Advertisement

 
குணாவின் எளிதில் பழகும் குணம் தீனாவையும் தன் கூட்டுக்குள் இருந்து லேசாக வெளிவர செய்திருக்க, “உங்கள இங்க விட்டுட்டு வீட்டுக்கு போனா எனக்கு மனசே சரி இல்ல மாப்பிள்ள..!! நான் வரும்போது சுமதியில்லையா.. ஒருவேளை கோபம் குறையாம இருந்தா நீங்க கஷ்டப்படுவிங்கன்னு தோனுச்சு பசங்களுக்கும் லீவுதான் அதான் ஒரு பத்துநாளைக்கு இங்கன தங்கி உங்கள பார்த்துக்கலாம்னு கிளம்பி வந்துட்டேன்.. அதோட என் புள்ளைகள பார்த்தா சுமதியும் இங்க வந்திருவான்னு தோனுச்சு.. ஆனா இவ என் தங்கச்சி அதான் உங்களுக்கு அடிப்பட்டிருக்குன்னு சொல்லவும் வந்துட்டா போல..!!”
 
அனைவருக்கும் படுக்கையை விரித்துக் கொடுத்தவள் அடுப்படியை முடிந்த அளவு சுத்தம் செய்து கொண்டிருக்க அண்ணனும் தீனாவும் பேசுவது காதில் கேட்டது.. இவருக்கு அடிபட்டது அண்ணனுக்கு எப்படி தெரிஞ்சுச்சு அதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துச்சா..!! இதெல்லாம் எப்படி முடியும்.. ஆனாலும் தீனா தன் கோப முகத்தை குணாவிடமும் அவன் பிள்ளைகளிடமும் காட்டாமல் புன்னகைப்பதே நிம்மதியாய் இருந்தது..
 
“நீங்க கட்டில்ல படுங்க மாப்பிள்ள.. நான் இப்படி கீழப் படுத்துக்கிறேன்.. ராத்திரி பாத்ரூம் போனும்னா என்ன எழுப்புங்க.. நான் கூட்டிட்டு போறேன்.. படுக்கவா காலையில வேலைக்கு போகனும்..” ஏனோ குணாவிற்கு இது தன் தங்கை வீடுதான் என்ற இலகு நிலையில் உரிமை போல தன் பிள்ளைகளையும் அழைத்து வந்திருக்க தீனா என்ன நினைப்பான் என்றெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை.. அவனை பொறுத்தவரை தன் தங்கை, தங்கை கணவன்.. அவர்கள் வீடு அவ்வளவுதான்..
 
“ம்ம் நீங்க படுத்துக்கோங்க..” குணா படுத்த நிமிடத்தில் தூக்கத்திற்கு செல்லவும் தீனாவுக்கு உறக்கம் வரவில்லை.. கண்ணை மட்டும் மூடி படுத்திருந்தான் மனம் நிம்மதியில்.. இந்த வீட்டில் இத்தனை ஆட்களா..!!  எப்போதும் ஆளே இல்லாமல் வெறிச்சென.. இவன் கூட்டாளிகள் சீட்டாட, குடிக்க மட்டும் இதை பயன் படுத்துவார்கள் இரவில் தனிமைக்கு பயந்தே தீனா மாடிக்கு சென்றுவிடுவான்.. ஏனோ நிலவும் நட்சத்திரங்களும் அவனுக்கு துணை போல தோன்றும்..
 
அடுப்படியை ஓரளவுக்கு சுத்தப்படுத்தியவள் மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம் வெளிக்கதவு பூட்டி விளக்குகளை அணைத்து விடிவிளக்கை போட்டபடி தீனாவை பார்க்க அவன் தூங்காமல் இருப்பது தெரிந்தது.. அவங்க கிட்ட நல்லாயிருக்கிங்களான்னு ஒருவார்த்தையாச்சும் கேட்டிருக்கலாம்.. தூங்காமத்தானே இருக்காங்க இப்ப பேசுவோமா.?? ம்ம் அண்ணன் இருக்கும் போது எப்படி..?? யோசித்தவள் தன் அறைக்குள் நுழைந்து தேனுவின் அருகில் படுத்துக் கொண்டாள் .. மறுபுறம் தன் அண்ணனின் பிள்ளைகள்..
 
