Advertisement

எனை மாற்றிய தருணம்
                         அத்தியாயம்  -14
 
தீனாவும் தேனும் அவர்களுக்கென்று ஒரு உலகத்துக்குள் தங்களை பிணைத்துக் கொள்ள ராசாத்தி அம்மாளின் மனம் இப்போதுதான் நிறைந்தது.. அனாதையான தனக்கு இவர்கள் உறவு எவ்வளவு உன்னதமோ அது போலத்தானே தீனாவுக்கும் இருக்கும்..
 
மற்றவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தீனாவை பத்து வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் ராசாத்தி அம்மாள்.. மற்றவர்களுக்கு தெரியாத பல விசயங்கள் அவருக்கு தெரியும் அதனால்தான் தன்னை உதாசீனப்படுத்துவது போல பேசினாலும் அவன் வயிறு வாடினால் இவருக்கு தாங்காது..
 
அவனும் கோபத்தில் பலநேரங்களில் எரிந்து விழுவான் இரு நாட்கள் அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துவிட்டால் வீட்டிற்கே சென்றுவிடுவான்.. துணிதுவைப்பது, சாப்பாடு ஊட்டுவது, ஹாஸ்பிட்டல் அழைத்து செல்வது என பெற்ற மகனைவிட ஒரு பங்கு அதிகமாகவே பணிவிடைகள் செய்வான்.. அனைத்தும் அவர் உடல்நிலை சரியாகும் வரை தான் பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும்..
 
இந்த உலகம் விசித்திரமானது உறவின் அருமை தெரியாதவர்களை சுற்றி நிறைய உறவினர்களை வைத்துவிட்டு அதன் அருமை தெரிந்தவர்களை அனாதையாய் விட்டுவிட்டான்.. வேறு வேறு இடத்தில் அனாதையாக இருந்த தீனா, சுமதி, தேனு, ராசாத்தி அம்மாள் என நால்வரும் விதி வசத்தால் ஒன்று சேர்த்திருக்க யாருக்கும் யாரையும் விட மனதில்லை..
 
தந்தை மகள் இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொள்வதை கண்நிறைய பார்த்தவர் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து கொள்ள, சுமதிக்குத்தான் இந்த வீட்டை பார்த்து கண்ணைக்  கட்டியது.. நாம இந்த வீட்ட விட்டு போய் பத்து நாள் ஆகியிருக்குமா..?? அதுக்குள்ள இதென்ன சாக்கடை மாதிரி கிடக்கு.. அடுப்படிக்குள் குடித்து விட்டு போட்ட கிளாஸ்கள் ,பாட்டில்கள், கின்னங்களில் கழுவாமல் விட்ட  மீன் முட்கள் , எலும்புகள்.. சாப்பாடு வாங்கிய பிளாஸ்டிக் கவர்கள், இலைகள் என அனைத்தும் எறும்பு மொய்த்து வீச்சம் தாங்கவில்லை..
 
ராசாத்தி அம்மாள் தங்கி இருந்த அறை முழுவதும் மடித்து வைத்த தீனாவின் உடைகள் அழுக்காய் தரையில்..!! தான் இருந்த அறை இதவிட கேவலமா இருக்குமோ..?? அறையை திறக்க அது மட்டும் சுத்தமாக அவள் விட்டுச் சென்றபடியே , தரையில் சுமதியின் சேலை விரிக்கப்பட்டு அருகில் தேனுவின் ஒன்றிடண்டு உடைகள் சிதறிக்கிடந்தது.. ஏனோ உள்ளுக்குள் குப்பென ஒரு மகிழ்ச்சி தன் சேலை விரித்திருப்பதை பார்த்து..
 
அறையை விட்டு வெளியில் வந்தவளுக்கு எதை முதலில் சரி செய்வது  யோசனை..!!
 
