Advertisement

ஆசை – 7

“ஒருநேரம் படபடன்னு சரவெடியா பேசுற.. இன்னொரு நேரம் அமைதியா இருக்க.. இப்படியிருந்தா எப்படி நந்தினி.. புரிஞ்சுக்க கஷ்டமா இருக்காயில்லையா??” என்று சலுகையாய் அவளருகே சரிந்து படுத்தபடி நவீன் கேட்க, நந்தினியின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..

“இதுக்கும் சிரிப்பா.. ரொம்ப கஷ்டம்…”

“கல்யாணம் ஆகி ஒருவாரம் தான் ஆகுது அதுக்குள்ள எல்லாம் புரிஞ்சுக்கணும் நினைச்சா எப்படி??”

“அதெல்லாம்  சரி நீ அமைதியா இருக்கும்போது அப்பா அம்மாவ நினைச்சு வருத்தப் படுறியோன்னு கஷ்டமா இருக்கு..” என்று நந்தினியின் முகத்தை அவன்பக்கம் திருப்பியபடி சொல்ல,

“ம்ம்… அப்படியெல்லாம் இல்ல.. பேசவேண்டிய நேரத்துல தானே பேசணும்.. அப்போதான் நம்ம பேசுற பேச்சுக்கும் ஒரு மதிப்பிருக்கும்…” என்றவள், “நான் இங்க சந்தோசமா தான் இருக்கேன்.. நீங்க எதுவும் யோசிக்கவேணாம்..” என,

“ஹ்ம்ம் உனக்கு உங்க வீட்டு நினைப்பு வரலையா நந்தினி..??” என்று கேட்டவனை கண்களை விரித்துப் பார்த்தாள்.

‘கல்யாணம் செஞ்சுவைங்க’ என்று நவீன் சொன்னதுமே, இதை எதிர்பார்த்தேன் என்பதுபோல் தர்மசாஸ்தா இருந்தாலும், நரேனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் இருக்கையில், இடையில் இவர்கள் திருமணத்தை எப்படி நடத்த என்று யோசனையாய் இருந்தது.

நவீனது இந்த திருமணத்தால், நரேனுக்கு ஏற்பாடு செய்திருக்கும் திருமணத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று தோன்ற,

“நீ என்னம்மா சொல்ற??” என்று நந்தினியைப் பார்த்துக் கேட்டார்.

அவளுக்கு நவீன் சட்டென்று திருமணம் என்ற முடிவை எடுப்பான் என்று தெரியாது.. அதிலும் இப்போது கேள்வி தன்பக்கம் வரவும் என்ன சொல்ல என்பதுபோல் நவீன் முகம் பார்க்க,

“உன் மனசுல என்ன தோணுதோ அதை சொல்லு நந்தினி..” என்றான்.

“ம்ம்..” என்று யோசித்தவள், “முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சுக்கணும்.. நான் இப்படி கிளம்பி வந்ததுனாலத்தான் உங்க எல்லாருக்கும் குழப்பம்.. கஷ்டம்..” என்று கரம் குவித்தவளை, வேகமாய் வந்து பிடித்துக்கொண்டார் மணியாள்.

“அட.. பொண்ணு.. அப்போவே என்ன சொன்னேன்.. இப்படியெல்லாம் இனிமே பேசக்கூடாது..” என்றவர்,

“என்னங்க.. வயசு பொண்ணு.. வீட்ல சும்மாவா வைக்க முடியும்.. பெரிய சம்பந்தி வீட்ல பேசி, ஒரு முடிவு பண்ணலாம்..” என்றுசொல்ல, தர்மசாஸ்தாவிற்கும் அதுவே சரியெனப் பட,

“நரேனு.. உன் மாமனாருக்கு போன் போடுடா..” என்றவர், அவன் அழைத்து ‘அப்பா பேசணும் சொல்றாங்க..’ என்று சொல்லிக் கொடுக்க, தர்மசாஸ்தாவும் மேலோட்டமாய் விவரம் சொன்னார்.

அவர் பேசியதில் ஒருவார்த்தைக் கூட நந்தினி வீட்டினரை இறக்கி பேசவில்லை என்பது அவளது கவனத்திலும் பதிந்து இன்னும் இவ்வீட்டினர் மீது மதிப்பு கூடியது.

