.. எல்லாம் சேர்ந்து சாப்பிடுவோம்..” என்றழைக்க,

“இருக்கட்டும் தம்பி..” என்று தயங்கியவரை, “நந்தினி  கூப்பிடு..” என்று மகளை விட்டு அழைக்க வைத்தான்..

“ப்பா வாங்க.. ம்மா நீயும் வா.. எல்லாம் எடுத்துப்போட்டு ஒண்ணா சாப்பிடுவோம்..” என்று நந்தினி அழைக்க, அவர்களால் மறுக்கவும் முடியவில்லை..

நவீனுக்குமே உள்ளே ஒரு உறுத்தல் தான் எதிர்பார்த்த விதமாய் இல்லாமல் வேறேதாவது நடந்துவிட்டால் என்ன செய்யவென்று.. ஆனால் அப்படியில்லாமல் அனைத்தும் நல்லபடியாய் முடிந்தது மனதிற்குள் நிம்மதியாய் இருந்தது. இனி அவனின் நந்தினி எப்போதும் மனதிற்குள் சுணங்கமாட்டாள் என்பதே அவனுக்கும் பெரும் மகிழ்வை கொடுத்தது..

அவ்வப்போது நந்தினியை பார்த்துக்கொண்டான் வேறு.. அவளும் அப்படித்தான்.. நொடிக்கொருமுறை அவனைப் பார்த்துக்கொண்டாள். அப்படியே இன்னும் கொஞ்சம் பொழுது நகர,

“சரிங்க மாமா.. நாங்க கிளம்புறோம்..” என்றான் நவீன்.. அத்தனை நேரம் கலகலவென்று அனைவரும் பேசிக்கொண்டிருக்க, இப்போது கிளம்புகிறோம் என்று சொன்னதும் சட்டென்று அவர்களுக்கு ஒருமாதிரி இருக்க,

“நைட்டு சாப்பிட்டு போலாமே..” என்றார் சிந்தாமணி..

‘நீ இருக்கியா..’ என்பதுபோல் நந்தினியைப் பார்த்தான், அவளோ ‘இருக்கவா..’ என்பதுபோல் பார்க்க,

சரி இத்தனை நாள் கழித்து ஒன்றாய் இருக்கிறார்கள் என்று தோன்ற, “நந்தினி இருக்கட்டும்.. நைட் வந்து கூட்டிட்டு போறேன்..” என்றவன், “அம்மாக்கு ஒருவார்த்தை சொல்லிடு நந்தினி..” என்றுவிட்டு கிளம்பினான்..

சுப்புராஜிற்கும், சிந்தாமணிக்கும் தாங்கள் சல்லடைப் போட்டு தேடியிருந்தாலும் இப்படியொரு மாப்பிள்ளைப் பார்த்திருக்க முடியாது என்று தோன்றியது.

நவீனோடு வாசல் வரை வந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நவீனே சுதாரிக்காத நேரத்தில் சட்டென்று அவன் கன்னத்தில் இதழ் பதித்து அவன் சுதாரிக்கும் முன்னே தள்ளியும் நின்றுவிட்டாள்.

அவளால் அவள் மனதில் இருக்கும் மகிழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இதேது அவர்களின் அறையாய் இருந்தால், அவனை இறுகக்கட்டி முத்தமிட்டிருப்பாள், ஆனால் இப்போது இது மட்டும் தான் செய்ய முடிந்தது..

கன்னத்தில் கை வைத்தவன் “ஏய்.. இப்போ என்ன டி பண்ண..??” என்று கேட்க,

மீண்டும் அவன் மறு கன்னத்தில் முத்தமிட்டவள் “இதான் பண்ணேன்..” என்றாள் கண்களை சிமிட்டி..

“ஆகா.. இது நந்தினி பார்ட் டூ வா..” என்று அப்போதும் நவீன் கிண்டல் அடிக்க,

“ம்ம்ச் போங்க.. எவ்வளோ சந்தோசமா குடுத்தா இப்படி கிண்டல் பண்றீங்க..” என்றாள் அவனை ஒரு தள்ளு தள்ளி..

