Advertisement

ஆசை – 8

நந்தினிக்கும், நவீனுக்கும் இடையில் புரிதலும், காதலும் வளர்ந்துகொண்டே இருக்க, அவர்களுக்கான திருமண வாழ்விலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, நந்தினி எவ்வித குறையுமில்லாமல் மகிழ்வாகவே இருந்தாள்.

ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் அவள் அப்பா அம்மாவைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.. அத்தனை பேரின் முன்னிலும் என்னால் வரமுடியாது.. இவரைத் தான் விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டாலும், சொன்னவனையே திருமணம் செய்துகொண்டாலும், திருமண வாழ்வும் மகிழ்வாகவே இருந்தாலும் அவளால் தன் பெற்றோரை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அதிலும் நரேனது திருமண வேலைகள் ஆரம்பித்துவிட்ட படியால், அந்த வீட்டின் மருமகளாக மணியாளோடு சேர்ந்து அனைத்து வேலைகளிலும் மனப்பூர்வமாக  பங்குகொண்டாலும், நரேன் திருமணத்திற்கான ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவள் மனம் தன் பெற்றோருக்காக ஏங்கியது நிஜம்தான்..

அதுவும் தப்பாமல் நவீன் கண்களில் அவளது ஏக்கமும், சுணக்கமும் பட்டுவிடும்.. அவனிடம் பதில் சொல்வதற்குள் தான் அவளுக்கு போதும் போதும் என்றாகிவிடும்..

“என்ன நந்தினி டல்லா இருக்க…”

“ம்ம் அதெல்லாம் இல்ல..” என்று சொன்னாலும் விடமாட்டான்.. வம்படியாக இழுத்து அவளைத் தன் மேல் சாய்த்துக் கொள்வான்.

“நீ இப்படி இருக்கிறது எனக்கு சங்கடமா இருக்கு நந்தினி..” என்பான் அவளை இறுக அணைத்துக்கொண்டே..

“நான் நல்லாதான் இருக்கேன்னு சொன்னா நம்ப மாட்டீங்களா??” என்பாள் அவளும் அவனில் ஒன்றி..

அன்றும் அப்படித்தான் அவளை தன் மேல் சாய்த்துக்கொள்ள, “நீங்க தான் ரொம்ப ஃபீல் பண்றீங்க..??” என்றாள்..

“ம்ம்ச்.. நீ டல்லடிக்கிறப்போ எல்லாம் நம்ம அவசரப் பட்டுட்டோமோன்னு தோணுது..” என்றதும் சட்டென்று நந்தினி எழுந்தமர்ந்தவள், 

“ப்ளீஸ் இனிமே அப்படி சொல்லாதீங்க..” என்றவளின் கண்கள் வெகுவாக கலங்கிவிட்டது..

“ஹே.. என்ன நந்தினி.. சரி இனிமே நான் எதுவும் கேட்கல..” என்று சொன்னாலும் அவனுக்கு இப்படியே இந்த விஷயத்தை விட கூடாது என்று தோன்றியது..

“இல்ல.. அதுக்காகயில்ல.. எப்பவுமே நம்ம கல்யாணமும் சரி.. நம்ம லைஃபும் சரி அவசரமானது இல்ல.. எது எப்படி நடந்திருந்தாலும் அது நம்மளோடது…” என்று நந்தினி சொல்கையில் அவன்மீதான அன்பு வெளிப்பட, அவளை இறுக அணைத்துக்கொண்டான்..

“ஹ்ம்ம் என்னவோ நீ பேசி பேசி என்னை ஒருவழி பண்ணிடுற..”

“யாரு நானா?? உங்களை பேச்சுல மிஞ்ச முடியுமா??? நீங்கதான் வீட்ல எல்லாரையும் விட சரியா பேசுறீங்க..” என்றாள் அவளும் சலுகையாய்..

