Advertisement

எனை மாற்றிய தருணம்                          
                      அத்தியாயம்  –  8
 
அடிங்… !!” வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் திட்டியவன் எவன்டா என் வீட்டுக்குள்ள வந்து எட்டிப்பார்க்கிறது..?? இன்னைக்கு செத்தானுக..??” கைலியை மடித்து கட்டியபடி சத்தமில்லாமல் இறங்கி சென்றவன் அவர்களுக்கு பின்னால் சென்று நிற்க,
 
அவ்வளவு பெரிய உருவம் வந்து நிற்பது கூட தெரியாமல் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.. டேய் நெசமாத்தான் சொல்றியா..!! இப்ப இந்த பொண்ணு குளிக்க வெளியில வருமா..??”
 
அட சத்தியமே பண்ணுறேன்.. எல்லார் வீட்லயும் பாத்ரூமா இருக்கு.. எல்லாம் வெளியிலதான குளிக்குதுக.. இந்த பொண்ணு வந்த நாள்ல இருந்து வெளியில குளிச்சு நான் பார்க்கவே இல்ல.. இந்த ஒரு மாசமா டவுட்.. இவன் வீட்டுக்குள்ளயும் பாத்ரூம் இல்ல.. அப்புறம் இந்தப்புள்ள என்னதான் பண்ணுது.. அதான் ரெண்டுநாளா ராத்திரியெல்லாம் முழிச்சு கிடந்து வீட்டயே பார்த்துட்டு இருக்கேன்..
 
இது என்னடான்னா விடிகால 3 மணிக்கே குளிச்சிருது.. விடிகாலதான் நல்லா தூக்கம் வருதா..  ரெண்டு நாளா கடைசி நேரத்திலதான் பார்க்க முடிஞ்சிச்சு…   அரையும் கொரையுமா கூட பார்க்கலைனா பார்த்துக்கோயேன்.. அதான் இன்னைக்கு உன்னை கூட்டுச்சேர்த்தேன்.. ரெண்டு பேரும் பேசிக்கிட்டே தூங்காம இருக்கலாம்னு..!!”
 
ம்ம் ஏன்டா குளிக்கும் போது பார்க்காட்டா என்ன..?? இந்த ஜன்னல் பக்கம் வந்து பார்த்தா அந்த புள்ள டிரஸ் மாத்துறத பார்க்கலாம் தானே..??”
 
ம்கும் அப்படியும் பார்த்தேன்டா.. இது ரொம்ப விவரம்.. ஜன்னலுக்கு பக்கத்துல சுவரோட சுவரா பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சேலைய கட்டும் போல.. ஒன்னத்தையும் பார்க்க முடியல.. டேய் மணி 3 க்கு மேல ஆகப் போகுது.. இன்னைக்கு எப்படியாச்சும் அத முழுசா பார்த்துருறோம்.. முடிஞ்சா… வேற வேலை கூட பார்க்க முடியுமா பார்ப்போம்..
 
டேய் இந்த வீட்டுக்காரன் ரொம்ப வில்லங்கம் பிடிச்சவன்டா.. தெரியும்ல அவனப்பத்தி..!!”
 
தெரியும் தெரியும் குடிகார மட்டை.. அது குடிச்சிட்டு விழுந்துகிடக்கும் .. இங்க இவ்வளவு பயலுக இருக்கானுக.. யாரு பண்ணினான்னு தெரியவா போகுது. .. இந்தக்குட்டியப் பார்த்தா புள்ள பெத்த ஆள் மாதிரிலாம் தெரியலடா.. தக்காளி பழம் போல தளதளன்னு இருக்கா.. இன்னைக்கு அவள…!!”கேட்க கேட்க தீனாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது..
 
அவர்கள் பின்னால் சத்தமில்லாமல் நின்றிருந்தவன் சடாரென இருவர் வாயையும் பொத்தி பின்னால் இழுத்திருக்க இதை எதிர்பார்க்காதவர்கள் பொறியில் மாட்டிய எலி போல அவன் கையில்..!! அவ்வளவுதான் அடுத்த பத்து நிமிடங்களில் இருவர் முகமெங்கும் ரத்தக்களறியாய்.. கீழே விழுந்து கிடந்தவர்களுக்கு கைகாலெல்லாம் உதறலெடுத்துக் கொண்டிருந்தது..
 
தங்கள் முன்னால் அசுரன் போல அவன் உருவம்..  இவனா வெட்டுப்பட்டு ஆசுபத்திரியில இருந்தவன் ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுதே.. தீனா ஓங்கி அறைந்ததில் இரு பற்கள் ஆட்டம் கொண்டிருக்க எழுந்து நிற்க கூட முடியவில்லை..
 
