Advertisement

கணவனை பார்க்கவும் இன்னும் கண்கள் கலங்கினாலும் அதில் நிம்மதி தெரிந்தது.. “இவங்கதாங்க தேனுவ தூக்கிட்டு வந்தாங்க..??” கமலாம்மாளை அறிமுகப்படுத்த,
 
கையெடுத்து கும்பிட்டு “எங்க உசுரயே திருப்பி கொண்டு வந்துருக்கிங்கம்மா.. இவ இல்லன்னா நாங்க ரெண்டுபேருமே இல்ல..!!” மகளோடு சேர்த்து மனைவியையும் அணைத்துக் கொண்டான்.. “அங்க எங்க பார்த்திங்க தேனுவ..??”
 
“நான் அங்கதான் தம்பி ஒரு வீட்ல வீட்டு வேலை பார்க்கிறேன்.. சாயங்காலமா வேலைமுடிச்சு வர்றேன் ரோட்ல பாப்பா மட்டும் நடந்து வருது.. காரு பஸ்ஸெல்லாம் போயிட்டு இருந்துச்சு எனக்கு ஒருநிமிசம் உசுரே கலங்கிருச்சுப்பா.. நான் வேலைக்கு போற பஸ்ல உங்க பொண்டாட்டியையும் மகளையும் அடிக்கடி பார்த்திருக்கேன்பா…  அதான் நீங்க காணாம்னு தேடுவிங்கன்னு இங்க தூக்கிட்டு வந்தேன்..”
 
 
“உங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னா அது பத்தாதும்மா.. எங்க வாழ்நாள் முழுசும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கோம்..” தன் சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கப்போக..
 
“தம்பி பணத்தை கொடுத்து என்னை அசிங்கப் படுத்தாதிங்க.. இவ எனக்கும் பேத்திதான்… பேத்திய தூக்கிட்டு வந்ததுக்கு யாராச்சும் பணத்தை வாங்குவாங்களா..?? ஒரே ஒரு உதவி மட்டும் செய்ங்க.. எப்பாவாச்சும் உன்மகள பார்க்கனும் போல இருந்தா வந்து பார்த்துட்டு போகட்டுமா..?? எனக்கும் இவ வயசில ஒரு பேத்தி இருக்க வேண்டியது.. நான் செஞ்ச பாவமோ என்னமோ அவ இப்ப என்கிட்ட இல்ல.. தேனுவ பார்க்கும் போதெல்லாம் என் பேத்திய பார்த்தா போலவே இருக்கு.. எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் செய்ங்களேன்..”
 
சுமதி பாய்ந்து அவரை அணைத்துக் கொண்டவள் “ இதென்னமா கேள்வி என்மக இன்னைக்கு எங்க கூட இருக்கான்னா அதுக்கு நீங்கதான் காரணம்.. மன்னிச்சிருங்கம்மா.. உங்க பேத்தி நியாபகத்துலதான் தேனுவ நீங்க அடிக்கடி பார்க்கிறது தெரியாம உங்கள தப்பா நினைச்சுட்டேன்… எப்ப வேணா வந்து இவள பார்த்துட்டு போகலாம்.. இன்னைக்கு தேனுவோட பிறந்தநாள் இருந்து வாழ்த்திட்டுத்தான் போகனும்..!!”
 
மணியை பார்த்தவள் அது எட்டை நெருங்கவும் “அம்மா இருங்க நான் சாப்பாடு ரெடியான்னு பார்த்துட்டு வர்றேன்..” மகளையும் தூக்கிக்கொண்டு அடுப்படிக்குள் நுழைய கமலாம்மாளுக்கு மனது நிறைந்தது.. இன்று மாலை ரோட்டில் குழந்தையை பார்க்கும்போது ஒரு நிமிடம் உயிரே போனது போலிருக்க சுற்றும்முற்றும் சுமதி தீனாவை தேட யாரையும் காணவில்லை…
 
இருட்டின நேரத்தில எப்படி இவ்வளவுதூரம் வந்துச்சு..?? ஓடிச்சென்று குழந்தையை தூக்கியவர் அது முகமெங்கும் முத்தமிட முதலில் ராசாத்தி அம்மாள் என்று அமைதியாய் இருந்த குழந்தை கமலாம்மாளை பார்க்கவும் மீண்டும் அழத் துவங்கிவிட்டது..
 
அதை இதை காட்டி சமாதனப்படுத்தியவர் “பாப்பா அம்மா அப்பா எங்கடா..?? எப்படி இங்க வந்திங்க…??”
 
