Advertisement

எனை மாற்றிய தருணம்
                           அத்தியாயம்  –  3
 
நாட்கள் வேகமாக ஓடியதில் வாரங்கள் மாதங்களாக மாறி நான்கைந்து மாதங்கள் முடிந்திருந்தது.. அன்று இரவு பத்து மணி போல கமலாம்மாள் வேலை முடித்து வர வாசலில் அமர்ந்திருந்த வள்ளி அவரை தடுத்து…
 
கமலா இங்க கொஞ்சம் வா.. உன்கிட்ட பேசனும்..??”
 
என்ன வள்ளி அக்கா..??” அவர் வீட்டிற்குள் நுழைய, எப்போதும் வள்ளி மேல் மிகுந்த மரியாதை உண்டு இவருக்கு.. தன்னை போலவே வீட்டு வேலை செய்து பிழைத்தாலும் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்.. ஆத்திர அவசரத்துக்கு இவரிடம்தான் கமலா பணம் வாங்குவார்.. கணவன்.. குழந்தைகள் என யாரும் இல்லாத ஒண்டிக்கட்டை..
 
கமலாவின் குடும்ப சூழ்நிலை உணர்ந்தோ என்னவோ அவர் கேட்கும்போது தட்டாமல் பணம் கொடுப்பார்.. வீட்டிற்குள் அமர வைத்து அடுப்படியில் காப்பி போட்டு கொண்டு வந்து அவர் கையில் கொடுக்க,
 
வேணாம்க்கா சாப்பிடற நேரம் .. வேலைப் பார்க்கிற வீட்ல மிஞ்சம் மீதி கொஞ்சம் கொடுத்தாங்க.. அதை சுதாக்கிட்ட கொடுத்து சாப்பிட சொல்லனும் பிள்ளை பசியில இருக்கும்..
 
ஆமா இந்த வயித்துல ஒரு டம்ளர் காப்பிக்குத்தான் இடம் இருக்காதா…?? குடி..” அவர் குடித்து முடிக்கும் வரை பொறுமையாய் அமர்ந்திருந்தவர்..
 
நீ காலையில வேலைக்கு போயிட்டு இந்நேரத்துக்குத்தான் வர்ற.. இங்க என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியுதா உனக்கு..??”
 
கமலாவுக்கு ஆச்சர்யம்.. அப்படி என்னக்கா நடக்குது நம்ம ஏரியாவுல…??” இந்தக்கா அப்படி பொறனி ஏதும் பேசாதே.. என்னவாயிருக்கும்..!!
 
ஏரியாவுல நடந்தா உன்னை ஏன் கூப்பிட போறேன் கமலா..?? உன் வீட்லதான் ..??”
 
மனதிற்குள் ஏதோ பயப்பந்து உருள என்னக்கா சொல்றிங்க..?? சுதா யார்கிட்டயாவது சண்டைக்கு போனாளா.. ஏதும் வம்பா..??”
 
அப்படியெல்லாம் இருந்தா அத ஏன் நான் சொல்லப்போறேன்.. அது இங்க வாடிக்கையா நடக்கிறதுதானே..?? நான் சொல்றத கொஞ்சம் அமைதியா கேளு.. நம்ம தெருவுல எல்லாருமே வீட்ல வேலை பார்க்கிறவங்க.. ஆட்டோ ஓட்டுறவங்க.. அதுனால எல்லார் வீட்லயும் பகல்ல ஆளே இருக்காது தெரியும்ல..
 
தெரியும்கா அதுக்கும் சுதாக்கும் என்ன சம்பந்தம்..??” ஏனோ உள்ளம் பதை பதைக்கத் துவங்கியது..
 
ம்ம் புருசன், பிள்ளை இல்லாத அனாதைகளுக்கு பணம் மாசம் 1000 கவுர்மெண்ட்ல தாறாங்கள்ள.. அதுக்கு ஏற்பாடு பண்ண போன மாசம் ரெண்டு நாளு லீவு போட்டிருந்தேன்… அப்ப உங்க வீட்டுக்கு வாட்டசாட்டமா ஒரு பையன் வந்திருந்தான்.. நான் ஏதோ விருந்தாளின்னு அத பெரிசு பண்ணல கமலா.. ரெண்டு நாளும் வந்திருந்தான்..
 
