Advertisement

இப்போது அண்ணனும் தங்கையும் மட்டுமே.. வீட்டில் ஒரு பெண்ணிருந்தால் சுமதிக்கு துணையாய் இருக்குமென அவர்கள் உறவினர்கள் தூரத்து உறவினரான மனோகரியை குணசேகரனுக்கு மணம் முடித்திருக்க அப்போதிருந்து அண்ணன் தங்கைக்கு இடையில் விரிசல்தான்..
 
முதலில் சாதாரணமாக இருந்த மனோகரி போக போக அந்த வீட்டில் தன் ஆளுமையை நிலைநாட்ட முதல் குழந்தை பிறந்த போது குணசேகரன் முழுவதும் தன் மனைவி வசமாகியிருந்தான்.. அதன் பிறகு அவள்  வைத்ததே சட்டமாகி போக சுமதிக்கு பத்தாவதோடு படிப்பு  நிறுத்தப்பட்டு அப்போதே இந்த கார்மென்ஸில் வேலைக்கு அமர்த்தப்பட்டாள்.. வீட்டுவேலை, இங்கு கார்மென்ஸில் வேலை என அவள் பொழுதுகள் சென்று கொண்டிருக்க அவளது சம்பளப்பணம் முழுவதும் மனோகரியின் கைக்கு போயிருந்தது..
 
மனோகரிக்கும் தந்தை இல்லை .. தாயும் கூடப்பிறந்த தம்பி மட்டும் .. அவர்களும் கஷ்டப்படுகிற குடும்பம்தான்.. தம்பிக்கு வேலையில்லாமல் இந்த ஊரடங்கில் அவர்களும் இங்கேயே வந்திருக்க சுமதியின் நிலைதான் இன்னும் கடினமாகியது..
 
மனோகரியின் தாய்க்கு ஏனோ இங்கு வந்த நாளில் இருந்து சுமதியை பிடிக்கவில்லை.. ஏன் மனோ இவ உன் புருசன் கூடப்பிறந்தவளா என்ன..?? உன் மாமனாருக்கு இரண்டாந்தாரத்து மகதான..?? ஏன் சும்மா தேவையில்லாத வினையெல்லாம் இழுத்து வைச்சிருக்க.. உனக்கும் ஒரு பொண்ணு இருக்கு இவள எங்கயாச்சும் தொரத்தி விடு..??”
 
ம்மா..!!”
 
என்னடி அம்மா சும்மான்னு.. இதோ பாரு நான் சொல்றத கேளு.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..!!”
 
ம்மா புரியாம பேசதா அவ இருக்கிறதாலதான் நான் வீட்டு வேலை ஒன்னுகூட பார்க்கிறதில்ல.. இதோட அவ சம்பளம் முழுசா என் கைக்கு  வருது..  இரு இன்னும் கொஞ்சநாள் போகட்டும் அப்புறமா ஒரு வழி பண்ணிக்கலாம்..
 
ஏய் நான் சொல்றத கேளு.. நம்ம ராசு கோனாருக்கு பொண்ணு பார்க்கிறாங்களாம் .. நான் வேணா இவளச் சொல்லவா..??”
 
ம்மா அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சே..!!”
 
ஆனா என்ன.. பொண்டாட்டித்தான் செத்துப்போச்சே..?? இரண்டு வயசுக்கு வந்த புள்ளைகள பார்க்க ஆளுளில்லன்னு புலம்பிக்கிட்டு இருந்தான்.. சொத்துபத்து நிறைய இருக்கு.. உன் புருசன்கிட்ட மெதுவா கேட்டுப்பாரு.. அவ ஆத்தாளும் ரெண்டாந்தாரமா வந்தவ தான.. எல்லாம் சரியாப்போகும்..
 
இது எதுவும் தெரியாமல் இருப்பதை வைத்து தன் அண்ணன் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை செய்து கொண்டிருந்தாள் சுமதி.. மாநிறம் திருத்தமான முகம் மெலிந்த தேகம்.. பெண்களில் சற்று உயரம்தான்.. சாந்தமானவள் அதிர்ந்து பேசமாட்டாள்.. எப்போதும் சிரிப்பு அவள் முகத்தில் தவழும்.. தாய்,தந்தை இல்லை.. சூதுவாது அறியாதவள்.. இன்னும் வெளி உலகம் தெரியாமல் வெகுளியாகவே இருந்தாள்..
 
