Advertisement

அத்தியாயம் ஏழு :

மௌனம் – வார்த்தைகளின் பேசா மொழி! வார்த்தைகளை விட அர்த்தங்கள் அனேகம்!

வெளிநாட்டில் இருந்து வந்த டீமில் இருந்த மூன்று பேரும் ஆண்களே. இரு இளவயதினர். இன்னும் ஒருவர் ஐம்பதில்.

பிரவீன் மாலை அணிவித்து வரவேற்க, சைந்தவி அந்த ஐம்பதில் இருந்தவருக்கு பூச்செண்டு கொடுக்க, மலர்ந்த சிரிப்போடு அதனை வாங்கிக் கொண்டார் அவர். மற்ற இருவருக்கும் வேறு வேறு ஆட்கள் கொடுத்தனர். பூச்செண்டு வாங்கிக் கொண்டவர் நமஸ்தே என்று சைந்தவியை பார்த்து சொல்ல,

“வி டோன்ட் சே நமஸ்தே, வி சே வணக்கம்” என்றாள் ஒரு புன்முறுவலோடு.

“தென் வாட்ஸ் நமஸ்தே?”

“தட் ஆல்சோ மீன் தி சேம், பட் இட்ஸ் ஹிந்தி லேங்குவேஜ்”

“ஓஹ் யஹ், திஸ் இஸ் தி ஃபர்ஸ்ட் டைம் ஐ ஹேவ் பீன் டு இந்தியா”

சுற்றியிருந்தோர் அனைவரும் அவர்களையேப் பார்க்க, “ரொம்ப அதிகப் பிரசங்கி இவ” என கமாலி நினைக்க, பிரவீன் அப்போது தான் சைந்தவியை நன்கு கவனித்தார்.

ஒரு புன்முறுவலோடு சைந்தவி பின் நகர்ந்து கொண்டாள்.

பின் அவர்கள் பேசிக் கொண்டே கான்ஃபரன்ஸ் ஹால் செல்ல, விஜய் அங்கே பிரவீன் உடன் இருந்தான் அவ்வளவே! எல்லாம் அவர் பார்த்துக் கொண்டார்.

எப்போதும் கலகலப்பாக கலந்து கொள்பவன் இன்று ஒதுங்கியே நின்றான். பார்வை எல்லாம் சைந்தவியின் மேல். எல்லோரும் அவளை பார்த்ததால் இவன் பார்த்தது யாருக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

பின் அவர்கள் உள் சென்று விட, இவர்கள் அவரவர் இடத்தினில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் ஆபிஸ் முழுவதும் சுற்றி பார்த்தனர்.

அதில் இருப்பதிலேயே இள வயதினன் ஒருவன், ஆராயும் பார்வை பார்த்தான், அங்கிருந்த அனைவரையும், பொருட்களையும், பின்னர் திடீர் திடீர் என்று கேள்வி வேறு?

“வாட்ஸ் யுவர் ப்ராஜக்ட் அபௌட்”

சிலர் சொன்னர், சிலர் தடுமாறினார், பலர் விழித்தனர். அவனின் வார்த்தை பிரயோகங்களே அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் விளக்கமாக சொன்னாலும், பதில் சொல்ல முடியாதபடி கேள்விகள் கேட்டான்.

பிரவீன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். கமாலி ஏகத்திற்கும் டென்ஷன் ஆனாள். விஜய் அவளை அதட்டினான் “அவரை பார்க்கிறதா, இல்லை உங்களைப் பார்க்கிறதா?” என அடிக்குரலில் சீறினான் ஏறக் குறைய.  

பின்பு ஒரு வழியாக ப்ராஜக்ட் ப்ரசெண்டேஷன் சென்றனர். டீம் லீடர் செய்வதாக இருந்த போதும், டீம் மெம்பெர்ஸ் எல்லோரும் இருக்க வேண்டும், யாரை வேண்டுமானாலும் கேட்பேன் என்று விட்டான்.

