Advertisement

ஆசை  – 5

அதிகாலை ஆறு மணி.

நாவீனது வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருக்க, தர்ம சாஸ்தா பூஜையறையில் இருந்தார், நவீனும் நரேனும் குளித்து முடித்து வந்தவர்கள், ஒருவன் பாலைக் காய்ச்ச, மற்றொருவன் காபிக்கு டிக்காசன் தயாரித்துக் கொண்டிருக்க, மணியாள் காலை சமையலுக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

சொல்லி வைத்தார் போல், ஆண்கள் மூவரும் எழு பதினைந்திற்கெல்லாம் காலையில் உணவிற்கு தட்டின் முன் அமர்ந்துவிடுவர். அதன் பின் அவர்கள் நாளில் வேலை வேலை வேலை மட்டுமே..

ஆனால் எத்தனை வேலை இருந்தாலும் வீட்டுச் சாப்பாடு மட்டும் தான். வெளியில் சாப்பிடும் பழக்கமில்லை. தர்மசாஸ்தாவின் பழக்கங்கள் அப்படியே அவர் பிள்ளைகளிடமும் இருந்தது.

சரியாய் ஆறுமணிக்கு பூஜை அறைக்குள் நுழைந்தால் தர்ம சாஸ்தா வெளிவர அரைமணி நேரமாகும். சரியாய் எழு மணிக்கெல்லாம் காலை உணவு உண்டு முடித்தால், அடுத்த இருபது நிமிடங்களில் அவர்கள் மூவரும் கிளம்பிடுவர். பிறகு இரவு தர்மசாஸ்தா ஒன்பது மணிக்கு வீடு வந்துவிட்டால், நவீனும் நரேனும் வர பத்தாகி விடும்.

மணியாளுக்குத் தான் நாள் முழுவதும் வீட்டில் தனியே இருக்க கஷ்டமாய் இருக்கும். அதன்பொருட்டே நரேன்னுக்கு வந்த முதல் வரனையே முடித்துவிட்டனர்.

‘இப்போ நரேனுக்கு பண்ணாதான் அடுத்த ஒருவருசத்துல நவீனுக்கும் செய்ய முடியும்…’ என்று மணியாள் தான் முதலில் பிடிவாதமாய் இருந்தார். அடுத்து நரேனும் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிட, முதலில் பார்த்தே பெண்ணே சரி என்று சொல்லி  இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்ற நிலையில் வந்து நின்றது.

சுப்ரபாத ஒலிக்கும் மேலாய் வீட்டின் கதவு தட்டும் ஓசைக் கேட்க,

“யாரது இந்நேரத்துல இப்படி வந்து கதவ தட்றாங்க.. சரியா இன்னும் விடியக் கூட இல்லை.. மழை வேற தூரிட்டு இருக்கு…” என்றபடி மணியாள் எழ,

“ம்மா.. நீ உக்காரு.. நான் போய் பாக்குறேன்…” என்று நரேன் சொல்ல,

“டேய் நீ இரு நான் போறேன்…” என்று நவீன் சொல்ல,

“ரெண்டுபேரும் வேணா நானே போய் பாக்குறேன்.. இன்னும் அஞ்சு நிமிசத்துல உங்கப்பா வந்திடுவார்.. காபி கலந்து வைங்கடா…” என்றபடி 

மணியாள் வாசல் கதவை நெருங்குவதற்குள் இன்னும் பலமாய் வேகமாய் கதவு தட்டப் பட

“இதோ வர்றேன்..” என்றபடி கதவை திறந்தவருக்கு முகம் யோசனையில் சுருங்கியது..

காரணம் வந்திருப்பது நந்தினி.. அதுவும் பட்டுப் புடவையில்.. கையில் கழுத்தில் காதில் என்று நகைகள் போட்டு, தலை நிறைய பூ வேறு சூடி… இதற்கெல்லாம் மேலாய் மழையில் நனைந்து அப்படியே வந்திருந்தாள்..

