Advertisement

சுமதிக்கு இப்போதுதான் குழந்தை தன்னுடைய குழந்தை என்று நினைத்து பேசுறாங்களோ.. ?? இதுல புருசன் வேறயா..?? அன்று தன் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தவள் நாம எதுக்கு வீட்டவிட்டு வந்தோம்..??  இன்னேரம் அண்ணே வந்திருக்குமா… நம்மள காணோம்னு தேடுமா..?? அண்ணனின் நியாபகத்தில் கண்ணீர் ஊற்ற… ராசாத்தி அம்மாளுக்கோ சுமதியை பார்த்து ஒரு சந்தேகம் கழுத்துல தாலியில்ல மெட்டி, வளையல்ன்னு எதுவுமே காணோம்.. காதுல கூட ஒரு தோடு போடல நெற்றியை பார்த்தவர் அதுவும் வெறுமையாக இருக்க ஒரு வேள இந்த பொண்ணு……!!!
 
ஏன் தாயி அழுகுற..?? உன் பிள்ளைக்கு அப்பா எங்கத்தா..??”
 
பிள்ளைக்கு அப்பாவா…!! அவர் யாருன்னே எனக்கு தெரியாதே… சற்று யோசித்தவள்  எங்களுக்குன்னு யாருமே இல்லமா நாங்க ஒரு அனாதை..??”
 
ஆத்தா அப்படிலாம் சொல்லாத..?? நாங்களாம் இருக்கோம்.. தயங்கியவர்.. உன் புருசன் இல்லையாத்தா..?? என்னாச்சு அவருக்கு..?? துணைக்கு வேற யாரும் இல்லையா.. பொறந்தவீடு புகுந்த வீடுன்னு ஒருத்தர் கூடவா இல்ல..??”
 
 இல்லாத புருசன் ..அதுல அவன் செத்துப் போயிட்டானா .. இல்லம்மா யாருமே இல்லாதவங்கதான் நாங்க.. வேணான்னுதான பிள்ளைய கோவில்ல போட்டுட்டு போயிருப்பாங்க.. இனி தேடியா வரப்போறாங்க..
 
சுமதியின் முகத்தையே பார்த்திருந்த ராசாத்தி அம்மாளுக்கு அவளை மிகவும் பிடித்துவிட அடிக்கடி அவள் முகத்தில் தெரியும் கள்ளமில்லா சிரிப்பு.. அவள் மேல் அளவில்லா பாசத்தை துவக்கியிருந்தது..
 
சரித்தா சரித்தா நீ கவலைப்படாத.. எல்லாம் சரியாகும் நானும் அனாதைதான் இத்தனை வருசமா காலத்தை ஓட்டலையா..?? இப்ப மக மாதிரி நீ வந்திருக்க உனக்கென்ன இளவரசி போல ஒரு புள்ள பிறந்திருக்கு..
 
சுமதிக்கே இப்போதுதான் இந்த குழந்தை பெண் என்று தெரிய தன்னைப்போல் கஷ்டப்பட மீண்டும் ஒரு பெண் குழந்தையா..?? இல்ல என்ன சாகவிடாம தடுக்க வந்த தேவதையா…!! முகத்தில் புன்சிரிப்பு..
 
பாப்பாவ நான் பார்க்கனும் தூக்கிட்டு வர்றிங்களாம்மா..??”
 
ம்ம் இதோ போறேன்த்தா..??” குழந்தையை தூக்கிவரவும் மெதுவாக எழுந்து அமர போனவளை தடுத்தவர் ,
 
வயித்துல தையல் போட்டிருக்கு ஒரு மாசத்துக்கு குழந்தையை தூக்குற வேலை எல்லாம் வேணாம்… கொஞ்சம் கவனமா இருக்க சொல்லியிருக்காங்க.. என்ன பிள்ளைக்குத் தாய் பால்தான் கொடுக்க முடியாது.. வயித்துல தையல் போட்டிருக்கும் போது எப்படி கொடுக்க முடியும்.. புள்ள கால் பட்டு தையல் ஏதும் பிரிஞ்சிறாம..??”
 
இது அரசு மருத்துவமனையாக இருந்ததால் எந்த நேரமும் ஒரே கூட்டமாக இருக்கவும் பெரும்பாலும் குழந்தை ராசாத்தி அம்மாளிடமும் தீனாவிடமும் இருக்கவே இது சுமதியின் குழந்தைதான் என இவர்கள் நம்பிக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியவே இல்லை..
 
ராசாத்தி பேசிக் கொண்டிருக்க சுமதிக்கு குழந்தைக்கு நான் தாய்பாலா..?? ஒரு மாதிரி முழித்துக் கொண்டிருக்கும் போதே தீனா உள்நுழைந்திருந்தான்..
 
