Advertisement

எனை மாற்றிய தருணம்
                              அத்தியாயம்  –  6
 
தீனா சுமதியோடும் குழந்தையோடும் நடக்க மூன்று நான்கு வீடுகள் கூட தாண்ட முடியவில்லை.. வலி, வேதனை பொறுக்கமுடியவில்லை.. மயக்கம் வேறு வருவது போலிருக்க அதற்கு மேல் முடியாதவன் அங்கிருந்த வீட்டுவாசலில் சுமதியை படுக்க வைத்து அங்கிருந்த கதவை படபடவென தட்ட இரண்டு நிமிடத்தில் கதவை திறந்த ஒரு சிறு பெண் தீனா இருந்த நிலையை பார்த்து ஓஓஓவென அலறவும் உள்ளிருந்து இன்னும் இருபெண்கள் வேகமாக வந்தனர்..
 
தீனாவை பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் நிற்க… அவர்கள்தான் அன்று அவனால் வீடின்றி தெருவிற்கு வந்தவர்கள்..
 
அ..அம்மா.. இவன்தான அன்னைக்கு நம்ம சாமான் எல்லாத்தையும் ரோட்ல அள்ளிப் போட்டான்..??”
 
அவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் எதுவும் பதில் பேச முடியாமல் திரும்பி சுதாவை காட்டியவன் ஏதும் பேசாமல் மயங்கி விழுந்திருந்தான்… சுமதியை பார்க்கவும் அந்த பெண்களின் தாய் அங்கு செல்ல மகள்களோ கோபமாக,
 
 அம்மா.. கிட்ட போகாத இந்த ரௌடி பயலோட பொண்டாட்டி போல..!! வேணாம் யாரோ கத்தியால குத்தியிருக்காங்க..?? நமக்கு தேவையில்ல வா…??” தாயின் கையை பிடித்து வீட்டிற்குள் இழுக்க,
 
விடும்மா அந்த பொண்ண பாரு குழந்தை வேற இருக்கு…. மகள்களின் கையை எடுத்துவிட்டவர் சுமதியின் கையை பிடித்து நாடியை சோதிக்க அதில் துடிப்பு இருக்கவும் குழந்தையை தூக்கி அதையும் சோதித்தார் …
 
குழந்தைக்கும் துடிப்பு இருக்குடி.. போன எடுத்துட்டு வாங்க 108க்கு போன் பண்ணுவோம்..
 
ம்மா இது தேவையா உனக்கு..?? தொல்லைய புடிச்சு தோள்ல போட்டுக்கிற.. வேணா வா..??” மீண்டும் தாயின் கையை பிடித்து இழுக்க அதை உதறியவர் வேகமாக சென்று போனில் 108 ற்கு போன் செய்திருக்க தன்னை முறைத்த மகள்களை கண்டு கொள்ளாமல் குழந்தையோடு வீட்டிற்குள் சென்று ஹாஸ்பிட்டல் சென்றால் தேவைப்படும் என்று நினைத்த சில பொருட்களை வேகமாக சேகரிக்க ஆரம்பித்தார்..
 
அம்மா நீ என்ன வேலைப்பார்க்கிற தெரியுமா..?? இவனாலதான் ஒரு நாள் ராத்திரி எல்லாம் நாம அப்பாவோட போக இடம் இல்லாம ரோட்ல இருந்தோம்.. சாமான்களை அள்ளி வெளியில போட்டுட்டு அப்பாவையும் கட்டிலோட வெளியில கொண்டு வந்து போட்டவன் இவன்..!!”
 
மகள்களை முறைத்தவர் அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க..?? இப்படி அடிப்பட்டு கிடக்கிறவங்கள அப்படியே விட்டுறனுமா… ??அப்படியே விட்டா இவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.. இவன் என்ன நமக்கு சொந்த பந்தமா.. யார்ன்னே தெரியாது.. ?? அந்த வீட்டுக்காரன் இவன்கிட்ட அந்த வேலையை கொடுத்திருக்கான் அதான் இவன் அப்படி நடந்திருக்கனும் …
 
என்ன.. நம்ம குடும்ப சூழ்நிலையை பார்த்து கொஞ்சம் ஈவு இரக்கமா நடந்திருக்கலாம்..?? நாமளும் ஆறுமாசமா வாடகை கொடுக்காம இருந்தது தப்புதான.. அப்பவே இதுமாதிரி குடிசை வீட்டுக்கு வந்திருந்தா நமக்கு இந்தப்பிரச்சனையே வந்திருக்காது.. நம்மதான் பெரிய வீடா வேணும்னு ஆசைப்பட்டோம் அதான் அவ்வளவு கஷ்டம்…??”பேசிக் கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் வந்திருக்க மகள்களிடம் சொல்லிக் கொண்டவர் சுமதியை ஏற்ற உதவி செய்து மகளிடம் இருந்த குழந்தையையும் வாங்கியபடி அவர்களுடன் கிளம்பியிருந்தார்..
 
