Advertisement

எனை மாற்றிய தருணம்
                    அத்தியாயம்  –  17  
 
நால்வரும் தீனாவை பார்த்து நடுங்கித்தான் போனார்கள்.. சடாரென இப்படி வந்து நிற்பான் எதிர்பார்க்கவில்லை.. தாங்கள் பேசிய முழுவதையும் கேட்டிருப்பானோ.. அதிலும் அவனது கோபக்குரல் சுமதி கையை பிடிக்க வந்தவனை இரண்டடி பின்னால் எடுத்து வைக்க வைத்திருக்க குழந்தைகள் இருவரும் மாமனை பார்க்கவும் அவன் காலை கட்டிக் கொண்டன..
 
தேவியை தூக்கிக் கொண்டவன் அருணின் கையை பிடித்தபடி வீட்டுக்குள் வர இந்த சூழ்நிலையே அவன் கூட்டாளிகள் நால்வருக்கும் வயிற்றில் புளியை கரைத்தது.. எந்தெந்த சூழ்நிலையில் அவன் எப்படி நடந்து கொள்வான் கூடவே இருந்து அறிந்தவர்கள் தானே.. இந்த அமைதி தங்களுக்கு நல்லது இல்லையே…
 
தன் கையில் வைத்திருந்த பையை சுமதியிடம் கொடுத்தபடி தேவியை  மனைவியிடம் ஒப்படைத்தவன் அவன் கூட்டாளிகளை பார்வையிட்டபடி அவர்கள் காலடியில் மதுபாட்டில் உடைந்து கிடந்ததையும் பார்த்தான்.. அவர்களின் அருகில் வந்து சுமதியின் கையை பிடிக்க வந்தவனை ஓங்கி ஒரு அறை வைத்திருக்க அந்த அடியின் சத்தத்தில் அறையை தாங்கள் வாங்கினாற் போல மற்றவர்கள் உணர்ந்தார்கள்..
 
அறை வாங்கியவன் அப்படியே சுழன்று கீழே விழுந்திருக்க மற்றவர்கள் பயந்து இன்னும் பின்னால் போய் நின்றிருந்தார்கள்.. டேய் உன் வீடு அந்த கோவில் பக்கத்துல தான..?? உங்க வீடெல்லாம் அடுத்த ஏரியாதானே..?? வீட்ல உங்க பொண்டாட்டி, தங்கச்சி எல்லாரும் இருக்காங்க தான..??”
 
அச்சோ அவங்கள ஏன் விசாரிக்கிறாரு.. அனைவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது..
 
என்னங்கடா பேசாம இருக்கிங்க..?? அங்க தான் போகப்போறேன்.. நீங்க பண்ணின மாதிரி நானும் எல்லாரையும் கைப்பிடிச்சு இழுக்குறேன்..??” அசால்ட்டாக வாசலை நோக்கி நடக்க வேகமாக அவன் வழியை மறித்திருந்தவர்கள்,
 
 ஐயோ அண்ணே.. ஏன் எங்க வீடுக்கெல்லாம்..??”
 
அதென்னடா நீங்க மட்டும் என் பொண்டாட்டி மேல கைய வைக்க போகலாம் …?? மரியாதை இல்லாம பேசலாம்..?? நான் பண்ணினா என்ன தப்பு..?? உங்களுக்கெல்லாம் பொண்டாட்டி… அண்ணி.. தங்கச்சின்னு பெரிய குடும்பமே இருக்குள்ள … அவங்களையும் கையப்பிடிச்சு இழுத்துத்தான் பார்க்கிறேனே.. என்ன நடக்குது பார்ப்போம்..
 
வேகமாக அவனிடம் சென்றவர்கள் அண்ணே இன்னைக்கு வந்த எவளோ ஒருத்திக்காக தம்பிக போல இருந்த எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்தலாமா..!!”
 
ஓஓஓ…. இப்ப என்ன சொல்ல வர்றிங்க..?? எங்க தெளிவா சொல்லுங்க பார்ப்போம்..
 
