Advertisement

ஆசை – 3

அன்றைய இரவு ஏனோ நவீனுக்கு உறக்கமே வருவதாய் இல்லை. நந்தினியிடம் அவன் சாதாரணமாகத் தான் கேட்டான் ‘எதுவும் பிரச்சனையில்லையே..’ என்று. ஆனால் அவள் உடனே  கண்ணீரை சிந்தியதும், அதுவும் அவன் கரங்களில் கண்ணீர் துளிகள் பட்டதும், என்னவோ அவன் நெஞ்சை அசைத்துப் பார்த்துவிட்டது.

பொதுவாக எந்தவொரு விஷயத்திற்கும் எப்போதும் அலட்டிக்கொள்ள மாட்டான் தான். இருந்தாலும் நந்தினியின் கண்ணீர் அவனுக்கு என்னவோ செய்தது.

அவனும் இத்தனை வருடங்களாய் பார்த்துகொண்டு தானே இருக்கிறான். நாகராஜை பற்றியும் அவனுக்கு ஓரளவு தெரியும். நந்தினியோ அப்படியே அவனுக்கு நேர்மார்.. சிரித்த முகம்.. ஒல்லியும் இல்லாமல் குண்டும் இல்லாமல், பூசினார் போன்ற உடல்வாகில் லட்சனமாகவே இருப்பாள்.

நாகராஜை பார்த்ததுமே சிரித்துக் கொண்டிருக்கும் அவள் முகம் அப்படியே மாறிவிடும். கண்களில் ஒரு எரிச்சலும், மனதில் இருக்கும் பதற்றம் அவள் முகத்திலும் அப்படியே தெரியும்..

‘இவளுக்கு இவனா…??’ என்று நவீனுக்கு பார்க்கும் போதெல்லாம் தோன்றும். நாகராஜ் நல்லவனோ கெட்டவனோ ஆனால் நந்தினிக்கு பொருத்தமானவன் இல்லை என்று மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனாலும் இதில் தான் என்ன செய்திட முடியும் என்று இத்தனை நாள் சும்மா இருந்தான்.

இன்றோ தான் கேட்ட ஒரு கேள்விக்கே அவள் அழுதுவிட்டதை எண்ணி மனம் முழுவதும் யோசனை மட்டும்தான் நிரம்பி வழிந்தது. குறுக்கும் நெடுக்கும் மாடியில் நடந்தபடி இருக்க,

“என்னடா தூங்கலையா..??” என்றபடி வந்தான் நரேன்..

“ம்ம்ச் இல்லடா…” என்ற நவீன், நரேனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

அவனது செய்கைகள் நரேனுக்கு வித்தியாசமாய் பட, “என்னடா என்ன பிரச்சனை.. மறுபடியும் பஸ்ல தகறாரா..” என்று கேட்க,

“அதெல்லாம் இல்லடா…” என்று சொன்னவன், பின் என்ன நினைத்தானோ, காலையில் நடந்ததை சொல்ல,

‘இதற்கா இத்தனை யோசனை..’ என்று நரேன் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் தன் தம்பியை பார்த்தான்.

இருவருக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். அண்ணன் தம்பி என்பதையும் தாண்டி நண்பர்கள் போலத் தான் முதலில். இருவருக்கும் இடையில் எந்தவொரு ஒளிவு மறைவும் இருந்ததில்லை. அதனால் தான் நரேனும் தயங்கமால் கேள்வி கேட்டது, நவீனும் தன் மனதில் இருப்பதை மறைக்காமல் சொன்னது.

“என்னடா இப்படி பாக்குற???”

“இல்ல இந்த விசயத்துக்கா இப்படி தூங்காம நடந்திட்டு இருக்க?? நீ என்னவோ கேட்டுட்ட, அந்த பொண்ணுக்கு என்ன தோணிச்சோ அழுதிடுச்சு.. அதுக்கேன்டா   இப்படி நடந்துட்டு இருக்க..??”

“இல்ல நரேனு.. நந்தினிக்கு அந்த நாகு சரியான ஆளே இல்லடா…” என்று தன் நாடியை தடவியபடி சொன்ன நவீனை இப்போது இன்னும் ஆச்சர்யமாய் பார்த்தான் நரேன்.

