Advertisement

எனை மாற்றிய தருணம்
                       அத்தியாயம்  –  13
 
தன்னைத்தான் கேட்டானா..?? நின்று திரும்பி பார்க்க அதற்கு எந்த அறிகுறியும் இல்லாதது போல குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் வேலையை மட்டும் மும்முரமாக பார்த்து கொண்டிருந்தான்.. சுமதிக்கே குழப்பம் இப்ப இவரு நம்மளத்தான கேள்விக்கேட்டாரு….??
 
தீனாவுக்கோ வாய்விட்ட பிறகுதான் இரவு சுமதி தன்னை வெளியில் விட்டு கதவடைத்தது நியாபம் வந்தது.. அடேய் முட்டாப்பயலே..!! அறிவு கெட்டவனே..!!  இவ சாப்பிட்டா நமக்கென்ன சாப்பிடாட்டா நமக்கென்ன..?? புதுசா இருக்கு இதெல்லாம்.. நாம தேனுக்காகத்தான் வந்தோம் தனக்குள் சப்பை கட்டு கட்டியவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை..
 
கண்டிப்பா நம்மளத்தான் கேட்டாரு..!! தீனாவையே குறுகுறுவென பார்க்க, “ஏய் என்ன புள்ள..?? என்னையே பார்க்கிற..?? புள்ளைய என்கிட்ட இருந்து தூக்கிட்டு வந்துட்டு.. மூஞ்சியும் மொகரையும் பாரு..?? போய் தொலை அங்கிட்டு..!!” வேகமாக சாப்பிட்டு முடித்தவன் குழந்தையை தூக்கியபடி வெளியில் சென்றிருந்தான்..
 
அதானே நாம கனவுதான் கண்டுட்டோம் போல இவராவது அப்படி அமைதியா பேசுறதாவது.. இருந்தாலும் அவரு பேசுறமாதிரிதான கேட்டுச்சு.. சுமதிக்குள் குழப்பம் பேசினாரா இல்லையா..?? மேலும் ஒரு அரைமணி நேரம் தீனா தேனுவோடு விளையாட சுமதி யோசனையிலேயே சமையல் வேலையில் இறங்கிவிட்டாள்..
 
குழந்தையை விட்டு பிரிய மனமே இல்லாமல் கிளம்பவும் சுமதிக்கு அவன் இங்கு இருப்பது ஏதோ போல இருந்தது. .. இதுவரை தீனாவின் வீடு சற்று பெரிதாக இருக்க அடுப்படிக்குள் எல்லாம் வரவே மாட்டான்.. இங்கு இந்த வீடே அடுப்படி அளவுதான் .. அவன் பார்வையில் வேலை செய்வது ஏதோ போலிருக்க அவன் எப்போது கிளம்புவான் என்ற எண்ணத்தில் தான் வேலை பார்த்தாள்..
 
இரண்டு நாட்கள் இதே கதை தொடர சுமதிக்கு இதை வளரவிட மனதில்லை.. மறுநாள் காலை எழும்போதே தீனாவின் தலைமாட்டில் அவன் காலை டிபன் இருந்தது.. ராசாத்தி அம்மாளும் அங்கேதான் அமர்ந்திருந்தார்..
 
“என்ன கெழவி உன்கிட்ட இப்ப நான் சாப்பாடு கேட்டனா..?? வேணும்னா அங்க வந்து சாப்பிட தெரியாதா..??”
 
“ம்ம்ம் அதான்பா நானும் சொன்னேன்.. சுமதிதான் நீ அலைய வேணாம்னு இங்க கொடுத்துவிட்டுச்சு.. இனி நானே கொண்டு வந்து தந்துருறேன்..”
 
தீனாவுக்கு ஆத்திரத்தில் பல்லை கடிப்பதை தவிர வேறு வழியில்லை.. எதுக்கு கொடுத்துவிட்டானு எனக்கா தெரியாது..?? எனக்கே ஆட்டம் காட்றாளா..?? இருக்கு அவளுக்கு..!! இப்படியெல்லாம் பண்ணினா நான் அவ பேச்சை கேட்டுருவனா இல்ல தேனுவ பார்க்காம இருந்திருவனா..??  இதோ வர்றேன்டி..??
 
சுமதி குழந்தையோடு வீட்டை விட்டு போனதில் தீனாவுக்கு எவ்வளவுகெவ்வளவு வருத்தமோ அவன் கூட்டாளிகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுச்சாம்ங்கிற மாதிரி  கைப்பிள்ளையோட வந்தவள தீனா திருமணம் செய்து கொண்டான் என்பதில் அதிர்ந்திருந்தவர்கள் இப்போது ஏதோ பிரச்சனையில் வீட்டை விட்டு சென்று விட்டாள் என்றதும் சந்தோசம் தாங்கவில்லை…
 
இந்த இரண்டு நாட்களாக பகல் பொழுது முழுதும் தீனாவின் வீட்டில் தான்.. ராசாத்தி அம்மாள் வைத்துவிட்டு போன இட்லியை தொடாதவன் சுமதியை தேடிச் சென்றிருக்க வெளியில் ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். 
 