எதோ ஒரு வேகத்தில் கிளம்பி வந்துவிட்டாளே தவிர, மனதிற்குள் அவளுக்கும் நடுங்கிக்கொண்டு தான் இருந்தது. அதிலும் மணியாள் வந்து கதவு திறக்க, திருதிருவென்று முழித்துக்கொண்டு தான் நின்றாள். 

“யாரும்மா நீ??என்ன வேணும்??” என்று மணியாள் கேட்க, நந்தினியோ, நவீன் இருக்கிறானா என்பது போல் அவரையும் தாண்டி வீட்டினுள் தன் பார்வையை செலுத்த, மணியாலும் அவள் பார்வை செல்லும் திசையை ஒருமுறை திரும்பிப் பார்த்து,

“ஏ பொண்ணே.. என்ன வேணும்?? வழி எதுவும் மாறி வந்துட்டியா???” என்று சற்று மென்மையாகவேத் தான் கேட்டார்.

“இல்.. இல்ல..” என்று நந்தினி தலையை ஆட்டும் போதே,

“யாரும்மா???” என்றபடி நவீன் வர, நந்தினிக்கு சற்றே மூச்சு விட முடிந்தது என்றாள், நவீனோ மூச்சு விடவே மறந்து அதிர்ந்து போய் நின்றான்.

“ந.. நந்தினி…” என்று முணுமுணுக்க, நந்தினிக்கோ அவனைப் பார்த்ததும் வெகுவாய் கண்கள் கலங்கிவிட்டது.

மணியாள் வாசலில் நிலைப்படியில் நின்றிருக்க, நவீன் சற்றே உள்ளே நின்றிருக்க, வெளியே நின்றிருந்த நந்தினியோ, மணியாளைத் தாண்டி வந்து நவீனிடம்,

“என்.. என்ன போக சொல்லிடாதீங்க ப்ளீஸ்…” என்று கண்ணீர் விழிகளில் கெஞ்ச, ‘என்னடா நடக்குது..’ என்பதுபோல் தான் பார்த்திருந்தார் மணியாள்.

நவீனுக்கோ சொல்லவே வேண்டாம்.. ஆச்சர்யம்.. அதிர்ச்சி எல்லாம் கலந்து கட்டி அடிக்க,

“டேய் நவீனு.. யாருடா இந்த பொண்ணு?? உனக்குத் தெரியுமா???” என்று மணியாள் அவன் முதுகில் ஒன்று போட்டு கேட்க, அதற்கு அவன் பதில் சொல்லும் முன்பே நந்தினி,

“ம்மா ப்ளீஸ்.. உள்ள போய் பேசலாமே…” என்று சொல்லியதும் இல்லாமல், மணியாள் கரங்களை பற்றி உள்ளே லேசாய் இழுத்தவள், வீட்டின் கதவையும் அடைத்துவிட்டு அதன் மீதே சாய்ந்து நின்று கண்களை மூடி ஆழ மூச்செடுத்து விட்டாள்.

மணியாளுக்கோ பேச்சே வரவில்லை.. ‘யாருடா இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கே வந்து இப்படியெல்லாம் செய்றது…’ என்று நவீனைப் பார்க்க, அவனோ திகைத்துப் போய் நந்தினியைப் பார்த்து நின்றிருந்தான்.

“மணியா…” என்றபடி தர்ம சாஸ்தா ஆரத்தி தட்டோடு வெளியே வர, அதே நேரம் நரேனும் அங்கே வர, அனைவரின் பார்வையும் நந்தினி மேல் தான் இருந்தது.

தர்ம சாஸ்தாவின் குரல் கேட்டதுமே, நந்தினி நேராய் நின்றுவிட, அவளுக்கோ இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது.

தர்ம சாஸ்தாவிற்கு நந்தினியை தெரியும். ஓரிரு முறை அவள் அப்பாவோடு அவளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த நேரத்தில் அதுவும் இப்படி ஒரு கோலத்தில் ஏன் வந்திருக்கிறாள் என்று புரியாமல் மணியாளைப் பார்த்தார்.

மணியாளுக்கோ நந்தினி யாரென்றே தெரியாதே..