யாருடைய விசயத்திலும் நவீன் தலை கொடுக்கவே மாட்டான். வீட்டில் கூட மணியாள் ஏதாவது சொன்னால்

‘ம்மா.. இது அவங்க பிரச்சனை.. நம்ம எதுக்கு போய் பேசணும்.. நாளைக்கு எதாவது ஒண்ணுன்னா நம்மளைத் தான் சொல்வாங்க…’ என்றுவிட்டு தன் வேலையைப் பார்ப்பவன், இன்று யாரோ ஒரு பெண்ணிற்காக உறக்கத்தை விட்டு உலாத்திக் கொண்டிருப்பது நரேனுக்கு யோசனையை கொடுக்க, நவீனை இப்படியே விட்டால் அவன் இன்னும் குழம்புவான் என்றெண்ணி,

“சரி சரி.. நீவேணா நல்ல மாப்பிள்ளையா பார்த்து அந்த பொண்ணு வீட்ல போய் சொல்லுடா…” என்று வம்பிழுக்க, அத்தனை நேரம் யோசனையில் இருந்தவன் இப்போது முறைத்தான்..

“என்னடா முறைப்பு.. போ.. போய் தூங்குற வழியப் பாரு.. இவரு கேட்டாராம்.. அவங்க அழுதாங்களாம்.. போ போ..” என்று விரட்ட,

“இப்பத் தெரியுதுடா ஏன் விரட்டுரன்னு.. சார் ப்ரீயா போன் பேசணும்.. இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல…” என்றபடி நவீனும் கைலியை மடித்துக் கட்டியபடி நகர்ந்தான்.

அங்கே நந்தினியோ உறக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்தாள். காரணம் எல்லாம் அவளின் அம்மா தான்.

“இங்க பாரு நந்தினி.. சொல்றேன்னு தப்பா நினைக்காத.. நீ நல்லபடியா வாழணும்னு தானே நானும் அப்பாவும் இதெல்லாம் செய்றோம்.. எங்களுக்கு நீ ஒரே பொண்ணு.. யாருக்கோ தெரியாதவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறதுக்கு பதிலா நம்ம நாகுக்கு கொடுத்தா நீ நல்லா இருப்பன்னு தானே சொல்றோம்…” என்று மகளின் தலையை வருடியபடி சொல்ல, அவளுக்கோ எரிச்சல் அடக்கமாட்டாமல் வந்தது.   

“என்ன நந்தினி அமைதியா இருக்க.. இப்போவே நீ இப்படி இருந்தா, நாளைக்கு இதுவே உனக்கு பிரச்சனை ஆகாதா.. இனி கல்யாணம் வரைக்கும் நாகு எந்த பிரச்சனையும் செய்யமாட்டான்.. கவலைப்படாத..” என்று சொல்லி முடிக்கும் முன்னே,

“அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் பிரச்சனை செய்வானா??” என்றாள் இடக்காய்.

“ஏய் நந்தினி இப்படியெல்லாம் அபசகுனமா பேசாத.. உன் வாழ்க்கை நல்லாருக்கணும்னு தானே…” என்று சிந்தாமணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

“அவன கல்யாணம் பண்ணா என் வாழ்கை நல்லாவே இருக்காது..” என்று அச்சாரமாய் சொல்லிவிட்டு வேறு இடத்தில் சென்று படுத்துக்கொண்டாள்.

சிந்தாமணிக்கோ நெஞ்சு வலி வராத குறைதான். முதல் முறையாய் மகளது விஷயத்தில் அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. இத்தனை நாள் அமைதியாய் இருந்தவள் இப்போது இந்த விஷயம் பேசினாலே பிடிவாதம் பிடிப்பதும் புதிதாய் இருக்க, மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தன் கணவரிடம் சென்றார்.

“நீதான் மேல மேல இதை பேசி பெருசு பண்ற சிந்தா.. எப்பவும் போல நந்தினி காலேஜ் போய்ட்டு வரட்டும்.. படிப்பு முடியவும் பேசிப்போம்.. சும்மா சும்மா பேசினா அவளுக்கு எரிச்சல் தான் ஆகும்..”