“ஆமாமா..” என்றவன், அவளை தன்னிடம் இருந்து தள்ளி ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“அன்னிக்கே கேட்கணும்னு நினைச்சேன் மறந்துபோச்சு.. நகை எல்லாம் கழட்டி குடுத்தியே, இந்த சின்ன செயின் மட்டும் ஏன் குடுக்கல..” என்று அவன் வீட்டில் செய்து போட்டிருந்த தாலி சங்கிலியோடு லேசாய் பிணைந்திருந்த அவளின் சிறு  சங்கலியை பிரித்து எடுத்தபடி நவீன் கேட்க, ஏனோ அவளுக்குக் கூச்சமாய் போனது..

பதில் சொல்லாமல் கழுத்தை சுருக்க, “ஓய்.. இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி கூசுற??” என்றவனோ கையை எடுக்கவே இல்லை..

“இந்த செயின் எங்க அம்மாச்சி வாங்கிப் போட்டது.. அதான் குடுக்கல.. அதெல்லாம் அப்பா அம்மா செஞ்சது அதுனால குடுத்துட்டேன்…” என்று நந்தினி சொல்லியபடி அவள் சங்கலியில் இருந்து அவன் விரல்களை பிரித்து எடுக்க,

“ஹா.. இதென்ன லாஜிக்.. எதுவா இருந்தாலும் நீ கொடுத்துத் தானே இருக்கணும்..” என்றான் சங்கிலியை விட்டு அவள் விரலோடு விளையாடி..

“அதெப்படி எங்கம்மாச்சி வந்துக் கேட்டா கூட குடுக்கமாட்டேன். அம்மாச்சி ஆயுசு சாமிக்கிட்ட போயிடுச்சு அதுவேற.. சிலது எல்லாம் செண்டிமெண்ட்.. என்ன நடந்தாலும் விட கூடாது…” என்று நந்தினி சொல்லும்போதே..

“அப்போ நானு..??” என்றான் அவளை நெருங்கி..

“நீங்க என்ன???” என்று நந்தினி புரியாமல் கேட்க,

“நான் என்ன?? நீதான் சொல்லணும்.. சொல்லு சொல்லு…” என்று அவளைப் பற்றிக்கொள்ள,

“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு.. சரியே இல்ல..” என்று நந்தினி இடமும் வலமுமாய் தலையை ஆட்ட,

“ஓய் பதில் சொல்லு..” என்று அவனும் மிரட்ட,

“இப்படி மிரட்டினா எல்லாம் ஒண்ணும் சொல்லமுடியாது..” என்று வேகமாய் படுத்தவளை, அடுத்து அவன் பதில் வாங்காமல் விடவில்லை..

நவீன் எப்போதுமே இப்படித்தான், நந்தினி மனம் எதையாவது நினைத்து ஏங்குகிறது என்று அவனுக்குத் தோன்றிவிட்டால் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி, கொஞ்சி, கெஞ்சி என்று கடைசியில் அவள் முகத்தில் ஒரு மலர்வு தோன்ற வைத்துவிடுவான். அது நந்தினிக்கும் இந்த சில நாட்களில் புரிந்திருந்தது..

‘எனக்காக பார்க்கிறான்’ என்ற எண்ணமே அவளை அவனிடம் நெருங்க வைக்கவும் செய்தது.

போக போக அனைத்தும் சரியாகிவிடும் அவளும் தன்னை தேற்றிக்கொள்ள பழகினாள். ஆனால் நவீனோ தானாக எல்லாம் சரியாகாது, எதாவது செய்து இதனை சரி செய்தே ஆகவேண்டும் என்ற உறுதியில் இருக்க, மறுநாள் வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல், நேராகக் கிளம்பி நந்தினியின் வீட்டிற்குச் சென்றான்..

