Advertisement

ஆசை – 10

“ஹ்ம்ம் அங்க நரேன் ஜாலியா இருப்பான்…” என்று சோகமாய் சொன்ன நவீனைப் பார்த்து என்ன செய்தால் தகும் என்பதுபோல் பார்த்தாள் நந்தினி..

“என்னடி முறைக்கிற..??”

“ஏன் நீங்க ஜாலியாவே இருக்கலையோ…??” என்று கேட்டபடி தலையை தளர்த்தி வாரியவளை வந்து ஒட்டிக்கொண்டு நின்றான்..

“ஒழுங்கா தள்ளிப் போங்க.. காலையில இருந்து சரி வேலை…” என்று கை முஷ்ட்டியால் அவன் வயிற்றில் ஒரு குத்துவிட,

“அடிப்பாவி… சும்மா கூட வந்து நிக்கக்கூடாத.. ரொம்பத்தான்…” என்றவன் அவளை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு சென்று மீண்டும் படுத்துக்கொண்டான்.

“வர வர உங்க சேட்டை ரொம்ப…” என்றபடி அவளும் வந்து படுக்க,

“அது நரேனுக்கு கல்யாணம் ஆகலையா.. வயசு பையன் கேட்டுப் போயிடக்கூடாதுன்னு கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்..” என,

“ஹா.. அவர் உங்க அண்ணன் அதாவது நியாபகம் இருக்கா இல்லையா…??” என்றாள் சிரித்தபடி..

“அண்ணனோ தம்பியோ… நவீனுக்கு நானே ராஜா…” என்று நவீன் பாட, அதில் இன்னும் சிரித்தவள்,

“நவீனுக்கு மட்டுமில்ல நந்தினிக்கும் நீங்கதான் ராஜா…” என,

“அஹா… நவீனுக்கு ராணி நந்தினி.. நந்தினிக்கு ராஜா நவீன்.. இதெப்படி இருக்கு..” என்று கொஞ்சம் சத்தமாய் நவீன் சிரிக்க,

“ஐயோ மெல்ல….” என்று நந்தினி வேகமாய் அவன் வாய் பொத்தினாள்..   

முதல் நாள்தான் நரேன் – தீபா திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்திருந்தது.. அதற்கு முதல் நாள் வரவேற்பு இவர்களுக்கும் சேர்த்தே வைக்க, தர்மசாஸ்தா –  மணியாள் இருவருக்கும் ஒரே மேடையில் தங்கள் பிள்ளைகளை மனைவிகளோடுப்  பார்க்க மனம் நிறைந்து போனது..

நந்தினியும், நவீனும் சென்று சுப்புராஜிடமும், சிந்தாமணியிடமும் பேசிவிட்டு வர, அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் அவர்கள் முறைப்படி சீர் கொண்டு வந்து செய்தனர் நந்தினிக்கு.

இது அனைவருக்குமே இன்னொரு மகிழ்ச்சி. எங்கே அவர்கள் வராமலே போய்விடுவரோ என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருந்தது. சுப்புராஜும் சிந்தாமணியும் வராது போயிருந்தால், நரேன் திருமணத்தின் சந்தோசம் அனைவர்க்கும் முழுமையாய் கிடைத்திருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.

“நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்..” என்று மணியாள் சொல்ல,

“எங்களுக்கும் இப்போதான் நிம்மதியா இருக்கு..” என்று சிந்தாமணி சொல்ல, ஆண்களோ அவர்கள் பேச்சு என்று தனியே பேசிக்கொண்டு இருக்க, நந்தினியின் பார்வையோ நவீனைத் தான் நன்றியோடும் காதலோடும் தழுவியது..

“எப்புடி…” என்று அவன் புருவத்தை மட்டும் உயர்த்த,

“டேய்.. ஏன்டா இப்படி அலம்பல் பண்ற..” என்று கேட்டது வேறு யாருமில்லை நரேன் தான்..

“உனக்கென்னடா எரிச்சல்..??”

“அதான் எல்லாம் ஒண்ணு சேர்ந்தாச்சுல்ல அப்புறமென்ன இன்னும் ஹீரோயிசம் காட்டிட்டு இருக்க???”

