Advertisement

எனை மாற்றிய தருணம்
                  அத்தியாயம்  –  19
 
மறுநாள் அதிகாலையிலேயே குணாவும் அவன் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க வீடே வெறிச்சென்றிருந்தது.. ராசாத்தி அம்மாள் தன் பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தவர் ,
 
“இந்த பிள்ளைக இல்லாம வீடே நல்லாயில்லத்தா..?? இந்த தங்கப்பிள்ளையும் பாரேன் காலையில இருந்து அதுகள ஒவ்வொரு ரூமா போய் தேடிட்டு இருக்கு.. இருந்தாலும் தேவி மாதிரி ஒரு பிள்ளைய பார்க்கவே முடியாது.. இந்த வயசில எம்புட்டு அறிவு.. எல்லார் மேலயும் எம்புட்டு பாசம்.. நம்ம தேனு அருணு ரெண்டு பேரையும் எவ்வளவு பொறுப்பா பார்த்துக்குது…
 
சின்ன பிள்ளையில நீயும் இப்படித்தானாமே உங்க அண்ணன் சொன்னார்.. அதான் இம்புட்டு பாசமா இருக்கார் உன்மேல.. எனக்கே அவ அங்க போனத தாங்க முடியல.. உன் அத்தாச்சியும் பாவம்தான் பெத்த பிள்ளைகள விட்டுட்டு இருக்கிறது எம்புட்டு கஷ்டம்..?? நல்லவேளை இப்போவாச்சும் உங்க அண்ணன் வீட்டுக்கு வரச்சொன்னாரே..!!
 
ஆத்தா சுமதி காலாகாலத்துல நீங்களும் இன்னொரு பிள்ளைய பெத்துக்கோங்க.. அப்பத்தான் நம்ம வீடு நல்லாயிருக்கும்.. இந்த பய வேற என்னை இட்லி கடை போட வேணான்னு சொல்லிட்டான் எனக்கு பொழுதே போகல.. ம்ம் நான் என் பேத்தியோட கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றேன்.. இந்த தீனா பய வந்தா சாப்பிட சொல்லு.. இந்த பழனியும் இவனும் காலையிலயே எங்க போனாங்கன்னு தெரியல..?? பழைய சகவாசம் வராம இருந்தா சரி..”
 
ராசாத்தி அம்மாளுக்கு தட்டில் டிபனை வைத்துக் கொடுத்தவள் “அப்படியெல்லாம் மாற மாட்டாங்கமா..?? அதான் நாளையில இருந்து வேலைக்கு போறாங்க தானே… எல்லாம் சரியாகிடும்.. நீங்க சாப்பிட்டுங்க… பாப்பாக்கும் இட்லி ஊட்டி வேற டிரஸ் மாத்தி தர்றேன்..”
 
சாப்பிட்ட பின் அவர் தன் பேத்தியோடு கிளம்பிவிட தீனாவுக்காக காத்திருக்க துவங்கினாள்..  அண்ணன் சொன்னத சொல்லவே மறந்துட்டோமே.. கண்டிப்பா வேணாம்னுதான் சொல்வார்.. ம்ம் பார்ப்போம்..
 
அடுத்த அரைமணி நேரத்தில் தீனாவும் பழனியும் வந்திருக்க வரும்போதே தீனாவின் முகம் கோபமாய்.. எதுவும் பேசாமல் டிபனை வைத்தவள்.. பழனி இருப்பதால் எதையும் கேட்கவும் முடியவில்லை.. எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடிக்கவும்..
 
“அ.. அண்ணே இப்போ என்னண்ணே பண்றது..??”
 
“என்னனா.. அப்படியே விட சொல்றியா..?? என்னைப்பத்தி தெரியும்தானே..??”
 
“தெரியும்.. ஆனா அவங்க எந்த தைரியத்துல இப்படி பண்றாங்க..!!”
 
“வேற என்ன இன்னும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னுதான்..?? சரி நீ கிளம்பு.. காலையில வெள்ளன வந்திரு வேலைக்கு போகனும்..”
 
“அப்ப இதுண்ணே..??”
 
