Advertisement

ஆசை – 4

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது….

நந்தினி வீட்டினரும், நாகராஜ் வீட்டினரும் எதிர்பார்த்த அவர்களின் இறுதியாண்டு பரீட்சையும் நெருங்கியிருந்தது. இந்த இரண்டு மாதங்களும் நந்தினி எதிர்பார்க்காத விதமாய் நாட்கள் அமைதியாகவே கழிந்தது..

நாகராஜ் அவளிருக்கும் பக்கம் கூட வரவில்லை. தேவையில்லாத வம்புகள் எதுவும் செய்யவுமில்லை. கல்லூரியில் கூட அவள் இருக்கும் திசைக்கு வரவில்லை. அதுவே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அவனுக்கும் சேர்த்துவைத்து நாகராஜின் அம்மா ராஜி வந்தார்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல், ராஜி வீட்டிற்குள் நுழையும் போதே ‘மருமகளே…’ என்ற அழைப்போடு தான் வருவார்.

அந்த வார்த்தையை கேட்கும் போதே நந்தினிக்கு அப்படி ஒரு எரிச்சல் வரும்.

‘எனக்கென்ன பேர் இல்லையா… நந்தினின்னு சொல்ல வேண்டியது தான…’ என்று சொல்லத் தோன்றுவதை, சிந்தாமணியின் கெஞ்சல் பார்வையில் அடக்கிக்கொண்டு நிற்பாள்..

“என்ன மருமகளே.. படிப்பெல்லாம் எப்படி போகுது???” என்று ஆரம்பித்து அடுத்து பேச்சு எங்கெங்கோ போகும்.

ஆனால் தப்பித் தவறி கூட யாரும் நந்தினி, நாகராஜின் திருமணம் பற்றி பேசவேயில்லை. ‘என்னடா இது…’ என்று நந்தினிக்கு கூட ஆச்சர்யமாய் இருந்தது.

ஒருவேளை தனக்குத் தெரியாமல் வீட்டினர் வேறு எதுவும் ஏற்பாடில் இருக்கிறார்களா என்று தோன்ற, சரியாய் பரீட்சைக்கு ஒருவாரம் முன்பு அவள் அப்பாவோடு பேசினாள்.

“ப்பா.. எக்ஸாம் எல்லாம் ரெண்டு வாரத்துல முடிஞ்சிடும்.. அடுத்து மேற்கொண்டு படிக்கவா..???” என்று இழுக்க, அவரோ நந்தினியை ஒரு பார்வை பார்த்தவர், சிந்தாமணியை பார்க்க,

“என்னங்க…??” என்றபடி வந்தார்..

“மேற்கொண்டு படிக்கட்டுமான்னு கேட்கிறா???” என்று சொல்ல,

“ஓ.. இன்னும் இந்த படிப்பே முடியலையே நந்தினி…” என்று சிந்தாமணி கேட்க,

“எக்ஸாம் மட்டும் தானேம்மா…” என்று நந்தினி அதற்கும் ஒரு பதில் சொல்ல,

“ம்ம்… படிச்சு நீ என்ன வேலைக்கா போகப் போற.. இப்பவே காலேஜுக்கு போயிட்டு வந்தா அலுப்பா உக்காந்துக்கிற..” என்று சிந்தாமணி எதுவோ சொல்ல வர,

“சிந்தா…” என்று அவர் பேச்சை நிறுத்திய சுப்புராஜ், “நந்தினி.. நீ நல்லபடியா இந்த எக்ஸாம் எல்லாம் முடி.. அப்புறம் இதை பத்தி பேசுவோம் சரியா… இப்போ எதையும் நினைக்காம படி..” என்று மகளை சமாதானம் செய்ய,

“இல்லப்பா பிரண்ட்ஸ் எல்லாம் அடுத்து என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு படிக்க இப்போவே பிளான் பண்ணிட்டாங்க.. அதான்??” என்று நந்தினி இன்னும் பிடிவாதமாய் தன் கேள்விக்கு பதிலை எதிர்பார்க்க,

“ஓ.. சரி ரெண்டு நாள்ல சொல்றேன்.. இப்போ போய் படி…” என்று தன்மையாகவே பேசி மகளை அனுப்பியவர்,

“ராஜி வந்தாளா ???” என்றார் தன் மனைவியிடம்..