“டேய் என் பொண்டாட்டிடா… நான் ஹீரோயிசம் காட்றேன்.. உனக்கென்னடா..” என்றவனை நரேனால் முறைக்க மட்டுமே முடிந்தது..

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் நவீன் வீட்டில் மகிழ்ச்சி அலைதான்.. தாலி பெருக்க, முதல் பத்திரிக்கை வைக்க, திருமண புடவை எடுக்கவென்று அனைத்திற்கும் நந்தினியின் பெற்றோரை நவீன் வீட்டில் அழைக்க, அவர்களும் ஒருநாள் இவர்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்தனர்.

எப்படியோ ஒருவழியாய் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் இருந்த பிணக்கு நல்லதொரு பிணைப்பாய் மாறிவிட, நந்தினி மகிழ்ச்சியில் இன்னும் சற்று பூசினார் போல் ஆகிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும்.

நவீன் கூட கிண்டலடித்தான் “என்ன வர வர ரவுண்ட் பெருசாகிட்டே போகுது..” என்று..

“அப்படி ஒண்ணுமில்லையே..” என்று கண்ணாடியில் தன்னை இப்படி அப்படி நந்தினிப் பார்க்க,

“உன் கண்ணுக்ககெல்லாம் தெரியாது.. எனக்கு தான் தெரியும்..” என்றபடி அவளை தன்பக்கம் திருப்பி மேலும் கீழுமாய் பார்க்க,

“இதுக்குத்தான் இவ்வளோ பேச்சா…” என்றாள் அவனை ஒரு அடி அடித்து..

அவர்களின் நாட்களும் இப்படியே காதலாகவும் கலகலப்பாகவும் கழிய, இவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்னமும் சிறப்பாய் அமைத்திருந்தது..

ராஜிக் கூட வேண்டா வெறுப்பாய் வருவது போல் விழாவிற்கு வந்திருந்தார். முதல் நாள் எல்லாம் மேடையில் நவீனோடு நின்றிருந்தவள், மறுநாள் நரேன் – தீபா திருமணத்தில், வீட்டு மருமகளாய் மாறி மணியாளோடு வேலைகளை பகிர்ந்து கொள்ள, நவீன் வீட்டு சொந்த பந்தங்கள் சிலரோ வாய் விட்டே நந்தினியைப் பாராட்டினர்.

அதிலும் சிந்தாமணியிடம் வந்து “ரொம்ப நல்ல பொண்ணுங்க நந்தினி..” என்று சொல்லிச் செல்ல, அவருக்கோ பெருமை தாங்கவில்லை..

அதை அப்படியே சுப்புராஜிடம் சொல்ல, தங்கள் வளர்ப்பு பொய்யாகவில்லை என்பது கண்கூடாகத் தெரிய அவர் மனதின் ஓரத்தில் இருந்த சிறு வருத்தமும் இப்போது காணாமல் போனது.

என்னவோ அப்போயிருந்த சூழல், நந்தினி அப்படியொரு முடிவு எடுக்க காரணமாகிவிட்டது.. அதில் பெரும்பங்கு தங்களுக்கும் இருக்கிறது என்று நன்றாவே புரிந்தது அவருக்கு..

ஆகையால் மகளிடம் முன் காட்டாத பாசத்தையும், அவளுக்குக் கொடுக்கப்படாத முக்கியத்துவத்தையும் சுப்புராஜும் சரி, சிந்தாமணியும் சரி வாரி வழங்கினர் என்றுதான் சொல்ல வேண்டும்..

திருமணம் முடிந்து, மறுநாள் கிளம்பி நரேனும் தீபாவும் மறுவீடு செல்ல, வந்திருந்த உறவினர்களும் அன்று தான் கிளம்பிச் செல்ல, வேலை சரியாய் இருந்தது நந்தினிக்கு..

இதற்கிடையில் ஒருநாள் தர்ம சாஸ்தா, நந்தினியை அழைத்து மேற்கொண்டு படிக்கிறாயா என்று கேட்க, அவளோ நவீன் முகம் பார்க்க,

“அவன் என்ன சொல்லப் போறான் நீ சொல்லும்மா..??” என்றார்..