“அதான் ஒருநாள் டைம் கொடுத்திருக்கேன்ல.. பார்த்துக்கலாம்.. நாளைக்கு சாயங்காலம் வரை பொறுமையா இருப்போம்..”
 
கூட்டாளிகளோடு சண்டை வந்த மறுநாளே பழனி தான் கொடுக்க வேண்டிய பணம் முழுவதையும் தீனாவிடம் கொடுத்திருக்க மற்ற மூவரும்தான் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தனர்.. இருமுறை போனில் பேசியவன் இன்று நேராகவே போய் அவர்களை மிரட்டி நாளை மாலை வரை கெடு வைத்திருந்தான்..
 
பழனி கிளம்பவும் தீனா கட்டிலில் படுத்திருக்க என்னாச்சு இவருக்கு..?? முகமே சரியில்லையே.. ரொம்ப கோபமா இருக்கார் போல.. இப்போ போய் எப்படி பேசுறது..?? தானும் சாப்பிட்டவள் பொறுமையாய் மற்ற வீட்டு வேலைகளை துவங்கிவிட்டாள்..
 
 சற்று நேரம் அமைதியாய் படுத்திருந்தவனுக்கு ஏனோ இந்த அமைதி பிடிக்கவில்லை போல.. “ஏய் பொண்டாட்டி என்னடி ரொம்ப அமைதியா இருக்க..?? இந்த பிள்ளைகள இன்னும் பத்து பதினைஞ்சு நாளைக்கு வைச்சிருந்து அனுப்பியிருக்கலாம்.. பாரு தேவி இருந்திருந்தா எதாச்சும் என்கிட்ட கேட்டுட்டே இருக்கும்.. இப்போ நான்தான் பேச கூட ஆள் இல்லாம தனியாளாகிட்டேன்.. நீ ஒரு ஊமச்சி.. அப்படியே வாயத்திறந்தா முத்து கொட்டிரும்னு யோசிச்சு யோசிச்சு பேசுவ.. என் மக எங்கடி..?? அவ எப்படா  பேசுவான்னு இருக்கு…!!”
 
சுமதிக்கு சிரிப்பு வந்தாலும் அவன் சொல்வது உண்மைதான்.. இந்த மனுசனுக்குள்ள இவ்வளவு பொறுமையான்னு தீனா தேவியிடம் பேசும்போதுதான் தெரியும்… அவளும் தன் மாமனை மடக்கி மடக்கி கேள்வி கேட்க பொறுமையாய் பதில் சொல்வானே தவிர சிடுசிடுப்போ கோபமோ எப்போதும் இருக்காது..
 
இப்போது அவனுள் ஏதோ அமைதியின்னை இருப்பதை உணர்ந்தவள் கணவனுக்கு அருகில் சென்று கட்டிலில் அமர தலையை தூக்கி மனைவியை பார்த்தவன் தலையை மனைவியின் மடியில் வைத்திருந்தான்.. மெதுவாக கணவன் தலைகோதி,
 
 “என்னங்க ஆச்சு..?? ஏதாச்சும் பிரச்சனையா..??”
 
“ம்ம்ம்.. எனக்கு தரவேண்டிய பணம் கிட்டதட்ட 10 லட்சம் என்கிட்ட வேலை பார்த்தவனுக வாங்கியிருந்தாங்க.. இப்போ தாங்கடான்னு கேட்டா  ஆளுக்கொரு சாக்கு சொல்றாங்க.. அதான் கொஞ்சம் கடுமையா பேசியிருக்கேன்… நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள பணத்தை தரலைன்னா.. நான் அவங்க வீட்லயே வசூல்ராஜா வேலை பார்க்கனும்னு..!!”
 
“ஏங்க இந்த வம்பு தும்பு வேணாம்னுதானே வேலைக்கு போக சொன்னேன்.. மறுபடி ஆரம்பிச்சா என்ன அர்த்தம்..!!”
 