“அப்பா வண்டில டுர்ர்ர்ர்….. போயிட்டா.. பூச்சாண்டி பாப்பாவ தூக்கிட்டு வந்துட்டா..!!” இதைத்தவிர குழந்தைக்கு வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை…
 
குழந்தையை யாரோ கடத்திட்டு வந்துட்டாங்களோ..?? மனம் பதைத்தவர் அவர்கள் வீட்டிற்கு கிளம்ப தெரு முக்கு திரும்பும்போதே கூட்டம் கூடிவிட்டது.. அனைவரும் பாய்ந்து தேனுவை வாங்க வர, விபரம் அறிந்து ஓடிவந்த சுமதியை பார்க்கையில் கமலாம்மாளுக்கு மனம் பதைத்தது.. தலைவிரி கோலமாய் சேலையை தூக்கிச் சொருகியபடி அழுதுகொண்டே பிள்ளையை வாங்கியவள் விடவே இல்லை..
 
அதுவும் அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டு கண்ணீர் வடிக்க தன் மகள் சுதாவிடம் இருந்திருந்தால்கூட இந்த அளவு பாசம் காட்டுவாளா சந்தேகம்தான்… முதலில் குழந்தையை இப்படி ரோட்டில் விட்டுவிட்டார்களே.. அவங்க ஒழுங்கா பார்த்துக்காட்டா நாம உண்மையை சொல்லி குழந்தை. வாங்கிட்டு வந்திடலாம் இந்த எண்ணத்தில்தான் வந்தார் ஆனால் இங்கோ அம்மா மகளுக்கு இடையில் ஒரு பெரிய பாசப்போரோட்டமே நடந்தது..
 
அடுத்த அரைமணி நேரத்தில் தேனுவிற்கு பட்டுப்பாவாடை சட்டை, இருகுதிரைவால் போட்டு அதில் பூவைத்திருக்க சிறுதோடு நெக்லஸ், வளையல் என எல்லாம் தங்கம்.. சுமதியும் தன்னை அளவாய் அலங்கரித்து இருக்க தீனாவின் கண்முழுதும் தன் மனைவி மகள் மீதுதான் இன்னும் இன்னும் இருவரையும் ஆசைதீர அணைத்துக் கொள்ளவேண்டும் போலிருக்க.. சுற்றி உள்ளவர்களை நினைத்து அடக்கிக் கொண்டான்..
 
பாதிச்சாப்பாட்டை மட்டும் செய்ய சொல்லி மீதியை ஹோட்டலில் ஆர்டர் செய்திருக்க பலூன் கேக் என பிறந்தநாள் விழா கோலாகலமாக நடந்தது.. அந்த தெருவாசிகள் தங்கள் கையில் கிடைத்த சிறு சிறு பொம்மைகளோ, சாக்லேட்டோ ஏதோ ஒன்றை கொடுத்து வாழ்த்தி செல்ல ராசாத்தி அம்மாள் பேத்தியை விட்டு நகரவில்லை..
 
“அம்மா போய் சாப்பிடுங்க..?? இவள நான் பார்த்துக்கிறேன்..??”
 
“இருக்கட்டும்.. இருக்கட்டும்தா என்னோட அஜாக்கிரதையாலத்தான் தேனுவ எந்த காவாலி பயலோ தூக்கிட்டான்.. கட்டையில போறவன் அவன் மட்டும் என் கைக்கு கிடைக்கட்டும் கையை உடைச்சு அடுப்புல வைக்குறேன்.. பட்டுக்கிடப்பான்.. பாடையிலபோவான்… நாசமா போக..!!” அவனுக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருக்க இந்த சாபத்துக்கு உரிய கோபியோ ஒரு ஒயின்ஸாப்பில் உருண்டு கொண்டிருந்தான்..
 
இந்த மூன்று வருடங்களில் மற்றவர்களின் வாழ்க்கை எவ்வளவுகெவ்வளவு உயர்ந்ததோ கோபியின் வாழ்க்கை அதளபாதாளத்தில் சென்றிருந்தது.. மதுமாது சூது என அவ்வளவு கெட்டபழக்கவழக்கங்களும் அவனுள் குடிக்கொண்டிருக்க அவ்வப்போது சுமதியின் மீது மட்டும் கோபமும் வன்மமும் எழும்… அப்போதெல்லாம் தெருமுக்கில் இருந்து சுமதியின் வீட்டைத்தான் நோட்டமிடுவான்..
 