“அதுக்கில்லைங்க.. அவளுக்கு நாகுவ பிடிக்கவேயில்ல..” என்று சிந்தாமணி தயங்க,

“இப்போ என்ன பழகிட்டாங்க.. பிடிக்க.. பிடிக்காம போக.. கல்யாணத்துக்கு அப்புறம் தானே அவனை பத்தி முழுசா தெரியும்..” என்று சுப்புராஜ் எடுத்து சொல்ல, சிந்தாமணிக்கு அப்போதும் மனம் அமைதியடையவில்லை.

அவரது உள்ளுணர்வு எதோ ஒன்று தவறாக நடகப் போகிறதென்றே சொல்ல, ‘கடவுளேஎன் பொண்ணு வாழ்க்கை நல்லபடியா அமையணும். அவளும் நாகுவும் சந்தோசமா பிரச்சனையில்லாம வாழணும்..’  என்று வேண்டியபடி படுத்துறங்கினார்.

ஒவ்வொரு விடியலுமே ஒவ்வொரு புது செய்தியை கொண்டு வரும். அப்படி வரும் செய்தி நல்லதா கேட்டதா என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. அதுபோலவே நந்தினிக்கும். என்ன நடந்தாலும் சரி அவளுடைய வாழ்வென்பது நாகராஜோடு இல்லை என்பதில் உறுதியாய் இருந்தாள்.

வீட்டில் யார் என்ன சொன்னாலும் சரி, இல்லை அந்த நாகுவே எதுவும் சொன்னாலும் சரி காதில் வாங்குவது இல்லை. பரீட்சை வேறு நெருங்குகிறது ஆகையால் அதில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். என்ன அவ்வப்போது வந்து ராஜி தான் ஏதாவது சொல்லிச் செல்வார்.

அடிக்கடி ‘என் வீட்டுக்கு வரப் போறவ இப்படி இருக்க கூடாது அப்படி இருக்க கூடாது…’ என்று சொல்ல, அப்போதெல்லாம் தன் அம்மாவைத் தான் முறைப்பாள் நந்தினி.

‘நான் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் சொல்லவேண்டியது இல்லை…’ என்று கத்த வேண்டும் போல் இருக்கும். ஆனாலும் அமைதியாய் இருந்துவிடுவாள்.

நாட்கள் அப்படியே செல்ல, நவீனுக்கும் நடுவில் மனதில் தோன்றிய குழப்பங்கள் எல்லாம் மறைந்து எப்போதும் போல் இருந்தான். நந்தினி வழக்கம் போல் அவன் பேருந்தில் வர, நாகராஜும் வராது இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லையென்று நினைத்தான்.  

என்ன இப்போதெல்லாம் மேகலாவிடம் கொடுத்து டிக்கட் எடுக்கச் சொல்லாமல் நந்தினியே நேருக்கு நேராய் நவீனின் முகம் பார்த்து டிக்கட் வாங்க, மேகலா தான் ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தாள்.

“இப்போ எதுக்கு டி இப்படி பாக்குற..???”  

“இல்ல.. மூணு வருசமா நடக்காத மாற்றம்  இப்படி மூணே வாரத்துல நடக்குதே அதான் பார்த்தேன்..”

“போ டி.. இன்னும் கொஞ்ச நாள் தானே வருவோம்..” என்று எதையாவது சொல்லி அவள் வாயை நந்தினி மூடிவிடுவாள்.

ஆனாலும் அப்படி சொல்லும் போதெல்லாம் ‘இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த பேருந்தில் வருவோம்…’ என்று நினைக்கையில் மனம் பாராமாவது அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

மூன்று வருடங்களாய் வந்து போகும் பேருந்து, என்னவோ இது அவளுக்கே சொந்தமான ஒரு வாகனம் போல ஓர் உணர்வை கொடுத்துவிட்டது.

‘இது என் சீட்டு..’ என்று உரிமையாய் அமரும் இடத்தில், அடுத்த கொஞ்ச நாட்களில் வேறு யாராவது மாணவிகள் அமர்வர். அடுத்த மூன்று வருடங்கள்  அது அவர்களின் பேருந்து, அவர்களின் இருக்கையாகும்..

அடுத்தடுத்து புது புது ஆட்கள் வர, நாளடைவில் நவீனும் இவளை மறந்துபோவான் என்று தோன்றியதுமே ஒருநொடி அவளுக்கு குப்பென்று வியர்த்து விட்டது.

