Advertisement

எனை மாற்றிய தருணம்
                       அத்தியாயம்  –  1
 
             செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
                     சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா
             கண்ணாத்தா உன்னைக் காணாட்டா – இந்த
                     கண்களிலிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
             உந்தன் பெருமையை இந்த உலகுக்கு
                       எடுத்துக் பாடாட்டா – இந்த
             ஜென்மமெடுத்து என்ன பயனென்று
                         சொல்லடி நீயாத்தா…
 
மைக்செட்டின் குரல் காதைகிழிக்க அதுவரை மொட்டை மாடியில் ஆழந்த தூக்கத்தில் இருந்த தீனாவுக்கு சட்டென விழிப்போடு கோபமும் வந்திருக்க,
 
டேய்… எவன்டா அவன் தே……………………..!!” கெட்ட வார்த்தையில் என்ன என்ன வார்த்தை இருக்குமோ அனைத்தையும் திட்டி தீர்க்க இவ்வளவு திட்டிற்கும் ஏதும் பதில் சொல்லாமல் தன் முன் நிற்கும் மூவரையும் ஓங்கி மிதித்திருந்தான்..
 
டேய் நான் இவ்வளவு கத்துறேன் எதாச்சும் பதில் சொல்றிங்களாடா..??” இன்னும் தன் வசை பாடலை விடாமல் தொடர…
 
தூக்கத்தில் இருந்து எழுப்பினால் இதுதான் நடக்கும் தெரிந்தவர்கள் அவன் திட்டி முடிக்கும் தருணத்திற்காக காத்திருக்கத் துவங்கினர்.. பாடல் வரும் திசையை முறைத்தவன் எழுந்து அமர அவனை சுற்றி இரவு குடித்துவிட்டு போட்ட காலி மதுபான பாட்டில்களும் தண்ணீர் கிளாஸ்களும் கிடக்க தலை விண்விண் என்று தெரித்தது..
 
அண்ணே எங்கள திட்டி என்னணே பண்றது..?? இத்தனை நாள் லாக்டவுன் முடிஞ்சு இப்பதான் கோவில திறக்கச் சொல்லியிருக்காங்க போல..!! அதான் காலையிலயே மைக் செட்ட போட்டுட்டான்.. நாங்க என்ன பண்றது..??”
 
மைக்செட் காரன் வீடு எங்க இருக்குன்னு கேளு..?? நாளைக்கு பாட்டு போட அவன் உயிரோடவே இருக்க கூடாது..!!” தூக்கம் கலைந்த எரிச்சலில் தீனா கத்த..
 
தீனா என்கிற தீனதயாளன்.. வயது 32..ஆறடி ..ஓங்கு தாங்கான உடல் ..அவனை பார்த்தாலே தெரியும் ரௌடி என்று.. கழுத்திலும் கையிலும் வெள்ளிச்செயின்..காதில் ஒரு கல்வைத்த தோடு.. தன் தோள்வரை வளர்ந்து தொங்கிய தலைமுடியை கோதிவிட்டவன் தன் தாடியை நீவி விட்டபடி எழுந்து அமர்ந்து..
 
கோவில திறக்கச் சொல்லிட்டாங்களா..??”.
 
ஆமான்ணே பாதி கடையை திறக்கச் சொல்லி கவர்மெண்ட்ல ஆர்டர் போட்டுருக்காங்களாம்.. கல்யாணம்..சாவு வீட்டுக்கெல்லாம் 30..40 பேர் போலாம் போல.. !!”தனக்கு தெரிந்ததை அறைகுறையாய் சொல்லிக் கொண்டிருக்க.. அவர்கள் பேசியதை கேட்டபடியே பல்விலக்கி குளித்து ஒரு முரட்டு ஜீன்சிலும் கைக்குகிடைத்த சட்டையை போட்டு தயாராகி வெளியில் வர..
 
வாசலில் அவனுக்கான டிபனோடு ராசாத்தி அம்மாள் அமர்ந்திருந்தார்.. அவரை பார்க்கவும் கடுப்பானவன்,
 
 உன்னை இங்க டிபன கொண்டு வராதன்னு சொல்லியிருக்கேன்ல..?? பசிச்சா நான் வந்து அங்க சாப்பிடுக்குவேன் .. யாரோட உதவியும் எனக்கு தேவையில்ல .. போ வெளிய..??” ஈவு இரக்கம் இல்லாமல் வயதானவர் என்ற எண்ணம் கூட இல்லாமல் அவரை பார்த்து கத்த,
 
