Advertisement

எனை மாற்றிய தருணம்
                   இறுதி அத்தியாயம்  –  20
                                 
அனைவரும் பதறி சுமதியை அங்கிருந்த நாற்காலியில் படுக்க வைத்திருக்க தீனா உள்நுழைந்திருந்தான்.. அவருக்கும் ராசாத்தி அம்மாள் விபரத்தை சொல்லியிருந்ததால் தன்னாலேயே இந்த அதிர்ச்சியை தாங்கமுடியவில்லை மனைவி என்ன ஆவாள் பதறி அங்கு வந்திருந்தான்..
 
தீனாவோடு பழனியும், குணாவும் வந்திருக்க தண்ணீர் முகத்தில் தெளிக்கவும் அப்போதுதான் மயக்கம் தெளிந்து எழுந்தவள் கணவனை பார்க்கவும் சுற்றி உள்ளவர்களை மறந்து ஓடிச் சென்று கட்டிக்கொண்டு ஓஓஓவென அழ.. தீனாவுக்கும் தாங்கமுடியவில்லை.. இந்த மூன்று வருடங்களில் மனைவி, மகள் இருவரையும் நெஞ்சில் வைத்து பார்த்துக் கொண்டவனாயிற்றே..
 
தேனு காணாமல் போன விசயம் கேட்டதிலிருந்து தன் உயிரில் பாதி பிரிந்து உலகமே இருண்டதாய் மாறியிருக்க மனைவியின் அழுகையையும் அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.. அதிகாலையில் வேலைக்கு வரும்போது கூட மகள் விடவே இல்லை.. தனது பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்து சாக்லேட் வாங்கிக் கொடுத்து மதியம் சீக்கிரம் வருவதாக சொல்லி கிளம்பியிருக்க எங்க போயிருப்பா…?? யார் பார்த்த வேலை இது..??
 
அவன் ரௌடியாய் இருந்த காலத்தில் நிறைய எதிரிகள் உண்டு.. இப்போதுதான் யார் வம்புக்கும் செல்வதில்லையே.. யாரை சந்தேகப்பட அவனுக்கு புரியவில்லை.
 
குணாவிடம் தன்னிடம் அவ்வப்போது வம்பிழுக்கும் அந்த கூட்டத்தை கண்காணிக்கச் சொல்ல பழனி தீனாவிடம் சொல்லிக்கொண்டு தங்களின் பழைய கூட்டாளிகளை பார்க்கச் சென்றான்..
 
தன் மனதை திடப்படுத்தியவன் சுமதியின் தோளைத்தட்டி “ஏய் லூசுப்பக்கி இப்ப என்னாச்சுன்னு அழற..?? தேனு எங்கயும் போயிருக்க மாட்டா ..?? அவளுக்கு நம்ம ஏரியா நல்ல பழக்கம்தான.. அங்கதான் எங்காச்சும் விளையாடிட்டு இருப்பா… அம்மா வயசானது அதால தேடிப்பார்க்க முடியாது வா நாம போய் தேடலாம் அங்கதான் இருப்பா..??”
 
சுமதிக்குள் லேசான நம்பிக்கை எட்டிப்பார்க்க உண்மையா இருக்குமோ..!! கண்களை வேகமாக துடைத்தவள் மீண்டும் மயக்கம் வருவது போல தடுமாறிய தன்கால்களை திடப்படுத்தி கணவனின் கைகளை இறுகப்பற்றியிருந்தாள்..
 
“வாங்க வீட்டுக்கு போவோம்..”
 
மாலையாகிவிட்டது இதுவரை தேனுவை கண்டுபிடிக்க முடியவில்லை.. அந்த தெருவையே சல்லடையாய் சலித்துவிட்டார்கள் அவர்கள் மட்டுமில்லாமல் அந்த தெருவே தேனுவை தேட அவள்தான் அங்கிருந்த பாதிபேரின் செல்லப்பிள்ளையாயிற்றே..
 
தீனாவுக்கு போன்.. “அண்ணே அவங்கள ஒருத்தன்தான் கிடைச்சான்..  அந்த பழைய சாமான்கள் போடுற குடோன்ல வைச்சிருக்கேன் சீக்கிரமா வாங்க..”
 
“ம்ம்ம் வரேன்டா…” அவனுக்குள் வெறி .. கோபம் .. ஆற்றாமை.. இயலாமை என எல்லாம் ஒன்று சேர்ந்திருக்க நேரம் ஆக ஆக யாராவது தேனுவை பற்றி நல்ல விசயம் சொல்லிவிடமாட்டார்களா..?? ஒருவேளை நாம பணத்தை கேட்டோம்னு இவங்களே தேனுவ தூக்கி வைச்சு ஆட்டம் காட்றாங்களா..?? ஆனா அதுக்கு ஏன் ரெண்டு வருசம் வெயிட் பண்ணனும்.. எதற்கும் நேரா போய் விசாரிக்கிறதுதான் நல்லது…
 
சுமதி அழுதழுதே மயக்கத்தில் கிடக்க ராசாத்தி அம்மாள் இன்னும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்.. மனோகரி அவள் தாய், அருண், தேவி என அனைவரும் இருக்க குணா போலிஸ் ஸ்டேசனுக்கு புகார் அளிக்கச் சென்றிருந்தான்..
 