‘நவீன்….’

அவன் பெயரை உச்சரிக்கும் போதே மனதில் ஒரு தைரியம்.. ஒரு தெளிவு வருவது இப்போதெல்லாம் உணர்ந்தே இருந்தாள். தன்னிடம் ஒருவன் பிரச்சனை செய்கிறான் என்றதும் எதையும் சிந்திக்காது அவனை அடித்தானே என்று நினைக்கையில், அவள் தந்தையிடம் தோன்றாத ஓர் பாதுகாப்பு உணர்வு அவனிடம் அவளுக்குத் தோன்றியது.

‘நவீன் தர்மசாஸ்தா…’

யாராவது அவனது பெயரைக் கேட்டால் அப்படித் தான் சொல்வான்.. அப்படி சொல்கையிலே அத்தனை நிமிர்வாய் இருக்கும். இது அவனின் சொந்த பேருந்து தான்.. ஆனாலும் உட்கார்ந்து உண்ணாமல் உழைத்து உண்ணவேண்டும் என்ற அவனின் பாங்கு இதெல்லாம் சிந்திக்க சிந்திக்க நந்தினிக்கு நவீன் மீதான மதிப்பு இன்னும் கூடிக்கொண்டே போனது.

மேகலா எப்போதுமே பேருந்தில் அனைவரிடமும் கலகலவென்று பேசிக்கொண்டு தான் வருவாள். அவள் பேசுவதை பார்த்தபடி, இல்லை அங்கே நடக்கும் விசயங்களுக்கு ஏற்றபடி நந்தினி சிரிப்பாள் சிந்திப்பாள் அவ்வளவே. ஆனால் இப்போதெல்லாம் அவளுக்கு நவீனிடம் பேசவேண்டும் போல இருந்தது.

காரணம் அவளுக்குத் தெரியவில்லை. அதையும் தாண்டி இன்னும் யோசித்தால், ‘இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் நான் இந்த பஸ்ல காலேஜ் போக போறதில்ல…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொள்வாள்.

அன்றைய தினம் என்னவோ நவீனிடம் பேசவேண்டும் என்று பிடிவாதமாய் மனதில் எண்ணம் எழ, ஏழு ரூபாய் டிக்கட்டிற்கு இருபது ருபாய் நோட்டை நீட்டினாள்.

அதனை வாங்கியபடி அவளின் முகத்தைப் பார்த்தவன், “ரெண்டு பேருக்கா…” என்று மேகலாவையும் சேர்த்துக் கேட்க, மேகலா பதில் சொல்லும்முன்னே முந்திக்கொண்டு

“ஆமா…”  என்றாள் நந்தினி..

‘இவளா பேசுறது..’ என்று மேகலா திகைத்துப் பார்க்க,

‘இவக்கூட பேசுறா…’ என்று நவீனும் கொஞ்சம் திகைத்துத் தான் பார்த்தான். ஆனாலும் வேலை இருக்கிறதே..

“ஹ்ம்ம் சில்றை இல்ல போறப்போ தர்றேன்…” என்றபடி நகர,

“என்கிட்ட இருக்குண்ணா…” என்று மேகலா சொல்ல, நந்தினி அவளைத் திரும்பி முறைத்தாள்.

மேகலாவின் குரலில் திரும்பிய நவீன், நந்தினி அவளை முறைப்பது கண்டு சிரிப்பு வந்துவிட, மீண்டும் அவர்கள் அருகே வந்தவன், மேகலாவிடம் இருந்த சில்லறையை வாங்கிக்கொண்டு மீத பணத்தை கொடுக்க, அதனை வாங்க மேகலா கை நீட்டும் முன்னே,  நந்தினி வெடுக்கென்று  பிடுங்கிவிட்டாள்.

“நான் தானே பணம் கொடுத்தேன்…” என்று நவீனையும் சரி மேகலாவையும் சரி ஏகத்துக்கும் ஒரு முறைப்பு வேறு..

‘அம்மாடியோ.. ஒவ்வொரு ரியாக்சன் காட்றா..’ என்று நினைத்தவன், விசில் ஊதியபடி மற்றவர்களிடம் செல்ல, நந்தினிக்கே தான் செய்ததை எண்ணி மடத் தனமாக இருந்தது.

