Advertisement

கண்ணைத் துடைத்துக் கொண்டவள் “இல்லமா.. பசியில்ல..” குழந்தையை தீனாவிடம் இருந்து வாங்க கைநீட்ட,
 
“அழாமத்தான இருக்கு.. போ போய் சாப்பிட்டு வா..??”
 
 “பரவால்ல நீங்க படுங்க நான் தேனப் பார்த்துக்கிறேன்..”
 
“ஏய் குரலை உயர்த்தியன் போ புள்ள போய் சாப்பிட்டு வா..” தீனாவை பார்க்கவும் தேனுவும் சமத்தாய் அவன் தாடி மீசையோடு விளையாட அதற்கு மிகவும் பிடித்தமான செயல் இது.. அந்த ஏரியா சின்ன குழந்தைகளே தீனாவை பார்த்தால் ஏதோ பூச்சாண்டியை பார்த்தது போல அலற…. தேனுக்கு அந்த பயம் எப்போதும் இல்லை..
 
மறுநாள் விடியலிலேயே தீனா போனும் கையுமாக குழந்தையோடு மாடிக்கு சென்றிருக்க சுமதி நிம்மதியாக தன் வேலையை துவக்கியிருந்தாள்.. இன்று அண்ணனை போய் பார்க்க வேண்டும் போலிருந்தது.. ஒரு பத்துநிமிடம் நான் சொல்றத காது கொடுத்து கேட்டா போதும்..
 
என்னை பத்தி புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பாச்சும் கிடைக்கும்.. இதுவரை தேனை தூக்கிச் செல்லவில்லை.. ராசாத்தி  அம்மாளிடம் விட்டு சென்றிருந்தாள்.. வீட்டைவிட்டு வந்த காரணத்திற்கு மன்னிப்பு கேட்டு பின் தேனுவை, தீனாவை பற்றி சொல்லலாம் நினைத்திருந்தாள்..இன்னைக்கு தேன தூக்கிட்டு போவமா..??
 
இன்று மார்கெட் போகும் வேலை இல்லை .. வேகவேகமாக வேலையை முடித்தவள் சமைத்துக் கொண்டிருக்க தீனா வெளியில் கிளம்பிவிட்டான்.. நூறுமுறை சுமதியை அதட்டி குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்ல இவளுக்கு அவனது கோபத்தில் சிரிப்பே வந்தது.. தலையை தலையை ஆட்ட தலையில் ஒரு கொட்டு வைத்தவன் தலையை அசையாமல் பிடித்து , “வாயத்தொறந்து பதில் சொல்லு புள்ள..??”
 
“சரி..!!”
 
“அப்பாடி.. வாயத் திறந்திட்டியா..?? வரவா.. தேனுக்குட்டி அப்பா வரவா..!!” முதல்முறையாக சுமதியிடம் சொல்லி சென்றான்..
 
குழந்தையோடு மூச்சிறைக்க அண்ணன் வேலைப்பார்க்கும் பேக்டரிக்கு சென்றவள் வெயிலிலேயே காத்திருந்தாள்.. குழந்தையின் தலையில் தன் சேலையின் தலைப்பை போர்த்தி காத்திருக்க சாப்பிடும் நேரம்தான் வெளியில் வருவான் தெரியும்.. வெயில் மண்டையை பிளந்தாலும் அண்ணனை எப்படியாவது பார்த்து ஒருவார்த்தையாவது பேசிவிட வேண்டும்.. கூட்டமாய் ஆட்கள் வெளியில் வர அடுத்த ஷிப்டிற்கு வேறு ஆட்கள் உள்நுழைந்தார்கள்..
 
தூரமாய் வரும்போதே குணா தங்கையை பார்த்துவிட்டான்.. இடுப்பில் குழந்தை இருக்க இதுதான் கோபி சொன்ன அவனோட குழந்தையா..?? எதுவும் பேசாமல் சுமதியை கண்டு கொள்ளாமல் அவளை கடக்க முயல குழந்தையோடு அண்ணனின் காலடியில் விழுந்திருந்தாள்..
 
“அண்ணே நான் பண்ணினது தப்புதான்.. என்னை மன்னிச்சிரு..??” குழந்தையை கீழே விடாமல் கங்காரு குட்டி போல அணைத்து இவள் மட்டும் அண்ணனின் காலை கெட்டியாக பிடித்திருக்க..
 
வெயிலையும் ரோட்டின் சூட்டையும் உணர்ந்தவனின் கை குழந்தையோடு கீழே கிடந்த தங்கையை முதல் இருமுறை கண்டு கொள்ளாமல் சென்றதை போல செய்யமுடியாமல் தன்னை அறியாமலே தூக்கியிருந்தது.. “அண்ணே…!!”
 