ஆமா இந்த புள்ள பெரிய பிசினஸ் மேன் எங்க போனாலும் இந்த இட்லி கடை ஒன்ன போட்டுருவாங்க..?? ஆளப்பாரு..?? கடுப்பானாலும் எதையும் சொல்லவில்லை.. விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தவனை அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தாலும் கண்டு கொள்ளாதவள் பார்சல் கேட்டவர்களுக்கு கட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.. குழந்தையும் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க எழுப்ப மனதில்லாமல் தன் நெஞ்சில் போட்டு தானும் படுத்துக் கொண்டான்..
 
அரைமணி நேரம் சென்றிருக்கும் வீட்டுக்குள் எந்த பேச்சு சத்தமும் கேட்காமல் இருக்க கடையில் ஒருவரும் இல்லாமல் மெல்ல தலையை எட்டி உள்ளே பார்த்தவளுக்கு கண்ணீர் தளும்பியது..
 
அங்கிருக்கும் வரை தேனுவை அப்பா சொல்லு.. அப்பா சொல்லு எனும் போதெல்லாம் சொல்லாதவள் இப்போது நொடிக்கு ஒரு அப்பா சொல்லி கொண்டிருந்தாள்..
 
அதுவும் நீச்சல் அடிப்பது போல கையை காலை ஆட்டியபடி அப்பா… சொல்லி அவன் நெஞ்சை தன் எச்சிலால் ஈரப்படுத்திக் கொண்டிருக்க கண்ணை மூடியிருந்தாலும் அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள்.. பார்த்திருந்த சுமதிக்கு மனதற்குள் பிசைந்தது.. தீனா மற்றவர்களுக்கு எவ்வளவு கெட்டவனோ தேனுவை பொறுத்தவரை பெற்ற தகப்பனை விட இருமடங்கு பாசம் வைத்திருந்தான் அறிந்திருந்தாள் தானே..!!
 
வரும்போது தன்னை பார்த்த கோப முகம் போய் இப்போது அவனின் வருத்த முகத்தை பார்க்க சகிக்கவில்லை.. தனக்காவது அண்ணன் என்ற ஒரு உறவு இருந்தது.. இவருக்கு அப்படி யாரும் இல்லைதானே அப்படி யாராச்சும் கூட இருந்திருந்தா இவங்க தப்பான வழிக்கு போயிருக்க மாட்டாங்களோ..??
 
படரும் கொடி பக்கத்தில் இருக்கும் மரத்தில் வேரூன்றி பற்றி படருவது போல அனாதையாக இருந்த தனக்கு தேனு எப்படியோ அதுமாதிரிதான இவருக்கும்  தேனு .. அம்மா சொன்னது மாதிரி நாம பக்கத்தில இருந்து சொல்லியிருக்கனுமோ..?? இருநாட்களாக இரவில் தேனு சாமான்யமாக தூங்கவில்லை.. தீனாவின் நெஞ்சிலேயே தூங்கி பழகியிருந்த குழந்தைக்கு இப்போது அவன் இல்லாமல் தூக்கம் வரவில்லை.. பச்சப்பிள்ளைய பிரிச்சு கூட்டிட்டு வந்து பாவம் பண்ணிட்டமோ..??
 
“அப்படியே குளுகுளுன்னு இருக்குமே.. என்னைப்பார்த்து..?? இதுக்குத்தான ஆசைப்பட்ட..?? இவனால இந்த புள்ள இல்லாம இருக்க முடியாது.. பிரிச்சு தூக்கிட்டு போயிட்டா நாய்க்குட்டி போல இவனும் பின்னாடியே வந்துருவான்..?? அப்புறம் என்ன..?? நாம வைச்சதுதான் சட்டம் இவன உன் பக்கம் வளைச்சிரலாம்னு ..??” ஆத்தி இவரு எப்ப கண்ணு முழிச்சாரு.. என்ன பதில் சொல்வது யோசிக்கையிலேயே ராசாத்தி அம்மாள் வந்திருக்க மூச்சை இழுத்து விட்டாள்..
 
“என்ன தீனா இட்லிய அங்க போட்டுட்டு இங்க வந்திட்ட..?? ஆத்தா சுமதி சாப்பிடாமத்தான் வந்திருக்கான்.. இட்லி இருக்கா.. ?? நான் கொண்டு போனதெல்லாம் வித்திருச்சுத்தா..!!”
 
“இதோம்மா..” வேகமாக அடுப்பை பற்றவைத்தவள் அடுத்த பத்து நிமிடங்களில் சுடசுட இட்லியும் அவனுக்காக மட்டும் சட்னியும் அரைத்துக் கொண்டிருப்பதை பார்த்த தீனாவுக்குள் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.. இந்த சாப்பாட்டிற்காக தான் பட்டபாடுகள்..!!
 
ராசாத்தி அம்மாளை தவிர யாரும் இவனை மனிதனாக கூட மதிக்க மாட்டார்கள்.. பயம் இருக்குமே தவிர அனாதையாக செத்துக்கிடந்தால் அழ ஒரு நாதி இல்லை.. சுமதி பரிமாற சாப்பிடவன்  குழந்தைக்கும் ஊட்டினான்..
 