கொஞ்ச நேரம் பேசியவர், “சரிங்க ரொம்ப சந்தோசம்..” என்று பேசி முடித்தார்.

“அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம் …” என்றவர், “சரி நான் ஜோசியர் கிட்ட பேசிட்டு நாள் சொல்றேன்..” என்று கிளம்பிவிட்டார்.

நரேனும் அவரோடு கிளம்ப, “என்னங்க சாப்பிட்டுப் போங்க..” என்று மணியாள் சொல்ல,

“இருக்கட்டும் மணியா.. நேரமாச்சு..” என்றவர், “நவீனு இன்னிக்கு நீ வீட்லயே இரு..” என்றுவிட்டு கிளம்ப, மணியாள் வேகமாய் அவருக்கும் நரேனுக்கும் காபி கலந்து எடுத்து வர, நந்தினி இதெல்லாம் ஒரு வேடிக்கைப் போல் பார்த்திருந்தாள்.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. ஒரே நாளில்.. ஒருநாள் கூட இல்லை.. கொஞ்ச நேரத்தில் என்னென்னவோ நடந்துவிட, அவள் வாழ்வே மொத்தமாய் மாறிப்போனது..

கொஞ்ச நேரத்தில் நரேனும், தர்மசாஸ்தாவும் கிளம்பிட, போகும்போது, “மணியா கடைல சொல்லிட்டு போறேன்.. துணி கொண்டு வந்து காட்டுவங்க.. நந்தினிக்கு எது பிடிக்குதோ அது எடுக்கட்டும்.. கொஞ்ச நாளைக்கு வெளிய எங்கயும் போகவேணாம்..” என்றும் சொல்லிவிட்டு போக, எத்தனை யோசிக்கிறார்கள் என்று தோன்றியது..

நவீனும் அங்கே அமைதியாய் அமர்ந்திருக்க, நரேன் வந்தவனோ “டேய் இதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா… கல்யாணம் நிச்சயம் ஆனா நானே இதுவரைக்கும் தனியா தீபாவ பார்த்ததில்ல.. ஆனா நீ..” என்றவன் நந்தினியை ஒருபார்வை பார்த்துவிட்டு நவீனைப் பார்க்க, நவீனுக்கு அத்தனை நேரம் இருந்த இறுக்கம் மாறி சிரிப்பு வந்தது..

“போடா டேய்.. அதுக்கெல்லாம் மச்சம் வேணும்.. போ..” என்று அவன் முதுகைப் பிடித்துத் தள்ள,

“ம்மா.. இத்தனை நாள் எனக்கு பஸ் கதை சொல்வான்ல இவன்.. இப்போ கேளு.. கதை கதையா சொல்வான்..” என்று நரேன், மணியாளிடம் கத்திவிட்டு போக, அது நந்தினிக்கு புரியவில்லை என்றாலும் என்னவோ சந்தோசமாய் பேசுகிறார்கள் என்று தோன்றியது..

என்னவோ தான் இங்கே வந்ததை யாரும் தவறாய் நினைக்கவில்லை என்று மனதில் தோன்றவும் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நந்தினி அப்படியே அமைதியாய் இருப்பதைக் கண்ட நவீன், நரேன் சென்றபிறகு அருகில் வந்து அமர்ந்தான். மணியாள் உள்ளே வேலையாய் இருந்தார்.

அத்தனை பெரிய ஹாலில், இப்போது அவளும் அவனும் மட்டும் அமர்ந்திருந்தது எப்படியோ வித்தியாசமாய் இருக்க, சற்றே அமைதியில் இருந்த மனம், பந்தயக் குதிரையாய் ஓட ஆரம்பித்தது.. கைகளை இறுக பிணைத்து, தரையைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

“நந்தினி.. இப்போ ஏன் இப்படி இருக்க??”

“ஒண்ணுமில்ல..” என்பதுபோல் தலையை ஆட்டினாள்.

“சரி நம்பிட்டேன்..”

“இல்ல.. அது மனசுக்கு ஒருமாதிரி இருக்கு..”

