Advertisement

“தீனா இப்ப சுமதிய அடிச்ச..??” ராசாத்தி அம்மாள் தீனாவோடு சண்டைக்கு கிளம்ப,
 
“நீதான் கெழவி அம்புட்டுக்கும் காரணம்..!! இவ வீட்டவிட்டு வான்னு சொன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கிளம்பி வந்திருவியா.. மரியாதையா வாங்க அங்க போகலாம்..”
 
குழந்தையோடு மெதுவாக எழுந்தவள் “நீங்க என்னை கொன்னு போட்டாலும் நானும் என் பொண்ணும் அந்த வீட்டு படிவாசல் மிதிக்க மாட்டோம்.. நல்ல வேளை நீங்க சம்பாரிச்ச பணத்தில ஒரு வாய் சாப்பாடு சாப்பிடல.. அதுவரைக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..!!”
 
“ஏய் திரும்ப திரும்ப பேசாத..?? வர்ற கோபத்துக்கு உன்னை கொன்னாலும் கொன்னுருவேன்..?? உனக்கு என்னோட வேலை கேவலமா இருக்கலாம் ஆனா அதுதான் எனக்கு சோறு போடுது.. இப்ப என்ன சொல்ற வர்ற.. அங்க வரமுடியுமா முடியாதா..??”
 
“நீங்க இந்த வேலையை விட்டுட்டு வேற எதாச்சும் வேலைக்கு போங்க நானும் தேனுவும் அங்க வர்றோம்.. இல்ல அந்த வீட்டு வாசப்படிக்கூட மிதிக்க மாட்டேன் நியாபகத்தில வைச்சுக்கோங்க..” குழந்தையோடு வீட்டிற்குள் திரும்ப,
 
ராசாத்தி அம்மாளோ சுமதியிடம் கெஞ்சினார் “ஆத்தா உனக்கே தெரியும் அவன் உன் மகமேல உசிரே வைச்சிருக்கான் அவ இல்லாம இருக்க மாட்டான்னு.. நீ இப்படி பண்றது நல்லா இல்லத்தா..!! அதோட நீ தனியாள் இல்ல புருசன் பொண்டாட்டினா என்ன கோபம் இருந்தாலும் ஒரு வீட்டுக்குள்ளதான் இருக்கனும்.. இதெல்லாம் ரொம்ப தப்பு சுமதி..”
 
“அம்மா நா இங்க இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலைனா சொல்லுங்க நானும் தேனுவும் வீட்டவிட்டு போறோம்..”
 
எட்டி அவள் கையை பிடித்தவன் புறம் இழுக்க மொத்தமாய் அவன் மேல் மோதியிருந்தாள்.. “ஒழுங்கா வா அங்க ..?? இங்க இருக்க கூடாது..!! தரதரவென இழுத்துச் செல்ல,
 
“மரியாதையா கைய விடுங்க..?? நான் அங்க வந்தா நானும் தேனும் சத்தியமா உயிரோட இருக்க மாட்டோம் அதான் வேணும்னா தாராளமா எங்கள இழுத்துட்டு போங்க..!!”
 
சுமதியின் கோபக்குரலில் கையை விட்டவன் அவளை இன்னும் ஒரு அறை வைத்திருந்தான்..
 
வேகமாக ஓடிவந்து சுமதியை தன்புறம் இழுத்துக் கொண்டவர் “எதுக்கு தீனா இந்த புள்ளைய இப்ப அடிச்சுக் கொல்ற..?? ஆத்தா சுமதி அவன் சொல்றத கொஞ்சம் கேளேன்..!!” அவளை கெஞ்ச…. முடியாது தலையசைத்தவளின் கண்களில் அப்படி ஒரு உறுதி… நீ என்ன வேணா செய்து கொள் தீர்மானத்துடன் இருப்பது போல் இருந்தாள்..     
 