‘ச்சே லூசு மாதிரி பண்ணிட்டேன்…’ என்று நாக்கை கடித்து தலையை தட்டிக்கொள்ள,

“ஹ்ம்ம் இவளை இனி திருத்த முடியாது…” என்று முணுமுணுத்துக் கொண்டாள் மேகலா..

நவீனுக்கு என்னவோ அன்றைய தினமெல்லாம் நந்தினி செய்தது வித்தியாசமாய் பட, அவள் இறங்கும் வரையிலும் அடிக்கடி நந்தினியைத் தான் பார்த்துகொண்டு இருந்தான். என்னவோ அவள் அவனைப் பார்ப்பதும், அவன் பார்க்கையில் அவள் சட்டென்று பார்வையைத் திருப்புவதுமாய் இருக்க, நவீனுக்கு இதெல்லாம் புதிதாய் தோன்ற,

அதற்கேற்றபடி பேருந்தில் ஒலிக்கும் பாடல்களும் இவர்களின் உணர்வுகளுக்கு நெய் வார்க்க, அழகாய் அங்கே ஒரு வாசம் இருவரின் சுவாசங்களுக்கு இடையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.

மேகலா இதெல்லாம் கண்டும் காணமல் இருக்க, நாகராஜ் தானே அந்த பேருந்தில் வருவதில்லை, ஆனால் அவனது நண்பர்கள் சிலர் தினமும் வரத்தான் செய்தனர். அப்படியே இவையனைத்தும் அவர்களின் கண்களில் பட்டு, கல்லூரியில் ஒன்றுக்கு இரண்டாய் நாகுவின் காதுகளில் நுழைந்து அவன் மண்டையை சூடேறச் செய்தது.

“டேய் உண்மையா தான் சொல்றீங்களா???” என்று பல்லைக் கடிக்க,

“சத்தியமாடா.. நந்தினி அவனை பார்க்கிறதும், அந்த நவீனு திரும்பித் திரும்பி நந்தினிய பார்க்கிறதும் யப்பா எல்லாருக்கும் இன்னிக்கு பஸ்ல இதான் வேடிக்கை…” என்று ஒருவன் இன்னும் நன்றாய் ஏற்றிவிட,

சுப்புராஜ் பொறுமை பொறுமை என்று அவனிடம் சொல்லி வைத்ததெல்லாம் இப்போது அடியோடு காற்றில் கரைந்து, மனதினுள் ஒரு மூர்க்கத் தனம் தலைத் தூக்க, நேராக நந்தினியின் வகுப்பிற்குச் சென்றான்.

அங்கே போனாலோ அவளுக்கு வகுப்பு நடந்துகொண்டு இருக்க, உள்ளே ஆசிரியர் இருக்கையில் தான் போனால் நந்தினி கடைசியில் தன்னையே மாட்டிவிடுவாள் என்று தெரிந்து, மதிய உணவு இடைவேளைக்காக காத்திருந்தான்.

‘என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு.. என்னைய கட்டிக்கபோறோம்னு தெரிஞ்சும் அந்த கண்டக்டர் பையல பாக்குறான்னா என்ன ஒரு திமிரு… இருக்கு இன்னிக்கு அவளுக்கு…’ என்று கருவிக்கொண்டு இருக்கையிலேயே நந்தினியும், மேகலாவும் கேண்டீன் சென்றுவிட்டு வர, வேகமாய் அவர்களை வழி மறித்து நின்றான் நாகு.

“ஏய் நீ போ..” என்று மேகலாவை விரட்ட, அவளோ நந்தினியை பார்க்க, நந்தினியோ அங்கே நில் என்பது போல் சைகை செய்ய,

“உன்னை போக சொன்னேன்.. போறியா இல்லையா??” என்று நாகராஜ் அதட்ட,

“நீ போ மேகலா.. நான் வர்றேன்..” என்று நந்தினி சொல்லவும், மேகலா செல்லவெல்லாம் இல்லை கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டாள்.

