Advertisement

எனை மாற்றிய தருணம்
                      அத்தியாயம்  –  11
 
தீனா கதவடைக்க தாழிடும் சத்தம் கேட்டோ என்னவோ சுமதி வாரி சுருட்டி எழுந்து கொண்டாள்.. தீனாவை பார்க்கவும் அதிர்ந்து பின்னாலே சென்று சுவரோடு சுவராக பல்லி பல ஒட்டிக் கொள்ள, தண்ணி அடித்திருப்பான் போல நடை தடுமாறித்தான் வந்தது.. குழந்தையின் மெத்தைக்கு அருகில் வந்தவன் சுமதியை பார்த்து முறைத்து,
 
“ஏ… ஏய் என்ன புள்ள..?? அறைஞ்சேன்னா பல்லு 32 ம் கீழவிழுந்திரும்..!! இந்த ஏரியா பொம்பளைங்க சொன்னது போல நடந்துக்கிற..?? என்ன என்னை பார்த்தா பொம்பள பொறுக்கி போல இருக்கா…?? நான் ரௌடிப் பயதான் ஆனா இதுவரைக்கும் எவளையும் தொட்டதில்ல.. தொடனும்னு நினைச்சா நீ இப்படி அந்த மூலைக்கு போனா விட்ருவனா..!!
 
என்னால ஒரு பொண்ணுக்கு கெட்ட பேர் வேணான்னு அப்ப எனக்கு தோனுச்சு அதவிட முக்கியம் நீ அங்க போனா பாப்பாவையும் தூக்கிட்டு போயிருவ அதான் உனக்கு தாலிக் கட்டினேன்… மத்தபடி வேற ஒன்னும் இல்ல நீ உன் பழைய புருசனையே நினைச்சுக்கோ..!! எனக்கு பாப்பா மட்டும் போதும்.. ஓவரா பண்ணாம எப்பவும் போல இரு..” நிற்க முடியாமல் தடுமாற..
 
சுமதிக்கே தன் மேல் கோபம் இவரு சொல்றது உண்மைதான..?? நம்மள தொடுறதா இருந்தா இவ்வளவு நாள் ஏன் சும்மா இருக்கனும்.. இப்பவாச்சும் கதவு இருக்கு அப்போ சுத்திலும் வெட்டவெளிதான..?? அப்போ ஏன் இப்ப உள்ள வந்தாரு..?? தீனாவை பார்க்க அந்த தரையில் எதுவும் விரிக்காமல் குழந்தை மெத்தையின் அருகில் தடுமாறி அமர்ந்தவன்.. குழந்தையின் கன்னத்தை தடவிக் கொடுக்க அதற்கு இதமாய் இருந்தது போல புன்னகை முகத்துடன் தூங்கியது..
 
“ஏ.. புள்ள நா இங்கன படுத்துக்கவா..?? முன்னெல்லாம் கதவு போடாத வரைக்கும் நான் ராத்திரியில ஒரு தரம் பாப்பாவ வந்து பார்த்துட்டு போவேன்.. இப்ப என்னனா நீ கதவ பூட்டிக்கிற..??” அதற்கு மேல் உட்கார முடியாமல் தடுமாறி குழந்தையின் அருகில் படுத்திருக்க ஒரு கை குழந்தையின் மேல் மென்மையாய் விழுந்திருந்தது..
 
மறுநிமிடம் தீனா உறக்கத்திற்கு சென்றிருக்க சுமதி அப்படியே அமர்ந்திருந்தாள். தீனா இந்த அறையில் படுத்திருப்பதில் அவளுக்கு ஏதும் தோன்றவில்லை.. மாலையில் இருந்து யோசித்ததில் தன் வாழ்க்கையில் கெடுதல் எதுவும் நடக்கவில்லை என்றே தோன்றியது.. என்ன தனக்கு திருமணம் ஆகவில்லை.. குழந்தை தன்னுடையது இல்லை என்பது யாருக்கும் தெரியாது.. இதை கடைசிவரை மறைக்க முடியாது.. என்ன செய்யலாம்..??
 
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாலோ தரையில் படுக்க முடியாமல் தீனா திரும்பி திரும்பி படுக்க அவனை பார்த்தவள் இந்த தரையில் உட்காரவே முடியாது.. இப்படி ஒன்னும் விரிக்காம படுத்தா எப்படி தூக்கம் வரும்.. குழந்தைக்கு மெத்தை இருக்க சுமதி பாய்விரித்து அதில் பழைய சேலைகளை விரித்துதான் படுப்பாள்.. அதுவே முள்ளாய் குத்தும்..
 
இவருக்குத்தான் கட்டில் இருக்குல அதையாச்சும் கொண்டு வந்து போட்டிருக்கலாம்..  சற்று நேரம் அவன் படும் சிரமத்தை பார்த்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து அவன் புறம் சென்றிருந்தாள்..
 
