Advertisement

எனை மாற்றிய தருணம்
                                   அத்தியாயம்  – 5
 
கமலாம்மா விறுவிறுவென வீட்டை நோக்கி நடக்க துவங்க, கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் நிற்கவில்லை.. தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம்.. எவ்வளவு பேர் இந்த குழந்தை பேருக்காக தவமாய் தவமிருந்து கோவில் கோவிலாய் செல்ல தன் கைக்கு வந்த குழந்தை செல்வத்தை இப்படி தெருவில் போட்டுவிட்டு வருவது எவ்வளவு பெரிய பாவம்..  ஆனால் வேறு வழியில்லை…
 
இந்த குழந்தையாச்சும் நல்லாயிருக்கட்டும் ..வீட்டின் கதவை திறக்க சுதா இப்போதுதான் லேசாக மயக்கம் தெளிந்து கண்விழித்திருந்தாள்…
 
சுதா பதினாறு வயதிற்குள்ளாகவே இருமடங்கு கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்க, அவள் செய்த செயல் இந்த அளவுக்கு வினையை இழுத்து விட்டிருக்கிறது.. இந்த 5 மாதங்களாக அழுகை மட்டும்தான்.. அன்று ஹாஸ்பிட்டல் சென்று செக் செய்தபோது இப்போது ஐந்தாம் மாதத்தை நெருங்க போவதால் கருவை எதுவும் செய்ய முடியாது மீறினால் சுதா உயிருக்கே பாதிப்பு வரும் டாக்டர்கள் சொல்லியிருக்க வள்ளி எவ்வளவுதான் சமாதானம் செய்தாலும் கமலாவால் தாங்க முடியவில்லை..
 
இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் போனால் சுதாவிற்கு வயிறு தெரிந்துவிடும் இத்தனை வருடங்களாக பணத்திற்கு கஷ்டப்பட்டாலும் இந்த தெருவில் மானத்தோடு இருந்தார்கள்.. இனி அப்படி இருக்க முடியாது அதனால் தான் இரவோடு இரவாக சுதாவோடு வேறு இடத்திற்கு வந்திருந்தார்.. 
 
தானும் தன் மகளும் சாகலாம் என்ற முடிவோடுதான் வீட்டை விட்டு வெளியில் வந்திருந்தார்.. ஆனால் சாவதற்கு ஏனோ மனதில்லை. அந்த சின்ன சிறிய சிசு என்ன செய்தது.. தன் மகள் அந்த சிறுவயதில் தன் கைகளில் தவழ்ந்தது நினைவுக்கு வந்து.. அதுவாச்சும் உயிரோட இருக்கட்டும்… வேறு குப்பத்தில் ஒரு குடிசை வீட்டில் குடியேறியிருந்தார்
 
மனதின் பாதிப்பு உடலையும் பாதித்ததோ முன்பு போல கமலாவால் வேலை பார்க்க முடியவில்லை.. கிடைத்த வேலை எல்லாம் பார்த்ததில் கால்வயிறு, அரைவயிறு உணவே கிடைக்க சுதா வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை…
 
தன் எதிர்காலத்தை நினைத்து நினைத்து கதறினாள்.. முன்பு துள்ளித்திரிந்த அந்த பள்ளி பருவம் மீண்டும் வேண்டும் போலிருக்க… என்ன செய்ய..?? இப்போது மாதத்தோடு போட்டிப்போட்டு அவளின் வயிறும்தான் வளர்கிறதே.. தன்னாலேயே தன் வாழ்க்கை சூன்யமாகிவிட்டது புரிந்தது.
 
வெளியில் தலைகாட்ட முடியவில்லை.. சாதாரணமாகவே அவர்கள் பார்த்தாலும் ஏதோ ஏளனம் செய்வது போலிருக்க.. சிலர் நேரிடையாகவே அவளின் ஒழுக்கத்தை குறை கூறினர்… தான் தாய் ஏன் அவ்வளவு கண்டித்தார்.. எப்போதும் கவனமாக இரு.. ஆண்களிடம் பழகாதே ..?? தேவையில்லாமல் பேசாதே?? என்று ஏன் சொன்னார் என்று இப்போது புரிந்தது.. அப்போது பாவற்காயாய் கசந்தது தன் நன்மைக்காகத்தான் என்பது இப்போது புரிந்து என்ன பயன்..!!
 
அரசு மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்யக்கூட தயங்கினாள்.. முதல்நாள் செக்கப்பிற்கு  சென்ற போது அவளை பற்றிய விபரங்களை கேட்க.. பல அந்தரங்க கேள்விகளுக்கு இவளுக்கு விடையே தெரியவில்லை.. வயதை சொல்லவும் அங்கிருந்த செவிலிகளே ஒரு மாதிரி பார்க்க அதன் பிறகு கமலா எவ்வளவு அழைத்தும் செக்கப்பிற்கு செல்ல மறுத்துவிட்டாள்..
 