எல்லோர் முகத்திலும் தானாக பதட்டம்!             

“அவங்க என்ன புலியா? சிங்கமா? இப்படி டென்ஷன் ஆகி சொதப்பாதீங்க! உங்க எல்லோருக்கும் தெரியும், தெரியறதை தைரியமா சொல்லுங்க” என்றார் பிரவீன் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக. அது ஒரு வித தைரியத்தை கொடுத்தது எல்லோருக்கும்.

பின் பிரசென்டேஷன் ஆரம்பித்து விட, ப்ராஜக்ட் லீடர் நன்றாக தான் பிரசன்ட் செய்தான். இருந்தாலும் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்கப்பட தடுமாற ஆரம்பித்தான்.

“நீங்க பண்ணுங்க” என்று கமாலியைப் பார்த்து பிரவீன் சொல்ல, அவள் ஆரம்பித்த சில நிமிடங்களில் அவளிடம் வரிசையாக கேள்விகள் கேட்கப்பட அவளால் அதற்கு மேல பேச இயலவில்லை, பாவமாக ப்ரவீனையும் விஜயையும் பார்த்தாள்.

“இவ இப்படி சொதப்புவான்னு தெரிஞ்சா நம்மளாவது இன்னும் நல்லா பார்த்து வெச்சிருக்கலாம் போலவே” என யோசித்துக் கொண்டே எழுந்தான் விஜய். அவன் எப்போதும் எதிலும் பின் வாங்க மாட்டான் ஆர்வமாக கலந்து கொள்வான்.  

“ஷால் ஐ”  

“ஆர் யு இன்வால்வ்ட் இன் திஸ் ப்ராஜக்ட்”

“நோ”  

“தென் யு டோன்ட்” என்றவன் பிரவீனிடம் “ஐ வான்ட் சம்படி ஹூ இஸ் இன்வால்வ்ட்” என்றான் அந்த வெளிநாட்டவன்.

அங்கே ஒரு அமைதி, “ஓகே லெட் மீ செலக்ட்” என்றவன், “யார் இந்த ப்ராஜக்டில் ஜூனியர்” எனக் கேட்டான்.

சைந்தவி எழுந்து நின்றாள்.

“கேன் யு”

“எஸ்” என்றபடி அவள் வரவும்,

“இவன் என்ன கேட்கப் போறானோ” என்று கலவரமாக விஜய் அந்த கேள்வி கேட்டவனை பார்த்திருந்தான்.

அவளுடைய உடல் மொழியிலேயே ஒரு நிமிர்வு, தன்னுடைய ப்ராஜக்ட் லீடரிடம் அவன் பிரசன்ட் செய்ததை தான் வாங்கினாள்.

“இதையே திரும்ப சொல்றதுக்கு நீங்க எதுக்கு?” என அவன் கேட்கவும்,

“எல்லோர்கிட்டயும் நீங்க கேட்பீங்கன்னு நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணலை, நீங்க என்ன கேள்வி கேட்கணுமோ கேளுங்க, நான் பதில் சொல்றேன்” என்றாள் கைகளை கட்டியடி தெளிவான அவர்களின் உச்சரிப்பை கொண்ட ஆங்கிலத்தில்.  

விஜயிற்கு சைந்தவியின் தெளிவோ, அவளின் ஆங்கில உச்சரிப்பே எதிரில் இருந்தவர்களை கவர்ந்ததோ கவனத்தில் இல்லை. அவனுக்கு பயம் யாரும் அவளை எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று. 

“இவளுக்கு ஏன் இந்த அதிகப் பிரசிங்கித்தனம்” என கலவரமாக பார்த்தவன், “ஷி இஸ் வெரி நியூ” என்று சைந்தவியை சொன்னான்.

