Advertisement

“அந்த ரூம்குள்ள தான் ரெஸ்ட் ரூம் இருக்கு” என்று சொல்லி, அவள் கிட்சன் சென்று விட, எழுந்து ஃபிரெஷ் ஆக உள்ளே சென்றான்.

பாத்ரூமில் இருந்து முகம் கழுவி வந்தவன், அங்கே டவல் எங்கே என்று தேடினான். படுக்கையில் அவள் நேற்று கழற்றிப் போட்ட சுரிதார் இருக்க, அதனை பார்த்ததும் அதில் முகம் துடைக்க ஆசை. எடுக்க கைகள் நடுங்கிய போதும், எடுத்து அதனில் முகம் புதைத்து கொண்டான்.

சிறிது நேரம் அப்படியே இருக்க, “இது என்ன அவளை அணைத்து பிடித்த உணர்வா?” என மனம் கேலி செய்தது. பின்னே அவளை அணைத்ததேயில்லை.

என்ன மாதிரியானது அவர்களது காதலும் திருமணமும், வரையறுக்க முடியாது. அவனுக்கு உண்மையில் அப்போது அந்த மாதிரி எந்த ஆசைகளும் இல்லை. கடமைகள் தான் நிறைய இருந்தன. திருமணம் ஆன நாளில் இருந்து அவனை தெரிந்த அனைவரும் “அக்கா இருக்கங்காட்டி இன்னாத்துக்கு அவசரம், அக்காக்கு முடிச்சிட்டு தானே செஞ்சிருக்கோணும்” என நேரடியாகவோ மறைமுகமாவோ கேட்டிருப்பர்.

அந்த ஒரு குற்ற உணர்ச்சி இருக்க, எந்த ஆசாபாசங்களோடும் அவன் சைந்தவியைப் பார்த்ததில்லை.

சைந்தவியும் எதிர்பார்த்ததில்லை. அவளால் அந்த சூழல்களில் பொருந்திக் கொள்ள முடியவில்லை என்பது தான் அவளின் கையறு நிலை. அதிலும் உணவு, அவளுக்கு அங்கே எதுவும் பிடித்தமில்லை, அவளுக்கு சமைக்கவும் தெரியவில்லை. தினமும் அசைவம் இல்லாமல் அவர்களுக்கு உணவு இறங்காது. இவளுக்கு அந்த வாடையே ஆகாது. நல்ல உணவிற்காக மிகவும் ஏங்கிப் போனாள்.

அதுவும் நன்றாக செலவு செய்து பழக்கப் பட்டவள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூடப் பணமில்லாமல், ஐம்பது கொடு, நூறு கொடு என்று விஜயிடம் கேட்கக் கூட சிரமப்பட்டு போனாள். அதனையும் விட அவனின் அக்கா?

காதல் கல்யாணம் என்று நடந்து விட்டாலும் வாழ்க்கையின் நிதர்சனங்கள் அவளை துரத்தி அடித்தன. இந்த யோசனைகளோடே சைந்தவி காஃபி கலக்கிக் கொண்டிருந்தாள்.

விஜய் முகத்தில் வைத்திருத்த அவளின் சுரிதாரில் ஆழ்ந்த ஒரு மூச்செடுத்து, பின்பு அதனை இருந்தது போலவே வைத்து சோஃபாவில் வந்தமர்ந்தான்.

அவனின் முன் ப்ளாக் காஃபி வைக்கப் பட நிமிர்ந்து பார்தவனிடம், “இது மட்டும் தான் இங்க இருக்கு” என்றாள்.

ஒன்றும் பேசாமல் அதனை எடுத்துக் கொண்டான். கசப்பாக அது தொண்டையில் இறங்கியது. முகமும் அந்த கசப்பைக் காட்டியது.

“எனக்கு உன்கிட்ட பேசணும்” என்றாள் அவளாகவே.

“என்ன?” என்பது போல அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“எனக்கு ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணனும், சிங்கிள் பேரண்ட்னா கொடுக்க மாட்டாங்க, அதுவரைக்கும் டைவர்ஸ் வேண்டாம், பின்ன என்னவோ பண்ணிக்கலாம்” என்றாள் பட்டென்று.

“அம்மா” என்று அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டான், கையில் இருந்த ப்ளாக் காஃபியும் தவறியது.

எந்த சலனமும் இல்லாமல் அவனை பார்த்தாள் சைந்தவி.