“ஹ்ம்ம் இல்லாம இருந்தாதான் ஆச்சர்யப்படனும்.. கொஞ்ச நாள் அப்படித்தான் நந்தினி இருக்கும்.. நீ எதுவும் நினைக்காத சரியா..”

“ம்ம்ம்.. என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம்..” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிட,

“ஏய் என்ன இது.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. சொல்லப்போனா உன் மனசுல நீ எந்தளவுக்கு என்மேல பாசம் வச்சிருக்கன்னு எனக்கு இப்போதான் தெரிஞ்சது.. என்னை நம்பி வந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..” என்றவன் அவள் கண்ணீரை துடைத்துவிட,

“நந்தினி.. இந்தா சாப்பிடு..” என்று ஒரு தட்டில் தோசையும், இட்லி பொடியும் வைத்துக்கொண்டு வந்து கொடுத்தார் மணியாள்.

நந்தினி திகைத்துப் போய் பார்க்க, “என்ன பாக்குற..ம்ம் சாப்பிடு.. இவனெல்லாம் சரியான சாப்படு ராமன்.. அவன கல்யாணம் பண்ண போற.. தெம்பு வேணாமா.. பிடி… சட்னி அரைச்சு ரெடி பண்ணனும்னா நேரமாகும்ல அதான் பொடி போட்டேன்..” என்றவர் அவள் கையை பிடித்து தட்டை வைக்க, நந்தினிக்கு இன்னும் தொண்டை அடைத்தது..

என்னமாதிரியான மனிதர்கள் இவர்கள் என்று தோன்ற, என் வீட்டிலும் இப்படி இருந்திருந்தால் எத்தனை நன்றாய் இருக்கும் என்று தோன்றியது.. ஒன்றும் சொல்லாமல் வேகமாய் தோசையை வாயில் வைக்க,

“டேய் அவ சாப்பிடுறத நீ என்ன பார்த்துட்டு இருக்க.. போ.. வேற வேலையிருந்தா பாரு..” என்று நவீனை மணியாள் விரட்டவும், நந்தினி சிரித்துவிட,

“அ.. இப்படிதான் சிரிச்ச முகமா இருக்கணும்..” என்றுவிட்டு போனார்..

“அம்மா சூப்பர் டைப்..” என்று நந்தினி சொல்ல,

“அம்மாவா.. ஓய்.. எங்கம்மாக்கு நாங்க ரெண்டு பசங்க இருக்கோம்.. அத்தைன்னு கூப்பிடு..” என்று மிரட்டலாய் சொல்ல,

“ஹா ஹா.. அத்தை சூப்பர் டைப்..” என்று சொல்ல,

“அத்தை பெத்த பையனும் சூப்பர் டைப் தான்மா..” என்று நவீன் தானாய் கெத்துக் காட்ட,

“ஆமாமா..” என்று நந்தினியும் கிண்டலாய் தலையை ஆட்டிக்கொண்டாள்.

கொஞ்ச நேரத்திலேயே தர்மசாஸ்தா அலைபேசியில் அழைத்து, அடுத்து வரும் மூன்று நாட்களில் நல்ல முஹூர்த்தம் வருவதாகவும் அன்றே திருவாணைக்காவல் கோவிலில் வைத்து திருமணத்தை முடித்துவிடலாம் என்று சொன்னார்.

நாள் குரிக்கவுமே மறுநாள் நவீனும் தர்மசாஸ்தாவும் நேராய் நந்தினி வீட்டிற்குத் தான் சென்றனர்.. வீட்டில் வேலையாய் சிந்தாமணி இருக்க, சுப்புராஜும் அங்கேதான் இருந்தார்..

இவர்களை எதிர்பார்க்கவில்லை போல.. பார்த்ததும் அவர் திகைத்துப்போய் ஏழ, “ஒரு நல்ல விஷயம் பேசலாம்னு வந்திருக்கோம்..” என்று தர்மசாஸ்தா விஷயத்தை சொல்ல,

சிந்தாமணிக்கு இந்த சந்தர்பத்திலாவது நந்தினியோடு சேர்ந்துவிட மாட்டோமா என்றுத் தோன்றியது.

