Advertisement

ஆசை – 2

நந்தினிக்கு வீட்டிற்குள் நுழையும் போதே மனம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது.. அவளுக்கு நன்றாகவே தெரியும், காலையில் நடந்த சம்பவத்திற்கு நிச்சம் அந்த நாகு சும்மா இருக்க மாட்டான் என்று. போதாதக் குறைக்கு கல்லூரிக்கும் அவன் இன்று வரவில்லை.

நவீன், அவனை அடித்து பாதி வழியில் இறக்கிவிட்டதுமே நந்தினி அடுத்து கவனித்து நாகராஜ் கல்லூரிக்கு வந்தானா என்றுதான். எப்போதும் அவன் நிற்கும் பைக் ஸ்டாண்டில் ஆளைக் காணோம் என்றதும்,

‘போச்சு… நேரா வீட்டுக்குத் தான் போயிருப்பான்.. அவன் இஷ்டத்துக்கு ஒரு கதை சொல்லி… கடவுளே.. இனி அதுக்கும் நான் பேச்சு வாங்கனுமா…’ என்று அப்போதிருந்து அதே சிந்தனையாய் தான் இருந்தாள்.

மாலை கல்லூரி முடிந்து திரும்ப பேருந்தில் வரும்போது, நவீன் அங்கில்லை. எப்போதுமே இதுதானே வழக்கம்.. காலையில் இருப்பான் ஆனால் மாலை நேரத்தில் இருக்கமாட்டான். இரவு கடைசி இரண்டு முறைகள் தான் வருவான் என்று அவளுக்கும் தெரியும்.

ஆனாலும் என்னவோ நவீனைப் பார்த்தால் கொஞ்சம் மனது தைரியமாய் இருக்கும் என்று தோன்ற, பேருந்து அவர்களது மெக்கானிக் ஷெட்டை தாண்டி செல்கையில், அங்கே இருக்கிறானா என்று ஜன்னல் வழியாய் பார்த்துக்கொண்டே வர, நவீனோ மும்முரமாய் எதுவோ வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்தினியின் இந்த பாட்டை எல்லாம் மேகலா கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.

“ஓய்.. என்னதிது.. காத்து அந்த பக்கம் வீசுது…” என்று ஜன்னலை கைக் காட்ட,

“ம்ம்ச் நீ வேற…” என்று சலித்தாள் நந்தினி.

மேகலாவிற்கு மனதில் வேறொரு கடுப்பு, அனைவரும் ஒன்றுபோல் ஒரே நிறத்தில் உடுத்தலாம் என்று திட்டம் போட, அதை அவளுக்கு தெரியாமல் நந்தினி வேறு நிறத்தில் மாற்றிட, மேகலா மட்டும் பச்சை நிற உடையில் செல்ல, அவள் வகுப்பு மாணவிகள் அனைவரும் நீல நிறத்தில் வந்திருக்க, காலையிலிருந்து நந்தினியை முறைத்துக்கொண்டு தான் இருந்தாள் மேகலா. இப்போது இதுவும் சேர்ந்துவிட, அவளை ஒரு வழி செய்து தான் விட்டாள்.

“நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன்… ஒண்ணும் சொல்ற மாதிரி இல்ல.. அங்க ஒருத்தன் உன்னையவே கட்டுவேன்னு சுத்துறான்.. நீயோ இப்படி ஜன்னல் பக்கம் பார்த்துக்கிட்டு வர… ஊருக்குள்ள வெட்டு குத்து ஆகாம இருந்தா சரிதான்…” என்று மேகலா சொல்லும் போதே,

“லூசு மாதிரி பேசாதடி… அப்படியெல்லாம் எதுவுமில்ல…” என்று நந்தினி கடிந்து சொல்ல,

“இல்லாம இருந்தா சரிதான்…” என்று மேகலாவும் பேச்சை முடித்தாள்.

ஆனால் இது இதோடு விடாது என்பதற்கிணங்க, நந்தினி வீடு செல்லும் போது, அவளுக்கு முன்பே நாகராஜ் அங்கேதான் இருந்தான். அவன் இருந்த நிலையை பார்க்கையில் காலையிலிருந்து இங்கேதான் இருக்கிறான் என்று நன்றாகவே புரிந்தது.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் உள்ளே சென்று தனது பையை வைத்துவிட்டு, முகம் கழுவி உடை மாற்றி வர, சுப்புராஜும் சிந்தாமணியும் நாகராஜும் ஒன்றாய் அமர்ந்திருந்தனர்.