தர்மசாஸ்தா மௌனமாய் தன் மனைவியின் முன் ஆரத்தி தட்டை நீட்ட, அவரும் பவ்யமாய் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு குங்குமம் எடுத்துக்கொள்ள, அடுத்து நரேனும் அப்படியே செய்து விபூதி பூசிக்கொள்ள, நவீனோ இது எதுவும் கருத்தில் பதியாமல் நின்றிருந்தான்.

“நவீன்…” என்ற தந்தையின் குரலில், சுயநினைவிற்கு வந்தவன், என்ன நினைத்தானோ, தள்ளி நின்றிருந்த நந்தினியை இங்க வா என்பதுபோல் சைகையில் அழைத்து, தர்மசாஸ்தாவை கண்களால் காட்டினான்.

அவளுக்கு என்ன புரிந்ததோ, அவளும் வேகமாய் வந்து அவனருகே நின்றுகொள்ள, இருவருமே ஒன்றாய் தான் ஆரத்தி தட்டை தொட்டு கும்பிட்டு பிரசாதம் எடுத்துக்கொள்ள, மணியாள் ‘ஆ’ என்று வாய் பிளந்து பார்த்து நின்றார்.

“ம்மா… என்னைய சொல்வானே.. பஸ்ல வர்றபோ தீபாவ கரக்ட் பண்ணேன்னு.. ஆனா நவீன் பஸ்ல கரக்ட் பண்ண பொண்ணு இது தான்..” என்று நரேன் மணியாளின் காதில் ரகசியம் பேச, அவருக்கோ இன்னும் கண்கள் விரிந்தது.

‘என்னடா சொல்ற…’ என்பதுபோல் நரேனைப் பார்த்தவர், இப்போது எடை போடும் பாவனையில் நந்தினியைப் பார்க்க, அவளிடம் எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை.

மீண்டும் பூஜையறைக்கு சென்ற தர்ம சாஸ்தா திரும்பி வந்து அமர்ந்தவர், “நவீன்…” என்றழைக்க, அவனோடு சேர்ந்து நந்தினியும்  போய் அவர் முன்னே நிற்க, நரேனும் மணியாளும் கூட அவரருகே நின்றனர்.

நவீனுக்கும் என்ன பிரச்னை என்று தெரியாது. ஆனாலும் நந்தினி இந்த நேரத்தில் அதுவும் இப்படி ஒரு நிலையில் கிளம்பி வந்திருப்பதைக் காண்கையில் எதுவோ பிரச்சனை என்றுதான் புரிந்தது. அவனுக்கும் மேற்கொண்டு என்ன செய்வதென்பது என்று தெரியவில்லை.

வந்துவிட்டாள்.. அந்த நம்பிக்கையை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்று மனதில் உறுதி பிறக்க,  “அப்பா…” என்று ஆரம்பிக்க, கைகளை உயர்த்தி அவன் பேச்சை நிறுத்தியவர், நீ பேசு என்பதுபோல் நந்தினியைப் பார்த்தார்.

அவளோ ஒருபார்வை நிமிர்ந்து நவீனைப் பார்க்க, நடந்தது என்னவென்று தெரியாத போதிலும், பேசு என்பதுபோல் தைரியம் கொடுக்க,

“என்.. எனக்கு.. வேற வழித் தெரியல.. நான் செஞ்சது சரியா தப்பான்னு எல்லாம் எனக்கு யோசிக்கக் கூட முடியல.. ஆனா நான் என்னைய காப்பாத்திக்க தான் இங்க வந்தேன்.. ப்ளீஸ் என்னை போக மட்டும் சொல்லீடாதீங்க…” என்று முகத்தை சுருக்கி நந்தினி சொல்கையில் நவீனுக்கு உள்ளம் வலித்தது..

‘என்னை காப்பாத்திக்க தான் இங்க வந்தேன்….’

இந்த சொற்கள் நிஜமாகவே அவனுக்கு அப்படியொரு வலியைக் கொடுத்தது. அவள் வீட்டில் என்ன மாதிரி நிலையென்றால் இந்த அதிகாலைப் பொழுதில் நந்தினி வந்திருப்பாள் என்று தோன்ற,

“நந்தினி… உன்னை யாரும் இங்க போக சொல்ல மாட்டாங்க…” என்று அனைவருக்கும் முன்பாய் வாக்களித்துவிட்டான்.

