Advertisement

எனை மாற்றிய தருணம்
                          அத்தியாயம்  –  10
 
தீனாவை பார்க்கவும்தான் சுமதிக்கு போன உயிர் திரும்பி வந்தாற் போலிருக்க அவளை முறைத்தபடி வண்டியில் இருந்து இறங்கியவன் அவள் கைப்பிடித்து தன் அருகில் இழுத்திருந்தான் ..  
 
“தேனு எங்க..??” இதுவரை கோபத்தை வார்த்தைகளில் காட்டியிருக்கிறானே தவிர ஒரு போதும் செயலில் இல்லை..
 
“அ.. அம்மா தூக்கிட்டு போயிருக்காங்க..”
 
அனைவரையும் திரும்பி ஒரு கோபப்பார்வை பார்க்க வண்டியில் வேகமாய் வந்திருப்பான் போல இன்னும் மூச்சு வாங்கி கொண்டிருந்தது.. கழுத்தில பட்டை பட்டையாய் மூன்று நான்கு செயின்கள் நீளமாய் தொங்க கையில் பெரிய காப்பு.. தலைமுடி வளர்ந்து தோளை தொட்டிருக்க தாடி, மீசை, முரட்டு ஜீன்ஸ் கருப்பு நிற முழுக்கை சட்டை… அவன் யாரென சொல்லாமலே ஒரு ரௌடியின் தோற்றம்..
 
மனோகரி மெதுவாக தன் தாயின் பக்கம் நகர்ந்தவள், “ம்மா என்னமா இவன் இப்படி இருக்கான்..!! இவன் வீட்லயா இவ தங்கியிருக்கா..?? இந்த புள்ள பூச்சிக்கு இவன் கூட எப்படி சகவாசம் கிடைச்சிருக்கும்..?? ஒரு வாய் சோறு போடாம பொழுதுக்கும் பட்டினியா போட்டாக்கூட அழுவாளே தவிர வாய்திறந்து ஏதும் பேசமாட்டா அப்படிப்பட்டவ எப்படி இவன் வீட்ல..!! அதுவும் அவன் கைப்பிடிச்சு ஏதோ கேட்கிறான் இவளும் பயப்படாம பதில் சொல்றா..??”
 
“தெரியலடி மனோ.. இவனை பார்த்தாலே பயமா இருக்கு.. இவ என்னன்னா அவன் பக்கத்துல பயம் இல்லாம இருக்கா.. பக்கா ரௌடி பய போலயே…?? உன் நாத்தனாரும் சீம சிறுக்கி போலடி.. நமக்குத்தான் இம்புட்டு நாளு தெரியாம இருந்திருக்கு..!!”
 
கோபி தன்னை சுற்றிப் பார்த்தவன் அனைவரும் இருக்கும் தைரியத்தில் “ஏங்க நான் அன்னைக்கு இந்த பொண்ணப்பத்தி கேட்டேன்னுதான அடிச்சிங்க.. இன்னைக்கு அவளோட அண்ணனே வந்திருக்கார்.. மரியாதையா சுமதி கைய விடுங்க..!!”
 
தீனா ஒன்றும் சொல்லாமல் குணசேகரனை ஒரு பார்வை பார்த்து அசால்டாக சட்டையை இன்னும் மடித்துவிட்டபடி கோபியின் புறம் சென்றவன் அவன் கழுத்தில் கைவைத்து தூக்கியிருந்தான்.. தரையில் இருந்து சற்று தூரம் தூக்கியிருக்க மூச்சுக்கு திணறி கால்கள் மட்டும் கீழே உதற ஆரம்பித்தது.. குரல் வளையில் கை இருந்ததால் அவனால் கத்தவும் முடியவில்லை..
 
அவன் தாயோ பதறி “டேய் படுபாவி விடுடா… ஐயோ எல்லாரும் பார்க்கிறிங்களே இத கேட்க யாரும் இல்லையா ..?? அடியே சுமதி நீ பார்த்துட்டுத்தான் இருக்கியா …அடே விடுடா அவன..!!” தீனாவின் கையை பிடித்து இழுக்க,
 
மறு கையை மாற்றிப்பிடித்தவன், “டேய் உன்கிட்ட என்ன சொன்னேன்…. அவ்வளவு அடிச்சும் மறுபடி இங்க வந்திருக்கனா உன்னை உயிரோட விடலாமா..!!” … கழுத்தை நெரிக்க மூச்சுவிட சிரமப்பட்டவனுக்கு உயிர் மேல் பயம் வந்திருந்தது…
 
குணசேகரன் வந்து தீனாவின் கையை எடுத்துவிட்டு.. “விடுங்க அவனை..?? இனி இந்த பக்கம் வரமாட்டான்.. ஆனா நான் என் தங்கச்சிய கூட்டிப்போக யாரையும் கேட்கனும்னு அவசியம் இல்லைல.. நீ வா..” தங்கையை பார்த்து கோபப்பட,
 
சுமதி அந்த இடத்தை விட்டு இம்மி அளவுக்கூட அசையவில்லை.. மறுபடி அங்கு செல்வதற்கு அவள் விரும்பவில்லை.. அண்ணன் இல்லாத நேரத்தில் மீண்டும் கோபி வாலாட்டுவான்.. இவர்களும் தன் வேலையை காட்டுவார்கள்..
 