பின் அவன் அப்படியே அமர்ந்து விட, சைந்தவி எழுந்து போய் ஒரு மக்கில் தண்ணீரும் துணியும் எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

சைந்தவியின் இந்த உணர்வற்ற தன்மையை பார்த்து மனதை திடப்படுத்தியவன், அதனை கையினில் வாங்கி சிந்திய காஃபியை துடைக்க ஆரம்பித்தவன், “ஏன் இந்த முடிவு” என அவளை பார்க்காமல் கேட்டான்.

“அப்பா அம்மாவை விட்டு வந்துட்டேன், புருஷனையும் விட்டு வந்துட்டேன், அப்போ என் வாழ்க்கை நான் வாழறதுக்கு ஏதாவது ஆதாரம் வேணுமில்லையா?” என்றாள் சிறிதும் சலனமில்லாத குரலில்.

கையில் இருந்த மக்கை அப்படியே தரையில் வீசியவன் “உன்னால எப்படி இப்படி பேச முடியுது?” என்று அவளின் முன் ஆவேசமாய் நின்றான்.

சைந்தவி அவனை பார்க்காமல் அவன் வீசி எறிந்த மக்கில் இருந்த தண்ணீர் சுவரில் எதுவும் பட்டு விட்டதா காஃபி கரை ஏதாவது ஆகிவிட்டதா என பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவ்வளவு தான் கோபமும் ஆவேசமும் பொங்க ஒரு கையால் அவளை பிடித்து இழுத்து முன் நிறுத்தினான்.

“இன்னாடி நினைச்சிட்டு இருக்க நீ, நீ பைத்தியக்காரின்னு எனக்கு தெரியும். இல்லை என்னை நம்பி வந்திருக்க மாட்ட. ஆனா இவ்வளவு பைத்தியக்காரின்னு எனக்கு தெரியாது. குழந்தையை அடாப்ட் பண்ணி வளர்க்கப் போறியா நீ. அவ்வளவு ஆசையிருந்தா சொல்லேன், சேர்ந்து குழந்தை பெத்துக்கலாம்” என்றான் ஆத்திரத்தோடு.

சில நொடிகள் அவனை விடாமல் பார்த்தவள், “குழந்தை வளர்க்க தான் சொன்னேன். பெத்துக்க சொல்லலை” என்றாள் குரல் கமற.

“லைஃப் ஹேஸ் டு மூவ் ஆன் சம்ஹௌ. எனக்கு மத்தபடி வாழணும்ன்ற ஆசை இல்லை” என சொல்லிக் கொண்டே அவனின் பிடியில் இருந்த கையை பலவந்தமாக உருவிக் கொண்டாள்.

“ஏன் இல்லை? ஏன் இல்லை? என்னை சட்டை பிடிச்சி கேளு, என் வாழ்க்கையை ஏன் இப்படி பண்ணினன்னு ஒரு அறை விடு என் முகத்துல” என ஆவேசமாக பேசினான்.

“எனக்கு அப்படி எதுவும் தோணலை” என்றாள் அவளும் ஆவேசமாக.

“ஏன்? ஏன் தோணலை?” என்று விட்டால் அடித்து விடுபவன் போலக் கேட்டான்.

“ஏன் தோணலைன்னா தப்பு என் மேல, நீ என்னை உன் பின்னால சுத்த வைக்க ட்ரை பண்றது எனக்கு முன்னமே தெரியும். ஆனாலும் சுத்தினேன், ஏன்னா எனக்கு உன்னை பிடிச்சது. நீ ஐ லவ் யு சொல்லாம என்னை சொல்ல வைக்கிறன்னு தெரியும், ஆனாலும் சொன்னேன். ஏன்னா எனக்கு உன்னை பிடிச்சது. கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னப்போ நீ இப்போ வேண்டவே வேண்டாம், உன்னால எங்க வீட்ல இருக்க முடியாது சொன்ன, நான் தான் பெரிய இவ மாதிரி நான் இருந்துக்குவேன் சொன்னேன். அப்புறம் இருக்க முடியாதுன்னு நான் தான் சொன்னேன். நான் எங்க அப்பாம்மாவை விட்டு வந்தா நீயும் வரணும்னு ஃபோர்ஸ் பண்றது எல்லாத்தையும் விட பெரிய தப்பு இல்லையா? ஆனா அதையும் பண்ணினேன். நீ ஒத்துக்கலை, போ சொல்லிட்ட!”

