Advertisement

எனை மாற்றிய தருணம்
                  அத்தியாயம்  –  15
 
முதல் புருசன் பேரா..!! ஐயோ அம்மா.. அதுக்கு நான் எங்க போவேன்..?? ஒரு வேளை அண்ணன் நம்மள பத்தி சொல்லியிருக்குமோ..?? தெரிஞ்சுதான் கேட்கிறாரா இல்ல..?? தெரிஞ்சுக்கலாம்னு கேட்கிறாரா..??
 
“என்ன புள்ள புருசன் பேரத்தான கேட்டேன்..?? அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற..?? என்ன அதுக்குள்ள மறந்துட்டியா..?? தேனுவோட அப்பா பேர சொல்லு..?”
 
நாம இவர தேடி வந்திருக்கவே கூடாது..!! இப்ப நாம உண்மைய சொல்லுவோமா..?? இல்ல. அப்ப சொன்னதே சொல்லிருவமா..??   
 
“என்ன புள்ள இவ்வளவு யோசிக்கிற..?? பேரு மறந்திருச்சா…??”
 
எப்போதும் போல சுமதி அமைதியை கையில் எடுத்துக் கொள்ள அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் தீனா.. திருமணம் நடந்து இத்தனை மாதங்களில் இப்போதுதான் தன்மனைவி என்ற உரிமை உணர்வோடு பார்க்கிறான்.. அவள் இதழ் முத்தம் வேறு இன்னும் வேண்டும் போலிருக்க ம்ம்ம் இப்ப போய் நம்ம  கையில, கால்ல அடிப்பட்டிருக்கே..??
 
சுமதியின் இடுப்பில் கைக்கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் “சொல்லுபுள்ள உன் புருசன் பேர் என்ன..??”
 
தீனாவிடம் தன்னை பற்றி சொல்ல வேண்டும்தான் அதை சொல்ல இப்போது தயக்கமாக இருக்க, “தேனு இப்போ முழிச்சிருவா..?? அவளுக்கு பால் கலந்து கொடுக்கனும்.. உள்ள வாங்க நான் கூட்டிட்டு போறேன்..”
 
மகளின் பேரை சொல்லவும் “சரி நீ உள்ள போ நான் அப்புறமா வர்றேன்..”
 
“இல்ல வாங்க..” அவனை வற்புறுத்தியவள் கைத்தாங்கலாக அழைத்து கட்டிலில் படுக்கவைத்தே தன் அறைக்குள் நுழைந்திருந்தாள்..
 
இருவரும் இளவயதுதான் கணவன் மனைவி உறவை பற்றி தெரியாதவர்கள் இல்லை.. இத்தனை நாள் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் இருந்தவர்களுக்கு இந்த முத்தம் அவரவர் மனநிலையை புரிய வைத்திருக்க இவங்க அடுத்து என்ன பண்ணியிருப்பாங்க..!! என்று சுமதியும் ச்சே அவக்கூட இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம்.. இருவரும் அடுத்தவரை நினைத்தபடி அந்த இரவை கழித்தார்கள்..
 
குணா வந்து இரண்டு மூன்று நாட்கள் முடிந்திருக்க அதிகாலையில் வேலைக்கு செல்பவன் மதியம் 3 மணி போல வந்துவிடுவான்.. அதிலிருந்து தீனாவுடன் தான் பேச்சு சிறுவயது முதல் தாங்கள் வளர்ந்த கதை, தாய் இல்லாமல் பட்ட கஷ்டம் என அனைத்தையும் சொல்ல தீனா பதில் சொல்லாவிட்டாலும் கேட்டபடியே இருப்பான்… முதலில் தயங்கி தயங்கி துவங்கியிருந்தாலும் தீனாவும் இப்போது சரளமாக பேசத்துவங்கியிருந்தான்..
 
அவனின் பிள்ளைகளும் தயக்கம் விட்டு தீனாவிடம் பழக ஒவ்வொரு நாளும் இனிமையாகவே கழிந்தது.. ராசாத்தி அம்மாளுக்கும் நல்ல பொழுது போக்கு தன் பேரன் பேத்திகளை போல அவர்களுக்கு கதை சொல்ல தேனுவும் நன்றாக தவழ துவங்கி குணாவின் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான்..!! அவர்கள் இருவரும் தேனுவை பாசமாய் பார்த்துக் கொள்ள அதிலும் தேவி தேனுவையும் அருணையும் கவனிக்கும் பாங்கே அவ்வளவு அருமையாக இருக்கும்…
 
 தீனாவின் உடல்நிலை சரியான பிறகே இட்லி கடையை திறந்து கொள்ளலாம்  சுமதி நினைத்திருக்க வீட்டு வேலையே சரியாக இருந்தது.. அதைவிட தீனாவிற்கு அனைத்தும் சுமதியே செய்ய பொழுதுகள் வேகமாக கரைந்தது..
 