இவ மட்டும் வீட்டை விட்டு வெளியில வராம இருந்திருந்தா என் வாழ்க்கையும் நான் போட்ட பிளான்படி மாறியிருக்கும் இப்போ போக இடமில்லாம தெருநாய் மாதிரி தெருவெல்லாம் சுத்தி வர்றேன்.. அவள… பல்லைக்கடிப்பவன் தூரத்தில் தீனாவின் வண்டியை பார்த்துவிட்டால் போதும் அப்படியே பதுங்கிவிடுவான்.. ஏனோ தீனாவை பார்த்து அவனுள் பயம்..
 
இரண்டு மூன்றுமுறை அவன் கண்ணில் மாட்டியிருக்க அப்போதெல்லாம் தீனா காரணமே இல்லாமல் அடித்து துவைத்துவிட்டான்.. இப்போது புதிதாக குழந்தைகளை கடத்துபவர்களிடம் அவனுக்கு சகவாசம் ஏற்பட்டிருக்க அதற்காகத்தான் தேனுவை கடத்தியது.. தீனா ,சுமதியை பழிவாங்கின மாதிரியும் இருக்கும் .. நமக்கு லட்சக்கணக்கில பணம் கிடைச்சமாதிரியும் இருக்கும்..  வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் பலூனை காட்டி ஏமாற்றி கடத்தி வந்திருக்க ஏனோ பாதி தூரம் வரவுமே தேனு அழத்துவங்கியது..
 
 லேசாக அழவும் கோபி அதட்ட இன்னும் அழுகைதான் அதிகமாகியதே தவிர குறைந்தபாடில்லை.. கோபத்தில் சப்பென்று அதன் முகத்தில் அறையவும் அவனது முரட்டு அடியை தாங்காமல் குழந்தை மயங்கியிருந்தது..
 
குழந்தையின் மூக்கில் கைவைத்துப் பார்த்தவன் சீரான சுவாசம் இருக்கவும்  வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் தோளில் தூக்கிக் போட்டு நடக்க ஆரம்பித்தான்… எல்லாம் அந்த ஒயின்ஸாப்பை பார்க்கும்வரைதான்.. அதற்கு மேல் தாங்கமாட்டாமல் இந்த குழந்தையை ஒப்படைப்பதாக சொல்லி வாங்கியிருந்த அட்வான்ஸ்தொகை 1000 ரூபாய்க்கும் குடிக்க துவங்கியிருந்தான்..  நேரம் செல்ல செல்ல போதையால் தன் சுயநினைவை இழந்து குழந்தையை மறந்து  தள்ளாடியபடி ரோட்டில் நடக்கத் துவங்கிவிட்டான்..
 
அடுத்த ஒருமணி நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த குழந்தை அம்மா அப்பாவை காணாமல் அழுதபடி கால்போன போக்கில் நடக்கதுவங்க அங்கிருந்தவர்கள் அனைவரும் போதையில் இருந்ததால் அழுதகுழந்தை யார் கவனத்தையும் கவரவில்லை..
 
நல்லபடியாக பிறந்தநாளை கொண்டாடி முடித்திருக்க மணி பதினொன்றை நெருங்கவும் குணாவின் குடும்பம் வீட்டிற்கு கிளம்பியது…
 
“இருந்துட்டு காலையில போகலாம்ண்ணே..??”
 
“இருக்கட்டும்தா எனக்கு 3 மணி ஷிப்ட்.. மாப்பிள்ளைக்கு நான் நாளைக்கு லீவு சொல்லிடுறேன் ஒருநாள் தேனுவோட இருந்துட்டு வரட்டும்.. தன் தங்கையின் கையை பிடித்தவன் உண்மையிலே மாப்பிள்ள தங்க குணம்தா.. தேனுவ காணாம்னு சொன்னதில இருந்து அவருபட்ட பாடு சொல்ல முடியாது… வெளியில காட்டிக்காட்டாலும் மனசுக்குள்ள வைச்சுக்கிட்டு கஷ்டம்.. அதுல உன்னையும் விடல..!! நானா தேடியிருந்தாக்கூட இப்படி ஒரு மாப்பிள்ள, குடும்பம் உனக்கு அமைச்சிருக்காது.. நம்ம அம்மா அப்பாதான் தெய்வமா இருந்து உனக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க..
 