சிந்தாமணியும், சுப்புராஜும் உள்ளேயிருக்க, நவீனின் பைக் சத்தம் கேட்டே, சிந்தாமணி வாசலுக்கு வந்துப் பார்த்தார்.. நவீனை எதிர்பார்க்கவில்லை போல.. முகத்தில் லேசாய் அதிர்ச்சித் தோன்றினாலும்,

“வா… வாங்கத் தம்பி..” என்றபடி கேட்டைத் திறக்க,

“ம்ம்.. நந்தினி அப்பா இருக்காங்களா..” என்றபடி அவனும் உள்ளே வந்தான்..

“இருக்காங்க…” என்று சிந்தாமணியும் வர,

“நீங்க எப்படி இருக்கீங்க…” என்று கேட்டவனை, சிந்தாமணிக்கு மிகவும் பிடித்துப் போனது..

என்னவோ இந்த கொஞ்ச நாட்களில் அவரின் மனம் மிக மிக தெளிந்திருந்தது என்பதே உண்மை. ஆனாலும் சுப்புராஜை மீறி எதுவும் செய்ய முடியாததால் வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்கவேண்டிய நிலை..

“ம்ம் நல்லாருக்கேன்.. ந.. நந்தனி எப்படிருக்கா..??” என்று கேட்கையில் அவரின் கண்களில் கண்ணீர்..

உள்ளே வந்துகொண்டிருந்தவன் அப்படியே நின்றுவிட, “நீங்க வெளிப்படையா அழறீங்க.. அவன் மனசுக்குள்ள அழறா..” என்று நவீன் சொல்லும்போதே,

“யாரு சிந்தா..??” என்றபடி சுப்புராஜும் வந்திட, அவரும் இவனை எதிர்பார்க்காததால் அதிர்ச்சியாகத் தான் நின்றார்..

“எப்படி இருக்கீங்க..??” என்று நவீன் அவரிடமும் கேள்வியைத் தொடுக்க,

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவர், “உட்காருங்க..” என்று இருக்கையை காட்ட, அவனும் எதுவும் சொல்லாமல் அமர்ந்துகொண்டான்.

“குடிக்கக் கொண்டு வர்றேன்..” என்று சிந்தாமணி உள்ளே செல்ல போக,

“அதெல்லாம் வேணாம்.. நீங்களும் உட்காருங்க..” என்றவன், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க போறீங்க… அடுத்தவங்களுக்காக பார்த்து உங்க பொண்ண ஒதுக்க போறீங்களா??” என்று கேட்க, அங்க பலத்த அமைதி..

“என்னால உங்க நிலைமையும் புரிஞ்சுக்க முடியுது.. இது எல்லாருக்குமே அதிர்ச்சித்தான்.. ஆனா அவ அங்க ஒவ்வொரு நிமிசமும் மனசுக்குள்ள உங்கள  நினைச்சு ஏங்குறா.. எங்க அண்ணனுக்கு அடுத்து கல்யாணம் வருது.. ஒவ்வொரு விசயம் நடக்கும் போதும், நந்தினி உங்களைத் தான் நினைக்கிறா..  நீங்க திருப்பதி போயிட்டு வந்தாவது வருவீங்கன்னு நினைச்சோம்..” என்று நவீன் சொல்ல,

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனா என்னவோ அவ வீட்ட விட்டுப் போய் கல்யாணம் பண்ணதை மட்டும் ஏத்துக்கவே முடியல..” என்று சுப்புராஜ் சொன்னதும்,

“நந்தினி வீட்டை விட்டு வந்தது என்னைக் கல்யாணம் பண்ணணும்னு இல்லை.. அந்த நாகராஜை கல்யாணம் பண்ணிடக் கூடாதுன்னு தான்.. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு..” என்று பட்டென்று சொல்லிவிட்டான்.

உண்மையும் அதுதானே.. நந்தினி என்ன நவீனுக்காகவா வீட்டை விட்டு வெளியேறினாள்.. இல்லையே.. சூழல் அப்படி அமைந்துவிட அடுத்து அவர்கள் திருமணம் நடக்கவேண்டிய நிலை.

