Advertisement

இவள் என்ன செய்தாலும் கண்டு கொள்ள ஆளில்லை.. பிள்ளைகள் இரண்டும் விளையாண்ட களைப்பில் ஏழுமணிக்கே உறங்கியிருக்க  தாயும் மகளும் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.. இவள் அருகில் செல்லும் போது சத்தத்தை குறைத்தாலும் பேச்சை நிறுத்தவில்லை.. இவளால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தார்களோ.. பாதி பேச்சு இவள் காதில் விழ விழுந்தவரை விடிகாலை 4 மணிக்கு அந்த கோனாருக்கும் தனக்கும் திருமணம்..
 
கோபியை காணவில்லை.. அண்ணிக்கும் அத்தைக்கும் சாப்பாட்டை பரிமாறியவள் காய்ச்சல் அடித்த உடலை கவனிக்காமல் இருக்க கண்கள் இரண்டும் தகதகவென எரியத்துவங்கி உடலும் அனலாய் கொதித்தது.. மனோகரியும் அவள் தாயும் இவளை கவனித்து..
 
என்ன சுமதி ஏதோ போல இருக்க..??”
 
ஒ..ஒன்னுமில்ல அ.. அண்ணி..
 
அப்ப சாப்பிட்டு போய் படு.. நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.. இந்த கோபி பய எங்க போனான்னு தெரியலையே..??” இருவரும் பேசியபடி வெளியில் செல்ல அடுத்து என்ன செய்ய போகிறோம் தவித்தவளுக்கு கார்மென்ஸில் அவ்வளவு பெண்கள் தன்னுடன் வேலைப்பார்க்க அவர்கள் யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்று தோன்றவே இல்லை..
 
வீடே ஆழந்த உறக்கத்தில் இருக்க சுமதிக்கு தன் இருண்ட எதிர்காலத்தை நினைத்துப் பயமாக இருந்தது.. இரவு 11.00 மணி இருக்கும் யாரோ தன் காலை சுரண்டுவது போலிருக்க மிரண்டு எழுந்தவளுக்கு தன் காலடியில் கோபியை காணவும் இதயம் ஒருமுறை நின்று துடித்தது..
 
சட்டென எழுந்தவள் சற்று தள்ளி அமர,
 
ஏய் சுமதி நான்தான்.. எதுக்கு இப்படி பயப்படுற..??”
 
ஒ..ஒன்னுமில்ல.. என்ன வேணும்..??”
 
என்ன இப்படி கேட்கிற..?? விடிகால உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்காங்க  அதுவும் ரெண்டாந்தாரமா ஒரு கிழவனுக்கு கட்டி வைக்க..!! தெரியுமா தெரியாதா…??
 
உனக்கு எப்படி தெரியும்..?? இப்ப நான் சொல்றத கேளு நைட் ஒருமணி போல நாம வீட்டவிட்டு வெளிய போயிருவோம்.. எங்கயாச்சும் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருக்கலாம்.. முன்ன பிளான் போட்டபடி ரெண்டுபேரும் வேலைக்கு போனா போதும் நாம நிம்மதியா குடும்பம் நடத்தலாம்.. அவன் இன்னும் என்னென்ன சொல்லியிருப்பானோ.. எதுவும் அவள் காதில் விழவில்லை..
 
முன்பிருந்த சுமதியென்றால் மகிழ்ச்சியில் திளைத்திருப்பாள்.. இப்போதுதான் கோபியின் சுயரூபம் தெரிந்துவிட்டதே.. ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க கோபி சுமதியை கூர்ந்து பார்த்தான்.. என்ன இந்த பேக்கு அப்படியே உட்கார்ந்திருக்கு.. சந்தோசப்படும்னு பார்த்தா ஒன்னத்தையும் முகத்தில காணோம்..
 
இது மட்டும் மனோகரியின் வீடாக இல்லாவிட்டால் சுமதியின் வெகுளி குணத்திற்கு எப்போதே அவள் கற்பை சூரையாடியிருப்பான்.. குணசேகரனை நினைத்தும் கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போக போகுது என்ற மெத்தனத்திலும் சுமதியை இத்தனை நாள் விட்டிருக்க இன்று இவள் வேறொருவனுக்கா.. அதுவும் ஒரு கிழவனுக்கு..!!
 
என்ன சுமதி பேசாம இருக்க..?? உங்க அண்ணன் இல்லைன்னு தான…!! அவரு இங்க வர்றப்போ நாம கல்யாணம் பண்ணிக்கிட்ட காரணத்தை சொன்னா அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு.. நானும் யாரும் எழுந்திருக்கிறதுக்குள்ள போய் படுக்கிறேன்.. கரெக்டா ஒரு மணிக்கு வீட்டவிட்டு போறோம்.. மெதுவான குரலில் அவளிடம் சொன்னவன் அவள் கையை பிடிக்கவர இன்னும் இரண்டெட்டு தள்ளிப் போனாள்..
 