அதுல ஏதோ திருஷ்டி போலத்தான் தேனு இன்னைக்கு காணாம போனது.. கவலைப்படாத போலிஸ்ல கம்பிளைண்ட் கொடுத்திருக்கோம் பாப்பாவ மெல்ல மெல்ல விசாரிப்போம் அவன் எப்படி இருந்தான்னு அத வைச்சு அவன கண்டுப்பிடிச்சிடலாம்..
 
மனோகரி சுமதியின் கையை பிடித்தவள் “ஏன் சுமதி அங்க வீட்டுக்கு வந்தா தங்க மாட்டுற..?? நான் முன்ன மாதிரி இல்ல இப்ப திருந்திட்டேன்.. தேவியும் அருணும் ரொம்ப ஏங்குறாங்க உனக்காக..  ரெண்டு நாள் அங்க வந்து இரேன்..”
 
“வர்றேன் அண்ணி.. வந்து தங்குறேன்..”
 
குணா சத்தமாக சிரித்து “இப்படித்தான் சொல்லி டிரஸெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வருவ.. சாயங்காலமே மாப்பிள்ள வந்து கூட்டிட்டு வந்திடுறாரு..”
 
“இல்லண்ணே கண்டிப்பா வந்து தங்குறேன்..”
 
“சரித்தா வந்து  தங்கினா ரொம்ப சந்தோசம்.. மருமகளோட இருக்கிறது  மாமனுக்கு கசக்கவா போகுது..” தேனுவை வாரி முத்தமிட அதுவும் மாமனிடம் பாந்தமாய் ஒட்டிக் கொண்டது..
 
அனைவரும் கிளம்பவும் பாதி வேலைகளை முடித்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை… ஹாலில் ராசாத்தி அம்மாளின் மடியிலேயே தேனு உறங்கியிருக்க குழந்தையின் தலையை வருடியபடி அமர்ந்திருந்தவர்,
 
 “சுமதி பாப்பாவ இன்னைக்கு என்கூட படுக்க வைச்சுக்கவா..?? இனி இன்னும் கவனமா பார்த்துக்கிறேன்.. இன்னைக்கு புள்ள இங்கனதான விளையாடுதுன்னு உள்ள வேலைபார்த்துக்கிட்டு இருந்துட்டேன்..” அவருக்கு குற்றவுணர்ச்சி தன்னுடைய கவனக்குறைவுதான் அவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.. இந்த பிள்ளை கிடைக்காம போயிருந்தா தீனாவும் சுமதியும் என்னாகியிருப்பாங்க.. மற்றவர்களை விட தேனு இவர்களுக்கு எவ்வளவு முக்கியம் இவர் அறிந்தவர்தானே.. தேனுவின் மேல் இவரும் அளவற்ற பாசம் வைத்திருந்தார்.. குழந்தையை வருடியபடியே கண்ணீர் விட,
 
“ எதுக்குமா இப்ப அழறிங்க..?? உங்க மேல எந்த தப்பும் இல்ல..?? தேனுவ வேற யாரோ வேணுன்னே கடத்திட்டு போயிருக்காங்க..?? அதுக்கு நீங்க என்ன பண்ணுவிங்க.. அவ உங்க பேத்திதான் உரிமையா உங்க கூட படுக்க வைச்சுக்கலாம்.. என்கிட்ட எந்த விளக்கமும் தேவையில்ல..” ஹாலிலேயே பாயை விரித்தவள் ராசாத்தி அம்மாளின் அருகில் படுக்க வைத்தாள்…
 
தீனாவை காணவில்லை மாடியில் இருக்கிறான் போல.. விளக்குகளை அணைத்தவளுக்கு களைப்பாய் இருந்தாலும் கணவனிடம் பேசவேண்டும் போலிருக்க.. தங்கள் நகைகளை பத்திரப்படுத்தி பீரோவில் வைத்துப் பூட்டியவள் தாய்க்கும் மகளுக்கும் போர்வையை சரிசெய்து கதவை வெளியில் சாத்தியபடி மாடிக்கு சென்றாள்..
 
தீனா கைகளிரண்டையும் தலைக்கு கொடுத்து வானை பார்த்தபடி படுத்திருக்க எதுவும் பேசாமல் கணவன் அருகில் அமர்ந்தாள்… இன்று ஒருநாளிலேயே இருவரும் வெகுவாய் களைத்திருக்க தேனு கிடைத்திருக்காவிட்டால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை..
 
“பாப்பா தூங்கிட்டாளா..??”
 
“ம்ம்ம் அம்மாக்கிட்டயே தூங்கிட்டா..??”
 