“ஓகே, தென் லெட் மீ சி, வாட் ஷீ ஹாஸ் அண்டர்ஸ்டுட் டில் நொவ்” என்றான் அந்த வெளிநாட்டவன். அவன் பேசியது என்னவோ நக்கல் போலவே விஜயிற்கு தோன்றியது.

உண்மையில் விஜய்க்கு அவள் வேளையில் மிகவும் திறமைசாலி என தெரியவே தெரியாது.  பிரவீன் பார்த்துக்கொள்ளட்டும் என இதுவரை அமைதியாக இருந்து விட்டான். வந்தவர்களிடம் அவ்வளவாக அவன் பேசிக் கொள்ளவில்லை. “அச்சோ, கொஞ்சம் நல்லா பேசி ரேப்போ டிவலப் பண்ணியிருக்கலாமோ” என நொந்து கொண்டான்.

விஜயை சற்று முறைத்து பார்த்தாள் சைந்தவி, “உன் வேலையை பார்” என்பது போல.

உண்மையில் சைந்தவி அவளின் துறையில் மிக மிக புத்திசாலி, அது விஜயிற்கு தெரியவே தெரியாது. அந்த லட்சணத்தில் தான் அவர்களின் காதலும் திருமணமும்.  

“கேளுங்க” என்பது போல அவள் நிற்க, இவனுக்கு மனம் திக் திக் கென்று அடித்துக் கொண்டது.

கூடவே “ஐ அம் நியு கம்மர் டு திஸ் கன்சர்ன், பட் நாட் டு திஸ் ஃபீல்ட்” என்றாள் பணிவாகவே.

வெளிநாட்டவன் கேள்விகளை ஆரம்பிக்க, பதில்கள் நொடியில் வந்து விழுந்தன. பல நாட்கள் இதில் வேலை செய்தது போலக் கூட இல்லை, அதில் கரை கண்டவள் போல அவளின் பதில்கள் இருக்க, விஜய் சற்று வாய் பிளந்து தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கொஞ்சம் புத்திசாலி போல, அதான் இந்த திமிரும் கர்வமும்” என கமாலி நினைக்க, சைந்தவியின் ப்ராஜக்ட் லீடர் பயந்து போனான், “அய்யய்யோ நமக்கு மேல இவளை போட்டுடுவாங்களோ?” என்பது போல.

ப்ரவீனிற்கு சற்று நிம்மதியானது. “இதேதடா இன்று மிகவும் சொதப்பல்” என அவர் நினைத்திருக்க, இப்போது தான் சற்று ஆசுவாசமானார்.

உண்மையில் சைந்தவி புத்திசாலி என்றாலும் அவளுக்கு வேலையை விட்டால் செய்வதற்கு வாழ்க்கையில் ஒன்றுமில்லை, பேசுவதற்கும் ஆளில்லை, ஆதலால் படிப்பு, படிப்பு, படிப்பு தான்! அதுவும் அவள் செய்யும் வேலைகளை பற்றி நன்றாக தெரிந்து கொள்வாள், அவளுக்கு அதில் ஆர்வமும் அதிகம்.

இரண்டு நாட்களாக அவள் இந்த ப்ராஜக்ட் பற்றி தான் ஆராய்ந்து கொண்டிருக்க, இவன் கேட்கவும் டக்கென்று பதில் விழுந்தன. அவனும் மாற்றி மாற்றி கேட்க, இவளும் சளைக்காமல் பதில் சொல்ல,

“ரிச்சர்ட்” என்றான் திடீரென்று.

இவள் புரியாமல் பார்க்க, “மை நேம்” என்றவன், “யு ஆர் டூ குட். ஹொவ் டிட் யு அக்வயர் ஆல் தீஸ் திங்க்ஸ்” என்றான்.

“எனக்கு என் வேலையில் ஆர்வம் அதிகம்” என்பது போல ஒரு பதில் சொன்னாலும், “எனக்கு செய்வதற்கு வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை” என மனம் சற்று விரக்தியாக நினைத்தது. விஜயின் புறம் பார்வை திரும்பி “எல்லாம் இவனால்” என்று அவனை முறைக்க தோன்றினாலும் மிக கவனமாக பார்வையை சைந்தவி திருப்பவில்லை.