அப்புறம் பதினைஞ்சு நாளைக்கு முன்னால் உன் பொண்ணும் அந்த பையனையும் ஜோடியா வெளியில பார்த்தேன்.. உன்கிட்ட சொல்லலாமா வேணாமா யோசிச்சேன்.. நம்ம சுதா நல்ல படிக்கிற பிள்ளை அப்படியெல்லாம் தப்பு வழிக்கு போகாதுன்னு தான் உன்கிட்ட சொல்லல..
 
ஆனா இப்ப பாரு ரெண்டு நாளா மேளுக்கு முடியலன்னு லீவ் போட்ருக்கேன்  .. நேத்தும் அந்த பையன உங்க வீட்ல பார்த்தேன்.. ஏதோ என் மனசுக்கு சரியா படல கமலா பொம்பள புள்ள சேதி.. நீ அத நம்பிக்கிட்டுத்தான் இருக்க.. என்ன ஏதுன்னு விசாரிச்சு பாரு.. நான் குத்தம் சொல்லனும்னு சொல்லல.. எனக்கு தெரிஞ்சு சொந்தகாரங்கன்னு ரொம்ப உனக்கு இல்லையே அதான்.. உன்கிட்ட சொல்றேன்.. பிறகும் வள்ளி என்ன சொல்லியிருப்பாரோ கமலா இடிந்து போய் அப்படியே அமர்ந்திருந்தார்..
 
பின் ஏதேதோ பேசி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்க வீட்டுக்குள் நுழையும்போதே தாயை பார்த்த கன்று குட்டியாய் ஓடிவரும் மகள் படுத்திருப்பதை பார்த்தவர் இப்படித்தான் கொஞ்சநாட்களாக நடக்கிறது… படித்த களைப்போ என்று இத்தனை நாள் நினைத்திருக்க இன்றும் அப்படி நினைக்க முடியவில்லை..
 
இருந்தும் ஏதும் சொல்லாமல் சாப்பாட்டை தட்டில் வைத்து மகளை அழைக்க, சுதாவும் ஏதும் பேசாமல் சாப்பிட அமர்ந்தாள்.. அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தவர்..
 
நேத்து நம்ம வீட்டுக்கு யார் சுதா வந்தா..??”
 
ந..நம்.. நம்ம வீட்டுக்கா.. யாரும் இல்லையேமா..!!”
 
அவ்வளவுதான் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் ஆங்காரமாய் வெடிக்க பொய் சொல்றியாடி.. எவன்டி அந்த எடுபட்டவன் சொல்லு..சொல்லு.. பளார் பளாரென மகள் கன்னத்தில் நான்கைந்து அறைகள் வைத்திருக்க அடியை வாங்கினாலும் அப்படியே அசையாமல் நின்றாள்..
 
என்கிட்டயே பொய் சொல்றில்ல..?? யார் அவன் சொல்லு மரியாதையா..?? இன்னும் ஆத்திரம் அடங்காமல் அங்கிருந்த விளக்கமாற்றை எடுத்து அதில் நான்கு சாத்து சாத்த அவ்வளவு அடியையும் வாங்கியபடி நின்றாள் சுதா..
 
அதற்கு மேல் பொறுக்க முடியாதவர் விளக்கமாற்றை தூக்கிப் போட்டு மகளை கட்டி அணைத்துக் கொண்டு.. கெட்டு போறதுக்காடி இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளர்த்தேன்.. உங்கப்பன் சாகும்போது உனக்கு ரெண்டு வயசு.. நான் நினைச்சிருந்தா அப்பவே தப்பான வழிக்கு போயிருக்க முடியாதா..?? ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு வீட்லயும் நாயா பேயா உழைக்கனும்.. நீ நல்லா இருக்கனும்..நல்லா படிக்கனும்னு தானே.. ஏன்டி சுதா உனக்கு என்னாச்சு..
 
அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் தாயில் காலடியில் விழுந்திருக்க அ… அம்மா… நான் தப்பு பண்ணிட்டேன்.. என்னை அடிங்க அடிங்க..!!” காலை கட்டிக் கொண்டு சத்தமாக கதற சட்டென மகளின் வாயை மூடியவர்..
 
சத்தம் போடாத.. எல்லார்க்கும் கேட்க போகுது.. மகளை தூக்கி சமாதானப்படுத்த..
 
இன்னும் இன்னும் அழுகை பொங்கியது அவளுக்கு.. எதிர்காலம் கேள்விக்குறியாய் அவள் முன்னால்…!!!
 
தன் வீட்டு காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தார் பெண் போலிஸ் கமிஷ்னர் திலகவதி.. வெளியில் வள்ளி.. கமலா.. சுதா மூவரும் நிற்க..
 