“யார் கடத்தியிருப்பா..??”.
 
“தெரியலங்க ஆனா புள்ளைய அவன் அடிச்சிருக்கான் முகத்துல காயம் இருக்கு..??”
 
பல்லை கடித்தவன் “அவன் மட்டும் யார்ன்னு தெரியட்டும் … கெட்டவார்த்தையில் திட்டியவன் என் கையாலதான் அவனுக்கு சாவு.. புள்ளைக்கிட்ட மெதுவா விசாரிச்சுப்பாரு அவன் யாருன்னு..!!”
 
“ம்ம்ம் ஆனா ரொம்ப பயந்துட்டா போல.. பூச்சாண்டி.. பூச்சாண்டி இது மட்டும்தான் சொல்றா வேற எதுவும் சொல்லதெரியல..” யாருக்கும் கோபியை சந்தேகப்பட தோன்றவில்லை.. அவனை வீட்டுக்குள்ளேயே சேர்க்காமல் குணா விரட்டி அடித்திருக்க அதற்கு மேல் அவனை பற்றிய சிந்தனை.. யாருக்குமில்லை..
 
தன் மனைவியை தன்புறம் இழுத்தவன் “நீ ஏன்புள்ள இன்னைக்கு இத்தன தரம் மயங்கி விழுந்த..?? நானே பயந்துட்டேன்.. உடம்புக்கு ஏதும் பண்ணுதா..??”
 
“ம்ம்ம் காலையில இருந்தே ஒருமாதிரிதான்ங்க இருந்துச்சு.. இதுல தேனுவ காணோம்னு சொல்லவும் என்னால தாங்க முடியல.. நாள்வேற தள்ளியிருக்கு..!!”
 
சடாரென எழுந்து அமர்ந்தவன் “என்னபுள்ள சொல்ற..??” வெளியில் காட்டி கொள்ளாவிட்டாலும் மனைவியின் வருத்தம் அவனும் அறிந்திருந்தான் தானே..
 
“ஆமாங்க பத்துநாள் தள்ளியிருக்கு..??”
 
மனைவியை இறுக அணைத்தவன் “தேனுவுக்கு தம்பி வரப்போறானா..??”
 
“ஏன் தங்கிச்சின்னா வேணான்னு சொல்லிடுவிங்களா…!!”
 
“யாரா இருந்தா என்னடி..?? எல்லாம் என்புள்ளதான..?? சாயங்காலமே நினைச்சேன்  என்னடா என் பொண்டாட்டி இம்புட்டு அழகா இருக்கான்னு இதான் காரணமா.. இப்பத்தான் ரொம்ப கவனமா இருக்கனும் 3 வருசத்துக்கு அப்புறமா புள்ள உண்டாகியிருக்க… அம்மாக்கிட்ட சொல்லிட்டியா..??”
 
“இன்னும் இல்லைங்க காலையிலதான் சொல்லனும்.. தேனுவ ஒழுங்கா கவனிக்கலையோன்னு அம்மா ரொம்ப மனசு கஷ்டப்படுறாங்க..”
 
“என்னவாம் கெழவிக்கு…?? வரவர வயசாயிருச்சுள்ள அதான் இப்படி பேசுது..” வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கை மனைவியை வருடிக் கொண்டிருந்தது.. தேனு கிடைத்திராவிட்டால் இந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவித்திருக்க முடியுமா.. அவனை பொறுத்தவரை மனைவி மகள் இருவரும் அவனுக்கு கிடைத்த நல்வரங்கள்.. யாருக்காகவும் எதற்காகவும் அவர்களை விட்டுத்தர முடியாது..
 
எம்புள்ளைய கடத்துனவன் யாரா இருந்தாலும் அவன சும்மா விடக்கூடாது.. அந்த அம்மா பார்க்காட்டா நான் மாட்டிக்கிட்டா போல பணத்துக்காக பிச்சை எடுக்கிறவன்கிட்டயோ, பிள்ளைகள கடத்துறவன் கிட்டயோ மாட்டியிருக்குமே அதற்கு மேல் அவனால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.. தன் வாழ்க்கையே அதற்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க.. எம்புள்ளைக்கும் அந்த நிலைமையா..?? மனைவியை இறுக அணைத்தவன் இன்னும் கவனமா இவங்கள பார்த்துக்கனும்.. அவள் நெற்றியில் முத்தமிட்டு தன்னுள் பொதிந்து கொண்டான்..
 

Advertisement