“ஹ்ம்ம் தினமும் தான் வர்றாங்க.. சொன்னாலும் கேட்கிறது இல்லை.. மருமகளே மருமகளேன்னு நந்தினி முன்னாடியே எதையாவது பேசி வைக்கிறாங்க.. சமாளிக்கிறதுக் குள்ள போதும் போதும்னு ஆகுதுங்க..”

“ம்ம்ச்.. எத்தன தடவை சொன்னாலும் கேட்கிறது இல்லை.. பரீட்சை முடிஞ்சதும் அடுத்து ரெண்டு நாள்ல நிச்சயம்.. அடுத்து ஒருவாரத்துல நாகு துபாய்க்கு போறான்.. திரும்ப வர்றதுக்கு எப்படியும் ஒரு வருஷம் ஆகும்.. வந்தப்புறம் கல்யாணம் வச்சுக்கலாம்.. அதுவரைக்கும் வாயே திறக்காதன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறா…”  என்றவர்,

“பரீட்சை முடியுற வரைக்கும் நந்தினிக்கு எதுவும் தெரியக் கூடாது சிந்தா.. சின்னபுள்ள தனமா எதையாவது செஞ்சுட்டா சங்கடம்…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட,

“எல்லாரும் என்னையவே சொல்லுங்க.. கடைசியில நான் தான் உங்களுக்கு கிடைச்சேனா???” என்று முனங்கியபடி சென்றார்.

நந்தினிக்கோ ஒரே குழப்பமாய் இருந்தது.. இருவரும் என்ன பேசினார்கள் என்று சுத்தமாய் தெரியவில்லை.. ராஜி பேசுவதை வைத்துப் பார்த்தால் என்னவோ இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால் வீட்டில் பேசுவதைப் பார்த்தால் எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது.. இதெல்லாம் யோசிக்க யோசிக்க அவளுக்கு தலை வழி வந்தது தான் மிச்சம்.

இதற்கிடையில் நவீன் வீட்டில் வேறொரு பிரச்சனை.. நரேனின் திருமணம் நெருங்குவதால், அவனை பேருந்திற்கு செல்லவேண்டாம் என்று தர்மசாஸ்தா சொல்லிவிட, நவீனின் பொறுப்பில் இரண்டு பேருந்துகளும் வர, நவீனால் முன்போல நந்தினி செல்லும் பேருந்தில் சரியாய் செல்ல முடிவதில்லை.

“என்ன கண்டக்டர் முதலாளி… முகமே செழிப்பா இல்லையே..??” என்று லோகேஷ் ஒருநாள் கிண்டல் அடிக்க,

“டேய் இப்படி சொல்லாதன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்…” என்று நவீன் மிரட்ட,

“அட அத விடுப்பா.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. முன்ன எல்லாம் உற்சாகமா வருவ.. இப்போ என்ன கடமைக்குன்னு வர்ற மாதிரி இருக்கு…” என்று அவனும் விடாது கேட்க,

“அது ரெண்டு பஸ்ஸுக்கும் மாத்தி மாத்தி போறேனா அதான் டயர்ட் ஆகிடுது…” என்று நவீன் சமாளித்தான்..

நந்தினிக்கும் நவீன் அவன் பேருந்தில் அடிக்கடி வருவதில்லை என்பதை அறிந்து, சற்று வருத்தமாய் போனது..

‘என்னாச்சு.. ஏன் இதுல வர்றது இல்ல.. ஒருவேள இந்த நாகுவும் அத்தையும் அவங்க வீட்ல போய் எதுவும் பிரச்சனை பண்ணிருப்பாங்களோ…’ என்று யோசிக்க அவளுக்கு விடை கிடைக்கவில்லை..

ஒருநாள் நவீன் வருவான்.. மறுநாளும் அவனே வருவான் என்று எதிர்பார்த்தால் வேறு யாராவது வருவர்.. சரி இவன் வரமாட்டான் என்று நினைத்திருக்கும் நேரத்தில் நவீன் வந்து ‘டிக்கட்…’ என்று நிற்பான்..

நவீன் வருகையில் லேசான அதிர்வோடு மலர்ந்த முகமாய் அவனை காண்பதும், எதிர்பார்த்து அவன் வராது போனால் ஏமாற்றமாய் கல்லூரி செல்வதுமாய் இருந்தவளுக்கு அன்று விதியே ஒரு வாய்ப்பை அளித்தது..

நவீனை பார்பதற்கு மட்டுமல்ல, அவனோடு பேசுவதற்கும் கூட.

