Advertisement

ஆசை – 6

கதவுத் தட்டப் படவுமே, நந்தினிக்கு தூக்கி வாரிப் போட, தர்மசாஸ்தாவோ மணியாளிடம் நந்தினியை உள்ளே அழைத்துக்கொண்டு போகச் சொன்னார்.  நந்தினி உள்ளே சென்றதுமே, நவீன் சென்று கதவைத் திறக்க, ஒரு கூட்டமே வெளியே நின்றிருந்தது.

நவீன் கதவு திறந்ததுமே அனைவரும் உள்ளே வேகமாய் வர, தர்மசாஸ்தாவோ நிதானமாக எழுந்து நின்றார். நவீனுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது ஆனால்.. எந்தக் காரணம் கொண்டும் இனி நந்தினி அவனை விட்டு போய் விடும் சூழலைக் கொண்டு வந்திடக் கூடாது என்பதில் மிக மிக உறுதியாய் இருந்தான்..

வீட்டினுள் நுழைந்ததுமே சுப்புராஜ் பேசுவதற்கு முன்பு, நாகராஜ் “நந்தினி… ஏய் நந்தினி… வெளிய வாடி..” என்று வீடே அதிரும் படி கத்த, ராஜியோ விட்டால் வீடு முழுவதும் சென்று தேடி விடும் வேகத்தில் இருக்க,

சிந்தாமணியோ கண்களில் கசிந்த நீரைத் துடைத்தபடி  மகள் முகத்தை காணும் ஆவலில் உள்ளே எட்டிப் பார்த்துகொண்டு இருந்தார். சுப்புராஜோ நேராக தர்மசாஸ்தாவிடம் வந்தவர், “எங்க பொண்ண எங்கக்கூட அனுப்பி வைங்க…” என்று சொல்ல,

தர்மசாஸ்தா நவீன் முகத்தை பார்க்க, அவனோ தன் தந்தையின் முகத்தை தீர்க்கமாய் பார்த்தான்.

அவ்வளவு தான் ஒருநொடி தான் இந்த பார்வை பரிமாற்றம், நரேனும் நவீனும், தர்மசாஸ்தாவின் பின்னே வந்து நிற்க, அவரோ “முதல்ல எல்லாரும் உட்காருங்க… மணியா இங்க வா.. நீயும் வந்து உட்கார்… நவீன் அவங்களுக்கு உள்ள இருந்து சேர் எடுத்துப் போடு… நரேன்.. அந்த பக்கம் ஃபேன் போட்டு விடு…” என்று அடுத்தடுத்து சொல்ல,

“இங்க யாரும் உக்காந்து பேசி விருந்து சாப்பிட வரல… முதல்ல அவளை கூப்பிடுங்க…” என்று நாகராஜ் குரலை உயர்த்த,

“ஏய் இப்படி கத்தி பேசுறத நிறுத்து.. இது எங்க வீடு இங்க வந்து இப்படியெல்லாம் பேசக் கூடாது…” என்று நவீன் அவன் முன்னே சென்று நிற்க,

சுப்புராஜ் தான் “நாகு.. பெரியவங்க பேசும்போது.. கொஞ்சம் சும்மா இருக்கியா…” என்று அரட்டியவர், அவர் தங்கையிடமும், தங்கையின் கணவரிடமும் நாகுவை கண் காட்ட, அவர்களும் அவனை இழுத்துக்கொண்டு போய் சற்று தள்ளி நின்றனர்.

இதற்கு நடுவே நந்தினியை அறைக்கு அழைத்துச் சென்ற மணியாளுக்கு என்ன தோன்றியதோ “ஏன் பொண்ணே… இப்படி கிளம்பி வந்திருக்கியே.. பயமா இல்லையா…” என்று கேட்க, சட்டென்று நந்தினிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கிளம்பி வருகையில் அவள் இதயம் ரயிலைப் போல தடதடத்தது அவளுக்குத் தானே தெரியும்.. ‘பயமில்லையாவா…’ என்று நினைத்தவளுக்கு முகத்தில் அத்தனை நேரம் இருந்த பதற்றம் மாறி லேசாய் முறுவல் தோன்ற,

“அட.. இப்போ நான் என்ன கேட்டேன்னு சிரிக்கிற… ஆமா இதென்ன சேலை எல்லாம் நனைஞ்சு போச்சு.. வேற குடுக்குறேன் கட்டிக்கோ…” என்று சகஜமாய் சொல்ல,

அவரது பேச்சில் நந்தினி சற்றே திகைத்துத் தான் போனாள்.. நியாயமாய் பார்த்தால் மணியாளுக்கு இந்நேரம் கோவம் தான் வரவேண்டும். ஆனால் அதில்லாமல் அவர் இப்படிப் பேச, நந்தினிக்கு அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தில்,

“உங்.. உங்களுக்கு என்மேல கோவமே இல்லையா???” என்று கேட்டே விட்டாள்..