“ஏங்க எழுந்திருங்க..?? அவனை எழுப்ப எந்த அசைவுமில்லை.. ஏங்க ஏங்க…!!”அவனை தொட்டு உலுக்க,
 
“அடிங்.. எவன்டா அவன்…..??” தூக்க கலக்கத்தில் எப்போதும் போல கெட்டவார்த்தையில் திட்ட தொடங்கிவிட்டான்.. அவன் திட்டிமுடிக்கும்வரை காதை மூடியிருக்க இவனின் கோபக் குரலில் குழந்தை தூக்கம் கலைந்து அழவே ஆரம்பித்துவிட்டது.. சட்டென தன் பேச்சை நிறுத்தியவன் நன்றாக திரும்பி பார்த்து லேசாக சுற்றுப்புறம் உணர,
 
“ஆளும் மண்டையும் பாரு..?? எதுக்குப்புள்ள என்னைய எழுப்பின..!!” குழந்தையை தூக்கியவன் “ச்சோ அழாதிங்கடா செல்லம்… வாங்க வாங்க அப்பாக்கிட்ட வாங்க..!!”
 
“ஏ.. இப்ப தேனு என்னைய அப்பான்னு கூப்பிடலாம் தானே..??” சுமதி என்ன பதில் சொல்வது அமைதியாய் இருக்க..
 
“ஆமா நீ வாயத்திறந்து பதில் சொல்லிட்டாலும்.. எப்படா உன் வாய்ல இருந்து முத்து விழுதுன்னு நான் பார்த்துட்டே இருக்கனும்.. என்னைப் பார்த்து முழிச்சுட்டு இருக்காம.. போத்தா.. பரதேவதை போ.. போய் புள்ளைக்கு பால ஆத்தி கொண்டு வா..!!” குழந்தை இன்னும் பசியால் வீறிட தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடி அதனை கொஞ்சிக் கொண்டிருந்தான்..
 
சுமதியை கை பாலை வேகமாக ஆற்றிக் கொண்டிருந்தாலும் மனம் தீனாவை பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தது.. மனிதர்களில் எத்தனை வகைகள் பெற்ற பிள்ளையே வேண்டாம் என ரோட்டில் போட்டு செல்லும் பெற்றோர்கள், பார்க்க கரடுமுரடா இருந்தாலும் அடுத்த பிள்ளைய தன் பிள்ளையா நினைக்கிற மனசு..
 
இந்த குழந்தை மேல இவருக்கு ஏன் இவ்வளவு பாசம் தனக்கு தாலிக் கட்டியது இதற்காகத்தான் இருக்கும் என இவளும் அறிந்து கொண்டாள்.. மற்றபடி தன்னை விரும்பித்தான் மணந்தான் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியவில்லை.. தேனுவை தவிர மற்ற எல்லோரிடமும் இதே எரிச்சல் குரல் தான்.. கோபம்தான்.. பொறுமை என்பதை இவனிடம் இவள் பார்த்ததில்லை..
 
பால் டப்பாவை தீனாவிடம் கொடுத்தவள் “நீ.. நீங்க அந்த பக்கம் மாறிப் படுத்துக்கோங்க அதுக்குத்தான் எழுப்பினேன்..” சுமதியை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.. குழந்தையோடு எழுந்து சுமதியின் படுக்கைக்கு மாறிக் கொண்டான்.. திட்டுவான் எதிர்பார்க்க.. எதுவுமில்லை அமைதியாக குழந்தையை மெத்தையில் படுக்க வைத்து அவளுடைய படுக்கையில் படுத்துக் கொண்டான்..
 
குழந்தையின் மறுபுறம் தனக்கு படுக்கையை விரித்து படுத்துக் கொண்டவளுக்கு தீனா குழந்தையோடு பேசும் குரல் கேட்டாலும் தூக்கம் கண்ணை சுழற்ற குழந்தையை பற்றிய கவலையில்லாமல் உறக்கத்தில் ஆழ்ந்தாள்..
 
இதோ திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது .. ராசாத்தி அம்மாளுக்கே குழப்பம் இதுக ரெண்டும் புருசன் பொண்டாட்டி தானா..!! ஏதோ இவன் வாழ்க்கையில ஏதாச்சும் மாற்றம் வரும்னு பார்த்தா இது ரெண்டும் பழைய படியே இருக்குக..
 
தீனா எங்கு போகிறான் வருகிறான் எதையும் கேட்பதில்லை.. கேட்டாலும் அவன் பதில் சொல்லமாட்டான் அது தனி.. எந்த பேச்சு வார்த்தையும் இருவரிடமும் இல்லை.. ஒரே மாற்றம் இங்கு வந்ததில் இருந்து கருப்பு பொட்டு வைத்தவள் இப்போது சிவப்பு பொட்டு.. கழுத்தில் மஞ்சள் கயிறு அது மட்டும்தான் மற்றபடி எப்போதும் போல தானுண்டு தன் குழந்தை.. டிபன்கடை, தையல் என தன் பாதையை பார்த்துக் கொண்டாள்..
 