அனைவரையும் நோட்டம் விட்டவள், வாயே திறக்காது நேராய் சென்று தனக்கு காப்பி கலக்கிக் கொண்டு வந்து டிவி முன்பு அமர, நாகராஜிற்கு பற்றிக்கொண்டு வந்தது.

“பாத்தீங்களா மாமா.. இப்படித்தான்.. இப்படித்தான் அந்த கண்டக்டர் பைய அடிக்கும் போது கொஞ்சம் கூட கண்டுக்காம இருந்தா…” என்று குரலை உயர்த்த,

“நந்தினி…” என்று அழைத்தார் சிந்தாமணி..

“என்னம்மா…” என்றவள் அவர்களிடம் எழுந்தே வரவில்லை.

“நந்தினி இங்க வா…” என்று அவள் அப்பா அழைக்க,

“ம்ம்ச்… வந்தா நிம்மதியா இருக்க முடியாது…” என்று முணுமுணுத்துக்கொண்டே வர, அது அனைவரின் காதிலும் தெளிவாய் தான் விழுந்தது.

இப்போது நந்தினியும் ஒரு முடிவில் தான் இருந்தாள். இத்தனை நாள் அமைதியாய் இருந்ததெல்லாம் போதும்.. எப்படி இருந்தாலும் இவர்கள் அவனுக்குத் தான் கொடி பிடிப்பர். ஆக பகிரங்கமாவே தன் எதிர்ப்பை காட்டிவிட வேண்டும் என்று ஒரு முடிவில் தான் எழுந்து வந்தாள்.

“என்னப்பா..???” என, நாகராஜோ, அவள் இயல்பாய் இருப்பது கண்டு மனதினுள் பொருமித் தீர்த்தான்.

“காலையில என்ன நடந்துச்சு நந்தினி…” என்று சுப்புராஜ் கேட்கயிலேயே,

“மாமா நான் தான் சொன்னேன்ல.. திரும்பவும் முதல்ல இருந்து கேட்கிறீங்க.. அப்போ நான் சொன்னதுல நம்பிக்கை இல்லையா??” என்று நாகராஜ் கத்த,

“அட இப்ப எதுக்கு மாப்பிள்ள இப்படி டென்சன் ஆகுற.. அமைதியா இரு.. நான்தான் பேசிட்டு இருக்கேன்ல..” என்றவர், “நீ சொல்லும்மா…” என்று மகளிடம் திரும்பினார்.

நாகராஜை ஒருநொடி முறைத்தவள், காலையில் நடந்ததை அப்படியே சொல்ல, அவனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். ஆனாலும் கடைசியில் விடாது,

“மாமா.. நான் தினமும் நந்தினிக் கிட்ட தான் நோட்டு குடுப்பேன்.. இன்னிக்கும் அதுபோல தான் குடுத்தேன். அதுக்கு அவன் வந்து அடிக்கிறான்…” என்று பொங்க,

“ப்பா.. அதுக்கொண்ணும் யாரும் அடிக்கல.. வார்த்தைய விட்டதுனாலதான் அடிச்சாங்க.. அவங்க பஸ்ல நின்னுட்டு அவங்களையே தப்பா பேசினா சும்மா இருப்பாங்களா…” என்று நவீனுக்கு ஏற்றுக்கொண்டு நந்தினி பேச, சிந்தாமணிக்கு மகளின் இந்த திடீர் துடுக்குத்தனம் சரியானதாய் படவில்லை.

“ஏய் என்னடி.. சத்தம் கூடுது.. என்ன இருந்தாலும் நாகு உன்னைய கட்டிக்க போறவன்.. அவன் அடி வாங்குறத வேடிக்கை பார்த்திட்டு வந்திட்டு இங்க நியாயம் பேசுற…” என்று திட்ட,

‘அப்படி கேளுங்க அத்தை…’ என்பது போல் நாகராஜ் தலையை ஆட்ட, நந்தினியோ சளைக்காமல் அனைவரையும் பார்த்து நின்றாள்.