அவன் சொல்லியதில் இருக்கும் உண்மை, தீ சுட்டது போல் தான் மற்ற இருவரையும் சுட்டது. எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள் தான் ‘எனக்கு நாகராஜை பிடிக்கல..’ என்று. கேட்காமல் விட்டது இவர்களின் தப்பு தானே..

சிந்தாமணிக்கோ, யாரோ ஒருவன், இப்போது நந்தினியின் கணவன்.. ஆனால் அவனே அவள் சார்பாய் நிற்கையில், அவளுக்காக என்று வந்து பேசுகையில், பெற்றோர் தாங்கள் அவளை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்தானே என்று தோன்றியது..

“என்னங்க…?? தம்பி இவ்வளோ சொல்றாங்களே..” என்று தயங்கி சொல்ல,

“ஹ்ம்ம்..” என்று பெருமூச்சை விட்ட சுப்புராஜ்,

“நீங்கதானே வந்து பேசுறீங்க.. அன்னிக்குக் கூட நீங்களும் உங்க அப்பாவும் தானே வந்தீங்க.. ஆனா நந்தினி..?? அடுத்து எங்கக்கிட்ட ஒரு வார்த்தை பேசலையே.. அவளுக்கு என்ன இந்த வீடு தெரியாதா.. இல்லை எங்கக்கிட்ட தான் பேசத் தெரியாத..” என்று சொல்ல, நவீனுக்கு அப்போது தான் புரிந்தது சுப்புராஜ் என்ன எதிர் பார்க்கிறார் என்று..

“ஹ்ம்ம்…. சரி.. அடுத்து எங்க அண்ணன் கல்யாணத்துக்கு முறைப்படி வந்து கூப்பிடுவோம் நீங்க கண்டிப்பா வரணும்.. முதல் நாள் அவங்களுக்கு வரவேற்பு வைக்கும்போதே எங்களுக்கும் வைக்கணும்னு அம்மா சொன்னாங்க.. நான்தான் நீங்க இல்லாம அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்.. ஆனா இப்போ சொல்றேன் நீங்க வரணும்..” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

சிந்தாமணிக்கும் சுப்புராஜிற்கும் என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அமைதியாகவே இருந்தனர்.. பின்னும் நவீன் தான் பேசினான்..

“ஒருவேள நான் பஸ்ஸுக்கு போறேன்னு உங்களுக்கு சங்கடமா இருக்கா..?? நான் படிக்காம கண்டக்டரா போகல.. நானும் நரேனும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடிச்சிருக்கோம்.. படிப்பு முடியவும் எங்க மெக்கானிக் ஷாப்ல தான் வேலை பழகினோம்.. இப்போ கொஞ்சம் தொழில் பழகணும், லாப நஷ்ட கணக்கு எல்லாம் சரியா புரியணும்னு தான் எங்கப்பா எங்களை பஸ்ஸுக்கு அனுப்பினார்.. சொந்த வண்டிதான்.. மத்தது எல்லாம் உங்களுக்கே இத்தனை நாள்ல தெரிஞ்சிருக்கும்..” என்று நவீன் சொல்கையில் சுப்புராஜ் தலையை மட்டும் ஆட்டினாரே தவிர, வேறு எதுவும் பேசவில்லை.

அதற்குமேல் அவனுக்கும் என்ன பேசவென்று தெரியவில்லை.. அமைதியாய் இருப்பவரிடம் என்னத்தை கதை பேச.. “சரி.. நான் கிளம்புறேன்..” என்றவன் வெளியே வர, 

சிந்தாமணிதான் அவனோடு பின்னேயே வந்தவர், “தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்ககூடாது..” என்றார் தயங்கி..