மாலை கல்லூரி விட்டு கிளம்புகையிலேயே வானம் தூரிக்கொண்டு தான் இருந்தது. கடந்த சில நாட்களாகவே திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல மழை தான்.

‘இந்த மேகலா வேற வரல… ரெக்கார்ட் நோட்டு வேற ஸ்பைரல் போட்டு முடிச்சாங்கலான்னு தெரியலையே…’ என்று புலம்பியபடி லால்குடி வந்து சேர, நந்தினி பேருந்தில் இருந்து இறங்கிய நேரம்  மழையும் லேசாய் ஆரம்பித்திருக்க,

“சீக்கிரம் போய் ரெக்கார்ட் நோட்ட வாங்கிட்டு வீட்டுக்கு போயிடனும்…” என்று எண்ணியபடி வேகமாய் நடந்தவள், அந்த ஜெராக்ஸ் கடையை சென்றடையும் முன்னேயே முக்கால்வாசி நனைந்துவிட்டாள். 

தெரிந்த கடை தான்.. இருந்தாலும் நனைந்தபடி உள்ளே செல்ல சங்கமடாய் இருக்க,

“அண்ணா ஸ்பைரல் பண்ணிட்டீங்களா??” என்று வெளியே நின்றே கேட்டாள்.

அவள் குரல் கேட்டதுமே கடையில் இருப்பவர் எட்டிப் பார்த்தாரோ இல்லையோ உள்ளிருந்து நவீன் எட்டிப் பார்த்தான்.

‘அட..’ என்று நந்தினி அவனைப் பார்க்க, அவனும் அப்படிதான் பார்த்தான். நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டது இருவரும் பார்த்து.

பார்ப்பதே அப்படி என்றால் பேச்சுக்கு கேட்கவா வேண்டும்.. இன்னும் அ ஆ கூட ஆரம்பிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இருவரும் பார்த்தபடி இருக்க, “இல்லம்மா.. நாளைக்கு காலையில பண்ணிடுறேன்.. காலேஜ் போறப்போ வந்து வாங்கிட்டு போறியா???” என்று அந்த கடையில் இருப்பவர் சொல்ல,

நந்தினிக்கு ஐயோ என்றானது. நாளைக்கு தான் அவளுக்கு லேப் எக்ஸாம்.. இதில் இவர் எப்போது பிரிண்ட் போட்டு, பைண்டிங் செய்து மழை வேறு இப்படி இருக்கையில் நினைக்கவே மலைப்பாய் இருக்க,

“என்னண்ணா… நான் நேத்தே குடுத்துட்டு போனேன்ல…” என்றாள் சலிப்பாய்.

அதற்கு அவர் பதில் சொல்லும் முன்பே, “உள்ள வந்து பேசு நந்தினி.. வெளிய நிக்காத…” என்று நவீனின் குரல் இடைபுக, அந்த கடைக்காரர் கூட அவனை நொடி பொழுது ஆச்சர்யமாய் பார்த்தார்.

இது நவீனின் நண்பனின் கடை..  நந்தினிக்கு இப்போது பதில் சொன்னவர் அங்கே வேலை செய்பவர்.. நவீன் அவ்வபோது அங்கே வருவான். அன்றும் தன் நண்பனை காண வந்திருக்க, மழையும் பிடித்துக்கொள்ள அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவருக்கு தெரிந்த நவீன், கடைக்கு வரும் ஆட்களிடம் எல்லாம் பேச்சு வைத்துகொள்ள மாட்டான். வருவான் அவன் நண்பனோடு பேசுவான் பின் கிளம்பிடுவான். ஆனால் நந்தினியை உரிமையாய் அழைத்து பேச, அவருக்கே ஆச்சர்யம் தான்.

நந்தினிக்கும் தான்.. திடீரென்று பார்த்தது மட்டுமல்லாமல், அவனே பேசவும் செய்ய, உள்ளே செல்வதா வேண்டாமா என்று தயக்கமாகவும் இருந்தது. வெளியிலோ ஆட்கள் மழைக்கு ஒதுங்க தொடங்கியிருந்தனர். அப்படியே நிற்கவும் முடியவில்லை.