“அதுக்கு இந்த பணத்தை வாங்க வேணான்னு சொல்றியா..?? நான் அடிதடி.. ரௌடி தனம் செஞ்சாலும் இது என்னோட உழைப்புக்கான கூலி… எனக்குத்தான் குடும்பம்னு ஒன்னு அமையல இவனுகளாச்சும் நல்லாயிருக்கட்டும்னு இவங்களும் இவங்க குடும்பமும் என்னைப்பத்தி என்ன நினைச்சாலும் பரவாயில்லைன்னு தேவைன்னு கேட்டப்போயெல்லாம் பணத்தை கணக்கு பண்ணாம அள்ளி அள்ளி கொடுத்தேன்…
 
ஏய் நான் சின்னவயசில் பிச்சை எடுத்தவன்டி… இந்த சூடெல்லாம் இந்த பணத்துக்காகத்தான் கண்டவன்கிட்டயும் வாங்கினேன்… பணத்தோட அருமை மத்தவங்களவிட எனக்கு நல்லா தெரியும்.. ஏன் நான் நினைச்சிருந்தா பணத்தை யாருக்கும் கொடுக்காம வைச்சிருந்திருக்கலாம்தானே..!! இவனுகள கூடப்பிறந்த தம்பிக போலத்தான நினைச்சேன் இப்ப என்னடான்னா முதுகுல குத்துற மாதிரி பண்றாங்க… பார்ப்போம்..”
 
சற்று நேரம் அமைதியாய் இருந்தவள் “ஏங்க நானும் தேனும் உங்க வாழ்க்கையில வரவும்தானே அவங்க இப்படி நடந்துக்கிறாங்க.. நாங்க வேணா வீட்டவிட்டு போயிறவா..??”
 
பேசுவதை அவள் மடியில் படுத்தபடி கேட்டுக் கொண்டிருந்தவன் கோபத்தில் பளார் என ஒரு அறை வைத்திருக்க,
 
சட்டென கணவன் இப்படி அறைவான் எதிர்பார்க்காதவளுக்கு கண்ணீர் சரசரவென ஊற்ற அவன் முகத்திலும் கண்ணீர் துளிகள் விழ ஆரம்பித்தது.. அப்படியே மனைவியின் முகத்தை தன் முகத்தின் மீது அழுத்தியவன் கண்ணீர் துளிகளை தன் முகத்தாலேயே துடைக்கும் வேலையை பார்த்தான்… காயமும் அவனே மருந்தும் அவனே என்பது போல..!!
 
சற்று நேரம் அமைதிதான் இருவரும் எதுவும் பேசவில்லை.. மனைவியை விட்டு தள்ளி அமர்ந்தவன் “இதோ பார் புள்ள இன்னைக்கு சொல்றதுதான் இனி எப்போதும் எக்காரணம் கொண்டும் நீயும் தேனும் என் வாழ்க்கையில இருந்து  போகனும்னு நினைக்க கூடாது.. அப்படி போகனும் நினைச்சிங்கன்னா மறுபடி வந்து பார்க்க நான் உயிரோட இருக்க மாட்டேன்.. அதுதான் உன் ஆசைனா நீ போயிக்கலாம்…அனாதையா இருந்தவனுக்கிட்ட குடும்பம்னா என்ன..?? பாசம்னா என்னன்னு காட்டிட்டு இப்ப வெளியில போவேன்னு சொல்லுவியா…?? இதுக்கு அப்பவே நானும் செத்துப்போயிருக்கலாம்… கணவனின் முகம் அவ்வளவு இறுக்கமாய் மாறியிருக்க,
 
எப்போ முதல்முதலா உன் மேல வந்து மோதினேனோ அப்ப இருந்து நீயும் தேனுவும் மட்டும்தான் என் சொந்தம், என் உலகம் உங்க ரெண்டு பேருக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் உனக்கே புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் மறுபடி மறுபடி என்னை சொல்ல வைக்காத..??” அவனது குரலில் அவ்வளவு கோபம் இறுக்கம்.. அதற்குமேல் என்ன பேசியிருப்பானோ.. சட்டென கணவனை பேச விடாமல் தன் இதழ் கொண்டு அணைத்திருக்க அவனது கோபத்தை அதில் காட்டத்துவங்கியிருந்தான்..
 