பாக்க பேக்கு மாதிரி இருந்தாலும் இன்னும் ஒரு முத்தம் கூட கொடுக்கவிடல… வாடி உன்னை என்னப்பண்றேன்னு பாரு.. மனதிற்குள் வன்மத்தை வளர்த்தவன் படுக்கைக்கு செல்ல…
 
நள்ளிரவு மணி பனிரெண்டு அடித்து ஓய அதுவரை அப்படியே அமர்ந்திருந்தவள் தன் முகத்தை கழுவி தன் காதில் போட்டிருந்த தங்கத் தோடு அண்ணன் தனக்கு பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்த மெல்லிய செயின் இரண்டையும் சாமி பாதத்தில் வைத்துவிட்டு சிறுவயதில் தானும் அண்ணனும் எடுத்துக் கொண்ட பழைய போட்டோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்… கண்ணீர் நிற்கவே இல்லை… தாய், தந்தை, பெரியம்மா போட்டோவையும் வணங்கியவள்…
 
நானும் உங்கக்கிட்ட வந்துருறேன்மா..?? இனி என்னால இங்க வாழமுடியாது.. இவ்வளவு நாள் பசிதான் தாங்கமுடியாத கொடுமைன்னு நினைச்சு அழுதேன்.. ஆனா இப்போ மானமே போயிரும் போல.. அது போனதுக்கு அப்புறம் நான் உயிரோட இருந்தா என்ன..?? செத்தா என்ன..?? ஒரு பொண்ணுக்கு பெத்தவங்க எவ்வளவு முக்கியம்னு இப்போ புரியுது..
 
உங்க ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் உயிரோட இருந்திருந்தாக்கூட இந்த மாதிரி இவங்க தைரியமா பண்ணுவாங்களா.. போதும் இனி நான் இங்க இருக்கல உங்கக்கிட்ட வந்திருறேன்.. அங்கயாச்சும் நாம சேர்ந்து இருப்போம்.. அண்ணன்கிட்டத்தான் சொல்லாம வர்றேன்.. அது ஒன்னுதான் வேற எதுவும் இல்ல.. அது எப்பவும் நல்லா இருக்கனும்.. நல்லா இருக்கும்..!!” தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் பிள்ளைகளின் நெற்றியில் முத்தம் வைத்தவள் வீட்டைவிட்டு வெளியில் வந்திருந்தாள்..
 
எங்கு பார்த்தாலும் ஒரே கும்மிருட்டு.. தெருவிளக்குகள் மட்டும் மங்கலாக எரிந்துக் கொண்டிருக்க படுத்திருந்த நாய்கள் தலைதூக்கி சுமதியை பார்த்து விடாமல் குரைத்துவிட்டு  பின் படுத்துக் கொண்டன.. எதை பற்றியும் கவலையில்லாமல் வாழும் ஆசையே இல்லாமல் கால்போன போக்கில் நடந்து கொண்டே இருக்க எங்கு வந்தாள் என்றே தெரியவில்லை..
 
காய்ச்சல் அடித்த உடல் இரவு சாப்பிடவும் இல்லை.. மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை.. நடக்கக்கூட தெம்பில்லாமல் எவ்வளவு தூரம் வந்திருப்பாளோ காலில் ஏதோ குத்தியது போலிருக்க இப்போதுதான் சுயநினைவு வந்தது..
 
தன்னைச் சுற்றி பார்க்க ஏதோ கோவில் போல அதன் அருகில் வந்திருந்தாள்.. சிறிய கோவிலாக இருக்க சாமிக்கு முன்னால் தொங்கிய சரவிளக்கின் வெளிச்சத்தில் அம்மன் இவளை பார்த்து சிரிப்பது போலிருந்தது.. அம்மனை காண காண இவளுக்கு இதுவரை இருந்த மனக்குழப்பம் போய் மனம் அமைதியடையத் துவங்க சாவதைப்பற்றி பயமெல்லாம் எழவில்லை..
 
இது எந்த இடம் என்று பார்த்தவள் அவள் கார்மென்ஸ் போகும் வழிதான் அருகில் ஒரு குளம் இருக்கும் தெரியும்.. அதில் குதித்துவிடலாம் முடிவெடுத்தவள் மீண்டும் ஒருமுறை அம்மனை கும்பிட ஏனோ அவரே சாவதற்கு தனக்கு வழி காட்டியது போலிருந்தது..
 