“கோவமா??? முதல்ல என்ன பிரச்சனைன்னு தெரியாது.. ஆனா எதுவோ உனக்கு கஷ்டமா இருக்கப்போய் தானே இப்படி கிளம்பி வந்திருக்க. எங்க மேல நம்பிக்கை வச்சு வந்திட்ட.. அதுனால என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்..” என்றவர் அவள் முகத்தை பார்த்து “அதுக்காக நீ கிளம்பி வந்தது சரின்னு சொல்ல மாட்டேன்..” என,

நந்தினிக்கு இன்னும் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. நவீன் சரியான அப்பா அம்மாவின் கலவை என்று தோன்றியது..

“எனக்கு வேற வழி தெரியலம்மா.. அதான் வந்துட்டேன்…” என்று நந்தினி தலை குணிந்து சொல்ல,

“இதுக்கு ஏன் தலை குனியுற.. நிமிந்து நின்னு பேசணும் பொண்ணுங்க.. அப்போதான் எனக்கு பிடிக்கும்.. எங்க பசங்களையும் அப்படித்தான் வளர்த்திருக்கோம்.. வீட்டு வேலையும் செய்வானுங்க.. வீராப்பாவும் இருப்பானுங்க…” என்று சொல்கையில் தான் வெளிய தர்ம சாஸ்தா மணியாளை அழைக்கும் சத்தம் கேட்க,

வேகமாய் பீரோவில் இருந்து ஒரு துண்டையும், அவள் சட்டைக்கு மேட்சாய் ஒரு சேலையையும் எடுத்துக் கொடுத்தவர், “இந்தா நல்லா தொவட்டிட்டு கட்டிக்கோ.. ஃபேன்ல  நின்னா சட்டை சீக்கிரம் காய்ஞ்சிடும்… நான் வந்து கூப்பிடாம வெளிய வராத…” என்று சொல்லிவிட்டே கிளம்பிச் சென்றார்.

வெளியே பேசும் சப்தமெல்லாம் நந்தினிக்கு நன்றாகவே கேட்டது..  அப்பா அம்மா என்று அவர்கள் பேசுவது எல்லாம் கேட்டது.. எழுந்து போய் பார்க்கவேண்டும் என்றும் தோன்றியது.. இனி அவளால் அது முடியாது.. எப்போது அவளுக்கே தெரியாமல் நிச்சயம் வரை ஏற்பாடு செய்தனரோ அப்போதே மனதளவில் என் வீடு என் அப்பா என் அம்மா என்ற பிணைப்பு அவளுக்கு விட்டுப்போனது.

நாகராஜை பிடிக்கவில்லை என்று சொல்லியும் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றால் அப்போது அவளது பேச்சிற்கு என்ன மதிப்பு அங்கே என்று தோன்ற, இப்போதும் அவளுக்கு மனம் வலித்தது.

நவீன்.. அவனை மட்டும் தான் இந்த வீட்டில் அவளுக்குத் தெரியும். ஒரு வேகத்தில்… ஒரு உந்துதலில் கிளம்பி வந்துவிட்டாள். ஆனாலும் நவீன் வீட்டினர் அவளை நடத்திய விதம் மனதிற்கு அத்தனை பிடித்திருந்தது..

‘கடவுளே  பெருசா எதுவும் பிரச்சனை வந்திடக்கூடாது.. அதுவும் என்னால இந்த வீட்ல இருக்கவங்களுக்கு பிரச்சனை வந்திடக்கூடாது…’ என்று வேண்டியபடி, சேலையை மாற்றிக் கட்டியவள், அணிந்து வந்திருந்த மேற்படி நகைகளை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு, அமைதியாய் அமர்ந்திருந்தாள். மனம் முழுக்க வெளியே என்ன நடக்கிறது என்பதிலேயே இருந்தது.

