Advertisement

ஆசை – 1

“விநாயகனே வினை தீர்ப்பவனே….” என்று அந்த மினி பேருந்தில் இறை துதி ஒலித்துக்கொண்டிருக்க, பேருந்தின் உள்ளே, மாட்டப்பட்டிருக்கும் சாமி படத்திற்கு  ஊதுபத்தி கட்டி, பூமாலையிட்டு வணங்கிக்கொண்டிருந்தனர் நவீனும், லோகேஷும்.

இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயது தான்.. லோகேஷ் அந்த பேருந்தின் ஓட்டுனர்.. நவீன் அந்த பேருந்தின் நடத்துனர்.. எப்போதுமே காலையில் முதல் முறையாய் பேருந்து எடுக்கும் போது இப்படியான சம்பிரதாயங்கள் எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நவீனின் அப்பா தர்மசாஸ்தாவின் ஆணை.

திருச்சிக்கு நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக பஞ்சம் பிழைக்க வந்த தர்ம சாஸ்தா, அவரது கடின உழைப்பாலும், இறைவன் மீது அவர்கொண்ட பயபக்தியிலும், நேர்மையான வலியில் முன்னேற வேண்டும் என்ற கொள்கையாலும் இன்று இரண்டு மினி பேருந்துகளுக்கும், நான்கு வேன்களுக்கும், பத்து ஆட்டோக்களுக்கும் சொந்தக்காரர்..

அவர் மனைவி மணியாளுக்கு சொந்த ஊர் லால்குடி என்பதால் அங்கேயே குடும்பத்தை வேரூன்ற செய்துவிட்டார். 

‘சாஸ்தா ட்ராவல்ஸ்….’ லால்குடியையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்  அறியாதவர் இருக்க முடியாது. தனக்கு பிறகு தன் பிள்ளைகளும் நன்றாய் பிழைக்கவேண்டும் என்று இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மினி பேருந்தை கொடுத்துவிட்டார். மற்றவை அவர் பொறுப்பு..

நவீன் இளையவன்.. நரேன் மூத்தவன்..

சாஸ்தா என்று பெரிய மஞ்சள் நிற எழுத்துக்கள் தாங்கி இரண்டு மினி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றிருக்க, இரண்டிலுமே காலை முதல் பூஜை நடந்துகொண்டிருந்தது. நரேனும் சரி, நவீனும் சரி தந்தையின் சொல்லை இன்றுவரை மீறியதில்லை. அதில் அவருக்கு பெருமையோ இல்லையோ, இவர்களின் அம்மா மணியாளுக்கு நிறையவே பெருமை..

‘ரெண்டு புள்ளைங்க… சிங்கக்குட்டி மாதிரி.. அத்தனை ஒழுக்கம்..’ என்று பெருமையாய் சொல்லிக்கொள்வார்..

நரேன் பொறுப்பில் இருக்கும் மினி பேருந்து லால்குடி அருகேயிருக்கும் பிற கிராமங்களுக்கும், நவீன் பொறுப்பில் இருக்கும் பேருந்து லால்குடியில் இருந்து திருச்சிக்கும் மாறி மாறி சென்றுவரும்.

காலையில் முதல் இரண்டு முறையும், மாலையில் கடைசி இரண்டு முறையும் நவீனும், நரேனும் பேருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்வர். இடைப்பட்ட நேரத்தில் வேறு ஆட்களை அனுப்பிவைப்பர். 

நரேனது பேருந்து முதலில் கிளம்பிச் செல்ல, நவீனின் பேருந்து கிளம்புவதற்கு தயாராய் ஒலியை எழுப்ப, அடுத்த இரண்டு நிமிடத்தில் சடசடவென்று கல்லூரி மாணவர்கள் முக்கால்வாசி பேர் பேருந்தை நிரப்பிவிட்டனர்..

“டேய் புட் போர்ட்ல நிக்காத… எத்தனை தடவ சொல்றது…” என்றபடி நவீன் டிக்கட் கொடுக்க,

“காலேஜ் போய் சேர்ற வரைக்கும் இந்த சாமி பாட்டு தானா நவீன் அண்ணா…” என்றான் வழக்கமாய் அப்பேருந்தில் வரும் மாணவன் ஒருவன்.