தீனா காற்றாய் தன் வண்டியை கிளப்பியவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு வந்திருந்தான்.. வண்டியில் இருந்த இறங்கிய வேகத்தில் அங்கிருந்தவனை அடித்து நொறுக்க ஆரம்பித்திருக்க அவன் கத்தல் கதறல் எதுவும் இவன் காதில் விழவில்லை.. தன் மகளின் முகம் மட்டுமே நினைவுக்கு வர
 
“சொல்லுடா சொல்லுடா உங்களுக்குத்தான தேனுவ பார்த்தா பிடிக்காது..?? என்ன பண்ணுனிங்க என் பொண்ண..??” அடி வெளுத்து எடுக்க,
 
“அண்ணே…… நான் எதுவுமே பண்ணலைண்ணே..” அவன் காலடியில் விழுந்திருந்தான்.. தீனாவின் காலை கெட்டியாகப்பிடித்துக் கொண்டு “நாங்க எல்லாரும் உங்களவிட்டு எப்போ பிரிஞ்சு பணத்துக்காக பிரச்சனை பண்ணுனோமோ அப்ப இருந்து எங்களுக்கு எதுவும் நல்லதா நடக்கலண்ணே..
 
உங்கள விட்டுட்டு வந்து சேரா கூட்டத்தோடு சேர்ந்து ஒருத்தன் அவங்க பண்ணின தப்புக்கு இவன் மாட்டிக்கிட்டு இப்போ ஜெயில்ல கிடக்கிறான்.. இன்னொருத்தன ஒரு பிரச்சனையில அரிவாளால வெட்டி ஒரு கை எதுக்கும் உதவாம போயிருச்சு…
 
நான் மட்டும்தான் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு கிடக்கேன்.. பிள்ளைகளெல்லாம் நல்லா சாப்பிட்டு பலநாள் ஆச்சுண்ணே.. என் பொண்டாட்டிக்கூட உங்க கிட்ட போய் மன்னிப்பு கேட்டு உங்கள மாதிரி ஏதாச்சும் வேலைக்குப்போக சொல்றா… என் பிள்ளைக மேல சத்தியமா நான் பாப்பாவ எதுவும் பண்ணலைண்ணே… என்னை நம்புங்க..!!” அவன் காலை பிடித்தபடி விடாமல் கெஞ்ச…
 
இவனும் இல்லையா..?? அப்போ யாரு..?? குணா அங்கு வேலைப் பார்ப்பவர்களை விசாரித்தவரை அவர்கள் யாருக்கும் இதில் தொடர்பில்லை தெளிவு படுத்தியிருந்தான்.. அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்தவன் வாழ்க்கையில் முதல் முறையாக கடவுளை வேண்ட ஆரம்பித்தான்..
 
கடவுளே எனக்குன்னு நான் எதுவுமே வேண்டினதில்லை.. என் பொண்ணு மட்டும் நல்லபடியா கிடச்சிட்டா போதும் ..உடம்பெல்லாம் அலகு குத்தி அக்கினிச்சட்டி எடுக்குறேன்.. என் பொண்ண கண்ணு முன்னாடி கொண்டு வந்துடுத்தா.. எப்படி எப்படியே முரடனாய், கோபகாரனாய், ரௌடியாய் இருந்தவனை பாசம் இந்த அளவுக்கு மாற்றியிருக்க தேனு இல்லாத வாழ்க்கையை அவனால் சிந்திக்க கூட முடியவில்லை..
 
பழனி தீனாவின் தோளைத்தொட்டு “இப்போ என்னண்ணே பண்றது..?? இவங்கதான் தேனுவ தூக்கி நம்மக்கிட்ட ஆட்டம் காட்றாங்களோன்னு நினைச்சேன்..”
 
“ம்ம் அவன வீட்டுக்கு போகச்சொல்லுடா..!! தடுமாறி நடந்தவனை நிறுத்தி தன் சட்டைப்பையில் இருந்த பணத்தை எண்ணாமல் கூட அவன் சட்டையில் வைத்தவன் “பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு வாங்கிக்கொடு..”
 
“அண்ணே…”கதறியவன் தீனாவை அணைத்து கண்ணீர் விட,
 
“ப்பச் போடா கிளம்பு..”
 
கண்களை துடைத்தவன் “நான் பசங்களுக்கு சாப்பாட வாங்கி கொடுத்துட்டு அங்க வீட்டுக்கு வர்றேன்ணே.. பாப்பா அங்கதான் இருக்கும்..”
 
குணா தீனாவுக்கு போன் செய்திருக்க,
 
“மாப்பிள்ள உடன வீட்டுக்கு வாங்க தேனு வந்திருச்சு..”
 
சடாரென எழுந்தவன் “என்ன சொல்றிங்க..?? பாப்பா நல்லாயிருக்கா தானே…??”
 