“என்னங்க அவ நம்ம பொண்ணுங்க..” என்று சொல்ல,

“அப்போ என் தங்கச்சிக்கு என்ன பதில் சொல்றது.. அவளும் என் ரத்தம் தானே..” என்றார் சுப்புராஜ்..

“அவங்களுக்குனு குடும்பம் இருக்கு.. தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு.. ஆனா நந்தினி உங்க பொண்ணு. இனிதான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போகுது.. என்ன இருந்தாலும் நீங்க பெத்தவங்க.. நந்தினி அங்கயிருந்தாலும், உங்களை எதிர்ப் பார்க்க மாட்டாளா..??” என்று நவீன் தன்மையாகவே பேச,

“அவ எங்க இருந்தாலும் நல்லாயிருக்கட்டும்…” என்றவர், உள்ளே சென்று அவளுக்கு செய்து வைத்திருந்த நகை எல்லாம் எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டு வந்தார்..

“இதெல்லாம் நந்தினிக்கு நாங்க செஞ்சு வச்சிருந்தது..” என்று பையை தர்மசாஸ்தா முன் நீட்ட,

“நாங்க உங்களைத் தான் எதிர்பார்க்கிறோம்.. நீங்க வந்து இதை நந்தினிக்கிட்ட கொடுத்தா எங்களுக்கும் சம்மதம்..” என்றவர் எழுந்துவிட, நவீனும் எழுந்துவிட்டான்..

சிந்தாமணிக்கோ மனம் தவியாய் தவித்தது.. சுப்புராஜுக்கும் அப்படித்தான் என்று தெரியும்.. இருந்தாலும் அவர் தங்கைக்காக பார்க்கிறார் என்று அதுவும் புரிந்தது. ஆனாலும் பெற்ற மகளை அப்படியே விட முடியுமா..

“நந்தினிய நல்லபடியா பார்த்துக்கோங்க..” என்று சிந்தாமணி சொல்ல, அவருக்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றனர் அப்பாவும் மகனும்.

அவர்கள் சென்றதுமே “என்னங்க.. நீங்க பண்றது உங்களுக்கே நல்லாருக்கா.. ராஜிக்கிட்ட நம்மதான் பேசணும்.. அதுக்காக நந்தினிய அப்படியே விட முடியுமா.. தப்பு நம்ம பக்கம் இருக்கு..” என்று சொல்ல, சரியாய் அந்த நேரம் ராஜியும் நாகராஜும் வந்தனர்..

“அண்ணே.. இந்த கூத்த கேட்டியா.. அவனுங்க கல்யாணமே ஏற்பாடு பண்ணிட்டாங்க..” என்று சொல்லியபடி ராஜி வர,

“மாமா.. இப்போக்கூட சொல்லுங்க.. பசங்கக் கூட போய் அவனுங்களை அடிச்சுப் போட்டு, நந்தினிய இழுத்துட்டு வர்றேன்.. எங்க கல்யாணம் மட்டும் முடியட்டும் அதுக்கப்புறம் இருக்கு அவளுக்கு.. வீட்ட விட்டு போன கால உடைக்கிறேனா இல்லையான்னு பாருங்க..” என்று சொல்ல, சிந்தாமணிக்கும் சரி சுப்புராஜுக்கும் சரி பகீரென்றது..

‘காலை உடைப்பானா..??’

இப்படியான ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்கத்தான் இவர்கள் இத்தனை ஆசைப்பட்டனரா?? கடவுளே என்றிருந்தது..

“டேய் என்னடா சொல்ற..??”

“பின்ன என்ன மாமா?? அவளை எல்லாம் அப்படியே சும்மா விடக் கூடாது.. பேச வாய் திறந்தாலே நாலு போடு போடணும்..” என,

“போதும் நிறுத்து..” என்று சிந்தாமணி கோபத்தில் கத்தியேவிட்டார்..

“என்ன பேச்சு பேசுற.. எங்க முன்னாடி எங்க பொண்ணையே இப்படியெல்லாம் பேசுற.. இதுல கல்யாணம் செஞ்சுக் கொடுத்திருந்தா அவளை சித்ரவதை தான் பண்ணிருப்ப போல..” என்று ஆங்காரமாய் கேட்க,

“ஆமா அவ பெரிய உத்தம சிகாமணி..” என்று நாகராஜ் பேச ஆரம்பிக்கும் போதே, சுப்புராஜ் ஓங்கி அறைந்திருந்தார் “என்னடா பேசுற…” என்று கேட்டபடி..