தீனாவையும் சுமதியையும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்க குழந்தையை பரிசோதித்தவர்கள் அதற்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை பால் மட்டும் கொடுக்க சொல்லி சில பரிசோதனைகளை செய்து அரைமணி நேரத்தில் குழந்தையை அந்த பெண்ணிடமே ஒப்படைத்திருந்தனர்..
 
கத்தி குத்து என்பதால் போலிஸ் விசாரனைக்கு வந்திருக்க தீனாவும் சுமதியும் மயக்கத்தில் இருந்ததால் இந்த பெண்ணிற்கும் மற்ற விபரங்கள் ஏதும் தெரியாமல் அவர் சொன்னதை வைத்து தீனாவும் சுமதியும் கணவன் மனைவி என்றே பதிவு செய்திருந்தார்கள்.. சுமதிக்குத்தான் கத்திக் குத்து காயம் ஆழமாக இருந்தது.. ஏற்கனவே பலவீனமாக இருந்ததால் அவளின் நிலைமைதான் கவலைக்கிடமாக இருந்தது..
 
தீனாவின் திடமும் அவனின் தன்னம்பிக்கையும் அவனின் காயத்தை வென்றிருக்க அதிகமான வெட்டிற்கு தையல் போட்டவர்கள் மற்ற இடங்களில் மருந்து போட்டு கட்டு போட்டு விட்டிருந்தார்கள்.. உடலெங்கும் கட்டுதான்… இருந்தும் விரைவிலேயே அவன் சுயநினைவுக்கு வந்துவிட்டான்.. சுமதிக்கு வயிற்றில் தையல் போட்டிருக்க இன்னும் சுயநினைவு திரும்பவில்லை..
 
இங்கு இப்படி இருக்க அங்கு சுமதியின் வீடு அல்லோகலப்பட்டது.. சுமதியை காணாமல் ஆளுக்கொரு பக்கமாக தேடத்துவங்க மனோகரிக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்கத் துவங்கியது..
 
இந்த லூசு எங்க போய் தொலைஞ்சிருக்கும் …?? எங்காச்சும் போய் செத்துகித்து தொலைஞ்சா அவருக்கு அலக்குடுக்க முடியாதே…?? அந்த மனுசன் எப்ப என்ன செய்றேன்னு புரியாம செய்வாரே… இந்த அம்மா பேச்ச கேட்டது தப்பா போச்சு..!!”
 
விடிகாலையிலேயே அந்த கோனார் திருமணத்திற்கு தயாராகி வந்திருக்க சுமதியை காணாமல் பெரிய சண்டையே வந்திருந்தது.. எவ்வளவு எடுத்து சொல்லியும் அவமானப்படுத்தியதாக அவர் குதிக்க மனோகரிக்குத்தான் என்ன சொல்வது செய்வது  புரியாத நிலை.. கோபிக்கோ ஆத்திரம் அடங்கவில்லை.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.. இங்கதான இருக்கா என்ன போயிறபோறான்னு அசால்டா இருந்துட்டோமோ… !!
 
மனம் ஆத்திரத்தில் குதிக்க அந்த ஊரின் ஒரு இன்டு இடுக்கு விடாமல் அலசிக் கொண்டிருந்தான்… என் கையில மட்டும் மாட்டு அப்ப இருக்குடி உனக்கு… அவளின் அழகும் இளமையும் கண்முன் ஊசலாட… இன்னும் இன்னும் வெறி கூடியது..
 
விடிகாலை ஐந்து மணி போல தீனாவுக்கு விழிப்பு வந்திருக்க உடல் ரணமாய் வலித்தாலும் பொறுத்துக் கொண்டவனுக்கு அந்த பெண் பிழைத்தாளா தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.. மெதுவாக திரும்பி படுத்து அங்கிருந்த நர்ஸை அழைத்து விபரம் கேட்க அப்போதுதான் டியூட்டி மாறி வந்தவருக்கு விபரம் ஏதும் தெரியாமல் வெளியில் அமர்ந்திருந்த பெண்ணை அழைத்து வந்தார்..
 
குழந்தையோடு உள்ளே வந்தவருக்கு தீனாவிடம் பேச துளியும் விருப்பம் இல்லை.. ஏனோ சுமதிக்காகவும் இந்த குழந்தைக்காகவும்தான் இரவு முழுதும் துணையிருந்தார்..
 
தீனாவுக்கு இப்போதுதான் இந்த பெண்மணியை அடையாளம் தெரிந்தது.. இருவரும் ஒருநிமிடம் அமைதியாய் இருக்க தீனா வாய் திறக்கும் முன் குழந்தையை அவன் அருகில் படுக்க வைத்தவர்,
 
 உங்க பொண்டாட்டிக்கு இன்னும் முழிப்பு வரல..!! என்னவா இருந்தாலும் காலையிலதான் சொல்ல முடியுமாம்.. , தான் கொண்டு வந்த பை, கடையில் வாங்கி பால் டப்பாவையும் அவன் அருகில் வைத்துவிட்டு நான் கிளம்புறேன்.. இனி உன் பொண்டாட்டி புள்ள உன் பொறுப்பு … எனக்கும் குடும்பம் இருக்கு.. இந்த பச்ச புள்ளைக்காகத்தான் ராத்திரியெல்லாம் தூங்காம இருந்தேன்.. வரேன்..” அவன் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் விறுவிறுவென வெளியில் செல்ல …தீனா வாழ்க்கையில் முதல்முறையாக விக்கித்து போயிருந்தான்..
 
