Advertisement

அத்தியாயம் ஒன்பது :

நெஞ்சில் ஒரு காதல் வலி, பூவில் ஒரு சூறாவளி!

“எதுக்கு இந்த டைம் பெல் அடிக்கறீங்க” என்று கதவை கொஞ்சம் மட்டும் திறந்து, கதவின் சங்கிலியை முழுவதுமாக நீக்காமல் கேட்டாள்.

“சார் தான் உங்களை பார்க்க வந்தார். உங்க வீட்டுக்காரர் சொன்னார். நான் இதுவரை பார்த்ததில்லை. சரி எதுக்கும் தெரிஞ்சிக்கலாம்னு கூட வந்துட்டேன்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான் செக்யுரிட்டி.

அவன் பேசப் பேசவே அவனின் பின்னால் வந்து நின்று கொண்டான் விஜய். இதனை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை சைந்தவி. விழி விரித்து பார்த்தாள்.

“பாருங்க நான் சொன்ன மாதிரி சர்ப்ரைஸ் தானே! மேடம் எப்படி கண்ணை விரிச்சு பார்க்கறாங்க, பாருங்க!” என்று விஜய் எடுத்துக் கொடுக்கவும்,

“அட ஆமாம் சார்” என்ற செக்யுரிட்டி, “மேடம்” என்று சப்தமாக அழைக்க, அப்போதுதான் தான் கலைந்தாள்.

“நான் போகட்டுங்களா?” என்று கேட்டான்.

“ம்ம்” என்று மௌனமாய் ஒரு தலையசைப்பை கொடுத்தாள்.

அவன் சென்றது தெரிந்ததும் “எதுன்னாலும் காலையில பேசலாம், ஆஃபிஸ்ல பார்த்துக்கலாம், நீங்க கிளம்புங்க” என்றாள்.

“நான் எப்போ உன்கிட்ட பேசறேன்னு சொன்னேன். ரொம்ப டென்ஷன், ரொம்ப அலைச்சல், எனக்கு தூங்கணும் கதவை திற” என்றான் எதுவுமே நடவாதது போல.

“என்ன? என்ன கலாட்டா இது?” என்றாள் கதவை அப்போதும் திறக்காமல்.

“கலாட்டா எதுவும் எனக்கு பண்ற உத்தேசமில்லை. ஆனா நீ கதவை திறக்கலை. அதுதான் பண்ணுவேன்” என்றான் கறாராக.

அதற்கு மேல் சைந்தவி எதுவும் பேசவில்லை. ஆனால் கதவை திறக்க மாட்டேன் என்பது போல கை கட்டி கொள்ள, விஜய் யோசிக்கவெல்லாம் இல்லை எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து கீழே தரையில் அமர்ந்து கொண்டான். அதற்கு சற்று தள்ளி எதிரில் இருந்த வீட்டின் கதவு இருந்தது.

சைந்தவி அப்போது அசையவில்லை. கதவை சாத்தி உள்ளே போகப் போக, “அஞ்சு நிமிஷம் டைம் கதவு திறக்கலைன்னா இந்த வீட்டோட கதவை தட்டி, என் பொண்டாட்டி வீட்டுக்குள்ள என்னை விட மாட்டேங்கறான்னு பஞ்சாயத்து வைப்பேன்” என்றான்.

அதற்கும் பதில் சொல்லாமல் கதவை அடைத்துக் கொண்டாள். பின்பு செல்போன் எடுத்து நேரத்தை பார்த்தாள். அது நகர நகர மனது கலாட்டா செய்வானோ என பயந்தது. நான்கு நிமிடம் நாற்பது நொடி ஆனதுமே கதவை திறந்து என்ன செய்கிறான் என்று பார்த்தாள்.

எழுந்து ரெடியாக எதிர் வீட்டு கதவை தட்ட விஜய் நின்று கொண்டிருக்க, இவள் கதவை திறக்கும் சப்தம் கேட்டதும் வேகமாக வந்து விட்டவன் “வா, வா, உள்ள போகலாம் எதுக்கு அடுத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு” என்றான்.

அவனை முறைத்து பார்த்தாள்.

“எதுக்கு இப்படி முழிச்சு முழிச்சு பார்க்கற, கண்ணு வெளிய வந்து விழுந்திடும் போல” என சொல்லி கொண்டே அவளை இடிப்பது போல வர, வேகமாக நகர்ந்து அவனுக்கு வழி விட்டாள்.

“தோடா, உள்ள வர்றதுக்கு என்ன என்ன ஸ்டன்ட் பண்ண வேண்டியிருக்கு” என்று சலிப்பது போல பேசிக் கொண்டே வந்தவன். ஷூ கழற்றி ஓரமாக வைத்து, “கதவை சாத்திக்கோ, நான் இங்கே தான் இருக்கப் போறேன், ரொம்ப தூக்கம் வருது, ஒரு தலையணை கொடுத்தா தூங்கிடுவேன்” என்றான்.