“அண்ணே…” என்று ராஜியும்… “மாமா…” என்று நாகுவும் ஒருசேர அலற,

“போதும்… ரெண்டுபேரும் கிளம்புங்க.. இப்படி வந்து வந்து எதாவது பேசித்தான்.. இன்னிக்கு என் பொண்ணு இன்னொருத்தர் வீட்ல போய் உட்காந்திருக்கா..” என்று சுப்புராஜ் சொல்ல,

“அண்ணே.. என்னண்ணே சொல்ற.. அப்போ எங்கனால தான் எல்லாமா..” என்று உடனே ராஜி அழத் தொடங்க,

“ம்ம்ச்… ராஜி உன்னைக் கெஞ்சி கேட்கிறேன்.. ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கோம்.. தயவு செஞ்சு இப்போ கிளம்புங்க.. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகும்.. மனசு சரியில்லாதப்போ ஒருத்தருக்கொருத்தர் பேசினா இன்னும் தான் பிரச்சனை அதிகமாகும்..” என்றவர், நாகுவிடம் திரும்பி

“இனியொரு தடவ நீ அங்க போய் பிரச்சனை செய்யணும் நினைச்சே நானே உன்னை என்ன செய்வேன்னு தெரியாது.. அடுத்த வாரம் நீ துபாய்க்கு போறல்ல.. கிளம்பிப் போறது வரைக்கும் இருக்குற இடம் தெரியக்கூடாது..” என்று எச்சரிக்க, அம்மாவும், மகனும்  முறைத்துவிட்டுக் கிளம்பினர்.   

சிந்தாமணிக்கு இப்போதுதான் ஓரளவு மனம் நிம்மதியானது. எங்கே இவர்களின் பேச்சைக் கேட்டு, நந்தினியை அப்படியே விட்டுவிடும் நிலை வருமோ என்று அஞ்சியவருக்கு சுப்புராஜின் பேச்சு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

“என்னங்க.. அப்போ நந்தினி..” என்று இழுக்க,

“அவளாத்தானே போனா.. அவளே பேசட்டும் பாப்போம்..” என்றுவிட்டார்..

அங்கே நவீன் வீட்டிலோ, திருமண வேலைகள் ஜரூராய் நடக்க, நந்தினிக்கு ஒவ்வொரு நொடியும் பக்பக்கென்றது.. அதிலும் திருமணத்திற்கு முதல் நாள் எல்லாம் மிகவும் பதற்றமாக இருக்க,

“என்ன நந்தினி நீ இப்படி இருக்க..??” என்றான் நவீன்..

“அத்தை கொஞ்ச நேரம் நான் மாடில நடந்துட்டு வரவா..” என்று கேட்டு, மணியாள் சரியென்று சொன்னப் பிறகே மாடிக்கு வந்திருந்தாள்..

என்னவோ மனம் அடித்துக்கொண்டது.. நல்லபடியாய் இந்த திருமணம் நடக்கவேண்டும் என்று இருந்தாலும், கடைசிவரைக்கும் அப்பாவும் அம்மாவும் வராமலே போய்விடுவரோ என்றும் அவள் மனம் பயந்தது..

‘அப்.. அப்போ இப்போவரைக்கும் கூட என் பக்கம் இருக்கும் நியாயம் புரியலையா???’ என்று நினைத்தபடி நடந்துகொண்டு இருக்க, நவீன் வந்து சேர்ந்தான்..

“உன் முகமே சரியில்ல நந்தினி..”

“ஒருமாதிரி இருக்குங்க.. பயமா இருக்கு..” என்றவளின் கரங்களை பிடித்து தன்னருகே நிறுத்திக்கொண்டான்..

“ஹ்ம்ம்.. நீங்க இங்க இருக்கப்போ ஒண்ணும் தெரியலை.. நீங்க வெளிய போயிட்டா பயமா இருக்கு.. எதுவும் பிரச்சனை ஆகிடுமோன்னு..” என்று நந்தினி மறைக்காமல் சொல்ல,

“ஒண்ணும் ஆகாது நந்தினி.. நீ எதுக்கும் பயப்படாத..” என்று ஆறுதலாய் அவள் கரத்தினை வருடிக்கொடுத்தான்..