“தீனா தரைக்கு எப்ப சிமெண்ட் போட்ட..?? பாரேன் இப்பத்தான் பார்க்கிறேன் ..??” ஆச்சர்யமாக தரையை தடவியபடி ராசாத்தி அம்மாளின் குரல் சத்தமாய் கேட்க அப்போதுதான் சுமதியும் தரையை கவனித்தாள்.. எல்லா அறையும் சிமெண்ட் தரையாக மாறியிருந்தது..
 
தீனா பதில் சொல்லவில்லை .. வேண்டுமென்றே தேனுவோடு இன்னும் உற்சாகமாய் விளையாட துவங்கிவிட்டான்.. ராசாத்தி அம்மாள் சாப்பிட்டிருக்க சுமதி சாப்பிடவில்லை.. தீனா சாப்பிட்டானா தெரியவில்லை தயங்கி நின்றவள்,
 
“அம்மா நைட் என்ன சாப்பாடு செய்ய..?? கேளுங்க..??” அவனிடம் பேச தயக்கம்.. காலையில் கட்டி அணைத்து கணவன் என்ற எண்ணத்தை ஆழமாய் விதைத்திருக்க இப்போது அடிப்பட்டு கிடக்கும் போதுகூட கண்ணீர்தான் ஊற்றியதே தவிர பேச தயக்கமாக இருந்தது..
 
 ராசாத்தி அம்மாள் மட்டும் அவனிடம் பேசிக் கொண்டிருக்க இவள் அவன் நலன் விசாரிக்க கூட வாய் திறக்கவில்லை.. தீனாவின் குரலை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தாள்..
 
“இதென்ன சுமதி ..?? இந்தா இருக்கான் அவன்கிட்ட கேளு என்ன செய்யனும்னு..?? நான் ஏன் ஊடால..??” அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் ..தீனா வாழ்க்கை மாறனும்னா அது சுமதி ஒருத்தியாலதான் முடியும்.. நாம இனி இவங்க பேச்சுக்கே போக கூடாது… புருசன் பொண்டாட்டி எப்படியோ கட்டிச் சேரட்டும்..
 
அதற்குள் தீனாவுக்கு போன் வந்திருக்க அதை காதில் வைத்தவன்,” ம்ம் நல்லாயிருக்கேன்.. படுத்திருந்தேன்.. இல்ல இல்ல வீட்டுக்கு வாங்க.. இங்கதான் இருக்காங்க..!!”
 
“யாரு தீனா இன்னேரத்துல…??”
 
“யாரா இருந்தா என்ன ..?? உன் வேலை மட்டும் பார்..?? என்ன எதுவும் எடுக்காம வந்திருக்கிங்க.. திரும்ப அங்க போகனுமா..??” கேள்வி ராசாத்தி அம்மாளிடம் இருந்தாலும் பார்வை என்னவோ சுமதியிடம்தான்..
 
“அது எப்படி தீனா உன்ன இந்த நிலமைல விட்டுட்டு போவோம்..?? அங்க என்ன அஞ்சாறு பாத்திரமும் நாலஞ்சு நாக்காலியும் கிடக்கு காலையில கொண்டு வந்திரலாம்..”
 
“இருந்தாலும் உனக்கெல்லாம் கொழுப்பு ஜாஸ்திதான் கெழவி.. கண்டவ பேச்ச கேட்டு ராத்தியோட ராத்திரியா வீட்ட விட்டு போனில்ல.. என்னையெல்லாம் பார்த்தா உனக்கு மனுசனா தெரியல..?? என்னை விட அப்படி என்ன முக்கியம் உனக்கு..??” தீனாவின் கோபத்தை பார்க்கவும்.. போச்சு.. வரவும் சண்டையா நம்மளால…?? இப்படி அடி பட்டிருக்கும் போது கூட பேச்சு குறையுதா..!!
 