தர்மசாஸ்தா ஆரம்பத்தில் இருந்து நிதானமாகவே தான் பேசினார்.

“முதல்ல உட்காருங்க.. உட்காந்து பேசுங்க..” என்று மீண்டும் சொல்ல, வந்தவர்களும் எத்தனை நேரம் தான் நிற்க முடியும். மணியாளும் வந்து அவர் அருகே நிற்க, ‘நீயும் உட்கார்’ என்பது போல் பார்த்தார்.

அடுத்த நொடி அனைவரும் இருக்கைகளில் அமர, “பொண்ண பெத்தவங்க அவங்க.. பொண்ணு வந்தது எங்க வீட்டுக்கு.. அதுனால முதல்ல நாங்க பேசிக்கிறோம்…” என்றவரின் முகத்தில் தேவையில்லாமல் நடுவில் யாரும் பேசக்கூடாது என்ற செய்தி இருந்தது.

சுப்புராஜிற்கும் அதுவே சரியெனப்பட, “நாங்களும் இங்க வேற எதுவும் பேசணும்னு வரலை.. எங்களுக்கு எங்க பொண்ணு தான் முக்கியம்..  அனுப்பிடுங்க.. வேற எந்த பிரச்னையும் வேணாம்…” என்று சொல்ல,

“மாமா.. என்ன கெஞ்சிட்டு இருக்கீங்க.. அவளைப் போய் இழுத்துட்டு வர்றத விட்டுட்டு…” என்று அவன் சொல்லும் போதே,

“எங்க போ.. உள்ள போய் மட்டும் நீ பாரு.. இழுத்துட்டு வர்றதுக்கு அவ என்ன ஆடா மாடா.. மனுசிடா.. முதல்ல அந்த மரியாதை கொடுக்கப் பாரு…” என்று நவீனும் எகிற,  

“இங்க பாருங்க.. நாங்க யாரும் பிரச்சனை பண்ண வரல. எங்க பொண்ண அனுப்புங்க அது போதும்…” என்று சுப்புராஜ் இன்னும் குரலை உயர்த்த,

“நாங்களும் அதைத்தான் சொல்றோம்.. எங்களுக்கும் பிரச்சனை பண்ணனும்னு அவசியம் இல்ல.. ஆனா உங்க பொண்ணு எங்களை நம்பி வந்திடுச்சு.. நந்தினியா உங்கக் கூட வர விருப்பப்பட்ட  தாராளமா கூட்டிட்டு போங்க…” என்று தர்ம சாஸ்தா சொல்லும் போதே,

“அதெப்புடி வருவா.. அதான் உங்க மகன் நல்லா அவ மனச மயக்கி வச்சிருக்கானே.. பின்ன எப்படி வருவா.. கொஞ்ச நேரத்துல நிச்சயம்னு தெரிஞ்சும் இவ்வளோ தைரியமா கிளம்பி வந்திருக்கா அப்படின்னா எல்லாம் உங்க மகன் கொடுத்த தைரியம் தான்…” என்று ராஜியும் பேச,

தர்மசாஸ்தா இதற்கு என்ன சொல்ல என்பதுபோல் நவீனைப் பார்க்க, “அப்பா நான் பேசிக்கிறேன்…” என்றவன், இன்னும் கொஞ்சம் முன்னே தள்ளிப் போய் நின்று,

“ஆமா.. என்னை நம்பித்தான் வந்திருக்கா.. இப்போ அதுக்கென்ன???” என்றான் நெஞ்சை நிமிர்த்தி.

இதற்குமேல் இவர்களிடம் பொறுமையாய் பேசுவதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று தோன்றிவிட்டது நவீனுக்கு. அப்படியே நந்தினியை அழைத்துக்கொண்டு போனாலும் மீண்டும் அவளை இந்த பாழாய்ப்போன நாகராஜிற்கு தான் திருமணம் செய்து வைப்பர் என்று உறுதியாய் தெரிந்தது.