கதவடைத்திருந்ததால் எந்த பயமும் இல்லாமல் கணவனின் கோபத்தை தாங்கிக் கொள்ளும் வேலையை மட்டும் சுமதி பார்த்துக் கொள்ள அதில் அவளுக்கு மகிழ்ச்சிதான்.. இவரு சொன்னது எல்லாம் உண்மைதான் எனக்காக மட்டும்தானே இந்த வேலையை விட்டாங்க.. சற்று நேரத்திலேயே தீனாவின் கோபம் போய் மோகம் வந்திருக்க தன் முரட்டு அணைப்பால் நெகிழ்ந்திருந்த உடையை இன்னும் நெகிழ வைக்கும் வேலையில் இறங்கியிருந்தான்..
 
மனைவியை மொத்தமாய் தன்னுள் தாங்கிக்கொள்ள என்றுமில்லாத அதிரடி அதில் தெரிந்தது.. சுமதி குளித்து உடை மாற்றிக் கொண்டிருக்க கணவனின் பார்வை முழுதும் மனைவி மேல்தான்.. அவன் உள்ளமெங்கும் அவ்வளவு மகிழ்ச்சி.. இது போல ஒரு வாழ்வெல்லாம் அவனுக்கு கனவுதான்.. ஏனோ சிறுவயதில் மற்றவர்கள் தன்கண் முன்னாலேயே பெண்களிடம் தவறாய் நடக்க அப்போதிருந்தே அவன் மனதிற்குள்ளும் ஒரு பயம் இருக்கும் …
 
நம்மள மாதிரி ஆம்பளைகளுக்கு ஆசை வந்திட்டா சின்ன பொண்ணு பெரிய பொண்ணுன்னு வித்தியாசம் தெரியாம அந்த நேர ஆசைய மட்டும் தீர்த்துக்கிட்டா போதும்ங்கிற நிலை வந்திடுமோ..?? அப்படிதான் அவன் பார்த்தவரை வயதான் கிழவன்கள் முதல் இளவயது ஆண்கள் வரை வயது வரம்பு இல்லாமல் பெண்களிடம் தவறாய் நடந்திருந்தனர்..
 
அதனால்தானோ என்னவோ இவன் பெரியவனாகி தன் இளம் வயதிலும் பெண்களிடமிருந்து தள்ளியே இருந்தான்.. தேவையில்லாம பேசப்போய் நாமளும் அவங்ககிட்ட தப்பா நடந்துகிட்டா என்ன பண்றது.. வெளியில் பார்க்க ரௌடி போல இருந்தாலும் அவனுள்ளும் ஒரு பயவுணர்வு.. அப்போதெல்லாம் அவன் கேட்ட பெண்களின் அழுகுரல் இப்போதும் தனிமையாய் மாடியில் படுத்திருக்கும் போது ஒலிப்பது போல இருக்கும்..
 
இப்போது தனக்கென ஒருத்தி வரவும் அவன் ஆசையெல்லாம் வெளிவந்திருக்க சுமதியும் அதை சுகமாகவே தாங்கிக் கொண்டாள்.. “என்னயா இப்படி பார்க்கிற..?? ..  என்னமோ புதுசா பார்க்கிறா போல..!!” மனைவியை வாவென்பது போல கையை நீட்டி அழைக்க..
 
“போய்யா போ.. நீ இன்னும் குளிக்கல.. போய் குளிச்சிட்டு வா..??”
 
“ப்பச் வாபுள்ள ஓவரா பண்ணாம..?? நான் எதுவும் பண்ணல உன்னை..?? கொஞ்சம் பக்கத்துல உட்காரு… நாளைக்கெல்லாம் வெள்ளன வேலைக்கு போயிட்டா அப்புறம் ராத்திரிக்குத்தான் வருவேன்..!!”
 
சுமதி தன் தலையில் அடித்துக் கொண்டவள் ச்சே அண்ணன் சொன்னத கேட்கவே இல்லையே… வேகமாக கணவனிடம் சென்று அமர்ந்தாள்..
 
“சொல்லுயா…?? அதுக்கு முன்னாடி நானும் ஒன்னும் சொல்லனும்..??”
 
“உன்னை ரொம்ப இம்சைப்படுத்துறேனா..??”
 