“சொல்லுங்க..” என்று அவனும் அவரைப் பார்க்க,

“இல்ல.. என்ன இருந்தாலும் எங்க பொண்ணுக்கு புருஷன் நீங்க.. மாமா அத்தைன்னு கூப்பிடாம சும்மா பேசுறீங்களே..” என்று சொல்ல, அவரின் மனதும் நவீனுக்கு புரிந்து போனது..

லேசாய் சிரித்தவன் “நீங்க நந்தினிய முதல்ல பொண்ணா ஏத்துக்கோங்க.. அப்புறம் உறவுமுறை எல்லாம் தானா வரும்..” என்று, என் மனைவியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எனக்கும் அந்நியமே என்று சொல்லாமல் சொல்லிக் கிளம்பியவனைப் பார்த்து அவருக்கு இன்னும் நவீன்பால் அன்பும் மதிப்பும் கூடிவிட்டது.

நிச்சயம் அந்த நாகராஜ் தன் மகளை இப்படி கருத மாட்டான் என்று மனதில் என்றோ உறுத்தி பிறந்தாலும் இன்று நவீனை பேசுகையில் அது ஊர்ஜிதமானது..

“என்னங்க..” என்றபடி வேகமாய் உள்ளே வந்தவர், சுப்புராஜிடம், “மாப்பிள்ள தான் அவ்வளோ சொல்றார்ல..” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“ஹ்ம்ம் பொறு சிந்தா.. நாகுவ துபாய்க்கு அனுப்பவே எவ்வளோ பாடுன்னு உனக்குத் தெரியும்ல.. ராஜி இப்போவரைக்கும் முகம் கொடுத்து பேசலை..  ஆனா அதை நான் பெருசா எடுக்கல.. இருந்தாலும் பொறு.. கொஞ்ச நாள் ஆகட்டும்.. சட்டுன்னு அங்க போய் நிக்க எப்படியோ இருக்கு.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்..” என்றவருக்கு பாவம் சிந்தாமணியால் தலையை மட்டும் ஆட்ட முடிந்தது.

அதே நேரம் அங்கே நவீன் வீட்டிற்கு திரும்பப் போக, மணியாளும் நந்தினியும் மட்டும் வீட்டில் இருக்க, நவீனை அந்த நேரத்தில் எதிர்பர்க்கவில்லை போல,

“என்னடா இப்போ வந்திருக்க..??” என்று மணியாள் கேட்டாலும், நந்தினியும் அதேபோல் தான் பார்த்திருந்தாள்..

“ரெண்டாவது ஷிப்ட்க்கு வேற ஆள் போறான்மா.. நான் மதியம் போகணும்.. சாப்பாடு முடிஞ்சதுன்னா எடுத்து வைங்க.. போறப்போ அப்பாக்கும் நரேனுக்கும் எடுத்துட்டு போறேன்..” என,

“சரிடா..” என்று மணியாள் சமையலறைக்குள் போக,

“நந்தினி இங்க வா..” என்றான் நவீன்..

அவளும் வர, கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துப் போனவன், “உங்க அப்பா அம்மாதான் உன்கிட்ட பேசலைன்னா.. நீயுமா அவங்கக்கிட்ட பேசாம இருக்கிறது..??” என்று கேள்வியைக் கேட்க,

“அப்.. அப்பா..” என்று திகைத்தவள், “நீ.. நீங்க அங்க போனீங்களா??” என்றாள் வேகமாய்..

“ஆமா.. போய் அவங்களுக்கும் கொஞ்சம் மந்திரிச்சு விட்டு வந்தேன்.. சும்மா வீம்புப் பிடிக்கமா வாங்கன்னு.. ஆனா அவங்களும் எதிர்பார்ப்பாங்க தான.. நீ பேசணும்னு.. நீ பேசவேயில்லாம அவங்களை மட்டும் சொன்ன எப்படி..” என்று அவளுக்கும் மந்திரிக்க

“ம்ம்…” என்று உதடு பிதுக்கியவள், “எப்படி பேச??” என்றாள்..