குழப்பத்துடனே உள்ளே வந்தவள், நவீனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “நாளைக்கு எக்ஸாம் ண்ணா.. அதான் நேத்தே கொண்டுவந்து குடுத்துட்டு போனேன்…” என,

“நான் என்னம்மா பண்றது.. காலையில இருந்து கரண்ட் இல்லை.. இப்போதான் வந்துச்சு.. உனக்கு முன்னாடியே சீனியர் பசங்க குடுத்துட்டு போயிருக்காங்க.. வரிசையா தானே செய்யணும்… கண்டிப்பா நாளைக்கு காலையில் வந்து வங்கிக்கோ…” என்று அவரும் சொல்ல,

நந்தினி முகம் அப்படியே கூம்பிப் போனது.. அடிக்கும் மழைக்கு அடுத்து மின்சாரம் போனாலும் போகும்.. இதில் எங்கே இவர் எல்லாம் செய்யப் போகிறார் என்று தோன்ற,

‘ச்சே எல்லாரும் குடுத்த இடத்துலேயே குடுத்திருக்கலாம்.. இந்த மேகலா தான் இங்க ஒரு பேஜ்க்கு நாப்பது காசு கம்மின்னு இங்க குடுக்க வச்சா.. இப்போ நான் சிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு…’ என்று சுனங்கியவள்,

“ம்ம்.. நாளைக்கு கண்டிப்பா குடுத்துடுவீங்களா??” என்று சந்தேகமாய் கேட்க, வெளியே அதே நேரம் ஒரு பெரிய இடி சத்தம் கேட்டு, அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

நந்தினி உள்ளே வந்ததில் இருந்து அவளைத்தான் பார்த்திருந்தான். மழையில் ஏற்கனவே நனைந்து வந்திருக்கிறாள்.. இதில் அவள் முகத்தில் தோன்றும் கலவையான உணர்வுகள் வேறு.. எல்லாம் சேர்ந்து அவனை மீண்டும் பேச வைத்தது.          

“அச்சோ இதென்ன இப்படி மழை..” என்று நந்தினி வெளியே ஒரு பார்வையை வைத்து நின்றிருக்க,

“நாளைக்கு எப்போ எக்ஸாம் நந்தினி…” என்ற அவனது கேள்வியில் திடுக்கிட்டுத் தான் திரும்பினாள்.

“ஹா.. என்ன கேட்டீங்க..??” என்று..

“முதல்ல உட்காரு…” என்று ஒரு ஸ்டூலை இழுத்துப் போட,

“இல்ல பரவாயில்ல.. நான் கிளம்புறேன்.. மழை ரொம்ப பெய்யுது…” என்று அவள் கிளம்ப,

“இப்படி மழைல எப்படி போவ…” என்றவன் வெளியே சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வேறு வர,

அவளுக்கோ நேரம் கடக்க கடக்க மனதில் பயம் வேறு. எதிரே ஆள் வருவது கூட தெரியாத ஆளவு மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, அவள் அப்பாவும் ஊரில் இல்லை என்பது அப்போது தான் நினைவில் வர,

‘போச்சு.. அம்மா மட்டும் வீட்ல இருப்பாங்க.. லேட் வேற ஆகுதே.. தேடப்போறாங்க..’ என்று நினைத்தவள்,

“பரவாயில்ல.. நான் எப்படியோ போயிக்கிறேன்…” என்று சொல்லிபயடி, 

“அண்ணா நீங்க கண்டிப்பா நாளைக்கு போட்டு வச்சுடுவீங்கள்ள.. நாளைக்கு எக்ஸாம் இருக்கு…” என்று மீண்டும் கேட்க, அவரோ எத்தனை முறை சொல்வது என்பதுபோல் பார்த்தார்.

நவீனோ இவள் எப்படி வீடு போய் சேருவாள் என்பதுபோல் பார்த்திருக்க, அவளோ “நான் கிளம்புறேன்…” என்று அவனுக்கு தலையை ஆட்டிவிட்டு, வெளியே செல்லப் போக, மழை இன்னும் வலுத்தது.

“கடவுளே…” என்று பார்த்தவளுக்கு சாலையில் கால் வைக்கவே பயமாய் இருந்தது. நன்றாக இருட்டியும் விட்டது.   

“நந்தினி போகாத.. உள்ள வந்து உக்காரு….” என்று நவீன் அவளருகே வந்து சொல்ல,

“ம்ம்.. அம்மா மட்டும் இருப்பாங்க.. தேடுவாங்களே…” என்றவளின் கண்களில் அப்பட்டமாய் பயம். அந்த பயத்தை கண்டவன்,

“திட்டுவாங்களா ??” என்று கேட்க,

“இல்ல தேடுவாங்க…” என்று அவள் சொன்னதும், வேகமாய் தன் அலைபேசியை எடுத்து நீட்டினான் “இந்தா பேசு.. மழை நிக்கவும் வந்திடுவேன்னு சொல்லு…” என்றான்.