எப்போதும் போல தீனாவிற்கு வெந்நீரை பாத்ரூமில் வைத்தவள் அவன் குளித்து வரவும் அறைக்குள் விட்டு எப்போதும் அடுத்த வேலையை கவனிக்க செல்பவள் அன்று ஏதோ வேலையாக அவர்கள் அறைக்குள் நுழைய தீனாவை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்..
 
இதுவரை தீனாவை இப்படி அரைகுறையாக பார்த்ததில்லை.. அவள் அறைக்குள் வரும்போது தீனா முதுகு காட்டியே கண்ணாடியில் தலைகோதியபடி நிற்க அவன் முதுகெங்கும் கருப்பு கருப்பாக சூடு தழும்புகள்.. அவளறியாமல்  அருகில் சென்றிருக்க கைதானாகவே அவன் முதுகை வருடியது..
 
பின்னால் வரும்போதே கண்ணாடியில் சுமதியை பார்த்தவன் அவள் வருடவும் ஒரு நிமிடம் கண்மூடி சுகத்தை அனுபவிக்க இப்போது பின்புறம் இருந்தே கணவனை இறுக அணைத்தவள் தீனாவின் முதுகில் தன் முகத்தை புதைத்திருக்க கண்ணீர் துளிகள் சூடாக அவன் முதுகில் இறங்கியது..
 
முதலில் மனைவியின் அண்மையை ரசித்தவன் அவளின் கண்ணீரை எதிர்பார்க்கவில்லை..
 
“ஏ… ஏ…புள்ள  என்னாச்சு..?? எதுக்கு இப்போ அழற..??” கைகொடுத்து அவளை பின்னால் அணைத்து முன்னால் இழுத்திருக்க அவன் வெற்று மார்பில் முகத்தை புதைத்து இன்னும் இன்னும் அழுகையில் கரைந்தாள்..
 
“ஏய் என்னாச்சு..?? என்னடி உடம்பு ஏதும் சரியில்லையா..?? ஏதும் பிரச்சனையா..?? யாரும் உன்னை ஏதும் சொல்லிட்டாங்களா…??” தீனாவின் எல்லா கேள்விகளுக்கும் இல்லையென மட்டும் தலையை ஆட்ட,
 
“ஏட்டி கிறுக்கி இப்ப அழுகையை நிறுத்த போறியா என்ன..??” தன் மார்பில் இருந்து முகத்தை தூக்கி முகத்தை துடைத்தவன்.. “என்னமா.. என்னாச்சு..!!” இந்த நாட்களில் இருவரும் உடலால் நெருங்காவிட்டாலும் மனதால்  நெருங்கியிருந்தார்கள்..
 
“சொல்லு என்னாச்சு..??”
 
“இல்ல… அவன் முதுகை கைகாட்டி  யாரு இதெல்லாம் செஞ்சா..??” அவன் தழும்புகளை வருட..
 
“அடிப்பாவி இதப்பார்த்துத்தான் அழறியா..?? போடி இவளே.. என் வாய்ல நல்லா வந்திரும் பாரு…?? எப்பவோ வந்த காயத்துக்கு இப்ப அழுவாங்களா..?? பாப்பா எங்க..?? வீடே அமைதியா இருக்கு உன் அண்ணே எங்க ..?? பிள்ளைகளாம் எங்கடி..??” பேச்சை மாற்ற முயல,
 
“அண்ணே பிள்ளைக எல்லாத்தையும் வெளியில கூட்டிட்டு போயிருச்சு..?? பாப்பாவும் அழுது அவங்க மாமாவோட போயிட்டா.. அம்மா வெளியில போயிட்டாங்க..” வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கண்ணீர் நிற்கவில்லை..
 
“இதப்பாருடா இந்த புள்ள இவ்வளவு பேசிருச்சு..??” சுமதியை இன்னும் நெருக்கி அணைத்திருந்தான்.. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ பிரிய மனம் இல்லாட்டாலும்,
 
“உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.. முதுகுல இவ்வளவு சூடு இருக்குனா இதெல்லாம் யார் வைச்சா..?? அப்போ ரொம்ப வலிச்சிருக்கும்ல..!!” ஏனோ இப்போதுதான் சூடு வைத்தாற்போல அந்த வலியை உணர அவளால் தாங்க முடியவில்லை..
 
இட்லி எடுக்கும் போது லேசா ஆவி அடிச்சாலே கை அவ்வளவு வலிக்கிது..  இவ்வளவு சூடு வாங்கியிருக்காருன்னா அப்போ எவ்வளவு வலிச்சிருக்கும்..
 
“ம்ம் என்ன பத்தி சொல்ல என்னயிருக்கு..??” மனைவியோடு ஹாலுக்கு வந்தவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து தன் அருகில் கைகாட்டியிருந்தான்..
 