“ரொம்ப நல்லாயிருக்கா அப்பா அப்பான்னு ஒரே அழுகை.. சீக்கிரமா வீட்டுக்கு வாங்க மத்த எல்லாத்தையும் நேரா பேசிக்கலாம்..”
 
“ம்ம்ம் இந்தா வந்துட்டேன்..” தன் அருகில் நின்றிருந்த பழனியையும் அந்த கூட்டாளியையும் பாய்ந்து அணைத்துக் கொண்டவன் “என் பொண்ணு வந்துட்டாளாம்டா…!!” மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை…
 
பழனி வண்டியை கிளப்பியவன் “அண்ணே ஏறுங்க.. நானே வண்டி ஓட்டுறேன்..”
 
“ம்ம் வண்டியில் ஏறியவன் டேய் நீயும் பிள்ளைகளுக்கு என்ன வேணும்னு வாங்கி கொடுத்துட்டு வீட்டுக்கு வா… பாப்பாக்கு இன்னைக்கு பொறந்த நாள்.. ராத்திரி சாப்பாடு அங்கதான் பொண்டாட்டி பிள்ளைகள கூட்டிட்டு வந்திடு..”
 
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. ச்சே நாம எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம்.. அண்ணன பத்தி தெரிஞ்சும் அவர் பணத்தை கொடுக்காம என்னென்ன பேசினோம் அவ்வளவையும் மறந்திட்டு இன்னைக்கு நம்மள சேர்த்துக்கிட்டாரா.. இப்பக்கூட மாறாம இருந்தா நான் மனுசனே இல்ல.. மனதிற்குள் புது உத்வேகம் வந்திருக்க தன் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை வாங்க ஹோட்டலை நோக்கி நடந்தான்…
 
இங்கு தீனா வீட்டிற்கு வர அந்த தெருவே தீனாவின் வீட்டில்தான் தேனுவை ஆளாளுக்கு தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்க சுமதியை தவிர மற்ற பெண்கள் ஆளுக்கு ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.. குணா பிறந்த நாள் சமையலுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி கொடுத்திருக்க மனோகரியின் மேற்பார்வையில் அனைத்து வேலைகளும் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருந்தது..
 
தீனா வண்டியில் இருந்து இறங்ககூட இல்லை.. தேனு அப்பா என பாய்ந்து வந்திருக்க.. “என் தங்கம் …செல்லம்.. என்ன பெத்த ஆத்தா வந்துட்டியாடா..!!” மகளை வாரி அணைத்து முகமெங்கும் முத்தமிட மகளும் அவனை விடவில்லை.. நொடிக்கு ஒரு அப்பா சொல்லி அவனுக்கு முத்தமிட்டது…
 
“ப்பா அழதாப்பா… பாப்பா வந்துட்டேன்.. அழாத..” கண்களை துடைத்துவிட அப்போதுதான் தன் கண்ணீரே அவனுக்கு தெரிந்தது… கண்ணீரை துடைத்த கைகளை நெஞ்சோடு அணைத்தவன்..
 
“சாமி.. தங்கம். எங்கடா போனிங்க..?? அப்பாவ விட்டுட்டு..??”
 
“ப்பா பூச்சாண்டி தூக்கிட்டு போயிட்டான்..”
 
“பூச்சாண்டியா..??” அங்கிருந்த கூட்டத்தை விலக்கி கண்களால் மனைவியை தேட அங்கு ஒரு வயதான பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தாள்.. குணாவை பார்த்தவன் “தேனு எங்க இருந்தா..?? யார் கூட்டிட்டு வந்தாங்க..??”
 
அந்த வயதானவரை காட்டியவன் “அவங்கதான் கூட்டிட்டு வந்தாங்க மாப்பிள்ள … நாலு தெரு தள்ளி ரோட்டுல நடந்து வந்துட்டு இருந்தாளாம்.. இவங்க அடிக்கடி சுமதி வேலைக்கு போற பஸ்ல ரெண்டுபேரையும் பார்த்திருப்பாங்க போல அதான் தேனுவ தனியா பார்க்கவும் நம்ம அட்ரஸ தேடி இங்க தூக்கிட்டு வந்தாங்க…”
 
“நாலு தெரு தள்ளி இவ எப்படி போக முடியும்..??”
 
“அதான் மாப்பிள்ள எனக்கும் புரியல.. !! தேனு யாரோ பூச்சாண்டி தூக்கிட்டு போனதா சொல்றா.. விடியட்டும் மெல்ல மெல்ல விசாரிப்போம்.. நீங்க போய் சுமதிய பாருங்க..?? நாங்க மத்த வேலையை பார்க்கிறோம்..”
 
சுமதியை பார்க்கவும் தேனு அம்மாவென அவளிடம் தாவிக்கொள்ள மகளை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.. மனைவியின் முகத்தை பார்த்தவன் இந்த நான்கைந்து மணி நேரத்திலேயே ஓய்ந்து போய்விட்டாள்.. முகம் அழுகையால் சிவப்பாய் மாறியிருக்க தலைமுடியெல்லாம் கலைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்..
 

Advertisement