“சரி எழுந்திரு எல்லாரும் பார்க்கிறாங்க..??” வியர்வையில் சுமதி குளித்திருக்க ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றவன் அவளை அமரவைத்து பக்கத்தில் இருந்த கடையில் கூல்டிரிங்ஸ் வாங்கி கொண்டு குழந்தையின் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டையும் கொடுக்க தேனுக்கு விளையாட ஒரு பொருள் கிடைத்துவிட்டது..
 
“இந்த ஆயா வேலைப்பார்க்கத் தான் அந்த ரௌடியக் கட்டிக்கிட்டியா..?? அப்ப உனக்கு இந்த அண்ணன் மேல நம்பிக்கை இல்ல அதானே..!!”
 
“அண்ணே நான் நடந்தது எல்லாம் சொல்லிருறேன்.. அப்புறமா நீ முடிவு பண்ணிக்கோ நான் உன் தங்கச்சிண்ணே ஒரு தரம் நான் சொல்றத கேளு..??”
 
அண்ணன் இருக்கும்போதே நடந்த கொடுமைகளை சொன்னவள் கோபியை பற்றி அவன் தாய் சொன்னது தான் எதற்காக வீட்டை விட்டு சென்றாள் காரணத்தை சொன்னவள் சாகப் போய் பின் தேனுவை பார்த்தது ,தீனாவை சந்தித்தது, அவன் தன்னை விதவை என்று நினைத்தது ,அவனால் கத்திக் குத்து வாங்கியது அனைத்தும் சொல்ல குணசேகரன் அங்கேயே அமர்ந்துவிட்டான்..
 
“என்னத்தா சொல்ற..??” தன்னை அறியாமல் அவன் கை குழந்தையை வாங்கியிருந்தது.. சுமதிக்கு தெரியும் தன் அண்ணனை பற்றி.. அன்றே தேனுவை அங்கு தூக்கிச் சென்றிருந்தாலும் கண்டிப்பாக தன்னுடைய குழந்தையை போலவே வளர்ப்பான் அவள் பயந்தது அண்ணிக்கும் அவள் குடும்பத்திற்கும்தான்..
 
குழந்தையை ஆசை தீர முத்தமிட்டவன் “என்னடா தங்கம் நீங்கதான் என் தங்கச்சிய காப்பாத்துன தெய்வமா…?? என் உசிர காப்பாத்தி கொடுத்துட்டத்தா..?? எஞ்சாமி.. தங்கம்..!!” குழந்தையை கொஞ்ச சுமதியும் அண்ணனின் அருகில் சென்றிருந்தாள்..
 
தாய் , தந்தை இல்லாமல் வளர்ந்தவர்களுக்கு அவர்களின் அருமை தெரியும்.. அன்று வீடுகளில் பெரியவர்கள் நிறைந்திருக்க இன்று வீடுகளில் ஆடம்பர பொருட்களும், தனிமையும் அதனை போக்க போனுமாக மாறியிருக்கிறார்கள்… முதியவர்கள் முதியோர் இல்லங்களில்..!!
 
“ஏத்தா அப்போ உன் புருசனுக்கு இந்த புள்ள உன்னோடது இல்லைன்னு தெரியும்தான..??”
 
புருசனா ஓஓஓஓ அவரா…?? “இல்லண்ணே தெரியாது.. அதோட நான் அன்னைக்கு வீட்ட விட்டு வரும்போது தோடு சங்கிலி எல்லாத்தையும் வீட்ல கழட்டி வைச்சிட்டுத்தான் வந்தேன்.. நான் வெறுங்கழுத்தா கழுத்துல தாலி இல்லாம கைய புள்ளையோட இருக்கவும் அவுகளா நான் விதவைன்னு நினைச்சுட்டாக.. நானும் அதுக்கு ஏதும் சொல்லல.. அவரு வீட்ல இருக்கனும்னு நானும் அந்த அம்மாவும் அங்க போகல.. அவுக வீட்ல வசதி பத்தாது குழந்தைய வைச்சுக்க முடியாதுனுதான் அவரு வீட்ல தங்கினோம்..
 
அதோட அங்க இருக்கவுக சொன்னது அம்புட்டும் பொய்ண்ணே… அவரு எப்பவும் மாடியிலதான் படுப்பாரு.. என்னவோ தேனுவ ரொம்ப புடிக்கும் அவருக்கு .. இவளத்தான் தூக்கி வைச்சுக்குவாரே தவிர என்கிட்ட ரொம்ப பேசினதுகூட இல்லை..
 
“அப்ப உன் புருசன் நல்லவர்தானா…?? உன்ன இந்த நிலைமைல ஒரு குழந்தையோட ஏத்துக்கிட்டாரே..!! என்ன கோபம்தான் ரொம்ப வரும்போல.. அந்த கோபிப்பயல ஒரே தூக்கா தூக்கிட்டாரே..?? இந்த பய இப்படியெல்லாம் பண்ணினது முன்னயே தெரிஞ்சிருந்தா அப்படியே விட்ருப்பேன்..!!”
 