“அதானே… நாங்கவேனா நாளைக்கு பென் டிரைவ்ல பாட்டு ஏத்திட்டு வரவா???” என்று ஆர்வமாய் மற்றொருவன் கேட்க, பேருந்து சற்று தூரம் சென்றதும், வழக்கம் போல் சாமி பாட்டு மாறி சினிமா பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

“டிக்கட் டிக்கட்…” என்று சொல்லியபடி பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டத்தின் நடுவே புகுந்து புகுந்து நவீன் செல்ல, வழக்கமாய் அப்பேருந்தில் செல்லும் நிறைய பேர் ஒரு புன்னகையோடே அவனிடம் பணம் செலுத்தி டிக்கட் வங்கினர்.

மாணவர்கள் எப்படி பேருந்தின் படிக்கட்டை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டனரோ, அதேபோல் கல்லூரி மாணவிகளில் சிலர் ஓட்டுனர் இருக்கைக்கு இந்தப்பக்கம் இருக்கும் நீண்ட இருக்கையை அவர்களுக்கு சொந்தமாக்கி இருந்தனர்.  

அதிலொருத்தி அமைதியாய் வர, அவளருகே இருந்தவளோ “என்ன டி பச்சை கலர் ட்ரெஸ் போடலாம்னு சொல்லிட்டு நீ மட்டும் ப்ளு கலர்ல வந்திருக்க…” என்று கார சாரமாய் பேசிக்கொண்டு வந்தாள்.

பதிலை எதிர்பார்த்து கேள்வி கேட்டவள் தன் தோழியின் முகம் பார்க்க, அவளோ ஒரு சிரிப்பை மட்டும் கொடுத்தாளே தவிர பதிலைத் தரவில்லை.

நந்தினி எப்போதுமே இப்படித்தான். அதிகம் பேசவே மாட்டாள். ஆனால் பேச வேண்டிய தருணங்களில் பேசிவிடுவாள்.. சாது.. அமைதி என்றெல்லாம் சொல்லிட முடியாது ஆனால் அனாவசியமாய் வாய் திறக்கமாட்டாள். மற்றபடி அந்த கல்லூரி வயதுக்கே உரிய கலாட்டாக்கள் அவளிடமும் உண்டு..

அது தான் இப்போதும் நடந்திருக்கிறது.. இறுதியாண்டு, கல்லூரி நாட்கள் என்பதால், அவள் வகுப்பு மாணவிகள் அனைவரும் சொல்லிவைத்து ஒரே நிறத்தில் உடையணிந்து வரலாம் என்று முடிவெடுத்திருக்க, இவள் மட்டும் வேறு நிறத்தில் உடுத்திக்கொண்டு வந்திருந்தாள்..

ஆனால் மேகலாவிற்கு தெரியாது, நந்தினி அனைவரிடமும் பேசி நிறத்தை மாற்றிவிட்டாள் என்று..  

“என்னடி கேட்கிறேன்ல.. சிரிக்கிற.. சரியான அழுத்தக்காரி….” என்று மேகலா நொடிக்கும் பொழுதே, நவீன் டிக்கட் டிக்கட் என்று அவர்கள் அருகே வர,

“இந்தா எனக்கும் எடு..” என்று வேகமாய் கையில் இருந்த சில்லறையை மேகலாவின் கையில் திணித்தாள் நந்தினி.

“அமா இதுக்கு மட்டும் வாயத் திற… ஏன் அந்தண்ணா உன் சைட் தானே வர்றாங்க.. நீ எடுத்தா என்னவாம்…” என்று அவளை பொரிந்துகொண்டே, பணத்தை நவீன் முன் நீட்ட, அவனோ கர்ம சிரத்தையாய் டிக்கட்டை கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி தன் பையில் போட்டுக் கொண்டு போனான்.

“ஏன் டி நானும் பாக்குறேன்.. நீ ஏன் டிக்கட் எடுக்க மாட்டேங்கிற… தினமும் என்கிட்ட கொடுக்கிற?? மூணு வருசமா நானும் இந்த கேள்விய மாத்தி மாத்தி கேட்டுட்டேன்…” என்று மேகலா கேள்வியாய் கேட்க, அதற்கும் நந்தினியிடம் இருந்து புன்னகை தான் வந்தது.