தீனா இந்த இரண்டு நாட்களாக ஒரு நிமிடம் கூட உறங்கவில்லை.. எங்கும் எதிலும் தேனு கூடவே குழந்தையோடு சுமதியும் நினைவில் வர கோபமா, வருத்தமா பிரித்தறியா நிலை.. ஆனால் இருவரும் அவன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார்கள்…
 
இன்னும் நாட்கள் வேகமாக சென்றிருக்க தீனாவின் நிலை இன்னும் மோசமானதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை.. சுமதிக்கும் தீனாவை விட்டு வந்து பெரிய தவறு பண்ணிவிட்டோம் மனது உருத்த துவங்கியிருக்க காரணம் இங்கு சாப்பிட வரும் சிலரின் பேச்சுக்களும் செயல்களும் அங்கிருக்கும் வரை சாப்பிட வருபவர்கள் சாப்பிட மட்டுமே வாய் திறந்திருக்க வருவதும் தெரியாது போவதும் தெரியாது..
 
இங்கோ சாப்பிட்டாலும் போகாமல் சுமதியிடம் தேவையில்லாமல் பேச்சுக் கொடுப்பது இட்லியை இலையில் வைக்க வரும்போது வேண்டுமென்றே கையை பிடித்து தடுப்பது, உரசுவது என எல்லை மீறிக் கொண்டிருந்தார்கள்.. ராசாத்தி அம்மாளிடம் சொல்லவும் தயக்கம் அவர்தான் தீனாவிடம் போவோம் என தினமும் சுமதியை நச்சரித்துக் கொண்டிருக்கிறாரே.. தீனா தேனுவை பார்க்க வரும் மறுநிமிடத்தில் ஒருவர் கூட அந்த இடத்தில் இருப்பதில்லை..
 
அன்று காலையில் சாப்பிட வந்த இருவர் சாப்பிட்டும் போகாமல் வெகுநேரம் அமர்ந்திருக்க அடுத்தடுத்து சாப்பிட வருபவர்களுக்கும் எழுந்து இடம் தரவில்லை.. சுமதி எழ சொன்னாலும் காதில் விழாதது போல காட்டிக் கொண்டு தங்களின் வக்கிர பார்வையால் துகிலுரிந்து கொண்டிருந்தனர்..
 
பொறுமை பறக்க “ஏங்க சாப்பிட்டா எழுந்திருங்க..??”
 
“என்ன கண்ணு கோச்சுக்கிற..?? உன் கையால சாப்பிட்டோம்ல.. அதான் பசி அடங்கல..?? இன்னும் இன்னும் பசி எடுக்கிறா போல இருக்கு.. கிடைக்குமா..!!” அவளை மேலிருந்து கீழாக நோட்டமிட்டபடி இரு அர்த்தம் தொணிக்கும் வகையில் பேச,
 
சுமதிக்கே அருவருட்பாக இருந்தது ச்சீ என்ன இப்படி பேசுறாங்க..?? அம்மா எப்ப வருவாங்க தெரியலையே ..!! இவங்க பார்வையே சரியில்ல அம்மாக்கிட்ட சொல்லியிருக்கலாமோ..?? அதுவரை சேரில் அமர்ந்திருந்த ஒருவன் சுமதியை நோக்கி வர கைகால்கள் வெடவெடக்க பின்னால் நகர்ந்தவள்,
 
“என்ன வேணும்..??”
 
“என்ன கண்ணு பயப்படுற..?? ஒன்னுமில்ல பின்னால இருக்க தட்டுவேணும்..” வேண்டுமென்றெ அவள் இடுப்பை பிடிப்பது போல கையை கொண்டு சென்றவன் பயந்து ஒடுங்கியவளை நகர விடாமல் தன் இருகையால் சிறைசெய்ய முயல மறுநிமிடம் சுமதியின் காலடியில் கிடந்தான்..
 
அவனின் இரு கைகளையும் தீனா ஒரே நேரத்தில் அடித்து ஒடித்திருக்க ஓஓஓஓவென அலறல் அந்த இடத்தையே ரெண்டாக்கியது..
 
அவன் அருகே வரவும் பயந்து கண்ணை மூடியிருந்தவள் அலறல் குரலில் கண்ணை திறக்கவும் அவளை முறைத்தபடி தீனா..!! அவளை பார்த்துக் கொண்டே “டேய் எவ்வளவு திமிரு இருந்தா என் பொண்டாட்டிக்கிட்டயே நெருங்கியிருப்ப உன்னை..!!” இன்னும் ஓங்கி ஒரு மிதி வைத்திருக்க அருகில் இருந்தவனையும் அடித்து துவைத்திருந்தான்.. ஏனோ இந்த முறை அவன் செய்வது தவறாக தெரியவில்லை.. இன்னும் நாலு கொடுக்கட்டும் என்றுதான் நினைத்தாள்..
 

Advertisement