நந்தினிக்கு ஆச்சர்யமாய் இருந்தது.. இது தனக்கு தோணாமல் போனதே என்று. ஆனால் அப்படியே தோன்றியிருந்தாலும் அவளிடம் தான் அலைபேசி இல்லையே. சுப்புராஜு கூட ஒன்று வாங்கித்தருகிறேன் என்றுதான் சொன்னார். ஆனால் அவள்தான் இந்த நாகராஜின் தொல்லை இன்னும் ஜாஸ்தியாகும் என்று வேண்டாம் என்று விட்டாள்.

“தேங்க்ஸ்…” என்றவள், பிடுங்காத குறையாக, அவன் கரங்களில் இருந்து அலைபேசியை வாங்கி, அவள் வீட்டிற்கு பேச, அதன்பின் தான் சிறிது நிம்மதியும் கூட. ஆனால் இப்போது மனதில் இன்னொரு பயம்.. எங்கே அவள் அம்மா நாகராஜிடம் சொல்லி அவனை அனுப்பி வைத்துவிடுவாரோ என்று. அதிலும் நவீன் இருக்கையில் அவன் வந்தால் அவ்வளவு தான். இதெல்லாம் மனதில் ஓட அப்படியே நின்றுவிட்டாள்.

நவீன் அவள் முகத்தை பார்த்தபடி நிற்க, அவள் என்ன யோசிக்கிறாள் என்று அவனால் யூகிக்க முடிந்தது. ஆனாலும் அதைப்பற்றி எதுவும் கேட்காமல்,

“ஒண்ணும் டென்சன் ஆகாத.. நானே நைட் வந்து கூட உனக்கு பிரிண்ட் போட்டு வைக்கிறேன்…” என, அவன் சொன்ன விதத்தில் நந்தினி ஆச்சர்யமாய் கண்களை விரித்தாள் ‘நிஜமாகவா..’ என்பதுபோல்..

“இது என் பிரண்ட் கடைதான்.. அதுனால எந்த பிரச்சனையுமில்ல.. எப்போ எக்ஸாம்…” என்று அவன் பேச்சை வளர்க்க,

“நாளைக்கு காலையில் பதினோரு மணிக்கு எக்ஸாம்.. ஆனா பத்து மணிக்கே ரெக்கார்ட் வைக்கணும்…” என,

“ஹ்ம்ம் அப்படி ஒருவேள காலைல குள்ள ரெடியாகலைன்ன, ரெண்டாவது ஷிப்ட் வர்றபோ நானே கொண்டு வந்து தர்றேன்..” என்று நவீன் வாக்குறுதிகளை அள்ளிவிட,

அந்த நேரத்தில் அதெல்லாம் அவளுக்கு சுகமாய் இருந்தது. இருந்தாலும் பயம் அப்போதும் எதுவும் தயாராகாமல் போனால் என்ன செய்ய என்று.

“பாரவாயில்ல.. நீங்க நைட்டு வந்தே போட்டு வைங்க…” என்று சொல்ல, நவீன் சிரித்து விட்டான்.

‘இப்போ எதுக்கு சிரிக்கிறாங்க..’ என்று நந்தினி புரியாமல் பார்க்க,

“காரியக்காரி தான் நீ…” என்றவன் மீண்டும் சிரிக்க, மழை சற்றே மட்டுப் பட்டிருந்தது.

“சரி சரி.. எனக்கு நைட்டு போட்டு வைங்க..” என்று சற்றே மிரட்டலாய் சொன்னவள், “மழை கம்மியாகிடுச்சு.. நான் வர்றேன்..” என்று கிளம்பப் போக,

“இப்படியே எப்படி போவ…” என்று அப்போதும் அவளைப் போக விடாமல் நிறுத்தினான். என்னவோ நவீனுக்கு அப்படியே அவளைத் தனியே அந்த மழை இருட்டில் அனுப்ப சங்கடமாய் இருக்க, அவளை கிளம்ப விடாமல் செய்தான்.