“ஏய் கெழவி நீயெல்லாம் இவளுக்கு புத்தி சொல்லாத..?? வேற ஒன்னுமில்ல திமிரு ரொம்ப அதிகமாச்சு..?? அதுக்காகவெல்லாம் இவ சொல்றத கேட்டு என் வேலையை விட முடியாது.. இத்தன வருசம் நீங்களாம் என்கூடவா இருந்திங்க.. ஏதோ நடுவில வந்திங்க இப்போ போக போறிங்க ..!!  என் வழிய நான் பார்த்துக்குறேன்..” வண்டியின் அருகில் சென்றவன் அதில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பையை தேனுவிடம் நீட்ட அதிலிருந்து எட்டி பார்த்த பொம்மையை வாங்க கைநீட்டிய குழந்தையின் கையை பிடித்தவள் மறுபக்கம் குழந்தையை தூக்கிக் கொண்டாள்..
 
“ஏய்ய்ய்ய்ய்ய்ய்…. வரமாட்டேன்னு சொன்ன அதோட நிப்பாட்டு… ரொம்ப பண்ணாத புள்ள… காண்டாகிருவேன்..!! இவ என்னோட குழந்தை ..நான்தான் அப்பா நீயெல்லாம் தடுக்கிற வேலை வைச்சிக்காத..!!”
 
“இவ மட்டும்தான் குழந்தை.. அங்க ரோட்ல அழுத பிள்ளைகளெல்லாம் யாரு..?? அவங்களும் ஒரு தாயோட குழந்தைங்க தான..?? கதற கதற வெளிய தள்ளிவிட்டு கதவ பூட்டிட்டு வந்திங்க..!! உங்க பாவக்காசுல வாங்கின ஒத்த பொருள்கூட என் பொண்ணுக்கு வேணா மரியாதையா கொண்டு போங்க..” பொம்மையை அவன் முகத்திலேயே தூக்கி வீசியவள் ராசாத்தி அம்மாளை வீட்டிற்குள் அழைத்து கதவடைத்திருந்தாள்..
 
வாழ்வின் முதல் முறையாக தீனாவுக்கு அவமானம்..!! இவன் எத்தனையோ பேரை வெளியில் விட்டு கதவடைக்க இன்று தன்னை வெளியில் வைத்து கதவடைப்பதா….. கோபத்தில் கதவை ஓங்கி ஒரு உதை வைத்தவன்,
 
“ஏய்ய்ய்ய் .. என்கிட்டயே ஆட்டம் காட்றியா..?? விடியட்டும்டி..?? உனக்கு இருக்கு கச்சேரி.. எப்படி ஊமக்கொட்டான் மாறி வந்து என்னை வெளிய விட்டு கதவடைப்பியா..?? உன்னை என்னப் பண்றேன்னு மட்டும் பாரு..?? தேனு பாப்பா நீ கவலைப்படாத்தா.. அப்பா நாளைக்கு வந்து உன்னைக்கூட்டிட்டு போறேன்.. வேற பெரிய பொம்மை வாங்கித் தர்றேன்.. பைக்ல கூட்டிட்டு போறேன்..!!” போதையில் வெகுநேரம் சுமதியை திட்டியவன் குழந்தையை கொஞ்சியவன் எப்போது வீடுவந்து சேர்ந்தான் அவனுக்கே தெரியவில்லை..
 
பூட்டை திறந்து உள்ளே நுழைய கால் அறைக்குள் செல்லவில்லை.. சுமதி இந்த வீட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்து இருந்த ஒரு உயிர்ப்பு இப்போது இல்லை.. உடையைக்கூட மாற்றாமல் அங்கு ஹாலிலேயே படுத்துக் கொண்டான்.. அவ்வளவு போதை இருந்தும் கண்ணில் ஒரு பொட்டு தூக்கம் அண்டவில்லை.. இந்த ஒரு மாதமாக குடும்பமாய் வாழ்ந்துவிட்டு இப்போது அனாதை போல பழைய நிலையா..!! சுமதியை அங்கு பார்க்கும்போது கூட சுமதி வீட்டை விட்டு செல்வாள் எண்ணவில்லை..
 