“இல்ல மாமா.. படிக்கணும்னு எண்ணமெல்லாம் இல்ல இப்போ.. ஆனா டிகிரி முடிச்சிட்டு கொஞ்ச நாள் வேலைக்கு போகணும்னு மட்டும் நினைச்சிருந்தேன்..” என்று சொல்ல,

“ம்ம்..” என்று சொன்னவர், நவீனிடம் திரும்பி “நம்ம கணக்கு வழக்கெல்லாம் நீயும் நரேனும் தான் மாசத்துக்கு ஒருதடவ கம்பியூட்டர்ல எத்துவீங்க.. அத கொஞ்சம் நந்தினிக்கு சொல்லிக்குடு.. இனிமே டெய்லி நந்தினி அந்த வேலை செய்யட்டும்..” என்றவர்,

“என்னம்மா சரியா??” என்று கேட்க, அவளுக்கோ தன்னை நம்பி சொல்கிறார் என்று வேகமாய் தலையை ஆட்டினாள்.

தர்மசாஸ்தா நந்தினியிடம் இப்படியொரு கேள்வி கேட்டதற்கும் ஒரு காரணம் இருந்தது. நரேனுக்கு பார்த்திருந்த தீபா வேலைக்குப் போகும் பெண்.. நாளடைவில் அதுவே தீபாவிற்கும் நந்தினிக்கும் ஏற்றத் தாழ்வுகளை கொண்டு வந்திடக் கூடாது என்று எண்ணியே இப்படிக் கேட்டார்..

“எனக்கும் முன்னாடி போல முடியலம்மா… பசங்களும் வண்டிக்கு போவாங்களா இல்ல இதெல்லாம் பாப்பாங்களா.. அதுனால நீ ஒருநாள் விட்டு ஒருநாள் போய் எல்லாம் சரி பாரு… ஆட்டோ கணக்கு டெய்லி வந்திடும்.. வேன் கணக்கு அது நாள் பொருத்து வரும்…” என்று சொல்ல, நந்தினிக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை..      

ஆனால் கிடைத்த தனிமையில் நவீன் சரியாய் சொன்னான் தரம்சாஸ்தா எதற்காக இப்படியொரு ஏற்பாடு செய்திருப்பார் என்று..  ஆக அவளுக்கு வேலைகள் சரியாய் இருந்தது. அதில் நரேன் திருமண வேலைகளும் சேர்ந்துகொள்ள,  வேலைக்கு ஆட்கள் போட்டிருந்தாலும், சில வேலைகள் வீட்டுப் பெண்கள் தானே செய்ய முடியும். ஆனால் அந்த அளவில் மணியாளைப் பாராட்டியே ஆகவேண்டும்.

‘இந்தா ஜூஸ் குடி..’

‘ஏ பொண்ணு ரெண்டு இட்லி சேத்து சாப்பிடு…’

‘வேலை பார்த்தா மட்டும் பத்தாது.. நல்லாவும் சாப்பிடணும்..’ என்று அதட்டி உருட்டி அவளைச் சாப்பிடவும் வைத்துவிடுவார்..

அன்று இரவு வீட்டில் அவர்கள் மட்டும் இருக்க, தர்மசாஸ்தா, நவீன், நந்தினி மணியாள்  அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டுகொண்டு இருந்தனர். நந்தினி அளவாய் தட்டில் வைத்துக்கொள்ள,

“ஏ பொண்ணு இதெப்படி போதும்… இன்னும் சாப்பிடு..” என்று அவள் தட்டில் இன்னும் கொஞ்சம் சாதம் மணியாள் போட,

“ஐயோ அத்தை போதும்.. இப்படியே போனா இன்னும் வெயிட் போட்டுடுவேன்…” என்று நந்தினி மறுக்கவும், நவீன் சிரிக்கவும் சரியாய் இருக்க,

“யாரு இவன் அப்படி சொன்னானா???” என்று முறைத்தார் மணியாள்..