தனக்கு பொண்டாட்டி பிள்ளையா..?? அவர் சென்றது கூட தெரியாமல் இருந்தவனுக்கு திடிரென முகத்தில் ஏதோ சில்லென படவும் சுற்றுப்புறம் உணர குழந்தையின் அந்த பிஞ்சுவிரல் தீனாவின் முகத்தை தொட்டிருந்தது.. குழந்தையின் கைவிரல் கன்னத்தில் பட்டு பட்டு விலக அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் ஆகிருமா..?? அப்புறம் இந்த பிள்ளையும் அனாதையாகிருமோ..?? ஏதேதோ அவன் கண்முன்னால் படமாய் ஓடியது..
 
அங்கிருந்த நர்ஸிடம் போனை வாங்கி அவன் கூட்டாளிகளுக்கு போன் செய்திருக்க சற்று நேரத்தில் அவர்களோடு ராசாத்தி அம்மாளும் பதறியடித்து வர.. குழந்தையை அவர் பொறுப்பில் ஒப்படைத்திருந்தான்..
 
அந்த பொண்ணு கண்ணு முழிச்சா அதுக்கிட்ட போன் நம்பர் கேட்டு அது வீட்டுக்காரர்கிட்ட விபரத்தை சொல்லி வரச் சொல்லுங்க..?? புள்ளைய அந்த புள்ள புருசன் கையில ஒப்படைச்சிட்டு நீங்க வீட்டுக்கு போகலாம்.. ??அதுவரைக்கும் அந்த புள்ளைக்கு துணைக்கு இருங்க..
 
 குழந்தையின் முகத்தை அடிக்கடி பார்க்கத் துடித்த தன் மனதை திசைதிருப்பி என்னை வெட்டினவன் எவன்னு கண்டு பிடிங்கடா,… நான் வீட்டுக்கு வந்தவுடன ஒரு பய உயிரோட இருக்க கூடாது..??” தன் கூட்டாளிக்களுக்கு ஆணையிட்டபடி மீண்டும் குழந்தையை பார்க்க அதற்கு என்ன தெரிந்ததோ ஒரே சிரிப்பு அதன் முகத்தில்..!!
 
அடுத்த இரண்டு நாட்களிலும் சுமதிக்கு நினைவு திரும்பாமல் பிழைப்பாளா மாட்டாளா பயம் காட்டி மூன்றாம் நாள் காலைதான் கண்விழித்திருந்தாள்.. அதுவரை அவளைப்பற்றிய விபரம் ஏதும் தெரியவில்லை.. தீனாவை இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம் என சொல்லியவர்கள், சுமதி இன்னும் ஒரு வாரமாவது இருக்க வேண்டும் என சொல்லியிருந்தார்கள் …
 
சுமதி மயக்கத்திலேயே இருக்க தூங்கும் நேரம் தவிர பாதி நேரம் குழந்தை தீனாவிடமும் ராசாத்தி அம்மாளிடமும்தான்.. தீனாவின் உடலெங்கும் கட்டாய் இருந்தாலும் ஏனோ ரோஜா வண்ணத்தில் சுருள் முடியோடு அடிக்கடி புன்னகைத்தடி இருக்கும் அந்த குழந்தையை கீழே விடமனதில்லை.. அடிபடாத கைகளில் வைக்கச் சொன்னவன் கை வலியெடுக்கும் வரை குழந்தையை பார்த்தபடியே இருந்தான்..
 
மூன்றாம் நாள் சுமதிக்கு முழுநினைவும் திரும்பியிருக்க நர்ஸ் வந்து விபரம் சொல்லி வீட்டாட்களை பார்க்கச் சொல்ல ராசாத்தி அம்மாள்தான் உள்ளே வந்திருந்தார்..
 
ஆத்தா தாயி நல்லாயிருக்கியா..??”
 
அவரை பார்த்ததும் யாரென்று தெரியாவிட்டாலும் அவரது பாசத்தில் எப்போதும் அவள் முகத்தில் இருக்கும் சிரிப்பை உதிர்த்தவள் நல்லாயிருக்கேன்மா.. குழந்தையை கண்களாலேயே அந்த அறையில் தேட,
 
என்ன தாயி குழந்தைய தேடுறியா..?? தீனாதான் வைச்சிருக்கான்..??”
 
பா..பாப்பாக்கு ஒன்னுமில்லயே..
 
அது நல்லாயிருக்குத்தா..?? பாப்பா பிறந்து நாலஞ்சு நாள் இருக்குமா.. பச்ச உடம்புகாரி அதுக்குள்ள உனக்கு இப்படி ஆயிருச்சே… ம்ம் அந்த மகமாயிதான் உன்னைக் காப்பாத்தினா…. ஆமா உன் புருசன்..??” அவர் இழுக்க….
 

Advertisement