“நவீனு…” என்று மணியாள் குரல் கொடுக்க,

“மணியா… அந்த பொண்ணுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா.. அப்படியே ஒரு துண்டு கொண்டுவந்து குடு.. நனைஞ்சு போயி வந்திருக்கு…” என்ற தர்ம சாஸ்தாவை அனைவரும் ஆச்சர்யமாய் தான் பார்த்தனர்.

“அதிலைங்க…” என்று மணியாள் தயங்க,

“சொல்றத செய் மணியா.. ஒரு பொண்ணு நம்ம வீடு தேடி வந்திருக்கு.. அந்த நம்பிக்கைய உடைக்க கூடாது.. அதுவுமில்லாம இப்போத்தானே நம்ம பையன் வாக்கு குடுத்தான்.. சரியோ தப்போ சொன்ன சொல் மீறக் கூடாது…” என்றவரின் குரலே மணியாளை அவர் சொன்னதை செய்ய நடத்திச் சென்றது.

நரேனுகோ எதுவுமே புரியவில்லை. நவீன் மனதில் லேசாய் நந்தினி மீது ஒரு சலனம் என்று தெரியும். ஆனால் அது காதல் என்றெல்லாம் அவன் சிந்திக்கவே இல்லை. முதலில் இது காதல் தானா என்பது நந்தினிக்கும் நவீனுக்குமே இன்னும் உறுதியாகவில்லையே.. ஒருவருக்கொருவர் பேசி, தங்கள் மனதை அறியுமுன்னே என்னென்னவோ நடந்து போனதே.

சரியாய் நவீன், நந்தினியை ஆட்டோவில் அவள் வீட்டில் இறக்கிவிட, முதலில் மகள் வந்துவிட்டாள் என்ற நிம்மதியில் இருந்த சிந்தாமணி, நந்தினியின் பார்வை வழியே நவீனைக் காண,

‘இந்த பையன் எங்க இங்க..’ என்ற திடுக்கிடல் ஒன்று தோன்றி மறைந்தது.

நந்தினியோ வந்ததற்கு பணம் எதுவும் கொடுக்காமல், தலையை மட்டும் ஆட்டிவிட்டு, வீட்டிற்குள் திரும்பிப் பார்த்தபடி வர, சிந்தாமணிக்கு மனம் உறுத்தத் தொடங்கியது. இத்தனை வருடம் பெற்று வளர்த்தவருக்கு தெரியாத தன் மகளின் பார்வைக்கான பொருளை..

அவளோ உதட்டில் உறைந்த சிரிப்புடன் உடைமாற்றி முகம் கழுவி வர, சிந்தாமணி கேட்பதற்கு எல்லாம் ‘ம்ம்… ம்ம்ஹும்…’ என்று மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க,

“நந்தினி…” என்று அரட்டல் போட்டார் சிந்தாமணி.

அவளோ எந்த சலனமும் இல்லாமல் அவரைக் காண, “என்னடி நான் கேள்விக் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. பதிலே பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. அந்த பையன் எதுக்கு வந்தான்..” என்று குரலை உயர்த்தினார்.

‘ஆகா.. அம்மா எதுவும் கண்டு பிடிச்சிடுச்சோ…’ என்று சுதாரித்தவள், “நான் தான் சொன்னேன்ல ம்மா.. மழைக்கு ஒதுங்கி நின்னிருந்தேன்.. இவங்க ஆட்டோ வந்துச்சு.. நானும் எவ்வளோ நேரம்தான் அங்கேயே நிக்க… அதான்மா கிளம்பி வந்தேன்…” என்று முழு பூசணிக்காயை மறைக்கவில்லை என்றாலும் பாதியாவது மறைத்தாள்.