“இதுல உன்னோடது தப்போ? சரியோ? எனக்கு தெரியாம எதுவுமே நடக்கலை, அப்புறம் உன் சட்டையை பிடிச்சு நான் எப்படி கேள்வி கேட்க முடியும்” என்றவள், “குளிக்க போறேன்” என்று வேகமாக சென்று ரூமின் உள் கதவை அடைத்துக் கொள்ள முயல,

கதவை மூட முடியாமல் பிடித்தவன்,

“என்ன பெரிய தியாகியா? இல்லை யோகியாடி நீ? எல்லா தப்பையும் உன் மேல தூக்கி போட்டுக்கற? உன்னை காதலிக்க தூண்டினது என்னோட தப்பு! உன்னை கல்யாணத்துக்கு தூண்டினது உன்னோட அப்பாவோட தப்பு! அவர் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பேசாம இருந்திருந்தா நாம கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் வந்திருக்காது. இது முழுக்க முழுக்க உங்க அப்பாவோட தப்பு!” என்றான் ஆத்திரமாக.

“இல்லை எல்லாம் என்னோட தப்பு. நான் சரியா இருந்திருந்தா நீயோ அப்பாவோ என்னை எதுவும் செய்திருக்க முடியாது” என்றாள் பிடிவாதமாக

“என்ன நீ சரியில்லாம போயிட்ட, அப்போ நாம தப்பு பண்ணினோம்னு சொல்றியா? கல்யாணம் எங்கயும் தப்பில்லை!” என்றான் ஆவேசமாக அவளையும் விட.

“அது, அதுதான் சொல்றேன், கல்யாணம் எங்கேயும் தப்பில்லை. ஆனா அதை நிலைக்க வைக்காம உன்னை விட்டும் ஓடி வந்துட்டேன் இல்லையா? அது தப்பு தானே!” என்றாள் கண்களில் நீர் பெருக.

“நீ எங்கேயும் எப்பவும் ஓடி வரலை” என விஜய் கத்தினான்.

“இல்லை அம்மா வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன், புருஷன் வீட்டை விட்டும் வந்துட்டேன். நான் கெட்டப் பொண்ணு” என்று பைத்தியம் பிடித்தவள் போலக் கத்த அந்த கத்தலுக்கு பயந்து விஜயின் கைகள் தளர, அடுத்த நொடி கதவடைத்துக் கொண்டாள்.

தளர்ந்து அமர்ந்து விட்டான். என்ன செய்வது என்றே தெரியவில்லை. எதுவாகினும் இனி அவளோடு இங்கே தான் என்று நேற்று எடுத்த முடிவை ஸ்திரமாக்கிக் கொண்டான்.

சைந்தவி குளித்து வரும் வரை அமர்ந்திருந்தவன், அவள் வந்ததும் “எனக்கு ஒரு சாவி வேணும்” என்றான்.

“எதுக்கு?” என சைந்தவி கேட்க,

“இனிமே நான் இங்கே தான் இருக்கப் போறேன்”

சொல்வான் என்று எதிர்பார்த்ததாலோ என்னவோ “அதெல்லாம் முடியாது” என்றாள் ஸ்திரமாக.

“நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு, இப்போ இந்த நிமிஷம் உன்னோட வாழ்க்கையை விட்டு போயிடறேன் இல்லைன்றப்போ இங்கே தான் இருப்பேன்!” என்றான் அவளையும் விட ஸ்திரமாக.

“ம்ம், நான் வேற கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றாள் வீம்பாக.

“சரி பண்ணிக்கோ, ஆனா என்னையே பண்ணிக்கோ!” என்றவன், “என்னையே இல்லை, என்னை மட்டும் தான் பண்ணிக்கணும்” என்றவன் “சாவி” என கைகளை நீட்டினான்.

“குடுக்க மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.

“சரி குடுக்காதே, இப்போ போறேன். என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து வாசல்ல இருப்பேன். நீ உள்ள வரும் போது வந்துடறேன்” என்று சொல்லி கிளம்பி விட்டான்.

“நீ இங்க வர்றது எனக்கு பிடிக்கலை” என்று அவசரமாக சைந்தவி சொல்ல,

“எனக்கு கூட நீ தனியா இருக்குறது பிடிக்கலை” என்று சொல்லி அவள் வேறு பேசும்முன் வேகமாக வெளியேறி விட்டான்.

உண்மையில் பயமாக இருந்தது சைந்தவியை பார்த்து, “எல்லா தப்பும் நான் தான் செய்தேன்” என்று சொல்லி அவள் எல்லாம் தூக்கி அவளின் தலைமேல் போட்டுக் கொண்டாலும், என்னவோ எல்லாம் அவனின் தப்பாகத் தான் விஜய்க்கு தோன்றியது.

எல்லாம் அவளின் செயலாகிப் போக, அவனின் செயல் தான் என்ன?

Advertisement