இங்கென்றால் குழந்தை இருக்கிறது .. தாய்க்கு மேலாக பார்த்துக் கொள்ள ராசாத்தி அம்மாள்.. மற்றவர்களுக்கு எப்படியே சுமதியை பொறுத்தவரை தீனா கன்னியமானவனாகவே தெரிந்தான்… மீறி குழந்தையை அங்கு கொண்டு சென்றாலும் தன்னை பட்டினி போட்டது போல இந்த பச்சை குழந்தையையும் பட்டினி போட்டே கொன்றுவிடுவார்கள்.. நம்மளாவது தாங்கிக்கிட்டோம்.. தேனுவால முடியுமா…
 
இன்னும் தங்கை தீனாவின் அருகிலேயே நிற்பதை பார்த்து குணசேகரனுக்கும் கோபம், “என்ன சுமதி இவ்வளவு யோசிக்கிற…?? வா..??” மீண்டும் கைப்பிடிக்க வர தீனா அவளை தன் முதுகு புறம் இழுத்திருந்தான்..
 
“ஏங்க உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை..!! இவ்வளவுநாள் என் தங்கச்சிய நல்லபடியா பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி.. இதுக்கு மேல இது என்னோட குடும்ப விவகாரம்.. நீங்க ஒதுங்கிக்கிறதுதான் நல்லது.. ஒரு பொம்பள புள்ளைய இவ்வளவு பேரு பார்க்க இப்படியெல்லாம் தொடாதிங்க.. மரியாதையா விடுங்க..??”
 
குணசேகரன் பக்கம் திரும்பியவன் “அதை நடுசாமத்துல வீட்டவிட்டு வெளி வர்ற நிலைமை வர்றதுக்கு முன்னாடி சொல்லியிருக்கனும்.. எப்ப அந்த வீடு வேணான்னு இந்த புள்ள வந்துச்சோ… அதுவும் அப்படி ஒரு நிலைமையில.. அதுக்கு பிடிச்ச இடத்துல இருந்துக்கட்டும்.. நீங்க வேணா அப்பப்போ வந்து பார்த்துட்டு போங்க.. அதுவும் நீங்க மட்டும்தான்.. இவங்க யாரும் வரக்கூடாது..!” மற்ற மூவரையும் கைகாட்ட கோபிக்கு கோபம் வந்தாலும் எதையும் செய்யமுடியாத நிலை.. இவ்வளவு பேர் இருக்கும் போதே இப்படி கழுத்தை நெரிக்கிறான்.. கொஞ்சம் விட்டா நம்மள கொன்னுருப்பானோ..
 
“இப்படி தெரியாத ஆளுவீட்ல உங்க இஷ்டத்துக்கெல்லாம் விட்டுட்டு போக முடியாது… என்ன சுமதி அண்ணன அசிங்கப்படுத்துறியா…?? மரியாதையா போய் ஆட்டோல ஏறு..!!”
 
“எங்க ஏறினா அந்தப்புள்ள கால ஒடச்சிரமாட்டேன்..!! தெரியாத ஆளு வீட்லதான் ஆறுமாசம் இருந்திருக்கா அப்போ இல்லாத உரிமை இப்போ எப்படி வந்துச்சு.. உன்ன பார்த்தா நல்ல மனுசன் போல அதான் எனக்கு வராத பொறுமையை இழுத்துபிடிச்சு இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன்.. மரியாதை போயிரு..”
 
“அம்மா அப்பா இல்லாம கஷ்டப்பட்டு உன்னை வளர்த்ததுக்கு நல்ல பேர நீ வாங்கி கொடுக்கிறத்தா..!! எவனோ ஒரு ரௌடி பய சொல்றத கேட்கிற…?? உன் அண்ணன் சொல்றது உனக்கு காதுல ஏறலைல… நமக்கு மானம் மரியாதை ரொம்ப முக்கியம்… வா உனக்கு இனி எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன்..”
 
“அந்த புள்ள எப்படிங்க வரும்.. இவனுக்கு வப்பாட்டியா வாழ்ந்து நல்லா ஆம்பள சொகம் கண்டுருச்சு பின்ன எ…..???” தீனா பளாரென அறைந்ததில் பேசிய அந்த தெரு பெண்ணிற்கு இரண்டு பற்கள் ஆட்டம் கண்டது..
 
“ஏய் என்ன… வாய் ரொம்ப நீளுது..?? உன் புருசனுக்கு அன்னைக்கு வைச்சது போல உனக்கும் வைக்கனுமா..?? எங்க அவன்… !!”கூட்டத்தில் ஒளிந்து நின்றவனை பிடித்து இழுத்து வந்தவன் “இன்னும் ரெண்டு நிமிசந்தான் உன் பொண்டாட்டி இங்க இருக்க கூடாது..  இருந்தா அவள ஒன்னும் பண்ண மாட்டேன் உனக்குத்தான் அடிவிழும்..”
 