“ஹ்ம்ம்.. இந்த பையன் பஸ்சுக்கு தானே போகும்..” என்று சிந்தாமணி சந்தேகமாய் கேட்க,

“ஷப்பா.. இப்போ உனக்கு என்னம்மா பிரச்சனை நான் வீட்டுக்கு வந்ததா?? சொல்லு.. எப்படியோ இருக்கட்டும்னு நான் அப்படியே அங்கவே இருந்திருக்கணும்.. நீ தனியா இருக்கியேன்னு தேடுவியேன்னு வந்தா இப்படி பேசுற…” என்று நிஜமாகவே கோவம் வர,

“அதுக்கில்லடி.. ஏற்கனவே நம்ம நாகுக்கும் இந்த பையனுக்கும் ஆகலை.. அதுல இது வேற தெரிஞ்சா அவ்வளோதான்.. நாளைக்கு இதுனால உன் வாழ்க்கை பாதிக்கப் படக்கூடாதுல…” என்று முதல் வார்த்தையை விட்டார்..

“என்ன?.. என் வாழ்க்கைக்கு என்னம்மா..??” என்று நந்தினி சந்தேகமாய் கேட்க, உடனே சுதாரித்த சிந்தாமணி,

“அது.. அதில்லடி.. தேவையில்லாத வம்பு வரக்கூடாதுள்ள…” என்று சொல்ல,

“ம்மா நான் ஒன்னு சொல்லவா.. இதேது அந்த இடத்துல நீ சொல்றிய நாகு அவன் இருந்திருந்தா கண்டிப்பா நான் நம்பி அவன்கூட வந்திருக்க மாட்டேன்.. அவனும் என்னை உருப்படியா வீட்ல கொண்டு வந்து சேர்த்திருக்க மாட்டான். அதை முதல்ல புரிஞ்சுக்கோ..” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்..

நந்தினியின் இந்த வார்த்தைகளே சிந்தாமணிக்கு மனதில் ஒலித்துக்கொண்டிருக்க, அவருக்குமே சில நாட்களாய் நந்தினி விசயத்தில் தாங்கள் அவசரப்படுகிறோமோ என்று தோன்றிக்கொண்டே இருக்கவும், எல்லாமுமாய் சேர்ந்து, சுப்புராஜ் வரவும் அனைத்தையும் அவரிடம் கொட்டிவிட்டார்.

இதற்கிடையில் நந்தினிக்கும் நவீனுக்குமான உறவு கொஞ்சம் கொஞ்சமாய் வளரத்தொடங்க, போதாதா குறைக்கு நவீனே நேரடியாக நந்தினி ஸ்பைரல் போடக் குடுத்திருந்த ரெக்கார்ட் நோட்டுகளை வாங்கிக்கொண்டு வந்து கல்லூரியிலேயே கொடுக்க, அது அப்படியே நாகராஜின் கண்களிலும் பட்டது.   பரீட்சை எல்லாம் முடியும் தருவாயில் வந்திருக்க, சிந்தாமணியும் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்க, நாகராஜ் வேறு வந்து இந்த விஷயத்தை சொல்ல சுப்புராஜுக்கு கோவம் தலைகால் புரியாமல் வந்தது.

“என்ன நாகு சொல்ற… அப்போ என் பொண்ண தப்புன்னு சொல்றியா???” என்று குரலை உயர்த்த,

“மாமா.. நான் யாரையும் தப்புன்னு சொல்லல.. தப்பா எதுவும் நடந்திடக் கூடாதேன்னு சொல்றேன்..” என்று மிதப்பாய் பேச, ஏற்கனவே நந்தினி வேறு நவீனோடு ஆட்டோவில் வந்தது சிந்தாமணி மூலமாய் தெரியும் என்பதால்,

“நாகு… உனக்கு பரீட்சை முடிய எத்தனை நாள் இருக்கு??” என்று யோசனையாய்..

“எனக்கு இன்னும் மூணு நாள்ல முடியுது மாமா.. நந்தினிக்கு நாளைக்கு முடியுது..” என்று அவர் கேட்காத தகவலையும் சேர்த்தே கொடுக்க,

“சரி நாளைக்கு அப்பா அம்மாவ வீட்டுக்கு வர சொல்லு.. பேசிக்கலாம்..” என்று சொல்லிட, அப்போது தான் நாகராஜிற்கு மனம் அமைதியானது.