தர்மசாஸ்தாவும் ‘அப்படியா..’ என்பதுபோல் மகனைப் பார்க்க,

‘ஐயோ இதென்ன லாஸ்ட்ல என்னை குற்றவாளி போல பாக்குறாங்க..’ என்று நவீன் முழிக்க,

‘என்னை ரவுண்ட் ரவுண்ட்ன்னு கிண்டல் பண்ணீங்கல்ல நல்லா வேணும்..’ என்பதுபோல் நந்தினி தலையை ஆட்டிச் சிரித்தாள்.

“ம்மா.. நான்லா எதுவும் சொல்லல..”

“நீ சிரிக்கிறதுலயே தெரியுதுடா.. பிள்ள சாப்பிடுறத சொல்றதா..??” என்று மணியாள் கடிய,

“ஐயோ அம்மா.. சத்தியமா நான் எதுவும் சொல்லல..” என்றான் நவீன் அழாத குறையாய்..

“ம்ம் அவன் சொல்றதெல்லாம் கேக்காத.. அடுத்து பிள்ளை உண்டானா உடம்புல சத்து வேணாமா..??” என்று மணியாள் சத்தமில்லாமல் அடுத்த வெடியை கொழுத்த, அவ்வளவுதான் நந்தினி தலையை தாட்டை நோக்கி திருப்பிக்கொண்டாள்.

வேலையெல்லாம் முடித்து அறைக்குச் சென்ற பிறகு, நவீன் நரேனைப் பற்றிப் பேச, வர வர நவீனின் சேட்டைக் கூடிப்போனதாய் தான் தெரிந்தது. பொதுவாக நவீன் ஜாலியான ரகம் தான். ஆனால் நவீனிடம் ஒரு விசயம் நந்தினி கவனித்திருந்தாள். எதாவது எப்படியாவது பேசி காரியம் சாதித்து விடுவான். யார் மனமும் அதில் நோகவும் செய்யாது.. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவளின் அப்பா அம்மாவோடு அவன் பேசியது.

இன்றுவரைக்கும் அவளும் கேட்கவில்லை.. என்ன பேசினாய் என்று.. அவனும் சொல்லவில்லை.. ஆனால் சிந்தாமணி சொன்னார்..

“அந்த தம்பி வந்து எப்படி பேசுச்சு தெரியுமா.. உங்க அப்பானால பதிலே சொல்ல முடியல..” என,

“ஐயோ கோவமா எதுவும் பேசினாராம்மா..” என்றாள் வேகமாய்..

“கோவமா.. அடி போடி.. அதெல்லாம் இல்லை.. ஆனா அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்துல சரியா கொடுத்துப் பேசினார்..” என்று சொல்ல,

எங்கேடா எதுவும் சண்டை கிண்டை போட்டானோ என்று பயந்து போனவளுக்கு அப்போது தான் மனம் அமைதியானது..  

ஆனால் நவீனுக்கு கோபமும் வரும் என்பது நாகராஜ் விசயத்திலேயே கண்டாலே.. அப்படியொரு கோவம்.. அடிக்கும் அளவுக்கு வந்த கோவம்.. அந்த நியாபகம் வர, அவன் புறம் திரும்பியவள் “உங்களுக்கு கோவம் ரொம்ப வருமா??” என்று கேள்வியைத் தொடுக்க,

“இப்போ என்ன திடீர்னு??” என்றான் நெற்றியை சுருக்கி,

“பதில் சொல்லுங்க…” என்றவள் சுருக்கிய அவன் நெற்றியை நீவி விட, அவள் கரங்களைப் பிடித்தபடி,

“ஹ்ம்ம் கோவம் ரொம்ப வரும்னு எல்லாமில்ல.. ஆனா வர வேண்டிய நேரத்துல கோவம் வரலைன்னா மனுசனேயில்ல” என்றான்..

“ம்ம்…” என்றவள் அமைதியாய் இருக்க,

“என்ன அவ்வளோதானா உன்னோட கேள்வி..??” என்று இன்னும் பேச்சை வளர்த்தான் நவீன்..

“ம்ம்..” என்று அப்போதும் யோசித்தவள், “கேட்பேன் ஆனா முறைக்கக்கூடாது..” என்று கண்டிசன் போட,

“கேளு கேளு…” என்று அவனும் ஊக்க,

“இல்ல.. எப்போயிருந்து என்னை உங்களுக்குப் பிடிக்கும்??” என்றாள் அவனைப் பார்த்து ஆவலாய்..