“ஏன்.. இப்படிதான்..” என்று அவள் இதழை சுண்டியவன், “உனக்கு பேசத் தெரியாதா..??” என,

“ம்ம்ச்.. என்கிட்டே தான் செல்போன் இல்லையே.. அத்தைக்கிட்ட இருக்கு ஆனா கேட்டு வாங்கி பேச ஒருமாதிரி இருக்கு..” என்று தயங்க,

“லூசு என்கிட்டே இருக்குல்ல..” என்றவன், தன் அலைபேசியை எடுத்து அவள் கையில் திணித்தான். “உன் சென்டிமென்ட்ல போனும் ஒண்ணுன்னு நினைச்சிட்டேன்.. நிஜமாவே உன்கிட்ட வீட்ல செல் இல்லையா??” என,

“ம்ம்ஹும்.. காலேஜ் போனப்போ அப்பா வாங்கித் தர்றேன்னு சொன்னார்.. நான்தான் வேணாம் சொல்லிட்டேன்..” என்றாள் பாவமாய்..

“எதுக்கு??” என்று கேட்டபடி நவீன் உடையை மாற்ற, இவளோ தலையை குனிந்தபடி,

“அது.. நான் செல் வாங்கினா, அடுத்து உடனே நாகு கால் பண்ணுவான்.. அவன்கிட்ட பேசணும்னு ஏதாவது டென்சன் செய்வான்.. அதான் அவனுக்குப் பயந்துக்கிட்டே நான் வாங்கல..” என்று சொல்கையில், எத்தனை நொந்திருக்கிறாள் என்று புரிந்தது நவீனுக்கு..

“ஹ்ம்ம்.. சரி சாயங்கலாம் ரெடியா இரு.. புது போன் வாங்கிட்டு வரலாம்.. அப்படியே நாளைக்கு காலைல போய் உங்க அப்பா அம்மாவ பார்த்துட்டு வரலாம்..” என்று சொல்கையில், நந்தினி அதிர்ந்து தான் பார்த்தாள்..

“என்ன முழிக்கிற நந்தினி.. நிஜமாதான் சொல்றேன்.. அவங்க வரலைன்னா என்ன. நம்ம போவோம்..”

“ம்ம்…” என்று நந்தினியின் தலை சம்மதம் சொன்னாலும், மனமோ அடித்துக்கொண்டது..

அடுத்து கொஞ்ச நேரத்தில் நவீன் உண்டுவிட்டு, சாப்பாடு எடுத்துக்கொண்டு கிளம்பிட, மணியாளும் நந்தினியும் உண்ண அமர, அவளின்  முகம் யோசனையில் இருப்பது கண்டு

“என்ன பொண்ணு.. என்ன யோசனை..??” என்று மணியாள் கேட்க, அவர் எப்போது பொண்ணு என்று சொன்னாலும் நந்தினியின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்துவிடும்.

இன்றும் அதுபோல சட்டென்று புன்னகை வந்து ஒட்டிக்கொண்டாலும், கண்களில் தெரியும் கலக்கம் மட்டும் போகவில்லை..

“அட என்ன பொண்ணு.. எதுக்கு இப்படி கலங்குற.. என்னாச்சு.. அவன் எதுவும் திட்டினான??” என்றதும் வேகமாய் நந்தினி இல்லையென்று சொல்ல,

“அப்புறம் என்ன?? எதுக்கு இப்படி தவிக்கிற..”

“அது அத்தை…” என்றவள், நவீன் சொன்னதை சொல்ல, மணியாள் பொறுமையாகவே கேட்டார்..

“ஹ்ம்ம் சரிதானே.. நவீன் சொல்றது சரிதான் நந்தினி.. நேத்து அவரு கூட சொல்லிட்டு இருந்தாரு.. நரேன் கல்யாணத்துக்கு போய் கூப்பிடணும்னு.. அதுக்குமுன்னாடி நீங்களா ஒருதடவ போயிட்டு வந்தா மனசுல இருக்க கொஞ்ச நஞ்ச சங்கடமும் போயிடும் பாரு..”