“அடேய் கூறு கெட்டவனே..!! எப்ப பார்த்தாலும் ஜங்கு ஜங்குன்னு குதிக்காத..?? இப்ப என்ன உனக்கு..?? நான் அவளோட போனதாலதான் அவ திரும்பி வந்திருக்கா.. அப்ப நான் வரலைன்னு சொல்லியிருந்தா இவங்கள எங்கன்னு போய் தேட..?? எனக்கென்னவோ அவ பொறந்த வீட்டுக்கு போவான்னு தோனல..!! அதான் அவகூட போவேன்.. நாங்க வீட்டவிட்டு போன அன்னைக்கு யாரும் சொல்லாமத்தான வந்த என் வீட்டுக்கு..?? எப்படியும் இந்த கெழவி உன் பொண்டாட்டி புள்ளைய தன் வீட்டுக்குத்தான் கூட்டி போயிருக்குமுன்னு ..!!
 
விளங்காப்பயலே..!! அருமையான குடும்பம் கிடைச்சிருக்கு.. அவங்களோட சந்தோசமா வாழ்வானா.. அதவிட்டுட்டு ஏதோ கலெக்டர் உத்யோகத்தை விட மாட்டேன்னு அடம் பிடிக்கிறா போல இந்த வீணா போன அடியாளு வேலையை பிடிச்சிக்கிட்டு தொங்குறான்..!! போவியா அங்கிட்டு ..?? கெழவியாம் கெழவி..” தோளில் ஒரு இடி இடிக்க,
 
அனைத்தையும் கேட்ட சுமதிக்கு சிரிப்புதான் வந்தது.. அனைத்தும் பாசம்தான் அதை காட்டும் விதம்தான் மாறுகிறது.. தீனா தன் பாசத்தை கோபமாக காட்டுகிறான்.. ராசாத்தி அம்மாள் அவன் மேல் உள்ள பாசத்தால்தான் அன்று வீட்டை விட்டே வந்துள்ளார்..
 
முதலில் அவர் அறையை சுத்தம் செய்ய  அழுக்கு துணிகளை எல்லாம் மூட்டை கட்ட துவங்கினாள்.. என்ன சாப்பாடு செய்வது யோசித்து கொண்டிருக்கையிலேயே வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம்,
 
“அத்தை….” சுமதியிடம் வந்திருந்தனர் குணாவின் பிள்ளைகள் இரண்டும்… பின்னாலே குணாவும்..
 
“டேய் அருணு.. தேவி..” இருவரையும் கட்டி அணைத்து முத்தமிட்டவள் “வாண்ணே..” அண்ணனை வரவேற்று கையிலிருந்த பையை வாங்கினாள்.. ஏகப்பட்ட பைகள் வைத்திருக்க ஒவ்வொன்றாய் குணா உள்ளே கொண்டு வந்து தீனாவை பார்த்தபடி,
 
“ என்ன மாப்பிள எப்படி இருக்கு வலி…??”
 
எழப்போனவனை தடுத்து கட்டிலின் அருகில் சென்றிருக்க “வாங்க..  பரவால்ல..”
 
இப்போது அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தில் வாய் திறப்பது சுமதியின் முறை.. ரெண்டுபேரும் பேசிக்கிறாங்க எப்படி..!! அதுவும் மாப்பிள்ளைன்னு அண்ணே கூப்பிடுற அளவுக்கு…??
 
“அடடே மருமகளே வாங்க.. வாங்க..” தேனுவை தூக்கி முகமெங்கும் முத்தமிட அவனின் பிள்ளைகள் இரண்டும் தேனுவின் அருகில் சென்று தயங்கி தொட்டு தொட்டு பார்க்கவும் இவதாண்டா உங்க அத்தை மக..!! இவரு உங்க மாமா..?? தீனாவின் உருவத்தை பார்த்து இருவருக்கும் பயம் தன் தந்தையின் கையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தனர்.. ராசாத்தி அம்மாளை காட்டியவன் இவங்க உங்க பாட்டி..”
 