“ஆமா ஏது கேட்டாலும் சிரி.. கிளாஸுக்கு வா இருக்கு….” என்று சொல்லும் போதே, பேருந்து அடுத்த ஸ்டாப்பில் நிறுத்தப்பட, அதில் இன்னும் கொஞ்சம் கல்லூரி மாணவர்களும், வேறு ஆட்களும் ஏற, நந்தினியின் மடியில் பொத்தென்று வந்து ஒரு புத்தகமும், இரண்டு நோட்டுகளும் விழுந்தது.

விழுந்த வேகத்தில் நந்தினி கண்களை இறுக மூடித் திறந்தவள், தன் மடி மீது விழுந்தவைகளை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை. அவளுக்குத் தெரியும்.. யார் இதை செய்தது என்று..   

‘நாகராஜ்….’

நந்தினியின் சொந்த அத்தை மகன்.. அவள் படிக்கும் அதே கல்லூரியில் தான் இறுதியாண்டு முதுகலை படிக்கிறான். நந்தினியும் அவள் வீட்டில் ஒரே பெண்ணாய் போய்விட, அவனும் அவர்கள் வீட்டில் ஒரே பையனாய் போய்விட, வேறென்ன ஆரம்பத்தில் இருந்தே இவனுக்கு இவள் தான் என்ற பேச்சு வீட்டில் நிலைத்துவிட்டது.

ஆனால் நந்தினிக்கு சுத்தம்.. இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது.. கல்லூரி சேர்ந்த பொழுது, சீனியர் மாணவன் என்ற முறையில் நாகராஜ் அவள் வகுப்பிற்கே வந்து ‘இவ நான் கல்யாணம் பண்ண போறவ.. என்னோட ஆளு…’ என்ற ரீதியில் பேசிச் செல்ல, பிடிக்கவே பிடிக்காது என்றதையும் தாண்டி ஒரு வெறுப்பு ஏற்பட்டது நந்தினிக்கு,,

நாகராஜிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டாள். ஆனால் அவனோ விடாமாட்டான்.. எங்கே போனாலும் பின்னால் வருவான். அன்பை காட்டியிருந்தால் நந்தினி மனதிலும் அவன்பால் ஒரு நேசம் வந்திருக்குமோ என்னவோ, ஆனால் அவனோ தன் அதிகாரத்தை தான் காட்டினான்.

கல்லூரியில் சாதாரணமாய் தன் வகுப்பு மாணவர்களோடு பேசினால் கூட வந்துவிடுவான் ‘ஏய் இங்க என்ன பண்ற ?? இவன்கிட்ட என்ன பேச்சு..’ என்று.

இதனாலேயே நந்தினியோடு பழக அவள் வகுப்பில் நிறைய பேர் யோசிக்க, அதெல்லாம் தாண்டி நந்தினி தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை சம்பாதிக்க முதலாண்டு முழுவதும் தீர்ந்து போனது.

சரி அடுத்த ஆண்டு இந்த கல்லூரியை விட்டு நாகராஜ் சென்றுவிடுவான் என்று பார்த்தால், அவனோ அங்கேயே முதுகலை சேர்ந்துவிட நொந்து தான் போனாள் நந்தினி.

‘பேசாம நீ அவனையே கட்டிக்கிறேன்னு சொல்லிடு…’ என்று மேகலா கூட அடிக்கடி சொல்வாள்.

‘அது மட்டும் நடக்கவே நடக்காது…’ என்று நந்தினியும் உறுதியாய் சொல்வாள்.

ஆனால் வீட்டிலோ நேர்மார் தான்.. என்னவோ நந்தினியின் அப்பா, சுப்புராஜிற்கு நாகராஜை கண்டால் அத்தனை ஆனந்தம் இருக்கும். அவளின் அம்மா சிந்தாமணியும் அப்படித்தான்.

பெற்ற மகனிருந்தால் கூட அத்தனை இடம் கொடுப்பார்களோ என்னவோ இவனுக்கு அங்கே அத்தனை உரிமையுண்டு..

“இங்க பாரு நந்தினி, நாகு சொல்றத கேளு.. அவன் என்ன தப்பாவா சொல்லிட போறான்…” என்று சிந்தாமணி கூறும் போதெல்லாம், தன் அம்மாவை ஆழ்ந்த பார்வை பார்ப்பாளே தவிர வேறெதுவும் சொல்லமாட்டாள்.

ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் அவள் மனதில் நாகராஜ் விசயத்தில் ஒரு பிடிவாதம் வளர்ந்தது என்னவோ உண்மை தான்..

ஒருநாள் இப்படித்தான் நந்தினி தன்னோடு பயிலும் மாணவியின் அண்ணாவிற்கு திருமணம் என்று தன் தோழிகளோடு சென்று மண்ணச்சநல்லூர் சென்றுவிட, அங்கே பார்த்தால் அடுத்த நொடியே இந்த நாகராஜ் வந்து நின்றான்.

அனைவரின் முன்னும் தேவையில்லாத காட்சியாகுமே என்று நந்தினி அவனை கண்டும் காணாது இருக்க, இவனோ அவள் பின்னேயே சுற்ற, அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் இதுவே பெரிய காட்சியாய் இருந்தது.  இதை பார்த்த அவர்கள் உறவில் பெரியவர் ஒருவர், நந்தினியின் வீட்டிற்கே வந்து,

“ஏம்ப்பா.. பேசாம உன் தங்கச்சி பையனுக்கும், உன் பொண்ணுக்கும் இப்போவே கல்யாணம் பண்ணிட்டா என்ன…?? எங்க பாரு ஜோடியா சுத்திட்டு இருக்குதுங்க…” என்று கொளுத்தி போட, அத்தனை நாள் வாய் மூடியிருந்தவள், அன்று பொங்கிவிட்டாள்.     

“நீங்க பாத்தீங்களா ??? நாங்க ஜோடியா சுத்துனோம்னு…” என்றபடி உள்ளிருந்து வந்தவளை சுப்புராஜ் முறைக்க, சிந்தாமணியோ, “நந்தினி…” என்று அரட்ட,

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், “இப்போ சொல்றேன்.. அவனைத் தான் கட்டணும்னு ஏதாவது சொன்னீங்க, என்ன செய்வேன்னு தெரியாது…” என்று எச்சரிக்கை போல் சொல்லி மீண்டும் வேகமாய் உள்ளே சென்றுவிட்டாள்.

அவ்வளவு தான், அனைத்தும் சேர்ந்து ஒரு இரண்டு நிமிடங்கள் தான் இருக்கும். ஆனால் இந்த இரண்டு நிமிட பேச்சு அவளை இந்த இரண்டு வருடங்களாய் போட்டு பாடாய் படுத்துகிறது.

இந்த விஷயம் எப்படியோ நாகராஜின் காதுகளுக்குச் செல்ல, அவன் வருவதற்கு முன்னே அவன் அம்மா வந்தார்.

“அண்ணே.. என்னண்ணே.. நம்ம பாப்பா இப்படி பேசுச்சாம்… என்ன அண்ணி இது..” என்று கண்களை உருட்ட,

“அவ சின்ன பொண்ணு அண்ணி.. ஏதாவது குழப்பத்துல சொல்றதுதான்…” என்று சிந்தாமணி சமாளிக்க,

சுப்புராஜோ, “இதுக்கா ராஜி நீ இவ்வளோ பதட்டமா வந்த… நான் அப்படியெல்லாம் நடக்க விடுவேணா… நந்தினி உனக்கு தான் மருமக…” என்று வழக்கமாய் கொடுக்கும் வாக்கை கொடுத்தார்.

அவருக்கு என்ன, ஒரே பெண், தெரியாத இடத்தில் கட்டிக் கொடுத்து, நாளைக்கு தங்களுக்கு பின்னே அவளை சரியாய் கவனிக்காமல் போனால் என்ன செய்வது. ஆகையால் தங்கையின் மகனுக்கே கொடுத்துவிட்டால் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாகிவிடும் என்ற நினைப்பு..

நியமான நினைப்பு தான். ஆனால் நந்தினியின் மனதிலும் என்ன இருக்கிறது என்று கேட்டறிந்திருக்காலம். அதனை விட்டு இப்போதிருந்தே நாகராஜிற்கு முக்கியத்துவம் கொடுத்து கொடுத்து அவனையும் ஏற்றிவிட்டு, நந்தினி மனதிலும் ஒரு வெறுப்பை ஏற்றிவிட்டனர்.