தடுப்பூசி போடவில்லை.. ஸ்கேன் செய்யவில்லை.. நேரத்திற்கு சாப்பிடுவதில்லை.. எந்த நேரமும் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க பார்க்க பார்க்க கமலாவால் தாங்க முடியவில்லை.. இரண்டு நாட்களுக்கு முன்னால்,
 
ஏய் சுதா இப்ப சாப்பிடப்போறியா இல்லையா..?? இப்படி பட்டினியா இருந்தா சீக்கிரமா உசிர விட்டுருவடி..?? ஏய் சுதா ..சுதா..!!” மகளை உலுப்ப,
 
சுயநினைவுக்கு வந்தவள் தன் நிறைமாத வயிற்றோடு தாயை இறுக அணைத்துக் கொண்டு.. பரவால்லமா செத்துப்போறேன்…!!”
 
 மகள் இறுக அணைக்கவும் வந்த அழுகையை வாய்க்குள்ளேயே அடக்கிக்கொண்டு மறுபடி ஏதோ பேச வந்தவளின் வாயில் கைவைத்து தடுக்க… மனம் வேதனையில் தவித்தது.. கடவுளே இவ இவ்வளவு கஷ்டப்படுறாளே..?? இந்த சின்னப்பிள்ளைய ஏமாத்தினவனுக்கு ஒரு தண்டனையும் இல்லையா.. எல்லாம் பொண்ணுகளே அனுபவிக்கனுமா..??
 
இவ அப்பன் தன் சுகம் பெரிசுன்னு குடிச்சு குடிச்சே அழிஞ்சு என் கையில ஒரு பிள்ளையை கொடுத்துட்டு போய் சேர்ந்தான்.. நான்தான் படிக்கவும் இல்லாம வாழ்க்கையில எந்த சுகமும் அனுபவிக்காம என் பொண்ணுக்காக நாய் மாதிரி உழைச்சேன்..
 
இவளாச்சும் படிச்சு பெரிய வேலைக்கு போய் தன்னோட சொந்தக்கால்ல நிப்பான்னு பார்த்தா இப்படி ஏமாந்து நிக்குறாளே.. மகளின் வாயை மூடியபடியே,
 
இப்படியெல்லாம் அச்சான்யமா பேசக்கூடாது சுதா… சாப்பிடு..??” உணவை ஊட்டிவிட…
 
அம்மா…!!”
 
என்ன சுதா..??”
 
எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடும்மா..??”
 
உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் என்னடி பெரிய மனுசி போல பேச ஆரம்பிச்சிட்ட.. ?? வயசு பதினாறுதான் ஆகுது.. சாப்பிடு..” சாப்பாட்டை திணிக்க தாயின் கையை பிடித்து தடுத்தவள்,
 
 நீ சத்தியம் பண்ணிக்கொடும்மா..??”
 
ஏற்கனவே எலும்பும் தோலுமாய் இருக்கிறாள்.. முன்பெல்லாம் வீட்டு வேலை செய்யும் இடங்களில் சாப்பிட ஒரு பொருள் கொடுத்தால் மகளுக்காக பத்திரப்படுத்தி கொண்டு வந்து கொடுக்க அதை அப்படி ஒரு குதூகலத்தோடு சாப்பிடுவாள்.. இப்போது சாப்பிடுவதே இல்லை.. வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும் இருவரும் மகிழ்ச்சியாகத்தானே இருந்தார்கள் யார் கண் பட்டது.. !!!
 
 இப்போது நிறைமாத வயிறு மட்டும்தான் இருக்கிறது… உடலில் எந்த சக்தியும் இல்லை. பிரசவத்தை தாங்கும் சக்திக்கூட இல்லை.. எப்படி பிள்ளை பெற போறாளோ.. மனதிற்குள் கவலை அரிக்கத் துவங்கினாலும் மகளை முடிந்த அளவு நன்றாக கவனித்துக் கொண்டார்..
 
சாப்பிடு சுதா..
 
 எனக்கு ஒரே ஒரு சத்தியம் மட்டும் பண்ணிக் கொடு..??”
 
என்னடி…
 
ம்மா ப்ளிஸ் பண்ணுமா..
 
என்னன்னு சொல்லு..??”
 
 எனக்கு குழந்தை பிறந்தா அத நீதான் பார்த்துக்கனும்..??”
 
 கமலாவுக்கு முன்பிருந்த சாகும் எண்ணம் இப்போது இல்லை… அந்த சின்ன உயிர எப்படி அனாதையா விட்டுட்டு போறது.. பார்த்துக்குவோம்டி ரெண்டு பேரும் கஷ்டப்பட்டாலும் அதை நல்லா வளர்ப்போம் கவலைப்படாத..??”
 
அம்மா நீ என்னைக்கூடத்தான் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்த..?? நான்தான் ஒழுங்கா வளரலையே.. நீ பாப்பாவ மட்டும் நல்லா வளர்த்துவிடு..!!”
 