சொன்னதுபோலவே மறுநாள் நாகராஜின் பெற்றோர்கள் வந்து பேச, அடுத்த இரண்டு நாளில் நல்ல முஹூர்த்தம் வருவதாகவும், அன்றே நந்தினிக்கும் நாகராஜிற்கும் முன் பேசி வைத்ததுபோல் நிச்சயம் செய்துவிடாலம் என்று முடிவெடுக்க, சிந்தாமணிக்கு தான் என்னவோ மனம் சிணுங்கத் தொடங்கியது.

“என்னங்க.. கொஞ்சம் யோசிக்கலாமா.. நமக்கோ ஒரே பொண்ணு.. அவளும் நாகுவை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கா..” என்று தயங்க,

“என்ன பேச்சு பேசுற சிந்தா.. அப்போ இத்தனை வருசமா ராஜிக்கும் அவ வீட்டுக்கும் நம்ம கொடுத்த நம்பிக்கை எல்லாம் பொய்யாகனுமா.. நாகு நம்ம வளர்த்த பையன்.. கண்டிப்பா அவன் நந்தினி மனச மாத்துவான்..” என்று சுப்புராஜ் அடித்துச் சொல்ல, சிந்தாமணிக்கும் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

அவரைப் பொருத்தவரைக்கும் நந்தினி ஒருவனைக் காதலிப்பாள் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாதே என்று தான் அவருக்கு. அதையும்விட இப்போதெல்லாம் நாகராஜை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தார்.

அவன் பார்வையில் சிறிது கூட நந்தின் மீது அன்போ நேசமோ வெளிப்படவேயில்லை.. மாறாக ஒருவித ஆளுமையும், அலட்சியமும் வெளிப்பட, ‘இவனெப்படி என் மகள நல்லபடியா பார்த்துப்பான்..’ என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.

நந்தினிக்கு என்னவோ முதல் நாளில் இருந்து மனம் அடித்துக்கொண்டு இருந்தது, பரிட்சைகள் முடிந்துவிட்ட நிம்மதி கூட அவளுக்கு இல்லை. இனியெப்படி நவீனைக் காண முடியும் என்ற கேள்வியே வியாபித்து இருக்க, மறுநாள் தனக்கும், நாகராஜிற்கும் நிச்சயம் என்பதைக் கூட அறியாமல் படுத்திருந்தாள்.

அனைவரும் எதிர்பார்த்த  அந்த நாளும் அழகாய் சின்ன சின்ன மழைத் துளிகளுடன் விடிய, நந்தினி கண் விழிக்கையில் வீட்டில் தெரிந்த மாற்றம் அவளுக்கு யோசனையைக் கொடுக்க, என்னவென்பது போல் அனைத்தையும் ஆராய்ச்சிப் பார்த்துக்கொண்டு இருந்தவளை,

“நந்தினி சீக்கிரம் தலைக்கு ஊத்திட்டு.. இந்த பட்டு புடவைய கட்டிக்கோ.. பீரோல நகை எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.. போட்டுக்க.. தலை சீவிட்டு சொல்லு பூ கொண்டு வர்றேன்..” என்ற சிந்தாமணி கிளப்பிவிட,

“என்னம்மா..?? என்ன விஷயம்.. இப்போ ஏன் இதெல்லாம் செய்ய சொல்ற?? கோவிலுக்கு எங்கயும் போறோமா???” என்றாள் சந்தேகமாய்.

சிந்தாமணிக்கு என்ன தோன்றியதோ, இனியும் மகளிடம் மறைக்கக்கூடாது என்று உண்மையை சொல்லிவிட்டார்.. நந்தினிக்கோ அனைத்தையும் கேட்டதும் அவள் உணர்வுகளை சொல்லவும் வேண்டுமா??