என்ன தப்பு பண்ணினேன்..!! இந்த ஊமக்கோட்டான் வீட்டவிட்டு போற அளவுக்கு.. பிள்ளையக்கூட தொடவிடமாட்டுறா..?? என்னோட வேலை அது..?? பேங்கல கடன் வாங்கினா.. வண்டி வாங்கினா மட்டும் அவனுக என் வேலையைத்தான பார்க்கிறாங்க..!! போதையில் ஏதேதோ எண்ண படுக்க முடியாமல் எழுந்து அமர்ந்தவன் அந்த அறைக்குள் நுழைந்தான் குழந்தையின் சட்டைக்கிடக்க அதை தன் மேல் போட்டுக் கொண்டவனுக்கு துவைத்த உடைதான் இருந்தாலும் குழந்தையின் மனம் அதில்..!! ஏதேதோ எண்ணங்கள் தோன்ற அங்கேயே படுத்தவனுக்கு கண்ணில் இருந்து நீர் வழியலாயிற்று..
 
வெகுநேரம் அப்படியே படுத்திருந்தவன் தான் மறக்க முயன்று மறந்து விட்டோம் என்று நினைத்திருந்த நினைவுகள் எல்லாம் உலா வர… தேனு இல்லாமல் தன்னால் இருக்க முடியுமா..??
 
எப்போதும் போல காலை தன் வேலைகளை துவங்கிய சுமதி பணி செய்து கிடப்பதே தன் கடமை போல டிபன் செய்யும் வேலையை துவங்கிவிட்டாள்.. இவள் மனதில் என்ன ஓடுகிறதென்று ராசாத்தி அம்மாளுக்கு புரியவில்லை..
 
“ஏன்த்தா வேலையை இழுத்துக்கிற..?? ஒரு வாரம் போகட்டுமே.. நீயும் தீனாவும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க அப்புறமா இந்த வேலையை பார்த்துக்கலாம்..”
 
“பரவால்லமா இதுல ஒன்னும் எனக்கு கஷ்டம் இல்ல..” கடகடவென வேலையை துவங்க வீட்டில் கடை போடவில்லை.. கொஞ்சமாக செய்து தன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொண்டு போனார்.. ராசாத்தி அம்மாளை பார்க்கவும் பாதிபேர் வீட்டு வாசலிலேயே வாங்கிக் கொள்ள வியாபாரம் நன்றாகவே துவங்கியது..
 
தீனா வீட்டிற்கு போக நினைத்தாலும் புருசன் பொண்டாட்டி பிரச்சனை நாம தலையிட வேணாம்.. அவன் காலையில நம்ம கையாலதான சாப்பிடுவான் .. ராசாத்தி அம்மாளின் வீடு அடுத்த தெருதான்.. போகும்போதே வீட்டை பார்க்க கதவடைத்திருந்தது…
 
மணி ஒன்பதாக போகுதே இன்னுமா எழுந்திருக்காம இருக்கான்.. வேண்டுமென்றே மூன்று நான்கு முறை நடந்து தீனாவின் வீட்டை நோட்டமிட அவனோ அங்கு ராசாத்தி அம்மாள் வீட்டின் கதவை தட்டிக் கொண்டிருந்தான்.. கதவை திறந்தவள் தீனாவை பார்க்கவும் மறுபடியுமா.. ?? இப்ப என்ன பண்ண வந்திருக்கார்..
 
“என்ன வேணும்..??”
 
வேண்டுமென்றே அவளை இடித்தபடி உள்ளே நுழைந்தவன் அப்போதுதான் குளித்து வேறு உடைமாற்றி படுக்க வைக்கப்பட்டிருந்த தன் மகளை தூக்கியிருந்தான்..
 
