Advertisement

எனை மாற்றிய தருணம்
                            அத்தியாயம்  –  12
 
உண்மையிலேயே சுமதியால் இதை நம்ப முடியவில்லை..!! தீனா பார்க்க கரடு முரடாய் இருக்கிறான் என்ன வேலை பார்க்க கூடும்..?? ஏதேதோ யோசித்தாலே தவிர இது போல ஒரு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் வேலை என்று கனவில் கூட நினைத்தது இல்லை… இந்த குடும்பத்தின் அலறலும் சாபமும்  அவன் காதைக்கூட எட்டவில்லை போல..
 
ஒரு நடுத்தர வயது பெண் தீனாவின் காலை கட்டிக் கொண்டு, “ஐயா சாமி ஒரு ரெண்டு நாள் டைம் வாங்கி கொடுப்பா.. நான் எப்படியாச்சும் ஒரு வீட்ட பார்த்துட்டு போயிருறேன்.. எம்புருசன் வெளியூர்க்கு போயிருக்காரு.. அவரு வந்திரட்டும்.. ஒரு வருசமா வேலை இல்லாம இருந்துட்டு இப்பதான்யா லாரி ஓட்ட ஆரம்பிச்சிருக்காரு.. கொஞ்சம் மனசு வை சாமி…!!” கையெடுத்து கும்பிட,
 
அந்த குடும்பத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.. அனைவரும் எலும்பும் தோலுமாக இருக்க நன்றாக சாப்பிட்டே பலமாதங்கள் ஆகியிருக்கும் போல, அந்த பெண்ணை தள்ளி விட்டவன்,
 
 “என்னடா பார்த்துட்டு இருக்கிங்க..?? கதவை இழுத்துப் பூட்டுங்க..??”
 
“ஐயோ நான் என்ன பண்ணுவேன் கடவுளே உனக்கு கண்ணில்லையா..!! இந்த மூனு பிள்ளைகள வைச்சுக்கிட்டு நான் எங்க போவேன்..?? அந்த குழந்தைகளும் தாயும் அழுவதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.. கூட்டத்தில் இருந்தவர்களும் பார்வையாளர்களாக இருந்தார்களே தவிர ஏதும் தட்டிக் கேட்கவில்லை..
 
அவர்கள் அழுவதை கண்டு கொள்ளாமல் அவன் கூட்டாளிகள் கொடுத்த சாவியை வாங்கி பையில் போட்டவன் வண்டியை கிளப்ப கண்ணாடியில் சுமதியின் உருவம் தெரிந்தது.. வண்டியை நிறுத்தி சுமதியின் அதிர்ந்த முகத்தை பார்த்து பின் கண்டு கொள்ளாமல் தன் கூட்டாளிகளோடு வண்டியை கிளப்பிவிட்டான்..
 
கூட்டமும் கலைந்து சென்றது.. அந்த குடும்பம் மட்டும் நடுத்தெருவில்… ஆங்காங்கே சிதறிக் கிடந்த பொருட்களை அவர்கள் ஒன்று சேர்க்க ஈவு இரக்கம் இல்லாமல் நடுரோட்டில் பொருட்களை தூக்கி வீசியிருந்தார்கள்.. சுமதிக்கு மனது தாளவில்லை.. பையை கீழே வைத்தவள் தன்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய, அந்த குடும்பத் தலைவிக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை..
 
சுமதி ஆதரவாக அந்த பெண்ணின் கையை பிடிக்க, அவர் ஓவென்று ஒரே அழுகை, “இந்த மூனு பிள்ளைகளையும் வைச்சுக்கிட்டு இப்ப நான் என்ன பண்ண போறேன்..?? ஐயோ கடவுளே.. அந்த மனுசன் எப்ப வரப்போறாருன்னு தெரியலையே..?? சம்பாரிக்கிற 5.. 10 பணத்தையும் ஒயின்ஸாப்ல கொடுத்துட்டு வந்திடுவாரு.. பாருத்தா இந்த பிள்ளைங்க நல்லா சாப்பிட்டு பலகாலமாச்சு..
 
நான் ஒத்த ஆளு வீட்டுவேலைக்கு போய் கால்வயித்து கஞ்சிக்கூட குடிக்க முடியல..?? அதிலயும் பாதி பணத்தை அந்த ஆளு என்ன அடிச்சுப்பிடிச்சு வாங்கிட்டு போய் குடிச்சிட்டு வந்திருறான்.. இப்ப பாரு நாங்க எந்த நிலையில இருக்கோம்னு.. இந்த அரசாங்கத்துக்கு இதெல்லாம் கண்ணு தெரியாதா..  நாசமா போறவங்க வீதிக்கு ரெண்டு ஒயின்ஸாப்ப திறந்து வைச்சு பலபேரு குடும்பத்தை நடு ரோட்டுக்கு கொண்டு வாறானுகளே…!!” வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஆற்றாமையில் அழுது கரைய,  அவரின் அழுகையை தாங்க முடியாமல்,
 
அண்ணன் தன் செலவுக்கு கொடுத்த பணத்தையும் , வாங்கிக் கொடுத்த திண்பண்டங்கள் அடங்கிய பையையும் அந்த குடும்ப தலைவியின் கையில் திணித்தாள்..
 