தூங்கும் பிள்ளைகளின் நெற்றியில் முத்தமிட அண்ணன் பிள்ளைகளின் பாசத்தில் கண்கள் கலங்கியது.. இருவரும் வீட்டிற்குள் வரவும் அத்தையை ஒரு வழியாக்கிவிட்டார்கள்.. அத்தை அத்தை என நொடிக்கொரு தரம் முத்தமிட்டு அவளை கட்டி அணைத்து,
 
“ஏத்த எங்களவிட்டுட்டு போன.. நாங்க ரெண்டுபேரும் எப்படி அழுதோம்னு தெரியுமா..?? இப்ப அம்மாவும் வீட்ல இல்ல அப்பா மட்டும்தான் காலையிலயே சமைச்சு வைச்சுட்டு வேலைக்கு போயிடுறாங்க.. நாங்க மட்டும்தான் தனியா இருக்கோம் ரொம்ப பயமாயிருக்குத்த..??” ஏழு வயது அருண் அத்தையின் இடுப்பை கட்டிக் கொண்டு அழ,
 
பெரிய மனுசி போல அவன் முகத்தை துடைத்த தேவி “டேய் அண்ணா இந்த தேனுப்பாப்பாக்காக தான்டா அத்தை இங்க வந்தாங்க போல..!! பாரேன் என் கையை பிடிச்சிட்டு விடவே மாட்டுது.. கிளுக்கி சிரித்தவள் அத்தை பாருங்க என் கையை அவ வாய்க்குள்ள திணிக்கிறா..!!”
 
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று போல தேனுவின் சிரிப்பில்  இருவரும் அத்தையை மறந்து அவளிடம் விளையாட சென்றுவிட்டார்கள்.  எப்படியாச்சும் பேசி அண்ணே இங்க இருந்து போறதுக்குள்ள அண்ணிய வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லிறனும்..
 
ஏதேதோ யோசனை எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு..?? அன்னைக்கு வெட்ட வந்தவங்கள போல இப்பவும் பழிவாங்க இப்படி யாரும் பண்ணியிருப்பாங்களோ..?? அந்த நேரத்தில அண்ணே எப்படி அங்க வந்தாங்க..?? இவங்க மறுபடியும் இந்த வேலையத்தான் பார்ப்பாங்களா..?? இல்ல வேற வேலைக்கு போக முடிவெடுத்தாங்களா..?? ஏகப்பட்ட கேள்விகள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாலும் இங்கு வந்ததில் அவ்வளவு நிம்மதி .. தன் கூட்டிற்குள் வந்த நிலை..
 
எவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தாளோ உறக்கம் வரவில்லை.. தேனு லேசாக சினுங்க பாலை ஆற்றி மீண்டும் தூங்க வைத்து அண்ணன் பிள்ளைகளின் தலையை கோதியபடி அமர்ந்திருந்தவளுக்கு தீனாவிடம் ஒருவார்த்தையாவது பேசியிருக்கலாம்..
 
மத்தவங்களுக்கு எப்படியோ முதல்ல பாப்பாவோட பார்க்கும்போதே அந்த அடியாளுக கிட்ட இருந்து நம்மள தப்பிச்சு ஓடத்தானே சொன்னாங்க.. அதோட கத்தி குத்து வாங்கி கிடக்கும்போது கூட நம்மள விட்டுட்டு போனும்னு நினைக்கல.. அவ்வளவு அடிப்பட்டிருந்தாலும் தூக்கிட்டு தானே போனாரு.. தேனுவ இவ்வளவு அன்பா பார்த்துக்கிறாங்க.. இந்த வேலையை மட்டும் விட்டுட்டா போதும்.. ஏனோ தீனாவை பார்க்க வேண்டும் போலிருக்க,
 
எழுந்துவிட்டாள்.. கிட்ட இருந்து பார்த்துட்டு வந்திருவோம்..வெளியில் வர கட்டிலில் காணவில்லை அண்ணன் மட்டும் உறங்கி கொண்டிருக்க எங்க போனாங்க..?? நடக்க ரொம்ப கஷ்டமாயிருக்குமே..?? வெளியில் வந்து பார்க்க பாத்ரூமிலும் இல்லை.. அச்சோ எங்க போனாங்க ..!!வீட்டை சுற்றி வர ஆரம்பித்தாள்.. மணி பனிரெண்டை நெருங்கியிருக்க அந்த ஏரியாவே உறக்கத்தில்தான்..
 