அதனால் தான் இத்தனை வருட சம்பாத்தியத்தில் தனக்கென ஒரு பத்து ரூபாய் கூட சேர்த்து வைக்காமல் அனைத்தையும் அண்ணி கையில் கொடுத்துவிட்டு பல சமயங்களில் பஸ்ஸூக்கு கூட பணம் இல்லாமல் 5 கிலோ மீட்டர் நடந்தே வருவாள்..  அண்ணனையே அனைத்துமாக நம்பியிருந்தாள்.. அதனாலேயே சுருக்கென மனோகரி பல சமயங்களில் பேசும் போதும் ஏதும் பேசாமல் சென்று விடுவாள்.. அண்ணன் குழந்தைகள் மேல் பாசம் அதிகம்.. இரண்டும் அத்தை அத்தையென என்னேரமும் இவளைச்சுற்றி வரும்..
 
குணசேகரனும் மனைவியின் குணமறிந்தோ என்னவோ பல சமயங்களில் தங்கையை கார்மென்ஸில் சென்று பார்த்து பேசி அவளுக்கு பிடித்த உணவினை வாங்கி கொடுத்துவருவான்..  சிறுவயதில் இருந்து தன்னையே  சுற்றி சுற்றி வரும் தங்கை மேல் மிகுந்த பாசம் அவனுக்கு.. மனைவியிடம்தான் எதுவும் பேசமுடியாமல் இருந்தான்..
 
இதுவரை இருந்த நிலை எவ்வளவோ மேல் என்பது போல மனோகரியின் தாய் இங்கு வந்ததிலிருந்து சுமதியின் நிலை வெகுவாக மாறியிருந்தது.. இதுவரை மனோகரி சுமதியின் வயிற்றிற்கு வஞ்சகம் செய்ததில்லை.. ஆனால் அவள் தாயாரோ அனைத்தையும் தன் கையில் வைத்துக்கொண்டு அளந்து அளந்து தர.. கண்டிப்பாக சுமதியின் வயிறு நிறையவில்லை..
 
பலநாள் பட்டினிதான்.. மனோகரிக்கு பல நேரம் பசியில் அழுகைதான் வரும்.. பசி பொறுக்க முடியாமல் மற்றவர்களுக்கு தெரியாமல் அண்ணனிடம் ஏதாவது வாங்கிதரச் சொல்லி சாப்பிடலாமா கூட தோன்றும்.. அண்ணனும் வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பதால் பணம் இருக்கிறதோ இல்லையோ என தண்ணீரை குடித்து குடித்து தன் தீயாய் பசித்த வயிறை தண்ணீரால் அணைத்திருந்தாள்..
 
 காலையில் இருந்து இரவு வரை விடாமல் வீட்டு வேலை துரத்த வயிற்றிற்கு போதிய உணவில்லாமல் பாதியாய் இளைத்திருந்தாள்.. எப்போதடா காரமென்ஸ் திறப்பார்கள் என்று கடவுளை வேண்டவே ஆரம்பித்திருந்தாள்.. அங்கேயே இரண்டு வேலை டீ.. வடை கொடுப்பார்கள் .. மதிய உணவை கொண்டு செல்வதால் பசி தெரியாது..
 
ஆனால் அதிலும் ஒரு ஆறுதலாக மனோகரியின் தம்பி கோபி இவளிடம் காதலிப்பதாக சொல்லியிருக்க மனம் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தது.. அடிக்கடி பார்த்தவர்கள் தான் அதிகம் பேசி பழகாமல் இருக்க இந்த ஊரடங்கில் சுமதியின் அழகும் பொறுமையும்.. அவளுடைய வெகுளித்தனமும் இவனை வெகுவாய் கவர்ந்திருந்தது.. இவளிடம் பரிவாக பாசமாக பேச இவள் மனமும் அவன் பால் சாய ஆரம்பித்திருந்தது..
 
மெல்ல மெல்ல இப்போது இவள் மனதினுள் வந்திருந்தான்.. அண்ணியின் தம்பி என்பதால் தங்கள் திருமணத்தில் எந்த தடையும் இருக்காது என்று சுமதி பெரிதும் நம்பியிருந்தாள்..
 
கோபி ஒரு துணிக்கடையில் சேல்ஸ் மேனாக வேலைப்பார்க்க இருவரும் வேலைக்கு போனால் அந்த வருமானமே தங்கள் குடும்பத்தை நடத்த போதுமானது .. அதைவிட அண்ணனையும் அண்ணன் பிள்ளைகளையும் அடிக்கடி பார்க்க வாய்ப்பு கிடைக்கும்  என்று நம்பினாள்.. ஊரடங்கு முடிந்து தங்கள் திருமணம் பற்றி தன் தாயிடம் பேசுவதாக கோபி சொல்லியிருக்க அதில் எந்த தவறும் தெரியாததால் சுமதியும் அவன் சொல்வதற்கெல்லாம் தலையசைத்திருந்தாள்….
 