அந்த வெறுப்பு ஒவ்வொரு செயலிலும் அவளிடம் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதிலொன்று தான் தினமும் நாகராஜ் பேருந்தில் ஏறி அவள் மடியில் தன் நோட்டு புத்தகங்களை போட்டாலும் அவனை சட்டை கூட செய்யாமல் இருப்பாள். இன்றும் அப்படியே இருக்க,

“ஏய் என்னடி.. நானும் பாக்குறேன்.. ரொம்ப பண்ற..??” என்று நாகராஜ் குரலை உயர்த்த, இது அடிக்கடி நடக்கும் விஷயம் என்பதாலும், ஊருக்குள் இவனுக்கு தான் இவளை கொடுக்க போகிறார்கள் என்ற பேச்சும் இருப்பதால் அதனை யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் நவீனுக்கு இது என்றைக்குமே பிடிக்காது.. இதென்ன படிக்கும் காலத்தில் இப்படியெல்லாம் என்று நினைப்பான். அவனுக்கும் நந்தினியின் குடும்பத்தை பற்றி தெரியும் தான். ஓரளவு இருவரின் தந்தைகளுக்கும் பழக்கம் இருக்கிறது தான். இருந்தாலும் இப்படியான விசயங்களை அவன் பேருந்தில் நடக்க அனுமதியான்.

“நாகு உனக்கு எத்தனை தடவ சொல்றது.. லேடீஸ் இருக்காங்க இங்க என்ன வந்து நிக்கிற…” என்று நவீன் அதட்டியபடியே அங்கே வர, நந்தினி நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தவள் அப்படியே தலையை திருப்பிக்கொண்டாள்.

அவள் மடியில் நாகராஜின் நோட்டு புத்தகங்கள் இருப்பதை கண்ட நவீன், “நாகு ஒண்ணு பேக்ல வச்சு கொண்டு வா, இல்ல நீ தான் பைக் வச்சிருக்கல்ல அதில வா.. தேவையில்லாம வம்பு பண்ணாத…” என்று சொல்ல,

“அண்ணே.. விஷயம் தெரியும்தான.. இது எங்க குடும்ப விஷயம்…” என்று நாகராஜ் தோரணையாய் சொல்ல,

அவனை எரிச்சலாய் பார்த்த நவீனோ, “அதை உங்க வீட்ல பேசிக்கணும்.. என் பஸ்ல இல்ல..”  என்றான் அவனும் தோரணையாய்.

நந்தினிக்கு மனம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.. அவளும் இந்த மூன்று ஆண்டுகளாய் இதே பேருந்தில் தானே வருகிறாள். நவீனை பற்றி ஓரளவு அறிவாள். யார் என்ன என்றெல்லாம் பார்க்கமாட்டான் தப்பென்றால் தப்பு தான். இஷ்டமிருந்தால் இதில் வா இல்லையா இப்படியே இறங்கு என்று பாதி வழியில் இறக்கி விட்டுவிடுவான்.

அதையும் தாண்டி வேறெதுவும் பிரச்சனை பெரிதானால் யோசிக்கவே மாட்டான் நவீனின் கை தான் பேசும் அடுத்து. அப்படியெதுவும் ஆகிவிட போகிறதே என்று இப்போது அவளுள் ஒரு கலக்கம் ஏற்பட, லேசாய் பயந்துபோய் தான் இருவரையும் பார்த்தாள்.

நவீனும் இந்த மூன்றாண்டுகளாய் நந்தினியை பார்க்கிறான் தானே. தேவையில்லாத அலட்டல், பேச்சு, பிறரின் கவன ஈர்ப்பு என்று எதுவும் இருக்காது. அதிலும் இந்த நாகராஜ் விசயத்தில் நந்தினியின் சுண்டு விரல் நகம் கூட அசையாது இருப்பதும் அவனுக்கு தெரியும். ஆகையால் மட்டுமே தான் இதுநாள் வரைக்கும் நாகராஜை பொறுமையாய் அவன் கையாள்வது.