ஒருவன் சட்டையை பிடித்து தரைக்கு மேலிருந்து அவன் தலைக்கு மேல் தூக்கியவன்  நீதான் ரெண்டுமுனு நாளா என் வீட்ட நோட்டம் இடுறியா..??”
 
அ.. அண்ணே… தெரியாம பண்ணிட்டேன் இனி இந்தப்பக்கம் தலை வைச்சுப்படுக்க மாட்டேன்.. மன்னிச்சிருங்க..என்னை இறக்கி விடுங்கண்ணே..!!” காலில் விழாத குறையாக கெஞ்ச..
 
ஏன்டா இப்போ அண்ணனா..?? அப்ப என்ன சொன்ன குடிகார மட்டையா.. உன்ன..??” இன்னும் நாலுமிதி வைத்திருக்க கீழே விழுந்து கிடந்தவனோ எழவே இல்லை.. எழுந்தால் கண்டிப்பாக அடிவிழும்.. இனி ஒரு தரம் எங்கயாச்சும் உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன்.. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..
 
அவர்கள் அடிவாங்கும் சத்தம் அக்கம் பக்கத்தில் ஓரிருவருக்கு கேட்டாலும் கதவை திறந்து பார்த்தவர்கள் தீனாவை பார்க்கவும் பயந்து மீண்டும் கதவடைத்துக் கொண்டார்கள்..
 
ம்ம் ஓடுங்க.. அவர்களை தள்ளிவிட்டவன் சுற்றிக் கொண்டு வீட்டுக்கு வர அப்போதுதான் சுமதி குளித்துவிட்டு சேலையை மேலாக சுற்றிக் கொண்டு வந்தவள் தீனாவை எதிர்பார்க்காமல் அதிர்ந்து நிற்க அவளை ஒரு பார்வை பார்த்தபடி மீண்டும் மாடியேற துவங்கியிருந்தான்..
 
என்ன இவரு இந்தப் பக்கம் இருந்து வர்றாரு..?? தன்னை ஒரு முறை குனிந்து பார்த்தவளுக்கு உடல்முழுதும் சேலை சுற்றி முகத்தை தவிர எந்த பகுதியும் வெளியில் அதிகம் தெரியவில்லை.. நேரமானதை உணர்ந்து வேகமாக வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்…
 
என்றும் போல அன்றும் தன் வியாபாரத்தை தொடங்கியிருக்க எப்போதும் சாப்பிடவும் குழந்தையோடு பின்புறம் சென்று அமர்பவன் தன் கூட்டாளிகளுக்கு போன் செய்து சில கட்டளைகளை இட்டபடி வீட்டின் முன்புறம் வந்து அமர்ந்தான்.. 5..6 ஸ்டூல், இரு நீள நாற்காலி இவைதான் சாப்பிடுபவர்களுக்கு போடப்பட்டிருக்கும் .. காலை நேர டிபன் மட்டும் என்பதால் வெயில் அதிகம் வருவதற்குள் வேலை முடிந்துவிடும்..
 
தீனா கையில் குழந்தையோடு வாசல்படியில் அமர்ந்திருக்க சாப்பிடுவர்கள் சாப்பிட வாய் திறப்பதை தவிர வேறு எதற்கும் திறக்கவில்லை.. வேகமாக சாப்பிட்டு இடத்தை காலி செய்யத் துவங்கியிருந்தனர்… ஆண்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க பெண்களோ குசுகுசுவென தங்களுக்குள் சுமதியையும் தீனாவையும் பற்றி புரளி கிளப்ப தொடங்கியிருந்தனர்..
 
 அடிவாங்கியவர்களோ தீனா குடித்துவிட்டு வீணாக வம்பு செய்து தூங்கி கொண்டிருந்த தங்களை அடித்ததாக சொல்லியிருக்க அவன் மனைவிகளுக்கு தீனா மேல் அவ்வளவு கோபம்.. அவனிடம் நேராக எதுவும் கேட்கமுடியாது.. தங்கள் கணவன்மார்கள் வாங்கியிருந்த காயத்தை பார்த்திருந்தார்கள் தானே..
 
தங்களால் முடிந்த அளவு சுமதியையும் தீனாவையும் ஒன்று சேர்த்து இட்டுக்கட்டி பேசி வதந்தியை பரப்ப ஆரம்பித்திருந்தார்கள்.. தீனா இங்கு அமர்ந்திருப்பது சுமதிக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவங்க வீடுதான எங்க இருந்தா என்ன..?? அதோடு இவன் குழந்தையை கொஞ்சம் குரல்.. இந்த ஒன்றரை மாதங்களில் குழந்தைக்கும் இவன் குரலுக்கு நன்றாக பரிட்சையமாகியிருக்க அவனது கொஞ்சலுக்கெல்லாம் ஆ.. வூவென்று பதில் சொல்லிக் கொண்டிருந்தது.
 