“உனக்கு எப்போயிருந்து என்னைப் பிடிக்கும்??” என்றான் அவன் பதிலுக்கு..

“ம்ம்ச் நான்தானே கேள்விக் கேட்டேன்..” என்று முகத்தை சுறுக்க,

“சுளிக்காதடி..” என்று அவள் கன்னங்களைப் பற்றியவன், “சத்தியமா தெரியல.. ஆனா அன்னிக்கு நான் பேசினதும் உன் கண்ணு சட்டுன்னு கலங்கிடுச்சா.. அதுக்கப்புறம் உன்னை கவனிக்காம இருக்க முடியல..” என்று தன் மனதில் தோன்றிய மாற்றங்களை சொல்லிட, அவளும் அமைதியாய் கேட்டுக் கொண்டாள்.

தன்னைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தவன், திடீரென்று நியாபகம் வந்தவனாய் “ஆமா நீ ஏன் என்கிட்டே டிக்கட் வாங்கமாட்ட.. எப்பவும் மேகலாக்கிட்ட தான் கொடுத்து வாங்குவ…” என்று கேட்க,

மேகலா என்ற பெயரைக் கேட்டதும் படுத்திருந்தவள் வேகமாய் எழுந்து அமர்ந்தாள். ‘ஐயோ..’ என்று தலையில் கை வைத்து..

“என்னாச்சு நந்தினி..” என்று அவனும் எழுந்தமர,

“மேகலாக்கிட்ட நான் அடுத்து பேசவேயில்ல.. என்மேல சரி கோவத்துல இருக்கா.. அன்னிக்கு ரிசப்சன்க்கு வந்தப்போக் கூட முறைச்சுக்கிட்டே தான் போட்டோ எடுத்தா..” என்று பாவமாய் முகத்தை வைத்து சொல்ல,

“நீ பேசாத ஆட்கள் லிஸ்ட் பெருசா போகும் போலவே.. இதுக்கும் நான் பஞ்சாயத்து பண்ணணுமா..” என்றான் வேண்டுமென்றே..

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. நானே நாளைக்கு பேசிப்பேன்..”

“அதென்ன நாளைக்கு.. ஒருவிசயம் செய்யணும்னு நினைச்சா இப்போவே செய்யணும்.. தள்ளிப் போடக்கூடாது..”

“அதுக்கு இந்த நேரத்துலயா பேச..” என்று மணிப் பார்க்க,

“ஏன் இப்போ என்ன பத்து கூட ஆகல.. சும்மா கூப்பிட்டு பேசு.. அப்புறம் நாளைக்கு டீடெயிலா பேசு” என்று அவனும் சொல்ல..

சரியென்று பேசியவள், அவன் சும்மா பேசு என்பதையே டீடெயிலாகப் பேச நவீன் தான் நொந்துப் போனான்..

‘இவளைப் பேசச் சொன்னது தப்பா போச்சே..’ என்று பார்க்க, அவளோ அப்போது தான் அவளுக்கு நிச்சயம் ஏற்பாடு செய்த கதையே பேசிக்கொண்டு இருந்தாள்.

‘டேய் நவீன் உனக்கு நல்லா வேணும்டா…’ என்றவன் போய் டிவி முன் அமர்வது தவிர அவனுக்கு வேறு வழியில்லை.. அதற்கு பின்னும் ஒரு அரைமணிநேரம் கழித்து அறைக்கு வந்துப் பார்க்க,

“சரி டி.. நாளைக்கு பேசுறேன்..” என்று அப்போது தான் நந்தினி பேச்சை முடித்தாள்.

‘யப்பாடி பேசிட்டா..’ என்றபடி உள்ளே வந்தவன் முதல் கேள்வியை இப்போதும் கேட்டான்.

“நீ ஏன் என்கிட்டே டிக்கட் வாங்க மாட்ட..” என்று..