ஆனால் இன்று என்னவோ  நவீனுக்கு அந்த பொறுமையில்லை. எத்தனை முறை அவனிடம் தன்மையாய் சொல்லி பார்த்தாயிற்று. கேட்பதாகவே இல்லை. இவன் ஒருவன் செய்வதை பார்த்து நாளை மற்றவரும் பேருந்தில் வரும் பெண்களிடம் இதேபோல் நடந்தால் என்ன செய்ய என்று.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்.. என்னோட நோட்ஸ் அவட்ட கொடுத்தேன்.. அது தப்பா…” என்று எகத்தாளமாய் சட்டை காலரை உயர்த்தி விட்டு நாகராஜ் பேச, அவனை மேலிருந்து கீழாய் ஒரு பார்வை பார்த்த நவீனோ,

“சரி குடுத்துட்டல்ல.. தள்ளிப் போய் நில்லு…” என்று புருவத்தை தூக்க,

“ஏன்.. ஏன் ஏன் நான் தள்ளி போகணும்.. உங்க பஸ்ல இங்கதான் நிக்கணும் அங்கதான் நிக்கணும்னு எதாவது இருக்கா..??” என்று நாகராஜும் தன் வீரத்தை காட்ட முயல,

“தள்ளி போய் நில்லுன்னு சொன்னேன்.. இங்க புல்லா காலேஜ் கேர்ள்ஸ் இருக்காங்க.. வேற எந்த பசங்களாவது இங்க நிக்கிறாங்களா..?? போ…” என்று பொறுமையை நவீன் இழுத்து பிடித்து சொல்ல,

“அடேங்கப்பா.. நீங்க டிக்கட் கொடுக்கிற சாக்குல கூட்டத்துல எல்லாரையும் உரசிட்டு போகலாம், வரலாம்.. ஆனா நான்.. நான் கட்டிக்க போறவக்கிட்ட வந்து நிக்க கூட கூடாதா..” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் கன்னம் பழுத்தது.

இத்தனை நாள் நவீன் இழுத்து பிடித்த பொறுமை, இன்று ஒரே அடியில் காலியாகிவிட, சரியாய் அதே நேரம் பேருந்து ஓட்டுனர் சடன் ப்ரேக் போட, நவீன் அடித்ததற்கும், லோகேஷ் சடன் ப்ரேக் போட்டதற்கும் சேர்த்து நாகராஜ் பேருந்திலேயே தள்ளாடி கீழே விழப் போக, சுற்றியிருந்தவர்களில் ஒருசில பெண்கள் கிண்டலாய் பார்த்து சிரிக்க,

நந்தினி மட்டும் “ஐயோ…” என்று திகைத்தும் பயந்தும் போய் இன்னும் கலக்கமாய் நவீனைப் பார்த்தாள்.

ஆனால் அதற்குள் சுதாரித்த நாகராஜோ, “என்ன.. என்ன அடிச்சிட்டல்ல… அவன் அடிக்கிறான் நீ வேடிக்கை பாக்குற.. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு முடிவு கட்டுறேன்…” என்று வேகமாய் பேருந்தை விட்டிறங்க,

நவீனோ அவனை சிறிதும் மதிக்காது, நந்தினி மடியில் இருந்த அவனது நோட்டு புஸ்தகங்களை வாங்க கையை நீட்ட, நவீனையே திகைத்து போய் பார்த்து கொண்டிருந்தவளின் கரங்கள் அவளையும் அறியாது நாகராஜின் நோட்டு புத்தகங்களை எடுத்துக் கொடுக்க, அவளை நேராய் பார்த்தபடியே வாங்கிய நவீனோ,  “உனக்கெல்லாம் படிப்போரு கேடு…” என்றபடி.. கீழிறங்கிய  நாகராஜ்  மீதே எறிந்தான்..

அதற்கும் நாகராஜ், திரும்பி நவீனையும், நந்தினியையும் முறைக்க, நவீன் விசில் அடிக்கவும் பேருந்து மீண்டும் தன் ஓட்டத்தை துவங்க, நந்தினியோ ஜன்னல் வழியே நாகராஜை பார்த்தபடி வந்தாள்.

நவீன் மேலும் இரண்டொரு நொடிகள் அங்கேயே நிற்க, நந்தினியின் பார்வையோ வெளியே இருப்பதைக் கண்டவன் என்ன நினைத்தானோ வேறுபுறம் சென்றுவிட்டான்.

நந்தினியோ ‘கடவுளே… இதுக்கும் சேர்த்து இவன் எதையாவது இழுப்பானே…’ என்று நொந்துகொள்ள, அவள் நினைத்தபடி தான் மாலை நந்தினி வீடு செல்லும் போது நடந்திருந்தது.                         

    

 

   

Advertisement