அவ்வளவுதான் அந்த தெரு பெண்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.. ஒரே சத்தம் ஆளாளுக்கு தீனாவோடு சண்டைக்கு வர முக்கால்வாசி பேர் தீனா சுமதியை முறைகேடாக வைத்திருப்பதாக, அதை இந்த தெருவே பார்த்ததாக சண்டையிட மனோகரி அவள் தாய், குணசேகரன் என ஆளாளுக்கு பேச பெரும் கூச்சல் குழப்பம்..
 
சுமதிக்கு குழந்தையை பற்றி அண்ணனிடம் சொல்ல வேண்டும்.. அண்ணனிடம் தனியாக பேசினால் புரிந்துகொள்ளும்.. தீனாதான் அவளின் பிடித்த கையை விடவே இல்லையே…
 
அடிதடி செய்தே பழக்கப்பட்டவனுக்கு இப்படி வாய் சண்டையிட தெரியவில்லை. வண்டியில் மார்க்கெட்டிற்கு கூட்டி போனதை தினமும் சினிமா , பார்க் என்று ஊர் சுற்றியது போல, வீட்டிற்கு ஜன்னல் கதவு போட்டது அவளோடு குடும்பம் நடத்ததான் போடப் பட்டது போல , குழந்தையை தீனா கொஞ்சியதை இவளை கொஞ்சியது போல இட்டுக் கட்டி பேசி,
 
இப்படிப்பட்ட பெண்ணெல்லாம் இந்த தெருவில் இருந்தால் தங்களை போல நல்ல குடும்ப பெண்கள் எப்படி வாழ்வது.. மரியாதையாய் அவ அண்ணன்கூட அனுப்பச் சொல்லி சண்டையிட ஒரு அளவிற்கு மேல் தீனாவால் முடியவில்லை… இங்கு ஒரு பெண்ணிற்கு பெண்களே எதிரியாய் மாறியிருந்தனர்..
 
 “இப்ப எல்லாரும் பேச்ச நிறுத்த போறிங்களா என்ன…??” அவர்களுக்கு மேலாக இவன் கத்த கூட்டத்தில் சற்று அமைதி… “என்ன எல்லாரும் ஓவரா பேசுறிங்க?? மரியாதையா அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்துட்டு போங்க.. சுமதியை முறைத்தவன் இப்பக் கூட நீ வாயத்திறக்க மாட்டியா..?? உங்க அண்ணனோட போகனுமா.. போய் தொல..?? யாருமே இல்ல அனாதைன்னு சொன்ன..?? போ புள்ள போய்ட்டு மனோகரியை கைகாட்டியவன் இவங்க ஏதும் கொடுமை படுத்தினா பாதி ஜாமத்துல வா..” அவன் முகம் இறுக்கத்தைக் கூட்ட,
 
“அப்படியெல்லாம் இனி நடக்காது இத்தனை வருசம் என் தங்கச்சிய பார்த்துக்கிட்டவன்தான் நான்.. ஒன்னும் ஆகாது வா சுமதி..”
 
சுமதி இப்போதுதான் வாய் திறந்தாள்.. “அண்ணே ப்ளிஸ் நான் இங்கயே இருக்கனே…??”
 
குணசேகரின் முகத்தில் அதிர்ச்சி தன் தங்கையா இப்படி சொல்றா..?? தாய் வேறு வேறாக இருந்தாலும் இதுவரை இவர்களிடம் வேற்றுமை வந்ததில்லை.. ஒருதாய் வயிற்று பிள்ளை போலவே பாசம் காட்டினார்கள்.. அம்மா அப்பா இல்லாம இவள எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தோம்..
 
தன் மனைவியும் மாமியாரும்தான் கொடுமைப் படுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள் தன்னைப் பார்க்கவும் அண்ணே என்று ஓடி வந்துவிடுவாள் நினைத்திருக்க இவன் கைப்பிடித்து அவனோடு இங்கயே இருக்கேன்னு சொல்றா.. அப்ப இவங்க எல்லாரும் சொல்றதுதான் உண்மையா..?? தாலி இல்லாம ஒருத்தனுக்கு.. அதுவும் போயும் போயும் ஒரு ரௌடிப்பயக் கூட இருக்கனும்னு நினைக்கிறாளா..!! 
 
“ஏன் சுமதி நம்ம குடும்பத்து மானத்தை வாங்கனும்னே முடிவு பண்ணிட்டியா..?”
 
“இல்லண்ணே.. நான் சொல்றத கொஞ்சம் கேளு..”
 
“அதெல்லாம் கேட்க முடியாது நீ இப்ப வரமுடியுமா.. முடியாதா.. அத மட்டும் சொல்லு..??”
 
தான் மட்டுமென்றால் பசியால் செத்தாலும் பரவாயில்லை என்று கிளம்பி விடுவாள்.. தன்னோடு இப்போது அந்த பச்சை குழந்தையும் சாகனுமா..??
 

Advertisement