கட்டிலில் சென்று அமர, எப்படியாச்சும் பேசி அண்ணன நம்ம வழிக்கு கொண்டு வந்திரனும்… அண்ணே நாமெல்லாம் எத்தனை வருச பழக்கம்.. உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருக்குன்னு எங்களுக்கு தெரியாம போச்சுண்ணே..!! தெரிஞ்சிருந்தா எங்க அக்கா தங்கச்சிக யாராச்சும் ஒருத்திய பிடிச்சு உங்களுக்கு கட்டி வைச்சிருப்போம்..
 
இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல.. இந்த புள்ளைய வீட்டவிட்டு வெளியில விரட்டுங்க..!! எவனோடயோ வாழ்ந்து பிள்ளை பெத்தவ எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.. விரட்டி விடுங்க வேற நல்ல பொண்ணா பார்த்துக்கலாம்.. இந்தப் புள்ளைய பார்த்தாலே கடுப்பாகுதுண்ணே..!!”
 
சுமதியை முறைத்தபடி அவர்கள் சொல்லிக் கொண்டிருக்க கணவனை பார்க்கவும் யானை பலம் வரப்பெற்றவள் குழந்தைகளை அறையில் விட்டு உள்ளேயே விளையாடச் சொல்லிவிட்டு கதவடைத்து அடுப்படியில் வந்து நின்றிருக்க இவர்களை பேசுவதை கேட்க கேட்க உள்ளம் கொதித்தது..
 
சரிங்கடா… நீங்க இவ்வளவு சொல்லும் போது என்ன..?? உங்க எல்லாருக்கும் இந்த புள்ளைய பிடிக்கல..?? நான் விரட்டி விட்டுருறேன்.. உங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகி பிள்ளைக இருக்குதானே..!!”
 
ம்ம்ம் இருக்குண்ணே..!!”
 
அப்ப ரொம்ப நல்லது அவங்க யாரையும் எனக்கும் பிடிக்கல..?? நீங்களும் விரட்டி விடுங்க.. அப்புறமா மெதுவா வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்..??”
 
கோபப்பட்டவர்கள் அண்ணே எங்க எல்லாருக்கும் பிள்ளைக்குட்டிக இருக்குக..??”
 
சடாரென எழுந்தவன்… அப்ப தேனு எனக்கு யாருடா..?? கைக்கு மாட்டியவர்களை பின்னி எடுக்க அண்ணே …. அண்ணே கெஞ்சி கெதற விடவில்லை… ஏன்டா.. தே… பசங்களா…!!” இன்னும் என்னென்ன கெட்டவார்த்தைகள் இருக்கோ அனைத்தையும் அவர்களிடம் அள்ளி வீச, சுமதியின் முன்னால் தங்களை அடித்தது இப்படி கெட்ட வார்த்தையால் திட்டுவது அவர்களுக்கு அவமானம் தாங்கவில்லை..
 
ஏன்டா கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க இங்க வர்றது இந்த புள்ளைக்கு பிடிக்கலைன்னு தானே உங்கள இங்க வரவேணான்னு சொன்னேன்..?? அப்பவே புரிஞ்சுக்க வேணா இவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு.. !! இப்ப அவளை கல்யாணம் பண்ணி கூடவே வைச்சிருக்கேன்.. இப்ப என் வீட்டுக்குள்ளேயே வந்து அவ முன்னாடியே தண்ணி அடிக்கிறிங்கன்னா உங்களுக்கு எவ்வளவு திமிரு…??
 
நான்தான்டா தப்பு பண்ணிட்டேன் இவ கோபமா போயிருந்தப்போ நீங்க இங்க தண்ணி அடிக்கும் போதே நான் தடுத்திருக்கனும்.. இவ இல்லாம வீடு ஒரு மாதிரியா இருந்துச்சுன்னு நீங்க பண்ணினதுக்கு நான் பேசாம இருந்தேன்ல அதான் இந்த அளவுக்கு வந்துட்டிங்க.. உங்களுக்கு என் மேல பயம் இருந்திருந்தா இவ மேல அண்ணிங்கிற மரியாதை வந்திருக்கும்.. ஏன்டா நீ இவள வேலைக்காரி மாதிரி வேலை ஏவுற…?? சுமதியிடம் மரியாதை இல்லாமல் பேசியவனை இன்னும் இரு அறை வைத்திருந்தான்..
 