“ஹா ஹா.. வீட்டுக்கு வா.. அங்க இருக்கு உனக்கு..” என்று மிரட்ட,

“அடேங்கப்பா என்ன செய்வீங்கலாம்.. எங்கப்பாக்கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியும்ல..” என்று அவளும் மிரட்ட,

“அச்சோ.. நந்தினி மேடம்.. அப்படி மட்டும் செஞ்சிடாதீங்க மேடம்..” என்று வேண்டுமென்றே பவ்யம் காட்டினான்.

அவளுக்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, அவளையே பார்த்திருந்தவன், இப்போது அவள் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று அவள் கன்னத்தில் இதழ் பதித்து விலகினான்..

நந்தினி திகைத்துப் போய் கண்களை விரிக்க, “நாங்களும் சந்தோசமா இருக்கோம் தெரியுமா..” என்றான் தலையை கோதி.

“எல்லாம் உங்கனால தான்..” என்று நந்தினி சட்டென்று சொல்ல,

“அதெல்லாம் இல்ல.. சரி உள்ள போ.. நைட் வர்றேன்.. அம்மாக்கிட்ட பேசிடு நந்தினி.. எனக்கும் வேலையிருக்கு..” என்றவன் கிளம்பிவிட்டான்..

அவன் போகும் வரைக்கும் நின்று பார்த்தவளுக்கு, காலையிலும் இப்படித்தானே நின்று பார்த்தாள் ஆனால் அப்போதிருந்த மனநிலை வேறு இப்போதிருக்கும் மனநிலை வேறு..

சிரித்த முகமாகவே மீண்டும் உள்ளே சென்றவள் முதல் வேலையாக மணியாளுக்கு அழைத்துப் பேசினாள்.

அவருக்கும் அத்தனை சந்தோசம்.. “என்ன பொண்ணு.. நான் சொன்னப்போ அவ்வளோ பயந்த..” என்றவர், மேலும் பேச, சிந்தாமணி நான் பேசவேண்டும் என்பதுபோல் கையை நீட்ட,

“அத்தை இருங்க அம்மா பேசுறாங்க..” என்று அவரிடம் கொடுக்க, அடுத்து இரு அம்மாக்களும் பேசிக்கொள்ள, நந்தினிக்கு அப்பாடி என்றிருந்தது..

சொன்னதுபோலவே இரவு நவீன் வர, அங்கேயே உண்டு முடித்து, இருவரும் கிளம்ப, நந்தினியோ இரண்டு பெரிய பைகளை தூக்கிக்கொண்டு வந்தாள். போதாத குறைக்கு சுப்புராஜும், சிந்தாமணியும் நகைகள் வேறு கொடுக்க,

நவீன் நந்தினியைப் பார்த்தவன், “மாமா அத்தை சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம்.. இதெல்லாம் முறைப்படி அங்க வந்து நீங்க கொடுங்க நான் வேணாம்னு சொல்லவே மாட்டேன்..” என,  நந்தினி மறுத்து ஒரு வார்த்தைப் பேசவில்லை..

அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிய, “ம்ம் சரி தம்பி.. ஒரு நல்ல நாள் பார்த்து வர்றோம்..” என்று சுப்புராஜ் சொல்லவும் இருவரும் கிளம்பினர்..

பைக்கில் செல்கையிலேயே நந்தினி நவீனை இறுக கட்டிக்கொள்ள, “ஆகா நவீனு இன்னிக்கு உனக்கு சரியான கவனிப்பு இருக்குடா….” என்று அவனே சொல்லிக்கொள்ள, வேகமாய் அவன் தோளில் கிள்ளினாள்..

“அடிப்பாவி..” என்று சொல்லியபடி, இருவரும் மாறி மாறி பேசியபடி சந்தோசமாகச்  சென்றனர்…         

                                                               

         

                 

     

                        

Advertisement