‘விடமாட்டனோ..’ என்று பார்த்தவள், அவன் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பது போல் பார்க்க,

“அது.. என்னவோ.. உங்கள நேருக்கு நேரா பார்த்து வாங்க கொஞ்சம் கூச்சமா இருக்கும்…” என்றும் சொல்ல,

“ஊ….” என்று வேண்டுமென்றே சத்தம் எழுப்பியவன், “கூச்சமா இருக்குமா???” என்று கேட்டபடி “இந்தா வர்றேன் இரு..” என்று விளக்கை அணைத்து விடிவிளக்கை போட்டவன் ஒரு பாடலை முணுமுணுத்தபடி அவளருகே வர,    

“என்ன பாட்டு ??” என்று நந்தினியும் கேட்க,

“இவ்வளோ நேரம் நீ பாடினதா விடவா பாடிட்டேன்..” என்று அவளை முறைத்தபடி வந்து மீண்டும் அவளருகே படுக்க,

“அயே.. என்ன பாட்டுன்னு கேட்டா அதுக்கு சொல்லாம..” என்று நந்தினியும் பதிலுக்கு முறைக்க, 

“என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்… தர… ர ரா…த த…
தொடருதே தினம் தினம்… தர… ர ரா…த த…
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே

 

 

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே…”

 

என்று நவீன் பாட்டே பாடிக்காட்ட, “ஹே.. வாவ் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்.. நாமம் பஸ்ல கூட அடிக்கடி போடுவீங்களே…” என்று நந்தினி சொல்ல,

 

“ஹ்ம்ம்..” என்று சிரித்த நவீன், “நல்லா யோசிச்சு பாரு அடிக்கடி போடுவோமா இல்ல எப்போ போடுவோம்னு…” என்றான் மர்மமாய்..

 

“இதென்ன…” என்று யோசித்தவள், “அடிக்கடி தான் போடுவீங்க…” என்றாள் வேகமாய்..

 

“உனக்கு தெரியலைன்னு சொல்லு..” என்று அவள் நெற்றியில் முற்றியவன், “நீ எப்போவெல்லாம் அந்த ஜன்னல் சீட்டோரமா வந்து உட்காருவியோ அப்போதான் அந்த பாட்டு போடுவேன்..” என்றான் அவன் காதில் ரகசியமாய்..

 

“அப்.. அப்போ எனக்குதான் இந்த பாட்டா…??” என்று நந்தினி இன்னும் நம்ப மாட்டாமல் கேட்க,

 

“யப்பா.. அதுவே உனக்கு புரியாம என்னடி என்னைய லவ் பண்ண??” என்றான் நவீன் வேண்டுமென்றே அவளை சீண்ட..

 

“ஆமா லவ்.. அப்படியே நீங்களும் பண்ணிட்டீங்க… இப்படி பாட்டா போட்டதுக்கு என்கிட்டே நேராவே சொல்லிருக்கலாம்..” என்று நந்தினி குறைபட,

 

“சொல்லிருந்தா அப்போ ஓகே சொல்லிருப்பியா..??” என்றான் அவனும் விடாது..

 

“நீங்கதான் சொல்லலையே…”

 

“சரி இப்போ சொல்றேன்…”

 

“இப்போ சொல்லி என்ன செய்ய???”

 

“என்ன செய்யவா… அடிங்க… ஒழுங்கா லவ் பண்ணணும்…” என்று மிரட்ட,

 

“ஹா ஹா…” என்று நந்தினி அவன் பேச்சில் சிரிக்கத் தான் செய்தாள்..

 

“ஏய் என்னடி நான் எவ்வளோ சீரியஸா லவ் பத்தி பேசுறேன்.. நீ சிரிக்கிற..” என்றவன் “இதெல்லாம் வேலைக்காகாது…” என்றபடி, மலர்ந்து சிரிக்கும் நந்தினியின் அதரங்களை சிறை செய்ய, இன்னும் இன்னும் அவன் காதலில் கரைந்து தான் போனாள் நந்தினி.. 

 

நெஞ்சத்தின் ஓரத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு வந்த ஆசை.. நம்பிக்கை என்னும் நீரூற்றி, காதலாக வளர்ந்து, அந்த காதலே இருவருக்குள்ளும் இறுக ஒரு பிணைப்பை ஏற்படுத்த, என்றென்றும் இனி நந்தினி நவீன் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிலைக்கும் என்று நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்..     

 

   

                  

                                       

    

 

Advertisement