“ச்சு…” கணவனின் கைகளில் சுள்ளென்று ஒரு அடிவைக்க..
 
“உண்மையாதான் புள்ள கேட்கிறேன்..??”
 
“ச்சோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இதானா நீங்க கேட்கனும்.. போயா போயா..!!”
 
“ம்கும்.. சரி நீ என்ன சொல்லனும்..??”
 
“நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேட்கனும்..??”
 
“என்ன புள்ள ரொம்ப பில்டப் பண்ற..?? ஏதும் வில்லங்கமா..??”
 
“ச்சே ச்சே இல்லங்க.. நான் கார்மென்ட்ஸ்ல வேலை பார்த்தேன் சொல்லியிருக்கேன் தானே..??”
 
“ம்ம்ம்..”
 
“ நான் பதினைஞ்சு வயசுல வேலைக்கு சேர்ந்தேன் கிட்டத்தட்ட பத்து வருசம் அங்கதான்… அந்த ஓனர்க்கு என்னை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு குழந்தைங்க இல்ல.. அங்க வேலை பார்த்த எல்லாரையும் தன் பிள்ளைகளா பார்த்தாங்க..”
 
“சரி அதுக்கு என்ன பண்ண..??”
 
“ச்சு சொல்றத கேளுங்க…?? அங்க வேலை பார்த்தப்போ அண்ணே என்னை அடிக்கடி பார்க்க வரும்.. அதோட அண்ணியோட குணம் தெரிஞ்சு சம்பள பணத்தில பாதிய மட்டும்தான் கொடுக்க சொல்லும் மீதிய அவங்க கிட்டயேதான் கொடுத்து வைச்சோம்.. நான் திடிருன்னுதான வேலையை விட்டு நின்னேன் அந்த பணத்தை வாங்கவே இல்லை.. இப்போ அங்க வேலை பார்த்த சூப்பர்வைசர் வேலையை விட்டு நின்னுட்டாங்களாம் அதான் நான் அங்க பத்து வருசம் வேலைபார்த்ததால என்னை சூப்பர் வைசரா வேலை பார்க்க முடியுமான்னு கேட்டாங்களாம் அண்ணன்கிட்ட.. அண்ணியும் அன்னைக்கு வரும்போது என்கிட்ட இத சொன்னாங்க..”
 
“ஹோய்… என்ன..?? இட்லி கடையே போட வேணான்னு சொல்றேன்.. இப்ப வெளியில வேலைக்கா..?? அடிச்சேன்னு வை..!! பேசாம போயிரு… நீ சொன்ன மாதிரி நான்தான் வேலைக்கு போகப்போறேன்ல.. நீ பாப்பாவ பார்த்துக்கிட்டு வீட்லயே இரு பேசாம..??”
 
“பச் வீட்டுக்குள்ளேயே எவ்வளவு நேரம்ங்க இருக்கிறது… அதோட சூப்பர்வைசர் வேலை ஒன்னும் கஷ்டமில்ல.. நீங்களும் காலையில வேலைக்கு போயிட்டு சாயங்காலம்தான வருவீங்க அதுவரை எனக்கும் பொழுது போகனும்ல …. ப்ளிஸ் போயிட்டு வரேனே…!!”
 
“ஒன்னும் தேவையில்ல.. நீயும் வேலைக்கு போயிட்டா பாப்பா ஏங்கி போயிரும்  வீட்லயே இரு போதும்..”
 
“அச்சோ பாப்பாவையும் அங்க தூக்கிட்டு போகலாம்ங்க. கைக் குழந்தையெல்லாம் பார்த்துக்க தனி ஆள் இருக்கு.. விளையாட்டு சாமான்கள் , விளையாட தனி இடம் இருக்கு.. நானும் அடிக்கடி போய் பார்த்துப்பேன்.. அதோட அவங்க டிரஸ்ட் வைச்சு ஒரு பெரிய பள்ளிக்கூடம் நடத்துறாங்க.. பெரிய ஸ்கூல்.. அங்க வேலை பார்க்கிறவங்களுக்கு அங்க படிக்க பாதி பணம் கட்டினா போதும்..
 

Advertisement