“இங்க இருக்கேன்..??” தீனாவின் குரலில் திடுக்கிட்டவள் மாடிப்படியை பார்க்க அதில் அமர்ந்திருந்தான்.. முதலில் தேடும் போது அங்கு கவனிக்கவில்லை.. முதல் படியில் தான் அமர்ந்திருந்தான்..
 
“என்னத்தான புள்ள தேடுன.. ??”
 
“ம்ம்.. இல்ல காணோம்னு…”
 
“அடங்கப்பா இத்தனை நாளு நீதான என்னை பார்த்துக்கிட்ட..!!”
 
என்ன சொல்வாள் இன்றுதான் கணவன் என்ற எண்ணம் தன் மனதில் நன்றாக வேரூன்ற ஆரம்பித்தது என்றா..!!!
 
சற்று நேரம் அமைதியில் இருந்தவளை பார்த்தவன் மெதுவாக எழுந்து நிற்க .. நிற்கமுடியவில்லை .. இதுபோல எவ்வளவோ கடந்து வந்தவன்தானே அடுத்த அடியை வைக்க சுமதி ஓடிவந்து அவன் அடிபடாத கையை தன் தோளில் தாங்கியிருந்தாள்..
 
ஒருமுறை அவன் மனம் அதிர்ந்து துடிக்க தனக்காக ஒருத்தி, தனக்கென்றே ஒருத்தி சுமதியை பார்த்தாலும் கையை எடுக்கவில்லை.. இன்னும் அழுத்திப்பிடித்துக் கொண்டான்.. வீட்டுப்பக்கம் சுமதி நடக்க “இங்க உட்காருறேன்..” திண்ணை போல இருந்த இடத்தை காட்டினான்.. அங்கு தீனாவை அமரவைக்க்வும்,
 
“உனக்கு தூக்கம் வந்தா நீ போய் தூங்குபுள்ள..?? நான் இங்கன கொஞ்சநேரம் இருந்துட்டு இப்படியே படுத்துக்குறேன்..” இந்த திண்ணையை இப்போதுதான் போட்டிருப்பான் போல.. நீளமாய் ஒரு ஆள் படுத்துக் கொள்ளலாம் அந்த அளவிற்கே இருந்தது.. தீனா காலை நிட்டி அமர்ந்திருக்க உள்ளே போகாமல் நின்றிருந்த சுமதி முதன்முதலாக தீனாவின் அருகில் அமர்ந்தாள்..
 
சுற்றிலும் இருட்டாய் இருக்க யாரும் பார்க்க வாய்ப்பு இல்லை.. தீனாவுக்கு சுமதி தன் அருகில் இருப்பதே போதுமென்றிருக்கவும் அவள் மனம் நோக எதையும் பேசவில்லை.. எந்த சப்தமும் இல்லாமல் நிசப்தமாய்.. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ சுமதியின் கை மெதுவாக தீனாவின் அடிப்பட்ட கையை வருடத் துவங்கியது..
 
“ரொம்ப வலிக்கிதுதா..??”
 
ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தவன் சட்டென்று சுமதியை இறுக அணைத்து அவள் வயிற்றோடு தன் முகம் புதைத்திருக்க,
 
சுமதியின் மனம் அதிர்ந்து இதுவரை முரடன் , கோபக்காரன், குடிகாரன், அடுத்தவரின் குடும்பத்தை தெருவில் நிறுத்தியவன் என்ற ஏகப்பட்ட பிம்மபங்களோடு இருந்த அவன் உருவம் மறைந்து அவனும் எல்லா ஆசாபாங்களும் நிறைந்த சாதாரண மனிதனாய் கண்முன்னால் நின்றான்..  ஆண்டாண்டு காலமாய் பெண்களுக்கென்று கடவுள் கொடுத்த வரம் அன்பு.. எவ்வளவுதான் தப்பு செய்தாலும் தனக்கு பிடித்தவர் என்று வரும்போது அன்பு அவர்கள் செய்த அனைத்து தவறுகளையும் மறக்கத்தான் நினைக்கும் அது போலவே பச்சை குழந்தையாய் தீனா தெரிய அவனை விலக்க மனம் வரவில்லை…
 
  கடும் கற்பாறை என்றெண்ணியிருக்க அவன் பனிப்பாறைதான் என்றுணர்ந்தாள்.. தன் அன்பு என்னும் சூரியனால் அவனை கரைத்துவிடலாம் இனி தானும் தன் வாழ்வும் அவனோடுதான்.. ஒரு காலத்தில் கோபியின் மீதுதான் தனக்கு அதீத காதல் என்றெண்ணம் இன்று தூள்தூளாய் சிதறியிருக்க சுமதியின் கைகளும் தன் கணவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டது..
 