“என்ன தம்பி இப்படி பேசுறீங்க.. அவளுக்கு இன்னிக்கு நிச்சயம் நடக்கிறதா இருந்தது..” என்று சொல்லி முடிக்கும் முன்னே,

“அவளுக்குத் தெரியுமா??” என்றான் நவீன்…  

நந்தினிக்கு வீட்டில் பிரச்சனை அதனால் கிளம்பி வந்துவிட்டாள் போல என்று நினைத்த நவீன் குடும்பத்திற்கு, அவளுக்கு அன்று நிச்சயம் நடப்பதாக இருந்தது புது செய்தி தான். ஆனால் நவீன் சட்டென்று யூகித்துவிட்டான் என்ன நடந்திருக்கும் என்று..

அவளிடம் மறைத்து இதெல்லாம் செய்திருக்கின்றனர்.. தெரியவும், நடப்பதை தடுக்கும் வழி தெரியாமல் அவளும் கிளம்பி வந்துவிட்டாள்.

என்னவோ ஒன்று வந்துவிட்டாள்.. இனி விட்டுவிட கூடாது என்று முடிவு செய்துவிட்டான்..

“தெரியும் தெரியாதேல்லாம் இப்போ பேச்சில்லை.. எதுவா இருந்தாலும் எங்கட்ட சொல்லிருக்கணும்.. இப்படி வந்ததினால எங்க குடும்ப கௌரவம் என்னாகும்…” என்று சொல்ல,

“உங்க பொண்ணுக்கு பிடிக்காத ஒரு வாழ்கைய அமைச்சுக் குடுக்கிறதுல போகாத கௌரவம் இப்போ நந்தினி கிளம்பி வந்ததுனால போயிடுமா??” என்று நவீன் கேட்ட கேள்விக்கு சுப்புராஜால் பதில் சொல்ல முடியவில்லை.

“தம்பி எங்களுக்கு இதெல்லாம் இங்க பேசணும்னு அவசியம் இல்ல.. எங்க பொண்ண கூட்டிட்டு போக வந்திருக்கோம்.. மத்தபடி அவள் வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க எங்களுக்குத் தெரியும்…” என்று நந்தினி இப்படி வந்துவிட்டாளே என்ற ஆதங்கத்தில் சிந்தாமணி பேச,

“இங்க பாருங்கம்மா.. நந்தினி உங்க பொண்ணு தான்.. அதுல எந்த மாற்றமும் இல்ல.. ஆனா..” என்று எதுவோ சொல்ல வந்தவன், பேச்சை நிறுத்தி,

“அப்பா நந்தினியே வந்து பேசட்டும்..” என்று தர்ம சாஸ்தாவிடம் சொல்ல, அவரும் அதுதான் சரி என்பது போல் தன் மனைவியைப் பார்த்தார்.

அடுத்த இரண்டாவது நொடி, நந்தினி வந்து அங்கே நிற்க, அவள் சேலை மாற்றி கட்டியிருப்பதிலேயே சிந்தாமணிக்கு பகீரென்றது.. கழுத்தில் காதில் என்று போட்டு வந்த நகைகளைக் கூட கழட்டிவிட்டு இந்த வீட்டு சேலையை உடுத்தி இருக்கிறாள் என்றாள் என்ன அர்த்தம்..

வேகமாய் அவளருகே சென்றவர்  “என்னடி இதெல்லாம்…” என்று கேட்க, அவளோ பதில் சொல்லவில்லை.. மாறாக நவீனை ஒரு பார்வை பார்த்தவள், இன்னும் அவனை ஒட்டி நின்றுகொண்டாள்.

“நந்தினி…” என்று சுப்புராஜ் அதட்ட, உடல் நடுங்க, இன்னும் நவீனை ஒட்டி நின்றாள்,..

“உங்க பொண்ணு வந்தாச்சு.. இனி நீங்க பேசிக்கோங்க.. ஆனா ஒண்ணு நந்தினி எடுக்கிற முடிவு தான் எதுன்னாலும்..” என்று தர்மசாஸ்தா சொல்லிவிட்டு,

“மணியா எல்லாருக்கும் குடிக்க தண்ணி கொண்டு வந்து குடு..” என்றார்.

“அதெல்லாம் எங்களுக்கு எதுவும் வேணாம்.. நந்தினி வா.. வீட்டுக்கு போவோம்..” என்று சுப்புராஜ் அழைக்க, அவளோ ஆடாமல் அசையாமல் நின்றாள்.   