“ஐயோ வேணாம்தா..”
 
“பரவால்லக்கா வாங்கிக்கோங்க..” அனைத்தையும் அவர் கையில் வற்புறுத்தி திணித்தவள்.. “அக்கா உங்க கிட்ட போன் இருக்கா..??”
 
“இருக்கு..” தன் பழைய பட்டன் போனை கொண்டு வந்து கொடுக்க அதிலிருந்து தன் அண்ணனுக்கு அழைத்தவள்,
 
“ அண்ணே நான் சுமதி பேசுறேன்.. நம்ம வீட்டு பக்கத்துல இருக்க லயன் வீட்ல வீடு ஏதும் காலியா இருக்காண்ணே..??”
 
“என்ன சுமதி வீட்டுக்கு போயிட்டியா..?? யாருக்கு வீடு..?? நீ இந்த பக்கம் வரப்போறியா..?? அது ரொம்ப சின்ன வீடாச்சேத்தா..!!”
 
“இல்லண்ணே எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்களுக்கு நீ வீடு இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்றியா.. அட்வான்ஸ் கொஞ்சம் கம்மியா கேளுண்ணே.. ..இவங்க நம்மள போலத்தான் வசதியில்லாதவங்க..??”
 
“ஆமா இதென்ன மாளிகையா..?? அட்வான்ஸ் நிறைய கேட்க..? அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பார்த்துக்கிறேன்.. ஆள இங்க அனுப்பிவிடு..”
 
“அண்ணே அட்வான்ஸ் எவ்வளவுன்னு கேட்டு சொல்லு நான் நாளைக்கு உன்கிட்ட கொண்டு வந்து தர்றேன்.. வீட்ல இருக்கு பணம்..”
 
“ நீ என்ன பெரிய மனுசி போல பேசுற..!! ஆள மட்டும் அனுப்பு.. நான் எல்லாம் பார்த்துக்கிறேன்..”
 
அண்ணனிடம் எல்லாம் பேசி போனை அந்த பெண்ணிடம் கொடுத்து அட்ரஸையும் சொல்லியவள் “அக்கா கொஞ்சம் தள்ளிதான் ஆனா ஏரியா நல்லா இருக்கும்.. இந்த அட்ரஸ்ல போய் அண்ணனுக்கு போன் பண்ணுங்க அவங்க வந்து கூட்டிப் போவாங்க.. கொஞ்சம் அவுட்டரா இருக்கிறதால வாடகை கொஞ்சம் கம்மிதான் .. அதோட நான் வேலைப் பார்த்த கார்மென்ஸ்ல உங்களுக்கும் வேலை கேட்கச் சொல்லியிருக்கேன்.. ஷிப்ட்லாம் பார்த்தா நிறைய பணம் கொடுப்பாங்கக்கா..பக்கத்துலயே ஸ்கூல் எல்லாம் இருக்கு நீங்க பயப்படாம போங்க அண்ணன் எல்லாம் பார்த்துப்பாங்க..”
 
அவருக்கு கண்ணீர் நிற்கவில்லை.. “தெய்வம் போல நீ வந்தத்தா நீ நல்லா இருப்ப தாயி.. தேனுவை வாங்க கொஞ்சிவர் உன் பிள்ளைக்குட்டிகளோட தீர்க்க சுமங்கலியா இருக்கனும்..” மனதார வாழ்த்தினார்..
 
சுமதி நின்று ஒரு டெம்போவை பிடித்து பொருட்களையும் அவர்களையும் அதில் ஏற உதவி செய்து வேன் டிரைவரிடம் அட்ரஸை சொல்லியே தன் வீட்டிற்கு கிளம்பினாள்.. தீனாவை நினைத்து மனது கொதித்தது..
 
இது போல அடுத்தவரை அழவைக்கும் வேலை பார்ப்பான் இன்னும் நம்ப முடியவில்லை.. கொஞ்சம் நல்லவரு தானோ என்ற எண்ணம் எப்போதும் அவள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்,…
 
என்றும் போல இரவு ஒன்பது மணியளவில் முழு போதையில் தீனா வீட்டிற்கு வர வாசலில் பெரிய பூட்டு தொங்கியது.. விளக்குகள் கூட போடாமல் இருக்க தட்டுத்தடுமாறி வந்தவன் வெளிவிளக்கை போட்டு.. “எங்க போய் தொலைஞ்சுக ரெண்டு இம்சைகளும்..!!” பூட்டை ஆட்டிப் பார்த்தான் இந்த வீட்டிற்கு பூட்டெல்லாம் எப்போதும் போட்டதில்லை.. இப்போதுதான் கதவே போட்டிருக்க அதில் ஒரு பூட்டு… பக்கத்து வீட்டு பையன் ஓடி வந்து,
 
 “அண்ணே இந்தாங்க சாவி பாட்டி கொடுக்க சொன்னாங்க..??”
 
“எங்கடா போய் தொலைஞ்சாங்க ரெண்டு பேரும்..??” வாசலில் கிடந்த நாற்காலி, டேபிளையும் காணவில்லை..
 