இதற்கு முன் தன் வாழ்வில் எத்தனையோ அடி, வெட்டுக்குத்து , என அனைத்தையும் பார்த்தவனுக்கு இதெல்லாம் சிறிய அடிதான்.. ஆனால் மனம் தான் முன்பு போல இல்லையே… கடலில் காற்றின் சீற்றத்தால் தத்தளிக்கும் படகை போல அவன் மனமும் தத்தளிக்க இந்த அணைப்பு இவனை மீட்டெடுக்கும் என்பது போல இன்னும் இன்னும்தான் அணைப்பு இறுகியதே தவிர சற்று கூட விடும் எண்ணமில்லை..
 
கொஞ்சம் கொஞ்சமாய் வருத்தம் மாறி சுமதியின் அண்மையால் அவனது இளமை விழித்துக் கொள்ள இப்போது வேறுவிதமாய் ரசிக்க துவங்கியது.. மெல்ல வயிற்றிலிருந்து முகத்தை அவள் கழுத்தில் புதைத்தவன் அப்படியே இன்னும் இன்னும் மேலே வர இருவரின் இதயம் துடிக்கும் ஓசையும் அடுத்தவருக்கு கேட்டது.. இரண்டுமே தன் நிலைவிட்டு படபடவென்றடிக்க அதற்கு மேல் தாங்க மாட்டாதவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு அவள் இதழை சிறைசெய்திருந்தான்..
 
                 “பூங்காற்றிலே உன் சுவாசத்தை
                       தனியாக தேடி பார்த்தேன்
                 கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
                       அதை தேடி தேடி பார்த்தேன்
                 உயிரின் துளி காயும் முன்னே
                        என் விழி உனை காணும் கண்ணே
                  என் ஜீவன் ஓயும் முன்னே
                           ஓடோடி வா…..

                 காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
                        கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
                 வழிகின்றதா… நெஞ்சு நனைகின்றதா
                        இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
                 காற்றில் கண்ணீரை ஏற்றி
                        கவிதை செந்தேனை ஊற்றி
                 கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
                        ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
                  ஓடோடி வா….. 
 
இதுவரை எத்தனையோ தவறுகளை தவறென்று தெரிந்தே செய்த தீனாவால் ஒரு பெண்ணை தவறாக தொடும் எண்ணம் எப்போதும் இல்லை.. 32 வயதில் முதல் முதலாய் ஒரு இதழ் முத்தம்.. தன் மனைவி தனக்குத்தான் சொந்தம் என்ற எண்ணம் இன்னும் இன்னும் வேரூன்றியிருக்க இவளை விடும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் தன் மடிக்கு கொண்டு வந்திருந்தான்..
 
முத்தம் ஆரம்பித்த சற்று நேரத்திலேயே சுமதி தன் சுயத்துக்கு வந்திருக்க தீனாவிடம் இருந்து மீளத்தான் முடியவில்லை.. இப்படி வாசல்ல இருந்து முத்தம் கொடுக்கிறாரே..?? யாராச்சும் பார்த்தா என்னாகும் மிகவும் கஷ்டப்பட்டு அவனிடம் இருந்து மீள,
 
“பச்.. என்ன புள்ள இப்போ..??” முத்தம் பாதியில் முடிந்ததில் கடுப்பு..
 
“வாங்க உள்ள போகலாம்..” தீனாவின் கைப்பிடித்து தூக்க,
 
“ஏய் இங்க வா புள்ள.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..” மீண்டும் தன்னிடம் இழுத்துக் கொண்டவன்..”ஆமா உன் முதல் புருசன் பேர் என்ன..?? எங்க அவனப்பத்தி சொல்லு கொஞ்சம்..??”
 
சுமதி என்னது முதல் புருசனா….??? பே…வென விழிக்க ஆரம்பித்தாள்…!!!
 
                                                                   இனி……??????

Advertisement