“என்ன நந்தினி.. அம்மா கேட்கிறாள்ல பதில் சொல்லும்மா… நீ ஒருவார்த்தை நடுவில பேசியிருந்தா கைகளப்பு ஆகிருக்குமா…??”

“என்னைய என்ன பேச சொல்றீங்கப்பா.. தினமும் இப்படித்தான் பண்றாங்க.. ஏன் நோட்டு வைக்க இடமேயில்லையா?? பேக் கொண்டு வரலாம்ல…. சரி நோட்டு தான் கொடுக்கிறாங்க.. பிள்ளைங்க நாங்க உட்கார்ந்திருக்க இடத்துல வந்து ஏன் நிக்கணும்.. பசங்க நிக்கிற இடத்துல நிக்க வேண்டியது தானே.. அதைத்தான் அவங்களும் சொன்னாங்க.. தள்ளி போய் நில்லுன்னு..” என்று அவளும் விடாது பேசினாள்.

நாகராஜிற்கு புரிந்துவிட்டது. இனி இங்கே இருந்தால் நந்தினி பேசியே விஷயத்தை தனக்கு எதிராகத் திருப்பிவிடுவாள் என்று.. என்ன செய்வது என்று யோசித்தவன் சட்டென்று எழுந்து நின்றுவிட்டான்.

“மாமா.. காலைல வந்தது இன்னும் நான் வீட்டுக்கு போகல.. அப்பாவும் ஊர்ல இல்ல.. அம்மா தேடும்.. நான் கிளம்புறன்.. இந்த விசயத்த இதோட விடுவோம்.. அப்புறம் நந்தினி இனிமே அந்த பஸ்ல போகவேணாம்.. நானே தினமும் கூட்டிட்டு போய் கூட்டிட்டு வர்றேன்.. அவன் பஸ்ல போனா தானே வம்பு…” என்று போகிற போக்கில் கொளுத்திப் போட்டுச் செல்ல, நந்தினிக்கு பகீரென்றது..   

‘என்னது இவன்கூட டெய்லி நான் போறதா… அய்யோ…’ என்று அதிர்ந்து தன்னை பெற்றவர்கள் முகம் பார்க்க, அவர்களோ யோசனையில் இருந்தனர்.

சுப்புராஜிற்கோ நாகு மேலும் தவறு இருப்பதாய் பட, இதை இப்படியே விட்டு கொஞ்சம் ஆறவிடுவோம் என்று தோன்றியது.

சிந்தாமணிக்கோ, நந்தினி இனியும் அந்த பேருந்தில் போய் வர, அது மேலும் மேலும் வேறு பிரச்சனைகளை கிளப்பி ஏற்கனவே நாகராஜை பிடிக்காமல் இருப்பவள் அடுத்து திருமணத்திற்கு சுத்தமாய் முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்க,

“என்னங்க.. எனக்கு என்னவோ நாகு சொல்றது தான் சரின்னு படுது.. இன்னும் கொஞ்ச நாள் தானே.. அப்புறம் நந்தினி படிப்பு முடிஞ்சிடும்… நாகு கூடவே போயிட்டு வரட்டும்…” என்று சொல்லி முடிக்கவில்லை,

“அம்மா….” என்று கத்திவிட்டாள் நந்தினி..

“அவன்கூட காலேஜுக்கு அனுப்புனீங்க… போவேன்.. ஆனா திரும்பி வீட்டுக்கு வர மாட்டேன்…” என்று ஆக்ரோசமாய் சொன்னவள், எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

மகளின் இந்த திடீர் மாற்றத்தில் அவளைப் பெற்றவர்கள் திகைத்து நிற்க, அங்கே நவீனை பெற்றவரோ மகனிடம் இதே பிரச்சனையைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார்.

“என்ன இருந்தாலும் அந்த பைய மேல கை வச்சது தப்புதான் நவீனு…” என, அவனோ மணியாள் சுட்டு போட்ட அடையை விழுங்கிக்கொண்டு இருந்தான்..

“நவீன்….”

