Advertisement

தீனாவின் கோபக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் தீனாவின் வீட்டை நோட்டமிட கதவு, ஜன்னல் இல்லை.. எந்த பக்கமிருந்து பார்த்தாலும் தீனா சுமதியின் மிக அருகில் நிற்பது தெரியும்..
 
நான் சொன்னா என்கிட்ட கேளு தீனா..?? சுமதி நீ உள்ள போ..!!”
 
அம்மா என்னால ஏதும் பிரச்சனையா..?? நான் வேணா பாப்பாவோட எங்காச்சும் போயிருறேன்.. நீங்க ரெண்டுபேரும் இவ்வளவு நாள் எனக்கு பண்ணின உதவியே பெரிசு.. இனி எப்படியாச்சும் என்வழிய பார்த்துக்குறேன்.. எனக்காக சண்டைப்போடாதிங்க.. குழந்தையின் அருகில் வந்து தொட்டிலை தொடப்போக.. அவள் கையில் சுள்ளென்ற ஒரு அடி வைத்திருந்தான்..
 
ஏய் பிள்ளைய ஏன் இப்ப தூக்கப்போற..?? பே.. !!”
 
ராசாத்தி அம்மாள் சுமதியிடம் வந்தவர் நீ உள்ள போ சுமதி.. பேத்திக்குட்டி அழுதா நான் கொண்டு வந்து தர்றேன்.. வெளியில் காய்ந்த துணிகளை அள்ளி சுமதியிடம் கொடுக்க அறைக்குள் கொண்டு சென்றவள் அதை மடிக்கத் துவங்கியிருந்தாள்…
 
நான் பேசினா என்கிட்ட பதில் சொல்லு தீனா .. அந்த பொண்ண ஏன் முறைக்கிற..?? வந்த நாள்ல இருந்து சாப்பிட மட்டும்தான் வாய்திறக்குது.. இந்த வயசில புருசன இழந்திட்டு.. இந்த கைப்பிள்ளைய வைச்சுக்கிட்டு போக்கிடம் இல்லாம இருக்கு.. உன் கோபத்த அந்த பொண்ணுக்கிட்ட காட்டாத..??”
 
இந்தா நான் என்ன பண்ணினேன் அந்தப்புள்ளைய…?? என்னாலதான் கத்திக்குத்து வாங்குச்சேன்னு இங்க கூட்டியாந்தது தப்புன்னு சொல்றியா..??”
 
தப்புன்னு சொல்லல..?? ஆனா உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க கூடாது..
 
இந்தா கிழவி என்னதான் உன் பிரச்சனை..?? அத சொல்லு மொதல்ல.. ?? சும்மா சுத்தி வளைச்சிட்டு இருக்காம…!!”
 
உன் கூட்டாளி பயலுக எல்லாம் எங்க..??”
 
ம்ம்ம் எதுக்கு அவனுக..??  அவனுக ஏரியாவுல திருவிழாவாம் அதான் அங்க போயிருக்கானுக..”
 
நீ ஏன் அங்க போகல..??”
 
அடச்சே அங்க அவனுக பொண்டாட்டி பிள்ளைக…?? வயசுக்கு வந்த தங்கச்சிக எல்லாம் இருக்கும்.. நான் எப்போ அங்க போயிருக்கேன்..
 
அங்க மட்டும்தான் பொம்பளைக இருக்காங்களா..?? இந்த வீட்ல நானும் சுமதியும் யாரு…?? நான் கூட கிழவி.. என்னை விடு.. அந்த பொண்ணப்பாரு.. வீட்டுக்குள்ள கூட நடமாட முடியாம யார் எப்ப.. எந்த ரூமுக்குள்ள வருவானுகன்னு தெரியாம உட்கார்ந்துட்டே இருக்கு.. இதுக்கு என்னோட வீட்டுக்கு கூட்டி போயிருந்தா நாங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருந்திருப்போம்.. அதான் சொல்றேன் நாங்க கிளம்புறோம்.. பாப்பாவ தூக்கிட்டு..!!”
 
இந்தா அவனுகளா இந்த புள்ளைய வெளியில வரவேணான்னு சொன்னாங்க.. இது ஒரு மங்கி சொங்கி அதான் இப்படி சோம்பேறியா ஒரே இடத்துல இருக்கு.. சும்மா அவனுகள கொற சொல்லாத..!!”
 
நான் அவனுகள குறை சொல்லல..?? நாங்க ரெண்டுபேரும்தான் இந்த வீட்டவிட்டு போறோம்னு சொல்றோம்.. சுமதி துணிகளை மடிச்சிட்டினா கிளம்புத்தா நாம போவோம்..
 
இன்னும் கோபமானவன் பல்லை கடித்தபடி ரெண்டுபேரும் எங்கவேணா போய்த் தொலைங்க..?? இந்த பாப்பாவும் உங்க கூட வந்து கஷ்டப்பட வேணாம்.. என்கிட்ட விட்டுட்டு போங்க..!!”
 