“ஏய் நந்தினி என்ன திமிர் கூடிப் போச்சா..?? புதுசு புதுசா என்னென்னவோ செய்றியாம்.. என்ன???” என்று சட்டை காலரைத் தூக்கிவிட்டபடி கேட்டவனை நேருக்கு நேராய் நிமிர்ந்து பார்த்து முறைத்து நின்றாள்.

“என்னடி கேட்டிட்டு இருக்கேன்.. முறைச்சிட்டு நிக்கிற.. குளிர் விட்டுப் போச்சா…”

“இப்போ உனக்கு என்ன வேணும் ???”

“என்ன வேணுமா?? ஆமா நீ ஏன் அந்த கண்டக்டர் பையல பார்த்த…” என்று நாகராஜ் கேட்ட கேள்வியில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட,

“ஏய் என்ன??” என்று இன்னும் பல்லைக் கடித்தான்..

“நீ கேக்குற கேள்வி உனக்கே அர்த்தமா இருக்கா? எனக்கென்ன கண் தெரியாதா யாரையும் பாக்காம வர.. பஸ்ல எத்தனை பேர் வர்றாங்க எல்லாரையும் பார்க்கமாட்டேன்னு கண்ண மூடிட்டு வர முடியுமா??” என்று நந்தினி கிண்டலாய் பேச,

“இங்க பாரு இந்த பேச்செல்லாம் என்கிட்டே வேணாம்.. வேற ஏதாவது விசயமா இருந்துச்சு தொலைச்சு கட்டிருவேன்.. வீட்ல வந்து சொன்னா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்..” என்று மிரட்ட,

“சொல்லிக்கோ.. என்மேல தப்பிருந்தா நானே ஒத்துக்குவேன்.. அப்புறம் இன்னொன்னு, நான் யார பாக்குறேன் பாக்கல வேற விசயம், உன் பிரண்ட்ஸ் எதுக்கு என்னையவே பார்த்திட்டு வர்றாங்க..?? சொல்லி வை.. ஏதாவது பண்ணா பாலோ பண்ணி தொல்லைத் தர்றாங்கன்னு பிரின்சிபல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..” என்று நந்தினி விரல் நீட்டி மிரட்டிவிட்டுச் செல்ல,

அந்த நொடி நாகராஜ் பயந்து தான் போனான். ஏனெனில் ஏற்கனவே ஒருமுறை இதுபோல் நந்தினி செய்திருக்கிறாள். நண்பர்கள் எல்லாம் ஏற்றிவிட, அந்த மிதப்பில் நந்தினி சாலையில் போகும் போதும் வரும் போதும் நாகராஜ் பின்னோடு செல்ல, நடுவில் அவர்கள் கல்லூரி ஆசிரியை ஒருவர் வர, நந்தினி யோசிக்கவெல்லாம் இல்லை நேராக சென்று அவரிடம், இவனும் இவன் நண்பர்களும் தான் போகுமிடம் வருமிடம் எல்லாம் வந்து தொல்லை செய்கின்றனர் என்று சொல்லி அது வேறு ஒரு பஞ்சாயத்து ஆனது.

அதை நினைத்தவன், அவனை மிரட்டிவிட்டு சென்றவளை அப்போதைக்கு முறைக்க மட்டுமே முடியும் என்பதுபோல் நின்றிருந்தான்.

ஆனால் நந்தினிக்கோ மனம் ஒருநிலையில் இல்லை . எத்தனை நாளைக்கு இவனை இப்படி தற்காலிக சமாளிப்புகளால் சமாளிப்பது. இதுவே அவளுக்கு ஒரு சலிப்பாய் இருந்தது.

‘ச்சே.. எப்படி பேசினாலும் திருந்த மாட்டேங்கிறான்.. இவனை சொல்லி என்ன செய்ய வீட்ல இருக்கவங்கள சொல்லணும்…’ என்று கடிய,

அங்கே வீட்டில் இருப்பவர்களோ, இவர்களின் தேர்வு முடியவும், வீட்டளவில் சின்னதாய் நிச்சயம் வைத்துகொள்வோம் என்றும் நாகராஜ் ஒருமுறை துபாய் சென்றுவந்த பிறகு இருவரின் திருமணத்தையும் வைத்துகொள்வோம் என்றும் பேசி முடித்திருந்தனர்.                                          

         

                    

   

Advertisement