“என்னங்க… புள்ள சப்பிடுறான்ல.. இருங்க..” என்று அவனுக்கு முந்தி அவன் அம்மா பதில் சொல்லிட,

“ரெண்டு நிமிசம்ப்பா…” என்றுவிட்டு மீண்டும் தட்டில் கவனம் செலுத்தினான் நவீன்.

நரேனும் அதே நேரத்தில் வந்துவிட, தர்மசாஸ்தா தன் மூத்த மகனிடம் விஷயத்தைக் கூற, அவனும் தன் தந்தை சொன்னது போலவே சொல்ல ‘நீயுமாடா…’ என்று பார்த்து வைத்தான் நவீன்.

நவீன் உண்டுமுடிக்கும் வரை காத்திருந்த தர்மசாஸ்தா, மீண்டும் பேச்சைத் தொடங்க,

“அப்பா.. அவன் பண்ணது தப்பு.. எடுத்து சொன்னாலும் கேட்கலை.. என்னையவே தப்பா பேசுறான்.. என்ன பண்ணட்டும்…” என்றான் அவன் செய்தது சரிதான் என்பதுபோல்.

“அதுக்கில்ல நவீனு.. நாளைக்கு பின்ன எதுவும் பிரச்சனை ஆனா என்ன செய்றது.. பொம்பள பிள்ள விஷயம் வேற..” என்று அவர் இழுக்க,

“இவன் ஒருத்தன் பண்றத பார்த்து நாளைக்கு எல்லாரும் பொண்ணுங்கக்கிட்ட வம்பு செய்வாங்க.. அதான் ஒரு அடி போட்டேன்.. இனி எவனுக்குனாலும் ஒரு பயம் இருக்கும்ல…” என்று நவீனும் விடாது சொல்ல, அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத் தான் செய்தது.

“ம்ம் இனிமே இப்படி நடக்காம பார்த்துக்க நவீன்.. தொழில் செய்ற இடத்துல சண்டை சச்சரவு இருந்தா பேர் கேட்டு போயிடும்…” என்றுமட்டும் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட,

“என்னடா ஹீரோயிசம் காட்டுறயா..” என்றபடி வந்தான் நரேன்..

“ஆமாமா.. நீ ஹீரோயிசம் காட்டித் தானே தீபாவ கரெக்ட் பண்ண…” என்று நவீன் சொல்ல,

“நிஜமாவாடா.. அப்போ ப்ரோக்கர் கிட்ட இவனேதான் தீபா பொண்ணு போட்டோ ஜாதகம் எல்லாம் கொடுத்து நம்மக்கிட்ட கொடுக்கச் சொன்னானா..??” என்று மணியாள் வாய் பிளக்க,

“அட இது தெரியாதாம்மா..” என்று நவீன் தன் அம்மாவின் அருகே சென்று அமர்ந்து நடக்காத ஒன்றை கதையாய் திரித்து தன் அண்ணனை மாட்டிவிட, அவனும் புன்னகையோடு தான் கேட்டுக்கொண்டு இருந்தான்.

தீபா என்னும் பெண்ணுக்கும் நரேனுக்கும் நிச்சயம் ஆகியிருந்தது. இரண்டொரு  முறை அவள் நரேனின் பேருந்தில் வந்திருக்கிறாள். தரகர் கொண்டுவந்து அவள் ஜாதகமும் புகைப்படமும் கொடுக்கும் போது,

‘இந்த பொண்ண ரெண்டுமூணு தடவ நம்ம பஸ்ல பார்த்திருக்கேன்…’ என்று நரேன் உளறிவிட, அன்றிலிருந்து நவீன் இப்படித்தான் அவனை கிண்டல் செய்வான்.

அதன் பொருட்டு பல பல கதைகள் வேறு அவனாக கூறுவான். இதெல்லாம் சும்மா என்று மணியாளுக்கும் தெரியும். இருந்தாலும் பெரிய மகனை சின்னவனோடு சேர்ந்து வம்பிழுப்பதில் அலாதி இன்பம்.

நந்தினிக்கும் சரி, நவீனுக்கும் சரி அன்றைய நாள் ஒவ்வொரு விதமாய் முடிய, மறுநாள் எப்போதும் போல வழக்கமாய் விடிந்தது.