பின் அந்த வயதில் மூத்தவர் “உங்களுக்கு எந்த ப்ராஜக்டில் ஏதாவது பாதகம் தெரிகிறதா” என்பது போல கேட்டார். அதுவரையிலும் வேறு இருவரும் வாய் திறக்காதவர்கள் இப்போது கேட்க,

“எஸ் வி ஆர் மோர் ப்ரோன் டு கெட் திஸ் எரர்”  

“ஒஹ்” என்றவர் அந்த ரிச்சர்டை திரும்பி பார்த்தார்.

அவன் “இது எப்படி சால்வ் பண்ண வேண்டும் என்று தெரியுமா?” என்று கேட்டான்.

“இல்லை” என சைந்தவி சொல்லவும், அவன் எழுந்து வந்து அந்த ப்ராஜக்ட் பற்றி சொல்ல ஆரம்பித்தான். இவன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டதில் தவறில்லை எனப் புரிந்தது.

ரிச்சர்ட் அவனுடைய ஃபீல்டில் கரை கண்டிருந்தான். பின் அந்த எரரை எப்படி சால்வ் செய்வது என்றும் சொல்ல, என்னவோ பார்த்துக் கொண்டிருந்த விஜயக்கு சற்று காம்ப்ளெக்ஸ் டிவலப் ஆகிவிட்டது. மனதில் ஒரு சோர்வு!

என்ன எதிர்பார்த்தான் என்றே தெரியவில்லை. பொதுவாக இந்த மாதிரி யாராவது கார்னர் செய்யப் படும் போது முதல் ஆளாக நின்று பதில் சொல்லிக் காப்பாற்றி விடுவான். இப்போது அந்த மாதிரி சைந்தவிக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்றா, இல்லை செய்யும் நிலைமை அவள் வைக்கவில்லை என்றா என்னவென்று தெரியவில்லை.  

பின் அந்த ரிச்சர்ட் “வாட் இஸ் தி ப்ரொசீஜர் டு மேரி இந்தியன் கேர்ள்ஸ்” என்றான் சிறு புன்னகையுடன்.

‘ஆங், இது என்ன கேள்வி” என விழி விரித்து சைந்தவி பார்த்ததே அவ்வளவு கவிதையாய் இருந்தது. பின் சுதாரித்து “அதை நீங்கள் எங்களது இந்திய ஆண்களிடம் தான் கேட்கவேண்டும்” என்று ஆங்கிலத்தில் பதில் கொடுத்தாள் அவளுமே சிறு புன்னகையுடன்.

“ஓஹ், ஓகே” என்றவன் நிறுத்தி, “தென் வாட் இஸ் தி ப்ரொசீஜர் டு மேரி யு” என்றான் ஒரு குறும்புடன். முதல் கேள்வியிலேயே கோபம் வர ஆரம்பித்த விஜயிற்கு இந்த கேள்வியில் ரிச்சர்டை, “நீ எப்படி ஒழுங்கா ஃபிளைட் ஏறுரேன்னு நான் பார்க்கறேண்டா” என்று மனதிற்குள் கருவ வைத்தது.

ரிச்சர்டினது ஒரு சகஜமான பேச்சு அவ்வளவே! தப்பர்த்தம் எதுவும் இல்லாத வகையில் இருந்தது! ஒரு அழகான பெண்ணை பார்த்து ஒரு ஆர்வத்தில் கேட்கும் கேள்வியாக தான் இருந்தது. ஆனாலும் இப்படி எல்லோரு முன்னும் கேட்பது நமது இடங்களில் சகஜம் அல்ல!

என்னடா பேச்சு இது இத்தனை பேர் முன் என எல்லோரும் பார்த்தனர். 