சைந்தவி என்ன செய்வது என்று தெரியாமல் முறைத்து பார்த்து விழிக்க,

“சரி கொடுக்காத, எனக்கு கீழ அப்படியே படுத்தாக் கூட தூக்கம் வரும்” என்று அப்படியே படுத்துக் கொண்டான்.

“ஏன் இப்படி பண்ற?” என்று ஆதங்கமாக ஒரு இயலாமையில் சைந்தவி கேட்டாள்.

“எப்படி பண்றேன் ஒன்னுமே பண்ணலை” என்றான் அசால்டாக.

“நீ டைவர்ஸ் தானே கேட்டே, நான் கொடுக்கறேன். இந்த கலாட்டா எல்லாம் வேண்டாம். ப்ளீஸ் போயிடு” என்றாள்.

“எதுன்னாலும் காலையில பேசிக்கலாம் தூங்கு” என்று அவன் படுத்து முகத்திற்கு கைகளை கொடுத்துக் கொள்ள, சைந்தவி அங்கிருந்த சோபாவில் அப்படியே அமர்ந்து கொண்டாள், ரூமின் உள் சென்று படுக்கும் ஐடியா இல்லாதவளாக.

“என்னை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கா, சரி இங்கேயே இரு” என்று அதற்கும் பேசினான்.

சைந்தவி பதிலே பேசவில்லை. உறங்கவும் முடியாமல், உறக்கமும் வராமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் அங்கேயே அமர்ந்திருப்பதை உணர்ந்தாலும் விஜய் உறங்கிவிட்டது போல அவனும் அசையாமல் படுத்திருந்தான். சில மணித்துளிகளில் அவனையறியாமல் உறங்கிவிட்டான்.

வெகு நேரம் அவனையே பார்த்திருந்தாள் “என்ன பிடித்தது இவனிடம் எனக்கு எல்லாம் உதறி வந்தேன்” என்ன யோசித்தாலும் விடை தெரியவில்லை.

 விடையில்லா மொழி தானே காதல்!

முன்பை விட நன்றாக இருந்தான். ஆகிருதி இன்னும் திடமாய் மாறியிருக்க, அவனின் உயரத்திற்கு அது பொருந்தி வர, விடாது அவனை பார்த்திருந்தாள்.

நேரம் ஒரு மணியை நெருங்க அவனின் அலைபேசி அடித்தது. அப்போதுதான் அமர்ந்திருந்த வாக்கிலேயே சைந்தவியின் கண்களும் உறக்கத்திற்காக மூடியது.

இந்த ஒலி கேட்டதும் திறந்து கொள்ள,விஜய் நான்கைந்து முறை ஒலித்த பிறகே விழித்தான். எடுத்து பார்த்தால் அவனின் அம்மா!

“இன்னாம்மா” என்று தூக்க கலக்கத்திலேயே கேட்டான்.

“எங்க கீறே நீ” என எதிர்புறம் கேட்க,

“யம்மா, ஏம்மா?” என்றான் சலிப்பாக.

“நைனா இன்னும் ஊட்டாண்ட வரலை கண்ணு”

“எங்கயாவது குடிச்சிட்டு வுழுந்து கிடக்கும், போதை தெளிஞ்சா வந்துடும் மா”

“பயமாயிருக்கு கண்ணு, எப்போவும் இப்படி ஆனதில்ல, நீ எங்க இருக்க?”

“எங்கயோ இருக்கேன், நைனா வந்துடும், பயப்படாம தூங்கு”

“நீ வா” என்றார் பயந்த குரலில்.

“ப்ச்” என சலித்து எழுந்து கொண்டான் போவதற்காக.

அப்போதுதான் சைந்தவியை பார்த்தான். சோஃபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்து எதிரில் இருந்த டீப்பாயில் கால்களை நீட்டி விட்டு, இரு கைகளையும் கட்டியபடி இவனை பார்த்துக் கொன்டிருந்தாள்.

“அது அப்பா இன்னும் வீட்டுக்கு வரலையாம், அம்மா ஃபோன்” என்றான் தயங்கி தயங்கி.

பின் அவனின் ஷூ அணியப் போக,

“ஒழுங்கா போய் அங்கேயே உட்காரு” என்றாள் கை நீட்டி ஆவேசமாக அவன் படுத்திருந்த இடத்தினை காட்டி,

“அவரை காணோமாம்” என்றான். அம்மாவிடம் பேசும் போது அவர்களின் பாஷை வருவது போல, சைந்தவியிடம் பேசும் போது அவளின் தமிழ்.