எப்போதும் கிளம்பும் நேரத்திற்கு முன்பாகவே நந்தினி கல்லூரிக்குக் கிளம்பிட, அவளை வீட்டினரால் தடுக்கவும் முடியவில்லை.. ஆனால் அவள் கிளம்பிச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாகராஜும் அவன் அம்மாவும் வந்துவிட, சிந்தாமணிக்கு என்ன சொல்வது என்பது தெரியவில்லை.

“என்ன அண்ணி இவ்வளோ நடந்திருக்கு.. இதை அப்படியே சும்மா விடுறதா..” என்று ராஜி கத்தும் போதே சுப்புராஜூம் வந்துவிட, சற்றே தன் குரலை குறைத்துக்கொண்டார்.

“என்ன ராஜி..??”

“அண்ணே.. என் புள்ளைய போட்டு அடிச்சிருக்கான்.. எவ்வளோ பெரிய அசிங்கம்.. சும்மா விடுறதா.. வாங்க போய் ரெண்டுல ஒண்ணு கேட்போம்…”

“ராஜி.. கொஞ்சம் நம்ம பொறுமையாதான் போகணும்.. இல்லாட்டி தேவையில்லாத பிரச்சனை ஆகும்.. ஊருக்குள்ள நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க…” என்று சுப்புராஜ் தன்மையாய் எடுத்து சொல்ல,

“மாமா.. நீங்க என்னவோ பேசுங்க.. நந்தினிய கூப்பிடுங்க காலேஜுக்கு நேரமாச்சு..” என்று நாகராஜ் சொல்ல,

“அவ அப்போவே கிளம்பிட்டா..” என்றார் சிந்தாமணி.

“என்ன.. கிளம்பிட்டாளா… நேத்து சொல்லிட்டுத் தானே போனேன்..” என்று நாகராஜ் எழ,

“நாகு.. நான்தான் சொல்றேன்ல.. கொஞ்சம் பொறுமையா போவோம்.. நந்தினி படிப்பு முடிய இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு.. கடைசி நேரத்துல எதுவும் பிரச்சனை இழுக்க கூடாது.. அதான் சொல்றேன்.. நான் சொல்றத கேளு..” என்று சுப்புராஜ் சொல்ல,

“நாகு நீ காலேஜுக்கு கிளம்பு.. நாங்க பேசிக்கிறோம்…” என்று ராஜி அவனை அனுப்பி வைத்தார்.

அவனோ முனங்கியபடியே செல்ல, “அண்ணே.. என்னண்ணே இதெல்லாம்.. நந்தினி பண்றது கொஞ்சமும் எனக்கு சரின்னு படலை.. என்ன இருந்தாலும் என் புள்ள அவளுக்கு புருசனாக போறான்.. இப்படி நாலு பேரு முன்னாடி விட்டுக் குடுக்கலாமா…” என்று கண்ணை கசக்க,

“அண்ணி அழாதீங்க அண்ணி.. நானும் நந்தினிக்கிட்ட எடுத்து சொல்லிருக்கேன்..” என்று சமாளித்தார் சிந்தாமணி.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது அண்ணி.. இன்னும் ரெண்டு மாசத்துல ரெண்டு பேருக்குமே படிப்பு முடியுது தானே.. நாகு அப்பா, இவனுக்கு துபாய்ல வேலைக்கு  ஏற்பாடு செஞ்சிருக்காராம்,. நேத்து நைட்டு கூப்பிட்டு சொன்னாரு.. படிப்பு முடியவும் ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி ஒண்ணாவே அனுப்பி வைப்போம்…” என்று ராஜி தீர்மானமாய் சொல்லிட, சிந்தாமணியோ தன் கணவர் முகத்தை பார்த்தார்.