எதுக்கு ..?? இல்ல எதுக்குன்னு கேக்குறேன்…?? புருசனும் இல்லாம.. சொந்த பந்தமும் இல்லாம இந்த பச்சபுள்ளதான் ஆதரவுன்னு அந்த பொண்ணு உசிரோட இருக்கு .. அத உன்கிட்ட கொடுத்திட்டு மறுபடி அந்த பொண்ணு அனாதையாகவா..!! அதோட பெத்தவளுக்கு இல்லாத உரிமையா உனக்கு இருக்கு..??
 
இதே இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் என்ன நடக்கும்னு..!! இந்த ஏரியாவுல பொம்பளைங்க சண்டைப்போட்டுத்தான் நீ பார்த்திருப்பியே..?? எப்படியெல்லாம் வாய் பேசுவாக..?? ஆனா இந்த புள்ளைய பாரு. பார்க்கவே பாவமா இருக்கு.. பச்சை உடம்புக்காரி, அதோட உடம்பு சரியில்லாத பொண்ணு.. நினைச்ச நேரம் கொஞ்சநேரம் படுக்க முடியுதா..??
 
தடி தாண்டவராயனுக.. பெரிய வேலை கிழிக்கிற மாதிரி உள்ளேயும் வெளியேயும் வந்துட்டு வந்துட்டு போறானுக..?? இப்பதான் உனக்கு உடம்பு சரியில்லையில்ல.. நீ நல்லா ஆகிறவரைக்கும் வராம இருந்தா என்ன கேடு அவனுகளுக்கு…??”
 
ஏய் இம்சைப்படிச்ச கெழவி அவ வாய் பேசாததுக்கும் சேர்த்து உன்னை பேச சொல்லியிருக்காளா..?? கொன்னுருவேன் பார்த்துக்கோ..??”
 
கொல்லு.. கொன்னுட்டு தூக்கிப்போடு..!! கொள்ளிவைக்க ஆள் இல்லாத அனாதை கிழவிதான நான்..?? அதான் இப்படி பேசுற..?? ஆனா என்னோட மகளா பார்க்கிற அந்த பொண்ண நான் அனாதையா விடுறதா இல்ல.. சுமதி கிளம்பிட்டியா.. வா வந்து பாப்பாவ தூக்கு..!!”
 
சுமதி குழந்தையை தூக்க வர வெடுக்கென அவள் கையை தட்டிவிட்டு குழந்தையை தான் தூக்கியிருந்தான்..
 
இதெல்லாம் ரொம்ப தப்பு தீனா.. புள்ளைய பெத்தவ கையில கொடு..?? பச்ச புள்ளைய உன்னிஷ்டத்துக்கெல்லாம் தரமுடியாது.. என்ன பார்க்கிற சுமதி வாங்கு பேத்திய…?? நாம போவோம் என் வீட்டுக்கு..!! என்ன கொஞ்சம் கொசு தொல்லை.. போகும் போது மறக்காம விசிறி ஒன்னு வாங்கிக்கனும் .. அங்க இந்த ஃபேன் கீன் எதுவும் இல்ல.. இப்பவே வேர்வைக்கும் கொசுக்கடிக்கும் பழகிகட்டும்.. புள்ளைய வாங்கு கிளம்புவோம்..
 
தன்னை நோக்கி வந்தவளை முடிந்த மட்டும் முறைத்தவன் பல்லை கடித்தபடி இப்ப என்னதான் சொல்லவர்ற கெழவி..??”
 
என்ன சொல்ல வர்றேன்.. நாங்க இங்க இருக்கனும்னா இந்த கூட்டாளி கீட்டாளிலாம் வீட்டுக்கு வெளியிலதான்… மீறி எவனாச்சும் இங்க வந்தா நாங்க பாப்பாவ தூக்கிக்கிட்டு என் வீட்டுக்கு போயிருவோம் பார்த்துக்க..!!”
 
வெசம் வெசம் உடம்பெல்லாம் வெசம் ரெண்டுக்கும்.. ஏய் என்ன புள்ள பார்க்கிற..?? போய் தொல வீட்டுக்குள்ள..!! எந்த பயலும் இனி இங்க வரமாட்டானுக.. நீயும் கெழவியும் மட்டும் நல்லா ஜங்கு ஜங்குன்னு குதிங்க.. ஆளும் மொகரையும் பாரு..
 
தங்கம் நீ வாடா.. நாம வெளியில போய் வேடிக்கை பார்ப்போம்.. இந்த ரெண்டு குரங்கு முகத்தையும் பார்க்க வேணாம்.. அவ்வளவு பெரிய யானை தன் பாகனிடம் அடங்குவதை போல இந்த ஆறடி மனிதன் பிறந்த குழந்தையின் முகம் பார்த்து தன் சுயத்தை தொலைக்க ஆரம்பித்திருந்தான்..
 