சுமதி அடிக்கடி நினைத்துப்பார்ப்பாள்… அன்னைக்கு ராத்திரி மட்டும் நாம இவர பார்க்காம போயிருந்தா இன்னேரம்.. அந்த கோபிக்கிட்ட மாட்டியிருப்போமோ..?? இல்ல அத்தை, அண்ணி ரெண்டுபேரும் சேர்ந்து அந்த கிழவனுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைச்சிருப்பாங்களா..?? அந்த வாழ்க்கைக்கு இது எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றியது..
 
குழந்தையும் இவள் உயிராய் மாறியிருக்க ராசாத்தி அம்மாளை தாயாவே நினைத்தாள்.. தீனாவை பற்றி எதுவும் தோன்றியதில்லை.. அதைவிட இவர்கள் இருவரும் பேசுவது குறைவுதான்.. அவன்தான் அவளிடம் கோபமாக பேசுவானே தவிர இவள் அவனிடம் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்..
 
தன் வாழ்வில் மூன்று வகையான ஆண்களை சந்தித்திருந்தாள்.. அண்ணன் எப்போதும் பாசத்தை பொழிபவன்.. கோபி தன் நடிப்பால் இவளை ஏமாற்றியிருந்தான்.. தீனாவோ முரடன்.. முன்கோபி.. சுமதியை பொறுத்தவரை கோபியை விட நல்லவனென்றே தோன்றினாலும் அவன் நடிப்பில் ஏமாந்ததால் தீனாவிடம் ஒதுங்கியே இருந்தாள்..
 
அடிக்கடி அண்ணன் நினைவு வரும்.. அண்ணன் ஊர்ல இருந்து வந்து என்ன காணோம்னு எங்கலாம் தேடுச்சோ.. அண்ணன் பிள்ளைகளின் நினைவில் கண்கலங்கிவளை குழந்தையின் அழுகை குரல் திசை திருப்ப அதற்கு பசிநேரம் அறிந்து பாலை வேகமாக ஆற்ற துவங்கியிருந்தாள்..
 
ராசாத்தி அம்மாள் தன் வாடிக்கையை முடித்து வந்திருக்க என்ன தீனா இங்க இருக்க.. சாப்பிடியா..??”
 
ஒன்றும் சொல்லாமல் அவரை முறைக்கவும்..
 
இவன் ஏன் நம்மள முறைக்கிறான்.. என்ன தீனா..??”
 
குழந்தையை அவர் கையில் திணித்தவன் மீண்டும் போனெடுத்து ஏதோ கோபமாக பேச ஆரம்பித்துவிட்டான்.. இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்தாரு…. அம்மாவ பார்க்கவும் ஏன் இப்படி கோபப்படுறாரு.. அம்மா நீங்க சாப்பிடுங்க.. நேரமாச்சு..
 
தன் வாடிக்கை கணக்கை சுமதியிடம் கொடுத்தவர்.. இவனுக்கு என்னாச்சு சுமதி..??”
 
தெரிலம்மா.. நல்லாத்தான் இருந்தாரு..??”
 
அங்கு தீனாவின் கூட்டாளிகள் மூவரும் ஓரிடத்தில் கூடியிருக்க அவர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..
 
என்னங்கடா உங்களுக்கும் போன் வந்துச்சா…??”
 
ஆமாடா.. இவ்வளவுநாள் இல்லாம இப்ப என்ன அந்த வீட்டுக்கு ஜன்னல் போடனும்னு அவசரம் .. இதுவரைக்கும் கொடுத்த காச கேட்காம இருந்தவரு.. இப்ப என்னடாண்ணா உடனே கொண்டு வான்னா எங்க போறது..  நீ என்னடா பேசாம இருக்க..!!”
 
இல்ல இப்ப நாம அவரு கேட்கிற பணத்தை கொடுத்துட்டு வர்றதுதான் நல்லதுனு தோனுது.. நாம வம்பு பண்ணினா இதுவரை எவ்வளவோ கொடுத்திருக்காரு அப்புறம் எல்லாம் கேட்க ஆரம்பிச்சா பிரச்சனை பெருசாகிரும்..
 
மற்ற இருவரும் யோசிக்க அதுவே சரியென்று தோன்றியது.. அவன் சம்பாரித்ததில் தனக்கென்று கொஞ்சமே எடுத்துக் கொள்பவன் இவர்களிடம்தான் மொத்த பணத்தையும் கொடுப்பான்.. அதுபோக குடும்ப செலவு நல்லது கெட்டது என அவன் வைத்திருக்கும் பணத்தையும் இவர்களே கடன் போல அவனிடம் வாங்கிச் சென்றிருக்க இப்போது அவனிடம் அதிகமாக பணம் இல்லை….
 

Advertisement