Advertisement

எனை மாற்றிய தருணம்
                          அத்தியாயம் – 7
 
தீனா சுமதியோடு வீட்டிற்குள் நுழைய ஏதோ பழைய சாமான்கள் வைத்திருக்கும் கடைக்குள் நுழைந்தது போல் இருந்தது.. இதென்ன வீடா..?? இந்த வீட்ட வைச்சிக்கிட்டா இவரு இங்க வாங்க இங்க வாங்கன்னு இவ்ளோ பில்டப் விட்டாரு..!!
 
வீடென்னவோ பெரிதாகத்தான் இருந்தது.. ஆனால் செங்கலும் மணலும் மட்டும் வைத்துக் கட்டியபடி மட்டும் இருக்க பூச மறந்து விட்டார்களோ..?? தரையிலும் சிமெண்ட் தளம் முழுவதும் வழுவழுப்பாக போடாமல் மேலோட்டமாக போட்டிருக்க கை வைத்தாலே அதிலிருந்த கல்லெல்லாம் சுள்ளென்று குத்தியது..  
 
எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை கூளங்கள்.. அவனின் துணிகள்.. குடித்துவிட்டு போட்ட பாட்டில்களே ஒரு அறையை அடைத்திருந்தது. முக்கியமாக வீட்டிற்கு கதவு இல்லை.. நிலை மட்டும் வைத்திருக்க கதவு போட மறந்துட்டாங்களா..?? ஜன்னல்கள் வைக்கப்பட்டிருக்க அதில் கதவுகள் இல்லை ..
 
இதுல எப்படி மனுசன் குடியிருக்கிறது…!! பத்துக்கு பத்து இரு அறைகள் ஒரு ஹால் ஒரு கிச்சன் என்ற அமைப்பில் இருந்தது வீடு.. இந்த ஏரியாவை பொருத்தவரை பெரிய வீடுதான்.. காம்புவுண்ட் இல்லை.. வாசலில் போவோர் வருவோர் கூட வீட்டுக்குள் இருப்போரை பார்க்கலாம்..!!
 
ஏய் என்ன புள்ள இப்படி பார்க்கிற..?? முன்னப்பின்ன வீட்டயே பார்த்ததில்ல..?? ஆளப்பாரு.. அந்தா அந்த ரூம்ல இருந்துக்கோ..?? இந்த வீடுபுல்லா நீயும் உன் மகளும் இருந்துக்கோங்க.. நான் மாடியிலயே படுத்துக்குவேன்.. மழைக்காலம் மட்டும்தான் கீழ வருவேன் ..!!”
 
ராசாத்தி அம்மாளை பார்த்தவன் நீ ஒரு ரூம எடுத்துக்கோ…??”
 
ஹாலில் மட்டும் தொட்டில் கட்டுவதற்கு கம்பி இருக்க இங்க பாப்பாக்கு தொட்டில் கட்டித்தரச்சொல்லு அவனுகள..??”
 
வீட்டை சுற்றிப்பார்த்தவளுக்கு கண்ணைக்கட்டியது.. இதென்ன பாதி வீடு கட்டிட்டு இருக்கும்போது குடி வந்துட்டாங்களா..?? ஆனா இந்த வீடு கட்டியே கிட்டத்தட்ட அஞ்சாறு வருசம் இருக்கும் போல..!! மருந்துக்கும் சாமி படம் என்று ஒன்றையும் காணவில்லை..
 
சுத்திலும் நாலு சுவரு… அது மட்டும் தான் ஒரு கதவு இல்ல.. ஜன்னல் இல்ல.. டாய்லெட் மட்டும் இருக்க பாத்ரூம் இல்லை.. தண்ணீரும் வெளியில்தான் தூக்கவேண்டும் போல.. வாசலில் இரு வீடு தள்ளி தெருகுழாய் இருந்தது.. பெரிய தர்மப்பிரபு..!! இந்த ஓட்ட வீட்ட கொடுத்துட்டு என்னா அரட்டு அரட்டுறாரு..?? ஓவருதான்..??
 
இருந்த அறைகளில் ஒன்றை ராசாத்தி அம்மாள் முடிந்த அளவு சுத்தப்படுத்திக் கொடுக்க அதற்கே அவருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.. இதுல எப்படி பிள்ளைய வைச்சுக்கிட்டு இருக்க முடியும்..
 
எந்த நேரமும் பிள்ளைய தொட்டிலில் போட்டு ஆட்ட முடியுமா..?? இல்ல கையிலயே வைச்சிக்க முடியுமா..?? மறந்தும்கூட தரையில படுக்க வைக்க முடியாது போலயே..!! பிள்ளைக்கு ஒரு சின்ன மெத்தையாச்சும் முதல்ல வாங்கனும்..
 