“என்னை பெத்தவங்க யாருன்னு எனக்கு தெரியாது.. தெருவுல பிச்சை எடுக்கிறவங்கதான் என்னை வளர்த்தாங்க..என்னைப்போல நிறைய பேரு இருந்தாங்க.. பகலெல்லாம் பிச்சை எடுப்போம் கால்வயிறு அரைவயிறுதான் சாப்பாடு போடுவாங்க.. எல்லாப் பணத்தையும் வாங்கி வைச்சிட்டு குடிச்சிட்டு வந்து எங்கள போட்டு அடிப்பாங்க.. அவங்க வைச்ச சூடுதான் இதெல்லாமே..!! டெய்லி டெய்லி ஒரு ஆளாளுக்கு வைப்பாங்க.. நாங்களாம் அழறத பார்த்தா அவங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்..!!
 
பத்துவயசு வரை அவங்ககிட்டதான் இருந்தேன்.. ஒரு நாள் ராத்திரி எட்டுவயசு பொண்ணுக்கிட்ட ஒருத்தன் தப்பா நடக்க போனான்… நான் தடுக்கப் போனப்ப என்னை தள்ளி விட்டதுலதான் இந்த காயம்.. நெற்றியை காட்ட பெரிய தழும்பு நீளமாய் இருந்தது.. எனக்கு ரொம்ப கோபம் வந்து அங்க இருந்த இரும்பு கம்பியால அவன் தலையில அடிச்சிட்டேன்.. ரத்த வெள்ளத்துல அவன் கிடக்கவும் எல்லாரும் அவன் செத்துப் போயிட்டான்னு பயந்து போய் ஆளாளுக்கு ஒரு திசையில ஓடிட்டோம்.. நான் இந்த ஏரியாக்கு வந்தேன்..
 
அப்படியே போச்சு என் வாழ்க்கை.. படிப்பு இல்ல.. சொந்தபந்தம் இல்ல.. இங்கயும் வந்து பிச்சைதான் எடுத்தேன்.. யாரும் போடாட்டாலும் பரவால்ல மறுபடி அடிச்சாங்க.. அப்போதான் புரிஞ்சுச்சு இவங்ககிட்டலாம் கெஞ்சுனா வேலை நடக்காதுன்னு அதான் அப்போல இருந்து இந்த அடிதடி.. அப்புறம் அதுவே தொழிலா போச்சு..
 
அம்மாதான் அப்பப்போ சாப்பாடு போடுவாங்க என் வயிறு வாடாம பார்த்துப்பாங்க.. என்னடி மறுபடி அழ ஆரம்பிச்சுட்ட..?? ஏய் லூசு.. விடு பக்கி..!! இதுவரைக்கும் என் வாழ்க்கைய பத்தி யார்கிட்டயும் சொன்னதில்ல.. யாரோட அனுதாபத்தையும் வாங்கனும்னு நினைக்கல.. உன்கிட்டதான் சொல்லியிருக்கேன்.. ஏய்.. என்ன புள்ள என்ன..??” கேட்க கேட்க சுமதி அழுகை தாங்காமல் அவனை கட்டிப்பிடித்தவள் விடவே இல்லை.. கதறி கதறி அழ..
 
“ஏய் லூசு விடுடி விடு ..” முதுகை தட்டிக் கொடுத்தவன் அவள் அழுது முடிக்கட்டும் காத்திருந்தான்.. “என்னமா என்னாச்சு இப்போ..?? எப்பவோ நடந்து முடிஞ்சுபோச்சு அதெல்லாம் இப்ப நான் நினைக்கிறது கூட இல்ல.. விடு..”
 
ஒவ்வொரு மனிதனையும் நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும் இந்த சமுதாயம்தானோ..!! கண்களை துடைத்தவள் “உங்க அம்மா அப்பாலாம் இப்போ எங்கயாச்சும் இருப்பாங்க தானே..??”
 
“ம்ம் இருக்கலாம் .. இல்லாமலும் இருக்கலாம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் அனாதைதான்.. இப்ப தேனுவும் நீயும் வந்திருக்கிங்க.. இதுதான் என் குடும்பம் இதுவே போதும் நீங்க ரெண்டு பேர் மட்டும்.. என் மேல என்ன கோபம் இருந்தாலும் என்னை விட்டு போகாம இருங்க அது போதும்..”
 
சுமதி தான்தான் வாழ்க்கையில் தாய் தந்தை இல்லாமல் அதிகமாக கஷ்டங்களை அனுபவித்தோம் என்று நினைத்திருக்க தீனாவுக்கு எவ்வளவு கஷ்டங்கள் கை அவன் முதுகை வருடுவதை நிறுத்தவே இல்லை..
 
“என்னடி இப்படி பார்க்கிற ..??”
 
 

Advertisement