“நந்தினி.. அப்பா கூப்பிடுறார்ல.. வா.. ஏன் டி இப்படி எல்லார் முன்னாடியும் எங்க மானத்த வாங்குற..” என்று சிந்தாமணி, நந்தினியின் கையை பிடித்து இழுக்க,

“ம்மா ப்ளீஸ்… இப்பவும் சொல்றேன் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை.. முதல்ல இருந்தே சொல்லிட்டு இருக்கேன்.. ஆனா நீங்க யாரும் அதை கேட்கிற மாதிரியில்ல.. இப்போக்கூட எனக்குத் தெரியாம இந்த நிச்சயம் ஏற்பாடு பண்ணிருக்கீங்க.. வாழப் போறது நான் தானம்மா.. அதை ஏன் கொஞ்சமும் நினைச்சுக்கூட பார்க்கிறத்தில்ல..” என்று நந்தினி பேசும் போது அங்கே அத்தனை அமைதி..

யாருக்கும் எதுவும் பேச முடியவில்லை. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதானே.. சரிதானே.. அப்படியிருக்க இவர்கள் இப்படி ஒரு ஏற்பாடு செய்தது தவறுதானே..  ஆனாலும் சிந்தாமணிக்கு எப்படியேனும் மகளை அழைத்துக்கொண்டு போய்விடும் வேகம்..

“அதுக்கு.. அதுக்கு இப்படி கிளம்பி வந்து இன்னொருத்தர் வீட்ல உட்காருவியா?? அசிங்கமா இல்ல.. இப்படிதான் பொண்ண வளர்கிறதா அப்படின்னு கேட்க மாட்டாங்க…” என்று சிந்தாமணி பேசிக்கொண்டு இருக்கும் போதே,

“அத்தை அவக்கிட்ட என்ன கதை பேசிட்டு இருக்கீங்க… இழுத்துட்டு வாங்க…” என்றபடி முன்னே வந்த நாகராஜ், அனைவரும் என்ன ஏதென்று சுதாரிக்கும் முன்பே, நந்தினியின் கரத்தினை பற்றி இழுக்க,

நந்தினியோ  சட்டென்று  நவீனின் கரங்களை பற்ற, சற்று நேரத்தில் களேபரம் ஆகிவிட்டது.

“நாகு என்னடா இது.. நாங்கதான் பேசிட்டு இருக்கோமே..” என்று வந்திருந்தவர்கள் எல்லாம் எழுந்து வர, அவனோ பலம் கொண்ட மட்டும் நந்தினியின் கரங்களை பிடித்து இழுக்க,

நந்தினியோ நவீனின் கரத்தை இறுக பற்றியிருக்க, நவீனுக்கு நாகராஜ் செய்த செயல் அத்தனை நேர பொறுமையை அப்படியே மறைய செய்ய,

“எங்க வந்து யார் கைய பிடிக்கிற..??” என்று கேட்டபடி ஓங்கி நாகராஜின் முகத்தில் மற்றொரு கரத்தால் குத்துவிட, அவன் விட்ட குத்தில் நான்கடி பின்னே போய் நின்றான் நாகராஜ்.

“என்னங்க..” என்று மணியாள் பதறி தன் கணவரை காண, நரேனோ தன் தம்பிக்கு துணையாய் அவனருகே வந்து நிற்க,

“அமைதியா இரு மணியா.. பசங்க பார்த்துக்கட்டும்..” என்று அமர்ந்திருந்தார் தர்மசாஸ்தா..

“ஐயோ இப்படி என் மகனை ஆள் வச்சு அடிக்கிறாளே..” என்று ராஜி ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க, சுப்புராஜுக்கும் சிந்தாமணிக்கும் இவர்களை அழைத்துக்கொண்டே வந்திருக்க கூடாதோ என்று இருந்தது.

அவர்கள் வராமல் இருந்திருந்தால் கூட, நந்தினி ஓரளவு சமாதானம் ஆகி வந்திருப்பாளோ என்று தோன்ற,

“நந்தினி இதெல்லாம் தேவையா.. எதுவா இருந்தாலும் நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்… இப்போ என்ன உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல.. சரி வேணாம்.. இப்போ இது எதுவுமே வேணாம்… நீ வீட்டுக்கு வா ..” என்று சுப்புராஜ் சொல்ல,

“எனக்கு இவரைத்தான் பிடிச்சிருக்கு…” என்று அடுத்த வெடியை பற்ற வைத்தாள் நந்தினி நவீனின் கரங்களை இறுக பற்றி..