கோவிலைச்சுற்றிக் கொண்டு அந்த குளத்தை நோக்கி நடக்க ஏதோ சத்தம்…!! யாரோ அழுவது போலிருக்க நடையை நிறுத்தி காதை கூர்மையாக்கினாள்.. ஏதோ பச்சைக்குழந்தையின் அழுகுரல்.. தன்னைச்சுற்றி அனைத்து இடமுமே இருட்டாய்  வீடுகள் அனைத்தும் இருளில் மூழ்கி கதவடைத்திருக்க ஏதும் பிரமையோ மீண்டும் இரண்டெட்டு வைத்திருப்பாள்..
 
இப்போது குழந்தையின் அழுகை ஒலியோடு நாயின் குரைப்பும் சேர்ந்து கேட்க கால் குரல் வந்த திசை நோக்கி தானாகவே நடக்க ஆரம்பித்தது..  நெருங்க நெருங்க இன்னும் அழுகை ஒலி அதிகமாக நடையை வேகப்படுத்தியவள் அங்கு கண்ட காட்சியில்  அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்…
 
கோவிலுக்கு முன் தேங்காய் உடைப்பதற்காக கட்டப்பட்டிருந்த ஒரு சதுர வடிவ தொட்டிக்குள் வீறிட்டு அழுதபடி ஒரு பச்சிளம் குழந்தை துண்டால் சுற்றப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருக்க அதன் வெளியில் நின்று ஒரு நாய் குழந்தையை பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது..
 
ஐயோ கடவுளே இதென்ன..?? குழந்தையை நோக்கி வேகமாக ஓடியவள் நாயை விரட்டிவிட்டு அச்சோ அழாதடா செல்லம்..!!” ஆணோ பெண்ணோ எதுவென்றே தெரியாமல் முகமெங்கும் முத்தமிட்டு குழந்தையை தூக்கி மார்போடு அணைத்துக் கொள்ள…
 
அதுவரை நாய் தன் பேத்தியை ஏதும் செய்து விடுமோ.. வேணாம் குழந்தை தூக்கிருவோம் வேகமாக அருகில் செல்ல போனவர் சுமதியின் காலடி ஓசையில் அங்கிருந்த தூணுக்கு பின்னால் மறைந்து கொள்ள யாராச்சும் நல்லவங்கள அனுப்பு ஆத்தா..?? என் பேத்தி ஒரு நல்லவங்க கையில இருக்கிறத பார்த்துட்டுதான் நான் உசிர விடனும் வருவது யாரோ..!! என்ற பயத்தில் நடுங்கி போய் நின்றிருந்த கமலா…
 
சுமதி குழந்தையை தூக்கி தன் மார்போடு அணைத்து முத்தமிடவும் இனி குழந்தைக்கு ஆபத்தில்லை.. நல்ல இடத்தில் சேர்த்துவிட்டோம் என்பதை உணர்ந்து… கண்ணீரை துடைத்தவர் சுமதியின் முகத்தை அந்த வெளிச்சத்தில் நன்றாக பார்த்து மனதார அவளுக்கு நன்றி சொல்லி திரும்பி வேகமாக நடக்கத்துவங்கியிருந்தார்..
 
தானும் தன் மகளும் அந்த குளத்தில் மூழ்கி சாகலாம் என்று தான் ஏற்கனவே எடுத்திருந்த முடிவிற்கு மகளை ஒத்துக்கொள்ளச் செய்ய.. குழந்தை பிறந்தது அதை தான் இங்கு கொண்டு வந்து போட்டது எதுவுமே தெரியாமல் பிரசவத்தால் மயங்கிக் கிடந்த தன் மகளை காண வீட்டை நோக்கிச் சென்றார்..
 
குழந்தையை தூக்கி தன் மார்போடு அணைத்தவள் யாரும் இருக்கிறார்களா ?? கோவிலை இருமுறை சுற்றிவர ஒருவரையும் காணவில்லை.. குழந்தை இன்னும் அழுது கொண்டிருக்க என்ன செய்வதென்று திகைத்தவள் இன்னும் இன்னும் அதை மார்போடு சேர்த்தணைக்க சுமதியின் கைவிரல் குழந்தையின் வாய்க்கு அருகில் இருக்க அந்த விரலை லேசாக சப்ப ஆரம்பித்த குழந்தை தன் அழுகையை மெல்ல நிறுத்தியிருந்தது…
 
குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று வந்தவள் பெற்றெடுக்காமலே ஒரு குழந்தைக்கு தாயாய் மாறியிருக்க சுமதியை மாற்றிய தருணமாக இது இருக்குமா.. !!
 
                                                                 இனி…………..?????

Advertisement