“அம்மா என்ன இதெல்லாம்?? அப்போ இத்தனை நாள் நான் சொன்னதுக்கு மதிப்பே இல்ல அப்படித்தான…” என்று கத்த,

“ஐயோ கத்தாத டி.. உங்க அத்தை அப்போவே வந்துட்டா.. சத்தம் போடாம பேசு..” என்று மகளை அடக்க,

“யார் வந்தா எனக்கென்ன.. இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்..” என்று அடம் பிடித்தவளை,

“எனக்காக நந்தினி.. சொன்னா கேளு.. கல்யாணம் இப்போ இல்ல.. நாகு துபாய்க்கு போய்ட்டு வந்த அப்புறம் தான்.. அதுக்குள்ளே அவனும் கொஞ்சம் மாறிடுவான்.. உனக்கும் கொஞ்சம் எல்லாம் புரியும்…” என்று சுப்புராஜு சிந்தாமணியை சமாதனம் செய்ய சொன்ன காரணங்களையே மகளிடம் அவர் ஒப்பிக்க,

“என்ன புரியும்..??” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தினால் வந்த கண்ணீரோடு..

“நந்தினி சொன்னாக் கேளு.. இப்போ குளிச்சு ரெடியாகு..” என்று சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே..

“மருமகளே…” என்று ராஜி உள்ளே வந்தவர், “என்ன அண்ணி பேசிட்டு இருக்கீங்க.. நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது.. நந்தினி சட்டுபுட்டு ரெடியாகு…” என்று அவளை குளியறைக்குள் தள்ளாத குறையாய் தள்ள, அவளுக்கு என்ன செய்வது என்ன செய்வது என்று மனம் அடித்துக்கொண்டது..

ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற யோசனையில் குளித்து வந்தவளை, ராஜி தான் தயார் செய்தார்.. நந்தினியோ ஒரு விசயத்தில் உறுதியாய் இருந்தாள் என்ன நடந்தாலும் சரி இந்த நிச்சயம் கூட நடக்கக் கூடாது என்று..

அப்போது மனதில் சட்டென்று ஒரு எண்ணம்.. நவீனின் முகமும் அவன் சிரிப்பும் வந்து போக, புதிதாய் ஒரு தைரியமும் வந்து ஒட்டிக்கொண்டது. அத்தனை நேரம் யோசனையில் இருந்தவள்,

“அத்தை நீங்க போங்க.. நானே ரெடியாகிட்டு சொல்றேன்..” என்று சொல்ல,

“அப்படி சொல்லு மருமகளே.. இப்போவாது என் பையன கட்டிக்க ரெடியானியே..” என்று மெச்சியபடி அறையை விட்டு வெளியே போனார் ராஜி.

அவர் போனது தான் தாமதம். உள் பக்கம் கதவை இழுத்து பூட்டியவள், வேகமாய் ஜன்னல் வழியே வீட்டின் பின் பக்கம் யாரும் இருக்கிறார்களா என்று பார்க்க, பொழுது விடியும் நேரம் என்பதால் யாரும் அங்கே இல்லே. நந்தினியின் அறையில் இருந்து, பின் வாசலுக்கு போக சிறிய பாதை ஒன்று இருக்கும், ஒருநொடி கண்களை இறுக மூடி கடவுளை வேண்டியவள் அடுத்த நொடி கிளம்பி வெளிய வந்துவிட்டாள்.

வெளியே வந்தவள் எதையும் யோசிக்கவில்லை.. நேராக நவீன் வீட்டிற்கு சென்று கதவை தட்ட, இப்போதும் அதே கதவு தட்டும் ஓசை நவீன் வீட்டில் கேட்டது.

நந்தினி தன் நினைவுகளில் இருந்து மீண்டவள் கதவு தட்டும் ஓசைக் கேட்டு திடுக்கிட்டு அனைவரையும் காண,

“மணியா இந்த பொண்ண உள்ள கூட்டிட்டு போ..” என்ற தர்ம சாஸ்தா, “நவீனு போய் கதவை திற..” என்றார் எதோ முடிவு செய்துவிட்ட குரலில். 

    

       

          

      

                                 

      

        

               

            

               

 

    

    

Advertisement