தீனாவின் கூட்டாளிகள் ராசாத்தி அம்மாளின் சாமான்களை கொண்டு வந்திருக்க.. கொஞ்ச பொருட்கள் தான்.. அதனை ஓரமாக வைக்கச் சொன்னவர் தன்னுடைய சேலையில் ஒன்றைக்கொடுத்து பிள்ளைக்கு தொட்டில் கட்டச் சொன்னார்.. ஹாஸ்பிட்டலில் இருந்தவரை சுமதிக்கு அந்த பெண் கொடுத்த நைட்டியே போடச் சொல்லியிருக்க.. இன்றுதான் தன்னுடைய சேலை சட்டை ஒன்றைக் கொடுத்துக் கட்டச் சொல்லியிருந்தார்.
 
தன்னிடம் இருந்த பணத்தை கணக்கிட குறைவாகவே இருந்தது.. கிட்டதட்ட பத்து நாட்களுக்கு மேலாக இட்லி வியாபாரம் செய்யவில்லை..  தீனாவிடம் இரண்டு மூன்று தண்ணீர் குடங்கள் நான்கைந்து டம்ளர் இரண்டு சாப்பாட்டு தட்டு இது தவிர சாமான்கள் ஏதும் இல்லை..மளிகை சாமான்கள் என்று ஏதும் இல்லை..
 
தன்னிடம் இருந்த பொருட்களை வைத்து சாதமும் ஒரு குழம்பும் செய்தவர் குழந்தைக்கு பாலை கொடுத்து தூங்க வைத்து சுமதிக்கு ஒரு அறையில் பாய்விரித்து கொடுத்து சில பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருக்க தனியாக இருக்க சுமதிக்கு ஏனோ பயமாக இருந்தது..
 
தீனாவை வெளியில் காணவில்லை.. ஆனால் அவன் கூட்டாளிகள் அடிக்கடி உள்ளே வந்து போக இருக்கவும் கதவு இல்லாமல் குழந்தை ஹாலில் படுத்திருப்பதால் குழந்தையை மட்டும் தனியாக விட்டு அறைக்குள் செல்ல மனதில்லாமல் அங்கேயே பாய்விரித்து அமர்ந்திருந்தாள்.. வயிற்றில் சுருக் சுருக்கென  வலிதான் ஆனால் ஏனோ படுக்க மனதில்லை..
 
 படுத்தால் எங்கே சேலை விலகிருமோ..?? அடுத்தவர் பார்வைக்கு தப்பாகிவிடுமோ..?? தயங்கியவள் வலியை பொறுத்து அமர்ந்திருந்தாள்.. வேலை செய்தே பழகிய உடம்பு இப்படி அமைதியாய் ஓரிடத்தில் இருக்க முடியவில்லை.. அதைவிட போகும் போதும் வரும்போதும் அவர்களின் குறுகுறு பார்வை அவளை ஏதோ செய்ய குனிந்த தலை நிமிரவில்லை..
 
அடுத்தவர் பார்வைக்கு விருந்தாக இப்படி அமர்ந்திருக்க விருப்பம் இல்லை.. ஆனால் போக்கிடம்தான் இல்லையே..?? தான் வீட்டை விட்டு எதற்காக வந்தோம்..!! இப்படி யாரென்றே தெரியாதவங்க வீட்ல இருக்கோம்.. ராசாத்தி அம்மாள் வெளியில் சென்று ஒருமணி நேரம் சென்றிருக்க குழந்தை பசியில் லேசாக சிணுங்க துவங்கியது..
 
குழந்தைக்கு பாலை ஆற்றி கொடுக்கலாம் மெதுவாக எழப்போக.. எங்கிருந்துதான் குழந்தையின் சிணுங்கலை உணர்ந்தானோ அடுத்த நிமிடம் குழந்தை அருகே வந்திருந்தான்..
 
ஏய் நீ ஏம்புள்ள எந்திரிச்ச..?? போத்தா பரதேவதை போய் படு..?? அப்புறமா அதுக்கும் நாளு நாளைக்கு சுயநினைவு இல்லாம கிடக்காம..!! போ தாயி ..??”
 
அவளை முறைத்தவன் அவள் கையிலிருந்த வென்னீர் பிளாஸ்க்கை வெடுக்கென பறிக்க பிளாஸ்க்கை விட்டாலும் மனதிற்குள் ஏனோ நிம்மதி..!!
 
இங்கனதான் இருந்தாரா..?? எங்க இருந்திருப்பாரு..?? நான் குழந்தையை தூக்கப்போனா மட்டும் இவருக்கு ஏனாம் இவ்வளவு கோபம் வருது..!! பார்க்க பூச்சாண்டி மாதிரி இருந்துக்கிட்டு பேச்சப்பாரு..?? அவன் கூட்டாளிகளை பார்த்த போது இருந்த பயமும் தயக்கமும் இப்போது இல்லை…
 
அவனது உயரமான, அகலமான உடற்கட்டோ அதில் காயத்தால் ஆங்காங்கே போடப்பட்ட கட்டு முகமெங்கும் தாடி தோள்வரை வளர்ந்த பரட்டை தலை என ஒரு ரௌடிக்கே உரிய உருவமோ, கோபக்குரலோ அவளை பயமுறுத்தவில்லை.. முதல்நாளில் இருந்து அவனின் கோப முகத்தை பார்த்தவள் தானே ..?? ஹாஸ்பிட்டலிலும் அவனின் கோபக்குரல் ஒலித்தபடி இருக்கே அதற்கே பழகியிருந்தாள்..
 