வா வள்ளி..” மற்றவர்களையும் வரவேற்றவர்.. நல்லாயிருக்கியா வள்ளி..??”
 
கையெடுத்து கும்பிட்டவர் நல்லாயிருக்கேன் தாயி நீங்க எப்படி இருக்கிங்க..??”
 
பளிச்சென சிரித்தவர் நீ பார்க்கிற தானே எப்படி இருக்கேன்னு சொல்லு..!!”
 
 திலகவதி வயது 30 இருக்கும் நல்ல உயரம் அதற்கேற்ற எடை என போலிஸ்கே உள்ள தனி மிடுக்கோடு இருந்தாலும் முகம் சாந்தமாகவே தெரிந்தது… இன்னும் திருமணம் ஆகவில்லை.. அம்மா அப்பா ஊருக்கு போயிருக்காங்க வள்ளி..” உள்ளே வேலைக்காரரிடம் டீயை கொண்டு வர போனில் சொல்லியவர் இவங்க யார் வள்ளி..??”
 
இவங்க என் பக்கத்து வீட்டுக்காரங்க தாயி.. இவ கமலா அவ மக சுதா..
 
திலகவதி இருவரையும் பார்வையிட இருவர் முகமும் இரவெல்லாம் அழுதது போல தெரிய.. சொல்லுங்க யார் ஏமாத்தினா இந்த பொண்ண..!!”
 
தாயி..!!” வள்ளி ஆச்சர்யமாக பார்க்க..
 
இப்ப நாட்ல இதுதானே நடக்குது..?? சொல்லும்மா யார் அவன்..?? உனக்கு எப்படி பழக்கம் தெரிஞ்சவனா..??”
 
கமலா திலகவதியின் காலடியில் விழுந்தவர்  நீங்க தான் என் பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணனும்.. கெட்டு சீரழஞ்சு போய் இருக்கா நல்லவழி காட்டு தாயி..
 
பதறி விலகியவர் அம்மா எழுந்திரிங்க.. அவரை தூக்கி விட்டு அழாதிங்க.. சொல்லும்மா யார் அது..??”
 
சுதாவை பார்த்தவர் சொல்லு எப்படி அவன் பழக்கம் போட்டோ எதாச்சும் இருக்கா..??”
 
இ.இல்ல.. பேஸ் புக் மூலம்தான் பழக்கம்.. பெரிய ஐடி கம்பெனில வேலைப்பார்க்கிறேன்.. மாசம் 2 லட்சம் சம்பளம் சொன்னாங்க..
 
எங்க அவன் ஐடிய ஓப்பன் பண்ணு பார்ப்போம்..??”
 
அதில் இருந்த அனைத்தையும் ஆராய்ந்தவர் அனைத்தும் பொய் தகவல்.. ஃபேக் ஐடி என்பது பார்த்தாலே தெரிந்தது.. அவனது எந்த புகைப்படமும் அதில் இல்லை.. எந்த ஊர்ன்னு சொன்னான்..??”
 
சென்னைல வேலைப்பார்க்கிறேன் சொந்த ஊர் இதான்னு சொன்னாங்க.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம்லாம் பண்ணினாங்க. இங்கயும் வீடு இருக்கு சென்னையிலயும் வீடு இருக்குன்னு சொன்னாங்க.. இப்பத்தான் 6 மாசமா பழக்கம்..
 
திலகவதிக்கு சுதாவின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும் அவள் குழந்தை தனமான அப்பாவி முகத்தை பார்த்து ஏதும் சொல்லவில்லை.. டிப்டாப்பாக உடை அணிந்து இதுபோல பல கேடுகெட்ட பிறவிகள் திரிவது இந்த பெண்ணுக்கு எப்படி தெரியும்..
 
ஆளு பார்க்க சிவப்பா கலரா இருந்தா அவன் என்ன சொன்னாலும் நம்புவியா..?? யாரப்பார்த்தாலும் இப்ப ஐடி கம்பெனில வேலைப்பார்க்கிறேன்னு சொல்றது பேஸனா போச்சு..?? எப்பவாச்சும் அவன் ஐடிய கேட்டுருக்கியா..??”
 
இ.. இல்ல..!!”
 
ம்ம் அப்ப என்னதான் பேசுவிங்க போன்ல.??உன்னை நேரா வந்து பார்த்திருக்கானா..?”
 
ம்ம் நிறைய தரம்.. வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.. இல்லனா வெளியில போவோம்..!!”
 

Advertisement