Advertisement

ஐந்து வருடங்கள் கழித்து,
 
சுதா போலீஸ் உடையில் தாயின் காலடியில் விழுந்து வணங்க கண்ணீர் நிற்கவில்லை தாய்க்கு.. எப்பவோ முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை இன்று திலகவதி அம்மாவால் தன் மகளும் ஒரு போலீஸா..!!
 
“நல்லாயிருத்தா .. மனதார வாழ்த்தியவர் திலகா அம்மாக்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்ட தானே..??”
 
“ஆமாம்மா..” வள்ளியின் காலடியிலும் விழுந்து வணங்கினாள்..
 
“நல்லாயிருத்தா.. இனி உன் வாழ்க்கையில எல்லாம் உன் மனசு போல நடக்கும்..”
 
“வரேன்மா.. வரேன் பெரியம்மா ..” தங்களிடம் சொல்லிக் கொண்டு தன் வண்டியில் வேலைக்கு கிளம்பிச்செல்லும் மகளின் கம்பீரத்தை ரசித்தவர்..
 
“அக்கா இவளுக்கு ஒரு  கல்யாணம் பண்ணி வைச்சுட்டா எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்க்கா..??”
 
“உன் மகளுக்கென்ன குறைச்சல் அழகு ரதியா நிக்குறா…?? அதான் திலகா அம்மா தம்பியே அவள கட்டிக்கிறேன்னு சொல்லியிருக்காரு.. ரொம்ப யோசிக்க விடாம சட்டுபுட்டுன்னு அவள கல்யாணத்துக்கு ஒத்துக்கச் சொல்லு..?? புள்ள ராசாவாட்டம் இருக்காரு.. அவரும் பெரிய வக்கிலு..!!”
 
“உண்மைதான்கா.. சுதாவப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் அந்த மகராசா கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டாரு.. எட்டு ஊருக்கு காவடி எடுத்தாக்கூட இப்படிப்பட்ட பையன்லாம் கிடைக்காது… இவதான் வேணா வேணான்னு சொல்லிட்டே இருக்கா.. திலகாம்மா பார்த்துப்பாங்க.. இவள பத்தி என்னைவிட அவங்கதான் நல்லா புரிஞ்சு வைச்சிருக்காங்க.. !!”
 
இவரும் அவ்வப்போது  தேனுவை போய் பார்த்துவிட்டுத்தான் வருகிறார்.. ஏனோ அவளை தன் பேத்தி என சொல்ல வாய்வரவில்லை.. ஒரு மரத்துப்பறவைகளாய் மாறியிருப்பவர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.. அதைவிட இப்போதுதான் சரியாகிக் கொண்டிருக்கும் தன் மகளின் வாழ்க்கையில் தன்னால் ஒரு பிரச்சனை வருவதை விரும்பவில்லை..
 
தேனு வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடக்க அவளின் நிறை கொலுசு சலங்கை ஒலியை ரசித்தபடி படுத்திருந்தான் தீனா.. மகன்கள் இருவரும் அவன் முதுகில் ஏறி நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. இரட்டையர்களாக பிறந்திருந்த தேவா, வாசு இருவருக்கும் இப்போது நான்கு வயது முடிந்துவிட்டது..
 
கிச்சனில் வேலையாய் இருந்த சுமதி “தேனு போதும் போய் உட்காரு காலு வலிக்க போகுது பாரு…??”
 
“ப்பச் அம்மா அருணும் தேவியும் ஏன் இன்னும் வராம இருக்காங்க..??” அப்பாவின் போனை எடுத்து மாமாவுக்கு போன் செய்ய..
 
“ஆத்தா மருமகளே இதோ தெரு முக்கு வந்துட்டோம்த்தா ..??”
 
“ நேரம் மாமா சீக்கிரமா வாங்க..??” குணாவை அதட்டியவள் போனை வைத்துவிட்டு தீனாவிடம் வந்து “அப்பா ஒழுங்கா எந்திரிங்க மாமா தெரு முக்கு வந்துட்டாங்களாம்..” தம்பிகளை அவன் மேலிருந்து இறக்கியவள் சுமதி கொடுத்த உடைகளை மாட்டியபடி அவர்களையும் கிளப்பிக் கொண்டே “டேய் அம்மா பேரு என்ன..?? அப்பா பேரு..?? அவங்க போன் நம்பர்..?? நம்ம வீட்டு அட்ரஸ்..??” என ஒவ்வொரு கேள்வியாக கேட்க அனைத்திற்கும் அக்கா சொல்லிக் கொடுத்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..
 