இது வாடிக்கைதான் என்பது போல தட்டில் இட்லியோடு சட்னி சாம்பாரை வைத்து அவனிடம் நீட்டினார்.. மற்றவர்களுக்கும் தேவையானதை எடுத்து வைத்துவிட்டு  தான் கொண்டு வந்த பொருட்களோடு வெளியில் கிளம்ப சட்டென அவர் கையை பிடித்தவன் தன் சட்டை பையில் இருந்த பணத்தை எண்ணாமல் கூட அவர் கையில் திணித்து சாப்பிட துவங்கியிருந்தான்…
 
அவரும் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டு தன் வியாபாரத்திற்கு கிளம்பியிருந்தார்.. இவர்கள் இருவரும் உறவா.. சொந்தமா பந்தமா யாருக்கும் தெரியாது.. இவர்கள் பார்க்கும் நாளில் இருந்து இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.. எவ்வளவுதான் கத்தினாலும் காலையும் இரவும் இவர் கையால்தான் சாப்பிடுவான்.. மதியம் எங்கு சாப்பிடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது..
 
இந்த ஊரடங்கு ஆரம்பித்த நாட்களில் இருந்து அனைத்து ஓட்டல்களும் மூடியிருக்க அவர்தான் வீட்டில் கொண்டு வந்து இருவேளை உணவை கொடுத்துக் கொண்டிருந்தார்.. மற்றவர்களுக்கு வீடு..குடும்பம் என்றிருக்க அனாதையான தீனாவுக்கு அன்னமிட ராசாத்தி அம்மாள் ஒருவர்தான்..
 
பசித்தால் மட்டும் மதிய நேரங்களில் தானே அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடுவான்.. கஞ்சியோ.. கூலோ எது இருக்கிறதோ அதை சாப்பிட்டு தன் பையில் இருக்கும் பணத்தை கொடுத்து வருவான்.. அதற்கு மேல் அவரிடம் பழக அவனுக்கு மனதில்லை..
 
இங்கிருக்கும் அனைவரும் அன்றாடம் காய்ச்சிகள் வேலைக்கு போனால்தான் வயிறு நிறையும் என்ற நிலையில் இருந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு இன்னும் பசி பட்டினியை காட்டிச் சென்றிருந்தது.. பள்ளி திறந்தாலாவது தங்கள் பிள்ளைகள் ஒரு வேளை மதிய உணவை வயிறார சாப்பிடமாட்டார்களா.. என்ற ஏக்கம் வந்திருக்க ரேசன் அரிசியை கஞ்சி வைத்து பருப்பு துவையலோடு தங்கள் உணவை பெரும்பாலும் முடித்திருந்தனர்.. தங்கள் வீட்டிலிருந்த ஒன்றிடண்டு பித்தளை பாத்திரங்களும் இப்போது அடகு கடையில் இருக்க.. தங்கம் என்பதெல்லாம் அவர்கள் விளம்பங்களில்தான் பார்க்கும் நிலை இருந்தது..
 
இவர்கள் டிபனை சாப்பிட்டு கொண்டிருக்க தீனாவோடு கூட இருந்தவன் அண்ணே.. தெரு பேரை சொன்னவன் அந்த தெருவுல இருக்கவங்கள வீடு காலி பண்ண வைக்கனுமாம்..அப்படி மட்டும் செஞ்சுட்டோம்.. சொலையா 20000 தர்றாங்களாம்.. நான் உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்..??”
 
அது நம்ம ஏரியாக்குள்ள வருதா..??”
 
இல்லண்ணே இல்லண்ணே.. அது அடுத்த குப்பம் நம்ம லிமிட்ல இல்ல..!!”
 
அப்புறம் என்ன.. வாட்ஸ்அப்ல அட்ரஸ அனுப்பச் சொல்லு … தன்னுடைய அக்கவுண்ட் நம்பரையும் அங்கு அனுப்ப சொன்னவன்..பத்து மணிக்குள்ள வீட்டை காலி பண்ணிருறோம்.. அமௌண்ட்ட போட்டுறச் சொல்லு..
 
அடுத்த பத்துநிமிடத்தில் அவர்கள் சொன்ன அட்ரஸில் இருந்தவர்கள் சாமான்களை அள்ளி ரோட்டில் போடத் துவங்க வீட்டில் இருந்தவர்கள் முதலில் அதிர்ந்து, சண்டையிட்டு பின் இவன் காலில் விழாத குறையாக கெஞ்ச துவங்கியிருந்தார்கள்…
 
அந்த குடும்பத்தலைவி தீனாவின் காலை பிடித்து கொண்டு…தம்பி ரெண்டு வயசுக்கு வந்த பிள்ளைக இருக்கு.. இத்தனை நாளு வேலைக்கு போகலப்பா.. அதான் ஆறுமாசமா வாடகையை கொடுக்க முடியல.. இன்னும் ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்கோங்க.. எப்படியாச்சும் நாங்க எல்லாரும் வேலைக்கு போய் வாடகையை கொடுத்திருறோம்..
 