“விடுண்ணே.. நமக்கு எதுக்கு இப்ப தேவையில்லாதவங்க பேச்சு..?? அண்ணிய வீட்ல சேர்த்துக்கிட்ட தானே..??”
 
“இன்னும் இல்லத்தா..  அவ பண்ணினதுக்கு சோத்துக்கு கிடந்து அல்லாடுனாத்தான் நம்ம அருமை புரியும் அவளும் அவ ஆத்தாளும் தினம் வீட்டுக்கு வந்து கெஞ்சிட்டுத்தான் போறாக..!!”
 
“அண்ணே பாவம்ண்ணே அவுக … நாமதான் அம்மா இல்லாம கஷ்டப்பட்டோம் உன் புள்ளைகளும் கஷ்டப்படனுமா.. போதும் அவங்கள சேர்த்துக்கோ..??”
 
“பார்ப்போம் பார்ப்போம்.. ம்ம் சொல்லு உன்புருசன் என்ன வேலை பார்க்கிறாரு..??”
 
வேலையா..?? ஆமா அவரு என்ன வேலை பார்க்கிறாரு..?? இதுவரை அவனை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் சுமதிக்கு இல்லை.. அண்ணன் கேட்கவும் தீனாவை பற்றி யோசிக்க முன்ன வீட்டுக்கு நாலைஞ்சு பேர் அடிக்கடி வருவாக.. இப்ப அதுவும் இல்ல.. இவரு என்ன வேலை பார்ப்பாரு…!!
 
“என்னத்தா யோசிக்கிற..?? கண்ட பயலுகளும் அரிவாளாள வெட்டுற அளவுக்கு வந்திருக்குன்னா ஏதாச்சும் தப்பு பண்றாரா..?? நல்லா விசாரி.. நல்லதோ கெட்டதோ உன் வாழ்க்கை அங்கதான்னு தீர்மானிச்சுட்ட.. இப்ப பொம்பள புள்ளைய வேற வளர்க்கனும்.. நல்லா விசாரி அவருக்கிட்ட என்ன ஏதுன்னு..?? நான் ஒரு பத்துநாளு கழிச்சு நான் வர்றேன்..” தங்கைக்கு செலவுக்கு பணம் கொடுத்து திண்பண்டங்கள், பழங்கள், பூ என்று நிறைய வாங்கி கொடுக்க சுமதிக்கு மனம் நிறைந்தது..
 
குழந்தையை ஆசை தீர கொஞ்சியவன் தங்கையை பஸ் ஏற்றிவிட்டே வீட்டிற்கு கிளம்பினான்.. சுமதிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. அண்ணன் தன் வீட்டுக்கு வரும் நாளை நினைத்தபடி பஸ்ஸை விட்டு இறங்கியவள் குழந்தையோடும் கைகொள்ளா பைகளோடும் நடக்க மனம் மகிழ்ச்சியில் இருந்ததாலோ என்னவோ களைப்பு அண்டவில்லை..
 
இரு தெரு தாண்டிதான் இவர்கள் வீடு .. அம்மாக்கிட்ட அவரு என்ன வேலை பார்க்கிறாருன்னு கேட்கனும்..?? அவன் மீசை , தாடி,  போடும் உடைகளை யோசித்து பார்த்தவள் இதுமாதிரிலாம் போனா என்ன வேலையா இருக்கும்..??
 
தெரு முக்கில் ஒரே கூட்டமாக இருக்க சத்தம் அதிகமாக கேட்டது.. அதை தாண்டிதான் இவர்கள் தெருவிற்குள் நுழைய வேண்டும்.. என்ன செய்வது..?? பையை கீழே வைத்து குழந்தையை மறு தோளில் மாற்றிக் கொண்டவள் கூட்டத்தை நெருங்க நெருங்க இரு பெண்களின் அழுகுரல்.. அவர்களுடைய வீட்டு பொருட்கள் எல்லாம் வாசலில் கிடக்க சிறு குழந்தைகள் இருவர் அழுது கொண்டிருந்தனர்..
 
அழும் அக்குழந்தைகளை பார்க்க சுமதிக்கே பாவமாக இருந்தது.. “அடேய் நாசமா போவிங்கடா நீங்கலாம்..?? உங்க பொண்டாட்டி பிள்ளைக்கெல்லாம் இப்படி ஒரு நிலைமை வராத..!!” மண்ணை வாறி தூற்ற.. யார் இந்த அநியாயத்தை செய்வது கூட்டத்தை விலக்கி முன்னால் செல்ல அங்கு தீனா ஒரு சேரில் அமர்ந்தபடி தன் கூட்டாளிகளுக்கு ஆணை இட்டுக் கொண்டிருந்தான்..
 
இதுதான் இவரோட வேலையா..?? சுமதிக்கு தலைச்சுற்றி மயக்கம் வருவது போலிருக்க குழந்தையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்…!!!
 
                                                   இனி…………..??????

Advertisement