தேனு காணாமல் போன மறுநாளில் இருந்து சுமதி கற்றுக் கொடுத்தபாடம் இது.. அதையே அவள் தன் தம்பிகளுக்கும் கற்றுக் கொடுக்க இரண்டு வாண்டுகளும் அக்காவின் சொல்படி கேட்டுக் கொண்டிருந்தன.. அவர்களுக்கு தலைவாரி முடித்தவள் தகப்பனை எழுப்பிவிட மகளின் அதட்டலை ரசித்துக் கொண்டே எழுந்தவன் தன் வேட்டி சட்டைக்கு மாற வெளியில் ஆட்டோ நிற்கும் சத்தமும் குழந்தைகள் மாமாவென ஓடும் சத்தமும் கேட்டது.
 
தீனாவும் சுமதியும் அனைவரையும் வரவேற்க தேவியும் அருணும் இப்போது வளர்ந்திருந்தார்கள்.. இன்று சுமதி வேலைப்பார்த்த கார்மெண்ட்ஸ் இவர்கள் பெயருக்கு மாறுகிறது.. அந்த நிறுவனத்தை விற்கப்போகிறார்கள் தெரியவுமே சுமதி கணவனை தங்கள் முதலாளியிடம் பேச சொல்லிவிட்டாள்.. வெளியில் விற்பதை விட சுமதியிடம் அது செல்வதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி..
 
இத்தனை வருட சேமிப்பு , நகைகள் என அனைத்தையும் கொடுத்திருக்க கொஞ்சம் லோனும் போட்டிருந்தார்கள்.. குணா, பழனி ,அந்த கூட்டாளி என அனைவரும் பணம் கொடுத்திருக்க தீனா அந்த காரமென்ஸின் நிறுவனர் ஆகிறான்.. இத்தனை வருடங்களில் தினமும் சுமதியை அழைத்துச் செல்ல அங்கு வருபவன்தானே மெல்ல மெல்ல அவனுக்கும் இந்த தொழிலில் ஈடுபாடு வந்திருந்தது..
 
அதைவிட தீனாவோடு வேலைப்பார்ப்பவர்கள் வேண்டுமென்றே அவனிடம் அடிக்கடி சண்டையிட மீண்டும் கணவனின் வாழ்க்கை பாதை மாறிவிடுமோ பயந்தவள் இந்த வாய்ப்பு வரவும் அதை தவறவிடவில்லை.. குணாவையும் தங்களோடு சேர்த்துக் கொள்ள முயல அவன் மறுத்துவிட்டான்..
 
“வேணா மாப்பிள்ள எனக்கு அதுதான் சரிவரும்.. தாயும் பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறதான்… பணம்தான் இங்க நிறைய பிரச்சனைக்கு காரணமா இருக்கு..!!” குணாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி தன் தங்கை கணவன் இந்த தொழில் செய்வதில் அனைவரும் கிளம்ப விழா சிறப்பான முறையில் நடைபெற்றது..
 
…………………………………
 
இதோ சுதா வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.. திருமணத்திற்கு சம்மதிக்காதவளை திலகவதி, ராசாத்தி அம்மாள் இருவரும் பேசியே தன் வழிக்கு கொண்டு வந்திருக்க இன்னும் இரண்டு மாதத்தில் சுதாவுக்கும் திலகவதியின் தம்பி அரவிந்துக்கும் திருமணம்.. காலம் சுதாவை கடுமையாக மாற்றியிருக்க அனுபவம் போல ஒரு வாழ்க்கை பாடம் இல்லை முழுமையாக உணர்ந்தாள்..
 
தன்னை ஏமாற்றியவனைத்தான் தேடுகிறாள்.. எப்படியும் தன் கண்ணில் சிக்குவான் அவன் முகத்தை அவளால் மறக்க முடியவில்லை.. எப்படியெல்லாம் ஆசை காட்டினான் அவன் பேச்சுக்கள், ஆசை வார்த்தைகள் இப்போது வேப்பங்காயாய் கசந்தாலும் அந்த பதினைந்து வயதில் தேனாய் இனித்ததை நினைத்து இப்போது வெட்கப்பட்டாள்..
 