“ராஜி.. அப்படி எடுத்த உடனே குடும்பமா போக முடியாதும்மா.. முதல்ல நாகு போய் அங்கே வேலைக்கு சேரட்டும்.. அப்புறம் கூட நம்ம கல்யாணத்த வச்சுப்போம்…” என்று சுப்புராஜ் சொல்ல,

“இல்லண்ணே.. நான் முடிவா இருக்கேன்.. ரெண்டு பெரும் போறாங்களோ இல்லை அவன் மட்டும் போறானோ எதுவா இருந்தாலும் இவங்க கல்யாணம் முடிச்சிட்டு போகட்டும். நடக்கிறத எல்லாம் பார்த்தா எனக்கு சரியா படல.. நாகு அப்பா வரவும் நம்ம ஜோசியர போய் பாப்போம்…” என்று இதுதான் தன் முடிவு என்பது போல் ராஜி சொல்ல, நந்தினியின் பெற்றோர்களாலும் மறுக்க முடியவில்லை.

என்ன இருந்தாலும் சொந்தம், அதிலும் இப்போது வெளிநாட்டு வேலை வேறு, இங்கேயும் சொந்த வீடு, தோப்பு எல்லாம் இருக்கிறது, ஒரே பையன் வேறு என்று மகளின் எதிர்கால வாழ்வை ஆஸ்தியைக் கொண்டு கணக்கிட, அவளோ நவீனின் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தாள்.

பேருந்து கிளம்பி, வழக்கமாய் நாகராஜ் ஏறும் ஸ்டாப் தாண்டி செல்லும் வரைக்கும் அவளுக்கு மனம் பதைத்துக்கொண்டு இருந்தது.

‘எங்கே வந்து மறுபடியும் எதுவும் வம்பு செய்வானோ..’ என்று, நினைத்து நினைத்து, ஜன்னலை அடிக்கடி பார்த்துகொண்டு இருந்தாள்.

அவனது ஸ்டாப் தாண்டி பேருந்து செல்லவும், அவனும் அங்கே இல்லையென்று தெரியவும் தான் நந்தினி நிம்மதியானது.

‘அப்பாடி…’ என்று கண்களை மூடி நிம்மதிப் பெருமூச்சு விட,

“டிக்கட்…” என்று நவீனும் அவள் முன்னே வந்து நின்றான்.

எப்போதும் அவர்கள் அருகே அவன் வருகிறான் என்று தெரிந்தாலே கையில் இருக்கும் காசை மேகலா கையில் திணித்துவிடுவாள். ஆனால் இன்றோ அவளது கவனம் எல்லாம் நாகராஜ் வந்துவிடுவானோ என்பதிலேயே இருக்க, நவீன் வந்ததை கவனிக்கவில்லை.

நவீன் வந்து முன்னே நின்ற பிறகு, மேகலவிடம் காசைக் கொடுக்க முடியாது. ஆக அவளே லேசாய் நிமிர்ந்து பார்த்து அவனிடம் காசைக் கொடுக்க, நவீனுக்கு என்ன தோன்றியதோ நந்தினியின் முகத்தை தான் பார்த்தான்.

இரவெல்லாம் சரியான உறக்கம் இருந்திருக்காது போல.. கண்ணும் முகமும் ஒளியிழந்து இருக்க, அவள் மனதில் இருந்த பதற்றமும் அவள் முகத்தில் தெரிய, டிக்கட்டை கிழித்துக்கொண்டே

“எதுவும் பிரச்சனை இல்லையே…” என்று அவனையும் அறியாது கேட்டுவிட்டான் நவீன்.

தன்னிடம் தானா கேட்கிறான் என்று அதிர்ந்து விழித்த நந்தினியோ “இல்லை…” என்று தலையாட்டும் போதே கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு..

இது போல் ஒரு கேள்வியை, அக்கறையாய் அவள் வீட்டினர் அவளிடம் கேட்டால் எத்தனை நன்றாய் இருக்கும்.. சொந்த வீட்டிலேயே பாதுகாப்பில்லாத ஓர் உணர்வு. யாரும் தனக்கு சார்பாய் பேசவும் நினைக்கவும் இல்லை என்ற கவலை, அவளது எதிர்காலம் அவளுக்கு பிடித்தது போல் அமையாதோ என்ற பயம்  எல்லாம் சேர்ந்து கண்களில் நீரை கொண்டுவந்து விட,

நந்தினி முன்பு டிக்கட்டை நீட்டியவனின் கைகளில் அவளது கண்ணீர் விழுந்து அவனையும் திகைத்துப் பார்க்க வைத்தது.   

                                

                                                        

Advertisement