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.. இவனாலதான அன்னைக்கு நம்மளையும் கத்தியால குத்தினாங்க..?? ப்பா இதென்ன உடம்பெல்லாம் இவ்வளவு கட்டு.. அப்படி இருந்தும் எப்படி எழுந்து நடந்து வர்றாரு.. ஹா ஹா சோளகாட்டு பொம்மை போல இருக்காரு.. என்ன இவ்வளவு பெரிய சோளக்காட்டு பொம்மைதான் இருக்காது..சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டாள்..
 
என்ன புள்ள எப்படி இருக்கு உடம்புக்கு…?? லேசான கத்திக்குத்துதான அதுக்கே மூனுநாளு சுயநினைவு இல்லாம கிடப்பியா..?? ஆளும் மண்டையும் பாரு.. சீக்கிரமா எழுந்து உக்காருற வழிய பாரு..??”
 
ஏப்பா அதுவே பாவம் அடிப்பட்டு கிடக்கு அதப்போய் ஏன் தம்பி வையிற..?”
 
ஆமா வையிறாக..?? அதான் ஓடுன்னு சொன்னேன்ல ஓடாம நின்னா குத்தாம என்ன பண்ணுவாங்க.. சரி சரி அன்னேரத்துல நீ ஏன் அங்க வந்த..?? உன் வீடு எங்க இருக்கு.. சொல்லு… உன் புருசன் பேரு என்ன போன் நம்பர் வைச்சிருக்கியா..??” ஓங்கி அதட்டிக் கொண்டிருக்க சுமதிக்கு அழுகை போல இருந்தது.. கீழ தள்ளிவிட்டு கத்தி குத்து வாங்க விட்டதும் இல்லாம எப்படி பேசுறாரு..?? இவருக்கு போய் பாவம் பார்த்து கையெலாம் கொடுத்து தூக்கிவிட்டோம்ல அதான் நமக்கு இந்த நிலைமை..!!
 
ஏய் இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்படி அழறமாதிரி முகத்தை வைச்சிருக்க..?? மூஞ்சியும் மொகரையும் பாரு.. போடி.. அவளை முறைத்தபடி ராசாத்தி அம்மாளிடம் திரும்பியவன்,
 
நீங்க ஏன் குழந்தையை இங்க தூக்கிட்டு வந்திங்க…?? தாங்க..?? இந்த புள்ளைக்கிட்ட அட்ரஸ கேட்டு வாங்குங்க..!!”  ராசாத்தி அம்மாளிடம் இருந்த குழந்தையை வெடுக்கென வாங்கியவன் அதை அணைத்து பிடித்தபடி மெதுவாக தன் அறையை நோக்கி நடக்கத்துவங்கியிருந்தான்…
 
ப்பா மனுசன் தான இவரு..?? எப்படி இப்படிலாம் பேச முடியும்..?? சுமதியின் மனதிற்குள் கேள்விகள் ஓட.. கடின பேச்சிற்கு சம்பந்தமில்லாமல் குழந்தையை மிருதுவாய் அணைத்திருப்பதை பார்த்திருந்த ராசாத்தி அம்மாளுக்கு கண்கள் கலங்கியது.. இந்த நான்கைந்து நாட்களாக தீனாவை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்..  
 
அடுத்த இரண்டு நாட்களில் தீனாவை டிஸ்ஜார்ஜ் செய்திருக்க ராசாத்தி அம்மாள் மட்டும் சுமதிக்கு துணையிருந்தார்.. குழந்தையை அவரே பார்த்துக் கொள்ள பார்வையாளர் நேரம் முழுவதும் குழந்தை தீனா கையில்தான் அந்த நேரம் முடிந்தும் சிலநேரம் வெளியில் குழந்தையோடு அமர்ந்திருந்தான்..
 
தீனாவின் கூட்டாளிகளோ அண்ணே உங்கள வெட்டினவன் , அவன் குரூப் யாருன்னு கண்டு பிடிச்சிட்டோம்..??”
 
முகம் தக்காளியாய் சிவந்திருக்க யார்டா அவன்..?? எந்த ஊரு..?? அவன தூக்க ஒரு ஸ்கெட்ச் போடுங்கடா…??”
 
இல்லண்ணே.. அது இப்ப முடியாது போல.. !!அவனுக ஒரு வேலையா ஆந்திரா வரைக்கும் போயிருக்கான்களாம்… வரட்டும் கொஞ்சம் பொறுமையா செய்வோம்.. எங்க போயிர போறானுக.. அவனுக வீட்ட காவல் காக்க ரெண்டு ஆளுகள போட்டிருக்கேன்…
 
ம்ம்ம் இப்ப ஒன்னும் செய்ய முடியாதா அவனுகள…?? ச்சை…!!”
 
அடுத்த இரண்டு நாட்கள் பொறுத்து சுமதியை டிஸ்சார்ஜ் செய்யலாம் சொல்ல அம்மா இங்க என்கூட வேலைப்பார்க்கிற ஒரு அக்கா வீடு இருக்கு ..அங்க என்னை விட்டுருங்க நான் எப்படியாச்சும் என் வழிய பார்த்துக்கிறேன்..??”
 