எப்படியெல்லாம் பேசினான் அதற்கு தானும் என்ன மாதிரி பதில்..!!! அதைவிட தன்னையே கொடுத்தது அதை நினைத்தால் இன்னும் இன்னும்தான் தன் மேல் ஆத்திரம் வரும்.. போன் ஒலியில் நினைவுக்கு வந்தவள் மணியை பார்க்க அது ஒன்பதை காட்டியது.. ரவுண்ட்ஸ் சென்று வரலாம் தன் புல்லட்டையே கிளப்பியிருந்தாள்.. இந்த ஏரியாவுக்கு வந்து ஒருவாரமே ஆகிறது.. தானே தெருக்களை சுற்றிப்பார்க்கலாம் மெதுவாக வண்டியை ஓட்டியபடி தெருவை கண்காணித்தப்படியே வந்தாள்..
 
எவ்வளவு தூரம் வந்திருப்பாளோ ஒரு லஞ்ச் பேக் மட்டும் தெருவில் கிடக்க பக்கத்தில் யாரையும் காணவில்லை.. வண்டியை விட்டு இறங்கியவள் பேக்கின் அருகில் செல்ல சற்று தள்ளி ஒரு ஸ்கூல் பேக்… ஏதோ தவறாக பட தன் பார்வையையும் காதையும் கூர்மையாக்கியவள் மெல்ல மெல்ல அந்த தெருவை நோட்டமிட தெருவில் ஆள்நடமாட்டம் அதிகமில்லை..
 
ஸ்கூல்பேக் கிடந்த திசையிலேயே கொஞ்சதுரம் நடக்க அடுத்து ஒரே இருட்டுதான்.. ஒரு வீடுமட்டும் தனித்து நின்றது.. யாரையும் காணலையே திரும்பி நடக்க ஒரு பெண்ணின் அழுகுரல் போல ஏதோ கேட்கவும் சட்டென தன் போனின் டார்ச்சை உயிர்ப்பித்து அந்த இடத்தை சுற்றி அடிக்க அங்கு ஒரு  பதினாறு..பதினேழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தபடி ஒரு மனித மிருகம்…
 
சட்டென சுதாரித்தவள் ஓடிப்போய் அவனை ஓங்கி ஒரு மிதி வைத்திருக்க பிச்சைக்காரனை போல தோற்றமளித்தவன் சுதாவின் மிதியால் தடுமாறி தள்ளிப்போய் விழுந்தான்.. அவனை பாராதவள் அந்த பெண்ணை தூக்க நல்லவேளை எதுவும் கைமீறிப்போகவில்லை.. அவள் போட்டிருந்த உடைகளை சரிசெய்ய உதவியவள் அழுது கொண்டிருந்த அந்த பெண்ணை அணைத்து சமாதானம் செய்தாள்..
 
தட்டுத்தடுமாறி  எழுந்து நின்றவனை ஓங்கி ஒரு அறைவைத்தவள் அவன் சட்டைக்காலரை பிடித்த தரதரவென வெளிச்சத்திற்கு இழுத்து வர…. அவன் முகமே தெரியவில்லை… முகமெங்கும் தாடி காடாய் வளர்ந்து அவன் முகத்தை மறைத்திருக்க அதைவிட அவன் போட்டிருந்த உடை எந்த சாக்கடையில் கிடந்து உருண்டானோ.. அவனை ஒரு கையில பிடித்தபடி அவன் போட்டிருந்த சட்டையாலேயே பின்னால் கைகளை கட்டினாள்..
 
“உன் பேர் என்னமா..?? இங்க ஏன் தனியா வந்த..??”
 
அழுது கொண்டிருந்த அந்த பெண் அழுகையை நிறுத்தி தன் ஸ்கூல் பேக்கை மாட்டியபடி “என் பேர் தேவிக்கா.. இங்கதான் பக்கத்து தெருவுல என் வீடு 12 வது படிக்கிறேன் டியூசன் போயிட்டு வர்றேன்கா.. டெய்லியும் அண்ணாதான் வந்து என்னை கூட்டிட்டு போவான் இன்னைக்கு அவனுக்கு காய்ச்சல் அதான் நான் வரவேணான்னு சொன்னேன்..
 
இவன் என் மாமாதான்.. வீட்ல சேர்க்க மாட்டாங்க இவனை …!! டியூசன் விட்டு வரும்போது என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னான்.. நான்தான் பார்க்க பாவமா இருக்கே அம்மா ஸ்நாக்ஸ் வாங்க கொடுத்த காசுல 50ரூபாய் வைச்சருந்தேன் அதைக்கொடுக்கலாம்னு கிட்ட போனா என் வாய பொத்தி அங்க இழுத்துட்டு போயிட்டான்கா..”
 

Advertisement