என்ன ஒன்று தீனா இரவில் அவர்கள் அறையில் படுத்துக் கொள்கிறான் முன்பெல்லாம் பகல் பொழுதில் பாதி நேரம் தேனுவோடு இருப்பவன் இப்போது இரவு பொழுதும் அவளோடு இருப்பதில் அவ்வளவு ஆனந்தம் அவனுக்கு ….!! தினம் தினம் குழந்தைக்கு ஏதாவது விளையாட்டுப் பொருளோ, டிரஸோ எதாவது ஒன்றை வாங்கி வருவான்..
 
இருமுறை தன் அண்ணனை பார்க்க அவன் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல குணா கண்டு கொள்ளவே இல்லை.. எவ்வளவு கெஞ்சினாலும் மனது இறங்கவில்லை.. இப்போதுதான் தேனு முட்டிப் போட்டு தவழப்பயில… மாலையில் இருந்து ஒரே அழுகை.. அன்று முழுதும் தீனா வெளியில் சென்றிருந்தவன் தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான்.. வரும்போதே சாப்பிட்டு வந்திருக்க குழந்தையின் அழுகுரலில் வேகமாக அறைக்குள் நுழைந்திருந்தான்.
 
“என்ன புள்ள பண்ணித் தொலைச்ச..?? குழந்தை இந்த கத்து கத்துது.. எருமை மாடு மூஞ்சியும் மொகரையும் பாரு..??” குழந்தையின் அழுகுரலில் என்னவென்றே தெரியாமல் சுமதியை காய்ச்சி எடுக்க,
 
அவன் திட்டை பொருட்படுத்தாமல் தேங்காய் எண்ணெய்யை எடுத்து வந்தவள் குழந்தையின் முழங்காலில் தடவிவிட தீனாவுக்கு அதிர்ச்சி.. இரண்டு முழங்காலும் புண்ணாய் இருந்தது.. “ஏய் குரங்குகளா குழந்தையை என்ன பண்ணி வைச்சிருக்கிங்க நீயும் இந்த கெழவியும் ..?? இந்த புள்ளைய பார்த்துக்கிறத விட உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேலை..?? நாளைக்கு எவளாச்சும் இட்லி கடைப்பக்கம் கால வைங்க.. வெட்டிடுறேன் வெட்டி.. எப்படி புள்ள இப்படி ஆச்சு..??” தீனா காட்டுக் கத்தலாய் கத்த..
 
தீனாவின் கோபக் குரலில் அவர்கள் அறைக்குள் வந்த ராசாத்தி அம்மாள் “இப்ப எதுக்கு சுமதிய திட்டுற..?? அது என்ன பண்ணும்..?? நீயே தரைய தடவிப்பாரு எப்படி முள்ளா குத்துதுன்னு..?? குழந்தை முன்ன மாதிரியா ஒரே இடத்தில இருக்கும் இப்ப தவக்க ஆரம்பிச்சிருச்சு அதான் இப்படி புண்ணாப் போச்சு நாங்களும் ஹால் முழுசும் மண்ணக் கொட்டித்தான் வைச்சோம் இன்னைக்கு நாங்க அசந்த நேரம் இந்த அறைக்குள்ள வந்துருச்சு அதான் இப்படி..??”
 
தீனா சுமதியை பார்க்க கண்கள் குளம் கட்டி இருந்தது.. “என்ன புள்ள.. என்ன சொல்லிப்புட்டேன்னு இப்ப அழற..??” சுமதிக்கு தீனா திட்டியதில் அழுகை இல்லை குழந்தையின் காலைப் பார்த்துத்தான்..
 
எப்போதும் தீனா, ராசாத்தி அம்மாள் என யாராவது வீட்டில் இருக்க குழந்தையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இன்று இருவரும் வீட்டில் இல்லை.. இன்று முழுவதும் மிகவும் சிரமப்பட்டுவிட்டாள்.. எவ்வளவு நேரம் தான் இடுப்பில் தூக்கி வைத்து வேலை பார்ப்பது ஒரு கட்டத்திற்கு மேல் கை ரொம்ப வலிக்கவே குழந்தையை ஹாலில் விட்டவள் அதன் மீது கவனம் வைத்தே வேலை பார்க்க அசந்த நேரம் உள்ளறைக்குள் நுழைந்து விட்டது..
 
வீலென்ற குழந்தையின் அழுகுரலில் அறைக்குள் நுழைந்தவளுக்கு காலில் லேசான ரத்தக் கசிவோடு ஒரு ரூபாய் நாணய அளவிற்கு புண்ணாகியிருந்த குழந்தை பார்த்து அழுகை தாங்கவில்லை.. ராசாத்தி அம்மாள் வந்து சமாதானப்படுத்தினாலும் அழுது கொண்டே இருந்தவளுக்கு தீனாவும் திட்டவும் மனது தாங்கவில்லை..
 
“அதுவே குழந்தைக்கு இப்படி ஆச்சுன்னு அழுதுட்டு இருந்துச்சு நீ வேற ஏன் திட்டுற..?? சாப்பிடாமக்கூட பிள்ளைய பார்த்துக்குது..?? சொன்னா கேட்குதா..?? குழந்தைன்னா இப்படிலாம் அடிபடத்தான் செய்யும் .. ஆத்தா சுமதி போய் சாப்பிடு..??”
 

Advertisement