அவர் கையை உதறியவன் இதெல்லாம் நீ உன் வீட்டுஓனர்க்கிட்ட பேசிக்கோ..?? நீ வயசுப்பிள்ளைய வைச்சிருந்தா எனக்கென்ன.. வைக்காட்டா எனக்கென..??” அவர் சொன்னதை காதில் கூட வாங்காதவன் சாமான்கள் அனைத்தையும் வெளியில் அள்ளிப்போட்டு உள்ளே கட்டிலில் கைகால்கள் விளங்காமல் படுத்திருக்கும் அந்த வீட்டு குடும்ப தலைவனை கட்டிலோடு தூக்கி வெளியில் வைக்கச் சொல்லி கதவை இழுத்துப் பூட்டியிருந்தான்…
 
ஐயோ அடப்பாவிகளா.. நீங்க நல்லாயிருப்பிங்களா..?? நாசமா போக.. உங்களுக்கும் குடும்பம் குட்டின்னு இருக்கத்தானடா செய்யும்.. அவங்களுக்கு இப்படி ஒரு நிலை வராத.. ஐயோ கடவுளே உனக்கு கண்ணு இல்லையா எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்கியா.. இப்ப நான் என்ன பண்ணுவேன்.. டேய் இந்த பிள்ளைகள வைச்சுக்கிட்டு நான் எங்கடா போவேன்..
 
அடேய் கவர்மெண்டே வாடகையை இப்ப கேட்க வேணான்னு சொல்லுச்சேடா..??” தன் பெண் பிள்ளைகள் இரண்டையும் கையில் பிடித்து கதற..
 
தீனா கூட வந்தவனோ இதோ பாரும்மா நாங்க எப்ப உங்கிட்ட வாடகையை கேட்டோம்.. வீட்டதான் காலி பண்ண சொல்றோம்..
 
அதற்குமேல் என்ன பேச்சு என்பது போல அவர்கள் கிளம்பியிருக்க அங்கங்கு சிதறி கிடந்த தன் வீட்டு பொருட்களை சேகரிக்கும் தன் மகள்களையும் மனைவியையும் பார்த்தபடி இந்த சூழ்நிலையில் கூட எதுவும் செய்யமுடியாமல் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்க முடிந்த தன்னுடைய உடல்நிலையையும் கையாலாகாதனத்தையும் கண்டு கண்ணீர் ஊற்றியபடி இருந்தார் அந்த குடும்பத்தலைவர்..
 
………………………………………………….
 
அதே ஊரின் மறுகோடியில் அந்த பெரிய கார்மென்ஸில் சுமதி மும்முரமாக துணிகளை தைத்து கொண்டிருக்க..பக்கத்தில் தைத்துக் கொண்டிருந்தவரோ,
 
என்ன சுமதி முன்னைக்கு இப்போ ரொம்ப மெலிஞ்சாப்போல தெரியிற..?? இந்த லாக்டவுண்ல சாப்பிட்டியா இல்லியா.. இப்படி ஓன்னு போயிட்ட..??”
 
அப்படியெல்லாம் ஒன்னுமில்லக்கா எப்பவும் போலத்தான் இருக்கேன்.. வாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் கை தன் தைக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருக்க.. அவர்கள் சொல்வது உண்மைதான்.. இந்த ஊரடங்கு காலத்தில் பாதியாகத்தான் இளைத்திருந்தாள்..
 
இவள் சுமதி வயது 25.. பதினைந்து வயதில் இருந்து கார்மென்சில் வேலை  பார்க்கிறாள்..தாய் தந்தை இல்லை.. இவள் தந்தைக்கு இரண்டு மனைவிகள்.. மூத்த மனைவிக்கு ஒரு ஆண்மகன். மூத்த மனைவி நோயினால் இறக்க அடுத்ததாக இவள் தாயை மணந்தார்.. அவரும் இவளுக்கு 5 வயதாய் இருக்கும் போது ஒரு விபத்தில் அடிப்பட்டு இறந்திருக்க அப்போது இவள் அண்ணன் குணசேகரனுக்கு வயது 15.. இவளை விட பத்து வயது மூத்தவன்..
 
சுமதியின் தாய் குணசேகரனையும் தன் மகனாகவே பார்க்க அவர் இறப்புக்கு பிறகும் அண்ணன் தங்கை இருவரும் பாசமாகவே இருந்தனர்..சுமதி அந்த சிறு வயதிலேயே தட்டுத்தடுமாறி அனைத்து வீட்டு வேலைகளையும் கற்று .. சமையலும் கற்றிருக்க சுமதிக்கு பத்து வயதாக இருக்கும் போது இவர்களின் தந்தையும் மஞ்சள் காமாலையில் இறந்திருந்தார்..
 
 

Advertisement