விஜயின் முகத்தினை ஓரக்கண்ணால் சைந்தவி பார்க்க, அவனின் முகத்தினில் தெரிந்த கோபம், ஆக்ரோஷம், அவளுக்கு மனதினில் ஒரு உற்சாக ஊற்று, சைந்தவி நொடி நேரமும் யோசிக்கவில்லை!

“அதை நீங்க என் கணவர் கிட்ட தான் கேட்கணும்” என்று விட்டாள். விஜயின் கோபம் பனியாய் விலகியது.

“ஓஹ் ஆர் யு மேரீட்” என்றான் ரிச்சர்ட் ஆச்சர்யமாக.

“எஸ்” என்றவள், “எங்களோடது காதல் கல்யாணம், அதுவும் என்னோட கணவர் என்னை அவர் கிட்ட ஐ லவ் யு சொல்ல வைத்தார். சோ அவருக்கு இது நல்லா தெரியும்” என்று சிரிப்போடே சொன்னாள்.

திரும்ப விஜய்க்கு அப்படி ஒரு கோபம் மனதினில் பொங்க ஆரம்பித்து.

பின்பு மீட்டிங் முடிந்தது “கிளம்பலாம்” என அனைவருக்கும் அறிவிக்கப் பட, எல்லோரும் கிளம்ப, அவளும் கிளம்ப, அந்த வயதில் மூத்தவர் “யு ஆர் ரியல்லி வெரி ப்ரில்லியன்ட்” என்றவர், நாம இவளையும் லஞ்ச்க்கு கூட்டிப் போகலாமா” எனக் கேட்டார்.

“சுயூர் கம் ஜாயின் அஸ்” என பிரவீன் சொல்ல, “தேங்க் யு” என்றவள், “இல்லை நான் வரலை” என்றாள் இன்முகமாகவே.

யாரோ யாரிடமோ பேசிக் கொள்வது போல விஜய் வேடிக்கை பார்த்திருந்தான். இந்த கமாலி வேறு “பாருடா அதுக்குள்ளே என்ன பண்றா இந்த பொண்ணு? இப்போ வரமாட்டேன்னு சீன போட்டு, வாங்கன்னு இவ கிட்ட கெஞ்சணும்ன்னு நினைக்கறாலோ என்னவோ?” என்றாள்.

விஜயின் கோபம் இன்னும் அதிகமாகியது கமாலியினால், “என்ன இப்படி பேசுகிறாள்?” என்று கமாலி மீதும். ஆனால் எல்லோரும் இருப்பதால் வாய் திறக்கவில்லை.

“கம் ஜாயின் அஸ்” என்று ரிச்சர்ட்டும் அழைப்பு விடுத்தான்.

“ப்ளீஸ் நாட், நான் வரலை” என்றாள்.

பிரவீன் ஒரு மேலதிகாரியின் தொனியில் “வாங்க மிசஸ் சைந்தவி” என்றார்.

அந்த குரலின் அதிகார பேதம் புரிந்தாலும் “நோ சர் ப்ளீஸ்” என்றாள்.

“வரலைன்னா விடுங்களேன் பாஸ்” என்று மெல்லிய குரலில் விஜய் பிரவீனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“ஒரு பிசினெஸ் லஞ்ச்க்கு உங்களை வரவைக்க முடியலை, உங்களை எப்படி ஐ லவ் யு சொல்ல வெச்சார் உங்க கணவர்” என்று ரிச்சர்ட் இன்முகமாகே கேட்டான்.

இந்த கமாலி முன்பிருந்து முறைத்துக் கொண்டிருக்க, பிரவீன் மேல் அதிகாரி என்று நிருபிக்க, இந்த வெளிநாட்டவர்களின் தொடர் அழைப்பு ஒரு சலிப்பை கொடுக்க,

அதுவரை விஜயின் புறம் திரும்பக் கூட இல்லாமல் இருந்தவள், “அதை நீங்க இவர் கிட்ட தான் கேட்கணும்” என்று விஜயை கைகாட்டினாள்.