“இல்ல ஆட்டோ ஏதாவது…” என்று நந்தினி இழுக்கையில், நவீனுக்கு சிரிப்பு மறைந்து முறைப்பு வர, அப்படியே கப் சிப்பென்று வாயை மூடிக்கொண்டவள்,

‘வீட்டுக்கு போகணுமே…’ என்று தோன்றினாலும் அவனோடு இப்படி நின்று பேசுவதும் நன்றாய் இருப்பதாகத்தான் தோன்றியது. அதேநேரம் பக்கத்து டீ கடையில் ஒரு ஆட்டோ வந்து நிற்க,

“ஆட்டோ..” என்று நந்தினி சொல்வதற்குள்,

“இங்கதான் நில்லு..” என்றபடி அங்கே சென்றவன், அடுத்த இரண்டு நொடியில், ஆட்டோவை ஓட்டிக்கொண்டு இங்கே வந்து நின்றான்.

நந்தினிக்கு இது இன்னொரு ஆச்சர்யம்.. உள்ளே ஏறாமல் அவனை பார்க்க,

“ஏறு நந்தினி.. எங்க ஆட்டோ தான்.. வாடைகைக்கு விட்டிருக்கோம்..” என்றபடி ஹார்ன் அடிக்க, நந்தினிக்கு என்னவோ மனம் உல்லாசமாய் இருந்தது. நினைக்காதது எல்லாம் நடக்க, உற்சாகமாய் ஆட்டோவில் ஏறினாள்..  

“உங்க வீடு எங்க இருக்கு???” என்றபடி ஆட்டோவை நவீன் கிளப்ப, அதற்கு பதில் சொல்லாமல்,

“உங்.. உங்களுக்கு ஆட்டோ ஓட்டத் தெரியுமா??” என்றாள் சந்தேகமாய்..

மேற்புற கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன், “ஹலோ மேடம்.. நான் பஸ்ஸே ஓட்டுவேன் தெரியுமா…” என்று புருவங்களைத் தூக்க,

“ஆனா நான் பார்த்தது இல்லையே..” என்று உதட்டை சுளிக்க,

“இப்போ ஆட்டோ ஓட்டுறத பாரு.. இன்னொரு நாள் பஸ் ஓட்டலாம்…” என்றவன், மீண்டும் “உங்க வீடு எங்க இருக்கு..” என்றான்..

“உங்களுக்குத் தெரியாதா..” என்று கேட்கும் போதே மனம் குறைப்பட்டது அவளுக்கு,

“எங்க வீடு உனக்குத் தெரியுமா???” என்று நவீன் கேட்க, ம்ம்ஹும் என்று நந்தினி சொல்ல,

“அதேபோல தான் எனக்கும்..” என்றவன் அவள் வீடு எங்கிருக்கு என்று கேட்டுக்கொண்டு அழகாய் ஆட்டோவை ஓட்டினான்.

நந்தினி வீட்டை நெருங்கும் போதே, “இங்கிருந்து, ரெண்டு சந்து அடுத்து அப்படியே நேரா வந்தா முன்னாடி இட்லி பூ செடி இருக்க வீடு எங்களது..” என்று நவீன் சொல்ல,

“ஓ.. அந்த மருதாணி செடிக் கூட பின்னாடி இருக்குமே அந்த வீடா..” என்று சரியாய் கேட்டாள்.

‘உனக்கெப்படி தெரியும்..’ என்பதுபோல் நவீன் பார்க்க,

“அடிக்கடி நாங்க அங்க வந்து மருதாணி பிடுங்குவோம்.. யாருக்கும் தெரியாம..” என்று கொசுறு தகவலையும் சொல்ல, மீண்டும் அவனுக்குச் சிரிப்பு..

இப்படியே இந்த பயணம் செல்லாதா என்று தான் நந்தினிக்கு இருந்தது. நவீனுக்கும் அப்படிதான் போல. ஆனால் அவளை பாதுகாப்பாய் வீட்டில் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் அவனை வேறெதுவும் சிந்திக்க விடவில்லை.

வீட்டின் முன்னே ஆட்டோ நிற்கையிலேயே, சிந்தாமணி வாசலுக்கு வந்துவிட்டார், மகளைப் பார்த்ததும் அத்தனை நிம்மதி..

“நந்தினி..” என்றபடி  வர, அவளோ நவீனைப் பார்த்து தலையசைக்க, சிந்தாமணியின் பார்வை சட்டென்று அப்படியே மாறிவிட்டது.                                           

          

    

                     

 

 

Advertisement