……………….
 
அதே ஊரின் மறுமூலையில் அம்மா இன்னைக்காச்சும் எனக்கு கேமரா போன் வாங்குத்தருவியா மாட்டியா.. ஒருவாரமா கேட்கிறேன் நீ காதுல கூட வாங்க மாட்டுற..??”
 
ஏய் சுதா நானே வேலைக்கு போகாம இருக்கேன் .. சாப்பாட்டுக்கே வழியில்லடி இதுல கேமரா போனுக்கு நான் எங்க போவேன்..??”

 
அம்மா ஆன்லைன் கிளாஸ் அதுலதான் நடக்குது.. இந்த வருசம் நான் பத்தாவது.. இப்போ கிளாஸ் ஆரம்பிச்சே ஒரு வாரமாக போகுது அப்போ நான் பெயிலா போனா பரவால்லையா..??”
 
அடியே நீயாச்சும் படிச்சு பெரிய வேலைக்கு போ.. நான் தான் காலம் முச்சூடும் அடுத்த வீட்ல பாத்திரம் விலக்கியும் துணிதுவைச்சும் அவங்க தர்ற மிச்சம் மீதியை சாப்பிட்டு காலத்தை ஓட்டுறோம்.. நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போனாத்தான்டி உனக்கு நல்லது..
 
இதெல்லாம் நல்லா பேசு ஆனா போன மட்டும் வாங்கித்தராத..??”
 
நான் என்ன வைச்சுக்கிட்டா தரமாட்டுறேன்னு சொல்றேன்.. இரு யாருக்கிட்டயாச்சும் வட்டிக்காச்சும் பணம் கிடைக்குதான்னு கேட்டுப்பார்க்கிறேன்… ஒரு போன் வாங்க எவ்வளவுடி வரும்..??”
 
 குறைஞ்சது 5000 மாச்சும் வரும்…
 
5000….ஆஆஆ கடவுளே அதுக்கே 5 வட்டி போட்டா மாசம் 250 வருமே..5 வட்டிக்கு யார் தர்றா.. பத்து வட்டிதான்.. அப்போ 500 வந்திரும்.. நாம வாங்குற சம்பளம் நம்ம சாப்பாட்டுக்கே பத்தலையேடி.. உங்கப்பன் இல்லாம உன்னை நல்லா வளர்க்கனும்னு நினைக்கிறேன்.. சற்று யோசித்தவர்.. சரி விடு எப்படியாச்சும் இன்னைக்கு பணத்தோட வர்றேன்..நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போகனும் அதுதான் அம்மாவோட ஆசை…
 
சுதா ஒரு அரசு பள்ளியில் படிக்க நன்றாக படிக்கும் மாணவி.. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் உள்ள பிள்ளைகள் போல ஒரு மெத்தனமும் உண்டு..வயதும் பதினைந்து இரண்டு கெட்டான் வயதாக இருக்க எதிலும் ஒரு பயவுணர்வு இல்லை..உலகம் அறியும் பக்குவமும் இல்லாத நன்றாக படிப்பதால் தனக்கே எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் கொண்டிருந்தாள்..
 
அன்று மாலையே சுதாவின் தாய் ஒரு டச் போனோடு வர சுதாவிற்கு சந்தோசம் தாளவில்லை.. தாயின் முகம்மெங்கும் முத்தமிட்டவள் அன்று முழுவதும் அந்த போனோடுதான்..  உடனே சிம் வாங்கி அதை உபயோகிக்க ஆரம்பித்தவள் தன் டைரியில் இருந்த தோழிகளுக்கு தன் நம்பரை கொடுக்கத் துவங்கினாள்..
 
மணி 11 சுதாவின் தாய் கமலாம்மாள் தூக்கம் வராமல் எழுந்து அமர மகள் போனில்தான் மூழ்கியிருந்தாள்..
 
ஏய் சுதா இன்னும் தூங்காம என்னடி பண்ணிட்டு இருக்க..??”
 
ஒன்னுமில்லம்மா இதோ தூங்குறேன்.. நீங்க படுங்க.. வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கண்நிறைய ஆர்வம் ஒரே நாளில் அந்த போனில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று…!!
 
இரவு இரண்டு வரை விழித்திருந்தவள் முகநூலில் தன் கணக்கை வெற்றிகரமாக துவக்கியிருந்தாள்…!!!
 
                                                            இனி…………..??????

Advertisement