ஏன்டி நீ எங்க போற..??”
 
நான் உயிரோடவே இருக்க மாட்டேன்மா..
 
வந்த கோபத்தில் பளாரென ஒரு அறைவைத்திருக்க அவருக்குத்தான் கை வலித்தது.. அப்படில்லாம் பேசாத சுதா..??”
 
அம்மா இன்னும் அடிம்மா அடி ..?? வேலைப்பார்க்கிற இடத்தில உன்னை எப்படியெல்லாம் திட்டுவாங்க.. அவ்வளவையும் எனக்காகத்தான பொறுத்துக்கிட்ட.. ஆனா நான் பாரு.. எவனோ ஒருத்தன நம்பி இப்படி ஆகிட்டேன்.. அப்போக்கூட நீ என்னை அடிக்கலைல …?? இப்போவாச்சும் அடிம்மா..
 
தாயின் கைகளை பிடித்து தன் கன்னத்தில் தானே அறைந்து கொள்ள…. சுதா..ஆஆஆ… பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.. ஐயோ நான் என்ன பண்ணுவேன்…
 
ம்மா நான் செத்துப்போகவா..??”
 
லூசு போல பேசாத சுதா.. மகளை இறுகி அணைத்துக் கொள்ள…
 
இல்லம்மா நீ பாப்பாவ பார்த்துப்ப எனக்குத் தெரியும் நான் செத்துத்தான் போகப்போறேன்.. இந்த இரண்டு நாட்களாகவே இதே பேச்சுத்தான்… சாகப்போகிறேன் சாகப்போகிறேன் என கமலா எவ்வளவு சொல்லியும் மகளை சுயத்துக்கு கொண்டு வர முடியவில்லை..
 
அவருக்கு ஒன்று தெரிந்து விட்டது.. கண்டிப்பாக தன் மகள் ஏதோ விபரீத முடிவு எடுக்கப் போகிறாள் என.. அவளுக்கு ஏதாவதென்றால் அதற்கு பின் இவர் உயிர்வாழ விரும்பவில்லை.. எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும் மகள் சொன்னதே சொல்லிக் கொண்டிருக்க.. அவளோடு சேர்ந்து தானும் உயிரை விடும் முடிவிற்கு வந்திருந்தார்.. அதனால்தான் குழந்தையாவது நன்றாக இருக்கட்டும் என கோவிலில் விட்டது…
 
மெதுவாக எழுந்து அமர்ந்தவள் தன் அருகில் குழந்தையை தேட என்ன குழந்தைம்மா…?? எங்க காணோம்..??”
 
என்ன சொல்வார்…தானே சொண்டு போய் கோவிலில் போட்டுவிட்டேன் என்றா..
 
என்னாச்சும்மா.. குழந்தைக்கு..??” தாயின் கலங்கிய முகத்தை பார்த்தவள்..
 
ம்மா… ம்மா செத்துப்போச்சா..?? செத்துருச்சு தானே.. அம்மா சொல்லும்மா சொல்லு.. ஹா ஹா செத்துப்போச்சா… நினைச்சேன்மா… நல்ல வேளை செத்துப்போச்சு… இல்ல நானே அத கொலை பண்ணியிருப்பேன்.. அதோட அப்பன்தான என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தான்.. போச்சா… ரொம்ப நல்லது.. ஐ….. செத்துப் போச்சு.. ஏதோ பித்துப்பிடித்தாற் போல உளறியவள்… சிரித்தவள்…. டேய் படுபாவி செத்துப்போச்சுடா… போச்சு..ஹா ஹா ஹா.. சிரித்து அழுது தன் உடலில் இருந்த களைப்பில மீண்டும் படுத்துக் கொள்ள…
 
அந்த பதினாறு வயதில் மனமும் உடலும் அவ்வளவு தளர்ந்திருந்தது… தன் வாழ்வு வீணானதற்கு இந்த குழந்தையும் அவனும்தான் காரணம் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.. இந்த குழந்தையை நானே கொன்னுருவேன்… கொன்னுருவேன்… நானும் செத்துருவேன்… அம்மா நல்லா வளர்த்தாலும் என்னை மாதிரியே வளர்ந்து மறுபடி அம்மாவ தொல்லை பண்ணினா…??? இனியாச்சும் அம்மா நல்லாயிருக்கட்டும்… கமலா வேலைக்கு சென்றுவிட அந்த தனிமை இவளை ஏதேதோ முடிவிற்கு தூண்டியிருந்தது..
 
கமலா இதை எதிர்பார்க்கவே இல்லை.. குழந்தையை கொல்லனும்னு இருந்தாளா….?? ஐயோ என்னாச்சு இவளுக்கு..?? தான் ஏதோ நினைத்து குழந்தையை கோவிலில் விட்டு வர மகள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்ததா.. இன்னும் விசும்பியபடி படுத்திருக்கும் மகளை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்..
 

Advertisement