உங்க கூட பழக ஆரம்பிச்ச இத்தனை வருசத்துல என்னைக்காச்சும் என்னை உங்க வீட்டுக்கு கூப்பிட்டுருக்கிங்களா..?? இல்ல தீபாவளி ,பொங்கலுக்கு ஒரு வேளை சாப்பாடுதான் கொண்டு வந்து கொடுத்திருக்கிங்களா…?? எல்லாம் எனக்கு தெரியாம இல்ல.. என்னைப் பத்தி நீங்களும் உங்க குடும்பமும் என்ன நினைக்கிறிங்கன்னு..!!
 
நான் பொறுக்கி ,ரௌடி என்னை வீட்டுக்குள்ள சேர்த்தா உங்க வீட்டு பொம்பளைகள ஏதும் பண்ணிருவேன்னு நினைச்சிங்க தானே… அப்படி பட்ட நீங்களா உங்க ,அக்கா தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்க.. என்ன பார்த்தா என்ன அவ்ளோ மக்காவா தெரியுறேன்…!!
 
அப்புறம் நீங்களாம் என்கிட்ட எவ்வளவு பணம் வாங்கியிருக்கிங்க தெரியுமா..?? கைமாத்தா,கடனா ஒவ்வொருத்தனும் லட்சக்கணக்குல வாங்கியிருக்கிங்க.. எனக்குத்தான் குடும்பம்னு ஒன்னு இல்ல நீங்களாச்சும் சந்தோசமா இருக்கட்டும்னுதான் இவ்வளவு நாள் நான் அத திரும்ப கேட்கல..
 
ஆனா என் குடும்பத்துக்குள்ளேயே வந்து என் பொண்டாட்டி பிள்ளையவே தப்பா பேசுவிங்க… அத கேட்டுட்டு இருந்தா நான் என்ன ஆம்பள..?? மரியாதையா கொடுக்க வேண்டிய எல்லா பணமும் என் கைக்கு வரனும்.. எல்லார்க்கும் எவ்வளவு பணம் தரனும்னு நியாபகம் இருக்கா..?? இல்ல கணக்க சொல்லவா..?? அனைவரின் முகமும் பேயறைந்தாற் போலிருந்தது..
 
டேய் இங்க வா..?? அங்கு பெரியவன் போல அமர்ந்திருந்தவனை சொடுக்கு போட்டு அழைத்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்து நீயா முடிவெடுத்து நான் பார்ப்பேன்னு நிறைய வேலைக்கு அட்வான்ஸ் கேட்டியாமே..?? என்னடா பிராடா..?? அதுவும் என்கிட்ட ..?? நான் இந்த தொழில விடுறதா முடிவெடுத்துட்டேன்.. இனி என் பேர வைச்சு யார்கிட்டயும் எதுவும் வாங்க கூடாது.. இனி அவங்கவங்க வேலையை பார்த்தா மட்டும் போதும்.. என் வழியில குறுக்க வராதிங்க..!!
 
அப்புறம் முக்கியமா இன்னொன்னு இனி ஒரு தரம் தேனு என் பிள்ளைன்னு நீங்க யாராச்சும் சொல்றத கேட்டேன் எவனையும் உயிரோட பார்க்க முடியாது.. புரியுதா போங்க வெளிய..?? இனி எவனும் அண்ணன்னு சொல்லிட்டு இங்க வரக்கூடாது..
 
மழை பெய்து ஓய்ந்தாற் போலிருக்க இப்படி பேசுவான் அடிப்பான் இவர்கள் எதிர்பார்க்கவில்லை.. தாங்கள் ஒன்று நினைத்து செய்ய இங்கு வேறு நடந்து விட்டது.. தீனா சொல்வது அனைத்தும் உண்மைதான் இவர்கள் குடும்பத்தாருக்கு தீனாவை பிடிக்கவே பிடிக்காது.. அவன் கொடுக்கும் பணத்தில் குளிர் காய்பவர்களுக்கு அவனை பிடிக்காது.. ஏதோ அவனை தூரத்தில் பார்த்தாலே அறுவருத்து எங்க தங்கள் குடும்பத்து பெண்களிடம் தவறாக நடந்து கொள்வானோ என்பது போல அவனை விட்டு தூரமாய் ஒதுங்கி ஒதுங்கி போவார்கள்..
 