கோபியின் அழகை பார்த்துதான் அவன் குணத்தை கணக்கிடாமல் விட்டுவிட்டோமோ..!! அழகிற்கும் குணத்திற்கும் என்ன சம்பந்தம்.. ?? நல்லவேளை அண்ணன் மட்டும் அவன பத்தி கொஞ்சம் சொல்லியிருக்காட்டா என் வாழ்க்கை இன்னேரம் சிக்கி சீரழிஞ்சு போயிருக்கும்.. ஏதேதோ எண்ணம் அவள் மனதில்…
 
தீனா வென்னீரில் பால் பவுடரை போட்டு ஆற்றிக் கொண்டிருக்க அதை கவனித்தவள் சுத்தப்படுத்தியிருந்த அறைக்குள் நுழைந்து பாயில் படுத்துக் கொண்டாள்.. தரை வழுவழுப்பாய் இல்லாமல் முதுகு கரடு முரடாய் உருத்தினாலும் இவ்வளவு நேரம் இருந்த களைப்பில் கண்மூடியிருந்தாள்..
 
ச்சோ… ச்சோ.. செல்லக்குட்டி வாங்க.. பசிக்கிதுதா உங்களுக்கு..?? பால் குடிக்கலாம் வாங்க.. அச்சோ மூச்சா போயிட்டிங்களா..!!” வெளியில் தீனா தன் கட்டைக்குரலில் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க…
 
குழந்தையை அவன் தூக்கும் போதெல்லாம் ஒரு பெரிய பருந்து சிறிய கோழிக்குஞ்சை தூக்கியிருப்பது போல உருவகம் இருந்தாலும் குழந்தையை அவ்வளவு பாதுகாப்பாக தூக்கியிருந்தான்.. அரிவாளை மட்டுமே பிடித்த கை இப்போது குழந்தையின் மென்மைக்கும் பழகத்துவங்கியிருக்க அவளிடம் பேசும் போது அவ்வளவு கோபமாய் ஒலிக்கும் குரல் இப்போது மிருதுவாய் குழந்தையை கொஞ்சியது.. தீனாவிடம் இருந்ததாலோ என்னவோ குழந்தையை பற்றிய கவலை இல்லாமல் சுமதிக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது..
 
அடுத்த ஏழெட்டு நாட்கள் வேகமாக சென்றிருக்க ராசாத்தி அம்மாளுக்குத்தான் வேலை பளு அதிகம்.. அங்கேயே தன் இட்லி கடையை போட்டிருக்க வீடுவீடாக  சென்று கொடுக்க முடியவில்லை.. குழந்தையை பார்த்து கொள்வது சுமதியை கவனித்துக் கொள்வது அதோடு கடை வேலை என அவருக்கு 24 மணி நேரம் பத்தாமல் இருக்க சுமதிக்கே அவரை பார்த்து பாவமாக இருக்கும்..
 
பெற்ற தாயை விட ஒரு படி மேலேயே கவனித்துக் கொண்டார்.. குழந்தை எந்த நேரமும் தீனாவிடம் தான்.. தூங்கும் நேரம்தான் தொட்டிலில்.. இப்போது ஓரளவிற்கு சுமதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. அன்று மாலை நான்கு மணியிருக்கும் சுமதி உள்ளறையில் படுத்திருக்க வெளியில் தீனா ராசாத்தி அம்மாளோடு சத்தமாக பேசும் குரல் ஒலிக்க ஏன் இப்படி கத்துறாங்க..??  ப்பா ஒரு மனுசனுக்கு எல்லாத்துக்குமா கோபம் வரும்..!!
மெதுவாக வெளியில் வர தீனாதான் ராசாத்தி அம்மாளிடம் சண்டைப்போட்டு கொண்டிருந்தான்..
 
இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற..??”
 
நான் ஏதும் சொல்லல தீனா..??” ராசாத்தி அம்மாளின் முகமும் கோபமாய்தான் இருந்தது..
 
அப்போ இப்ப என்ன கேடு வந்துச்சுன்னு பாப்பாவ தூக்கிட்டு உன் வீட்டுக்கு போறேன்னு சொல்ற..?? ஏன் இந்த வீட்ட விட உன்வீடு பெரிய மாளிகையோ..??”
 
மாளிகையோ இல்லையோ ஆனா அந்த பொண்ணு சந்தோசமா இருக்கும்..
 
வெளியில் வந்த சுமதியை முறைத்தவன் அவளிடம் அடிப்பது போல செல்ல ஏனோ அவளும் அப்படியே அசையாமல் நின்றாள்.. இந்த வீட்ல உனக்கு என்னப்பிரச்சனை..?? ஏன் சந்தோசத்துக்கு என்ன கேடு..??”
 

Advertisement