அதன் பின் நாட்கள் வேகமாக செல்ல சுமதிக்கு இந்த வீடு கொஞ்சம் கொஞ்சமாய் பழக துவங்கியிருந்தது.. சுமதியின் உடல்நிலையும் வேகமாக முன்னேற.. இப்போது பாதி வேலையை கையில் எடுத்திருந்தாள்.. இட்லி வியாபாரத்தில் வரும் லாபத்தை உணர்ந்தவள் அதோடு இப்போது பொங்கல் பூரி என சேர்த்து சமைக்கத் துவங்கியிருக்க அவளின் கைமணத்தில் வியாபாரமும் நன்றாகவே இருந்தது..
 
தீனா எப்போதும் காலை ஒன்பது மணிக்கு மேல் தான் மாடியில் இருந்து இறங்கி வருவான்.. அதற்குள் சுமதி முக்கால்வாசி வியாபாரத்தை முடித்திருப்பாள்.. ராசாத்தி அம்மாள் தன் வாடிக்கையாளர்களுக்கு இட்லியை அவர்கள் வீட்டிலேயே கொண்டு போய் கொடுக்கத் துவங்கியிருந்தார்… தீனாவின் அடாவடி குணம் அறிந்தோ என்னவோ சாப்பிட வருபவர்கள் வேறு எந்த வம்பும் இல்லாமல் சீக்கிரமாகவே இடத்தை காலிசெய்து விடுவார்கள்..
 
தீனா கீழே வந்தால் உள்ளே அவனுக்கு சாப்பாடு தயாராக இருக்கும் ஏற்கனவே தனியாக எடுத்து வைத்திருப்பாள்.. அதை தானே வைத்து சாப்பிடுபவன் குழந்தையோடு ஒன்றி விடுவான்.. பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் ஒன்று போடப்பட்டிருக்க அங்கே போய் அமர்ந்து கொள்வான்.. தீனாவின் கூட்டாளிகள் இப்போது வீட்டிற்கு வருவது இல்லை.. ஆனால் ஏதாவது முக்கியமான விசயமாக வந்தால் சுமதியை கோபமாக முறைப்பது போலிருக்கும்..
 
இதுவரை தாங்கள் ஆட்சி செய்த வீடு..  தீனாவின் உழைப்பில் உண்டு கொழுத்திருந்தவர்கள்.. இப்போது வரமுடியாமல் இருக்க அதற்கு காரணமான சுமதி மேல் காழ்ப்புணர்ச்சியும் சேர்ந்தே வளர்ந்திருந்தது..
 
அதைவிட புருசன் செத்தாலும் இவ ஆளு சும்மா தளதளன்னுதான் இருக்கா.. ஒவ்வொருவர் பார்வையும் சுமதியை அங்குலம் அங்குலமாய் நோட்டமிட்டது.. கூட்டாளிகள் மட்டுமில்லாமல் அந்த தெருவாசிகளும் சுமதியை நோட்டமிட துவங்கியிருந்தனர்..
 
ராசாத்தி அம்மாள் இரண்டு மூன்று சேலை வாங்கி கொடுத்திருக்க .. அது மட்டும்தான் வேறு எந்த அலங்காரமும் இல்லை..காது, கை, நெற்றி என அனைத்தும் வெறுமையாய்.. கன்னி பெண்ணாக இருந்தாலும் விதவை கோலத்திலேயே இருந்தாள்.. கன்னியாக இருந்த போது இல்லாத பாதுகாப்பு இந்த கோலத்தில் தனக்கு கிடைக்குமென்று நம்பினாள்..
 
ராசாத்தி அம்மாவிடம் சொல்லி ஒரு பழைய தையல் மெசினை வாங்கி தர சொல்லியிருக்க அவரின் பழைய சேலைகள் எல்லாம் இப்போது திரையாக மாறியிருந்தது.. ஜன்னல் , கதவு என எல்லா இடங்களிலும் திரை போட்டிருந்தாள்..
 
சுமதி இங்கு வந்து முழுதாக ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.. தீனாவும் ஓரளவிற்கு நன்றாக தேறியிருக்க குழந்தை அவன் உயிராகியிருந்தாள்.. ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்று காரணம் கேட்டால் தெரியவில்லை..!!
 
அன்று விடிகாலை மணி மூன்றிருக்கும்.. பாத்ரூம் போக எழுந்தவனுக்கு ஏதேதோ பேச்சுக்குரல் மெலிதாக கேட்க… யாரு இன்னேரத்தில..?? மாடியில் இருந்து தன் வீட்டை சுற்றிப்பார்க்க அந்த நிலா வெளிச்சத்தில் உள்ளுக்குள் படுத்திருந்த சுமதியை வெறித்தபடி இரு உருவங்கள் ஜன்னலுக்கு வெளியில்…!!!
 
                                                          இனி………………???

Advertisement