“அவர் காணோம்னா? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? ராத்திரி பத்து மணிக்கு மேல கணவன்னு சொல்லிக்கிட்டு உள்ள வந்துட்டு, இப்போ ஒரு மணிக்கு நீ வெளில போனா அந்த செக்யுரிட்டி என்ன நினைப்பான் என்னை பத்தி, உனக்கெல்லாம் அறிவிருக்கா?” என்று கேட்டாள்.

“என்ன பேசற நீ?” என அதிர்ந்து விட்டான்.

“வேற என்ன பேசுவாங்க? தனியா இருக்கும் போது இந்த டைம் வந்ததே தப்பு. அதுல இப்போ போறேன்னு சொன்னா? என்னால உன்னை அனுப்ப முடியாது! உன்னோட வரவும் முடியாது! வேற ஏதாவது வழியிருக்கான்னு பாரு!” என்றாள் மனம் நைந்தவளாக.

அவள் சொல்லிய அர்த்தம் விஜயின் உள்ளும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பின்பு நண்பன் ஒருவனை அழைத்து “டேய், நைனா இன்னும் ஊட்டாண்ட வரலையாம்டா, டாஸ்மாக்ல இருந்து நம்ம ஊட்டுக்கு வர வழில எங்கனாச்சும் கடக்கும். தூக்கி போய் ஊட்ல விட்டுட்டு எனக்கு கூப்புடுடா” என்று ஃபோனை வைத்தான்.

சிறிது நேரத்தில் நண்பன் வீட்டில் விட்டு விட்டேன் என்று அழைக்க, அதுவரையிலும் நின்று கொண்டே இருந்தவன், பின்பு தான் தரையில் அமர்ந்தான்.

பின் விஜய்க்கு ஒரு பொட்டு உறக்கமில்லை, சைந்தவி அப்படியே அமர்ந்த வாக்கிலேயே கண்ணயர்ந்து விட, அவளைப் பார்த்தவாறே இரவு முழுவதும் விழித்திருந்தான். மனது மிகவும் வெறுமையாய் உணர்ந்தது.

அழவேண்டும் போல தோன்றியது. ஒரு ஆவேசத்தில் இங்கு வந்து விட்டான், வந்த போது இருந்த தைரியம் சுத்தமாய் இப்போது இல்லை.

சைந்தவியை பார்க்கப் பார்க்க பயமாய் இருந்தது. என்ன ஒரு நிலைமையில் அவளை நிறுத்தி விட்டான். சே எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவள், காதல் என்று சிக்கி உன்னுடன் வந்து இப்படி நிர்கதியாய் நிற்கிறாள். அவளே சம்பாரித்து, அவளே உண்டு, போக யாரும் போக்கிடம் இன்றி!

அதையும் விட இப்போது அவள் சொன்னது அவனின் உயிரை உடலை விட்டு உறிஞ்சியது. எந்த நேரமும் தனிமையில் பாதுக்காப்பை பற்றி சிந்தித்திருப்பாள் எனப் புரிந்தது. முதன் முதலில் வரும் போது பகலில் வந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. மனைவியாகினும் அவளின் மானம் மரியாதை முக்கியமல்லவா?

எப்போதும் நான் அவளை பற்றி யோசிப்பது இல்லையோ? இல்லையே யோசித்ததினால் தானே பிரிந்தேன்!

நினைக்க நினைக்க கண்களில் நீர் தழும்பியது!

“ஏன் இப்படி செய்தாய்?” என்று அவனின் சட்டையை பிடித்து உலுக்கி, அடித்து, என அவனை எந்த குற்றம் சொல்லவில்லை. “ச்சே போடா” என அவனை விட்டு விட்டாள்.

கீழே படுத்து விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

காலையில் சைந்தவி எழுந்தவள், அவன் விழித்திருக்கிறானா என்று பார்த்தாள். அங்கே இருந்து ஒன்றும் தெரியவில்லை.

எழுந்து வந்து அவனின் முன் நின்று பார்த்தாள். அவனின் பார்வை நேராக மேல் நோக்கி இருந்தது. அந்த பார்வை வட்டத்தினுள் தான் சைந்தவியின் முகம் விழுந்தது, ஆனாலும் விஜய் அதனை கிரகிக்கவில்லை.

எத்தனை இரவுகள் சுட்டன கனவுகள்!

கோபங்கள் மனவருத்தங்கள் எல்லாம் இருந்தாலும், அந்த நொடியில் விஜயை பார்க்க சைந்தவிக்கு பாவமாய் இருந்தது. அவளின் மனம் அவளையும் மீறி நான் இருக்கிறேன் உனக்கு என்று ஆறுதல் மொழி கொடுக்க விழைந்தது.

கை அசைத்தாள்! அப்போதுதான் அவளை கிரகித்தவன் டக்கென்று எழுந்து அமர்ந்தான்.

Advertisement