தாயி ஏன்தா அப்படி சொல்ற..?? நானும் ஒரு அனாதைதான் என்கூடவே வந்து இருக்க கூடாத.. ஒரு ஆத்தாவ என்னை நினைச்சுக்கோ..??”
 
தாயில்லாமல் வளர்ந்தவளுக்கு ராசாத்தி தாய் என சொல்லவும் சட்டென அவரை கட்டிக் கொள்ள.. அழாத தாயி இனி எல்லாம் நல்லதா நடக்கும்.. நான் இட்லி வித்து வியாபாரம் பண்றவதான்.. ஏதோ என்னால முடிஞ்ச வரை உன்னையும் உன் பிள்ளையையும் நல்லா பார்த்துப்பேன் தைரியமா வா..!!”
 
அச்சோ அம்மா என்ன இப்படிலாம் பேசுறிங்க..?? அம்மான்னு சொல்லிட்டிங்க தானே நான் உங்க கூடவே வர்றேன்.. சுமதிக்கும் வேறு வழியில்லை .. நிச்சயம் தன்னுடன் வேலை பார்க்கும் எல்லார் வீட்டிற்கும் தான் காணாமல் போனது தெரிந்திருக்கும் ..
 
மறுநாள் காலையிலேயே சுமதியை டிஸ்ஜார்ஜ் செய்திருக்க தீனா ஆட்டோ ஏற்பாடு செய்திருந்தான்.. குழந்தையை ராசாத்தி அம்மாள் வைத்திருக்க சுமதி மெதுவாக ஆட்டோவில் ஏறவும் ஆட்டோ கிளம்ப நேராக தீனாவின் வீட்டின் முன் சென்று நின்றது..
 
தம்பி இங்க ஏன் கூட்டிட்டு வந்த என் வீடு தெரியாதா..??”
 
எல்லாம் தெரியும் பாட்டி.. தீனா அண்ணேதான் இங்க கூட்டிட்டு வரச் சொன்னுச்சு..??”
 
டேய் கூடிட்டு வந்தா இறக்கி விட்டுட்டு போக மாட்டியா..?? என்ன ரெண்டுபேருக்கும் வெத்தலை பாக்கு வைச்சாத்தான் இறங்குவிங்களா…??”
 
அதுக்கில்ல தீனா இங்க ஏன்..??” தான் இறங்கவும் தீனா வந்து குழந்தையை வாங்கிக் கொள்ள சுமதியின் கையை பிடித்து மெதுவாக இறங்க உதவி செய்தார்.. அதற்குள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் வாசலுக்கு வந்து சுமதியையும் குழந்தையையும் பார்த்து குசுகுசுவென பேசத்துவங்கியிருந்தார்கள்..
 
இந்த பிள்ளைக்குத்தான் போக இடமில்லைன்னு சொன்னுச்சுன்னு சொன்னிங்க இங்க தங்கிகட்டும்.. என்னாலதான இந்த காயம் வந்துச்சு.. அது ஆறவும் அப்புறமா ரெண்டுபேரும் எங்கயோ போய்க்கோங்க..??”
 
வேணா தீனா நான் எங்க வீட்டுக்கே கூட்டிட்டு போறேன்..??”
 
ஒன்னும் தேவையில்ல.. நீயும் இங்கன வந்துரு..?? உன் வீடு பெரிய மாடி வீடு அதுல இது ரெண்டும் கொசுறா..?? ஏய் இங்கனயே கிடங்க.. நம்ம பயலுகள உன்வீட்டு சாமான எல்லாம் இங்க அள்ளிட்டு வரச் சொல்லிட்டேன்.. இந்த புள்ளைக்கு காயம் எல்லாம் ஆறட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்..ஏய் போபுள்ள உள்ள.. கூட்டி போங்க ..!!” ராசாத்தி அம்மாளை அதட்டியவன் குழந்தையோடு உள்ளே நுழைய பார்க்க..
 
தம்பி கொஞ்சநேரம் நில்லுப்பா.. இப்பத்தான் தாயும் பிள்ளையும் பொழைச்சு வந்திருக்குக.. இரு ஆலாத்தி எடுத்திருறேன் அப்புறமா உள்ள கூட்டிட்டு போ..
 
 பக்கத்து வீட்டில் ஆரத்தி பொருட்களை வாங்கி வரவும் அதுவரை குழந்தையை  வைத்துக்கொண்டிருந்த தீனாவை குழந்தையோடு சுமதியின் அருகில் நிற்க வைத்தார்.. சற்று நேரம் ஆட்டோவில் வந்ததால் வந்த குலுங்களில் தையலில் லேசான வலி வந்திருக்க நிற்க முடியாமல் சுமதி லேசாக தடுமாறவும்..
 
ஏய்புள்ள விழுந்து கிழுந்து தொலைச்சிறாத..??” அவளையும் மறுகையால் அணைத்துப் பிடிக்க… கடவுளை வேண்டியபடி ராசாத்தி அம்மாள் மூவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்தார்..
 
                                                            இனி…….?????

Advertisement