ஒருமுறைகூட பாசமாய் பேசியதில்லை நடந்ததில்லை.. இதெல்லாம் புரியாமலிருக்க தீனா ஒன்றும் சிறுவன் இல்லையே..!! முன்பிருந்த தீனாவுக்கு அவர்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை..  அவர்கள் வீட்டுக்கெல்லாம் ஒருமுறை கூட சென்றதில்லை.. ஆனால் இவர்கள் தன் மனைவியை திட்டுவதா..?? அதுவும் வீட்டவிட்டு வெளிய பிடிச்சு தள்ளுற அளவுக்கு..!!
 
மற்ற மூவரும் வெளியில் சென்றிருக்க ஒருவன் மட்டும் தீனாவின் காலடியில் விழுந்திருந்தான்.. அண்ணே ஏதோ கேப்பார் பேச்ச கேட்டு அண்ணிக்கிட்ட தப்பா பேசிட்டேனே..?? அதுக்காக என்னை போகச் சொல்லாதிங்க…?? எனக்கு உங்கள விட்டா வேற யாரையும் தெரியாது.. எந்த வேலையோ நீங்க எங்க இருக்கிங்களோ அங்க நானும் இருக்கேன் ப்ளிஸ்ண்ணே…!!”
 
டேய் பேசாம போயிடு செம கோபத்துல இருக்கேன்.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..?? வீணா என்கிட்ட அடிவாங்கி சாகாத..??”
 
பரவால்லண்ணே நீங்க நாலு அடிவேணுனாலும் அடிங்க.. ஆனா என்னை போக மட்டும் சொல்லிறாதிங்க..??”
 
 அவன் காலடியில் விழுந்து கெஞ்சியவன் சுமதியை பார்த்து அண்ணி கொஞ்சம் சொல்லுங்கண்ணி.. ஏதோ புத்தி கெட்டதனமா நடந்துக்கிட்டேன் மன்னிச்சிருங்க.. ப்ளிஸ் அண்ணி..” சுமதிக்கே பாவமாய் இருந்தது..  இதில் தான் என்ன முடிவெடுக்க… எப்போதும் போல அமைதிதான்..
 
சற்று நேரம் கெஞ்சியவன் தீனாவுடன் அமர்ந்திருக்க எவ்வளவு நேரம் கழிந்ததோ சரி வீட்டுக்கு போ… நான் அப்புறமா போன் பண்றேன்..
 
அண்ணே…..!!!”
 
சரி சரி போ… நான் போன் பண்றேன்… ஏதாச்சும் சாப்பிட்டு போ.. இவனுக்கு ஏதாச்சும் சாப்பிட கொடு புள்ள ..??”.
 
ஒரு பத்துநிமிசம் பொறுங்க சமைச்சிருவேன் சாப்டே போகலாம்.. நீங்க ஏன் முடிவெட்டிட்டு குளிக்காம இருக்கிங்க போங்க..
 
ம்ம் இதோ குளிச்சிட்டு வர்றேன்.. டேய் கொஞ்சம் இருடா வந்துருறேன்..
 
 சுமதி வேகமாக சமையலில் ஈடுபட.. அவளை பார்த்தவனுக்கு இவங்க  அமைதியாலேயே அண்ணன கட்டிப்போட்டிருக்காங்க போல…!! ரொம்ப வாயத்திறக்க மாட்டுறாங்க.. சுமதி பேசியே இன்று தங்களை திட்டும்போது தான் கவனித்தான்… இதுவரை எத்தனையோ முறை வீட்டிற்கு வந்தாலும் சிறு தலையசைப்பு அவ்வளவுதான்.. நாமளும்தான் இவனுக பேச்சை கேட்டு இப்படியெல்லாம் பண்ணியிருக்க கூடாது… இப்போதுதான் செய்த தவறு புரிந்தது..
 

Advertisement