“ஆத்தா தங்கம்.. செல்லம்.. கன்னு..!!” முகமெங்கும் முத்தம் வைக்க தேனுவும் தன் எச்சிலால் தீனாவின் முகத்தை ஈரப்படுத்தியிருந்தது..
 
“ராத்திரி எல்லாம் அப்பாவ தேடுனியாத்தா..?? அப்பா சொல்லுங்க அப்பா… அப்பா..!!”
 
குழந்தையோடு அவன் ஒன்றி விட சுமதிக்கு ஏதும் பேச மனது வரவில்லை.. நேற்று கடும் கோபத்தில் இருந்ததால் தீனாவை பார்க்கவும் வார்த்தைகளை கொட்டியிருக்க இப்போது தன் வேலையை மட்டும் பார்க்கத் துவங்கினாள்.. அதைவிட நேற்று அவனை வெளியில் விட்டு கதவடைத்தது சற்று அதிகமோ என்றே தோன்றியது..
 
தீனாவின் முகத்தில் லேசான சோர்வு தெரிய இன்னும் சாப்பிடலையோ..?? இட்லியை வைத்தவள் அவனிடம் நீட்ட சுமதியை ஒரு முறை முறைத்தவன் “நான் ஒன்னும் இங்க சாப்பிட வரல..?? என் பொண்ணத்தான் பார்க்க வந்தேன்..!!”
 
“நானும் சும்மா கொடுக்கல.. சாப்பிட்டு இட்லிக்கு பணம் தாங்க..??”
 
“ம்ம்ம் லொள்ளு… உனக்கு ஏத்தம்தான்டி..??”  அவளை முறைத்தாலும் இட்லியை சாப்பிட துவங்கியிருந்தான் தானும் சாப்பிட்டு குழந்தைக்கும் காரமில்லாத வெறும் இட்லியை ஊட்டத் துவங்க இருவரும் சாப்பிடுவதை பார்த்தவள் தேவையானதை பார்த்து பரிமாறத் துவங்கினாள்.. இரவு முழுதும் வெறுமையாய் இருந்த மனம் இப்போது நிறைந்திருக்க தீனாவுக்கே தான் என்ன நினைக்கிறோம் புரியவில்லை..
 
தன் முன்னால் பரிமாறுவதற்காக அடிக்கடி நீளும் கையை பார்த்தவன் மடியில் மகளை வைத்தபடி லேசாக சுமதியை நிமிர்ந்து பார்க்க இதுவரை சுமதியை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை.. இரவில் படுக்கும் போது கூட சற்று விலகியேத்தான் படுப்பாள்.. தலைகுளித்து முடியை விரித்து விட்டிருக்க காதில் ஏதோ பித்தளை சிமிக்கி கைகளில் சிவப்பு நிற கண்ணாடி வளையல், கழுத்தில் மஞ்சள் கயிறு.. உச்சி வகிட்டிலும் நெற்றியிலும் குங்குமம்.. கன்னத்தில் அவன் அறைந்ததால் வந்திருந்த அவன் விரல்களின் கைத்தடம்..
 
காலை நேர வியர்வைத்துளிகள் அவள் நெற்றியில் பூத்திருக்க ஆறு.. ஏழு மாதங்களாய் ஒரே வீட்டில் இருக்கும்போது நிமிர்ந்து கூட பார்க்காதவனின் கண்கள் இப்போது வண்டாய் அவள் முகத்தை சுற்றியது.. எவ்வளவு நேரம் அப்படியே பார்த்திருந்தானோ…
 
“நீ சாப்பிடியா புள்ள…??” யாரை கேட்கிறான் தன்னையா..!! இத்தனை மாதங்களில் கோபம் எரிச்சல் இல்லாத ஒரு குரல்.. பரிமாறி முடித்த பாத்திரங்களை கையில் எடுத்தவள் ஆச்சர்யமாக அவனை பார்த்திருந்தாள்…
 
                                               இனி………….??????  

Advertisement