“அதில்லைங்க அத்தை..” என்று நந்தினி இழுக்க,

“அதெல்லாம் எதுவுமே இல்லை.. அவங்களும் நினைப்பாங்கதானே.. இங்கபாரு.. மூத்தவனுக்கு கல்யாணம் ஆகுறதுக்குள்ள உங்க அப்பா அம்மாவோட சேர பாரு.. அப்புறம் தீபா பொண்ணு வீட்டு ஆளுங்க வந்து போக இருந்தாங்கன்னா, உன்கிட்ட தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்க வரும் புரியுதா..” என்று மணியாள் எடுத்து சொல்ல, நந்தினிக்கும் மனதில் ஒரு தைரியம் வந்தது.

ஆனால் இரவெல்லாம் நவீனிடம் புலம்பித் தீர்த்துவிட்டாள்..

“நீங்க பாட்டுக்கு போலாம்னு சொல்லிட்டீங்க… எனக்கு எவ்வளோ டென்சன் தெரியுமா.. உங்கள யாரு சொல்லாம கொள்ளாம அங்க போகச் சொன்னது… நீங்க மட்டும் ஸ்கோர் பண்ண பாக்குறீங்களா…” என்று விடாது பேசியவளை அவன் சிரிப்புடன் தான் பார்த்தான்..

“இது நீ பேசல.. நாளைக்கு பிறந்த வீட்டுக்கு போற மிதப்பு பேசுது..” என்று கிண்டலடிக்க, அவளிடம் இருந்து ஒரு அடியும் வாங்கினான்..

ஆனால் சொன்னதுபோலவே அவளுக்கு முன்னே நவீன் கிளம்பி நிற்க, நந்தினி தான் நேரம் கடத்திக்கொண்டு இருந்தாள்.

“நந்தினி தயங்காம போயிட்டுவா..” என்று தரம் சாஸ்தா கூட சொல்ல, அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..

நரேனோ “ஏன்டா.. மிரட்டி கூட்டிட்டு போறியா?? இப்படி பயந்து போயிருக்கு..” என்று கேட்க,

“அவ என்னைய மிரட்டினா பத்தாதாடா..” என்று சிரித்தாலும், “நந்தினி கிளம்பலாம்..” என்று இழுக்காத குறையாய் அவளை அழைத்துச் சென்று வண்டியைக் கிளப்பினான்.

வண்டியின் வேகத்தை விட, நந்தினியின் இதயத் துடிப்பு தான் அதிகமாய் இருந்தது..

‘கடவுளே கடவுளே..’ மனதில் உறுப்போட்டாலும், “மெதுவா போங்க..” என்று நவீனிடம் சொன்னாலும்.. ஒரு நேரத்தில் அவளின் வீடு வந்துதானே ஆகவேண்டும்..

இதோ வந்துவிட்டது..

“இறங்கு நந்தினி..” என்று நவீன் சொல்ல, அவளோ இறங்காமல் இருக்க,

“நீ இறங்கினாத்தான் நான் இறங்க முடியும்..” என்றதும் தான் இறங்கினாள்..

“நீங்க முன்னாடி போங்க..” என்று சொல்ல,

“ஆகா.. இதெல்லாம் ஆட்டைக்கு ஆகாது.. போ.. இது உங்க வீடு.. நீதான் என்னை கூட்டிட்டு போகணும்..” என்று அவனும் விடாது சொல்ல,

“ஏதாவது சொன்னீங்க இப்படியே நான் திரும்ப போயிடுவேன்..” என்று மிரட்டியவளை,

“சும்மா வா டி நந்தினி..” என்று அவன் தான் மிரட்டி உள்ளே அழைத்துச் சென்றான்.

         

     

                        

                                                   

     

 

 

 

            

Advertisement