“தெரியலண்ணே ஆனா இனி இந்த வீட்டுக்கு வரமாட்டாங்களாம் சொல்ல சொன்னாங்க..!!”
 
கதவைக்கூட திறக்காதவன் சாவியை வாங்கி பையில் போட்டபடி ஆத்திரத்தில் வண்டியை கிளப்ப அடுத்து அவன் நின்ற இடம் ராசாத்தி அம்மாளின் வீடு.. கதவு சாத்தியிருக்க லைட்டும் அணைக்கப் பட்டு இருந்தது..
 
வாசலில் நின்றபடி காலால் கதவை எட்டி உதைத்தவன் “ஏய் இம்சை பிடிச்ச கெழவி.. கதவ திற..??” கதவை விடாமல் தட்ட சற்று நேரத்தில் விளக்கு எறிய சுமதி கதவை திறந்திருந்தாள்..
 
சுமதியை முறைத்தவன் அவளை இடித்தபடி அந்த குடிசை வீட்டிற்குள் நுழைய போக கைவைத்து தடுத்தவள் “என்ன வேணும்..??”
 
“ஏய் என்ன புள்ள அறைஞ்சேனா பல்லை பேத்துருவேன்… கையை எடு மூஞ்சிய பேத்துருவேன்..??” மதுவாடை அவள் முகத்தில் அடிக்க முகத்தை சுழித்தவள் சற்று தள்ளி நின்று கொண்டாள்.. ஆனாலும் வழி விடவில்லை..
 
“ஏய் கெழவி எங்க போய் தொலைஞ்ச வா வெளிய..??” தீனாவின் காட்டு கத்தலில் ராசாத்தி அம்மாளும் குழந்தையோடு வர தேனுவிற்கு தீனாவை பார்க்கவும் குஷி தாங்கவில்லை.. ராசாத்தி அம்மாளின் கையில் இருந்தபடி தீனா கைக்கு தாவ சுமதி தடுத்து தான் வாங்கியிருந்தாள்..
 
தீனாவுக்கு இன்னும் கோபம் ஆத்திரத்தில் பல்லை கடித்தவன் “ஏய்ய்ய்ய்ய்…!!!!” கர்ஜிக்க சுமதி கண்டு கொள்ளவில்லை..
 
“என்ன தீனா ராத்திரி நேரத்தில ஏன் இப்படி கத்துற..??”
 
“என்ன கேடு வந்துச்சுன்னு ரெண்டு பேரும் புள்ளைய தூக்கிக்கிட்டு இங்க வந்திங்க..??”
 
“நான் தான் அம்மாவ இங்க கூட்டிட்டு வந்தேன்…”
 
சுமதியை அடிப்பது போல வந்தவன் “அதுதான் ஏன்னு கேட்கிறேன்..??”
 
“எனக்கு அங்க இருக்க பிடிக்கல.. இன்னைக்குத்தான தெரிஞ்சிச்சு நீங்க என்ன வேலை பார்க்கிறிங்கன்னு..?? அடுத்தவங்க அழுகையில சம்பாரிக்கிற ஒரு மனுசன் இருக்க இடத்தில இருந்தாக்கூட பாவம் எனக்கும் என் மகளுக்கும்..!!”
..
“ஏய் வாய மூடு .. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..?? பாவம்பார்த்து உனக்கு தாலி கட்டினேன்ல அதான் ரொம்ப பேசுற.. அந்த பயக்கிட்ட அன்னைக்கே உன்ன பிடிச்சுக் கொடுத்திருக்கனும்…!!”
 
“பரவால்ல அப்படி பிடிச்சுக் கொடுத்திருந்தா என் வாழ்க்கை மட்டும்தான் அழிஞ்சிருக்கும்.. ஆனா நீங்க பார்க்கிற வேலையால எத்தனை பேரோட வாழ்க்கை அழியுது.. இதெல்லாம் ஒரு பொழப்பா..?? நீங்க செய்ற பாவத்துக்கு  எனக்கு ஒரு தாலியக்கட்டி எனக்கும் என் பொண்ணுக்கும் பாவத்தை பங்கு போட்டு கொடுக்கிறிங்க.. இதுக்கு கத்தி குத்து வாங்கின அன்னைக்கு அப்படியே விட்டுட்டு போயிருந்திருக்கலாம்..”
 
பளார் என ஓங்கி ஒரு அறைவைக்க சுமதி சுருண்டு விழுந்திருந்தாள்.. குழந்தையோடு கீழே கிடக்க ராசாத்தி அம்மாள் தான் பதறி ஓடி வந்தார்.. “ஏய் என்னடி புள்ளப்பூச்சிக்கெலாம் கொடுக்கு முளைச்சிருச்சா..?? ஊமக்கோட்டான் மாறி இருந்துக்கிட்டு என் வேலையையே குறை சொல்லுவியா..?? அந்த வேலையைத்தான் நான் 15 வருசமா பார்க்கிறேன்.. அப்படித்தான் செய்வேன்..?? அதக்கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்ல..??”
 

Advertisement