இதை நவீனே எதிர்பார்க்கவில்லை.. அவளைத் திகைத்துப் போய் பார்த்தவன் அப்படியே நிற்க,

“ஆமா.. எனக்கு இவங்களைத்தான் பிடிச்சிருக்கு.. எனக்கு நல்லா தெரியும்ப்பா நான் உங்க கூட வந்தா அடுத்து என்ன நடக்கும்னு.. அதான் எதுவும் சொல்லாம கிளம்பி வந்தேன்.. நான் இவங்களை விரும்புறேன்னு இப்போதான் இவங்க முன்னாடியே சொல்றேன்…

நான் உங்க பொண்ணு தானப்பா.. ஆனா இது வரைக்கும் நாகுக்கு கொடுத்த முக்கியத்துவம் எனக்கு கொடுத்து இருக்கீங்களா?? இவ்வளோ பிரச்சனைக்கும் காரணம் நீங்கதான் ப்பா..” என்று நந்தினி விடாமல் சொல்ல,

“நந்தினி என்ன இப்படி பேசுற.. இத்தனை பேர் முன்னாடியும் அப்பாவை எதிர்த்து பேசுறியா??” என்று சிந்தாமணி அலற,

“ம்மா.. நான் எதிர்த்து பேசல.. உண்மைய சொல்றேன்.. அப்பா அம்மா சொல்றத கேட்டா நல்லதுன்னு எனக்கும் தெரியும். ஆனா அதுக்காக பிள்ளைங்க சொல்றதை பெத்தவங்க காது குடுத்தே கேட்க கூடாதுன்னு இல்லை.. நான் சொன்னத கொஞ்சமாவது கேட்டிருந்தா இப்போ இந்த நிலைமை வந்திருக்காது.. நான் அங்க வரமாட்டேன் இது தான் என் முடிவு..” என்றவள், வேகமாய் ஒரு அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள்.

மணியாளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ‘இந்த பொண்ணா உள்ள நம்மக்கிட்ட தலைகுனிஞ்சு பேசிச்சு..’ என்று நினைத்தார்..

ஆனால் என்னவோ நந்தினி வந்து நவீன் அருகே நிற்கையில் இருவரின் ஜோடிப் பொருத்தமும் நன்றாய் இருப்பது போல் தோன்ற, அந்த நொடியே அவருக்கு மனம் நிறைந்து போனது..

இத்தனை பேர் நிறைந்த சபையில் ஒரு பெண் வந்து என் மகனை பிடித்திருக்கிறது என்று தைரியமாய் சொல்கிறாள் என்றாள் அவள் மனதில் எத்தனை தூரம் அவன்மீது நம்பிக்கையும் அன்பையும் வைத்திருப்பாள் என்று தோன்ற, இனி நந்தினியை எப்படி மருமகளாக்குவது என்று மணியாள் யோசிக்க,

“அதான்.. அந்த பொண்ணே முடிவை சொல்லிடுச்சே.. இனியும் யாரும் பிரச்சனை பண்ண வேணாம்..” என்று தர்மசாஸ்தா சொல்ல,

“அதெப்படிங்க அப்படியே விட முடியும்.. நாங்க பெத்து வளர்த்த பொண்ணுங்க.. அப்படியே சும்மா விட்டுட்டு போக முடியுமா??” என்று சுப்புராஜும் சொல்ல,

“நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க.. அவளை அப்படியே விட முடியுமா??” என்று சிந்தாமணி, மணியாளிடம் கேட்க, அவரோ என்ன சொல்ல என்பது போல் தன் கணவர் முகம் பார்த்தார்.

“அண்ணே இதெல்லாம் சரிபட்டு வராது.. பேசாம போலீஸ்ல சொல்லிடலாம்.. அவங்க வந்து பேசினா தான் இவங்க எல்லாம் சரிபட்டு வருவாங்க..” என்று சொல்கையில்,

“போலீஸ் தானே.. சரி வாங்க இப்போவே எல்லாம் சேர்ந்து போவோம்..” என்று நவீன் ஒரு எட்டு முன்னே வைக்க,

“தம்பி அதெல்லாம் வேணாம்.. எங்களுக்கு நந்தினி எங்களோட வந்தா போதும்..” என்ற சுப்புராஜிடம் நவீன் வந்தவன்,

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. ஒரு தடவ நந்தினி இடத்துல இருந்து யோசிங்க..” என்று அவரின் கரங்களை பிடித்து நவீன் சொல்ல, ஏனோ அந்த நொடி அவருக்கு பதில் சொல்லவே முடியவில்லை.