தீனாவும் ராசாத்தி அம்மாளும் எப்படி உணர்ந்தனர் என்றே புரியவில்லை.. இந்த             வீட்டில் இன்னும் வெளிச்சம் வந்தாற்போல தங்களை ஒரு உறவாய் அறிமுகப்படுத்திய குணாவின் இந்த குணம் இவர்களை கவர்ந்தது..
 
“என்னத்தா முதமுதலா உங்க வீட்டுக்கு வந்திருக்கோம் அப்படியே நிக்குற..?? நல்லவேளை மாப்பிள்ளை நீங்க சொன்னிங்க தங்கச்சியும் அம்மாவும் இங்க வந்துட்டாங்கன்னு..!! இல்ல நான் அங்க போய்தான் கூட்டி வரனும்னு நினைச்சேன்.. முதல நான் ஆசுபத்திரியில இருந்து வீட்டுக்கு கூட்டி வந்தப்போ இவங்க இல்லையா அதான் தங்கச்சி என்னை மதிக்கலையோன்னு நினைச்சேன்.. எப்படிநாளும் என் வளர்ப்புதான.. அதான் நான் இங்க வான்னு சொல்லவும் வந்திட்டா ..!!” அவன் பேசிக் கொண்டே செல்ல சுமதிக்குள் குற்ற உணர்ச்சி..
 
“சுமதி ராத்திரி சாப்பாடு எல்லார்க்கும் அந்த பையில இருக்கு பாரு வரும்போதே வாங்கிட்டு வந்துட்டேன்..” தங்கையிடம் பைகளை எடுத்துக் கொடுக்க சற்று நேரத்தில் குணாவின் குழந்தைகளும் தங்கள் தயக்கம் மறைந்து விளையாட்டுதனத்தை துவங்கிவிட்டனர்..
 
 சாப்பிடும் வேளை ராசாத்தி அம்மாள் சாப்பாடு வேண்டாம் என்று மறுத்தாலும் குணா அதட்டி அவர்களையும் சாப்பிட வைத்திருந்தான்.. சுமதிக்குள் நிறைய கேள்விகள்..?? மெதுவாக அண்ணனிடம் கேட்டுக் கொள்ளலாம் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பதே போதும் என்று விட்டுவிட்டாள்..
 
“அண்ணே அண்ணிய இன்னும் வீட்டுக்கு வரச் சொல்லலையா..??”
 
“இன்னும் இல்லத்தா.. எங்க போயிட போறா.. மெதுவா கூப்பிட்டுக்கலாம் அவ குணமும் கொஞ்சம் மாறனும்ல.. பண்ணின தப்பெல்லாம் திருத்திட்டு வரட்டும் சேர்த்துக்குறேன்.. இப்ப நீ வேலை பார்த்த கார்மென்ஸ்லதான் வேலைக்கு போறா.. நீ வேலை பார்த்தப்போ பட்ட கஷ்டங்கள் என்னன்னு அவளும் கொஞ்சம் உணரட்டுமே.. நான் நேரடியா எல்லாம் செய்யாட்டாலும் ஆள் வைச்சு பார்த்துட்டுத்தான் இருக்கேன்.. என் பிள்ளைகளுக்கு அம்மா முக்கியம்தான் ஆனா அவ நல்லவளா இருக்கனும்னு நான் நினைக்கிறேன்..”
 
பார்த்திருந்த ராசாத்தி அம்மாளுக்கு இதத்தான சுமதியும் நினைக்குது.. தீனா நல்லவனா மாறனும்னு.. அனைவரும் சாப்பிட்டு முடிக்க குழந்தைகள் இருவரும் சுமதியின் அறையில் தேனுவோடு படுத்துக்கொள்ள குணாவும் தீனாவும் கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் .. ராசாத்தி அம்மாள் அவர் அறையில் உறங்கி விட்டார்..

Advertisement