விஜய் ஸ்தம்பித்து விட்டான்! அவன் இதை எதிர்பார்க்கவில்லை! அவன் அப்படியே நின்று விட,

சிரிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டு தமிழில் கமாலி, “என்ன இது? எஸ்கேப் ஆகறதுக்காக இல்லை ஒரு பேச்சுக்காக யாரையாவது ஹச்பட்ன்னு காட்டுவியா” என்றாள்.

இப்போது ஸ்தம்பிப்பது சைந்தவியின் முறையாயிற்று, பின் சுதாரித்து அந்த வெளிநாட்டவர்களை பார்த்து “ரியல்லி சாரி சர், தட் ஐ குட் நாட் அக்சப்ட் யுவர் இன்விடேஷன், ரியல்லி வெரி சாரி” என்றவள், “ஷால் ஐ மூவ்” என்று அவர்களிடமே அனுமதி வேண்டி நின்றாள்.

அதுவரை இருந்த லகுத்தண்மை போய் அவளின் குரலில் எதோ கணம் தெரிய, “எஸ் ஃபைன் வி வில் மீட் டுமாரோ” என்று அவர்கள் முன் செல்ல, பிரவீன் சைந்தவியின் மீது ஒரு விரும்பாத பார்வையை செலுத்தி நடக்கத் துவங்கினார்.

“பாஸ்” என்ற விஜயின் அழைப்பிற்கு திரும்பினார். “என்னோட மனைவி பாஸ்” என்றான்.

இப்போது அவரின் கண்களில் அதிர்ச்சி, பின் விஜயை பார்த்து “போடா ஃபூல்” என்று அவர் நடக்க, சைந்தவி விஜயின் புறம் திரும்பவில்லை, அவள் நடந்து விட்டாள்.

“உன் மனைவியா ஏன் சொல்லலை?” என கமாலி அசால்டாய் எதுவும் நடக்காதது போல சொன்னாள்.

“என மனைவி அவ, இல்லை? இருக்கா? அது வேற! எந்த பொண்ணையும் இப்படி கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது. ஒருவேளை, நீங்க இப்படி தான் சொல்வீங்களோ” என அடிக்குரலில் சீறினான்.

“மைன்ட் யுவர் வொர்ட்ஸ்” என கமாலி பதிலுக்கு சீற,

“அதை தானே நானும் சொல்றேன்” என்று இன்னும் எகிறான்.

அதற்குள் பிரவீனின் அழைப்பு “டேய் எங்க இருக்க?” “இங்க தான் ஆஃபிஸ்ல”

“என்னை படுத்தாத இவங்களை கூட்டிட்டு நான் அந்த ஹோட்டல் போறேன்” என்று சொன்னவர், “பின்னாடியே வந்து சேர்ற இல்லை தொலைச்சிடுவேன்” என்று உரிமையாய் மிரட்டினார்.

“இல்லை, நான் வரலை”  

“வந்து தொலைடா இடியட். இங்க எனக்கு எதுவும் தெரியாது சென்னைல. உன் வைஃப் கிட்ட நான் பேசிக்கறேன், சாரி கேட்கணும்னா கூட கேட்கறேன், கிளம்பி வா! மில்லயன் டாலர் ப்ராஜக்ட் ரா, சொதப்பினேன் கம்பனி என்னை தூக்கி அடிச்சிடும்!”    

வேறு வழியின்றி கிளம்பினான்.

அங்கே சைந்தவியின் சீட்டிற்கு சென்று பார்க்க அவள் அங்கே இல்லை! “எங்கே” “ரெஸ்ட் ரூம் போனாங்க” என பக்கத்தில் இருந்த பெண் சொல்ல, அதற்குள் மீண்டும் பிரவீன் அழைக்க, அவளை பார்க்காமலேயே கிளம்பினான்.

Advertisement