“அப்பா அம்மா இன்னும் என்னை புரிஞ்சுக்கலை..”

“எல்லாத்துக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும் நந்தினி.. அவங்களுக்கும் இதெல்லாம் அதிர்ச்சித்தானே.. கொஞ்சம்…”

“ம்ம்.. ஆனாலும் மனசு கேட்கல..”

“சரி கவலைப் படாத.. நாளைக்கு கல்யாணம் முடிச்சிட்டு நேரா அங்க போறோம்.. அவங்க ஆசிர்வாதம் செய்யலைன்னாலும் நம்மாலே அவங்க காலுக்கு விழுது ஆசிர்வாதத்த எடுத்துட்டு வந்துடலாம்..” என்று அவளை சிரிக்கவைக்கவென்று சொல்ல,  அவன் சொன்ன பாவனையில் நந்தினி முகத்தில் மெல்லியதாய் ஒரு புன்னகை..

“ம்ம்..” சொல்லியபடி அவன் தோள்மீது சாய்ந்துக்கொண்டாள்..

என்னவோ அவனிடம் இந்த தயக்கம், ஒதுக்கம் இதெல்லாம் தோன்றுவதில்லை. இயல்பாய் அங்கே ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட, காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லவேயில்லை இருவரும்.. இது சொல்லி புரியும் உறவுமல்ல, அதையும் தாண்டியாகிவிட்டது இனி வாழ்ந்து தான் காட்ட வேண்டும் என்ற நிலைக்கு இருவருமே வந்திருக்க நந்தினி வெகு இயல்பாய் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்..

“ஹ்ம்ம்.. நாளைக்கு கல்யாணம்.. இன்னிக்கு பொண்ணு என் தோள்ல சாஞ்சிருக்கா.. யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை.. நவீனு நீ ரொம்ப லக்கிடா..” என்று சொல்லும் போதே.

“டேய்.. இங்கயுமாடா நீங்க…” என்றபடி வந்தான் நரேன்..

அவனைக் கண்டதும் நந்தினி வேகமாய் விலகி நிற்க, நவீனோ என்னடா என்பதுபோல் பார்க்க,

“என்னடா பாக்குற.. கீழ்தான் எப்போ பார் ரெண்டு பெரும் ஜோடியா காட்சித் தரீங்க அப்படின்னா இங்கேயுமா டா… கொஞ்சமாது ஃப்ரீயா போன் பேசலாம்னு வந்தா இங்கயும் போஸ் கொடுத்து நிக்கிறீங்க..” என்று நரேன் கிண்டல் அடிக்க, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது..

“எல்லாம் கொஞ்ச நாள் தானேடா பொறுத்துக்கோ.. அண்ணி வந்துடுவாங்க..” என்று நவீன் சொல்ல,

“ஹ்ம்ம் அவ வர்றதுக்குள்ள என்னை பெரியப்பா ஆக்காம இருந்தா சரி..” என்று நரேனும் சொல்ல,

‘ஐயோ இதென்ன..’ என்று முழித்த நந்தினி வேகமாய் கீழே ஓடிவிட்டாள்.

“இப்போ நிம்மதியா..” என்றபடி நவீனும் கீழே செல்ல, நரேன் சிரித்துக்கொண்டான்..

மறுநாள் அழகாய் விடிய, நவீன் நந்தினியின் திருமணமும் அழகாய், ஆடம்பரமில்லாமல் அமைதியாய் நடந்தேறியது. தாலி கட்டும் கடைசி நோடிவரைகும் நந்தினியின் பெற்றோர் வருவர் வருவர் என்று எல்லாம் எதிர்பார்க்க யாரும் வந்தபாடில்லை..

நந்தினிக்கோ மனதிற்குள் மிகவும் ஏமாற்றமாய் போக,

“அவங்க வரலைன்னா என்ன.. நம்ம போவோம்..” என்று நவீன் சொல்ல, வேறு வழியில்லாமல் மணமக்களை அழைத்துக்கொண்டு அங்கே நந்தினியின் வீட்டிற்கு சென்றனர் அனைவரும்..