இங்கு வந்தபின் நாகாராஜின் செயல்கள் எல்லாம் அவருக்கு எரிச்சலை தந்துகொண்டு தான் இருந்தது.. அனைத்திற்கும் இத்தனை அவசரப் படுபவன், கோவப்படுபவன் எப்படி தன் மகளை நன்றாய் பார்த்துகொள்வான் என்ற எண்ணம் இப்போது தோன்றியது.

“அண்ணே என்ன அப்படியே நிக்கிற..” என்று ராஜி உசுப்ப,

“ஹா… ஒண்ணுமில்ல… எல்லாரும் போகலாம்..” என்றவர், தர்மசாஸ்தாவிடம் கரம் குவித்துவிட்டு, நவீனிடம் “பார்த்துக்கோங்க…” என்றுமட்டும் சொல்லிவிட்டு, வாசலை நோக்கித் திரும்ப,

“என்னங்க… என்ன இப்படி??” என்று சிந்தாமணி வார்த்தை வராமல் தவிக்க,

“ஒருநிமிஷம்…” என்ற நந்தினியின் குரலில் அனைவரும் சட்டென்று திகைத்துப் பார்க்க, அனைவரையும் ஒரு பார்வை பார்த்து மெல்ல நடந்து வந்தவள்,

“இது நான் கட்டிட்டு வந்த சேலை.. இது நான் போட்டு வந்த நகை..” என்று தன் பெற்றோர்கள் முன் நீட்ட,

நந்தினியின் மனம் எத்தனை வருந்தியிருந்தால் அவள் இப்படியொரு முடிவை எடுப்பாள் என்று அந்நேரம் இருவருக்குமே தோன்ற, சிந்தாமணி அமைதியாய் அவள் நீட்டியதை வாங்கினார். நந்தினிக்குமே கண்களில் கண்ணீர் தான். என்றுமே அவள் தன் பெற்றோரை இப்படியொரு நிலையில் கொண்டு வந்து நிறுத்த எண்ணவில்லை. ஆனால் சூழ்நிலை அப்படியாகி விட்டது..

“மாமா.. அப்போ எனக்கு என்ன பதில்.. நான் என்ன லூசா..” என்று நாகராஜ் கத்தியவனை இழுத்துக்கொண்டு செல்லாத குறைதான் அனைவரும்..

நந்தினியின் பெற்றோர்கள் அவளைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு செல்ல, அவளுக்கோ இன்னும் அழுகை வெடித்தது. நவீன் தான் ஆதரவாய் அவள் கைகளை பிடிக்க, அவளும் அவன் கரங்களை இறுக பற்றிக்கொண்டாள்.

அனைவரும் சென்றதும், வீடே அமைதியாய் இருக்க, நந்தினியின் விசும்பல் ஒலியும், “அழாத நந்தினி…” என்ற நவீனின் சமாதான சப்தமும் மட்டும் கேட்க,

“சரி அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கீங்க??” என்ற தர்மசாஸ்தாவின் கேள்வி இருவரையும் திகைத்துப் பார்க்க வைத்தது..

“என்னப்பா???”

“வந்தவங்களை பேசி அனுப்பியாச்சு.. ஆனா இப்படியே இருக்க முடியாதுல்ல.. முடிவு எடுக்கணுமே.. என்ன செய்யலாம்..??”

“அது…” என்று யோசித்த நவீன், நந்தினியின் முகத்தைப் பார்த்தவன், பின் தன் பெற்றோர் இருவரையும் பார்த்து “அடுத்து வர்ற நல்ல நாள்ல எனக்கும் நந்தினிக்கும் கல்யாணம் பண்ணி வைங்க…” என்றதும்,

தர்மசாஸ்தா இதை நான் எதிர்பார்த்தேன் என்பதுபோல் அவர்களைப் பார்த்தார்.   

                                                            

 

    

  

 

       

     

     

 

                                        

Advertisement