ஆனால் அங்கே பூட்டிய வீடுதான் இவர்களை வரவேற்க, நந்தினிக்கு பெரும் குழப்பமாய் போனது.. கலங்கிய கண்களோடு, குழப்பமாய் நவீன் முகம் பார்க்க, அவனும் யோசனையாய் தான் நின்றிருந்தான்.

“நந்தினி அப்பா அம்மா திருப்பதிக்கு போயிருக்காங்களாம்.. வர ஒருவாரம் ஆகுமாம்..” என்று நரேன் பாக்கத்து வீட்டில் விசாரித்துவிட்டு வந்து சொல்ல, மீண்டும் எல்லாம் நவீன் வீட்டிற்கு வந்தனர்..

இதோ அந்த திருமணமும் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது.. நந்தினி பல நேரங்களில் நன்றாகவே இருந்தாலும், அவள் அமைதியாய் இருக்கும் நேரமெல்லாம் நவீனுக்கு மனம் மிகவும் சங்கடமாய் இருக்கும்..

சரி அவள் மனதில் இருப்பதை வெளிக்கொணர வேண்டும் என்றுதான் அப்படியொரு கேள்வியைக் கேட்டான்.. வீட்டு நினைப்பு வரவில்லையா என்று.. ஆனால் அதைக் கேட்டதும் நந்தினியின் முகம்தான் வாடிவிட்டது..

“எப்படி வராம இருக்கும்.. சொல்லுங்க.. மனசு ஒவ்வொரு நிமிசமும் தவிக்குது..” என்று சொல்ல,

அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன், “அப்போ இங்க சந்தோசமா இருக்கன்னு சொன்ன..” என்று கேட்டவன், அவள் தலையை இன்னும் அழுத்தமாய் தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான்..

“ஹ்ம்ம் சந்தோசமா இருக்கேன்.. அதுல எந்த மாற்றமும் இல்லை.. ஆனா நடுவுல கஷ்டமாவும் இருக்கு..”

“ஹ்ம்ம் எல்லாம் சரியா போகும் நந்தினி..” என்று ஆறுதல் சொன்னவன், திடீரென்று நினைவு வந்தவனாய்,

“ஆமா உனக்கு எத்தனை வயசு??” என்று கேட்க, படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து அவன் முகம் பார்த்தாள்..

“சொல்லு நந்தினி..”

“இப்போ எதுக்கு அது??”

“சும்மாதான் சொல்லு..”

“ஹா.. இருபத்திரெண்டு..”

“ஹப்பாடி..” என்று நவீன் நிம்மதி பெருமூச்சு விட,

“ஏன் என்னாச்சு..??” என்றாள் நந்தினி புருவம் சுளித்து..

“இல்ல பார்க்க கொஞ்சம் ரவுண்ட்டா இருக்கியா.. அதான் என்னைவிட கொஞ்சம் வயசு ஜாஸ்தியா இருக்குமோன்னு..” என்று நவீன் இழுக்கும் போதே,

“என்னது.. ரவுண்டா இருக்கேனா நானா..” என்று தலையணைக் கொண்டு அவனை அடித்து வெளுக்க,

“ஐயோ அம்மா..” என்று நவீன் வேண்டுமென்று சப்தமிட,

“ஷ்.. ஏன் கத்துறீங்க.. ஏற்கனவே உங்கண்ணன் பாவம்.. இதுல இப்படியெல்லாம் சத்தம் போட்டீங்க அவ்வளோதான்..” என்று சொல்ல,

“ஆமால்ல…” என்றவன் “அப்போ சத்தம் போடா முடியாம பணிஷ் பண்ணு..” என்றான் உல்லாசமாய்..

“என்னது என்ன சொல்றீங்க??” என்று நந்தினி புரியாமல் கேட்க,

“ம்ம்ச் லூசு.. இப்படி பண்ணுனு சொன்னேன்..” என்றவன் நந்தினியை அணைத்து, அவளிதழில் முத்தமிட்டான்..         

         

    

                                  

 

            

    

  

     

 

   

      

  

       

   

     

Advertisement